கொடிய சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை ஜனநாயகக் கட்சியும் பின்பற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஓராண்டுக்கு சற்று கூடுதலான காலத்திற்கு முன்னர், சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் அவசர குழு (International Health Regulations Emergency Committee), சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரத்திலும் மற்றும் அருகாமை நாடுகளிலும், அத்துடன் அமெரிக்கா வரையிலுமாக புதிய கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்த வேகமான மற்றும் அபாயகரமான முன்னேற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்ய ஒன்றுகூடியது.

ஜனவரி 30 அன்று, இந்த குழு, சர்வதேச அக்கறை குறித்த பொது சுகாதார அவசரகால அமைப்பு (Public Health Emergency of International Concern) பெருந் தொற்றுநோயின் வெடிப்பை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என்று வலுவாக பரிந்துரைத்ததை உத்தரவாதப்படுத்தும் ஒரு இறுதி முடிவை எட்டியது.

தொற்றுநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பொறுப்பின்றி வீணடித்து வந்து ஓராண்டுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டின் கீழ் அமெரிக்கா, அதன் மக்களின் நலவாழ்வை விட இலாபங்களை முன்னிலைப்படுத்தும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை பின்பற்றுவதில் இருமடங்கு முன்நிற்கிறது.

ஜனாதிபதி ஜோ பைடென் (AP Photo/Carolyn Kaster)

மார்ச் 2020 இல், உலக சோசலிச வலைத் தளம், “வைரஸ் பரவும் விவகாரத்தை அலட்சியத்துடன் கையாளும் விதமாக அதற்கு குறைத்து எதிர்வினையாற்றும் வகையில் அரசாங்கங்கள் வேண்டுமென்றே நடந்துகொண்டது” என ஆளும் வர்க்கத்தின் படுமோசமான அலட்சியப் போக்கை பொருத்தமாக வகைப்படுத்தியது. ட்ரம்பின் மிக கொடூரமான மற்றும் கடுமையான அணுகுமுறையுடன் ஒப்பிடுகையில், ஜனநாயகக் கட்சி இந்த கொள்கையை ஏதோ சற்று மெருகூட்டிய வடிவில் திருத்தி வழங்குகிறது. எவ்வாறாயினும், அவர்களது குறிக்கோள்கள் ஒரேமாதிரியானவையே – அதாவது தொற்றுநோய் சம்பந்தபட்ட தேவைகளால் பொருளாதாரம் கட்டுப்படுத்தப்படமாட்டாது என்பதாகும்.

ஜனாதிபதி ஜோ பைடென் தனது தலைமையிலான ஒரு முழு நாள் ஆட்சியில், “அடுத்த பல மாதங்களில் கூட தொற்றுநோயின் போக்கை மாற்ற எங்களால் எதுவும் செய்ய முடியாது” என வெளிப்படையாக அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை உலகப் பார்வையாளர்களுக்கு முன்வைத்தார். வெள்ளியன்று, அவர் மேலும், “பெரும்பகுதி அமெரிக்கா பாதிப்பில் உள்ளது. வைரஸ் வெடித்து பரவிக் கொண்டிருக்கிறது. நாங்கள் 400,000 பேர் இறந்துவிட்டோம், அது 600,000 ஐ கூட எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

திரு ஜனாதிபதி, எங்களால் எதுவும் செய்ய முடியாதா?

முதலாளித்துவ ஊடகத்தின் முதன்மை செய்தித்தாளான, நியூ யோர்க் டைம்ஸ், இறப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை உண்மையில் எடுக்க முடியும் என்பதைக் குறிக்கும் சுகாதார நிபுணர்களின் தகவல்களை வழங்கியுள்ளது. டைம்ஸ் அதன் ஞாயிறு வெளியீட்டில், “கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஒரு புதிய மாதிரியின் படி, கோடையிலும் அதற்கு பின்னரும் மக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து வந்தும் கூட இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

கொலம்பிய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜெஃப்ரி ஷாமன் டைம்ஸூக்கு வழங்கிய தரவை இது மதிப்பாய்வு செய்கிறது. அவரது மதிப்பீட்டின் படி, அமெரிக்கா முழுவதும் 105 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கோவிட்-19 கண்காணிப்பு தரவுத்தள தரவுகளைப் போல நான்கு மடங்கு அதிகமானது, காரணம் என்னவென்றால் அவற்றின் தரவுகளில் அறிகுறியில்லாத அல்லது இலேசான அறிகுறிகள் கொண்ட பெரும்பாலான நோய்தொற்றுக்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்டுவிட்டது என்பதே. ஒருவரிலிருந்து மேலும் ஒருவருக்குக் கூட நோய் பரவாமல் தடுக்க அவருக்கு தடுப்பூசி போடப்படுவது உட்பட, போதுமான எண்ணிக்கையில் மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி உருவாக்கப்படும் வரை, தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்கள் நோய்தொற்றுக்குள்ளாவார்கள். எவ்வாறாயினும், டைம்ஸூடன் பேசும் பல தொற்று நோயியல் ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்க மக்கள் அவர்களது மிக இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் அவர்களில் போதுமானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதற்கு பல மாதங்கள் பிடிக்கும் என்றே எச்சரித்துள்ளனர்.

