முன்னோக்கு

ஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க காங்கிரஸ் சபையை முற்றுகையிடுவதிலும், பீதியுற்ற பிரதிநிதி சபை உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களை பதட்டமாக வெளியேற்றுவதிலும், ஜோசப் பைடெனின் தேர்வுக் குழு பெரும்பான்மையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதை தாமதப்படுத்துவதிலும், பிரதிநிதிகள் சபை அலுவலக சபாநாயகர் நான்சி பெலோசியை முற்றுகையிடுவதிலும் கூட போய் முடிந்த, வாஷிங்டன் டி.சி. பாசிசவாத கிளர்ச்சி அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை குறிக்கிறது.

அமெரிக்க ஜனநாயகத்தின் வெல்ல முடியாத ஆற்றல் மற்றும் காலத்தால் நிலைத்திருக்கும் தன்மை மீதான பழைய பெருமைகள் முற்றிலுமாக வெறும் அரசியல் கட்டுக்கதையாக அம்பலப்பட்டு மதிப்பிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க பாசிசத்தின் மேலெழுச்சி குறித்த சின்கிளேர் லூவிஸின் (Sinclair Lewis) நியாயமான புகழ்வாய்ந்த கற்பனை கதையின் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்ட “இங்கே அது நடக்காது,” என்ற பிரபல வாக்கியத்தையே, சம்பவங்கள் தீர்க்கமான மிஞ்சிவிட்டன. இங்கே ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடக்க முடியும் என்பது மட்டுமல்ல, இங்கே ஜனவரி 6, 2021 மதியம் அது நடந்துள்ளது.

Trump supporters storm the Capitol, Wednesday, Jan. 6, 2021, in Washington. (AP Photo/John Minchillo)

அனைத்திற்கும் மேலாக, இந்த ஆரம்ப முயற்சி போதுமானளவுக்கு அதன் இலக்கை எட்டவில்லை என்றாலும் கூட, அது மீண்டும் நடக்கும்.

நேற்று என்ன நடந்ததோ அது கவனமாக திட்டமிடப்பட்ட ஒரு சதியின் விளைவாகும். அது, வெள்ளை மாளிகைக்குள்ளும் அரசின் ஏனைய முக்கிய அமைப்புகள், துறைகள் மற்றும் ஆணையங்களுக்குள்ளும் மூலோபாயரீதியில் நிலைநிறுத்தப்பட்ட பாசிச சதிகாரர்களின் ஒரு கும்பலுடன் செயல்பட்டு வந்துள்ள டொனால்ட் ட்ரம்பால் தூண்டிவிடப்பட்டது. புதன்கிழமை நடவடிக்கை அதனுடன் சேர்த்து, ட்ரம்ப் மகன்கள், ஸ்டீபன் மில்லெர் போன்ற அவரின் நெருக்கமான கூட்டாளிகள், இராணுவம், தேசிய பாதுகாப்புப்படை மற்றும் பொலிஸிற்குள் திரைக்குப் பின்னால் செயல்படும் மற்றவர்களின் பெரும் துர்நாற்றத்தையும் தாங்கியுள்ளது.

இந்த சதித்திட்டம் நன்கறியப்பட்ட நவீன ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளின் உத்திகளைப் பயன்படுத்தியது. பைடெனின் தேர்வுக் குழு பெரும்பான்மையைச் செல்லுபடியானதாக அறிவிப்பதற்கான காங்கிரஸ் சபையின் கூட்டத்தை நடவடிக்கைக்கான சரியான நேரமாக சதிகாரர்கள் அடையாளம் கண்டிருந்தார்கள். 2020 தேர்தல்கள் திருடப்பட்டுள்ளதாக வாரக்கணக்கில் ட்ரம்ப் மற்றும் அவர் கூட்டாளிகளின் பொய்யான கூற்றுக்களுடன் இந்த தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்யப்பட்டது. செனட் பெரும்பான்மை அணி தலைவர் மிட்ச் மெக்கொன்னல், பைடென் தேர்ந்தெடுக்கப்பட்டதை குடியரசுக் கட்சியினர் அங்கீகரிப்பதை பல வாரங்களுக்கு நிறுத்தி வைத்து, அதன் மூலமாக வாக்குச்சீட்டு மோசடி என்ற முற்றிலும் மோசடியான வாதங்களுடன் தேர்தலை மதிப்பிழக்கச் செய்வதற்கான ட்ரம்பின் முயற்சிகளுக்கு கால அவகாசமும் சட்டபூர்வத்தன்மையும் வழங்கி, முக்கிய சேவை வழங்கி இருந்தார்.

குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும் செனட் சபை குடியரசுக் கட்சியினரில் கணிசமான எண்ணிக்கையினரும், திட்டமிடப்பட்ட வலதுசாரி மேலெழுச்சிக்குத் தேவையான சாக்குப்போக்கை வழங்குவதற்காக, தேர்வுக்குழு வாக்குகளின் சட்டபூர்வத்தன்மையைச் சவால் விடுத்து புதன்கிழமை அரசியல் விவாதத்தை முடுக்கி விட்டிருந்தனர். நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிடுவதற்கான இறுதி சமிக்ஞை ட்ரம்பால் தான் வழங்கப்பட்டது, அவர் —நிச்சயமாக ஒருவரால் சொல்ல முடியும்— பொலிஸ், இராணுவம் மற்றும் இராணுவப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட கூறுபாடுகளால் வழிநடத்தப்பட்ட அவர் ஆதரவாளர்களுக்கு கிளர்ச்சிக்கான வீராவேசமான ஒரு முழக்கத்தை வழங்கினார்.

இந்த பாசிசவாத கும்பல்கள் நாடாளுமன்ற கட்டிடத்தைச் சூழ்ந்தபோது நடைமுறையளவில் அவை எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை என்பது ஏற்கனவே பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தின் மிகவும் முக்கியமான மற்றும் பலவீனமான பகுதிகளில், பொலிஸ் தென்படவில்லை. புதன்கிழமை பொலிஸ் விடையிறுப்பை அரசியல்ரீதியில் மதிப்பிடுவதானால், ஒருவர் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக கடந்த ஜூனில் Lafayette பூங்காவில் நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்ட வன்முறையை மட்டுமே நினைவுகூர வேண்டியுள்ளது.

தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான ட்ரம்ப் முயற்சிகளை எதிர்த்து போராட இடதுசாரி போராட்டத்திற்கு வாஷிங்டனில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் —எல்லோருக்குமே தெரியும்— பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் பாரியளவிலான பலத்தின் காட்சியைச் சந்தித்திருப்பார்கள். போராட்டக்காரர்களுக்கு அருகிலுள்ள ஒவ்வொரு கட்டிடத்திலும் அங்கே குறிபார்த்து சுடும் பொலிஸ்காரர்கள் மூலோபாயரீதியில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். தலைக்கு மேல் இராணுவ ஹெலிகாப்டர்களும் டிரோன்கள் சுற்றிக் கொண்டு இருந்திருக்கும். அந்த கூட்டத்தில் சிறியளவில் அங்கீகரிக்கப்படாத அசைவும், அது அமைதியாக இருந்திருந்தாலும் கூட, உடனடியாக கலைந்து செல்லும் உத்தரவுகளைச் சந்திக்கும், அதை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே கண்ணீர் புகைக்குண்டு உருளைகள் வீசப்பட்டிருக்கும். ஆயிரக் கணக்கானவர்கள் இல்லையென்றாலும், நூற்றுக் கணக்கானவர்களாவது உக்கிரமாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பு வேதனைக்குரிய விதத்தில் அரசியல் முதுகெலும்பின்மையைக் காட்சிப்படுத்துகிறது. அந்த கிளர்ச்சியின் முதல் ஒருசில மணி நேரம் வரையில் ஜனநாயகக் கட்சியின் ஒரேயொரு முக்கிய தலைவரும் அந்த சதியைத் தெளிவாக கண்டித்து கண்டனங்களை வெளியிடவில்லை, அவர்கள் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எதிர்ப்பதற்காக மக்களுக்கும் அழைப்புவிடுக்கவில்லை. ட்வீட்டர் கணக்குகளில் மில்லியன் கணக்கானவர்கள் பின்தொடர்ந்து வரும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மற்றும் கிளிண்டன்கள் நாள் முழுக்க மவுனமாக இருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பதவியேற்கவிருக்கும் ஜனாதிபதி பைடெனைப் பொறுத்த வரையில், இறுதியில் மக்கள் முன்னிலையில் வருவதற்குப் பல மணி நேரங்கள் பொறுத்திருந்தார். நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதலை ஆட்சி விரோத செயல் என்று விவரித்த பைடென், பின்னர், “இப்போது ஜனாதிபதி ட்ரம்ப் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, அவர் பதவிப்பிரமாணத்தை நிறைவேற்றுமாறும், அரசியலமைப்பைப் பூர்த்தி செய்யுமாறும், இந்த முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வர கோருமாறும் நான் அழைப்பு விடுக்கிறேன்,” என்று கூறி, இந்த சதியின் தலைவருக்கே அசாதாரணமான முறையீடு செய்தார்.

வழமையாக, அரசியலமைப்புரீதியிலான ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான ஒரு முயற்சியை எதிர்கொள்ளும் போது, அந்த சதியால் அச்சுறுத்தப்படும் அரசியல் தலைவர் உடனடியாக மக்கள் ஊடகங்கள் மற்றும் நாடுதழுவிய பார்வையாளர்களை அந்த தேசதுரோகிகள் அணுகுவதைத் தடுக்க முயல வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, ட்ரம்ப் அவரே ஒழுங்கமைத்த கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர அவர் தேசிய தொலைக்காட்சியில் தோன்ற வேண்டுமென பைடென் அழைப்புவிடுத்தார்.

