கொரோனா தடுப்பு முடக்கத்தால் இலங்கையின் வட மாகாண மீனவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்

இலங்கையில் கோவிட்-19 வைரஸ் பரவலின் பாதிப்பு காரணமாக மீன், இறால், நண்டு, கணவாய் போன்ற கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துவரும் தனியார் கம்பனிகள், கொள்வனவை நிறுத்தியுள்ளதால் அல்லது குறைத்துள்ளதால் அந்த வருமானத்தை நம்பி வாழ்ந்த வடமாகாண கடற்தொழிலாளர்கள் வறுமையை எதிர்கொள்கின்றார்கள்.

தலைநகர் கொழும்பில், பேலியகொடவில் உள்ள மத்திய மீன் சந்தையில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கோவிட்–19 வேகமாக பரவியதன் காரணமாக, அக்டோபர் 21 முதல் சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் நாடு பூராவும் இருந்து மத்திய சந்தைக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்த மீனவர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உள்ளூர் சந்தைகளை நம்பி மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் நட்டங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் சில கம்பனிகள், சந்தைகள் திறக்கப்படும் போது, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்குடன் பதப்படுத்தி வைப்பதற்காக, ஆக குறைந்த விலைகளில் கடல் உணவுகளை கொள்வனவு செய்கின்றன என, பூநகரி பிரதேச மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

கரையோர மீன்பிடியில் மீனவர்கள் [Credit: WSWS]

அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காக கரையோர மீன்பிடியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றார்கள். அந்த மீன்கள் சந்தைகளில் நிரம்பியுள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சில சமயங்களில் மீன்கள் விற்க முடியாமல் கொட்டப்படுவதாகவும், அல்லது இலவசமாக அயலவர்களுக்கு வழங்குவதாகவும், சங்கானை சந்தையில் மீன் விற்பனை செய்யும் ஒரு பெண் தெரிவித்தார்.

800 ரூபாவுக்கு விற்ற கணவாய் இப்போது 300 ரூபாவுக்கும், 600 ரூபா விற்ற இறால் தற்போது 300 ரூபாவுக்கும் விற்பனையாவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில், “வடக்கில் உள்ள கிராமங்களில் 1,000 கிலோவுக்கு மேலான கருவாடுகள் விற்க முடியாமல் உள்ளன. பேலியகொட சந்தை மூடப்பட்டதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எமது மீனவர்கள் வருமானமின்றி இருக்கின்றார்கள்,” என தெரிவித்தார்.

ஊர்காவற்றுறையானது யாழ்ப்பாண குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் ஒன்றாகும். இங்குள்ள கடற்றொழிலாளர்கள், ஆழமற்ற கடல் பகுதியில் மிகவும் பழமைவாய்ந்த முறையிலும், துடுப்புப் படகுகளைக் கொண்டு மீன் பிடியில் ஈடுபடுகின்ற வறிய மீனவர்களாவர்.

துடுப்புப் படகுகளைக் கொண்டு மீன் பிடியில் ஈடுபடும் வறிய மீனவர்கள் [Credit: WSWS]

ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் வடக்கின் கரையோரப் பகுதிகளையும் தீவுப் பகுதிகளையும் கடற்படை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. இதன் காரணமாக மீன் பிடி கட்டுப்பாடுகள், சரீர தாக்குதல்கள் உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்கின்றனர்.வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டிலும் கடற்தொழிலை நம்பி தற்போது 38,334 குடும்பங்கள் வாழ்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் இந்த மீனவர்களுக்கோ அல்லது ஏனைய மக்களுக்கோ நிவாரணங்களை வழங்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு 5,000 ரூபா வழங்கப்படுவதாக அறிவித்திருந்த போதிலும், அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, 1,419 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே. மகேசன் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். கரவெட்டிப் பிரதேச செயலக பிரிவில் ராஜகிராமம், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் பாசையூர், திருநகர் ஆகிய மீனவக் கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 310 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்க அதிபரின்படி, அவர்களில் 197 பேருக்கு மட்டுமே உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவிடம் சில மீனவர்கள், “கோவிட்–19 தொற்று பிரச்சினையால் பிடிக்கப்படும் மீன்கள் விற்க முடியவில்லை,” என்று முறைப்பாடு செய்தபோது, “யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் மீன்விற்பனை நிறுவனத்தினர் 5,000 கிலோ வரையான மீன்களை வாங்க தன்னிடம் உறுதியளித்தாக” கூறி சமாளித்தார்.

