பைடென் நிர்வாகமும் ஈரான் மீதான “அதிகபட்ச அழுத்த” தாக்குதலைத் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பைடென் நிர்வாகம் பொறுப்பேற்று ஆரம்ப நாட்களிலேயே, ஈரானிய மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்திய கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களை உள்ளடக்கிய “அதிகபட்ச அழுத்த” பிரச்சாரத்தை தொடர்வதற்கு தானும் விரும்புவதை தெளிவுபடுத்தியுள்ளது, அதேவேளை பாரசீக வளைகுடா பிராந்தியத்தை, ஏன் உண்மையில் ஒட்டுமொத்த உலகை போரில் மூழ்கடிக்கவும் அது அச்சுறுத்துகிறது.

இது, தனித்தியங்கும் B-52 Stratofortress ரக போர் விமானம் மூலம் பாரசீக வளைகுடாவில் மற்றொரு வான்வழி தாக்குதலை நடத்தி முடித்துள்ள அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (US Central Command - CENTCOM) அறிவிப்புடன் ஒத்துப்போவதாக இருந்தது. இது, நவம்பருக்கு பின்னர் ஈரானை அச்சுறுத்துவதற்கு என ஆத்திரமூட்டும் வகையில் ஆறாவது முறையாக, அதிலும் பைடெனின் தலைமைத் தளபதி அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதல் தாக்குதல் நடவடிக்கையாக கனரக குண்டுவீசி விமானங்களை ஏவி தாக்கியது. இரண்டு B-52 ரக போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்ட முந்தைய வான்வழித் தாக்குதல்களின் போது, அரபு உலகில் ஈரானின் மிகுந்த உக்கிரமான எதிரி நாடான சவுதி அரேபியாவின் F-15 படைப்பிரிவுடன் இணைந்த தனித்தியங்கும் குண்டுவீசி விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்டன.

டிசம்பர் 14, 2020, திங்கட்கிழமை, டெல்லில், வில்மிங்டனில் உள்ள The Queen திரையரங்கில், தேர்தல் கல்லூரி ஜோ பைடெனை முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் பின்னர் அவர் உரையாற்றுகிறார் (AP Photo/Patrick Semansky)

மேலும், சட்டவிரோதமாக ஈரானிய எண்ணெயை ஏற்றிச் சென்றதாக கூறப்பட்ட கப்பலை கைப்பற்றி அமெரிக்காவிற்கு கொண்டுவர அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளதாக புளூம்பேர்க் தெரிவித்தது.

பைடென் தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தெஹ்ரான் மற்றும் முக்கிய சக்திகளுக்கு இடையிலான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதாக உறுதியளித்திருந்தார். ட்ரம்ப் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக நவம்பர் 2018 இல் இரத்து செய்ததான கூட்டு விரிவாக்க செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action-JCPOA) என அறியப்படும் ஒப்பந்தம், ஈரானின் இராணுவம் சாராத அணுசக்தி திட்டத்தின் மீதான கடுமையான வரம்புகள் தொடர்புபட்ட பொருளாதாரத் தடைகளை நீக்குவதை வர்த்தகமாக்கியது. ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதன் பின்னர், ட்ரம்ப் நிர்வாகம் பழைய பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்ததோடல்லாமல், ஈரானிய பொருளாதாரத்தின் குரல்வளையை நெரித்து, நாட்டு மக்களை பட்டினியில் வீழ்த்தி கீழ்ப்படிய செய்யும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளையும் சேர்த்து திணித்தது.

பைடெனின் வெளியுறவுச் செயலராக அந்தோனி பிளிங்கன் புதன்கிழமை தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளுடன் ஈரான் முழுமையாக ஒத்துப்போக தொடங்குமானால், அமெரிக்காவும் அதை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் என்று அவர் நிபந்தனை விதித்தார், அதேவேளை தெஹ்ரானிடம் இருந்து இன்னும் கூடுதலான சலுகைகளைப் பெற வாஷிங்டன் பேரம் பேசும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

“JCPOA இன் கீழ் ஈரான் அதன் கடமைகளுக்கு முழுமையாக இணங்கி நடக்குமானால், அமெரிக்காவும் அப்படியே நடக்கும் என்று கூறுவதில் ஜனாதிபதி பைடென் மிகத் தெளிவாக இருந்தார்,” என்று வெளியுறவுத்துறை செய்தியாளர் கூட்டத்தில் பிளிங்கன் தெரிவித்தார்.