பின்வரும் அறைகூவலுடன் பைடென் அவர் கருத்துக்களை நிறைவு செய்தார். “ஆகவே, ஜனாதிபதி ட்ரம்ப், தலையிடுங்கள்.” பாசிசவாத சர்வாதிகாரியாக ஆகக்கூடியவருக்கு இந்த திவாலான முறையீடு, பைடெனின் "ஹிட்லரே, சரியானதைச் செய்யுங்கள்" என்ற உரையைப் போலவே வரலாற்றில் நினைவில் வைக்கப்படும்.

ஊடங்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஜனநாயகக் கட்சியினருக்கு இந்த சதியின் முழு ஆழத்தை அம்பலப்படுத்த எந்த உத்தேசமும் இல்லை என்பதோடு அதற்கு பொறுப்பான சதிகாரர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்களை அது தாங்கிப் பிடித்து வருகிறது. குற்றத்தை மூடிமறைப்பதற்கான முயற்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது, ஊடகங்கள் ஏற்கனவே ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் "இருகட்சி நல்லிணக்கத்தில் ஒன்றுகூட" வேண்டிய தேவையைப் பொழிந்து கொண்டிருக்கின்றன.

மாலை நேர அமர்வில், பைடென் தேர்ந்தெடுக்கப்பட்டதை நிலைநிறுத்துவதற்கான செனட் சபையின் தீர்மானத்துடன், இந்த நெருக்கடி முடிந்துவிடவில்லை.

சதிகாரர்களுடன் "நல்லிணக்கத்திற்கான" முறையீடுகள் ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான அடுத்த முயற்சிக்குப் பாதையைச் சீர்படுத்துகிறது. இதுதான் மிச்சிகன் லான்சிங்கில் (Lansing) ஆயுதமேந்திய பாசிசவாத குண்டர்கள் கடந்த ஏப்ரலில் மாநில தலைமை செயலகம் மீது நடத்திய தாக்குதலினதும் மற்றும் அதற்கடுத்து 2020 இலையுதிர் காலத்தில் அம்மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் கிரெட்சென் விட்மரைக் கடத்தி படுகொலை செய்வதற்காக நடத்தப்பட்ட சூழ்ச்சியினதும் படிப்பினையாக உள்ளது. ஜனநாயகக் கட்சியும் ஊடகங்களும் இத்தகைய குற்றங்களை விரைவாக ஒன்றுமில்லாது ஆக்கியதுடன், அத்தாக்குதலுக்கு எதிராக விட்மரைப் பாதுகாக்கவும் இல்லை. அதை விட, அந்த சதிக்காரர்களுக்கு எந்த தண்டனையும் கூட விதிக்கப்படவில்லை.

இந்த பாசிசவாத சதிக்கு ஜனநாயகக் கட்சியினரின் விடையிறுப்பு வெறுமனே கோழைத்தனம் அல்லது முட்டாள்தனம் அல்ல. மாறாக, நிதியியல் பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் பிரதிநிதிகளைப் போலவே, இவர்களும் இந்த குற்ற சதியையும் அதன் அரசியல் உள்நோக்கங்களையும் அம்பலப்படுத்துவது தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு பாரிய விடையிறுப்பைத் தூண்டிவிட்டு, முதலாளித்துவ அரசு மற்றும் அது சேவையாற்றும் நலன்களுக்கு எதிரான ஓர் இயக்கமாக திரும்பிவிடுமென அஞ்சுகிறார்கள்.

இந்த சதியை மூடிமறைப்பதற்கான முயற்சி எதிர்க்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் உடனடியாக ட்ரம்பைப் பதவியிலிருந்து நீக்கி கைது செய்வதற்கான கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும். அவர், சதித்திட்டத்தைத் தொடர்வதற்காக ஜனாதிபதி பதவியின் அளப்பரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, பதவியில் தங்கியிருக்க அனுமதிக்கக்கூடாது. வெள்ளை மாளிகையில் அவர் தங்கியிருப்பது அமெரிக்க மற்றும் உலகெங்கிலுமான மக்களுக்கு பாரிய ஓர் அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ட்ரம்ப் இப்போதும் கூட தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தவும் மற்றும் ஒரு போரைத் தொடங்கவும் கூட அதிகாரம் கொண்டுள்ளார். அவர் விரல்கள் அணுஆயுத தாக்குதல் பொத்தான் மீது உள்ளன.

