டைக்ரேயில் மோதல் அதிகரிக்கையில், எத்தியோப்பியா உள்நாட்டு போருக்குள் செல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆறு மில்லியன் மக்கள் வசிக்கும் வடக்கு எத்தியோப்பியாவின் டைக்ரேயில் அதிகரித்து வரும் இராணுவ மோதல் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பரவி வரும் ஒரு பயங்கரமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. 110 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரு பரந்த உள்நாட்டு போராக சிதைந்து, ஆபிரிக்காவின் கொம்பை மூழ்கடிக்க இது அச்சுறுத்துகிறது.

டைக்ரேயின் ஆளும் கட்சியான டைக்ரேயன் மக்கள் விடுதலை முன்னணி (Tigrayan People’s Liberation Front-TPLF) ஒரு இராணுவ வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மாகாணத்தில் துருப்புக்களை நிலைநிறுத்தியதாகவும் குற்றம்சாட்டிய பிரதமர் அபி அகமது, அதற்கு பதிலடி கொடுக்க வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிட்டதன் பின்னர் இந்த மாதம் ஆரம்பத்தில் மோதல் தொடங்கியதிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பேர் இறந்துள்ளனர்.

வான்வழித் தாக்குதல்களின் இலக்குகளில், சூடானுடைய எல்லையைப் பாதுகாக்கும் மற்றும் TPLF படைகள் தப்பிப்பதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக எத்தியோப்பிய துருப்புக்கள் ஹூமேராவில் உள்ள விமானத் தளத்தை கைப்பற்றுவது உட்பட, டைக்ரேயன் தலைநகரமான மெக்கெல்லேயைச் சுற்றியுள்ள TPLF நிலைகளை குறிவைப்பது அடங்கும். இதற்கு, ஏற்கனவே உதவி தேவைப்படக்கூடிய 600,000 பேரைக் கொண்ட டைக்ரேயை சுற்றி வளைக்கும் வகையில், சூடான் தனது படைகளை எல்லைக்கு அனுப்பி பதிலடி கொடுத்துள்ளது.

எதியோப்பிய பிராந்தியங்கள் (Credit: map for use on Wikivoyage, English version)

பல இடங்களில் மோதல்கள் நிகழ்வதாக தகவல்கள் பதிவாகியுள்ளன, என்றாலும் அடிஸ் அபாபாவில் உள்ள மத்திய அரசாங்கம் தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை குறைத்துள்ளது, ஊடகவியலாளர்களை கைது செய்துள்ளது மற்றும் மாகாணத்திற்கு மக்கள் வருவதை தடுத்துள்ளது என்ற நிலையில், விபரங்கள் அரைகுறையாக உள்ளன.

அபியின் அரசாங்கம் மாகாணத்தில் ஆறு மாத கால அவசரகால நிலையை அறிவித்துள்ளது, அதே நேரத்தில் எத்தியோப்பியாவின் கூட்டாட்சி நாடாளுமன்றம் டைக்ரேயின் பிராந்திய அரசாங்கத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்து, அதைக் கலைப்பதற்கு வாக்களித்தது. செப்டம்பர் மாதம் பிராந்திய தேர்தல்களை நடத்துவதன் மூலம் டைக்ரேயின் தலைவர்கள் "அரசியலமைப்பை மீறி அரசியலமைப்பு முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளனர்" என்று பாராளுமன்றம் கூறியது. அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பும் அதிகரித்ததால், தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு வாக்குறுதியளிக்கப்பட்ட தேர்தல்களை அபி ஒத்திவைத்த பின்னர் அவர்கள் அவ்வாறு செய்தனர்.

