நேப்பியர் இராணுவ குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்து பிரித்தானிய அரசாங்கம் புகலிடம் கோருபவர்களை மிருகத்தனமாக நடத்துவதை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேப்பியர் இராணுவ குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்து, நூற்றுக்கணக்கான புகலிடம் கோருபவர்களை கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம் எத்தகைய கொடூரமான நிலைமைகளில் வைத்துள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

வெள்ளிக்கிழமை மதியம் ஏற்பட்ட தீ விபத்து, அங்கிருந்த கட்டிடங்களை அழித்து, இராணுவ குடியிருப்புகளில் தோராயமாக வசித்து வந்த 300 பேரை மின்சாரம், சூடான நீர் அல்லது குடிநீர் வசதி எதுவுமில்லாத நிலைமைகளுக்குள் தள்ளியது. இந்த கொடூர நிலைமைகளின் பாதிப்புக்குள்ளான பல புகலிடம் கோருபவர்களுக்கு கோவிட்-19 நோய்தொற்றும் ஏற்பட்டிருந்தது, இராணுவ குடியிருப்புகளில் நோய்தொற்று பெரிதும் வெடித்து பரவியதையடுத்து ஜனவரியில் குறைந்தது 120 பேருக்கு நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. நோய்வாய்ப்பட்டவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டனர்.

முகாமின் நிலைமைகள் நோய்தொற்றுக்களை வெடித்து பரவச் செய்யும் சூழலை கொண்டிருந்தன. முகாமில் 16 குடியிருப்பு தொகுதிகள் உள்ளன, தொகுதிக்கு 28 பேர் வரை தங்கக்கூடிய தங்குமிடங்கள் அங்கிருந்தன, இவற்றில் படுக்கைகளை பிரிக்க தொங்கும் தடுப்புக்கள் மட்டுமே இருக்கும். ஒவ்வொரு தொகுதியும் இரண்டு கழிப்பறைகள் மற்றும் குளிக்கும் வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும், மற்றும் இரண்டு மேசைகளைச் சுற்றி ஒரே நேரத்தில் 13 பேர் கூடி அமர்ந்து உணவு உண்ணக்கூடிய பொதுச் சிற்றுண்டி சாலையில் தான் அவர்கள் உண்பார்கள்.

நேப்பியர் இராணுவ குடியிருப்புகளில் தீ பரவும் காட்சி (credit: Care4Calais)

குடியிருப்பாளர்கள் சுகாதாரம், மற்றும் உளவியல் சிகிச்சைகள் உட்பட மருத்துவ நலன்களை அணுக முடியாமை பற்றிய தங்களது கவலைகளை பலமுறை எழுப்பியுள்ளனர். பல தற்கொலை முயற்சிகள் மற்றும் சுய-தீங்கு விளைவித்துக் கொள்ளும் வழக்குகள் பற்றி அவர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் நான்கு மாதங்களாக இந்த நிலைமைகளில் வாழ்ந்து வருகின்றனர், உண்மையில் இவர்களது புகலிட கோரிக்கைகள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்திற்கு அளித்த சமீபத்திய இரகசிய அறிக்கையில், செஞ்சிலுவைச் சங்கம், நூற்றுக்கும் மேற்பட்ட தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ள வேல்ஸில் உள்ள பெனல்லி இராணுவ குடியிருப்புகளின் இதையொத்த திகிலூட்டும் நிலைமைகள் பற்றி விவரித்திருந்தது.

டசின் கணக்கான மனிதாபிமான மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமை அமைப்புக்களும், சட்ட மற்றும் மருத்துவ நிபணர்களும் இத்தகைய படையினர் குடியிருப்புக்களை மூடும்படி கோரியுள்ளனர். புகலிடம் கோருபவர்களும் இந்த கொடூரமான நிலைமைகளுக்கு எதிராக பலமுறை போராட்டங்களை நடத்தியுள்ளனர். சில குடியிருப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டம் செய்தனர், மேலும் பலர் நெரிசலான தங்குமிடங்களில் தங்கி நோய்தொற்றும் ஆபத்துக்குள்ளாவதை விட, உறைய வைக்கும் பனியில் வெளியில் படுத்து உறங்கி போராடினர். கடந்த டிசம்பரில், பெனல்லியில் உண்ணாவிரதம் இருந்த ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க நேரிட்டது.

