ட்ரம்ப் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியும் பாசிசத்தின் எழுச்சியும்: அமெரிக்கா எங்கே செல்கிறது?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 6, 2021 அன்றான வன்முறை மற்றும் அதற்குப் பிந்திய நிகழ்வுகளுக்கு அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் அதிர்ச்சி கண்டமை தான் ஆரம்பகட்ட எதிர்வினையாக இருந்தது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோசப் பைடெனின் பதவியேற்பு தலைநகரில் 25,000 தேசியக் காவல் படையினரின் பாதுகாப்பு பணிக்கு மத்தியில் —ஒரு இராணுவ அதிகாரி குறிப்பிட்டது போல இது ஆப்கானிஸ்தானில் இப்போது நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகளது எண்ணிக்கையின் பத்து மடங்கு— நடைபெறவிருக்கிறது. 200 ஆண்டுகளுக்கும் அதிகமான காலமாய் அமெரிக்க அரசியலின் மையமான சடங்குகளில் ஒன்றாக இருந்து வந்திருக்கின்ற ஒன்று, பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட ஒரு விழாவாக நடைபெற வேண்டிய அளவுக்கு வாஷிங்டன் டி.சி.யிலான அரசியல் சூழ்நிலை இருக்கிறது.

1861 பிப்ரவரியில், ஆபிரகாம் லிங்கன், —உள்நாட்டுப் போரின் சமயத்தில் இலினோய் மாநிலத்தின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு பயணம்செய்து வந்தார்— கூட்டமைப்பு சதிகாரர்களின் ஒரு கொலைத் திட்டத்தில் இருந்து தப்பிக்கும்பொருட்டு பால்டிமோர் வழியாக கடத்திக் கொண்டுவரப்பட்டார். ஆயினும் 1861 மார்ச் 4 அன்று, ஒரு பெரிய மற்றும் அமைதியான கூட்டத்தின் முன்பாக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவும் தனது முதல் தொடக்கவுரையை வழங்கவும் முடிந்தது. நான்கு ஆண்டுகளின் பின்னர், உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்களின் போது, லிங்கன் தனது திறமிக்க இரண்டாவது பதவியேற்பு உரையை ஒரு பெரும் பார்வையாளர் கூட்டத்தின் முன்பாக வழங்கினார்.

அமெரிக்காவின் வரலாற்று அனுபவத்தில் இப்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடக் கூடிய ஒன்று இல்லை. வாஷிங்டன் டி.சி.யில் முற்றுகை நிலை இருப்பதுடன் மட்டுமில்லை. நாடு முழுவதுமே, மாநில சட்டமன்றக் கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளன, அரசாங்க அதிகாரிகள் அதி வலது-சாரி சக்திகளது வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாகும் அச்சத்தில் உள்ளனர்.

அமெரிக்கா எங்கே செல்கிறது? ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியும் பாசிசத்தின் எழுச்சியும்

நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீதான தாக்குதல் முன்னெதிர்பார்த்திருக்க முடியாதவை என்பதான கூற்றுக்கள், ஜனவரி 6 நிகழ்வுகளின் அளவுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியவை என்பதுடன் அவை ஒரு உருப்படியான பகுப்பாய்வுக்கு தாக்குப்பிடிக்க முடியாதவை. இத்தகைய வாதங்களுக்கான மிகச்சிறந்த மறுப்பு உலக சோசலிச வலைத் தளத்தின் பதிவுகளில் காணக்கூடியவை, ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்ப்பின் எண்ணம் —அது நான்காண்டுகளுக்கு முன்பாக அவரது பதவியேற்பு விழாவின் போதே வெளிப்படுத்தப்பட்டிருந்தது என்பது நினைவுகூரத்தக்கதாகும்— குறித்து அது தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஒரு பிரளயக்காலத்தை நிழலாடச் செய்த தனது நீண்ட பாசிச உரையை அவர் வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சீருடையணிந்த படைவீரர்கள் திடீரென்று ட்ரம்ப்பின் பின்னால் கூடி விட்டிருந்தனர். அதைப் போலவே திடீரென்று அந்த படைவீரர்கள் திரும்பச் செய்யப்பட்டனர். பெரும்பாலும் ஊடகங்களால் உதாசீனம் செய்யப்பட்ட இந்த நிகழ்வு குறித்து WSWS இல் கருத்திடப்பட்டிருந்தது.

அரசியல் கவிழ்ப்பிற்கான தயாரிப்புகளது —இவை வெள்ளை மாளிகைக்கு உள்ளாக திட்டமிடப்பட்டு இராணுவம் மற்றும் போலிஸ் மற்றும் உள்நாட்டின் துணைஇராணுவத்திற்குள்ளாக இருந்த கூறுகள் மற்றும் பாசிச சக்திகளுடன் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன— அறிகுறிகள் சென்ற ஆண்டு முழுமையிலும் கண்ணை உறுத்துகின்ற விதத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தன. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரங்களின் போதும் அதன்பின் ட்ரம்ப்பின் தோல்வியைத் தொடர்ந்தும், 2020 தேர்தல் முடிவுகளைத் தூக்கியெறிகின்ற ஒரு கவிழ்ப்பு நடவடிக்கைக்கான திட்டங்கள் ஒரு சூடுபிடித்தன.