ஒரு புதிய காபாந்து அரசாங்கம் தேர்தல்களை நடத்தி "மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்தும்" என்று பாராளுமன்றம் அறிவித்தது. நவம்பர் 2 ம் தேதி ஒரோமியாவில் அம்ஹாரா இனக்குழு படுகொலை செய்யப்பட்டதற்கு TPLF மீது குற்றம்சாட்டிய பின்னர் அதை ஒரு பயங்கரவாத குழு என முத்திரை குத்த வேண்டும் என்று அறிவித்தமை மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

அபியின் சீர்திருத்தவாத கூற்றுக்கள் அடிப்படையில் சீனாவுடனான நாட்டின் உறவுகளை தளர்த்துவது மற்றும் எத்தியோப்பியாவின் பெருமளவில் அரசு நடத்தும் பொருளாதாரத்தை நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு திறக்கும் நவ-தாராளவாத பொருளாதார கொள்கைகளை ஏற்றுக்கொள்வது என்பதாகும். அபி முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி மற்றும் TPLF தலைமையிலான முந்தைய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஆவார். டைக்ரே மீதான இராணுவத் தாக்குதல் TPLF தலைமையை அகற்றுவதை உறுதிசெய்து மத்திய அரசுக்கு அடிபணிந்த ஒரு புதிய தலைமையை நிறுவும் என்று அவர் நம்புகிறார்.

நவம்பர் 15, 2020, ஞாயிற்றுக்கிழமை, கிழக்கு சூடானில், குவாதரிஃப் பிராந்தியத்தில் எத்தியோப்பிய அகதிகள் தண்ணீருக்காக வரிசையில் நிற்கின்றனர். டைக்ரே பிராந்திய போரில் இருந்து தப்பி நூற்றுக்கணக்கான எத்தியோப்பியர்கள் சூடானுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர் (AP Photo/Marwan Ali)

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்புக்களை அபி நிராகரித்துவிட்டதோடு, படை பலத்தால் வெற்றிபெற நினைக்கும் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். என்றாலும், அவரது ஆக்கிரோஷமான பதிலிறுப்பு அவரை நோக்கித் திரும்பும் பதிலடியாக மாறலாம் என்பதுடன், TPLF ஐயும் மற்றும் அதன் ஆதரவாளர்களையும் இறங்கி போராடுவதற்குத் தூண்டலாம். எரித்திரியா உடனான அதன் போர் மரபாக, எத்தியோப்பிய இராணுவத்தின் பாதிக்கும் மேற்பட்ட படையமைப்பு டைக்ரேயில் அமைந்துள்ளது, மேலும் இதன் ஆதரவும் உறுதி செய்யப்படவில்லை என்ற நிலையில், அபி தனது இராணுவத் தலைவர், உளவுத்துறைத் தலைவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கு அவரைத் தூண்டியது.

இந்த மோதல், ஏற்கனவே ஆயுதக் கிளர்ச்சி நடந்து கொண்டிருக்கும் அபிக்கு சொந்தமான ஒரோமியா உட்பட, எத்தியோப்பியாவின் ஏனைய பகுதியளவிலான தன்னாட்சி, இன அடிப்படையிலான மாநிலங்களை பிரிந்து செல்ல ஊக்குவிக்கக்கூடும். மேலும், எத்தியோப்பிய உயரடுக்கிற்கு எதிரான வறிய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தடுப்பதற்கு அனைத்து பிரிவுகளின் அரசியல்வாதிகளும் இனப் பதட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளனர். அங்கு கொலைகளும் மிரட்டல்களும் அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன. கடந்த சில வாரங்களில் அஃபர் மற்றும் சோமாலியா பிராந்திய மாநிலங்களுக்கு இடையில் எல்லைகளில் நிகழ்ந்த மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டது உட்பட, சோமாலிய பிராந்தியத்தில் அமைதியின்மை அதிகரித்து வருகிறது. சூடானில் உள்ள எல்லைப் பகுதியான பெனிஷங்குல்-குமுஸின் மேற்கு பிராந்தியத்தில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிதாரிகள் பயணிகள் பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக எத்தியோப்பியாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, டைக்ரேயை ஒட்டியுள்ள அம்ஹாரா மாநிலத்தை நோக்கி டைக்ரேயன் படைகள் ராக்கெட்டுகளை வீசியதாகவும், அதில் ஒன்று கொண்டாரில் உள்ள விமான நிலையத்தையும், மற்றொன்று டானா ஏரிக்கு அருகேயுள்ள பஹிர் தார் விமான நிலையத்தையும் தாக்கியது என்று எத்தியோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், இரண்டு விமான நிலையங்களும் இராணுவ மற்றும் பொதுமக்கள் விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மிக மோசமாக உள்ளது.

