கோவிட்-19 பெருந்தொற்று நோய் தொடர்பாக நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் உயிரியல்சார் அறநெறி பேராசிரியர் டாக்டர் ஆர்தர் காப்லன் உடனான ஒரு நேர்காணல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் (NYU) லங்கோன் மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் வில்லியம் எஃப் மற்றும் வேர்ஜினியா கன்னோலி மிட்டி உயிரியல்சார் அறநெறி பேராசிரியரும் மற்றும் மருத்துவ அறநெறி பிரிவின் ஸ்தாபக இயக்குநருமான டாக்டர் ஆர்தர் காப்லனுடன் கோவிட்-19 பெருந்தொற்று நோய் தொடர்பாக உரையாட இந்த மாதம் தொடக்கத்தில் உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) ஒரு வாய்ப்பு கிடைத்தது. காப்லன் மாசசூசெட்ஸ் மாகாண ஃப்ரேமிங்ஹாம் நகரில் பிறந்து வளர்ந்தவர், 1979 ஆம் ஆண்டில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்தின் வரலாறு மற்றும் மெய்யியலில் இவர் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றார்.

டாக்டர் ஆர்தர் காப்லன் (ஆதாரம் உலக சோசலிச வலைத் தளம்)

1989ஆம் ஆண்டில், மருத்துவ அறநெறி மற்றும் யூதப் படுகொலை (ஹோலோஹோஸ்ட்) பற்றிய உயிரியல்சார் அறநெறி மாநாட்டு மையத்தை இவர் ஒழுங்கமைத்தார். 1991ஆம் ஆண்டில், Tuskegee Syphilis ஆய்வை அம்பலப்படுத்துவதில் இவர் செய்த பணிகள், அப்போது மத்திய சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் செயலராக இருந்த லூயிஸ் சில்லிவனிடம் மன்னிப்புக் கோர வைத்தது.

ஃபிலடெல்பியாவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அநேகமாக இரண்டு தசாப்தங்கள் பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டில் நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் இவர் பணியமர்த்தப்பட்டார். கருணை அடிப்படை பயன்பாட்டின் கீழ் மருத்துவமனை பரிசோதனைகளைத் தாண்டி சோதனைக்கான மருந்துகளை சமமாக பகிர்ந்தளிக்க ஜோன்சன் & ஜோன்சன் போன்ற மருந்து நிறுவனங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளில் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Benjamin Mateus: மாலை வணக்கம், டாக்டர் கேப்லான். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் தங்களது பணி பற்றி எங்களுக்கு கூற முடியும் என்று நான் நம்புகிறேன். பெரும்பாலான மக்களுக்கு உயிரியல்சார் அறநெறி துறை பற்றி தெரியாது என்றே நினைக்கிறேன்.

Arthur Caplan: மாலை வணக்கம். கண்டிப்பாக. நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் நான் நிறுவிய ஒரு திட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். இது அனேகமாக ஏழு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது, அடிப்படையில் இதன் நோக்கம், மருத்துவ மாணவர்களுடன் அறநெறி சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே. எங்களிடம் உயிரியல்சார் அறநெறி துறையில் முதுநிலை பட்டப்படிப்புக்கான திட்டமும் உள்ளது.

இந்த துறை சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. செய்ய வேண்டிய அல்லது செய்யக்கூடாத விடயங்கள் பற்றிய ஒருமித்த கருத்துக்களை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம், அதாவது அது ஆராய்ச்சி அல்லது தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மை தொடர்புபட்ட சிக்கல்களுக்கு ஒப்புதல் அளிக்கிறதா எனப் பார்க்கிறோம். உதாரணமாக, மூளைச்சாவு வரையரைகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி கூறலாம் – ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்படும்போது, உங்களால் அவரது இதயத்தையும், நுரையீரல்களையும் பாதுகாக்க முடியுமானால், அதை நீங்கள் செய்வீர்களா? என்பது போன்றது.

இதை நாங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கிறோம். உயிரி நகலாக்கம் (cloning), மூல உயிரணு (stem cell) ஆராய்ச்சி, மற்றும் மனித இன மரபணு விருத்தியியல் (eugenics) போன்ற சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகள் இல்லாத பகுதிகள் பற்றி நாங்கள் விவாதிக்கிறோம். மேலும், திருநங்கையருக்கான, குறிப்பாக சிறார்களுக்கான அறுவை சிகிச்சைகள் பற்றி கூட நாங்கள் விவாதிக்கிறோம்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலில் யார் செல்கிறார்கள் என்பது பற்றி, அல்லது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (Food and Drug Administration) இன்னும் அங்கீகரிக்கப்படாத மருந்தை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி பெற வேண்டும் என்பது பற்றி அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் நோயாளி குழுக்களுக்கு நாங்கள் ஆலோசனைகளும் வழங்குகிறோம்.

