சீனாவின் வளர்ச்சி விகித அதிகரிப்பு புவி-அரசியல் பதட்டங்களுக்கு எரியூட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2020 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பொருளாதாரம் 6.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது என்ற சீன அரசாங்கத்தின் அறிவிப்பு வேறு நிலைமைகளின் கீழ் உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரு பயனுள்ள ஊக்கத்தை அளிப்பதாக வரவேற்கப்படும். 2020 முதல் காலாண்டில் அது 6.8 சதவிகிதம் சுருங்கிய போதிலும், ஆண்டு முழுவதும் உற்பத்தி 2.3 சதவிகிதம் விரிவடைந்தது.

எவ்வாறாயினும், இந்த செய்தி இன்று பல ஆளும் வட்டங்களில் வரவேற்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் பிற முக்கிய பொருளாதாரங்கள் வீழ்ச்சியை எதிர்கொள்கையில் சீனப் பொருளாதாரத்தின் விரிவாக்கம் அமெரிக்கா எதிர்க்க உறுதியாக உள்ள பெய்ஜிங்கின் பொருளாதார மற்றும் அரசியல் சக்தியை உயர்த்தும் என்ற கவலைகளுக்கு மத்தியில் இது அமெரிக்காவுடன் அதிகரித்த பதட்டங்களுக்கு வழிவகுக்கும்.

Bank of China (boc.cn)

நான்காம் காலாண்டில் 6.5 சதவிகித வளர்ச்சி, சீனப் பொருளாதாரம் கோவிட்-19 தொற்றுநோயைத் தொடங்குவதற்கு முன்பை விட வேகமான விகிதத்தில் எதிர்பார்ப்புகளை மீறி விரிவடைந்து வருவதைக் குறிக்கிறது.

மூன்றாம் காலாண்டில் 5.8 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் நான்காம் காலாண்டில் தொழில்துறை உற்பத்தியில் 7.1 சதவிகிதம் உயர்ந்ததற்கான காரணம் அதிக அரசாங்க உதவி கிடைத்ததாலாகும்.

ஏற்றுமதிகளின் அதிகரிப்பும் மற்றொரு காரணியாக இருந்தது. சீனா டிசம்பர் மாதத்தில் மிக உயர்ந்த மாதாந்த வர்த்தக உபரியை பதிவு செய்தது. ஏற்றுமதிகள் 18 சதவிகிதம் உயர்ந்தன. இது இரட்டை இலக்க சதவிகிதம் அதிகரித்த அடுத்தடுத்த மூன்றாவது மாதமாகும்.

புள்ளிவிவரங்களை அறிவித்து, தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தலைவர் நிங் ஜிஷே, கடந்த ஆண்டு பொருளாதாரம் "சீராக மீண்டுள்ளது" என்று கூறினார். ஆனால் "மாறிவரும் தொற்றுநோய் இயக்கவியல் மற்றும் வெளிப்புற சூழல் பல நிச்சயமற்ற நிலைகளை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தார்.

பொருளாதார வளர்ச்சி நிதி, தரவுகளில் பிரதிபலித்தது. சீன நாணயமான ரென்மின்பி, 2018 க்குப் பின்னர் முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு 6.5 ஐ விட உயர்ந்ததுடன் மற்றும் 2008-09 உலக நிதி நெருக்கடிக்குப் பின்னர் பங்குச் சந்தை அதன் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது.

சீன வளர்ச்சி உலகின் பிற பகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 4.3 சதவிகிதம் சுருங்கியிருக்கும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது. இது யூரோப்பகுதியில் 7.4 சதவிகிதம் சரிவு எதிர்பார்க்கப்படுவதாலும், அமெரிக்காவின் சுருக்கம் 3.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் ஆகும்.

சீனப் புள்ளிவிவரங்களை அறிவிக்கையில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பதவிக்குவரும் பைடென் நிர்வாகத்திலும் மற்றும் இன்னும் விரிவாக அமெரிக்க அரசியல் மற்றும் உளவுத்துறை ஸ்தாபகத்திற்குள்ளும் சந்தேகத்திற்கு இடமின்றி விவாதிக்கப்படுகின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தியது.

தனிநபர் அடிப்படையில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 10,000 டாலராக, அமெரிக்க மட்டமான 65,000 டாலருக்கும் மிகக் குறைவாக இருக்கின்றது. “அதன் தனித்த சந்தையின் அளவு, மனிதனின் நினைவில் இருக்ககூடிய மோசமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழுந்ததுடன் இணைந்து, சீனா வலுவான கையுடன் புதிய ஆண்டுக்குள் நுழைகிறது". சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவிக்குவரும் பைடென் நிர்வாகத்துடனான தனது ஒப்பந்தங்களில் இதைப் பயன்படுத்துவார் என செய்தித்தாள் குறிப்பிட்டது.