பல ஆர்ப்பாட்டங்கள் கோவிட் நோய்தொற்று வெடிப்பதற்கான அபாயங்கள் குறித்து எச்சரித்துள்ளன. ஈரானைச் சேர்ந்த நேப்பியர் குடியிருப்பாளரான ஜாஃபர், ஜனவரி தொடக்கத்தில், “வைரஸ் பரவுவதற்கான பெரும் அபாயம் இங்குள்ளது” என்று கூறினார்.

நோய்தொற்றுக்கள் தீவிரமாக பரவத் தொடங்கியபோது, அரசாங்கம் புகலிடம் கோருபவர்களை பழி கூறி, அவர்களை முகாம்களிலேயே அடைத்து வைத்து அதற்கு பதிலிறுத்தது. குடியிருப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொடுமைக்கு மத்தியில் “எந்த சூழ்நிலையிலும் முகாமை விட்டு வெளியேறக் கூடாது” என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. சிற்றுண்டிச் சாலை மூடப்பட்டது, என்றாலும் குடியிருப்பாளர்கள் வரிசையில் நின்று உணவை பெற வேண்டியிருந்தது, சூடான உணவுகளுக்கு மாறாக சான்ட்விச்சுக்கள் தான் அவர்களுக்கு வழங்கப்பட்டன. தங்குமிடங்களை மாற்றுவதற்கும் எதுவும் செய்யப்படவில்லை.

குடிவரவு இணக்கத்துறை அமைச்சர் கிறிஸ் பிலிப் வெளியிட்ட கண்டிக்கத்தக்க அறிக்கையில், “பலமுறை கேட்டுக்கொண்ட பின்னரும், இதற்கு முன்னர் அவர்களில் பலர் பரிசோதனை செய்துகொள்ள மறுத்ததுடன், தமக்குத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது சமூக இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடிக்கவோ அவர்கள் மறுத்துவிட்டது நம்பமுடியாத ஏமாற்றத்தை அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

இதற்கு புகலிடம் கோருபவர்கள் அளித்த பகிரங்க கடிதம், “நேப்பியர் படையினர் குடியிருப்புகளில் நாங்கள் மிக மிக மோசமாக உளவியல் ரீதியாக பாதிப்படைந்தும், சரீர ரீதியாக நோய்வாய்ப்பட்டும் கொண்டிருக்கையில், உள்துறை அலுவலகம், குறிப்பாக அதன் செயலாளர் பிரீதி பட்டேல், மற்றும் குடிவரவு விவகார அமைச்சர் கிறிஸ் பிலிப் ஆகியோர், வேண்டுமென்றே எங்களை புறக்கணித்ததுடன், இந்த இராணுவ முகாமில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரழிவை தங்களால் முடிந்தவரை மூடிமறைக்கவும் முயற்சித்தனர்” என்று தெரிவித்தது.

மேலும், “நாங்கள் அனைவரும் ஒரே இடத்தை பகிர்ந்து கொள்கிறோம், ஒரே அறையில் சுவாசிக்கிறோம் என்ற நிலையில், நாங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இங்கு எந்தவொரு வழியும் கிடையாது” என்று அது தொடர்ந்து தெரிவித்தது.