BM: அநேகமாக உங்கள் துறையிலுள்ள அனைவரது சிந்தனையிலும் இருக்கும் பெருந்தொற்று நோய் விவகாரம் குறித்து, குறிப்பாக வெளிவந்துள்ள தடுப்பூசிகள் குறித்து, சுகாதார பராமரிப்புப் பணியாளர்கள் மத்தியில் நாங்கள் காணும் தடுப்பூசி தயக்கம் பற்றி உங்களால் விளக்க முடியுமா? அந்த சிக்கலை எது தூண்டுகிறது?

AC: இது ஒரு பெரிய பிரச்சினை தான். மருத்துவமனை ஊழியர்களிடையே தடுப்பூசி மறுப்பு விகிதங்கள் அதிகளவாக 60 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று கிளீவ்லாண்ட் பகுதியிலுள்ள எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் கூறியதைக் கேட்டேன். இது விளக்கப்படத்திலிருந்து சற்று விலகியது என்றாலும், விடயங்கள் அவ்வளவு பூதாகரமாக மாறும் என்று எவரும் நினைக்கவில்லை. எனவே, தடுப்பூசியை மறுப்பது உண்மையான பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது, ஏனென்றால் மருத்துவமனை ஊழியர்களுக்கோ, அல்லது ஆசிரியர்களுக்கோ தடுப்பூசி போடப்படவில்லை என்றால், அவர்கள் தங்கள் வேலையை இழக்கலாம், நோயாளிகளை கவனிக்க மருத்துவ ஊழியர்களோ, அல்லது குழந்தைகளுக்கு கற்பிக்க ஆசிரியர்களோ கிடைக்காமல் போவார்கள், அதனால் நீங்கள் பள்ளிகளை மூட வேண்டியிருக்கும்.

தொற்றுநோய் பரவுவதை தடுப்பூசிகள் தடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். உண்மையில் அது இன்னும் நமக்குத் தெரியவில்லை. ஆனால், அது தடுக்கும் என்பது தான் பந்தயம், எனவே தான் நீங்களும் தடுப்பூசி போட விரும்புகிறீர்கள், ஏனென்றால் அதனால் மற்றவர்களுக்கு, குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் வைரஸால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பலமில்லாதவர்களுக்கு தொற்றுநோயை பரப்ப மாட்டீர்கள்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் பற்றிய ஆய்வில், தடுப்பூசிகள் விரைந்து வெளிவந்துள்ளது பற்றியும், மற்றும் அரசியல் காரணங்களுக்காக ட்ரம்ப் தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்தியது பற்றியும் மற்றும் தங்களது பாதுகாப்பு குறித்த தரவு சரியாக இல்லை என்பது பற்றியும் மக்கள் கவலைப்படுவது தெரிய வருகிறது. அது உண்மை என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அது பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

இப்போது, தரவு நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். ட்ரம்ப் அவற்றை விநியோகிக்க அவசரப்படுத்தியதால் மட்டும் அவற்றிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். தரவு நன்றாக இருந்ததால் தான் அவற்றிற்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அவர், தனது தனிப்பட்ட பாணியில், நீங்கள் இந்த விடயங்களை FDA (Food and Drug Administration ) மூலமாக அதன் கைகளை முறுக்கித்தான் பெற வேண்டியிருந்தது என்பது போன்ற விடயங்கள் மக்களை பதட்டப்படுத்துகிறது என்று வழமை போல் கூறி, அவர் அதிக தீங்கை விளைவித்தார்.