தோழர்கள் ஜோசப் கிஷோரும் எரிக் லண்டனும் தங்கள் உரைகளின் போது நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீதான பாசிசத் தாக்குதலுக்கு இட்டுச்சென்ற அரசியல் சூழல் மற்றும் நிகழ்வுகள் குறித்து திறனாய்வு செய்வார்கள். நான், ஜனவரி 6 அன்றான நிகழ்வுகளை ஒரு பரந்த வரலாற்று உள்ளடக்கத்தில் பொருத்திக் காட்டுவதற்கு விழைகிறேன். இந்தக் கூட்டத்தின் தலைப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் “அமெரிக்கா எங்கே செல்கிறது?” என்ற அடிப்படையான கேள்விக்கு நாம் பதிலளிக்க வேண்டுமானால், ஒரு நீண்ட வரலாற்றுக் காலகட்டத்தில் அதன் அபிவிருத்திப் பாதையை —இன்றியமையாத சர்வதேச உள்ளடக்கத்திற்குள்ளாக, என்பதும் முக்கியத்துவத்தில் சளைக்காதது— ஆய்வு செய்வது அவசியமாயுள்ளது. அது மட்டுமே, மார்க்சிசக் கண்ணோட்டத்தில், இப்போதைய நிலை குறித்த ஒரு சரியான மதிப்பீட்டிற்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரேயொரு அணுகுமுறையாக இருக்கும். ஜனவரி 6 வெடிப்புக்கான பிரதான காரணம், குறிப்பான அமெரிக்க நிலைமைகளை காட்டிலும், முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடியில் காணத்தக்கதாகும்.

நிகழ்வுகளின் சர்வதேச உள்ளடக்கமானது ஜனவரி 6 இன் நீண்ட-கால முக்கியத்துவம் மற்றும் தாக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு இன்றியமையாததாக இருக்கிறது. வாஷிங்டன் டி.சி.யிலான பாசிச எழுச்சியை வெறுமனே உள்நாட்டு நிலைமைகளின் விளைபொருளாகவும், ட்ரம்ப்பின் ஆளுமையில் இருந்து எழுந்ததாகவும் மற்றும் முற்றிலும் அவரைச் சார்ந்ததாகவும் ஆய்வு செய்கின்றவர்கள், தேசிய நிலைமையை சர்வதேச நெருக்கடியின் உள்ளடக்கத்தில் நிறுத்தி ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச மதிப்பீட்டை தமது அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்பவர்கள் வந்தடைகின்ற அரசியல் முடிவுகளில் இருந்து மிகவும் மாறுபட்ட முடிவுகளுக்கே வந்துசேர்வார்கள்.

2020 இல் வெடித்து உலகெங்கும் பரவிய கோவிட்-19 பெருந்தொற்றுக்கும், 2021 ஜனவரி அரசியல் வெடிப்புக்கும் இடையில் ஒரு ஆழமான காரணகாரிய உறவு இருக்கிறது என்பதை ஓரளவு பகுத்தறிவு கொண்ட யாரும் மறுக்க முடியாது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பாக, உலகசோசலிசவலைத்தளம் இந்த பெருந்தொற்றை, முதலாம் உலகப் போரின் வெடிப்பை ஒத்த ஒரு “தூண்டுதல் நிகழ்வு” என்று வரையறை செய்தது. இந்த “தூண்டுதல் நிகழ்வானது”, உலகசோசலிசவலைத்தளம்கணித்தவாறு, உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியையும் ஒவ்வொரு நாட்டிலுமான அதன் வெளிப்பாட்டையும் தீவிரப்படுத்தியிருக்கிறது, முடுக்கிவிட்டிருக்கிறது. நெருக்கடிக்கான உத்தியோகபூர்வ பதிலிறுப்பு —இது ஆளும் உயரடுக்கின் சமூக நலன்களின் ஊடாக ஊடுருவுகின்ற முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதாரக் கட்டாயங்களால் தீர்மானிக்கப்பட்டதாய் இருந்தது— நிலவும் சமூக ஒழுங்கின் பொருளாதார, அரசியல், புத்திஜீவித மற்றும் தார்மீக திவால்நிலையை அம்பலப்படுத்தியிருக்கும் ஒரு சமூகப் பேரழிவில் விளைந்திருக்கிறது. உலகெங்கிலும், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மனிதர்கள் வைரஸுக்கு ஏற்கனவே பலியாகி விட்டிருக்கின்றனர். அமெரிக்காவிற்குள்ளாக, இறந்தவர்கள் எண்ணிக்கை இப்போது 400,000 ஐ துரிதமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மாத காலத்திற்குள்ளாக, அரை மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இந்த வைரஸுக்கு பலியாகியிருக்கக் கூடிய நிலை கிட்டத்தட்ட தவிர்க்கமுடியாததாய் தென்படுகிறது.

தொற்றுநோய் என்பது தூரத்திலிருந்து மக்கள் பின்பற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. ஏராளமான உயிர்கள் இழப்பு எனும் துயரானது, பொருளாதார அந்தஸ்து பறிபோகும் நிலையினது அதிர்ச்சியூட்டும் மட்டங்களால் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மில்லியன்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர், பட்டினி கிடக்கின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் கணிசமான சதவீதத்தினர் திவால்நிலை ஆபத்தை நேரடியாக எதிர்கொண்டிருக்கின்றனர். இந்த பெருந்தொற்றானது இரண்டு உலகப் போர்களைப் போலவே, ஆழமான பரிணாமங்களையும் நீண்டகாலம் தொடரக்கூடிய பின்விளைவுகளையும் கொண்ட ஒரு சமூகப் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இது எவ்வாறு நடக்க முடிந்தது? என்ற கேள்வியை அமெரிக்கர்களால் தவிர்க்க முடியாது. பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பின் ஒவ்வொரு அம்சத்தினது குணாம்சமாக இருந்து வந்திருக்கக் கூடிய மலைப்பூட்டும் திறனின்மையும் குழப்பமும் தேசியளவில் ஒரு அவமதிக்கப்பட்ட உணர்வை உண்டாக்கியிருக்கிறது. அமெரிக்காவை பெருமைப்படுத்தவும் பகட்டுடன் காட்டவும் பிரயோகிக்கப்பட்டு வந்த —“பூமியில் கடைசி சிறந்த நம்பிக்கை” மற்றும் “ஜனநாயகத்தின் கோட்டை” என்பவற்றையெல்லாம் கூட விடுங்கள்— “வரம்பற்ற வாய்ப்புகளது பூமி” என்பன போன்ற பழைய சொல்லாடல்கள் எல்லாம் யதார்த்தத்திற்கு சம்பந்தமில்லாதவையாக இருக்கின்றன. பெருந்தொற்றுக்கான உத்தியோகபூர்வ பதிலிறுப்பின் குணாம்சமாய் இருந்திருக்கக் கூடிய தோல்விகள் மற்றும் பொய்களது முடிவற்ற வரிசையின் வெளிச்சத்தில் பார்த்தால், ஊடகங்களால்-மிகையாக பெருமையடிக்கப்பட்ட தடுப்பூசி விநியோகமும் கூட சில வாரங்களுக்குள்ளேயே இன்னுமொரு வெட்கக்கேடான குளறுபடியாக சீரழிந்ததில் யாரும் ஆச்சரியப்படுவதில்லை.