அதேவேளை, தேவானந்தா, கம்பனிகள் கொள்வனவு செய்யும் விலைக்கு கடலுணவுகளை வழங்குமாறும், அவர்கள் இந்த விலைக்காவது எடுக்கின்றார்கள் என்பதையிட்டு மகிழ்ச்சியடையுமாறும் கூறியதோடு கம்பனிகளுக்கு எதிராக நான் எதுவும் செய்ய மாட்டேன் என்றும் உறுதியாக தெரிவித்த்தாக குருநகர் பிரதேச மீனவர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது மூடப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் “தொற்று நீக்கிய பின்னர், உரிய சுகாதார நடவடிக்கைகளுடன் மீண்டும் திறப்பதன் மூலம் பிரச்சினை தீர்க்கப்படும்” என்று கூறிய அமைச்சர், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் அல்லது நஷ்டஈடு வழங்குவது பற்றி வாய்திறக்கவில்லை.

மண்டைதீவைச் சேர்ந்த கடல் தொழிலாளியான நிசாந்தன், பேலியகொட மீன் சந்தை பூட்டப்பட்டதை காரணமாக வைத்து தனது பிரதேசத்தில் கடலுணவுகளை கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் தற்போது மிகவும் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதாக கூறினார். “முதலில் சுமார் ஒரு கிலோ 1,300 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஏற்றுமதி வெள்ளை நண்டு இப்போது குருநகரில் 800 ரூபாவுக்கும் மண்டைதீவில் 700-750 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது,” என அவர் தெரிவித்தார்.

“ஏற்றுமதி மீன்கள் முன்னர் 1000-1200 ரூபா வரையும். றோலர் படகுகளின் மூலம் பிடிக்கப்பட்ட பெரிய இறால் ஒரு கிலோ 2,200 ரூபா வரையும் கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீன்கள் 300-350 ரூபாவிற்கும் இறால் 1,200 ரூபாவுக்கும் கொள்வனவு செய்கின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையோ உச்சமடைந்து வருகின்றது ஆனால் எமது உற்பத்திப் பொருட்களோ மிகவும் குறைந்த விலையில் கொள்ளையிடப்படுகின்றன. இதனால் எமது வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றது,” என நிசாந்தன் தெரிவித்தார்.

பூநகரியைச் சேர்ந்த க. ரதீசன், 6 பேர் கூட்டுச் சேர்ந்து தொழில் செய்வதாக கூறினார். “வரும் வருமானத்தை 6 பிரிவாக பங்கீடு செய்ய வேண்டும். நாளொன்றுக்கு நாங்கள் தொழிலுக்கு செல்வதற்கு 8,000 ரூபாவுக்கு மேல் செலாவாகும். மொத்த வருமானத்தில் செலவைக் கழித்து, மீதியைப் பங்கீடு செய்ய வேண்டும். 12 மணிநேரம் நித்திரை இல்லாமல் தொழில் செய்தாலும் கூட வருமானம் போதாமல் உள்ளது. பிடித்த மீனை விற்க முடியவில்லை.”

அவர் மேலும் கூறியதாவது: “வருமானம் போதாத காரணத்தினால் கடைகளில் கடன்பட்டுத்தான் அன்றாட வாழ்க்கையை ஒட்டுகின்றோம். தொடர்ச்சியாக பட்ட கடன் 230,000 ரூபா உள்ளது. மாதாந்தம் சீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளோம் அதற்கு 7 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபா கட்ட வேண்டும். அத்துடன் ஒரு தனியாரிடம் 10 ஆயிரம் ரூபா வட்டிக்கு ஒரு லட்சத்துக்கு கடன்பட்டுள்ளேன். இந்த நிலமை தொடர்ந்தால் நாங்கள் இந்த சிரமத்தில் இருந்து மீள முடியாது.”

