போர்த்துகீசிய ஜனாதிபதி தேர்தலில் பழமைவாதிகளின் வெற்றியினால் அங்கு பாசிச வாக்குகள் அதிகரித்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போர்ச்சுகலில் ஞாயிறன்று நடந்த ஜனாதிபதி தேர்தல், தற்போது பதவியிலுள்ள வலதுசாரி ஜனாதிபதி மார்செலோ ரெபேலோ டூ சவுசாவின் வெற்றியையும், பாசிச செகா (போதும்) கட்சிக்கு வாக்குகள் அதிகரித்ததையும் கண்டது.

போர்ச்சுகலில் கொரோனா வைரஸ் இறப்புக்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கையில் இந்த தேர்தல் நடந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இறப்புக்கள் இருமடங்காக அதிகரித்துள்ளன, ஞாயிறன்று 275 இறப்புக்கள் பதிவானது உட்பட, வெறும் 10.2 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,194 ஆக உயர்ந்துள்ளது.

மார்செலோ ரெபேலோ டு சோசா (Wikimedia Commons/Agencia Lusa)

வைரஸ் குறித்த பயமும், அஞ்சல் அல்லது மின்னணு வாக்களிப்பு இல்லாததும் 39.5 சதவிகித குறைந்த வாக்குப்பதிவுக்கு ஓரளவு காரணமாக இருந்தன. இருப்பினும், அரசியல் ஸ்தாபகத்துடன் ஏற்பட்ட அதிருப்தியினால் பல தசாப்தங்களாக வாக்குப்பதிவு படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது, அதாவது, 1974 கார்னேஷன் புரட்சியில் (Carnation Revolution) அன்டோனியோ சலாசரின் பாசிச சர்வாதிகாரம் கவிழ்ந்ததன் பின்னர், 84.4 சதவிகிதத்திலிருந்து, 2016 இல் 51.3 சதவிகிதமாக குறைந்தது. அதிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 48.6 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இந்த ஆண்டு, பழமைவாத சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டூ சவுசா, 60.7 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக வெற்றி கண்டுள்ளார். மேலும், சமூக ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி (PS) பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் பிற சோசலிஸ்ட் கட்சி தலைவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமற்ற ஆதரவையும் அவர் பெற்றார். ரெபேலோ டூ சவுசா மறுதேர்வாகியிருப்பது குறித்து சோசலிஸ்ட் கட்சி அதிகாரி கார்லோஸ் சீசர் அவரை வாழ்த்தி, இது அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான நெருக்கமான “நிறுவன ஒத்துழைப்பை” தொடர அனுமதிக்கும் என்பதால், சோசலிஸ்ட் கட்சிக்கு இது ஒரு “நல்ல செய்தி” என்று கூறுகிறார்.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் போலி-இடது கூட்டணி கட்சிகளின் முதன்மை முன்நோக்கம், சமூக சமத்துவமின்மை மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள் தொற்றுநோய் பரவி வருவது குறித்து அதிகரித்து வரும் கோபத்தை தணிப்பதும், மற்றும் இடது நோக்கி திரும்புவதை தடுப்பதும் இருந்தது. வலதுசாரி டூ சவுசாவை உயர்த்துவதற்கு தீவிரமாக உழைத்த சோசலிஸ்ட் கட்சி தனது சொந்த வேட்பாளரை தேர்தலில் நிறுத்தவில்லை. சுயேட்சையாக நின்றவரான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினராக மாறிய மாவோயிசவாதி அனா கோம்ஸ் வெறும் 13 சதவிகித வாக்குகளை வென்றார்.