பெருந்தொற்றுக்கான நாசகரமான பதிலிறுப்பும் அது நேரடியாக இட்டுச்சென்றிருக்கும் அரசியல் நெருக்கடியுமே கூட நீண்ட-கால நிகழ்ச்சிப்போக்குகளது வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன. விரிந்த வரலாற்று மற்றும் சர்வதேச நிகழ்ச்சிப்போக்குகளில் இருந்து பிரித்தெடுத்து ஆய்வுசெய்தால், 1850களின் Know Nothings, உள்நாட்டுப் போருக்குப் பிந்திய அமெரிக்காவில் கு கிளக்ஸ் கிளான், 1920கள் மற்றும் 1930களில் பெரும் பின்பற்றுநர்களை ஈர்த்த ஏராளமான யூத-விரோத மற்றும் தொழிலாளர்-விரோத இயக்கங்கள், 1950களது ஆரம்பத்தின் மெக்கார்த்திய வெறித்தனம், ஜோன் பிர்ச் சொசைட்டி (John Birch Society), மற்றும் 1964 இன் கோல்டுவாட்டர் ஜனாதிபதி பிரச்சாரம் என ஏதோவொரு வடிவத்தில், அமெரிக்காவில் எப்போதும் இருந்து வந்திருக்கும் பிற்போக்குத்தனமான அரசியல் மற்றும் சமூகப் போக்குகளது ஒருவகையான கூடுதல் வன்முறையான வெளிப்பாடாக மட்டுமே ஜனவரி 6 நிகழ்வுகள் மதிப்பீடு செய்யப்படக் கூடும். பெருந்தொற்றின் தாக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலுமே கூட, இப்போதைய நிலைமை அடிப்படையாக எவ்வாறு வேறுபட்டது?

அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலை ஆழமாக மாற்றம் கண்டிருக்கிறது என்பதே அத்தியாவசியமான பதிலாகும். ஜனவரி 6 பாசிசக் கலகமுமே கூட ஜனநாயகத்தின் ஒரு நீண்டநாள் நெருக்கடியின் உச்சகட்ட நிலையே. தனது மிகவும் நோய்வாய்ப்பட்ட வெளிப்பாட்டை பரந்தளவிலான வறுமையிலும் சமூக சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் மட்டங்களிலும் காண்கின்ற, அமெரிக்காவிலான சமூக முரண்பாடுகளது தீங்கான தன்மையானது அமெரிக்காவின் உலகளாவிய நிலையில் உண்டான நீண்டகால வீழ்ச்சியின் விளைபயனாய் இருக்கிறது.

பைடெனின் பதவியேற்பை ஒரு விரிந்த அரசியல் கட்டமைப்புக்குள்ளாக இருத்திப் பார்ப்போம். 1961 ஜனவரி 20 அன்று ஜோன் எப்.கென்னடி பதவியேற்று சரியாக 60 ஆண்டுகளின் பின்னர் அது நடக்கவிருக்கிறது. அந்த பதவியேற்பு 1901 மார்ச் 4 அன்று ஜனாதிபதி வில்லியம் மெக்கென்லி இரண்டாம் முறையாக ஜனாதிபதி பதவியேற்ற காலத்திற்கும் —1937 இல் தான் பதவியேற்பு மாதம் ஜனவரிக்கு மேலுயர்த்தப்பட்டது— புதனன்று நடைபெறவிருக்கும் பைடெனின் பதவியேற்புக்கும் துல்லியமான நடுப்புள்ளியில் நடந்திருந்தது.

ஒரு புதிய ஏகாதிபத்திய உலக சக்தியாக அமெரிக்காவின் எழுச்சியைக் குறித்ததாக இருந்த ஸ்பானிய-அமெரிக்க போரில் தலைமை நடத்தியிருந்தவர் ஜனாதிபதியான வில்லியம் மெக்கென்லி. அடுத்த 60 ஆண்டுகளின் போது, அமெரிக்கா உலகின் மிக சுறுசுறுப்பான மற்றும் பணக்கார முதலாளித்துவ சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது, இரண்டு உலகப் போர்களை செறிவான வெற்றியுடன் கடந்தது, அவற்றின் அடிப்படையில் தனது வல்லாதிக்க உலக நிலையை எட்டியிருந்தது. அந்த சகாப்தத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜனாதிபதிகளாக தியோடர் ரூஸ்வெல்ட், வூட்ரோ வில்சன், ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் —இவர் நான்கு பதவிக்காலங்கள் பதவியில் இருந்தார்— மற்றும் 1945 இல் ரூஸ்வெல்ட் மறைந்ததைத் தொடர்ந்த ஆண்டுகளில் ட்ரூமன், ஐசனோவர் மற்றும் கென்னடி ஆகியோர் இருந்தனர்.