“ஆனால் அந்த நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் வெகு தொலைவில் விலகி நிற்கிறோம். ஈரான் பல கோணங்களில் ஒத்துப்போவதில்லை. அதற்கு சிறிது காலம் பிடிக்கும்… எங்களுக்காக சரியான நேரத்தில் மீண்டும் அது ஒத்துப்போகுமானால், தனது கடமைகளை அது நிறைவேற்றுகிறதா இல்லையா என்பது பற்றி பின்னர் மதிப்பிடலாம்” என்றும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மீறி சர்வதேச ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த சமயம், வாஷிங்டன் விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை அதுவேதான் நிபந்தனைகளின்றி நீக்க வேண்டும் என்று ஈரானிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை, மற்றும் சட்டவிரோதமான அமெரிக்க பொருளாதாரத் தடை விதிப்புக்களை எதிர்க்கும் எந்தவொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையையும் மேற்கொள்வதில் மேற்கு ஐரோப்பியாவைச் சேர்ந்த கையொப்பமிட்டவர்கள் கண்ட தோல்வி ஆகிய இரண்டிற்கும் பதிலளிக்கும் விதமாக அது எடுத்த நடவடிக்கைகளிலிருந்து விரைந்து பின்வாங்கும் என்று தெஹ்ரான் உறுதிபடக் கூறியது. தெஹ்ரானின் நடவடிக்கைகளில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெருமளவுகளில் திரட்டுவது, மற்றும் ஒப்பந்தம் அனுமதிப்பதைத் தாண்டி யுரேனியத்தை உயர்ந்தபட்சம் செறிவூட்டுவது, அத்துடன் ஒப்பந்தத்தின் கீழ் முறித்துக் கொள்ளப்பட்ட மேம்பட்ட முக்கிய கருத்துக்களை மீண்டும் செயல்படுத்துவது ஆகியவை அடங்கும்.

தெஹ்ரான் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, அதை ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது மறைமுகமாக கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய “நீண்ட மற்றும் வலுவான ஒப்பந்தமாக” மாற்ற வேண்டுமென வாஷிங்டன் கோரும் என்று பிளிங்கன் வலியுறுத்த முற்பட்டார், அதேவேளை புதிய வெளியுறவுத்துறை செயலர் “ஈரான் உடனான உறவில் உள்ள ஆழ்ந்த சிக்கல் நிறைந்த பல பிரச்சினைகள்” குறித்து விவரித்தது பற்றியும் அவர் பேசினார். இது, ஈரான் தனது வழமையான ஏவுகணைத் திட்டத்தையும், எண்ணெய் வளமிக்க பிராந்தியத்தின் மீதான அமெரிக்க மேலாதிக்கத்தின் நலன்களை முன்னிட்டு மத்திய கிழக்கு நாடுகளில் அதன் செல்வாக்கையும் கைவிடும்படி ஈரானை வலியுறுத்த அமெரிக்கா முனையும் என்பதைக் குறிப்பிடுகிறது.

ஈரானிடமிருந்து சலுகைகளுக்காக அமெரிக்கா முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜவாத் ஸரீஃப், வியாழக்கிழமை, பிளிங்கனுக்கான “உண்மையான பரிசோதனை” என்று அவர் விவரித்ததை ட்வீட் செய்தார். “JCPOA ஐ மீறியது” மற்றும் “ஈரானியர்களுக்கு வழங்கப்படும் உணவு/மருந்துகளைத் தடுத்தது”, மேலும், “ஒப்பந்தத்தை முறையாக பின்பற்றும்” ஈரானை தண்டிக்கிறது, அது தான் அமெரிக்கா என்று அவர் சுட்டிக்காட்டினார். ஈரான், “JCPOA ஐ கடைப்பிடித்தது” என்றும், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக “முன்கூட்டிய தீர்வு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்தது” என்றும் அவர் வலியுறுத்தி கூறினார்.

“இப்போது, முதல் படி நடவடிக்கையை யார் எடுக்க வேண்டும்?” என்று சரிஃப் கேட்டார். முந்தைய ட்வீட்டில் தெஹ்ரானின் நிலைப்பாட்டை அவர் இவ்வாறு தெளிவுபடுத்தினார்: “எந்தவித காரணமும் இல்லாமல் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது அமெரிக்கா தான். அதன் தவறுக்கு அது தான் தீர்வு காண வேண்டும்; பின்னர் ஈரான் பதிலளிக்கும்.”