சோசலிஸ்ட் கட்சியின் பிற கூட்டணி கட்சிகளுக்கும் மோசமான வாக்குகளே கிடைத்துள்ளன. ஸ்ராலினிச போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சி (PCP) வேட்பாளர் ஜோவோ ஃபெரீரா (Joao Ferreira) 4.3 சதவீத வாக்குகளைப் பெற்றார், போலி-இடது இடது தொகுதி (BE) கட்சியின் மரிசா மத்தியாஸ், 2016 இல் பெற்ற 10.1 சதவிகித வாக்குகளில் இருந்து குறைந்து படுமோசமாக 4 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார். இரு கட்சிகளும் சோசலிஸ்ட் கட்சியுடனான ஒரு உண்மையான கூட்டணியில் பல ஆண்டுகள் சேர்ந்து பணியாற்றியுள்ளன.

2019 இல் உருவாக்கப்பட்ட செகா கட்சிக்கு 11.9 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இது அதற்கு ஆதரவு அதிகரித்து வருவதைக் குறித்தது: அக்டோபர் 2019 இல், அதன் தலைவர் ஆண்ட்ரே வென்ச்சுரா 1974 புரட்சிக்குப் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பாசிச வேட்பாளராக இருந்தபோது, அது 1.3 சதவிகித வாக்குகளை வென்றிருந்தது. இந்த மாதம், பிரான்சின் தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் தலைவியான மரின் லூ பென், வென்ச்சுராவின் பிரச்சார அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக இருந்தார்.

தேர்தல் நாளன்று இரவில், வென்ச்சுரா தேர்தலை “வரலாற்று” நிகழ்வாக அறிவித்து, “போர்ச்சுகலில் தீவிர வலதுசாரிகளை,” அதாவது போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சி (PCP) மற்றும் போலி-இடது இடது தொகுதி (BE) கட்சி போன்ற கட்சிகளை அவர் நசுக்கிவிட்டதாக முழங்கினார். மேலும் அவர், செகா “போர்ச்சுகலில் நிலவும் வழமையான முற்றுகையை உடைத்து ஒரு பெரும் சக்திவாய்ந்த எதிர்ப்பு அமைப்பு சக்தியை உருவாக்க முடிந்தது” என்றும் கூறினார்.

ஏனைய பாசிச வாய்வீச்சாளர்களைப் போல வென்ச்சுராவும், சோசலிசத்தை “ஊழல்வாத அரசியல் ஸ்தாபகம்” எனவும், பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடி குறித்த சமூகத்தின் மிக ஒடுக்கப்பட்ட பிரிவுகள் எனவும் அதனை வன்மையாக குற்றம்சாட்டுகிறார். அவர் ரோமா “ஜிப்சிகளும்” மற்றும் தொழிலாளர்களும் நலன்களை நம்பியிருக்க நிர்ப்பந்திக்கப்படுவதை தாக்குவதோடு, “சோசலிசமும் ஊழலும் நமது தேசத்தை கொல்கின்றன” என்று அறிவிக்கிறார். அவர், “ஒரு சோசலிச சமுதாயம்” உருவாக்கப்படவும், ஏகாதிபத்தியம், காலனித்துவம் மற்றும் “ஏனைய அனைத்து வடிவங்களிலான ஆக்கிரமிப்புக்களையும்” ஒழிக்கவும் செய்தித்தாள்களில் அழைப்பு விடுக்கும் சர்வாதிகாரத்திற்கு பின்னைய அரசியலமைப்பை அகற்ற விரும்புகிறார்.

ஆளும் வர்க்கத்தில் பாசிச உணர்வு அதிகரித்து வருகிறது. வென்ச்சுரா கடந்த ஆண்டு தனது சட்டம் ஒழுங்கு, வணிக சார்பு திட்டங்கள் பற்றி விவாதிக்க, போர்த்துகீசிய ஆயுதப் படைகளின் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரரும், சோடர்கா குழுமத்தின் (Sodarca group) உரிமையாளருமான ஜோவோ மரியா பிராவோ போன்ற போர்த்துகீசிய தொழிலதிபர்களை சந்தித்ததன் பின்னர், செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்: “1974 க்குப் பின்னர், நாடு மூழ்கிவிட்டது, இது ஏற்கனவே மிக விலைவுயர்ந்த அரசாங்கமாகும். ஆண்ட்ரே ஒருவர் மட்டும் தான் காயத்தை ஆற்றும் விதமாக நாம் கேட்க விரும்புவதைப் பற்றி பேசுகிறார். அவர் நேர்மையான திட்டங்களை முன்வைக்கிறார், நாட்டை ஒழுங்கமைக்க விரும்புகிறார், தண்டனையற்ற தன்மையை எதிர்த்துப் போராடுகிறார், மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் விரும்புகிறார்.”