கென்னடியின் பதவியேற்பானது பிரதானமாக தேசிய தேசப்பற்றுக்கான ஒரு நன்கு-செதுக்கப்பட்ட —அது முற்றிலும் இரட்டைவேடம் கொண்டதாய் இருந்தாலும்— விண்ணப்பத்தால் நினைவுகூரப்படுகிறது. ஆனால் அந்த உரையைக் கவனமாய் ஆய்வு செய்து பார்த்தால், புதிய ஜனாதிபதியின் உரையானது சோசலிசப் புரட்சியின் மேலெழும் அலையின் தாக்கம் குறித்த ஆழமான அச்சங்களுக்கு குரல் கொடுத்திருப்பதைக் காணலாம். புரட்சியின் சக்திகளை தடுத்து வைக்க வேண்டுமென்றால், முதலாளித்துவம் வெகுஜன அதிருப்திக்கு சலுகைகளை கொடுக்க வேண்டியிருக்கும். “ஒரு சுதந்திரமான சமூகம் ஏழைகளாக இருக்கும் பலருக்கு உதவ முடியாமல் போனால்”, அவர் எச்சரித்தார் “பணக்காரர்களாக இருக்கும் சிலரை அதனால் காப்பாற்ற முடியாது.” சோசலிசத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு கூறாக சமூக சீர்திருத்தங்களைப் பயன்படுத்திக் கொள்வது தான் இந்த அச்சுறுத்தலுக்கான பதிலாக இருந்தது. “சுதந்திரம்” அதாவது முதலாளித்துவம் உயிர்பிழைப்பதை உறுதி செய்ய அமெரிக்க ஏகாதிபத்தியம் “எந்த விலையையும் கொடுக்க” தயாரான நிலையில் இருக்க வேண்டியிருந்தது.

எனினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாத்துக் கொண்டே அதேவேளையில், உள்நாட்டில் சமூக சீர்திருத்தங்களையும் ஒருசேர செய்கின்ற திறனானது, அவுன்ஸுக்கு 35 டாலர் என்ற வீதத்தில் தங்கத்தை மாற்றிக்கொள்ளத்தக்க உலகத்தின் மாற்று நாணயமதிப்பாக டாலரின் பாத்திரத்தை மையத் தூணாகக் கொண்டு அமைந்திருந்த, அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தைச் சார்ந்திருந்தது. 1944 பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட, அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்திய இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஒழுங்கின் இந்த அத்தியாவசியமான அம்சமானது, உலகின் பொருளாதார ஆற்றல்மையமான அமெரிக்கா அடுத்து வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு உலக வர்த்தகத்தில் மேலாதிக்கம் செலுத்தும், அதன்மூலம், பெருமளவில் வர்த்தக உபரிகளையும் பணச்செலுத்த உபரிகளையும் பராமரிக்கும் என்று அனுமானித்தது. அமெரிக்கா இந்த உபரிகளைப் பராமரிக்க முடிந்த காலத்திற்கு, டாலரானது “தங்கத்திற்கு நிகரான”தாக உலகளவில் ஏற்கப்பட்டது.

ஆனால் கென்னடி பதவியேற்ற வேளையில், அமெரிக்காவின் பொருளாதார ஏற்றநிலை பெருகும் அழுத்தத்தின் கீழ் வந்து கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவால் வெற்றிகாணப்பட்டிருந்த பிரதான எதிரிகளான, ஜேர்மனியும் ஜப்பானும், அதற்குள்ளாகவே தமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தன. அமெரிக்க வர்த்தக உபரிகள் வீழ்ச்சி கண்டு வந்தன. அதேவேளையில், ஆளும் வர்க்கம் கணிசமான அளவில் தொழிலாளர் போர்க்குணத்திற்கும் வளர்ந்துசென்ற மனித உரிமைகள் இயக்கத்திற்கும் முகம்கொடுத்துக் கொண்டிருந்தது, கென்னடி மற்றும் ஜோன்சன் நிர்வாகங்கள் இவற்றை கணிசமான சீர்திருத்தங்களைக் கொண்டு மட்டுப்படுத்துவதற்கு முயன்றன. ஆயினும் புரட்சிகரக் கிளர்ச்சிகளுக்கு, குறிப்பாக வியட்நாமில், எதிராக போர் நடத்திக் கொண்டே சீர்திருத்தங்களுக்கு செலவு செய்வது என்பது தாக்குப்பிடிக்க முடியாததாக இருந்தது. இந்த சங்கடநிலை சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு குழிபறித்தது.

1971 ஆம் ஆண்டிற்குள்ளாக, வளர்ந்து சென்ற வர்த்தக மற்றும் பணச்செலுத்த பற்றாக்குறைகள் அமெரிக்க தங்கக் கையிருப்பைக் காலி செய்ய அச்சுறுத்தின. இந்த பற்றாக்குறைகளின் அளவு உபரிகளின் அளவை விட பெரிதாய் இருந்தது. தங்கம் வெளியே பறந்து கொண்டே சென்று, அப்போது தேசிய திவால்நிலையின் அபாயமாக பார்க்கப்பட்ட ஒன்றுக்கு அச்சுறுத்திக் கொண்டிருந்தது. 1969 ஜனவரியில் பதவிக்கு வந்த நிக்சன் நிர்வாகம், அதிரடியான நடவடிக்கையில் இறங்குவதற்கு இது இட்டுச்சென்றது. 50 ஆண்டுகளுக்கு சற்று குறைவான காலத்திற்கு முன்பாக, ஜனாதிபதி நிக்சன் டாலர்-தங்கம் மாற்றிக்கொள்ளும் நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த பொருளாதார அவசரநிலைக்கு பதிலிறுப்பு செய்தார்.