இதற்கிடையில், ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர், 1.4 மில்லியன் நோய்தொற்றுக்களையும், கிட்டத்தட்ட 60,000 இறப்புக்களையும் விளைவித்து, பிராந்தியத்தின் மற்ற நாடுகளை விட ஈரானை கடுமையாகத் தாக்கிய கோவிட்-19 பெருந் தொற்றுநோயை எதிர்த்துப் போராடத் தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான நாட்டின் திறனைக் கட்டுப்படுத்திய பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு பைடென் நிர்வாகத்திடம் நேரடியாக முறையிட்டார்.

“[பைடென்] நிர்வாகம் முந்தையதைப் போல விஞ்ஞானத்திற்கு விரோதமாக இருக்காது என்று கூறப்படுவதால்… கொரோனா வைரஸ் மற்றும் உடல்நலம் மற்றும் உணவு ஆகியவற்றுக்காக போராடவும், மற்றும் வங்கித் தடைகளை விரைவாக நீக்கவும் ஈரானின் சொந்த அந்நிய செலாவணி வளங்களை மாற்றுவதற்கு ஒருவர் எதிர்பார்க்கிறார்,” என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் அலி ரபீ அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

குடியரசுக் கட்சியுடனான “ஒற்றுமை”க்கு ஈரான் விடுக்கும் வேண்டுகோளுக்கு, பைடென் நிர்வாகம், ட்ரம்ப் விதித்த “அதிகபட்ச அழுத்த” பிரச்சாரத்தை விரைவாகவும், கூர்மையாகவும் மாற்றியமைக்க சிறிதளவு வாய்ப்பையே கொண்டுள்ளது. வெளிநாட்டு உறவுகள் தொடர்பான செனட் குழுவின் வரவிருக்கும் தலைவரான செனட்டர் ராபர்ட் மெனண்டெஸ் உட்பட, முன்னணி வலதுசாரி காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினர் கூட, ஈரானுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் எதிர்க்கிறார்கள்.

ஈரானுக்கு எதிரான தற்போதைய “அதிகபட்ச அழுத்த” நடவடிக்கையை மாற்ற எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்னர் இஸ்ரேலுடன் “சேர்ந்து ஈடுபட” பைடென் உறுதியளித்துள்ளார், ஏனென்றால் புதிய நிர்வாகம் இஸ்ரேலின் பாதுகாப்பை “புனிதமானதாக” கருதுகிறது என்று பிளிங்கன் திரும்ப திரும்ப கூறியுள்ளார்.

டெல் அவிவ், JCPOA க்கு அமெரிக்கா மீளத் திரும்புவதை மட்டும் எதிர்க்கவில்லை, மாறாக, ஈரான் மற்றும் அதன் அணுசக்தி நிலையங்கள் மீது இராணுவ ரீதியாக தாக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதையும் எதிர்க்கிறது. செவ்வாயன்று ஒரு போர்க்குணமிக்க உரையை வழங்கிய இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) புதிய தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் அவிவ் கொச்சாவி, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவது இஸ்ரேலுக்கு “சகித்துக்கொள்ள முடியாத அச்சுறுத்தலாகும்” என்று அறிவித்து, எதிர்ப்பை நேரடியாக வெளிப்படுத்தினார். மேலும், “தற்போதைய ஒப்பந்தத்தையொத்த எதுவும் மோசமானதே, அதை எங்களால் அனுமதிக்க முடியாது,” என்றும், ஈரானைத் தாக்குவதற்கு புதிய “செயல்பாட்டுத் திட்டங்களை” தயாரிக்க “IDF” க்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

குறிப்பாக, ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ கட்டமைப்பையும், அத்துடன் மத்திய கிழக்கு எங்கிலுமான பென்டகனின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வரும் CENTCOM இன் தளபதியான ஜெனரல் கென்னெத் மெக்கென்ஸி (Gen. Kenneth McKenzie) தான் பைடென் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யும் முதல் உயர்மட்ட அமெரிக்க அதிகாரியாவார். கொச்சாவி மற்றும் IDF இன் பொது ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் வியாழக்கிழமை அங்கு வந்து சேர்ந்தார்.