தடுப்பூசிகள் எங்களுக்கு தேவையில்லை அல்லது அது ஒரு ஏமாற்று வேலை என்று கூறி தடுப்பூசிகளை வெறுமனே விரும்பாத மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை பெரிதும் பரவுச் செய்யும் ஒரு தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் இங்கே உள்ளது. அமெரிக்க கபிட்டலை (நாடாளுமன்றம்) தாக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவராக இருந்த ஒரு மருத்துவர், இத்தகைய தடுப்பூசி எதிர்ப்பு குழு ஒன்றை வழிநடத்துவதுடன், இவையனைத்தும் புரளி என்று கூறியுள்ளார். இவர்களைப் போன்றவர்கள் சமூக ஊடகங்களில் இருப்பது தான் சிக்கலாக உள்ளது. இது மக்களை பதட்டமடையச் செய்கிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில் சில கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள் உள்ளனர். மேலும், பெண்களைப் பொறுத்தவரை, தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்குமோ என்ற கவலை அவர்களுக்கு எப்போதும் உண்டு. எனவே, பொதுவாக பெண்களும், மற்றும் பெண் சுகாதார பராமரிப்புப் பணியாளர்களும் பெண் ஆசிரியர்களும் தடுப்பூசிகளை அதிகம் எதிர்ப்பதும் மறுப்பதும் [தடுப்பூசி தயக்க] விகிதங்களை மிகவும் அதிகரிக்கச் செய்திருப்பதை நீங்கள் காண முடியும்.

மருத்துவர் விகிதங்கள் அவ்வளவு அதிகம் இல்லை. என்றாலும், வழமையாக பயன்படுத்தப்படுவது போல, இது ஆணாதிக்கம் போன்றதல்ல, இன்னும் கூட பெண்களை விட ஆண்களாகத்தான் அதிகம் இருக்கின்றனர். அதுதான் வித்தியாசம். மேலும், இதற்கு குறிப்பிட்ட எதிர்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன், ஏனென்றால், “முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள நான் விரும்பவில்லை. அதற்காக நான் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மாட்டேன் என்பதல்ல, தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் முதல் கட்ட குழுவினருக்கு இது எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்ப்பேன், பின்னர் நானும் எடுத்துக் கொள்வேன்” என்று மக்கள் நினைப்பது தெரிகிறது.

BM: கோவிட்-19 தடுப்பூசிக்கான தயக்கத்திலிருந்து வேறுபட்ட தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் எங்கிருந்து தோன்றியது? விஞ்ஞான எதிர்ப்பு நடத்தைகள் குறித்த உங்களது ஆய்வுகள் மற்றும் உங்களது மதிப்பீடுகளில், இத்தகைய இயக்கங்கள் பற்றி நீங்கள் என்ன கண்டுபிடித்துள்ளீர்கள்?

AC: அவற்றில் சில, “நிபுணர்கள் கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. எனக்கு எது நல்லது என்று தீர்மானிப்பதில் எனக்கு நானே தான் சிறந்த நீதிபதி” போன்ற சுதந்திரவாத சிந்தனையிலிருந்து தோன்றுகின்றன. இது ஒரு வகையில் நிபுணர்களையும், நிபுணத்துவத்தையும் அவமதிப்பதாகும். “கோவிட் என்பது ஒரு புரளி தான். நீங்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இவையனைத்தும் முட்டாள்தனமே” என்று நம்மை சுற்றிலுமுள்ள மக்கள் விமர்சித்துக் கொண்டிருக்கையில் தான் நாம் முகக்கவசம் அணிய தொடங்கினோம்.

இவற்றில் சில, விஞ்ஞானம் குறித்து பல வட்டங்களில் நிலவும் நீண்டகால அமெரிக்க ஐயுறவிலிருந்து, பெரும்பாலும் மதவாதிகளிடமிருந்து எழுகின்றன. அமெரிக்காவில், ஏராளமான மதம் சார்ந்த மக்கள் இருப்பதால், வேறு சில கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளில் நீங்கள் காண்பது போல, இவர்களுக்கு விஞ்ஞானத்தின் மீது ஆர்வமோ அல்லது நம்பிக்கையோ இருப்பதில்லை. இதற்கு முரண்பட்டதாக, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசிகளுக்கு அதிக ஆதரவு உள்ளது, அவர்கள் அவற்றின் நன்மைகளைப் பார்க்கிறார்கள். இங்கு தட்டம்மை அல்லது டெட்டனஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளின் நன்மைகளைப் பற்றி இப்போது நீங்கள் நினைப்பதில்லை, ஏனென்றால் இங்கு அந்த நோய்கள் குறைக்கப்பட்டுவிட்டன. எனவே, அதன் பின்னர், “எங்களுக்கு தடுப்பூசிகள் தேவை என்று நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் எங்களைச் சுற்றி நோய் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே” என்று மக்கள் கூறி, சந்தேகப்பட தொடங்கிவிட்டனர். அதேவேளை ஆப்பிரிக்காவில், “எங்களுக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்ததற்கு நன்றி, ஏனென்றால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கிராமத்தினர் அனைவரும் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர், இப்போது அது இல்லை” என்று மக்கள் கூறுகின்றனர்.

