உலகளவில் உணவு விலைகளின் உயர்வு சமூக அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என்று ஐ.நா எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டிசம்பர் மாதம் உலக உணவு விலைகள் ஆறு ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. விலைகள் 2021 ல் தொடர்ந்து உயரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது பணவீக்கத்தை தூண்டும் மற்றும் உலகம் முழுவதும் பட்டினிகள் அதிகரிக்கும்போது குடும்பங்கள் மீது அதிக அழுத்தத்தையும் அதிகரிக்கும்.

கடன் பற்றாக்குறையின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் உலகின் மிக வறிய நாடுகளுக்கு இது மிகவும் தீவிரமானது. உணவு வாங்கவோ அல்லது மானியமாகவோ அவர்களிடம் பணம் இல்லை. குடும்ப வரவு செலவுத் திட்டங்களில் ஏற்படும் அதிர்ச்சியைத் தணிக்க சிறிய அல்லது சமூக பாதுகாப்பு வலைத் தடுப்பு எதுவும் இல்லை.

வரண்ட காலநிலை உலகெங்கிலுமுள்ள உணவுப் பயிர்களை பாதித்துள்ளதால், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (United Nation’s Food and Agriculture Organisation - FAO) உணவு விலைக் குறியீடு மே மாதத்திலிருந்து 18 சதவீதம் உயர்ந்துள்ளது. மோதல்களும் தொற்றுநோய்களும் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு இடையூறாக உள்ளன. அரசாங்கங்களின் கையிருப்பு வழங்கீடுகள்; ஹெட்ஜ் நிதிகள் (hedge funds - ஹெட்ஜ் நிதியானது பங்குகள், கடன் மற்றும் சரக்குகள் உள்ளிட பரந்த அளவில் முதலீடு செய்கிறது) மற்றும் பிற ஊக வணிகர்கள் உணவுப் பண்டங்களை வாங்கியுள்ளனர் மற்றும் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுவதால் தேவை அதிகரித்து வருகிறது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஒரு மூத்த பொருளாதார வல்லுனர் அப்டோல்ரேசா அப்பாஸ்ஸியான் (source: FAOVideo-YouTube)

FAO இன் மூத்த பொருளாதார வல்லுனரான அப்தோல்ரேஸா அப்பாசியன் கூறினார்: “உணவு விலையேற்றம் ஒரு உண்மை. மக்கள் வருமானத்தை இழந்திருந்தால், அவர்கள் இப்போது மிகவும் கடினமான நேரத்தை கடந்து செல்கிறார்கள் ... உண்மையான பாதிப்பு உணவுக்கான அணுகல். மக்கள் வருமானத்தை இழந்துள்ளனர். மகிழ்ச்சியற்ற மக்கள் நிறைய பேர் உள்ளனர். எனவே இது சமூக அமைதியின்மைக்கான ஒரு செய்முறை குறிப்பாகும்.”

2008 ஆண்டில் மக்கள் பட்டினி மற்றும் உணவுக் கலவரங்களால் இறக்கவும், ஹைய்ட்டிய அரசாங்கத்தைக் கீழிறக்கி, 2011 ஆண்டு அரபு வசந்தத்திற்கு பங்களித்து வந்த மட்டங்களை விலைகள் இன்னும் வந்தடையவில்லை என்றாலும், அடிப்படை பிரதான உணவுகளின் விலைகள் உயர்ந்துள்ள போக்கு, உலகளாவிய பரிமாணங்களின் வளர்ந்து வரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் புரட்சிகரத் தாக்கங்களை ஏற்படுத்தும் சாத்தியக்கூறை கொண்டுள்ளது.

அப்பாஸியன் கூறினார், “தடுப்பூசி குறுகிய காலங்களில் பிரச்சினைகளை தீர்க்காது, அவர்களுக்கு உணவு இல்லை என்று [மக்கள்] உணர்ந்தால், விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறக்கூடும். அந்த [முந்தைய] சிகரங்களை நாங்கள் தொடுவோம் என்று எனக்கு இன்னும் சந்தேகம் இருந்தாலும், வரும் ஆண்டில் நிலையற்ற தன்மையைக் காண்போம்.”

உலகம் 9 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்கபோதுமான உணவை உற்பத்தி செய்கிறது, தற்போதைய 7.6 பில்லியன் மக்கள் தொகையை விட இது மிகவும் அதிகம், ஆனால் மூன்றில் ஒரு பங்கு அறுவடை, விநியோகம், சேமிப்பு மற்றும் போக்குவரத்து மூலம் வீணடிக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல் "சுதந்திர சந்தை" மற்றும் விலை உயர்விலிருந்து வருகிறது.