என்றாலும், பிப்ரவரியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்குமானால், ஜூலை மாதத்திற்குள் 29 மில்லியன் கூடுதல் மொத்த நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருக்கும் என்று டாக்டர் ஷாமனின் குழு மதிப்பிட்டிருந்தது. அவர், “ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த விரும்பும் நபர்கள் எங்கள் மத்தியில் உள்ளனர். சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு ஒளி தெரிவது போல எங்களுக்கு ஒரு தடுப்பூசி கிடைத்துள்ளது, அதனால் நோய்தொற்று பரவுவதை இரண்டே மாதங்களில் தடுத்துநிறுத்தலாம் என்று நாங்கள் சிந்திக்க தொடங்கினால், அதுவே விரைவான வழியாக இருக்கும்” என்று தெரிவித்தார். மார்ச் மாதம் நடுப்பகுதியில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தால் கூட, தற்போதைய மதிப்பீடுகளை விட 6 மில்லியன் கூடுதல் நோய்தொற்றுக்கள் உருவாகியிருக்கும் என்று அவர்களின் மாதிரிப்படுத்துதல் குறிப்பிடுகின்றது.

மற்றொரு வகையில் குறிப்பிடுவதானால், மேலும் கணிசமான கட்டுப்பாடுகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டு ஜூலை கடைசி வரை கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால், 19 மில்லியனுக்கு குறைவான நோய்தொற்றுக்களே இங்கு இருந்திருக்கும். இங்கு அநேகமாக 50 மில்லியன் அளவிற்கு நோய்தொற்றுக்களின் வித்தியாசம் உள்ளது, இது சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை மற்றும் இறப்புக்கும், மற்றும் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளை பெரியளவில் செயல்படுத்துவதற்கும் இடையிலான வேறுபாடாகும். இதன் பொருள் தோராயமாக 250,000 இறப்புக்கள் தவிர்க்கப்படலாம். ஜனாதிபதி தனது ஆலோசகர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆலோசனைகளுடன், இந்த கணக்கீடுகள் பற்றியும், அத்துடன் நிதிய தன்னலக்குழுக்களின் கணக்கீடுகள் பற்றியும் அறிந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

சில அனுமானங்களின் அடிப்படையிலான ஒவ்வொரு பகுப்பாய்வு மாதிரியையும் புள்ளிவிபர முடிவுகளை எட்டுவதற்கு நிலையானதாக வைக்க வேண்டியுள்ளது. ஃபிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திலுள்ள தடுப்பூசி மற்றும் தொற்றுநோயியல் பிரிவு மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் டாக்டர் ட்ரெவர் பெட்ஃபோர்டு, தடுப்பூசி விநியோகத்தின் வேகம் தெரியாத நிலையில் இந்த முடிவுகளை அது பாதிக்கும் என்று குறிப்பிட்டார். இதன் பொருள், தடுப்பூசி விநியோகம் மிக மெதுவாக செயல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமானால் அது இன்னும் மேலதிக நோய்தொற்றுக்களுக்கு வழிவகுக்கும் என்பதாகும்.

கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தி உலகளவில் நிலவும் தாமதத்தால் சவாலாக உள்ளது. ஐரோப்பாவின் தடுப்பூசி விநியோகத்தை அச்சுறுத்தும் வகையில், அஸ்ட்ராசெனேகா (AstraZeneca) மருந்து நிறுவனம் அதன் உற்பத்தி பிரிவுகள் 60 சதவிகிதம் கணிப்புக்களுக்கு குறைவான உற்பத்தியை தருவதால் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இது தற்போதைய தடுப்பூசிகளின் விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பை பாதிக்கும்.

மேலும், ஃபைசர் நிறுவனம் அதன் தடுப்பூசி குப்பிகளுக்கு சமீபத்தில் மறுபெயரிட்டுள்ளது, அவை ஐந்துக்கு பதிலாக ஆறு அளவு மருந்துகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது, அதாவது அமெரிக்கா தற்போது பெறும் மொத்த தடுப்பூசி கொள்முதல்களில் 16 சதவிகித மருந்தை குறைவாகப் பெறவுள்ளது. ஆறாவது கூடுதல் மருந்து அளவைப் பெற குறைந்த வெற்றிடைவெளி கொண்ட ஊசி (low dead space syringe) தேவைப்படுகிறது. தடுப்பூசிகளுடன் அவர்கள் அனுப்பும் ஊசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறினாலும், ஆறாவது அளவு மருந்தை பிரித்தெடுக்கக்கூடிய சரியான ஊசிகளாக அவை இல்லாமல் போகலாம். இது தடுப்புமருந்து கணிசமாக வீணாவதற்கு வழிவகுக்கும்.