ட்ரம்ப் நிர்வாகம் அதன் எழுச்சியை குறைக்க முயற்சித்த போதிலும், கடந்த ஆண்டு சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பங்கினைவிட வளர்ந்தது என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. தொற்றுநோய்க்கு மத்தியில் சீனா வளர்கையிலும், அமெரிக்கா பின்தங்குகையில், "சில கோவிட் முன் கணிப்புகளை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 2028 ஆம் ஆண்டளவில் சீனா அமெரிக்காவுடன் சமநிலையை அடையும் என இப்போது பல பொருளாதார வல்லுநர்கள் காண்கின்றனர்".

"சீனப் பொருளாதாரம் அமெரிக்காவை முந்திய பின்னர் அதனுடனான அதன் இடைவெளியை விரிவாக்கும் என்று பல முன்னறிவிப்பாளர்கள் எதிர்பார்ப்பது போல்" இந்த உயர்வு அங்கு நிற்காது.

சீனாவின் வளர்ச்சி இல்லாவிட்டால், உலக வங்கி மதிப்பிட்ட 4.3 சதவீத சுருக்கத்துடன் ஒப்பிடும்போது, உலகப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 5.7 சதவீதம் சுருங்கியிருக்கும். சீனாவின் செயல்திறன் என்பது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் வழக்கமான சராசரி வருடாந்த ஊக்கமான 0.8 சதவீதமாக இருப்பதற்கு பதிலாக, கடந்த ஆண்டு அதன் தாக்கம் 1.5 தவீதமாக இருந்திருக்கலாம்.

அமெரிக்க-சீனா உறவுகளுக்கான வலுவான சீன வளர்ச்சியின் முக்கியத்துவமும், அமெரிக்காவின் ஒட்டுமொத்த உலகளாவிய நிலைப்பாடும் Financial Times வெளியுறவு நிருபர் கிடெயோன் ராச்மன் எழுதிய ஒரு கட்டுரையின் விடயமாக இருந்தது. அத்துடன் டொனால்ட் ட்ரம்பினால் ஜனவரி 6 இன் தூண்டப்பட்ட சதித்திட்டத்தின் உலகளாவிய தாக்கம் குறித்து மேலும் கவனத்தை ஈர்த்தார்.

“அமெரிக்காவின் சீர்குலைவு சீனாவின் வாய்ப்பு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், சீனாவுக்கு எதிராக ஒரு கூட்டணியை ஒழுங்கமைப்பதன் மூலம் சீனாவிற்கு எதிராக ஒரு அமெரிக்க உந்துதலைத் திட்டமிட முயற்சிக்கும் பதவியேற்கவுள்ள பைடென் நிர்வாகத்தின் கொள்கையை ராச்மன் எடுத்துக்காட்டினார்.

பைடென், "உலகின் ஜனநாயகங்களின் உச்சிமாநாட்டை அழைக்க திட்டமிட்டிருந்தார்" என்று அவர் எழுதினார். ஆனால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், "சுதந்திர உலகின் ஒழுங்கமைப்பாளராக செயல்படுவதற்கான நம்பகத்தன்மை அமெரிக்காவிற்கு இல்லாமல் போகலாம்." பைடென் "ஜனநாயக உச்சிமாநாடு" இங்கிலாந்து கூட்டிய 10 "ஜனநாயக நாடுகளின்" கூட்டத்திற்கு ஆதரவாக அமைதியாக நிறுத்தப்படலாம்.

பொருளாதாரத் துறையில், சீனாவுடனான அமெரிக்காவின் வளர்ந்து வரும் போரின் பெரும்பகுதி உலகெங்கிலும் பொருளாதார செல்வாக்கிற்காக இருக்கும் என்று ராச்மன் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டின் இறுதியில், உலகின் 190 நாடுகளில் 128 நாடுகள் அமெரிக்காவுடன் செய்ததை விட சீனாவுடன் அதிக வர்த்தகம் செய்துள்ளன. உலக வங்கி அமெரிக்காவின் 3.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சீனப் பொருளாதாரம் 8 சதவீதம் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்த இரவில் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவர் ரிச்சார்ட் ஹாஸ் செய்த ட்வீட்டை ராச்மன் மேற்கோள் காட்டினார். ஹாஸ் எழுதினார்: “உலகில் யாரும் நம்மை மீண்டும் முன்னரைப்போல் பார்க்கவோ, மதிக்கவோ, பயப்படவோ அல்லது சார்ந்து இருக்கவோ வாய்ப்பில்லை. அமெரிக்காவிற்கு பிந்தைய சகாப்தத்தின் தொடக்க திகதி என்று ஒன்று இருந்தால், அது நிச்சயமாகவே இன்றாகும்”.

எவ்வாறாயினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அமைதியாக மங்கிப்போகப் போவதில்லை. லியோன் ட்ரொட்ஸ்கி 90 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டது போல, அமெரிக்கா தனது பலத்தை அதன் எழுச்சியின் காலத்தை விட அதன் வீழ்ச்சியின் காலத்திலையே வெளிப்படையாகவும் வன்முறையாகவும் பயன்படுத்தும். பதவிக்குவரும் பைடென் நிர்வாகத்தால் செய்யப்படும் கொள்ளையடிக்கும் கணக்கீடுகளில் சமீபத்திய வளர்ச்சி புள்ளிவிவரங்கள் கருத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Loading