அவரின் சக-சதிகாரர்களையும் பதவியில் விட்டு வைத்திருக்கக்கூடாது. அதேபோல இந்த சதியில் சம்பந்தப்பட்ட குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ் சபை உறுப்பினர்களும் செனட் மற்றும் காங்கிரஸ் சபையிலிருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கில் இழுக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து அவர்களை, "குடியரசுக் கட்சியின் சக நண்பர்கள்" என்று குறிப்பிடுவதே கூட ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக ஆக்குகிறது.

இந்த சதியில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க இட்டுச் செல்லும் பகிரங்க விசாரணையுடன் மக்கள் முன்னிலையில் ஒரு விசாரணைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.

இந்த சதிகாரர்களைக் கணக்கில் கொண்டு வந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு, வரவிருக்கும் —மேற்கொண்டு எந்த மேலெழுச்சி எதுவும் அவர் பதவியேற்பை முடக்கவில்லை என்றால்— வரவிருக்கும் பைடென் நிர்வாகத்தின் மீது நிச்சயமாக எந்த நம்பிகையும் வைக்க முடியாது.

பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் ஒரே ஆளும் வர்க்கத்தின் மற்றொரு அரசியல் அணிக்குக் கூடுதலாக வேறெதையும் பிரதிநிதித்துவம் செய்வில்லை. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உடனடியாக ஒபாமா அறிவிக்கையில், ஜனநாயக கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான மோதல் "உட்கட்சி பூசல்", அதாவது ஒரே குழு உறுப்பினர்களுக்கு இடையே நட்புபூர்வமான சண்டை என்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லை என்றார். ஒபாமா புதன்கிழமை மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில், “ஜனாதிபதியின் கட்சி உறுப்பினர்கள் பலர் இன்று பலமாக பேசுவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது,” என்று பணிவடக்கமாக எழுதி குடியரசுக் கட்சியினரையும் விட்டு வைக்காமல் பாராட்டினார். இந்த பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் வீச்சு பற்றிய உண்மையை மூடிமறைப்பதே இதுபோன்றவொரு அறிக்கையின் ஒரே நோக்கமாகும்.

ஜனவரி 6, 2021 சம்பவங்கள் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான எதிர்கால முயற்சிகளைத் தோற்கடிக்க தொழிலாள வர்க்கம் ஓர் அரசியல் மூலோபாயம் மற்றும் செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ பிற்போக்குத்தனம் மற்றும் எதிர்புரட்சியின் அரசியல் மற்றும் பொருளாதார இயக்கவியல், ட்ரம்ப் பதவியில் இல்லையென்றாலும் கூட தொடரும். இந்த இயக்கவியல் ஜனவரி 20 க்குப் பின்னர் தணிந்து விடாது. மில்லியனர்களாலும் சிஐஏ மற்றும் இராணுவத்துடன் நெருக்கமாக தொடர்புகளைக் கொண்டுள்ளவர்களாலும் நிரப்பப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் மற்றும் செனட்டில் உள்ள அக்கட்சியின் பிரதிநிதிகள் குழு, ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கான ஒரு சதியை ஒழுங்கமைப்பதில் குடியரசுக் கட்சியை விட குறைவான தகுதி கொண்டதல்ல.

எந்தவொரு சம்பவத்திலும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தால் அமைக்கப்படும் கொள்கைகளையே பின்தொடரும் பைடென் நிர்வாகத்தின் கொள்கைகள், பாசிசவாதிகள் சுரண்டிக் கொள்ளும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் நீடித்து தீவிரப்படுத்தும்.

கடந்த ஆண்டு நெடுகிலும், சோசலிச சமத்துவக் கட்சி சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் ஆளும் வர்க்க கொள்கைக்கு எதிராக இடைவிடாது போராட்டத்தை நடத்திய வேளையில், அது இந்த தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் மனிதாபிமானமற்ற விடையிறுப்புக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்பை விரிவாக எடுத்துக்காட்டி உள்ளது.

ஆபத்து முடிந்து விடவில்லை.

தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அணித்திரட்டுவதன் மூலமாக பரந்த மக்கள் எதிர்ப்பை ஒழுங்கமைக்க தகைமை கொண்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை ஆலைகளிலும் வேலையிடங்களிலும் கட்டமைப்பது இன்றியமையாததாகும்.

அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க ஜனநாயகத்தின் உருக்குலைவு முதலாளித்துவ நெருக்கடியில் வேரூன்றி உள்ளது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மலைப்பூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மையால் சீரழிக்கப்பட்ட ஒரு சமூகத்தில், ஜனநாயகத்தைக் காப்பாற்றி வைப்பது சாத்தியமில்லை.

ஜனவரி 6 இன் படிப்பினைகளை எடுக்க வேண்டும்!

சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதன் மூலமாக ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பிற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தை முன்னெடுங்கள்.

Loading