ஊசி வடிவமைப்புகளுக்கு இடையில் அவற்றின் வெற்றிடைவெளிகளிலுள்ள முரண்பாடு ஆதாரம்: விக்கிபீடியா

மிகுந்த கவலைக்குரியதும், மற்றும் கொலம்பிய பல்கலைக்கழக மாதிரியில் உட்படுத்தப்படாததுமாக, SARS-CoV2 வைரஸ் திரிபுவகையின் எழுச்சி உள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து திரிபுவகை வைரஸாக கருதப்படும் B.1.1.7 வகை வைரஸ் கூட, மிகுந்த தொற்றும் தன்மை கொண்டதாகவும், தற்போது மிகுந்த ஆபத்தானதாகவும் காட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெள்ளியன்று, “வைரஸ் விரைந்து பரவுவது பற்றி மட்டுமல்லாமல், வைரஸின் புதிய திரிபுவகை ஏராளமான இறப்புக்களை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்பதை நாம் இப்போது அறிந்துகொண்டோம். ஆகவே, நாம் அனைவரும் விதிகளைப் பின்பற்றி வீடுகளிலேயே தங்கியிருப்பது, தேசிய சுகாதார சேவையை (NHS) பாதுகாப்பது மற்றும் உயிர்களை காப்பாற்றுவது ஆகியவை முன்னெப்போதையும் விட முக்கியமானதாகும்,” என்று ட்வீட் செய்துள்ளார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கருத்துப்படி, தற்போது அமெரிக்காவின் ஒட்டுமொத்த 22 மாநிலங்களில் B.1.1.7 வைரஸ் நோய்தொற்றுக்கள் அண்ணளவாக 200 வரை கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, புளோரிடா, கலிஃபோர்னியா மற்றும் நியூயோர்க் மாநிலங்களில் ஏராளமான நோய்தொற்றுக்கள் உள்ளன. மார்ச் மாதத்திற்குள், B.1.1.7 வைரஸ் திரிபுவகை அமெரிக்காவில் தீவிர ஆதிக்கம் செலுத்தும் என்ற கவலைகள் உள்ளன. வைரஸின் புதிய திரிபுவகையின் ஆதிக்கத்தால் வசந்த காலத்தில் கூட நோய்தொற்றுக்கள் பெரும் எழுச்சி காணும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

பைடெனின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினர், டாக்டர் மைக்கல் ஓஸ்டர்ஹோம், “B.1.1.7 வைரஸ் நோய்த்தன்மையை மிகக் கடுமையாக்கும், மேலும் இறப்புக்களை அதிகரிக்கும் என்பதை தெளிவாக ஆதரிக்கும் தரவுகள் பெருகி வருகின்றன, அதில் சிலவற்றை என்னால் பகிர முடியாது. இந்த திரிபுவகை வைரஸ் நோய் பரவும் வேகத்தை அதிகரித்துள்ளது பற்றி ஏற்கனவே நமக்குத் தெரியும், எனவே இது நமக்கு மிக மிக மோசமான செய்தியாகும்” என்று CNN க்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களுக்குள் பள்ளிகளும் பணியிடங்களும் திறக்கப்படுவதை காண விரும்பி அவர் பின்பற்றும் தொற்றுநோய் கொள்கை, அடிப்படையில் பெருநிறுவனங்களின் உற்பத்தி தளங்களில் அவற்றின் ஒட்டுமொத்த தொழிலாள சக்தியும் பணிக்குத் திரும்பி இலாபங்களை பெருக்குவதை காண முனைகிறது. இருப்பினும், அதிகபட்ச மரணங்களையும், துன்பங்களையும் தவிர்க்க நிறைய செயல்பட முடியும். ஜனநாயகக் கட்சியின் போக்கு, ட்ரம்ப் தலைமையின் கீழ் குடியரசுக் கட்சியினர் பின்பற்றிய போக்கிற்கு வேறுபட்டதல்ல என்பது பற்றி தொழிலாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னரே எச்சரிக்கப்பட வேண்டும். ஏனென்றால், வோல் ஸ்ட்ரீட்டுக்கு அவர்கள் அனைவரும் தங்களது விசுவாசத்தைக் காட்ட உறுதியளித்துள்ளனர்.

Loading