ஊர்காவற்றுறையைச் சேர்ந்த தம்பையா குலேந்திரன் குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். “நாங்கள் தற்போது தொழிலை நிறுத்திவிட்டோம். எங்களால் சீவியம் ஓட்ட முடியாமல் உள்ளது. அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்து விட்டது. எதையும் வாங்க முடியாமல் உள்ளோம். இந்த நிலையில் எப்படி எங்கள் வாழ்க்கையை நடத்துவது. எப்படி ஆரோக்கியதுதுடன் வாழ்வது. நோயில் இருந்து எம்மை எப்படிப் பாதுகாப்பது? இது எல்லாம், மிகவும் கடினமான விடயமாகும்.” என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புங்குடுதீவைச் சேர்ந்த நாகேந்திரம் நித்தியகுமார், ஒவ்வொரு வருடமும் புதிய வலைகளை உருவாக்கி பயன்படுத்துவோம், இம்முறை பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை செய்ய முடியததால் மீன்பிடி குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கியதாவது: “மீன்களையும் விற்பனை செய்ய முடியவில்லை. முன்னர் ஒரு கிலோ 600 ரூபாவுக்கு விற்கப்பட்ட மீனை, தற்போது 100 ரூபாவுக்கும் விற்க முடியவில்லை. ஒரு கிலோ 4,800 ரூபாவுக்கு விற்கப்பட்ட நண்டு தற்போது 1,000 ரூபாவுக்கே விற்கப்படுகின்றது. எங்களுக்கு இரண்டு வாரங்களாக எதுவிதமான வருமானமும் இன்றி கஸ்ட்டப்படுகின்றோம். வெளிநாட்டில் வாழும் உறவினர் வழங்கிய அரிசி, மா, சீனி என்பனவற்றைக் கொண்டு 10 நாட்கள் சமாளித்துவிட்டோம். இனி எப்படிக் கழிக்கப்போகின்றோம் என்று தெரியவில்லை. ஏதாவது கூலி வேலைக்காவது போகலாம் என்றால், அதுவும் முடியாதுள்ளது.

யுத்தத்தின் ஒரு தசாப்தத்திற்கு பின்னரும் குடிசையில் வாழும் குடும்பங்களில் ஒன்று [Credit: WSWS]

“இப்போது அன்றாடப் பொருட்களும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ள நிலையில் அரசாங்கம் விலைக்கட்டுப்பாட்டினை அறிவித்துள்ளமை வேடிக்கையாக இருக்கின்றது. அரசாங்கம் அறிவித்த விலையை விட அதிகமாகவே கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நோயைத் தடுப்பதற்காக அரசாங்கம் முடக்கி வைக்கின்றது. ஆனால், அதனால் பட்டினிகிடக்கும் எங்களை காப்பற்ற முன்வரவில்லை. யாரும் உதவவில்லை.”

வேலைணையை சேர்ந்த 29 வயது இளைஞன், தன்னிடம் படகு இல்லாததால் நடந்து சென்று வலைபோட்டு மீன்பிடிக்கின்றார். “நாட்டு மக்களை பாராமரிக்க அரசாங்கம் தயாரில்லாத காரணத்தினாலேயே கொரோனாவை தடுப்பதற்கு அது நாட்டை முடக்கவில்லை. கடந்த ஒரு வார காலமாக எனக்கு வருமானம் இல்லை. உறவினர்களிடமும் கடைக்காரர்களிடமும் கடன்பட்டே எனது குடும்பத்தை ஓட்டிக் கொண்டு இருக்கின்றேன். நுண்கடன் நிறுவனம் ஒன்றிடம் கடன்பட்டு ஒரு பழைய வெளியிணைப்பு இயந்திரத்தை வாங்கினேன். கிடைத்த வருமானம் கடன் தவணை கட்ட மட்டுமே போதுமானதாக இருந்தது. அந்த இயந்திரம் பழுதடைந்ததால் கிளிநொச்சிக்கு சென்று கூலி வேலை செய்தேன். முதல் முடக்கம் அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் வந்து பழைய முறைப்படி நடந்து சென்று வலை வீசத் தள்ளப்பட்டுள்ளேன்,” என அவர் கூறினார்.

“நாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகள் எங்களை கைவிட்டுள்ளார்கள். எங்களை வந்து கூடப் பார்க்கவில்லை. தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, எனக்கு இன்னும் சில ஆசனங்களை நீங்கள் தந்திருந்தால் உங்கள் பிரச்சினையை தீர்த்திருப்பேன் என்று கூறுகின்றார். அதற்காக அவர் எங்களைப் பழிவாங்குகின்றார் போலும்,” என அவர் மேலும் கூறினார்.

Loading