அரபு வசந்தத்தின் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்ப்பு போராட்டங்கள் பரவியதால் துனிசிய ஆட்சி இராணுவத்தை நிலைநிறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி ஜைன் எல் அபெடின் பென் அலியைத் தூக்கியெறிந்த ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்க எழுச்சியின் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், துனிசிய ஆட்சி நாடு முழுவதும் டஜன் கணக்கான நகரங்களில் வெடித்த ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்துகிறது. நேற்று, பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியின் அரசாங்கம் நாடு முழுவதும் பரவி வரும் போராட்டங்களை நசுக்கும் முயற்சியில் 632 இளைஞர்களை கைது செய்தது.

வட ஆபிரிக்காவில் தொழிலாள வர்க்க மாவட்டங்களில் வெடிக்கும் கோபம் உருவாக்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், COVID-19 வைரஸ் பரவியிருந்த போதிலும், நேரடியாகச் சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அதனுடைய கொலைகாரக் கொள்கையை எதிர்த்து, ஆசிரியர்களின் உள்ளூர் வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டது. அந்த நேரத்தில், ஜனவரி 14 திகதியன்று பென் அலி தூக்கியெறியப்பட்ட ஆண்டு நிறைவையொட்டி நான்கு நாள் ஊரடங்கு உத்தரவை அறிவிக்க மெச்சிச்சி திடீரென முடிவு செய்தார்.

போலீஸ்காரர்கள், துனிசியா சிலியானாவில், மோதல்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்கின்றனர், சனிக்கிழமை, ஜனவரி 16, 2021. (AP Photo/Hedi Sfar)

இந்த வெறுப்புணர்ச்சியுடனும் மற்றும் வெளிப்படையான சூழ்ச்சித்திறமுடன் இந்த பெருந்தொற்று நோயை ஒடுக்குமுறைக்கான ஒரு போலிக் காரணமாக, பெருகிவரும் எதிர்ப்பை நெரிக்க முடியவில்லை. தலைநகர் துனிஸ் உட்பட பல நகரங்களில் அனுமதிபெறப்படாத ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 14ம் திகதி இரவு, ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்கள், பென் அலிக்கு எதிரான 2011 ஆண்டு எழுச்சியின் மையமாக இருந்த துனிசியாவின் தெற்கு-மத்திய மாவட்டத்தில் பெரும்பாலும் தொழிலாள வர்க்க நகரமான கசெரைனிக்குச் சென்றனர். வேலையின்மை, வேலையற்றவர்களுக்கு சமூக ஆதரவு ஆகியவை இல்லாததை எதிர்த்து அவர்கள் டயர்களை எரித்தனர் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக எதிர்கொண்டனர்.

சிலியானாவில், ஒரு அரச கட்டிடத்திற்குள் ஒரு ஆடுகள் மேய்க்கும் நபரை ஒரு போலீஸ்காரர் தாக்கியதாகக் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மக்கள் பொலிஸ் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். அவர்கள் பதிலுக்கு கற்களை வீசியும், டயர்களால் தெருக்களை அடைத்தும் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்படுவதை தாமதப்படுத்தினர். ஜனவரி 15ம் திகதி, போலீஸ் தொழிற்சங்கங்கள், ஆடுகள் மேய்ப்பவரிடம் மன்னிப்புக் கோரியதன் மூலம் அதிகரித்து வரும் கோபத்தை அமைதிப்படுத்த முயற்சித்தன.

அடுத்தடுத்த நாட்களில், Ettadhamen மற்றும் Al-Karm போன்ற தொழிலாள-வர்க்க மாவட்டங்களில் எதிர்ப்புக்கள் வளர்ந்து, பரவியது, அதே போல் Kasserine, Sbeitla, Bizerte, Beja, Kairouan, மற்றும் Monaster. Manzel Bourguiba, Sousse, மற்றும் Nabeul ஆகிய நகரங்களிலும், பிற நகரங்களிலும் பாதுகாப்புப் படையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்தன.

ஜனவரி 17ம் திகதி துனிசிய உள்துறை அமைச்சகம் 242 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், பாதுகாப்பு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஜிக்ரி, இராணுவம் Siliana, Kasserine, Bizerte மற்றும் Sousse பகுதிகளில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நிறுத்தப்படும் என்று உறுதிப்படுத்தினார். துனிஸின் மையப் பகுதிக்கும் இராணுவப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. முக்கிய அரசாங்கக் கட்டிடங்களைத் தாக்குவதிலிருந்து மக்களைத் தடுப்பதே இராணுவத்தின் தலையீட்டின் நோக்கம் என்று ஜிக்ரி உறுதிப்படுத்தினார்.

