டச்சு நவ-பாசிஸ்டுகள் பெருந்தொற்று எதிர்ப்பு ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரதம மந்திரி மார்க் ரூட்டின் வலதுசாரி அரசாங்கம் ஜனவரி 23 அன்று இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்ட பின்னர், நெதர்லாந்து முழுவதும் கலவரங்கள் வெடித்தன. மொரோக்கோ புலம்பெயர்ந்தோர்களில் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் இதில் சேர்ந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், ஆனால் இக்கலகங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக டச்சு நவ-பாசிசவாதிகளால் திட்டமிடப்பட்டு தூண்டிவிடப்படுகின்றன.

மிகவும் கொடிய பிரிட்டிஷ் வகை COVID-19 பரவல் குறித்து டச்சு அரசாங்கத்தில் பிளவுகள் அதிகரித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு வாக்கெடுப்புக்கு உட்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு மற்றும் பொதுமுடக்கத்தை நிராகரித்த ரூட், ஊரடங்கு உத்தரவு "பிரிட்டிஷ் திரிபு வகை மற்றும் நாம் அனைவரும் கொண்டுள்ள பெரிய கவலைகளுடன்" தொடர்புபட்டிருப்பதாக கூறினார். ரூட்டின் அரசாங்கத்தைத் தவிர, மாவோயிச சோசலிஸ்ட் கட்சி (SP-Maoist Socialist Party), தொழிற் கட்சி (PvdA-Labour Party), பசுமை இடது (Green Left) மற்றும் 50பிளஸ் ஓய்வூதியம் பெறுவோர் கட்சி (50Plus pensioners’ party) ஆகியவை ஊரடங்கு உத்தரவிற்கு வாக்களித்தன; அதிவலது சுதந்திரத்திற்கான கட்சி (PVV-Party for Freedom) மற்றும் ஜனநாயகத்திற்கான கருத்துக்களம் (FvD- Forum for Democracy) ஆகியவைகள் அதை எதிர்த்தன.

நெதர்லாந்தில் பொதுமுடக்க எதிர்ப்பு கலவரங்களில் ஒரு வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர் (Photo: Twitter)

ஜனவரி 18 அன்று, ஊரடங்கு உத்தரவிற்கு வாக்களிக்கப்படுவதற்கு முன்பு, தீவிர வலதுசாரி குழுக்கள் ஆம்ஸ்டர்டாமில் சமூக இடைவெளி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தன. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அண்டை நாடான ஜேர்மனியிலிருந்து அல்லது அதன் உள்ளூர் டச்சு அனுதாபக் குழுவிலிருந்து வந்த தீவிர வலதுசாரி பெகிடா (Pegida-“மேற்கின் இஸ்லாமியமயமாக்கலுக்கு எதிரான தேசபக்தி ஐரோப்பியர்கள்” -“Patriotic Europeans against the Islamization of the West”) உறுப்பினர்களும் ஈடுபட்டனர்.

ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்தபோது, நவ-பாசிஸ்டுகள் சமூக இடைவெளிக்கு எதிரான கலகங்களை நடத்தத் தொடங்கினர். கலவரங்கள் தொடர்ந்தபோது, அவர்கள் கலகங்களில் மொராக்கோகாரர்கள் பங்கு கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதை கண்டித்ததோடு, ஒழுங்கை மீட்டெடுப்பதாக கூறப்படும் ஒரு பெரிய பொலிஸ் அல்லது இராணுவத்தை நிலைநிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளில் ரூட் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டனர். எதிர்வரும் மார்ச் 17 திகதி தேர்தல்களில் அதி-வலது கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு அவர்கள் மீண்டும் மீண்டும் அழைப்புவிடுத்தனர்.

சனிக்கிழமை காலை, ஒரு கோவிட் -19 பரிசோதனை மையம் எரிக்கப்பட்டது மற்றும் எதிர்ப்பாளர்கள் கடலோர நகரமான உர்க்கில் போலீசார் மீது பட்டாசுகளை வெடித்தனர். இது இணையத்தில் ஒரு அறிக்கையை “[ஊரடங்கு உத்தரவு] உர்க்கில் அமல்படுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்ய அதன் சக்திக்கு அனைத்தையும் செய்யும்” என்று வெளியிட்ட பின்னர், உர்க்கில் உள்ள PVV (அதிவலது சுதந்திரத்திற்கான கட்சி) இன் கிளைதான் கலவரத்திற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. ஆம்ஸ்டர்டாம், தி ஹேக், ஐன்ட்டோவன், என்சேடே, வென்லோ மற்றும் பிற நகரங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சம்பந்தப்பட்ட கலவரம் ஏற்பட்டது. ஐன்ட்டோவனில் கலவரக்காரர்கள் நகரின் பிரதான இரயில் நிலையத்தை சூறையாடினர், மேலும் என்சேடேயின் மெடிச் ஸ்பெக்ட்ரம் ருவென்டே மருத்துவமனையில் (Enschede’s Medisch Spectrum Twente hospital) நுழைய முயன்றனர்.