நசுக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமைகளைப் போல, புகலிடம் கோருபவர்களின் நிலைமைகள் மீது கவனத்தை ஈர்த்து இந்த கடிதம் இவ்வாறு நிறைவடைந்தது: “எங்களது பிறந்த நாட்டை விட்டு வெளியேற நாங்கள் எவரும் இதை தேர்வு செய்யவில்லை, எங்களது குடும்பத்தையும், அன்புக்குரியவர்களையும் விட்டுவிட்டு வரவும் நாங்கள் எவரும் இதை தேர்வு செய்யவில்லை. எங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்ளவே இந்த நாட்டிற்கு நாங்கள் வந்து சேர்ந்திருக்கிறோம்…”

“இங்கே தந்தைகள், மகன்கள் மற்றும் கணவர்கள் உள்ளனர். மேலும், தாதிகள், ஆசிரியர்கள், பொறியாளர்கள் மற்றும் திறமைசாலிகள் உள்ளனர், என்றாலும் நாங்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்லது கைதிகளைப் போல நடத்தப்பட்டு வந்தோம்.”

இந்த தீ விபத்துக்கு அரசாங்கம் மிக மோசமாக பதிலிறுத்தது. இது இராணுவ குடியிருப்புகளில் தொடர்ந்து துன்பங்களை விளைவித்தது என்று கென்ட் பொலிசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை மதியம் தீயணைப்பு படையினருடன் கூட கலகப் பிரிவு பொலிசாரும் அணிதிரட்டப்பட்டனர், பின்னர் 14 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்த வாரம் இறுதியில் அகதிகளுக்கு உணவு மற்றும் போர்வைகளை வழங்க முயற்சித்த தன்னார்வலர்கள், தங்களை வழங்கவிடாமல் பொலிசார் திருப்பியனுப்பியதைப் பற்றி கூறினர், அவர்கள் அதை ஒரு குற்றகரமான சம்பவமாக கருதியதாக தன்னார்வலர்கள் கூறினர்.

உள்துறை செயலாளர் பிரீதி பட்டேல் மோசமான தேசியவாத வசைபாடலை வெளிப்படுத்தி, “நேப்பியர் படையினர் குடியிருப்புகளில் ஏற்பட்ட சேதமும் அழிவும் மட்டுமல்லாமல், புகலிடக் கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இந்த தங்குமிடத்தை வழங்கும் நாட்டின் வரி செலுத்துவோருக்கு ஆழ்ந்த அவமதிப்பை ஏற்படுத்துவதும் கூட திகிலூட்டுவதாக உள்ளது” என்று அறிவித்தார்.

மேலும், “இந்த மாதிரியான செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதுடன், பொது சொத்துக்களை அழிக்கும், ஊழியர்களை அச்சுறுத்தி உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் நபர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கு உள்துறை அலுவலகம் உதவும்” என்றார்.

மேலும், “இந்த இடம் முன்னர் எங்களது துணிச்சல்மிக்க இராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குவதற்கு இடமளித்துள்ளது. அப்படிப்பட்ட இந்த இடம் இந்த தனிநபர்களுக்கு போதுமானதில்லை என்று கூறுவது அவமானமாக உள்ளது… எங்களது உடைந்துபோன புகலிட அமைப்புமுறையை நான் சரிசெய்கிறேன், அந்த உறுதிப்பாட்டை வழங்க இந்த ஆண்டு சட்ட மசோதா கொண்டுவரப்படும்” என்றும் தெரிவித்தார்.

Care4Calais எனும் அகதிகள் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் கிளேர் மோஸ்லீ, “இந்த சம்பவம் பற்றிய உண்மைகள் இன்னும் அறியப்படாதபோது ஒரு பிரித்தானிய உள்துறை செயலாளர் சாதாரண மக்கள் மீது குற்றும் சாட்டுவதும், அவர்களை அவதூறாகப் பேசுவதும் அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. இது, ஒரு மூத்த அரசாங்க அமைச்சர் வதந்திகள் மற்றும் கேள்விபேச்சுக்களை கேட்டு செயலாற்றும் சாக்கடை மட்டத்தில் இருப்பதை காட்டுகிறது என்பதுடன், சமூகம் முழுவதும் கவலையும் பதட்டமும் அதிகரிக்கும் வேளையில், அவர் தன்னைப் பற்றித்தான் வெட்கப்பட வேண்டும்” என்று கார்டியனுக்கு தெரிவித்தார்.