ஆளும் வட்டாரங்களில் அதிகரித்து வரும் பீதியின் அடையாளமாக, பென் அலி ஆட்சியுடன் வரலாற்று ரீதியாக இணைந்திருந்த தேசிய தொழிலாளர் சங்கமான துனிசிய தொழிலாளர் பொதுச் சங்கம் (UGTT) இயக்கத்தைக் கண்டனம் செய்யவும், அதை சீர்குலைப்பதற்கு முயற்சி செய்யவும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

பொலிஸ் ஒடுக்குமுறை "பயனற்றது" என்று விமர்சித்த அதேவேளை, இளைஞர்களின் சமூக கோபம் "நியாயமானது" என்று அறிவித்த அதேவேளையில், UGTT ஆர்ப்பாட்டங்களை ஒரு குற்றவியல் நடவடிக்கை என்று கண்டனம் செய்தது. UGTT "இளம் எதிர்ப்பாளர்கள் இரவு நேர ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடாது என்று எச்சரித்தது, அவர்கள் ஊடுருவும் அபாயம் இருக்கும்போது, சமீபத்திய நாட்களில் நடந்த அழிப்புச் செயல்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்களை நாசவேலை செய்த செயல்களையும் கண்டனம் செய்தது.

நேற்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் காலித் ஹயூனி, 15 முதல் 25 வயது வரை 632 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அறிவித்தார். பெரும்பாலும் UGTT இன் வாதங்களை எதிரொலிக்கும் வகையில், அவர் எதிர்ப்புக்களை கண்டித்தார்: அதாவது "இது அரசியலமைப்பு பாதுகாப்போடு கூடிய கோரிக்கைகளுடன் கூடிய இயக்கங்களுடன் எந்த தொடர்பும் கொண்டதில்லை. இதுபோன்ற இயக்கங்கள் பொதுவாக பகல் நேரத்தில் நடைபெறும் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் இடம்பெறாது."

துனிசியாவில் டஜன் கணக்கான நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. இது இராணுவத்தின் அச்சுறுத்தல்களையும், ஆட்சியால் கைது செய்யப்பட்ட அலைகளையும் மீறி நடைபெற்றது. துனிஸில் ஒரு எதிர்ப்பு அணிவகுப்பு ஹபீப் போர்குயிபா அவென்யூவில் 2011ல் பென் அலிக்கு எதிரான கிளர்ச்சியின் போது மக்கள் எதிர்ப்புக்களின் தளமாக இருந்தது. "அச்சமில்லை, திகிலில்லை, அதிகாரம் மக்களுக்கே உரியது!" போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினார்கள்.

துனிஸின் பல நகரங்கள் மற்றும் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளில் பொலிஸாருடன் பெரிய அளவிலான மோதல்களை ஊடகங்கள் செய்தி அனுப்புகைகள் சுட்டிக்காட்டின. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிசார் பெருமளவில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர், பெரும்பாலும் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளின் உச்சியில் இருந்து, அவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியும், பட்டாசுகளை வீசுவதன் மூலமும் பதிலடி கொடுத்தனர்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தொழிலாள வர்க்கத்தால் பென் அலியை தூக்கியெறிந்த அரசியல் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது என்பதை இந்த ஆர்ப்பாட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன. 2011 ஆண்டு ஜனவரியில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சியைத் தூண்டிய பெரிய சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

"துனிசியாவில் வெகுஜன எழுச்சியும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கும்" என்ற தலைப்பில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வெளியிட்ட ஜனவரி 17, 2011 அறிக்கையை, நிகழ்வுகளின் போக்கு முழுமையாக ஊர்ஜிதம் செய்கின்றன. இந்த எழுச்சி "உலக விவகாரங்களில் ஒரு திருப்புமுனையை" குறித்தது என்றும் "புரட்சிகர எழுச்சிகளின் ஒரு புதிய சகாப்தத்தை" திறந்து விட்டது என்றும் ICFI அறிவித்தது. எழுச்சியை உந்தித் தள்ளுகின்ற சர்வதேச வர்க்க பதட்டங்கள் மற்றும் புரட்சியை தூண்டிவிடுவதில் பென் அலியின் ஊழல் பற்றிய விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தல்களின் பங்கு ஆகியவற்றையும் அது சுட்டிக்காட்டியது.

