முன்னோக்கு

2021 பதவியேற்பு நிகழ்வு: ஒரு படுகுழியின் விளிம்பில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 1933 இல், பெருமந்தநிலைக்கு மத்தியில் பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாக அவரின் முதல் பதவிக்காலத்தைத் தொடங்கியபோது, அவரின் பதவியேற்பு விழா உரையில், “நாம் பயப்பட வேண்டிய ஒரே விசயம் பயம் தான்,” என்று பிரபலமான வரிகளை அறிவித்தார். ஆனால் 2021 பதவியேற்பு விழாவில், அதுபோன்றவொரு வாக்கியம், கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கைத் தருவதாக இருக்காது, மாறாக பிரமையாக இருக்கும். ஜனாதிபதி பைடென் உரைமேடையில் நின்றவாறு, தேசியக் கொடிகள் நிறைந்த மற்றும் சிப்பாய்கள் சூழ்ந்த, ஒரு வெறுமையான மற்றும் ஆரவாரமற்ற, மக்கள் பெருமகிழ்ச்சி கொண்ட ஒரு வரலாற்று இடம் என்பதை விட ஒரு மயானத்திற்கு ஒத்த இடத்தையே பார்வையிடுவார். அந்நிலையில் பைடென் ரூஸ்வெல்டிய தோரணையை ஏற்க முயன்றால், “நாம் பயப்பட வேண்டிய ஒரே விசயம் யதார்த்தம்,” என்று தான் அவரின் பிரபல வாசகத்தை கூற வேண்டியிருக்கும்.

இந்த யதார்த்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

முதலாவது, அமெரிக்க அரசியல் அமைப்புமுறை உள்நாட்டு போருக்குப் பிந்தைய மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த பதவியேற்பு தினம், பைடெனின் தேர்வுக்குழு வெற்றியைக் காங்கிரஸ் சபை அங்கீகரிப்பதை நிறுத்தும் நோக்கில், ஜனவரி 6 பாசிசவாத கிளர்ச்சிக்கு வெறும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வருகிறது.

இந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தூண்டிவிடுவதற்கும் வழிநடத்துவதற்கும் பிரதானமாக பொறுப்பான ஒருவர், டொனால்ட் ட்ரம்ப், இன்றைய நிகழ்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை —பதவியிலிருந்து வெளியேறும் ஒரு ஜனாதிபதி அவருக்கு அடுத்து வரும் ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வைப் புறக்கணிப்பது, 1869 இல் ஆண்ட்ரூ ஜோன்சன் வெளியேறியதற்குப் பின்னர், இதுவே முதல்முறையாகும். எவ்வாறிருப்பினும், குடியரசுக் கட்சி செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து அதில் பங்கெடுப்பவர்களில் அந்த கிளர்ச்சிக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்கியவர்களும் மற்றும் உதவியவர்களும் உள்ளடங்கி இருப்பார்கள்.

இரண்டாவதாக, இந்த பதவியேற்பு நிகழ்ச்சியானது கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் சேர்ந்து அமெரிக்காவில் உத்தியோகபூர்வ மரண எண்ணிக்கை 400,000 ஐ கடந்துவிட்ட ஒருநாளுக்குப் பின்னர் வருகிறது. தோராயமாக நாள்தோறும் நான்காயிரம் பேர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். நாடெங்கிலுமான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, மரணித்தவர்களை மிகவும் வேகமாக அடக்கம் செய்ய அனுமதிக்கும் வகையில் மயானங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளன. ஒரு புதிய மற்றும் அதிகமாக பரவக்கூடிய அந்த வைரஸின் ஒரு வகை பரவத் தொடங்கி உள்ள நிலையில், அடுத்த மாத மத்தியில் அரை மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் அனுமானிக்கின்றனர்.