வரலாற்றை திரும்பிப் பார்த்தால், இந்த நடவடிக்கையானது அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலையில் மட்டுமல்ல, அமெரிக்க ஜனநாயகத்தின் தலைவிதியிலும் கூட ஒரு திருப்புமுனையைக் குறித்ததாக இருந்தது. அமெரிக்கா ஒரு வளர்ந்து செல்லும் உலக சக்தியாக இருந்த வரை, அதன் இராணுவ பாகமானது நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் மேலாதிக்கத்திற்கு இரண்டாம்பட்சமாகவே இருந்த வரையில், அமெரிக்க அரசியலின் அடிப்படை உந்துதலானது விரிந்தளவில் ஒரு முற்போக்கான குணநலனைக் கொண்டதாய் இருந்தது.

லிண்ட்பேர்க் இயக்கம், பாதிரியார் கோஹ்லின், ஜெரால்ட் எல்.கே.ஸ்மித், மற்றும் பின்னாளில் ஜோ மெக்கார்த்தி என அமெரிக்காவில் அங்கே பிற்போக்கு சக்திகளுக்கு பஞ்சமிருக்கவில்லை. ஆயினும் சீருதிருத்தங்களைக் கொடுத்து ஒரு செல்லுபடியாகின்ற சமூக மற்றும் அரசியல் சமநிலையைப் பராமரிப்பதில் அமெரிக்க முதலாளித்துவம் கொண்டிருந்த திறத்தால் இந்த தீய, பிற்போக்குத்தனமான போக்குகளின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 1930களில், ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டிருந்ததைப் போல, மிகக் கவலைக்கிடம் தந்த பெருமந்தநிலையின் போதும் கூட, அமெரிக்க முதலாளித்துவம் கொண்டிருந்த செல்வமானது ரூஸ்வெல்ட் அவரது பரிசோதனைகளைத் தொடர்ந்து நடத்த இடமளித்தது.

இந்த பரிசோதனைகள் 1960களிலும் தொடர்ந்தன. ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தம் ட்ரூமனின் நியாயமான ஒப்பந்தத்திற்கு (Fair Deal), அதன்பின் கென்னடியின் புதிய எல்லைக்கு (New Frontier), 1963 நவம்பரில் கென்னடியின் படுகொலைக்குப் பின்னர், ஜோன்சனின் மகத்தான சமூகத்திற்கு (Great Society) வழி தந்தது. ஆயினும் ஜோன்சனின் “மகத்தான சமூகம்” எட்டப்பட முடியவில்லை. பொருளாதார சரிவு நிலைமைகளின் கீழ், அமெரிக்க முதலாளித்துவத்தைப் பாதுகாக்க “எந்த விலையையும் கொடுப்பதற்கு” இயலாமல் போனது. உலகின் எந்த பகுதியிலும் போர் நடத்தத்தக்க ஒரு இராணுவத்திற்கு நிதியாதாரம் திரட்டுவதா அல்லது சொந்த நாட்டில் உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்காக சமூக சீர்திருத்தங்களுக்கு நிதியாதாரம் அளிப்பதா, “துப்பாக்கிகளா வெண்ணையா” என்பதற்கு இடையே ஒரு தெரிவு மேற்கோள்ளப்பட வேண்டி வந்தபோது, துப்பாக்கிகளே என்று முடிவெடுக்கப்பட்டது.

சமூக சீர்திருத்தங்களைக் கைவிட்டமையானது அதிகரித்த சமூக ஒடுக்குமுறையை நோக்கியதொரு திருப்பத்தை அவசியமாக்கியது. அமெரிக்க ஜனநாயகத்தின் பயணப்பாதையும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பயணப்பாதையை அடியொற்றி கீழ்நோக்கி சரிந்தது.

அடிப்படை அரசியல்சட்ட நடைமுறைகளுக்குக் குழிபறிக்க குற்றவியல் வழிமுறைகளை நோக்கி உண்மையாகவே முதன்முதலில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி திரும்பியதென்றால் அது 1971 ஆகஸ்ட் பிரெட்டன் வூட்ஸ் நெருக்கடிக்கு உடனடியாகப் பின்வந்த காலத்தில் நடந்தேறியது. அதற்கு ஒரு வருட காலத்திற்குள்ளாக, இழிபுகழ் பெற்ற 1972 வாட்டர்கேட் திருட்டுத்தன நுழைவு நடந்தது. சிஐஏ உடன் தொடர்புடைய குடியரசுக் கட்சி ஆட்கள் வாட்டர்கேட் வளாகத்தில் இருந்த ஜனநாயகக் கட்சியின் அலுவலகங்களுக்குள்ளாக பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். வரவிருந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்க நடந்த ஒரு குற்றவியல் முயற்சியாக இருந்த அது, அமெரிக்காவில் ஒரு அரசியல் மற்றும் அரசியல்சட்ட நெருக்கடியைத் தூண்டியது. வாட்டர்கேட் விசாரணைகளும் புலன்விசாரணைகளும் இறுதியில் அவை நீதிக் கமிட்டியின் வாக்கெடுப்பின் மூலமாக நிக்சன் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட இட்டுச்சென்றது, அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட உடனடியாக குற்றவியல் ஜனாதிபதியின் இராஜினாமா 1974 ஆகஸ்டில் நடந்தது.