கால்பந்து குண்டர்கள், போதைமருந்துக்கு அடிமையானவர்கள் மற்றும் "அரசாங்கத்தின் மீது உண்மையான கோபம் கொண்ட" மக்கள் ஆகியோர் கலகக்காரர்களில் அடங்குவர் என்று போலீசார் கூறினர், ஆனால் வெளிப்படையான அர்த்தம் அதி வலதுகள்தான். ஒரு போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்: "அவர்களில் சிலர் உண்மையில் சிறப்பு ஆடைகள் மற்றும் ஆயுதங்கள், பிளாக்ஜாக் ஆயுதங்கள், கத்திகள் அல்லது மொலோடோவ் போத்தல் வெடிபொருட்கள் உட்பட ஆகியவற்றால் நன்கு தயாரிப்பு செய்திருந்தனர். மற்றவர்கள் தயாராக இல்லாமல் கலவரத்திற்கு வருகிறார்கள்."

கலகக்காரர்களை சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்று நவ-பாசிசவாதிகள் புகழ்ந்தனர். FvD (ஜனநாயகத்திற்கான கருத்துக்களம்) கலவரக்காரர்களுக்கான அதன் ஆதரவை ட்டுவீட் செய்தது: "இது ரூட் நெதர்லாந்தை பூட்டிய இரண்டாவது இரவு. #FvD தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருக்கிறது. நமது சுதந்திரத்தின் மீதான இந்த ஏற்றுக்கொள்ள முடியாத கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு இரவும் நாங்கள் எழுந்து நின்று விடுவோம்." அவர்கள் மேலும் கூறியதாவது: "#curfew எதிராக மேலும் மேலும் மக்கள் திரும்பி வருகின்றனர். நாம் ஒன்றாக செயற்பட்டால் மட்டுமே நாம் நமது சுதந்திரத்தை மீண்டும் பெற முடியும். மார்ச் 17 அன்று FvD க்கு வாக்களியுங்கள்."

"ஊரடங்குச் சட்டம் குறித்து அமைதியாக எதிர்ப்பவர்கள் முற்றிலும் சரிதான்" என்று கேர்ட் வீல்டர்ஸ் (Geert Wilders) இன் PVV ஆனது அறிவித்தது. அதே நேரத்தில், அது புலம்பெயர்ந்தோர் கலகக்காரர்களைப் பற்றியதாக அறிவித்து வீடியோக்களை ஒளிபரப்பிய அதே நேரத்தில், "மிகவும் கடுமையாக கையாளப்பட வேண்டும்" என்றும் அது அவர்களை "கழிசடை மக்கள்" என்றும் அழைத்தது.

இந்தக் கலவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த பசுமை இடது கட்சித் தலைவர் ஜெஸ்ஸி கிளவர், டச்சு நவ-பாசிஸ்டுகள் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை போன்று நடக்கின்றனர்: "முதலில் நீங்கள் செய்திகள் மற்றும் விஞ்ஞானத்தை இழிவுபடுத்த முயற்சி செய்கிறீர்கள், பின்னர் நீங்கள் கட்டுப்பாடுகளை புறக்கணிக்குமாறு மக்களை அழைக்கிறீர்கள், இறுதியாக மற்றய மக்களை குற்றம் சாட்டுகிறீர்கள். PVV மற்றும் FvD ஆனது டொனால்ட் டிரம்ப் இன் அரிச்சுவட்டை பின்பற்றுகிறார்கள். இத்தகைய கலகமும், வன்முறையும் தான் இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவு" என்றார்.