டைக்ரேயின் வடக்கு எல்லை மீது, கூட்டாட்சித் துருப்புக்கள் மற்றும் அம்ஹாரா பிராந்திய படைகள் இரண்டும், அத்துடன் எரித்திரியா படைப் பிரிவுகளும் உட்பட, அபியின் படைகள் மூலம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு பதிலடியாக ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக TPLF கூறியது. 1995 ஆம் ஆண்டில் எத்தியோப்பியன் மக்களின் புரட்சிகர ஜனநாயக முன்னணி (Ethiopian People’s Revolutionary Democratic Front - EPRDF) கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்கியபோது, TPLF இணைத்ததாக அவர்கள் கூறிய மேற்கு டைக்ரேயில் உள்ள பிராந்தியத்தை மீட்டெடுக்க ஆயுதமேந்திய அம்ஹாரா கன்னைகள் முயல்வதாகத் தெரிகின்றது.

ஒரு டைக்ரேய செய்தித் தொடர்பாளர், மேலும் தொடரும் தாக்குதல்கள் எத்தியோப்பிய இலக்குகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், எரித்திரியாவுக்கு எதிராகவும் நிகழ்த்தப்படும் என்று எச்சரித்தார், இது எத்தியோப்பியாவின் எல்லைகளுக்கு அப்பாலும் மோதல் பரவக்கூடிய அச்சத்தைத் தூண்டுகிறது. இதில் ஈடுபட்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கை விபரத்தைக் குறிப்பிடாமல், எரித்திரியா 16 படைப் பிரிவுகளை எத்தியோப்பியாவிற்கு அனுப்பியுள்ளதாக டைக்ரே பிராந்திய தலைவரான டிப்ரெட்சன் ஜெப்ரெமிக்கேல் (Debretsion Gebremichael) ராய்ட்டர்ஸூக்கு தெரிவித்தார். டைக்ரே மீது தாக்குதல் நடத்த எத்தியோப்பிய படையினர் எரித்திரிய விமான நிலையத்தைப் பயன்படுத்தினர் என்று கூறி, டைக்ரேயன் படைகள் எரித்திரியாவுக்குள் ராக்கெட்டுகளை வீசியதாக ஞாயிற்றுக்கிழமை பிபிசி செய்தி வெளியிட்டது.

அநேகமாக இரண்டு தசாப்தங்களாக, எத்தியோப்பியாவும் எரித்திரியாவும் சோமாலியாவிற்குள் பரந்துள்ள சர்ச்சைக்குரிய எல்லைகள் மீது ஒரு மிருகத்தனமான போரை நடத்தியுள்ளன, இது 100,000 பேரை பலி கொண்டதுடன், இரு தரப்பிலும் பெரும் எண்ணிக்கையில் மக்களின் உள் இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது. ஐ.நா. தீர்ப்பின்படி, மோதலின் மையப் பகுதியாகவுள்ள சர்ச்சைக்குரிய பிரதேசமான பேட்மேவை எரித்திரியாவுக்கு விட்டுக்கொடுக்க எத்தியோப்பியா ஒப்புக் கொண்டதால், அது 2018 இல் முடிவடைந்தது, இதற்கு அபிக்குத்தான் 2019 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதே தவிர, அவரது சம தரப்பான எரித்திரிய ஜனாதிபதி இசயாஸ் அஃப்வெர்க்கிக்கு (Isaias Afwerki) வழங்கப்படவில்லை. இது, எத்தியோப்பியாவை ஏகாதிபத்திய சக்திகளுடன் மிக நெருக்கமாக இணைக்க அவர் முற்படுகையில், அவரது நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்ய நோக்கம் கொண்டிருந்த PR மோதலை விட சற்று பெரியது.

இது பேட்மேயை தனது சொந்தம் என்று உரிமை கோரும் TPLF இன் கோபத்தை எதிர்கொண்டது. பல ஆயுதக் குழுக்கள் மற்றும் கட்சிகளின் கூட்டணியான EPRDF ஐ மாற்றியமைத்த அபியின் புதிய செழிப்புக் கட்சி (Prosperity Party) கூட்டணியில் சேருவதற்கு இது மறுத்துவிட்டது, இதில் 1991 முதல் நாட்டை நிர்வகிக்கும் ஆதிக்க பங்காளியாக TPLF இருந்தது. சமாதான உடன்படிக்கை என்பது டைக்ரேயை “விற்றுவிடுவது” என்று TPLF கருதியது, மேலும், 2018 அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பேட்மேவைச் சுற்றி வழமையான எல்லை வரம்புகளை ஏற்படுத்தியது.