மேலும், விஞ்ஞானத்திற்கு என்று சிறந்த தகவல் தொடர்பாளர்கள் இல்லாத அதன் சொந்த பிரச்சினை பற்றியும் நான் உங்களுக்கு கூற வேண்டும். இது பொது மக்களுடன் பேசுவதற்கான நல்ல வேலையை செய்யவிடவில்லை. டோனி ஃபவுசி ஐ அல்லது [பிலடெல்பியாவில்] குழந்தைகள் மருத்துவமனையில் மூத்த ஆராய்ச்சியாளராகவுள்ள பால் ஆஃபிட் போன்ற சிலரை எல்லோரும் எப்போதும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்றாலும் விஞ்ஞான மற்றும் மருத்துவ வட்டாரங்களில் இருந்து ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட அநேகமாக அனைவரது பெயரையும் என்னால் குறிப்பிட முடியும். அது ஒரு நீண்ட பட்டியல் அல்ல. அது ஒரு சுய-தண்டனைக்குரிய காயம்.

BM: தடுப்பூசி விநியோக பிரச்சாரத்தைப் பற்றி உங்களது கருத்து என்ன? இலையுதிர் காலத்தில், ஃபைசர் நிறுவனம் 100 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வழங்க உறுதியளித்திருந்தது, இது விரைவில் 50 மில்லியனாகக் குறைந்துபோனது. அதன் பின்னர், துணை ஜனாதிபதி மைக் பென்ஸும், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவும் புத்தாண்டு தினத்திற்குள் 20 மில்லியன் தடுப்பூசி அளவுகள் வழங்கப்படும் என்று மக்களுக்கு உறுதியளித்திருந்தனர். இப்போது நாம் ஜனவரியில் இருக்கிறோம், அண்ணளவாக 10 மில்லியன் அளவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான தடுப்பூசி அளவுகள் இன்னும் விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது தெரிகிறது.

மேலும், இந்த தடுப்பூசிகளை மக்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் வெறித்தனமான அவசரம் இப்போது உள்ளது என்ற நிலையில், இரண்டு அளவு (two-dose) தடுப்புமருந்து விதிமுறைகளை தவிர்க்கவும், அவற்றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகார விதிமுறைகளை தவிர்க்கவும் பேசப்படுகிறதே.

AC: ஆம், இது என்னை கொஞ்சம் பதற வைக்கிறது. எங்களது மருந்து கிடங்குகளில் தற்போது 20, 25 மில்லியன் தடுப்பூசி அளவுகள் இருப்பில் உள்ளன, அவற்றை கொண்டு சேர்க்க விநியோக தளபாட வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மேலும் 100 மில்லியன் மருந்து அளவுகளை சேர்த்தால், அவை கொண்டு சேர்க்கப்படுமா என்பதிலும் உறுதியில்லை. விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு சிக்கல்களை காட்டிலும், நீங்கள் விநியோக தளவாட சிக்கல்களை முதலில் தீர்ப்பது மிகவும் அவசியமாக உள்ளது.

அவர்கள் அதை செய்யப் போவதாகக் கூறியிருந்தனர், அதாவது டிசம்பர் இறுதிக்குள் அநேகமாக 20 மில்லியன் தடுப்பூசி அளவுகளை பெறும் வகையில் என்று நான் நினைக்கிறேன். ஆனால், பல வாரங்கள் கழிந்த பின்னரும், அதற்கு நெருக்கமாக வரவில்லை. அதாவது, மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்கவோ அல்லது போதுமான தடுப்பூசி விநியோக மையங்களை அமைக்கவோ அவர்கள் உதவவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதிகளவில் தடுப்பூசிகளை வலுக்கட்டாயமாக வெளியிட முயற்சிப்பதை நான் எதிர்க்கவில்லை, மாறாக கிறிஸ்துமஸ் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் தினங்களில் கூட இருபத்தி நான்கு மணிநேர சேவையாக, குடிமை மையங்கள், அடிபந்தாட்ட மைதானங்கள், கட்டிட கூடங்கள், பிரத்யேக தடுப்பூசி மையங்களை நாம் திறக்காவிட்டால் இது நடக்காது என்கிறேன், இது நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை.