வீல்டர்ஸை தலையிடவும் விமர்சிக்கவும் வீல்டர்ஸிடம் கிளவர் ஆழ்ந்த வேண்டுகோள் விடுத்தார். வீல்டர்ஸ் தூண்டுவதில் மும்முரமாக இருந்தார்: “PVV உர்க் தான் இந்த வன்முறையைத் தூண்டியது என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத, ஜனநாயக விரோத மற்றும் வெளிப்படையான ஆபத்தானது. தலையிடுங்கள், கேர்ட் வீல்டர்ஸ்!”

முன்னதாக, PVV க்கு கிளவர் விடுத்த வேண்டுகோள் வீல்டர்ஸை மட்டுமே ஊக்குவித்தது. கிளவரின் கருத்துக்களை "தீவிர இடது தூண்டுதல்" என்று அவர் கண்டித்தார், மேலும் PVV இன் ஆதரவாளர்களை "மார்ச் 17 அன்று அரசியல் ரீதியாக அவருடன் கையாள வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார், அதாவது வரவிருக்கும் தேர்தல்களில்.

டச்சு நவ-பாசிசவாதிகள் உண்மையில் COVID-19 மற்றும் தேர்தல்கள் இரண்டிலும் ட்ரம்பின் கொள்கையை பின்பற்றுகின்றனர். COVID-19 மீதான ஒரு கொலைகார "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை ட்ரம்ப் பின்பற்றி, ஜனவரி 6 அன்று நாடாளுமன்றத்தை கைப்பற்றவும், 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் பைடெனின் வெற்றிக்கான சான்றளிப்பை தடுக்கவும், ஜனநாயகக் கட்சியினருக்கு நிபந்தனைகளை ஆணையிடவும் ஒரு பாசிச ஆட்சி கவிழ்ப்பைத் தொடங்கினார். ஜனநாயகக் கட்சியினரின் பலவீனமான விடையிறுப்பு —அவர்கள் ஆட்சி கவிழ்ப்பின் குடியரசுக் கட்சி ஆதரவுகளுடன் "ஐக்கியத்திற்கு" அழைப்பு விட்டுள்ளனர் மற்றும் ஆட்சி சதியின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டனர்— இப்போது ஐரோப்பாவில் நவ-பாசிசவாதிகளுக்கு தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.

டச்சு நவ-பாசிசவாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் " கொள்கையின் மிகக் கடுமையான வடிவத்தை சுமத்தவும், மார்ச் 17 அன்று தங்கள் வாக்குகளை அதிகரிக்கவும் கலகங்களை தூண்டிவருகின்றனர். தேர்தல் பிரச்சாரமானது கலவரங்களின் பின்னணியில், பலத்த போலீஸ் குவிப்புகளின் பின்னணியில் நடத்தப்பட்டால், சட்டம் ஒழுங்கு மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத வெறுப்புக்கு அவர்கள் முறையீடுகள் பரந்த ஆதரவைப் பெறும் என்று அவர்கள் வெளிப்படையாகக் கணக்கிடுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ரூட் அரசாங்கத்தின் அரசியல் உடந்தை மற்றும் மாவோவாத SP மற்றும் பசுமை இடது போன்ற மத்தியதர வர்க்க கட்சிகளின் திவால்தன்மை குறித்து கணக்கிடுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த பெருந்தொற்று நோயை அரசியல் ரீதியாக குற்றம் சார்ந்த முறையில் கையாண்டவிதம் குறித்து ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் சீற்றம் அதிகரித்து வருகிறது, மற்றும் டச்சு மக்கள் 58 சதவிகிதத்தினர் ரூட் அல்லது அவரது ஊரடங்கு உத்தரவை நம்பவில்லை என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன. பெருந்தொற்று நோய் முழுவதும் அத்தியாவசியமற்ற தொழிற்துறைகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்கள் உட்பட தொழிலாளர்களை பணிகளில் ரூட் வைத்திருக்கிறார். இதன் விளைவாக, தற்போதைய ஊரடங்கு உத்தரவு உட்பட, ரூட் மட்டுப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி நடவடிக்கைகளைப் பயன்படுத்திய போதும் கூட இந்த வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

ஒரு புறத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நெதர்லாந்திற்கும் இடையேயும், மறுபுறத்தில் சீனா மற்றும் தாய்வான் ஆகியவற்றுக்கும் இடையேயும் இணையத்தில் பரவிவரும் ஒப்பீடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை முற்றிலும் அம்பலப்படுத்துகின்றன. சீன மக்கள் குடியரசில் ஆக்கிரோஷமான பொதுமுடக்கம் மற்றும் சமூக இடைவெளி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தைவானின் தொற்றை மட்டுப்படுத்தும் பயனுள்ள தொடர்புத் தடமறிதல் கண்காணிப்பு அமைப்புமுறை ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை அவர்களால் தடுக்க முடிந்தது.