கால்நடை தீவனம் மற்றும் தாவர எண்ணெய்க்கு முக்கியமான சோயா பீன்ஸ் ஒரு புஷல் (one bushel (35.2 liters) weighs 60 pounds) 13 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. அனைத்து பல்பொருள் அங்காடி பொருட்களின் தயாரிப்புகளில் பாதியளவு பயன்படுத்தப்படும் பாமாயில் (palm oil), கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் அதன் மிக உயர்ந்த விலையைக் கண்டது. உலகின் முன்னணி கோதுமை ஏற்றுமதியாளரான ரஷ்யாவில் வரட்சியான காலநிலை மற்றும் உள்நாட்டு உணவு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தானிய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் காரணமாக சோளம் ஒரு ஆறு ஆண்டுகளின் உயர்நிலையில் உள்ளது, ஒரு புஷல் (60 lb (27.2155 kg)) கோதுமை 6 டாலர்களுக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. தென் அமெரிக்காவில் தானிய விலைகள் உயர்ந்துள்ள நிலையில், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா வெப்பமான வரட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இது சோளம் ஏற்றுமதி உரிமங்களை நிறுத்தி வைக்க அர்ஜென்டினா அரசாங்கத்தை தூண்டியுள்ளது.

துனிஸிலுள்ள மத்திய சந்தை (credit: photo by Christopher Rose, flickr)

தென் கிழக்கு ஆசிய நாடுகளை பெருந்தொற்று நோய் தாக்குதலுக்குள்ளாகியதால் ஏற்றுமதியை கட்டுப்படுத்த எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அரிசி விலைகளும் கூட உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், துறைமுகங்களில் நெரிசல், சரக்கு பெட்டகங்களின் தட்டுப்பாடு பெருந்தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ளதால், கப்பல் போக்குவரத்து காலம் இரு மடங்காக உயர்ந்துள்ளது மற்றும் சரக்கு விலைகள் உயருகின்றன.

இத்தகைய அராஜகம் தான் சந்தையின் அராஜகமாக இருக்கிறது மற்றும் நிதியத் தன்னலப் பிரபுக்கள் தங்களுடைய சொந்த நலன்களைத் தவிர வேறு எதற்கும் அலட்சியமாக இருக்கின்றனர். அவ்வாறு செய்ய முடிந்த அரசாங்கங்கள் தங்கள் உணவு விநியோகங்களை பலப்படுத்துவதற்கு, கடுமையான தேசியப் போட்டியை உருவாக்குவதோடு, தேவையையும், விலை உயர்வையும் தூண்டிவிட்டன. ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டும் வகையில், பெருந்தொற்று நோயின் போது விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதன் தானிய மற்றும் அரிசி இருப்புக்களை விடுவித்த பின்னர், சீனா அதன் 2020-21 ஆண்டுக்கான அதன் இறக்குமதிகள் 7 மில்லியன் டன்களிலிருந்து 22 மில்லியன் டன்களாக மூன்று மடங்கு அதிகரிக்கும் என்ற முன்கணிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

COVID-19 பெருந்தொற்று நோய் வருமானங்களைக் குறைத்து, விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதற்கு முன்பே, நீடித்த காலமாகவும் மற்றும் கடுமையாகவும் பட்டினியானது பரவலாகவும் உயர்ந்து வந்தது. 2019 ஆம் ஆண்டில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 750 மில்லியனாக இருந்தது, அல்லது இந்தப் புவிப் பரப்பில் கிட்டத்தட்ட பத்து பேரில் ஒருவர், தெற்காசியா மற்றும் துணை-சஹாரா ஆபிரிக்காவில் பெரும்பான்மையானவர்கள் வாழுகின்றார்கள். "நடுத்தரமான" ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் சேர்க்கப்பட்டால் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 பில்லியனாக உயர்கிறது.

பட்டினி, 2030 க்குள் 841 மில்லியன் மக்களை தாக்கும் என்று ஐ.நா கணித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொற்றுநோயின் விளைவாக 909 மில்லியனுக்கு நெருக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை மிகப் பெரிய அளவில் இது செல்வந்தர்கள் உட்பட அதிகரித்துள்ளது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை பாதிக்கிறது.

கடந்த ஏப்ரலில் அமெரிக்க விவசாயத்துறை (US Department of Agriculture) ஆய்வின்படி, உணவு விநியோகம் பாதிக்கப்பட்டதாலும், பத்து மில்லியன் கணக்கான மக்கள் வேலை இழந்ததாலும் அல்லது தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டதாலும், 17 சதவிகிதத்திற்கும் அதிகமான தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத காரணத்தால் சாப்பிட போதுமான அளவு கிடைக்கவில்லை என்று கூறினர். அமெரிக்காவின் மிகப் பெரிய பட்டினி-நிவாரண அமைப்பான அமெரிக்கா உணவளிப்பு (Feeding America), 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு பாதுகாப்பின்மையை அனுபவிக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது, அல்லது ஆறு அமெரிக்கர்களில் ஒருவர் மற்றும் நான்கு குழந்தைகளில் ஒருவர் — 2020 இன் இறுதிக்குள் 2019 இல் இருந்து கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிப்பு— என்று மதிப்பிட்டுள்ளது.

ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது, ஐ.நா. வின் அமைப்பான யுனிசெப் உலகம் முழுவதுதிலுமுள்ள குழந்தைகளுக்கு மனிதாபிமான மற்றும் வளர்ச்சி உதவிகளை வழங்கும் பொறுப்புடன், இந்த ஆண்டு 10 மில்லியன் மக்கள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவை அனுபவிப்பார்கள் என்று கணித்துள்ளது. COVID-19 பெருந்தொற்று நோய் விநியோக சங்கிலிகள் மற்றும் உணவு உற்பத்தியை பாதித்ததால் சில நாடுகளில் உணவுச் செலவுகள் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தன.

சஹேல், காங்கோ ஜனநாயகக் குடியரசு, வடகிழக்கு நைஜீரியா, யேமன் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் என்று யுனிசெப் எச்சரித்ததுடன், 2021 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்க 1 பில்லியன் டாலர்கள் கூடுதலாக வேண்டுகோள் விடுத்தது.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (WFP) இந்த நோய் உணவுப் பாதுகாப்பின்மையை 80 சதவீதம் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. இது மேற்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையையும் விட அதிகமான 270 மில்லியன் மக்களை பாதிக்கும். அதாவது அவர்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர்.

ஒரு உணவுத் தட்டுக்கான 2020 செலவு அறிக்கையானது (Cost of a Plate of Food 2020 Report) 36 நாடுகளில் தனிநபர் சராசரி வருமானத்தை மதிப்பிட்டுள்ளது, மக்கள் ஒரு அடிப்படை உணவு, சில பீன்ஸ் அல்லது பயறு வகைகள் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற அடிப்படை உணவுக்காக செலவழிக்க வேண்டிய வருமானத்தின் சதவீதத்தை கணக்கிடுகிறது. உள்ளூர் விருப்பங்களுடன் பொருந்தக்கூடிய விலையை ஒப்பிடுகையில் வளர்ந்து வரும் ஒரு நாடு என்று அழைக்கப்படும் இடத்தில் நியூயோர்க் இன் விலையுடன் ஒப்பிடலாம்.

பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து, தெற்கு சூடானில் வசிக்கும் ஒருவர் உணவுக்காக செலவழிக்கும் தினசரி வருமானம் 27 புள்ளிகள் உயர்ந்து 186 சதவீத வருமானமாக உள்ளது என்று WPF கண்டறிந்துள்ளது. ஆனால் நாட்டின் கிழக்கில் 60,000 க்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயர்த்து, பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை முடக்கியுள்ள ஒரு மோதலைத் தொடர்ந்து பஞ்ச அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ளது. நியூ யோர்க்கிலுள்ளவர்கள் தங்கள் வருமானத்தின் அதே விகிதத்தை இதேபோன்ற அடிப்படை உணவில் செலுத்தினால், அதற்கு 393 அமெரிக்க டாலர்கள் செலவாகும். அதிகமாக பணம் செலுத்தும் முதல் 20 நாடுகளில் பதினேழு, துணை சஹாரா ஆபிரிக்காவில் தான் உள்ளன.

WPF இன் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி கூறுகையில், “நகர்ப்புறங்களிலுள்ள மக்களும் இப்போது மிகவும் பாதிக்கப்படுகின்றனர், COVID-19 வைரஸானது வேலையின்மை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது, மேலும் மக்கள் உணவுக்காக அவர்கள் சார்ந்திருக்கும் சந்தைகளைப் பயன்படுத்த சக்தியற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். மில்லியன் கணக்கான மக்களுக்கு, ஒரு நாளின் ஊதியத்தை தவறவிடல் என்பது தமக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் ஒரு நாள் உணவைக் காணவில்லை என்பதாகும். இது அதிகரித்த சமூக பதட்டங்களுக்கும் உறுதியற்ற தன்மைக்கும் வழிவகுக்கும்.”

சமூகத்தின் உயர்ந்த இடங்களில் குவிந்துள்ள முன்னோடியில்லாத செல்வத்துடன் இவ்வளவு பெரிய அளவில் உணவு பற்றாக்குறை உள்ளது. பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து, உலகின் 500 பெரும் செல்வந்த தனிநபர்கள் தங்கள் செல்வத்தை 1.8 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள பில்லியனர்கள் இப்போது 10 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். 83 நாடுகளுக்கு உணவு வழங்க 13 பில்லியன் டாலர்கள் WPF க்கு தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு முழுவதும் 4.9 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை உள்ளது, இது 30 மில்லியன் மக்களை பஞ்சத்தில் இருந்து காப்பாற்ற உதவும் தொகையாகும்.

ஆளும் வர்க்கத்தின் சுயநல நலன்களுக்குப் பதிலாக, இந்த செல்வத்தை பறிமுதல் செய்வதற்கும் அதை சமூகத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்துவதற்கும் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டமைப்பதே தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பாக இருக்க வேண்டும். இதுதான் சோசலிச வேலைத்திட்டமாகும்.

Loading