மேலும், தகுதிக்கான வரம்பை நீங்கள் சற்று தளர்த்த வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். அவை தற்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நான் அனைவருக்கும் கூறுகிறேன், “65 வயதிற்கு மேற்பட்டவர்களை முயற்சிக்கவும், அவர்கள் ஒரே நிலைமைகளைக் கொண்டிருக்கலாம், அது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சிறைச்சாலைகளையும், மற்றும் குழு வீடுகளில் வசிக்கும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள மக்களையும் நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” மேலும் தடுப்பூசி விநியோகத்தை நிர்வகிப்பவர்கள் தொடர்ந்து ஆரம்பகட்ட அளவு வரம்புகளை கணக்கில் கொள்வது அதிக நெருக்கடியாக உள்ளதா எனவும் கண்டறிய வேண்டும்.

இது ஒரு பெரிய சூதாட்டம் என்று நான் கவலைப்படவில்லை, ஏனென்றால் எல்லாம் தீர்ந்துபோய்விடும், இரண்டாவது அளவு (dose) மருந்துகளை எங்களால் தயாரிக்க முடியாது. விநியோக தளவாட சிக்கலை நாம் இன்னும் தீர்க்கவில்லை என்றே நான் கவலைப்படுகிறேன்.

BM: அனைத்து தடுப்பூசிகளையும் போட்டு முடிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது, ஒருவேளை மக்கள் தடுப்பூசியின் இரண்டாவது அளவை எடுத்துக்கொள்ள வருவார்களானால், அப்போது அவர்களுக்கு ஒன்றும் இருக்காது. அதனால், ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்வதே பாதுகாப்பானது என்றோ அல்லது இரண்டாவது அளவை பெறுவதற்கு மூன்று மாதங்கள் காத்திருக்கலாம் என்றோ அவர்களுக்கு கூறப்பட்டு வருகிறது. ஃபைசர் தங்களது திட்டத்தை விரிவாக்குவதற்கு எந்தவித தரவும் இல்லை என்கிறது. கடுமையான சூழ்நிலைகளில் ஆறு வாரங்கள் வரை மக்கள் காத்திருக்கக் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட தரவுகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

AC: ஆனால், வெறுமனே முதல் அளவு தடுப்பூசியை மட்டும் வழங்கி, அதுவே போதுமானது என நம்பும்படி மக்களுக்கு தெரிவிப்பது ஒருபோதும் நல்லதல்ல. உற்பத்தியாளர்களால் போதுமான அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். உற்பத்தியாளர்களுடன் அவர்களும் பேசியுள்ளார்கள், நானும் பேசியுள்ளேன், மேலும், இரண்டாவது அளவு தடுப்பூசிகளை அவர்களால் தயாரிக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றி, அவர்கள், “ஆர்ட் கேப்லானுக்கு தடுப்பூசியின் முதல் அளவு வழங்கப்பட்டுவிட்டது, இரண்டாவது அளவை அவருக்குக் கொடுக்க அவரது பெயரைக் குறிப்பிட்ட மற்றொரு அளவு மருந்தை நாங்கள் எடுத்து வைத்துள்ளோம். ஆனால், இப்போது ஏதோ அதிகப்படியான மருந்துகள் இருப்பதாகவும், அதை அவருக்காக வைத்திருக்க வேண்டியதில்லை என்றே நாங்கள் நினைப்போம்,” என்று தெரிவிக்கிறார்கள்.

சரி! உற்பத்தியாளர்கள் தங்களது விநியோகங்களில் தெளிவான உறுதியுடன் இருப்பார்களாயின், “25 மில்லியன் அளவுகள் தடுப்பூசி விநியோகத்தை நாம் தொடங்கலாமா? முழுச் செயலையும் செய்வதற்கு முன்னர் அது எவ்வாறு நடக்கிறது என்று நாம் பார்ப்போம். இப்போதுள்ள தடுப்பூசிகளை போடுவதில் முதலில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.”

BM: இந்த உற்பத்தியாளர் குழுக்களுடன் பேசுகையில், புதிய வைரஸ் திரிபு வகை விவகாரம் பற்றி நீங்கள் பேசியுள்ளீர்களா?