மேலும் அவர், “நீங்கள் நினைத்துப் பார்க்கிறபடி, காவல்துறை மற்றும் இராணுவப் படைகளுடன் எனக்கு சிறந்த தொடர்புகள் உள்ளன, மேலும் அவருக்கு பெரும் ஆதரவு இருக்கிறது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாததால், தற்போது இந்த பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஆதரவாளர்கள் அதிகம் பேர் இல்லை” என்றும் கூறினார்.

வாஷிங்டனின் நாடாளுமன்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு பாசிச சதித்திட்டத்திற்கு முயற்சித்து சில வாரங்களுக்குப் பின்னர், போர்ச்சுகலில் ஒரு பாசிச வேட்பாளரின் எழுச்சி என்பது, சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கான ஒரு எச்சரிக்கையாக உள்ளது. கோவிட்-19 குறித்த கொலைகார “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை” மற்றும் சமூக சமத்துவமின்மையின் நச்சுத்தன்மையின் அளவுகளுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க கோபத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் பதில் பாசிசத்தை நோக்கி திரும்புகிறது. போர்ச்சுகலின் செகா மற்றும் ஸ்பெயினின் வோக்ஸ் போன்ற கட்சிகள் – 1970 களில் மட்டுமே பாசிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்து, இன்னமும் அவற்றின் உயிரோட்டமான நினைவுகளை கொண்டுள்ள நாடுகளில் - முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத, சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் எழுச்சி கண்டு வருகின்றன.

சேகாவின் எழுச்சிக்கு முதன்மையாக பொறுப்பான சக்திகள் தொழிலாளர் விரோத போலி-இடது கட்சிகளாகும், வென்ச்சுரா அவற்றை "தீவிர இடது" என பொய்யாகக் குறிப்பிடுகிறார்.

2015 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சி (PCP) மற்றும் பசுமைக் கட்சியுடன் (PEV), போலி-இடது இடது தொகுதி (BE) கட்சியும் இணைந்து, கோஸ்டாவின் சிக்கன-சார்பு, ஐரோப்பிய ஒன்றிய (EU) சார்பு சிறுபான்மை சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை ஆதரித்தது. 2005 முதல் 2011 வரை சோசலிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கையில் சிக்கன நடவடிக்கைகளை திணித்ததற்காக அது இழிவுபடுத்தப்பட்டபோதும், கிரேக்கத்திலுள்ள அதன் சகோதரத்துவ பாசோக் (PASOK) கட்சியைப் போல சிதைந்துபோகும் வாய்ப்பை அது எதிர்கொண்டபோதும், இது அதனைக் காப்பாற்றியது.

போலி-இடது இடது தொகுதி (BE) கட்சி ஆர்வத்துடன், கோஸ்டா “தனது திட்டத்தின் சில புதிய தாராளமயக் கொள்கைகளை விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்” அவருக்கு ஆதரவளித்தது. போர்ச்சுகலின் கடனை நிராகரிப்பது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறித்துக் கொள்வது தொடர்பான அதன் அனைத்து தேர்தலுக்கு முன்னைய வாய்ச்சவடால்களும் தூக்கியெறியப்பட்டன. சோசலிஸ்ட் கட்சியுடனான ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை பொறிக்குள் போலி-இடது இடது தொகுதி (BE) கட்சியின் குட்டி முதலாளித்துவ தளம் முழுமையாக ஒருங்கிணைந்திருந்தற்கான ஒரு பாதையாக மாறியது. இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சமூக பேரழிவை உருவாக்கியது.