மூன்றாவதாக, வரவிருக்கும் பைடென் நிர்வாகம் இந்த தொற்றுநோயால் மிகப்பெரியளவில் தீவிரப்படுத்தப்பட்ட எளிதில் கையாள முடியாத ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடந்தாண்டு நிதியியல் சந்தைகளும், அத்துடன் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் செல்வவளமும், முன்னொருபோதும் இல்லாத உச்சங்களுக்கு உயர்ந்தன. அவை பெடரல் ரிசர்வ் மற்றும் உலகளாவிய மத்திய வங்கிகளிடம் இருந்து முடிவின்றி பண வினியோகத்தால் எரியூட்டப்பட்டுள்ளன—முக்கியமாக, பாரியளவிலும் வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத அளவிலும் திரண்டுள்ள கடன் திருப்பி அடைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், பத்து மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்றி இருப்பதுடன் சிறு வணிகங்களைச் சேர்ந்த நூறாயிரக் கணக்கானோர் துடைத்தழிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உலக பேரழிவு பரிமாணங்களைக் கொண்ட ஓர் உலகளாவிய நெருக்கடியின் குவிமையத்தில் உள்ளது. பைடெனின் பதவியேற்பு நிகழ்வுக்கு முன்னதாக, முரண்நகையாக, உலக பொருளாதார பேரவை வெளியிட்டுள்ள 2021 உலகளாவிய அபாயங்களின் அறிக்கை, தற்போதைய சூழலின் பயங்கர தொகுப்புரையை முன்வைக்கிறது:

கோவிட்-19 இன் உடனடியான மனித இழப்பும் பொருளாதார இழப்பும் கடுமையானது. அது வறுமை மற்றும் சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான முன்னேற்றத்தையும் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மற்றும் உலகளாவிய கூட்டுறவை இன்னும் மேலதிகமாக பலவீனப்படுத்துவதிலும் பல ஆண்டு காலம் பின்னோக்கி இழுத்துச் செல்ல அச்சுறுத்துகிறது. வேலை இழப்புகள், விரிந்து வரும் டிஜிட்டல் பிளவு, தொந்தரவுக்கு உள்ளாகி உள்ள சமூக இடைத்தொடர்புகள், சந்தைகளில் எதிர்பாரா மாற்றங்கள் என இவை பயங்கரமான விளைவுகளுக்கும் உலக மக்களின் பெரும் பாகத்தினர் வாய்ப்புகளை இழப்பதற்கும் இட்டுச் செல்லக்கூடும். சமூக அமைதியின்மை, அரசியல் உடைவுகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களின் வடிவில் இந்த பின்விளைவுகள், அடுத்த தசாப்தத்தின் ஏனைய முக்கிய அச்சுறுத்தல்களான இணையவழி தாக்குதல்கள், பாரிய பேரழிவு ஆயுதங்கள் மற்றும் மிகவும் குறிப்பாக காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கான நமது விடையிறுப்புகளின் செயல்திறனை வடிவமைக்கும்.

பைடெனின் பதவியேற்பு உரையில் இந்த அறிவிக்கையின் மேற்கோள்கள் இருப்பதற்குச் சாத்தியமில்லை. ஆனால் உலகளாவிய மற்றும் அமெரிக்க நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, புதிய ஜனாதிபதிக்கு இருக்கும் சாத்தியக்கூறுகள், அவர்கள் கூறிக் கொண்டாலும், ஆளும் வர்க்கத்தின் சமூக நலன்களால் மட்டுப்பட்டுள்ளன. பைடென், இந்த நெருக்கடிக்குத் தனது நிதியியல் மற்றும் பொருளாதார நலன்களுக்குக் குழிபறிக்கும் எந்தவொரு விடையிறுப்பையும் சகித்துக் கொள்ளாத ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாவார். இந்த தொற்றுநோய்க்கு பைடென் நிர்வாகத்தின் விடையிறுப்பு பயனற்ற அரைவாசி நடவடிக்கைகளையோ, அல்லது கால்வாசி நடவடிக்கைகளையோ உள்ளடக்கி இருக்கும், அவை இன்னும் நூறாயிரம் அல்லது அதற்கும் அதிகமான அமெரிக்கர்களின் உயிரிழப்புகளை உரிய நேரத்தில் தடுக்கும் விதத்தில் இந்த வைரஸ் பரவைத் தடுக்க பெரிதாக எதையும் செய்துவிடாது.

இன்றைய பைடென் உரையின் மத்திய கருத்துரு "நல்லிணக்கமாக" இருக்கும். இந்த முறையீட்டின் நிஜமான முக்கியத்துவம் என்ன? காங்கிரஸ் சபை மீதான ஒரு வன்முறை தாக்குதலாக வெடித்த அரசியல் நெருக்கடியானது முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்புமுறையின் உயிர்பிழைப்பையே அச்சுறுத்தும் விதத்தில் அரசு எந்திரத்திற்குள்ளும் ஆளும் வர்க்கத்திற்குள்ளும் நிலவும் ஆழ்ந்த மற்றும் அபாயகரமான பிளவுகளை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. ஆளும் வர்க்கம் அதிகரித்தளவில் எதிர்ப்பு கொண்ட மற்றும் போர்குணம் கொண்ட தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கிறது என்பதால், பைடென் ஆளும் வர்க்கத்திற்குள் ஒற்றுமையை விரும்புகிறார். பதவிப்பிரமாண விழாவுக்கு முன்னதாக பைடென் ஒரு தேவாலய வழிபாட்டில் செனட்டர் மெக்கொன்னலுக்கு அருகில் அமர்கையில், அனேகமாக அவரின் அந்த பழைய நண்பரின் காதில், “நாம் ஒன்றாக தொங்கவில்லை என்றால், நாம் அனைவரும் தனித்தனியாக தொங்க வேண்டியிருக்கும்,” என்று கிசுகிசுக்கக்கூடும்.