இது ஜனநாயகத்தின் வெற்றியாக நிரூபணமாகவில்லை. நிக்சன் அவமதிப்புக்குள்ளானாலும், அமெரிக்க ஜனநாயகத்தின் பயணப்பாதையானது, அமெரிக்க டாலரின் மதிப்புக்குறைப்பை அடியொற்றி தொடர்ந்து கீழ்நோக்கி சரிந்து கொண்டிருந்தது. தொழிலாளர் இயக்கத்தின் மீதான தாக்குதல் அதிகரித்தது. 1978 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களது தேசியளவிலான வேலைநிறுத்தத்தை டாஃப்ட்-ஹார்ட்லி (Taft-Hartley) சட்டத்தைக் கொண்டு நசுக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன என்றாலும், அவரது நடவடிக்கையானது, 1981 ஆகஸ்டில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு பணியாளர்களில் PATCO என்ற தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் 11,000 பேரை ரொனால்ட் ரீகன் மொத்தமாக வேலைநீக்கம் செய்வதற்கு களம் தயாரித்துக் கொடுத்தது. இந்த நடவடிக்கை AFL-CIO ஆல் எதிர்க்கப்படவில்லை, 1930கள் மற்றும் 1940களின் மாபெரும் தொழிற்சாலைப் போராட்டங்களில் இருந்து எழுந்திருந்த ஒழுங்கமைந்த தொழிற்சங்க இயக்கத்தின் முடிவின் தொடக்கத்தை அது குறித்து நின்றது.

1990களுக்குள்ளாக, வேலைநிறுத்தங்களின் ஒரு அலையானது, AFL-CIO ஆல் தனிமைப்படுத்தப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டு, தோல்விக்கு சென்ற நிலையில், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான பெருநிறுவனச் சுரண்டலுக்கான ஒரு துணைக் கருவியாக மட்டுமே இருந்தன. அமெரிக்காவின் சமூகப் பரப்பில் இருந்து வேலைநிறுத்தங்கள் கிட்டத்தட்ட காணாமல் போயின. பில்லியனர்கள் மற்றும் பன்மடங்கு பில்லியனர்களின் ஒரு காலம் தொடங்கியிருந்தது. 1920 களின் பிற்பகுதியிலிருந்து அமெரிக்கா அறிந்திராதவொரு மட்டத்திற்கு ஒரு சிறிய சிலவராட்சி உயரடுக்கிடம் செல்வம் மொத்தமாய் குவிந்திருப்பதை பிரதான அம்சமாகக் கொண்ட சமூக சமத்துவமின்மையின் ஒரு திகைப்பூட்டும் வளர்ச்சி சூழ்ந்தது.

சமூக எதிர்ப்புரட்சியானது அரசியல் பிற்போக்குத்தனத்துடன் கைகோர்த்தது, முதலாளித்துவ சித்தாந்தங்களில் மிகக் குற்றவியல்தன்மை கொண்ட, பாசிசத்திற்கு மறுவாழ்வு அளிப்பது இதற்கு அவசியமாக இருந்தது. 1980 இல் ரீகன் மிசிசிப்பி மாநிலத்தின் பிலடெல்பியாவில், 1964 ஜூன் மாதத்தில் கு கிளக் கிளான் உறுப்பினர்களால் ஜேம்ஸ் சனே, மிசைல் ஸ்வேர்னெர் மற்றும் ஆண்ட்ரூ குட்மன் ஆகிய மூன்று சிவில் உரிமை பணியாளர்கள் கொல்லப்பட்டிருந்த இடத்தில் இருந்து தனது ஜனாதிபதி பதவிக்கான பிரச்சாரத்தைத் தொடக்கினார். அந்தசமயத்தில் நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருந்தவாறாக, ரீகன் பிலடெல்பியாவிற்கு அந்த சிவில் உரிமை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்லவில்லை, மாறாக அமெரிக்க பிற்போக்குத்தனத்தின் மிக மோசமான வடிவங்களுடன் தனது ஐக்கியத்தை சமிக்கை செய்வதற்கே சென்றிருந்தார். அந்த சமிக்கை பெறப்பட்டிருந்ததை உறுதிசெய்து கொள்ளும் பொருட்டு, ரீகன், 1985 இல் ஜேர்மனிக்கான ஒரு விஜயத்தின் போது, பிட்பேர்க் நகரத்தில், Waffen SS உறுப்பினர்கள் புதைக்கப்பட்டிருந்த ஒரு இராணுவக் கல்லறையில் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதற்கு ஒரு வருடம் கழித்து, ஈரான்-கொண்ட்ரா ஊழல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை சட்டவிரோதமாக மீறிய வழக்கில் ரீகன் நிர்வாகத்தை நேரடியாக சம்பந்தப்படுத்தியது. நாடாளுமன்ற விசாரணைகளில் அம்பலமான குற்றவியல் நடவடிக்கைகள் நிக்கராகுவாவில் இருந்த இடது-சாரி தேசியவாத சாண்டினிஸ்டா அரசாங்கத்தை தூக்கிவீச முனைந்து வந்த பாசிச தற்கொலைப் படைகள் மற்றும் கூலிப்படையினருக்கு நிதியாதாரம் அளித்ததில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருந்ததைக் குறித்ததாய் இருந்தன. மத்திய அமெரிக்காவில் ரீகன் சார்பாக கொலை நடவடிக்கைகளை வழிநடத்திக் கொண்டிருந்த கேர்னல் ஒலிவர் நோர்த், Rex 84 [Readiness Exercise 1984] என்ற, ஒரு தேசிய அவசரகாலநிலை பிறக்கப்படுகின்ற சூழலில் 100,000 அமெரிக்கர்களைக் கைதுசெய்வதற்கான இரகசியத் திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார் என்பதும் நாடாளுமன்ற விசாரணையின் போது தெரியவந்தது. இந்தத் திட்டங்கள் குறித்து பகிரங்கமாக விவாதிப்பது ஈரான்-கொண்ட்ரா ஊழலை விசாரித்துக் கொண்டிருந்த குழுவின் தலைவரான, ஹவாயைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டானியல் இனோயி மூலம் உடனடியாகத் தடைசெய்யப்பட்டது.