“என்றாலும் தவறு எதுவுமில்லை, இது வெறும் கவனக்குறைவு அல்ல, முற்றிலும் உணர்ச்சிகரமான பதிலாக உள்ளது. நேப்பியர் படையினர் குடியிருப்புகளில் தெளிவாக என்ன நடக்கவிருக்கிறது என்பது பற்றி அவருக்கு விடுக்கப்பட்ட பல எச்சரிக்கைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்ப ஒரு தவறான, சந்தர்ப்பவாத புகைத் திரையை போடுவதாக உள்ளது” என்றும் தெரிவித்தார்.

பட்டேலின் கருத்துக்கள், டோரி கட்சி எவ்வாறு அரசியல் ரீதியாக தீவிர வலதுசாரி, பாசிச சக்திகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாக உள்ளது. பயன்படுத்தப்படாத இராணுவ குடியிருப்புக்களை புகலிடம் கோருவோர் தங்க பயன்படுத்துவது தொடர்பாக Independent பார்த்த உள்நாட்டு அலுவலக ஆவணங்கள், நலன்புரி தேவைகளுக்காக காத்திருக்கும் பிரிட்டிஷ் குடிமக்களுக்கு அவை “ஏற்றவை அல்ல” என்று தெரிவிக்கிறது. இந்த பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு “குறைந்த பெருந்தன்மையுடன்” தங்குமிடம் வழங்கும் நடைமுறை, “புலம்பெயர்வை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்துகிறது”, அதேவேளை “புகலிட அமைப்புமுறை மீதான பொதுமக்கள் நம்பிக்கையை கீழறுக்கக் கூடாது” என்று அவர்கள் வாதிட்டனர்.

“பொதுமக்கள் நம்பிக்கை” என்பது உள்துறை அலுவலகத்தை பொறுத்தவரை பிரிட்டனின் தீவிர வலதுசாரிகளின் ஆதரவை பெறுவதாகும். இராணுவ குடியிருப்புக்களை புகலிட மையங்களாக பயன்படுத்தும் முடிவு, புகலிடக் கோரிக்கையாளர்களை ஒரு ஹோட்டலில் தங்க வைக்கும் முயற்சியில் “நடைமுறைத் தோல்வி” கண்டதற்கு அரசாங்கம் மன்னிப்புக் கேட்டு ஒரு மாதத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்டது. முன்னாள் ஐக்கிய இராஜ்ஜிய சுதந்திரக் கட்சி, பிரெக்ஸிட் மற்றும் தற்போது சீர்திருத்த இங்கிலாந்து கட்சியின் (Reform UK Party) தலைவர் நைகெல் ஃபராஜ், “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” ஹோட்டலில் வசிப்பதாகக் கூறி தனிப்பட்ட முறையில் காணொளி வெளியிட்டதற்கு இது பதிலிறுத்தது.

ஃபராஜின் நடவடிக்கை பாசிச மிரட்டல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இதில் Britain First போன்ற குழுக்கள், புலம்பெயர்ந்தவர்களை விசாரிப்பதற்கும் துன்புறுத்துவதற்கும் ஹோட்டல்களைத் தாக்கின.

இராணுவ குடியிருப்புக்கள் தஞ்சம் கோருவோருக்கான வசிப்பிடங்களாக ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஓய்வுபெற்ற ராயல் கடற்படை அட்மிரல், தொழிற் கட்சி சகாவான Lord West, புலம்பெயர்ந்தோரை “முகாம் அல்லது ஏதோவொரு நெருக்கமான இடத்தில்” தங்க வைக்க வேண்டும் என்று கூறினார்.

