கலிபோர்னிய மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பிவழிவதுடன், லாரிகள் பிணங்களல் நிரப்பப்படுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலம் கோவிட்-19 பெருந் தொற்றுநோயின் மையப்பகுதியாக மாறியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று, மாநிலத்தில் 585 கோவிட்-19 இறப்புக்கள் பதிவாகின, இது அன்றைய தினத்தில் அமெரிக்காவில் பதிவான மொத்த கோவிட்-19 இறப்புக்களில் ஏழில் ஒரு பங்கிற்கு மேற்பட்டதாகும். 39 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் அண்ணளவாக 39,000 கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட்டது உட்பட, 2.4 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் டியாகோ நகரங்களும் மற்றும் தெற்கு மற்றும் மத்திய பள்ளத்தாக்கு பகுதி முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நோயாளிகளால் நிரம்பி இப்பகுதிகளில் முற்றிலும் இடம் இல்லாமல் போனது. ஜனவரி 1 அன்று, மாநிலம் முழுவதும் 20,000 க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், இது ஜூலை 8 ஆம் தேதி மருத்துவமனைகளில் சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,000 உடன் ஒப்பிடுகையில் உச்சபட்சமாகும்.

தெற்கு கலிபோர்னியாவில் மருத்துவமனைக்கு வெளியே பிணங்களை ஏற்றுவதற்கு குளிரூட்டப்பட்ட லாரிப் பெட்டி காத்திருக்கிறது (நன்றி: உலக சோசலிச வலைத் தளம்)

கொரோனா வைரஸ் நோயாளிகளின் அதிவேகமான பெருக்கம், நாட்டின் செழிப்புமிக்க மாநிலத்தில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நிதி பற்றாக்குறையுடனும், எந்தவித முன்னேற்பாடுகள் இல்லாமலும் இயங்குவதை அம்பலப்படுத்தியுள்ளது. “மருத்துவமனைகள் புதிய ஊழியர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன” என்றும், “பிராணவாயு கலன்களின் நீண்டகால பற்றாக்குறை” அங்கு நிலவுகின்றது என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தெரிவிக்கிறது. மேலும் இந்த செய்தியிதழ், கோவிட்-19 பாதிப்பில்லாத பிற வெளி நோயாளிகளுக்கான சேவைகள் “எலும்புக்கூட்டைப் போல முற்றிலும்” குறைந்துவிட்டது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் கிறிஸ்டினா காலி (Christina Ghaly) கூறியதை மேற்கோள் காட்டியது. மேலும், இந்த மாகாணம் “பேரழிவின் விளிம்பில்” இருப்பதாகவும் அவர் கூறினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு இயக்குநரான கேத்தி சிடெஸ்டர் (Cathy Chidester), லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவசர மருத்துவ ஊர்திகள் தாம் கொண்டு சென்ற நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்க்க எட்டு மணி நேரங்கள் வரை காத்திருக்கின்றன என்று கூறுகிறார். சில சந்தர்ப்பங்களில், அவசர மருத்துவ ஊர்திகள் திருப்பிவிடப்படுகின்றன, அல்லது நோயை தாங்கிக் கொள்ளும் சக்தியுள்ள நோயாளிகள் வீட்டிற்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.

தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், அவர் பணிபுரியும் கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதி மருத்துவமனைக்கு அப்போதுதான் வந்து சேர்ந்திருந்த குளிரூட்டப்பட்ட அரை இழுவண்டியின் புகைப்படம் ஒன்றை உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்பி வைத்தார். அதாவது, பெருகி வரும் இறப்புக்கள் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையை மூழ்கடிக்கும் நிலையில், மாநிலம் முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளும் பிணக்கிடங்குகளும் அதைச் சமாளிக்க இத்தகைய வண்டிகளை வாடகைக்கு எடுக்க உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஈமச்சடங்கு மையம், தாமும் பிற அனைத்து ஈமச்சடங்கு மையங்களும் பிணங்களை கையாளும் அவற்றின் திறனைத் தாண்டி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ABC 7 செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளது. மையம் அதன் சாதாரண செயல்திறன் விகிதத்தை விட ஆறு மடங்கு அளவிற்கு கூடுதல் பிணங்களை அகற்றுவதாக அதன் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், அழிவுகரமான சூழ்நிலை கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை என்பது எந்தளவிற்கு மிக முக்கியமான பிரச்சினை என்பது பற்றி உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார்.

“எங்களது வேலை நேரம் மெதுவாக நீட்டிக்கப்படுகிறது, நாங்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அதிகமான நோயாளிகளை குறைவாக கவனித்துக் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார். மேலும், “அதைப் பற்றி சொல்வதையே நான் வெறுக்கிறேன், என்றாலும், களைப்பு மிகுதியால் நாங்கள் ஏதேனும் விடயங்களை செய்யத் தவறினால், மருத்துவர்களும் தவறவிடுவார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“மறுநாள் காலை, எனது மாற்றுப்பணி நேரம் காலை 6 மணிக்கு ஆரம்பித்து காலை 9 மணிக்குள்ளாக எனது வேலை நேரத்தில் மூன்று மரணங்கள் நிகழ்ந்ததைக் கண்டேன்… சமீபத்தில் எங்களது மருத்துவமனையில் 25 வயது இளைஞர் ஒருவர் இறந்தார், அவருக்கு இருந்த ஒரே உடல்நலக் குறைவு அவரது உடல் பருமன் மட்டும் தான். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்படவிருந்ததைக் கேட்டு அவர் அழுது கொண்டிருந்ததுடன், பயந்து போனார். அவர் ஒரு சிறுவனைப் போல இருந்தார். பின்னர் அவரது இதயம் செயலிழந்து அவர் இறந்து போனார். அப்போது அவரது அம்மா அங்கு இல்லாத நிலையில் மற்றொரு செவிலியர் ஒருவர் தான் அவரது கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்,” என்றும் அவர் கூறினார்.

“உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்யக்கூடிய தருணத்தில் நீங்கள் இருக்கும்போது, அவற்றை செய்யாமல் நீங்கள் செயலற்று இருக்கிறீர்கள், என்றாலும் [மற்றொரு நோயாளி] சிறப்பாக செயல்படுவதைக் கேள்விப்பட்ட பின்னர் நான் காரில் அமர்ந்து கொண்டு ஒரு மணி நேரம் அழுதேன். இதன் பொருள், அவருக்கு மரணமில்லை என்பதல்ல, மாறாக இவ்வளவு மரணங்கள் நிகழும் போது கூட, நாங்கள் இத்தகைய வெற்றிகளை அடைகிறோம் என்பது தான்.”

மேலும், லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான வீடற்ற மக்களுக்கு மத்தியில் வைரஸ் நோய்தொற்று பெரிதும் வெடித்தெழுகிறது. அதாவது, இலையுதிர் காலத்தில், நகரத்தில் வீடற்றவர்கள் மத்தியில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை வாரத்திற்கு 60 ஆக இருந்தது. அதன் பின்னர் இது கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 550 ஆக உயர்ந்துள்ளது. ஒன்றிய மீட்புக் குழுவின் (Union Rescue Mission) இயக்குநரான ஆண்ட்ரூ பேல்ஸ், அனைத்து முன்னணி நிறுவனங்கள், மற்றும் பல முகமைகள் / இயக்கங்கள் ஆகியவை முக்கிய மையங்களாக உள்ளன. அனைத்தும் மூழ்கிவிட்டன” என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸூக்கு தெரிவித்தார்.

நோய்தொற்று மற்றும் நோயறிகுறி தொகுப்புக்களுக்கு இடையிலான பின்னடைவு காரணமாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களின் கொண்டாட்டங்களும், கடைகளுக்கு மக்கள் சென்றதும் மருத்துவமனைகளில் மக்களைச் சேர்ப்பதற்கான ஆரம்பகட்டமாக மட்டுமே இருந்தன. இவற்றின் காரணமாக டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதம் மிகக் கொடிய ஆபத்தான மாதமாக இருக்கலாம் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணம் – தெற்கு கலிபோர்னியா மருத்துவ மைய பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிராட் ஸ்பெல்பேர்க் (Dr. Brad Spellberg), நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்குமானால் “சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து போகும்” என்று CNN செய்தி ஊடகத்தில் எச்சரித்தார்.

மருத்துவப் பணியாளர்கள் உட்பட மருத்துவ சேவைகளின் போதாமை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அவசர மருத்துவப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்திற்கு தேவைப்படும் பிராணவாயு விநியோகத்தை பூர்த்தி செய்வதற்காக இராணுவ பொறியாளர்களின் தனிக்குழு (Army Core of Engineers) ஒன்று அங்கு அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் தொழிலை பிரதானமாகக் கொண்ட மத்திய பள்ளத்தாக்கு பிராந்தியத்தின் பல மாவட்டங்களில் கடந்த மாதம் தொற்றுநோயின் காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரித்த நிலையில், கடந்த வாரம் இப்பிராந்தியத்திற்கு 1200 அவசர மருத்துவ ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

“நாங்கள் எங்களது பழக்கவழக்கத்தை மாற்றுவது மிகவும் முக்கியமாகும். அனைவரும் எதையாவது செய்கிறார்கள், என்றாலும் ஒவ்வொருவரும் இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும்” என்று கூறி, லாஸ் ஏஞ்சல்ஸின் ஜனநாயகக் கட்சி மேயர் எரிக் கார்செட்டி (Eric Garcetti) கடந்த வாரம் வெளியிட்ட தனது அறிக்கைகளில் தொற்றுநோய் விவகாரம் குறித்து மக்களை குறைகூற முனைந்தார். இந்த அறிக்கையில் உள்ள பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது. ஏனென்றால், லாஸ் ஏஞ்சல்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் வகையில் முக்கிய மால்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. திரைப்படத் தொழில் கூட தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

கலிபோர்னியாவின் பிற ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு கார்செட்டி, தொற்றுநோய் விவகாரத்திற்கு தொழிலாளர்களையும் சிறு தொழில் உரிமையாளர்களையும் குற்றம்சாட்ட முனைகின்றார், அதேவேளை பணம் சம்பாதிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் மாநிலம் முழுவதும் திறந்து வைக்க வலியுறுத்துகிறார். அதாவது, வைரஸ் நோய்தொற்றின் முக்கிய பொது பரவல்களைத் தடுக்க எதையும் செய்யாத, தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களை பணமில்லாமல் கைவிட்டுவிட்ட பூட்டுதல் நடவடிக்கைகள் அனைத்தும் பாசாங்குத்தனம் நிறைந்தவை என்பதுடன், வைரஸ் தொற்றுவதை தடுத்து நிறுத்த முற்றிலும் போதாதவையாகும்.

கடந்த புதன்கிழமை, ஜனநாயகக் கட்சி ஆளுநர் கவின் நியூசோம் (Gavin Newsom), கலிபோர்னியாவின் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான திட்டங்களை அறிவித்தார், இதில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் மாவட்டங்களுக்கு மாணவருக்கு 450 டாலர் வீதம் கணிசமாக நிதி ஊக்கத்தொகை வழங்கப்படுவது அடங்கும். இதுபோன்ற நிதி ஊக்கத்தொகை புளோரிடாவில் நடப்பதைப் போல நோய்தொற்று எண்ணிக்கைகளைப் பற்றிய தவறான அறிக்கைகளை வழங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

Loading