AC: ஆம். புதிய வைரஸ் திரிபுக்கும் சேர்த்து இரண்டு அளவுகளை உள்ளடக்கிய தடுப்பூசிகளை விநியோகிப்பது தொடர்பாக பேசினோம், ஏனென்றால் இந்த வைரஸின் பாதிப்பையும் எதிர்கொள்ள ஒரு அளவை விட அதிக சக்திவாய்ந்ததாக அவை இருக்க வேண்டும் எனக் கருதினோம். எனவே, அவை ஏற்கனவே வழங்கப்படுகின்றன! இந்த திரிபு வகை வைரஸ் மிகுந்த தொற்றும் தன்மை கொண்டவை, ஆனால் அதிக ஆபத்து இல்லாதது என நினைக்கிறேன். இது வெறுமனே வேகமாக பரவுவதாகத் தோன்றுகிறது. [கட்டுரை ஆசிரியர். குறிப்பு: B.1.1.7. வைரஸ் திரிபு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என சமீபத்திய சான்றுகள் தெரிவிக்கின்றன.]

BM: ஒரு பொதுமுடக்கம் பற்றி உங்கள் கருத்து என்ன? குறிப்பாக, நாளாந்தம் கால் மில்லியனுக்கும் (250,000) அதிகமாக நோய்தொற்றுக்களும், 3,000 க்கும் அதிகமாக இறப்புக்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில்.

முக்கியமான ஒரு கவலை என்னவென்றால், புதிய வகை வைரஸ் திரிபு அதிகரித்தளவிலான நோய் பரப்பும் வேகத்தை கொண்டிருப்பதால், சுகாதார பாதுகாப்பு அமைப்புமுறைகள் நோயாளிகளால் முற்றிலும் நிரம்பி வழியவிருக்கும் ஒரு சூழலை நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம். பிரிட்டனின் புள்ளிவிபரங்கள், இலண்டன் மற்றும் இங்கிலாந்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்க்கும் விகிதங்கள் மீண்டும் ஒருமுறை ஆபத்தான மட்டங்களை எட்டியுள்ளதைக் காட்டுகின்றன. அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு கணிசமான பெரும்பகுதியினருக்கு இன்னும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் முக்கியமாக மார்ச் மாதம் வாக்கில் பிரிட்டனின் திரிபு வகை வைரஸ் அமெரிக்காவிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறுகின்றன.

பைடெனின் கொரோனா வைரஸ் பணிக்குழுவிலுள்ள, டாக்டர் மைக்கல் ஓஸ்டர்ஹோம், நோய்தொற்று பரவும் வீதங்கள் கணிசமாக குறைக்கப்படும் வரை, தொழிலாளர்களுக்கு நிதியுதவியுடன் கூடிய பொதுமுடக்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொது சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கி, மேலும் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் தடுப்பூசிகளைப் போடவும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், பைடென் அவரை அடிப்படையில் குழப்பிவிட்டார்.

AC: எனது கருத்துப்படி, நாம் ஏற்கனவே அதிகளவு பொதுமுடங்கங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இஸ்ரேல், தென் கொரியா, தைவான், சீனா மற்றும் நியூசிலாந்து போன்ற பல நாடுகள் வைரஸ் பரவலைத் தடுக்க கடுமையாக போராடியுள்ளன. அவர்கள் தீவிரமாக உழைத்துள்ளது தெரிகிறது. ஆனால் நம் அரசியல்வாதிகளுக்கு அதில் நம்பிக்கையில்லை என்பதோடு, அவர்கள் வேலைகளை இழக்க விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். அதனால் பொருளாதாரம் சீர்குலைந்து போவதை சகித்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். முகக்கவசம் அணியாமல் சிலர் இருப்பதை கண்டறியவோ, அப்படி கண்டறிந்தவர்களை வீட்டிலேயே அடைந்திருக்கும்படி கட்டாயப்படுத்தவோ உண்மையிலேயே அவர்களால் முடியவில்லை என்றே நான் நினைக்கிறேன். நாம் உண்மையில் அவற்றை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. எனவே, நமக்கும் பொதுமுடக்கங்கள் விதிக்கப்படப் போகின்றன என்று நான் நினைக்கிறேன்? அப்படித்தானே.