இதனால் தான் பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் ஜனவரி 6 சம்பவங்களின் மீது ஒரு தீவிரமான விசாரணையை எதிர்க்கிறார்கள். தேர்தல் முடிவுகளை மாற்றி ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு முயற்சியில் குடியரசுக் கட்சி உயர்மட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்ததை அம்பலப்படுத்துவதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. அவர்கள் தங்களின் "சக குடியரசுக் கட்சி நண்பர்களை", அதாவது ட்ரம்பின் சக-சதிகாரர்களைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களைப் பலவீனப்படுத்தக் கூட விரும்பவில்லை.

பைடென் நிர்வாகத்தினது வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளைப் பொறுத்த வரையில், அது வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும். ஆளும் வர்க்க அரசியல் ஸ்தாபகத்தின் பிற்போக்குவாதிகள் மற்றும் விசுவாசிகளின் அந்த மந்திரிசபை —எரிச்சலூட்டும் விதத்தில் அடையாள அரசியலால் நிரம்பியுள்ள அது— அவரின் நோக்குநிலை மற்றும் திட்டங்கள் என்ன என்பதைக் குறித்து அனைத்தையும் கூறுகிறது.

ஆனால் நம்பிக்கையைப் புதுப்பிக்கும் பாசாங்குத்தனத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு மத்தியில், மிக நேர்மையான மற்றும் ஆர்வமான பார்வையாளர்களிடையே அங்கே கையில் தயாராக எந்த தீர்வுகளும் இல்லை என்ற பரந்த உணர்வு உள்ளது. பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் மார்டின் வொல்ஃப் "அமெரிக்க குடியரசின் மரணத்திற்கு நெருக்கமான அனுபவம்" என்று எதை விவரிக்கிறாரோ அதில் கருத்துரைக்கையில், வாஷிங்டனில் வெடித்த நெருக்கடியின் அளவைக் குறைத்துக்காட்டும் முயற்சிகளை நிராகரிக்கிறார்:

என்ன நடந்துள்ளது என்பது இங்கே உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒரு நியாயமான தேர்தலில் அவரைத் தோற்கடிக்க முடியாதென, பல மாதங்களாக, எந்தவித ஆதாரமும் இல்லாமல், வலியுறுத்தினார். அவர் தோல்வியை அவருக்கு ஏற்றவாறு ஒரு மோசடி தேர்தல் மீது சாட்டினார். ஐந்து குடியரசுக் கட்சியினரில் நான்கு பேர் இப்போதும் ஒப்புக் கொள்கிறார்கள். அதிகாரிகள் அவர்களின் மாநில வாக்குகளை மாற்றுமாறு அவர்களுக்கு ஜனாதிபதி அழுத்தமளித்தார். அதில் தோல்வியுற்ற நிலையில், அவர் மாநிலங்கள் சமர்பித்த தேர்வுக்குழு வாக்குகளை நிராகரிக்க தனது துணை-ஜனாதிபதியையும் காங்கிரஸ் சபையையும் மிரட்ட முனைந்தார். காங்கிரஸ் சபையும் அவ்வாறு செய்ய வேண்டுமென அழுத்தமளிப்பதற்காக நாடாளுமன்ற கட்டிடம் மீது ஒரு தாக்குதலை அவர் தூண்டிவிட்டார். எட்டு செனட்டர்கள் உட்பட காங்கிரஸ் சபையின் சுமார் 147 உறுப்பினர்கள் மாநிலங்களின் வாக்குகளை நிராகரிக்க வாக்களித்தனர். சுருக்கமாக கூறுவதானால், திரு. ட்ரம்ப் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முயன்றார். குடியரசுக் கட்சியினரில் பெரும்பாலோனோர் அவ்வாறு செய்வதற்கான அவரின் காரணங்களுடன் உடன்பட்டனர் என்பது தான் மோசமாக உள்ளது. …