சீன மக்கள் குடியரசு 89,326 நோயாளிகளையும் 4,636 இறப்புகளையும் உறுதி செய்த அதேவேளையில், மக்கள் தொகையில் பாதிக்கு குறைவானவர்களைக் கொண்ட ஐரோப்பாவில் 30 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளைக் கொண்டுள்ளதுடன் இந்த வார இறுதியில் 700,000 இறப்புக்களை கடந்து விடும். ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை 100,000 ஐரோப்பியர்கள் COVID-19 வைரஸால் இறக்கிறார்கள். தாய்வானில் 23.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இதில் 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் இறந்துள்ளனர். ஒப்பிடுகையில், நெதர்லாந்தில் 17.3 மில்லியன் மக்கள் தொகையில், வெறும் 1 மில்லியன் தொற்றுக்கள் மற்றும் 13,816 இறப்புக்களை மட்டுமே கண்டுள்ளனர். மொத்த பெருந்தொற்று நோய்களின் போது தைவானில் இறந்ததை விட நெதர்லாந்தில் ஒவ்வொரு நாளும் COVID-19 ஆல் பத்து மடங்கு அதிகமான மக்கள் இறக்கிறார்கள்.

டச்சு அரசியல் ஸ்தாபனம் முழுவதுமே அத்தியாவசியமற்ற உற்பத்தித் தொழிற்துறைகளையும் பள்ளிகளையும் திறந்து வைக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைக்கு உறுதிபூண்டுள்ளது, எனவே இலாபங்கள் வங்கிகளுக்கு கொட்டுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. ரூட் அரசாங்கம் முதல் SP வரை - அது பொதுமுடக்கத்திற்கான அழைப்புக்களை எதிர்த்தது, அதற்கு பதிலாக ஊரடங்கு உத்தரவை ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தொடங்குவதன் மூலம் அதை பலவீனப்படுத்த முன்மொழிந்தது – அனைத்து கட்சிகளும் அதிவலதுகளை கவனமாகக் கையாளுகிறது, வீல்டர்ஸ் கலகங்களை தூண்டிவிடும் போது கையாலாகத்தனமாக அவர்களுக்கு போதனையளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் மீது கோபம் அதிகரித்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

எனவே, ஒவ்வொரு நகரத்திலும் சில நூறு தனிநபர்கள் மட்டுமே கலகங்களில் ஈடுபட்டாலும், டச்சு அதிகாரிகள் ஒரு பெரிய பொலிஸ் கட்டமைப்பைக் கோருகின்றனர், ஜேர்மனிய மற்றும் பெல்ஜிய கலகப் பொலிசார் நெதர்லாந்தில் நிறுத்தபடவேண்டும் என்று கோருகின்றனர். மக்களுக்கு எதிராக இராணுவத்தை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்ததன் மூலம் வீல்டர்ஸ் ட்டுவிட்டரில் பதிலளித்தார்: "இதை நிறுத்துங்கள், அது ஒரு பகுதி உள்நாட்டு போராக மாறும் முன் தலையிடுங்கள். இராணுவத்தை நிலைநிறுத்துங்கள். இப்பொழுதே."

ஏகாதிபத்திய அரசாங்கங்கள் இந்த பெருந்தொற்று நோயின் போது உருவாக்கிய பேரழிவிற்கு சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் ஆழமான மற்றும் சக்திவாய்ந்த எதிர்ப்பு உள்ளது. COVID-19 பெருந்தொற்று நோயை கையாளுவதற்கான ஒரே முற்போக்கான வழி, விஞ்ஞானரீதியாக வழிநடத்தப்படும் கொள்கைக்கான போராட்டத்தில் முழு முதலாளித்துவ அரசு இயந்திரத்திலிருந்தும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதாகும். இது, ஒரு சோசலிச முன்னோக்கில் அரச அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதற்கான போராட்டத்தில் எதேச்சாதிகார மற்றும் பாசிச ஆட்சியை நோக்கிய துரிதமான திருப்பத்தை எதிர்ப்பதும் அம்பலப்படுத்துவதுமான தேவையையும் கூட அவசியமாகக் கொண்டிருக்கிறது.

Loading