1989க்கும் 1991க்கும் இடையில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளும் மற்றும் சோவியத் ஒன்றியமும் கலைக்கப்பட்டு முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதற்குப் பிந்திய காலத்தில், துரிதப்படுத்தப்பட்ட எதேச்சாதிகாரவாதத்தை நோக்கிய போக்குகள், அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் புதிய வெடிப்பின் நலன்களுக்கு சேவை செய்தன. 1991 இல் ஈராக் மீதான படையெடுப்பானது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்கா நடத்திய 30 ஆண்டு கால இடைவிடாத போரின் தொடக்கத்தைக் குறித்ததாக இருந்தது.

2000 வது ஆண்டின் தேர்தலில், ஃபுளோரிடாவில் வாக்குகளை எண்ணும் பணியை முடிவுக்குக் கொண்டுவந்து ஜோர்ஜ் புஷ்ஷுக்கு ஜனாதிபதி பதவியை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் 5-4 வாக்குவிகிதத்தில் தீர்ப்பளித்தது. இந்த அசாதாரண முடிவை ஜனநாயகக் கட்சி சவால் செய்யவில்லை. அத்தேர்தலைத் திருடுவதற்கு குடியரசுக் கட்சியால் பயன்படுத்தப்பட்ட வாதங்கள் மற்றும் நடைமுறைகளில் பலவும், சிறு அளவில் என்றாலும், 2020 இல் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியால் பயன்படுத்தப்படவிருந்த வழிமுறைகளுக்கு முன்னோட்டமாக இருந்தன. புஷ் Vs கோர் வழக்கில் நீதிபதி அன்டோனின் ஸ்காலியா, ஜனாதிபதியை தேர்வு செய்யும் உரிமையை அமெரிக்க மக்களுக்கு வழங்குகின்ற எதுவும் அங்கே அரசியல்சட்டத்தில் இருக்கவில்லை என்று வாதிட்டார். மாநிலங்களது மக்கள் வாக்களித்த சதவீதத்திற்கெல்லாம் எந்த பரிசீலிப்பும் இல்லாமல் அவற்றின் சட்டமன்றங்கள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பவர்களைத் தேர்ந்தெடுக்க உரிமை கொண்டிருந்ததாக அவர் வாதிட்டார். 2020 தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக்குவதற்கும் முக்கியமான ஊசலாட்ட மாநிலங்களில் பரந்தளவிலான வாக்குகளை கீழேபோட்டு மிதிப்பதற்குமான ட்ரம்பின் முயற்சிகளுக்கு முன்நிழலாட்டமாக, ஸ்காலியா 2000 இல், புளோரிடா சட்டமன்ற உறுப்பினர்கள் புஷ்ஷுக்கு தங்கள் வாக்குகளை செலுத்தக் கூடிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்க அவர்களை வலியுறுத்தினார்.

2000 வது ஆண்டு தேர்தல் திருடப்பட்டதைத் தொடர்ந்து 9/11 நிகழ்வுகள் வந்தன, அது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது படையெடுப்பதற்கும், “பயங்கரவாதத்தின் மீதான போர்” மற்றும் தேசப்பற்று சட்டம் ஆகியவற்றின் கீழ், அமெரிக்காவின் வரலாற்றில் மையமான அரசியல்சட்ட உரிமைகள் மீதான மிகப் பெரிய தாக்குதலை நடத்துவதற்கும், ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன், புஷ் நிர்வாகத்தால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

குவான்டனாமோவில் ஒரு கடல் வதைமுகாமை நிறுவியது, அதன்பின், ஒபாமாவின் கீழ், அமெரிக்க குடிமக்களை குறிவைத்து கொல்ல ஒப்புதலளிக்கப்பட்டது ஆகியவை அமெரிக்காவில் ஏற்கனவே மிக முன்னேறிய நிலையில் இருந்த ஜனநாயகத்தின் சிதைவில் மேலதிக மைல்கற்களாய் அமைந்தன.

இந்த மிக வரலாற்று உள்ளடக்கத்திற்குள் நிகழ்வுகளை வைத்தால், ஜனவரி 6, ஜனநாயகப் பொறிவின் ஒரு நீண்டநெடிய நிகழ்ச்சிப்போக்கில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நிற்கிறது என்பது தெளிவாகிறது.

ஜனவரி 6 அன்று அத்தனை பெரிய முக்கியத்துவம் கொண்ட எதுவும் உண்மையில் நடந்து விடவில்லை என்பது போலவும், எல்லாமே கிட்டத்தட்ட இயல்புக்குத் திரும்பிவிடும் என்பது போலவும் கூறுவதற்கு வரலாற்று ஆசிரியர்களும் பத்திரிகையாளர்களும் முயன்று வந்திருப்பதை சமீப நாட்களில் கண்டிருக்கிறோம். நிகழ்விலிருக்கும் அபாயம் குறித்த இந்த அபாயகரமான மதிப்பீடு என்பது வெறுமனே அமெரிக்க நிலைமைகள் குறித்த ஒரு பிழையான மதிப்பீட்டில் இருந்து பிறந்தவையல்ல.

இந்தக் கூற்றுக்களை முன்னெடுப்போர், ஒரு உலகப் பொருளாதார மற்றும் சமூக அமைப்புமுறையாக முதலாளித்துவத்தின் நிலை குறித்த தங்களது மதிப்பீட்டில் பிழை செய்கின்றனர். நான் விவரித்துக் கொண்டிருக்கின்ற அமெரிக்காவில் நாம் பரிச்சயம் கொண்டிருக்கின்ற நிலைமைகள் உலகம் முழுவதும் நிலவுகின்றன. ஒவ்வொரு இடத்திலுமே, ஜனநாயக வடிவங்கள் முற்றுகையின் கீழ் இருக்கின்றன. வலதுகளின் ஒரு மீளெழுச்சியை, பாசிச சக்திகளின் ஒரு வளர்ச்சியை நாம் காண்கிறோம். தோழர் கிறிஸ்தோப் வாண்ட்ரியர் ஜேர்மனியில் பாசிசம் புத்துயிரூட்டப்படுவது குறித்து பேசவிருக்கிறார்.