ஒவ்வொரு இடத்திலும் கொடுங்கோலர்களை மகிழ்வூட்டுவதற்காக, அமெரிக்க குடியரசின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு இது மிகவும் மோசமான தருணமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதை நேர்மறை கண்ணோட்டக்காரர்கள் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அது கடுமையான அழுத்தத்தினூடாக வந்துள்ளது என்றும், இன்றைய நாளை விட இன்னும் அதிக அபாயகரமாக இருந்த 1930 களில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் கீழ் செய்ததைப் போலவே, இப்போது, மீண்டுமொருமுறை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், அதன் வாக்குறுதியைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் வலியுறுத்தக் கூடும். ஐய்யோ, இதை நான் நம்புவதாக இல்லை.

வரவிருக்கும் நிர்வாகம் எதிர்கொண்டுள்ள சூழ்நிலை மீதான வொல்ஃபின் எதிர்மறை மதிப்பீடு நியாயமானதே. அமெரிக்க நிதியியல் செல்வந்த தட்டு, அதன் உலகளாவிய நிலைப்பாட்டில் ஏற்பட்டு வரும் இடைவிடாத சரிவை எதிர்கொண்டிருப்பதுடன், அதன் அழுகிப்போன சமூக முரண்பாடுகளைச் சரிசெய்ய வரம்புக்குட்பட்ட ஆதாரவளங்களையே கொண்டுள்ளது. கடந்த நான்காண்டுகளாக, அமெரிக்கா அரசு கடன் 7 ட்ரில்லியன் டாலரில் இருந்து 21.6 ட்ரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, டாலரின் பொறிவைத் தடுக்க வட்டிவிகிதங்களை உயர்த்த அழுத்தம் கட்டமைந்து வருவதால், இந்த பாரிய நிதிக்கடனுக்கான செலவும் அதிகரிக்கும்.

பதவியேற்பு தினத்தில் பைடென் காட்டும் அனுதாப சைகைகள் என்னவாக இருந்தாலும், அவை தீவிரமடைந்து வரும் நெருக்கடியால் பிரயோஜனமற்றதாக ஆக்கப்படும்.

அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சீன மற்றும் ஐரோப்பிய சவால்களை எதிர்கொள்வதன் மீது மையமிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய முன்னுரிமைகளுக்காக, இராணுவ நடவடிக்கைகள் மீது தொடர்ந்து பாரியளவில் செலவினங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இத்தகைய கடமைப்பாடுகள் சமூக செலவினங்கள் மீது கடுமையான வரம்புகளைத் திணிக்கும்.

பைடெனின் வரவிருக்கும் நிர்வாகம் என்ன செய்ய முடியும் என்பது ஒருபுறம் இருக்கட்டும், அது என்ன செய்ய நினைக்கிறதோ அந்த பிரமைகளில் சிக்கிக் கொள்வதைக் கூட தொழிலாளர்களும் இளைஞர்களும் தவிர்க்க வேண்டும்.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் செல்வவளம் மீது ஒரு முன்னணி தாக்குதல் நடத்தாமல் அங்கே முன்னோக்கிய பாதையே இல்லை என்ற புரிதலுடன் தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பு தொடங்க வேண்டும். ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் பாசிசவாத சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்பு, இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் குற்றகரமான விடையிறுப்பால் ஏற்பட்ட பாரிய மரணத்தை முடிவுக்குக் கொண்டு வருவது, வறுமை மற்றும் சுரண்டல் ஒழிப்பு, போர் மற்றும் காலநிலை சீரழிவை முடிவுக்குக் கொண்டு வருவது என இவை அனைத்தும் செல்வந்தர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதையும், மிகப்பெரும் வங்கிகள் மற்றும் பெருவணிகங்களைப் பறிமுதல் செய்வதையும் கோருகின்றன.

ஆளும் வர்க்கம் யதார்த்தத்தைப் பயத்துடன் எதிர்கொள்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கமோ முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து எழும் அபாயங்களை மட்டுமல்ல, மாறாக அதே நெருக்கடி தோற்றுவிக்கும் சாத்தியமான புரட்சிகர வாய்ப்புகளையும் பார்க்க வேண்டும். இந்த வாய்ப்பைக் கைவரப் பெற, சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்தின் மூலமாக, அதன் சுயாதீனமான தலையீடு அவசியமாகிறது.

Loading