போலி-இடது இடது தொகுதி (BE) கட்சி ஆதரவு பெற்ற சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகுந்த சமூக சமுத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக போர்ச்சுகலும் உள்ளது. போர்ச்சுகலில் ஐந்து தொழிலாளர்களில் ஒருவர் 635 யூரோ (700 டாலர்) குறைந்தபட்ச மாத ஊதியத்தை பெறுகிறார், இது மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைந்த ஊதியமாகும். முழு ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மாத சராசரி ஊதியமான 2,000 யூரோவுடன் ஒப்பிடுகையில், போர்ச்சுகலின் மாத சராசரி ஊதியம் 900 யூரோவுக்கு குறைவாக உள்ளது. அதே நேரத்தில், பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிவிட்டனர். Statista.com இன் படி, “2022 வாக்கில், 2017 முதல் அண்ணளவாக 1,100 அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதன்படி, ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் நிகரமதிப்பு சொத்துக்களை கொண்ட போர்ச்சுகலின் தனிநபர்களின் எண்ணிக்கை 5,650 ஐ எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.”

கடந்த ஆண்டு, தொற்றுநோயால் ஏற்பட்ட பேரழிவிற்கு மத்தியில், போலி-இடது இடது தொகுதி (BE) கட்சி, தான் ஆதரித்த சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்கள் “தனியார் துறைக்கு வளங்களை மாற்றுவதற்கான ஒரு மூலோபாயத்தை” பின்பற்றின என்பதை ஒப்புக்கொண்டது. தற்போது, போர்ச்சுகலில் மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை படுக்கைகளின் கடும் பற்றாக்குறையுடன் இயங்குவதால், அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு சரிவின் விளிம்பில் உள்ளது. “எங்களது மருத்துவமனையின் திறனைத் தாண்டி நாங்கள் ஏற்கனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்… இது எங்களது மருத்துவமனையில் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை” என்று லிஸ்பனின் மிகப்பெரிய, சாந்த மரியா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் டானியல் ஃபெர்ரோ கூறினார்.

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரண்டபோது, போலி இடதுகள் வன்முறைமிக்க எதிர்ப்பைக் காட்டினர். போர்த்துகீசிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தபோதும், மேலும் பிரான்சை பின்பற்றி போர்ச்சுகலில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் பரவியபோதும், போலி-இடது இடது தொகுதி (BE) கட்சியின் தலைவர் பிரான்சிஸ்கோ லூசா அவர்களை பாசிஸ்டுகள் என்று கண்டித்ததோடு, “இது ஒரு தீவிர வலது நடவடிக்கையாகும் என்றும், தீவிர வலதுசாரி சொல்லாட்சியைக் கொண்டு ஆக்கிரமிப்பு அரசியல்மயமாக்கலைத் தூண்டுவதற்கு அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்” என்றும் சாடினார். 2019 ஆம் ஆண்டில், லாரி ஓட்டுநர்களை வலுக்கட்டாயமாக மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்ய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் இராணுவத்தை அழைத்த நிலையில், போலி-இடது இடது தொகுதி (BE) கட்சியும் போர்த்துகீசிய தொழிற்சங்கங்களும் தேசியளவிலான லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தின.

ஐரோப்பாவிலும், சர்வதேச அளவிலும் முதலாளித்துவ வர்க்கம் ஒரு கொலைகார, பாசிச “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை” பின்பற்றுகையில், செகாவின் எழுச்சி என்பது ஒரு மிகக் கடுமையான எச்சரிக்கையாகும். “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளைக்கு எதிராகவும், மற்றும் போலி-இடது குழுக்கள் குறித்த மார்க்சிச-சர்வதேசியவாத விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிசத்திற்கான பணிக்கு, தொழிலாள வர்க்கத்தில் அரசியல் ரீதியாக சுயாதீனமான இயக்கத்தை கட்டமைப்பது மிகவும் அவசரமாக உள்ளது. இதன் பொருள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) போர்த்துகீசியப் பிரிவை கட்டியெழுப்பப் போராட வேண்டும் என்பதாகும்.

Loading