முன்னாள் உளவாளித் தலைவருக்கும், மற்றும் TPLF இன் தலைமைக் குழுவின் உறுப்பினருக்கும் கைது ஆணை பிறப்பித்தும், மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பிரதிநிதிகளை வாடகைக்கு பணியமர்த்தியதற்காக TPLF ஐ குற்றம்சாட்டியும், கூட்டாட்சி நிறுவனங்களிலிருந்து மூத்த டைக்ரேயர்களை வெளியேற்றி ஓரங்கட்ட முயன்ற அபி அரசாங்கத்துக்கும் TPLF க்கும் இடையே ஒரு மோதல் போக்கை இது உருவாக்கியது.

கடந்த சில நாட்களாக, பொதுமக்கள் படுகொலை பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளன, இது, நவம்பர் 9 அன்று சூடான் எல்லைக்கு அருகிலுள்ள மை-கத்ரா (May Cadera) நகரில் “நூற்றுக்கணக்கான பொது மக்கள் குத்தப்பட்டனர் அல்லது வெட்டிக் கொல்லப்பட்டனர்” என்பதாக மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. TPLF க்கு விசுவாசமான படைகள் தான் இந்த கொலைகளை நடத்தியதாக அபி குற்றம் சாட்டினார், ஆனால் TPLF அதை மறுத்தது. சூடானில் உள்ள டைக்ரேயன் அகதிகள் அண்டை நாடான அம்ஹாரா மாநிலத்தைச் சேர்ந்த தெரியாத குற்றவாளிகள் தான் மக்களை படுகொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டினர்.

ஐ.நா. மனித உரிமைகள் தலைவரான, மிச்செல்லே பாச்செலெட் (Michelle Bachelet), “இந்த நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறும் அபாயம் உள்ளது,” என்று கூறியதுடன், படுகொலை உறுதிசெய்யப்பட்டிருந்தால், ஏதேனும் போர்க்குணமிக்க படைகள் அதில் ஈடுபட்டிருக்குமானால், அது போர்க்குற்றங்களை விளைவிக்கும் என்று எச்சரித்தார்.

ஐ.நா. வின் கூற்றுப்படி, இந்த மோதல் குறைந்தது 20,000 பொதுமக்களை சூடானுக்குள் எல்லையை கடக்க நிர்ப்பந்தித்தது தெரியவந்தது, மேலும் இந்த மோதலால் ஒன்பது மில்லியன் பேர் இடம்பெயரக்கூடும் என்று ஐ.நா. எச்சரித்து, அத்துடன் ஏற்கனவே உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்த 1.8 மில்லியன் மக்களை இதனுடன் சேர்த்துக் கொண்டது.

நவம்பர் 11 அன்று, சூடான் அரசாங்கம், 200,000 எத்தியோப்பியர்கள் டைக்ரேயில் இருந்து சூடானுக்குள் விரைவில் தப்பியோடக்கூடும் என்றும், இதனால் கொடூரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை சரிசெய்ய இராணுவம் உடந்தையாகவுள்ள சிவில் அரசாங்கத்தின் இயலாமை மீது பெருகிவரும் அதிருப்திக்கு மத்தியில் நாட்டை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பரந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறுவதற்கு அச்சுறுத்திய நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சூடான் இராணுவம், ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரின் நீண்டகால ஆட்சிக்கு எதிராக முன்கூட்டியே ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நிகழ்த்தியது.

பிராந்தியத்தின் மீது தாக்குதல் நடத்த, எரித்திரியாவில் உள்ள அசாபில் உள்ள ஐக்கிய அரேபிய எமிரேட்டுக்களின் இராணுவத் தளத்திலிருந்து ஆளில்லா விமானங்களை அபி பயன்படுத்தியதாக TPLF கூட அவரை குற்றம்சாட்டியுள்ளது.

Loading