ஜனவரி 6 நிகழ்வுகளிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வர வேண்டும்? அமெரிக்கா மற்றும் உலகின் அரசியல் வாழ்வில் அவை ஒரு புதிய கட்டத்தை குறித்து நிற்கின்றன.

அமெரிக்கா எங்கே செல்கிறது? அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் கட்டவிழ்ந்து வரும் சமூகப் போராட்டங்களே இதைத் தீர்மானிக்கும். அமெரிக்கர்கள் “தலைவிதியுடன் சந்திப்பு” கொண்டிருக்கின்றனர் என்பது பழைய சொல்லாடல். அது ரூஸ்வெல்ட்டால் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்கர்கள் இப்போது வரலாற்றுடன் சந்திப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதே யதார்த்தமாகும்.

அமெரிக்கா எங்கே செல்கிறது? அது பாசிசத்தை நோக்கி செல்லுமா, அல்லது சோசலிசத்தை நோக்கி செல்லுமா? இதுவே அமெரிக்கர்கள் எதிர்கொண்டிருக்கின்ற மாற்றுக்கள் ஆகும். சோசலிசத்திற்கான பாதை என்பது வர்க்கப் போராட்டத்துக்கான பாதை. ஜனநாயகம் இந்த நாட்டில் உயிர்பிழைத்திருக்க வேண்டுமானால், இன்னும் சொன்னால் உலகில் எங்கேனும் உயிர்பிழைத்திருக்க வேண்டுமானால், அது ஒரு புதிய சமூக அடித்தளத்தை கண்டாக வேண்டும். அது முதலாளித்துவ வர்க்கத்தின் மீது தங்கியிருக்க முடியாது. முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான பழைய செவ்வியல் குறிப்புகள் எல்லாம் இப்போதைய சூழலில் மிகக் குறைந்த பொருத்தமே கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் உயிர்பிழைக்க வேண்டுமென்றால், அதிகாரம் தொழிலாள வர்க்கத்தின் கரங்களுக்கு மாற்றப்பட்டாக வேண்டும்.

இறுதிமுடிவு இனித்தான் தீர்மானிக்கப்படவிருக்கிறது. வரலாற்றில் தவிர்க்கமுடியாததென்று எதுவுமில்லை. சோசலிசத்திற்கான சாத்தியமும் உள்ளது. பாசிசத்திற்கான சாத்தியமும் உள்ளது. புறநிலைக் காரணிகளது கண்ணோட்டத்தில் பார்த்தால், சோசலிசத்திற்கான சாத்தியவளம் மகத்தானது. உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கம், உற்பத்தியின் பரஸ்பர தொடர்புபட்ட நிலை, தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் சக்திவாய்ந்த முன்னேற்றங்கள், மற்றும், எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெருவாரியான எண்ணிக்கை மேலாதிக்கம் மற்றும் வலிமை ஆகிய சக்திவாய்ந்த பொருளாதார மற்றும் சமூக சக்திகள் அமெரிக்காவையும் மற்றும் உலகையும் இந்த முற்போக்கான மற்றும் விடுதலை செய்கின்ற திசையில் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இவை உண்மையாகவே சோசலிசப் புரட்சியின் வெற்றியை சாத்தியமாக்கக் கூடிய இன்றியமையாத காரணிகளாகும்.

ஆனால் வரலாற்றில் வெறும் புறநிலை சக்திகள் மட்டுமிருக்கவில்லை, அகநிலை சக்திகளும் இருக்கின்றன. புறநிலை சாத்தியவளமானது ஒரு அரசியல் வேலைத்திட்டமாக பரந்துபட்ட தொழிலாள வர்க்க அரசியல் நடவடிக்கையாக மொழிபெயர்க்கப்பட்டாக வேண்டும். “போராட்டமே முடிவுசெய்யும்!” இவை 1930களின் தொடக்கத்தில் ட்ரொட்ஸ்கியால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். உலகம் முன்னோக்கி சோசலிசத்தை நோக்கிச் செல்லுமா? அது பாசிசத்தை நோக்கிச் செல்லுமா? அது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமை எனும் அதிமுக்கிய பிரச்சினையைச் சார்ந்ததாய் இருக்கிறது.

தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள், கேட்டுக் கொண்டிருக்கின்ற நீங்கள் என்ன செய்ய முடிவெடுக்கிறீர்கள் என்பது அதிமுக்கிய விடயம். உலக சோசலிச வலைத் தளம், சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவை ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும், அதற்காகப் போராட முடியும். ஆனால் அந்த வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தினால் தான் எடுத்து நடத்தப்பட்டாக வேண்டும். அந்த வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக கொண்டுவரப்பட்டாக வேண்டும். அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் போராட ஒரு வழியைத் தேடுகின்ற ஆனால் அதைத் தாங்களாகவே கண்டறிய முடியாதிருக்கின்ற தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளுக்குள் அது கொண்டுவரப்பட்டாக வேண்டும். சோசலிச தத்துவம் மற்றும் சோசலிசக் கோட்பாடுகளில் அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவர்கள் ஒரு முற்போக்கான அடிப்படையில் ஐக்கியப்படுவதற்கு வகைதருகின்ற ஒரு பதாகை அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

அந்தப் போராட்டத்தைக் கையிலெடுப்பதிலும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தொடர்புபடுத்திக் கொள்வதிலும், சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதிலும் இந்தக் கூட்டம் உங்களுக்கு உறுதியேற்படுத்தும் என்று நம்புகிறேன்.

Loading