இலங்கை: மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மஸ்கெலியா கார்ட்மோர் தோட்டத்தை அதன் முதலாளி விற்க முடிவு செய்துள்ளதன் காரணமாக, தங்களது தொழில் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் உட்பட சமூக உரிமைகள் பறிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தொழிலாளர்கள், டிசம்பர் 28 முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தோட்டத்தின் தம்பஹேன, பிளக்மோர், லார்ஜ் மற்றும் ஐம்பது ஏக்கர் ஆகிய நான்கு பிரிவுகளிலும் சுமார் 500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகிய மூன்று தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஏற்பாடு செய்ய மறுத்துள்ள நிலையில், தொழிற்சங்கங்களுக்கு வெளியே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

சோ.ச.க. உறுப்பினர் தேவராஜா காட்மோர் தொழிலாளர்கள் முன் உரையாற்றுகிறார் (WSWS media)

இந்த தோட்டத்தை சொய்சா குடும்பத்தினரே 1949 முதல் நிர்வகித்து வருகின்றனர். அஜந்த சொய்சா அதன் தற்போதைய உரிமையாளர் ஆவார். 1,200 ஹெக்டயர் பரப்பளவு கொண்ட தோட்டத்தின் அறுபது ஹெக்டயர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு நபருக்கு விற்கப்பட்டுள்ளதோடு, இப்போது முழு தோட்டத்தையும் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 14 அன்று, தொழிற்சங்கங்களுடன் கூட்டமொன்றை கூட்டிய சொய்சா, தோட்டத்தை விற்பதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், அது தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தோட்டம் விற்கப்படுவதற்கு முன்னதாக, ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ள மற்றும் இப்போது 55-60 வயதை அடைந்துள்ள தொழிலாளர்களுக்கு சேவைக்கால நிதி மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த பகுதியில் சேராத தொழிலாளர்கள்களது கொடுப்பனவுகள், அவர்கள் ஓய்வுபெறும் போது புதிய உரிமையாளரால் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து எந்த அக்கறையும் இல்லாத தொழிற்சங்கங்கள், அவை அனைத்துக்கும் உடன்பட்டுள்ளன. ஆனாலும் புதிய முதலாளியின் கீழ் தங்கள் சமூக உரிமைகளை இழக்க நேரிடும் என்ற நியாயமான அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் உள்ளது.

“தோட்டம் முழுமையாக விற்கப்படுவதால், அலுவலகத்தில் உள்ள எங்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சுகாதாரம் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் பாதுகாக்கப்படுவது பற்றி எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒருவேளை புதிய உரிமையாளர் தோட்டத்தைப் பிரித்து விற்கலாம். அது நடந்தால், நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்படுவோம். முன்பு விற்கப்பட்ட பகுதிக்கு ஏற்கனவே வேலி போடப்பட்டுள்ளது. சேவைக்கால நிதி மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் உட்பட இந்த அனைத்து உரிமைகளுக்காகவுமே நாங்கள் போராடுகிறோம்,” என்று ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத்தளத்திற்கு தெரிவித்தார்.

காட்மோர் தோட்டத் தொழிலாளர்கள் WSWS நிருபர்களுக்கு நிலைமைகளை விளக்குகின்றனர் (WSWS media)

பி. சரஸ்வதி, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மற்றும் சமூக நிலைமைகளை விவரித்தார்: “நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறோம். அந்த சூழ்நிலையில் வேலை இலக்கை பூர்த்தி செய்ய முடியாது. முழு சம்பளத்தைப் பெற நாளொன்றுக்கு 16 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும். குறைந்தால் பாதி சம்பளம் தான் கொடுக்கப்படும். தினசரி 700 ரூபாய் சம்பளம் சாப்பாட்டுக்கு கூட போதாது. தோட்டத்தைச் சுற்றி ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் எங்களுக்கு போதுமான தண்ணீர் இல்லை. வீட்டுப் பிரச்சினையும் தீவிரமாக உள்ளது. எங்கள் சொந்த பணத்தால்தான் திருத்த வேலைகள் செய்ய வேண்டும். தொழிற்சங்கங்கள் எதுவும் செய்யவில்லை. அவை தேர்தல் நேரத்தில் மட்டுமே வருகின்றன. நாங்கள் இப்போது நான்கு நாட்களாக போராடி வருகிறோம். யாரும் வரவில்லை.”

கார்ட்மோர் தோட்டத்தில் வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய மறுத்துவிட்ட தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தம் வெடித்தபின் அது மற்ற தோட்டங்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சத்தில், ஜனவரி 4 அன்று தோட்ட உரிமையாளருடன் நடந்த ஒரு பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக கூறி, வேலைநிறுத்தத்தை நாசப்படுத்த முயல்கின்றன. இருப்பினும், தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.