முதலாளித்துவத்தை தூக்கி வீசவும் ஒரு சர்வதேச சோசலிசப் புரட்சிக்காகவும் போராடும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச ட்ரொட்ஸ்கிச புரட்சிகர முன்னணிப் படையை உருவாக்கவேண்டியதன் அவசரத்தையும் கூட ICFI வலியுறுத்தியது:

வெளிநாட்டு ஏகாதிபத்தியம் மற்றும் சொந்த நிலப்புரபுத்துவ ஆதிக்க சக்திகளுடன் எண்ணற்ற வகையில் பிணைக்கப்பட்டுள்ள துனிசியா போன்ற நாடுகளின் பலவீனமானதும், சார்புடையதுமான முதலாளித்துவ வர்க்கமானது ஏகாதிபத்தியத்தை விட தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்திக்கு ஆயிரம் மடங்கு அதிக பயத்தையும் விரோதத்தையும் கொண்டிருக்கிறது. ... ஒரு புரட்சிகர தலைமையின் அபிவிருத்தி இல்லாவிட்டால், பென் அலிக்கு பதிலாக மற்றொரு எதேச்சாதிகார ஆட்சி தவிர்க்க முடியாமல் நிறுவப்படும்.

துனிசிய எழுச்சியானது எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த புரட்சிகர எழுச்சியினால் பின்தொடரப்பட்டது. அது ஹோஸ்னி முபாரக்கை தூக்கியெறிந்தது. அத்துடன் அப்பிராந்தியம் முழுவதும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. ஆயினும், எகிப்தில் புரட்சிகர சோசலிஸ்ட் (Revolutionary Socialist - RS) மற்றும் துனிசியாவில் மக்கள் முன்னணி (Popular Front) போன்ற குட்டி-முதலாளித்துவக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடை செய்தபோது, ஆட்சி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஏகாதிபத்திய சக்திகள் லிபியா, சிரியா, ஐவரி கோஸ்ட் மற்றும் மாலியில் போர்களின் அலையை தொடுத்தன. பென் அலியை தொடர்ந்து பின்வந்த துனிசிய அரசாங்கங்கள் சர்வதேச வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் வெளிப்படையான மாறுவேடமிட்ட கருவிகளாக இருந்தன.

மெச்சிச்சியின் அரசாங்கம் —ஒரு இடைக்கால அடிப்படையில் இருந்தாலும், இன்னமும் அந்த பதவியில் இருக்கும் ஒரு முன்னாள் உள்துறை அமைச்சர்— இஸ்லாமியவாதிகள், தாராளவாதிகள் மற்றும் முன்னாள் பென் அலி ஆதரவாளர்களின் ஸ்திரமற்ற கூட்டணியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அரசு திவால்தன்மையின் விளிம்பில் நிரந்தரமாக இருக்கும் நிலையில், அது பெரிய வங்கிகளால் நெரிக்கப்படுகிறது, வேலைகள், ஏற்புடைய சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்க இலாயக்கற்றது.

துனிசியாவில் 5,570 உயிர்களைக் காவு கொண்ட மற்றும் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை பெருமளவில் தீவிரப்படுத்தும் பெருந்தொற்று மற்றும் உத்தியோகபூர்வ "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகள் வட ஆபிரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் சமூக ஒழுங்கின் திவால்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளன. துனிசியாவில் இப்பொழுது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள எதிர்ப்புக்கள், பெருந்தொற்று நோய்களால் தூண்டப்படும் புரட்சிகர தாக்கங்கள் கொண்ட ஒரு பூகோள நெருக்கடியின் ஒரு பகுதி என்று பரந்த அளவில் உணரப்படுகிறது.

"COVID-19 வைரஸ் நெருக்கடியால் உருவாக்கப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் சுகாதார நிலைமை அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு சாதகமானதாக உள்ளது," என்று பிரிட்டிஷ் இன்டிபென்டன்ட் இன் அரபு பதிப்பின் பத்திரிகையாளர் ஃபதீன் ஹஃப்சியா கூறினார். அவர் மேலும் கூறினார்: "துனிசியாவில் ஜனவரி பொதுவாக 1952 புரட்சி [பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்கு எதிராக] இலிருந்து UGTT உடன் 1978 மோதல் மற்றும் ஜனவரி 2011 ஆண்டு நிகழ்வுகள் மற்றும் பென் அலியை பதவியை தூக்கியெறிந்தது வரை, எதிர்ப்புக்களின் வரலாற்று இயக்கமாக இருந்து வருகிறது."

ஜனவரி 6, 2021, வாஷிங்டன், டி.சி, நாடாளுமன்றத்தின் மீது டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்த பாசிச ஆட்சி கவிழ்ப்பானது அமெரிக்கா மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கு மேலும் ஒரு எச்சரிக்கையாகும். முதலாளித்துவமானது அதனுடைய காலே அழுகிப்போய்க் கொண்டிருப்பதும், மிக நீண்ட ஜனநாயக மரபுகளைக் கொண்ட மிக பணக்கார மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் கூட ஜனநாயகத்தை கீழறுக்கிறது. உலகெங்கிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான போராட்டம் இன்று சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

Loading