அடிப்படை மனித உரிமைகளை அழிக்கும் மற்றும் பாசிச அரசியலைத் தழுவி நிற்கும் அரசாங்கத்தின் தன்மை, தணிக்கையை அதிகரிக்கும் பிரச்சாரத்துடன் இணைந்தது. தீ விபத்துக்கு ஒரு நாள் முன்னர், இராணுவ குடியிருப்புகளுக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தை ஊடகவியலாளர் Andy Aitchison புகைப்படம் எடுத்திருந்தார், அவை வாயிற்கதவுகளில் போலியாக இரத்தம் தெளிக்கப்பட்டிருந்ததையும், “இப்போது நேப்பியரை மூடு” மற்றும் “உங்கள் கைகளில் இரத்தம் இருக்கும்” என்ற வாசக அடையாளங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்ததையும் காட்டியது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டன.

ஆறு மணிநேரங்களுக்குப் பின்னர், குற்றவியல் சேதம் ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் Aitchison ஐ அவரது வீட்டில் வைத்து ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர். அவரது தொலைபேசியும், கேமரா மெமரி கார்டும் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் அவர் பிணையில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் ஏழு மணிநேரம் வரை காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார். மேலும், வழக்கு முடிவடையும் வரை நேப்பியருக்கு திரும்ப வேண்டாம் என்று அவரிடம் கூறப்பட்டுள்ளது.

“அவர்கள் மீது ஒரு ஒளி பாய்ச்சப்பட்டது போல இது உள்ளது, மேலும் தாக்கும் பெரும் சம்மட்டியை அவர்கள் வெளியே எடுத்துவிட்டனர். இது தணிக்கை: நீங்கள் வரம்பு மீறுவீர்களாயின், நாங்கள் உங்களை தடுத்து நிறுத்துவோம்” என்று Independent க்கு Aitchison தெரிவித்தார்.

இது, நேப்பியரில் என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல்களை அடக்குவதற்கான முதல் முயற்சி அல்ல. கடந்த நவம்பரில், இராணுவ குடியிருப்புக்களில் இருந்த தன்னார்வலர்கள், குடியிருப்புக்களில் அவர்கள் கவனித்த நிலைமைகளைப் பற்றி வெளியே பேசவிடாமல் தடுக்கும் வகையில், அதிகாரபூர்வ இரகசிய சட்டங்களின் (Official Secrets Act) ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட இரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்படி கேட்கப்பட்டனர்.

புகலிடம் கோருபவர்களை அரசாங்கம் நடத்தும் விதம் குறித்து அங்கு பெரும் பொதுமக்கள் எதிர்ப்பு வெடித்துள்ளது. “புகலிட முகாம்களை மூடு, உயிர்களைக் காப்பாற்று”, என்று கோசமிட்ட சித்திரவதையிலிருந்து சுதந்திரம் (Freedom from Torture) என்ற பிரச்சாரக் குழுவின் மனு, 21,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களையும் அகதிகளையும் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டமைப்பது அவசியமாகிறது. புகலிடம் கோருவோர் மீதான தாக்குதல் பாசிச வடிவிலான ஆட்சியை நோக்கிய உலகளாவிய திருப்பத்தின் ஒரு பகுதியாக உள்ளது, அதில் ஒன்றாக ஜனவரி 6 அன்று அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு சதி மிகவுயர்ந்த வெளிப்பாடாகும். இந்த திருப்பம், சமூக சமத்துவமின்மையை கடுமையாக மோசமாக்கிய தொற்றுநோய் நெருக்கடியுடன் பிணைக்கப்பட்டுள்ளது, இது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்பட்டதையும், மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது ஒரு புதிய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கான நிர்ப்பந்தம் உருவானதையும் கண்டது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த சக்தியால் மட்டுமே இந்த ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், மற்றும் அனைத்து தொழிலாளர்களின் உரிமையையும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த நாட்டிலும் ஒரு நல்ல வாழ்க்கைத் தரத்தை நோக்கி மேம்படுத்தவும் முடியும்.

Loading