காட்மோர் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், வேலை வேகப்படுத்தல் மற்றும் சம்பள வெட்டுக்களுக்கும் எதிராக வளர்ச்சியடைந்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். மஸ்கெலிய பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலான மொக்கா தோட்டத்தின் மேல் பிரிவில் உள்ள தொழிலாளர்கள், ஊதியக் வெட்டுக்கு எதிராக, டிசம்பர் 23 முதல் ஒரு வார தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் உறுதிப்பாடும் போர்க்குணமும் இருந்தபோதிலும், அவர்களது போராட்டத்தை தனிமைப்படுத்திய தொழிற்சங்கங்கள், தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வைக் பெற்றுத்தருவதாக உறுதியளித்து வேலைநிறுத்தத்துக்கு முடிவுகட்டின.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள் குழு, டிசம்பர் 31 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் கார்ட்மோர் தோட்டத்திலுள்ள தொழிலாளர்களைச் சந்திக்கச் சென்றது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குழுவினர் முன் உரையாற்றிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, காட்மோர் தோட்டத் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் ஏனைய சமூக உரிமைகள் தொடர்பான பிரச்சினையானது தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்று விளக்கினார்:

“தொழிற்சங்கங்கள் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் சூழ்நிலையில், காட்மோர் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு வெளியே தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முன்னெடுக்கும் தைரியமான போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட தனி போராட்டங்கள் மூலம் முதலாளிகள் மீது அழுத்தம் கொடுத்து தங்கள் உரிமைகளை வெல்ல முடியாது. இராஜபக்ஷ அரசாங்கமும் தோட்ட முதலாளிகளும் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்து தோட்டத் தொழிலாளர்களினதும் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் அவசியமாகும்,” என அவர் கூறினார்.

22 உள்ளூர் தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களும், முதாலளிகள் முன்மொழிந்துள்ள வருமானப் பகிர்வு திட்டத்தின் கீழ் கார்ட்மோர் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர், என்று தேவராஜா கூறினார். "இராஜபக்ஷ அரசாங்கமும் தோட்ட முதலாளிகளும், தொழிற்சங்கங்களின் ஆதரவுடனேயே இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றன. வருமானப் பகிர்வு முறையின் கீழ், தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிறுவனங்களின் இலாபங்களுக்காக மிக கொடூரமான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். இதன் கீழ், தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட தற்போதுள்ள அற்ப பலன்களைக் கூட அவர்கள் இழப்பார்கள், என அவர் விளக்கினார்.

தோட்டத் தொழிலாளர்கள் போலவே பொதுவாக தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்கள், கொரோனா தொற்றுநோயால் தீவிரமாக்கப்பட்டுள்ள நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துகின்ற கொடூரமான நோக்கத்தின் விளைவே ஆகும் என தேவராஜா தெரிவித்தார். இராஜபக்ஷ அரசாங்கமும் முதலாளித்துவவாதிகளும் செயல்படுத்தி வருகின்ற இந்தக் கொள்கை, உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள், நிதி மற்றும் கூட்டுத்தாபன உயரடுக்கின் கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தொழிலாளர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேவராஜா வலியுறுத்தினார். "தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் பிரதிநிதிகளைத் கொண்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். வேலை மற்றும் ஊதிய வெட்டுக்கள், வேலைகளை விரைவுபடுத்துதல் மற்றும் ஏனைய சமூக உரிமைகளை அழிப்பதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்ய, ஒவ்வொரு தோட்டத்திலும் இத்தகைய நடவடிக்கைக் குழுக்களை அமைத்தல் வேண்டும், என்று தேவராஜா கூறினார்.

"தோட்டத் தொழிலாளர்கள், ஏனைய தொழிலாள வர்க்கத்துடனும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடனும் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் போராட்டம் எந்த முன்னோக்கின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியமான பிரச்சினை ஆகும். தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்கான போராட்டம் அடிப்படையாகக் கொள்ளவேண்டிய ஒரே மாற்று முன்னோக்கு, முதலாளித்துவ இலாப முறைமையையும் மற்றும் முதலாளித்துவ வர்க்க ஆட்சியையும் ஒழிப்பதற்கான, சர்வதேச சோசலிச முன்னோக்கு ஆகும்.

"இதன் ஒரு பகுதியாக, பெரிய தோட்டங்கள், பெருந்தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பிரதான முதலாளித்துவ சொத்துக்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள் மயப்படுத்துகின்ற, மற்றும் ஒரு சில முதலாளிகளின் அன்றி, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவசியத்துக்கான சோசலிச பொருளாதார கொள்கையை அமுல்படுத்துகின்ற, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக தொழிலாள வர்க்கம் போராட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ், ஹட்டனில் எபோஸ்ட்சிலி மற்றும் கிளனூகி தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், முறையே தொழிலாளர் நடவடிக்கை குழு மற்றும் தொழிலாளர் வழிநடத்தல் குழுவை அமைத்துக்கொண்ட அனுபவத்தை விளக்கிய தேவராஜா, இதுபோன்ற குழுக்களை கார்ட்மோர் தோட்டத்திலும் அமைக்க முன்வர வேண்டும் எனவும் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்.

Loading