இந்த விஜயம், பென்டகன் அமைதியாக இஸ்ரேலை ஐரோப்பிய கட்டளையகத்தின் வரம்பிலிருந்து CENTCOM க்கு மாற்றிய பின்னர் நடப்பதானது, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் மேலும் நெருக்கமான அதன் இராணுவ ஒத்துழைப்புக்கு ஏதுவாகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களுக்கு வலதுசாரி அரபு எண்ணெய் முடியாட்சிகள் மற்றும் சர்வாதிகாரங்களின் ஆதரவைப் பெற இஸ்ரேல் CENTCOM இல் இருந்து விலக்கப்பட்டிருந்தது. முன்னர், பாலஸ்தீனிய மக்களை இஸ்ரேல் அடக்கி ஒடுக்கியதால் அதனுடனான இராணுவ உறவுகளை இந்த ஆட்சிகள் முறையாக எதிர்த்தன, பின்னர் அவை இந்த பாசாங்கை கைவிட்டன, மேலும் அவைகளில் பல ஈரானிய எதிர்ப்பு அச்சை உருவாக்கும் நலன்களுக்காக டெல் அவிவ் உடனான அமெரிக்க நிதியுதவி பெற்ற “இயல்பாக்க” ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

பேச்சுவார்த்தைக்காக, நிர்வாக மாற்றத்திற்குப் பின்னர் வாஷிங்டனுக்கு வருகை தரவுள்ள முதல் உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரியாக, இஸ்ரேலின் மொசாத் (Mossad) உளவு நிறுவனத்தின் தலைவர் யோசி கோஹன் இருப்பார், இவர் ஈரான் கேள்வி நேரத்தின்போது பைடெனை சந்திப்பார்.

இஸ்ரேலிய அரசாங்கம் ஆத்திரமூட்டும் வகையில் ஈரானை தாக்கி பேசுவதற்கு மார்ச் மாத தேர்தல்கள் ஓரளவு தூண்டின —அரிதாக இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக நடந்த தேர்தல்கள்— இது தொடர்பாக பல ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக விசாரணையை எதிர்கொள்ளும் நெதன்யாகு, தனது வலதுசாரி தளத்திற்கு முறையிடுகிறார். இருந்தாலும், ஈரானுடன் இணைந்த இலக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியான வான்வழி தாக்குதல்களை டெல் அவிவ் நடத்தி முடித்துள்ள நிலைமையின் கீழும், மற்றும் நவம்பரில் ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிசாதே மொசாட் படுகொலை செய்ய ஏற்பாடு செய்த நிலைமையின் கீழும் இது உண்மையில் சிறிதும் குறைவின்றி போருக்கான அச்சுறுத்தலை உருவாக்கியது.

பைடென் நிர்வாகத்தின் கீழும் மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க்கொள்கை வெடிப்புறுவதற்கான அச்சுறுத்தல் குறையாது. வாஷிங்டனில் அதிகார பதவிகளுக்கு திரும்பிய பிளிங்கன் மற்றும் பலரும், லிபியா மற்றும் சிரியா இரண்டிலும் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா திட்டமிட்ட போர்களை கட்டமைப்பவர்களாக இருந்தனர்.

மேலும், சீனாவுடனான அமெரிக்க மோதலின் முப்பரிமாணத்தின் ஊடாகவும், மற்றும் சீனாவின் பெரும்பகுதி எரிசக்தி இறக்குமதிகளை வழங்கும் மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை பாதுகாக்கும் மூலோபாய கட்டாயத்தின் ஊடாகவும் அவர்கள் ஈரானைப் பார்க்கிறார்கள்.

ட்ரம்பின் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான சீன விரோதக் கொள்கை ஒபாமாவின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” திட்டத்தின் மூத்த அதிகாரிகளால் பின்பற்றப்படுவது தீவிரமாகி வருகிறது. பெய்ஜிங்கை போருக்கு இழுக்கும் புதிய நிர்வாகத்தின் போக்கு பற்றி, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக பைடென் பரிந்துரைத்த லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட் தெளிவாக வெளிப்படுத்தினார், மேலும், சீனா ஒரு “மூலோபாய விரோதி” என்றும், இதன் நடவடிக்கைகள் “நமது பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன, அவை நமது மதிப்புக்களை அச்சுறுத்துகின்றன, மேலும் அவை நமது வாழ்க்கை முறையை அச்சுறுத்துகின்றன” என்றும் புதன்கிழமை ஒரு செனட் குழுவிற்கு இவர் தெரிவித்தார்.

Loading