மற்றொரு உண்மையும் உள்ளது, இதைச் சொல்வதற்கு விசித்திரமாக உள்ளது, ஆனால் எப்படியோ, அரசியல் ரீதியாக பார்த்தால், நாளொன்றுக்கு 10 ஜெட்லைனர் விபத்துக்களில் ஏற்படுவதற்கு நிகரான உயிரிழப்புக்கள் ஏற்பட்டாலும் அதைக் கண்டு கவலைப்படாமல் இருக்கும் ஒரு நிலையை நாம் ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். இதை நான் இந்தோனேசிய விமான விபத்தில் கவனித்தேன். அதில் 60 பேர் இறந்தனர்! செய்தி ஊடகங்கள் இது பற்றி மிகப் பெரியளவில் செய்திகள் வெளியிட்டன. அதே நாளில், கோவிட்-19 நோய்தொற்றால் 4,000 க்கும் மேற்பட்டவர்கள் இறப்பது பற்றி ஊடகங்களில் அரிதான சில செய்திகள் மட்டுமே வெளியாகின – அடுத்த நாளை நோக்கிச் சென்றனர். இந்த மரணங்கள், வயோதிபர்கள், வறியவர்கள், நிறுவனமயமாக்கப்பட்டவர்கள், கைதிகள் ஆகியோரது நோய்தொற்றை அனுமதிக்கும் தன்மையினால் அளவுக்கு மீறி அவர்களை பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

BM: இந்த பெருந்நோய் தொற்றை எதிர்கொள்ள முன்னரே அமெரிக்கா தயாராக இல்லாமலிருந்ததும், மேலும் தொடர்ந்து இதை சரியான முறையில் கையாளவும் அது தயாராக இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு அரசாங்கம் தனது மக்களை பெருந்தொற்று நோயிலிருந்து பாதுகாப்பது தொடர்பாக அது எதிர்கொள்ளும் சில அறிநெறி சிக்கல்கள் அல்லது அதற்கு இருக்கும் பொறுப்புகள் பற்றி உங்களது கருத்து என்ன?

AC: ஓரிரு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று, நாம் நமது பொது சுகாதார அமைப்புமுறையை அழித்துவிட்டோம் என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்திருக்காது என்பது பற்றி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பது பற்றிய சில விடயங்களை பெருந்தொற்று நோய் அம்பலப்படுத்தியுள்ளது. நாம் அதற்கு நிதி வழங்கவில்லை. நாம் அதை வெட்டி, நாசப்படுத்தினோம். எனவே, “சரி, மாநிலங்களும் மாவட்டங்களும் தடுப்பூசிகளை விநியோகிக்கட்டும், அதை சுகாதாரத் துறையின் வசம் ஒப்படையுங்கள்” என்று மக்கள் அப்போது கூறுகிறார்கள். அங்கே யார் இருக்கிறார்கள்? என்பது போல உள்ளது. அதற்கான வரவு செலவுத் திட்டங்கள் அனைத்தையும் அவர்கள் வெட்டிவிட்டார்கள். அவற்றிற்கு நிதியளிப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. மேலும் இரண்டாவதாக, இப்போது அதற்கான உள்கட்டமைப்பு எதுவும் இங்கே இல்லை.

நாம் நமது பணம் முழுவதையும் சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டோம். அதாவது, மாரடைப்பு, காலத்திற்கு முன்னர் பிறக்கும் குழந்தைகள், கருவுறாமை, முகம் மாற்று அறுவை சிகிச்சை என எதற்கும் நீங்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். எனது NYU மருத்துவ மையம் மிகச் சிறந்தது. இது மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சையளிக்கிறது. நோய் தடுப்புக்காக நாம் எதுவும் செலவழிக்கவில்லை. அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகள் என நான் அழைப்பதில் அது சிறிதும் இல்லை. மக்களின் நடத்தையை எவ்வாறு மாற்றுவது என்பது போன்ற பிரச்சினைகள் குறித்த எந்தவொரு ஆராய்ச்சிக்கும் நாம் நிதியளிப்பதில்லை.

“தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளவோ, அல்லது முகக்கவசம் அணியவோ மக்களை எப்படி மிகுந்த விருப்பம் கொள்ளச் செய்வது?” என்று நீங்கள் என்னை கேட்டால், அதற்கு பதில் எவருக்கும் தெரியாது. சிறு குழந்தைகளுக்கு அரிதான நோய்களுக்கு நம்மால் மரபணு சிகிச்சை செய்ய முடியுமா? என்றால், ஆம். மக்களை அதிகம் சாப்பிடாமல் இருக்கச் செய்வது எப்படி என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா? என்றால், அது முடியாது. முழு சுகாதார அமைப்புமுறையும் இலாபகரமான சிகிச்சையை நோக்கி திசைதிருப்படுகிறது, நோய் தடுப்புக்காக அல்ல. பொது சுகாதார நலனுக்காகவும் அல்ல. நீங்கள் அநேகமாக தெரிந்து வைத்திருப்பது போல, பெரும்பாலான பொது சுகாதார நலன்கள் மருந்துகளுடன் தொடர்புபட்டவை அல்ல, மாறாக வீட்டுவசதி அல்லது மாசுபாடு அல்லது காலநிலை மாற்றம் அல்லது உணவு பெற அணுக முடியாத நிலை ஆகியவற்றுடன் தொடர்புபட்டவையே. நான் சொல்ல வருவது என்னவென்றால், நாம் செய்ய வேண்டிய விடயங்கள் உள்ளன, ஆனால் அவை நமது சுகாதார அமைப்புமுறையில் இல்லை. நாம் அடிப்படையில் சுகாதார அமைப்புமுறையை விட பிழைத்திருத்த முறையையே கொண்டுள்ளோம்.

பெருந்தொற்று நோய் உயிரியல்சார் அறநெறி பற்றி மற்றொரு வலுவான பிடி உள்ளது, அது உங்கள் அண்டைவீட்டாரைப் பற்றி கவலைப்படுபவர்கள், உங்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், மற்றவர்களுக்கு உதவுவதும் பாதுகாப்பதும் தங்களது ஒரு கடமை என்று நினைப்பவர்கள் ஆகியோரை சார்ந்தது என நான் நினைக்கிறேன். அறநெறிகளின் அடிப்படையில் நாம் மிகவும் தனிப்பட்ட நலனை முன்னிறுத்துபவர்களாக (individualistic) இருக்கிறோம், எனவே தனிப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது உரிமைகள் சார்ந்து நோக்கினால், தார்மீகரீதியாக அல்லது ஒழுக்கம்சார்ந்து பெருந்தொற்று நோயை தடுப்பதற்கான நல்ல ஏற்பாடு நம்மிடம் இல்லை என்றே கூற வேண்டும்.

இது “உங்களை” பற்றியது மட்டுமல்ல. இது, இந்த நோயை நீங்கள் எங்கெல்லாம் பரப்புகிறீர்கள், வேறு எவரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியது. இங்கே அது பற்றி நாம் நினைக்கவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, ஒரு சமூக உணர்வை அல்லது சமூக பொறுப்புணர்வைக் கொண்டுள்ளது. நம்மைப் போல பிரிட்டனும் சற்று கூடுதலான சமூக உணர்வையே கொண்டுள்ளது. பெருந்தொற்று நோய் விவகாரத்தில் அவர்கள் நமக்கு சமமாக மோசமாக நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இஸ்ரேல் போன்ற சிறிய நாடுகள் இதில் அதிகம் ஒருங்கே இழுக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தங்கள் சமூகத்தை பாதுகாக்கும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளனர், ஆனால் ஓரளவு தான், காரணம் அவர்களது இராணுவமும் மற்றும் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவர்களது எண்ணமும் தான், பயங்கரவாதம் மற்றும் இராணுவத் தாக்குதல்களில் அவர்கள் அதை உணர்ந்திருந்தனர். அந்த விடயத்தைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு எமிரேட்டு அல்லது அது போன்ற ஒரு இடத்தில், தங்களது மக்களை ஆட்சியாளர்கள் கொல்வதை தடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய சமூக அமைப்பு முறைகளை கொண்டுள்ளனர். நாம் அப்படி இல்லை.

உங்களுக்கும் தெரிந்திருக்கும், கோடைக்காலம் முழுவதும் நாம் விரும்பியதை செய்யும் உரிமை நமக்கு இருந்தது என்பது பற்றி அனைத்தும் நான் கேள்விபட்டிருக்கிறேன். மேலும், “நீங்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தப் போவதில்லை” என்று ஆளுநர்கள் கூறுகின்றனர். ஆனால், அது பெருந்தொற்று நோயைப் பொறுத்தவரை சரியான தத்துவமாக இருக்காது.

BM: இன்னுமொரு பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

AC: இல்லை. அப்படியொரு மாற்றத்தை நான் அங்கு காணவில்லை. நாம் மீண்டும் படகை செலுத்த வேண்டும் என்று மக்கள் கூறுவதை நான் கேட்கவில்லை. நல்லது, இது ரெம்பவும் முன்னதாக கேட்கப்படுகிறது, என்றாலும் இதுவரை இல்லை என்றே நான் கூறுவேன். நீங்கள் வரவு செலவுத் திட்டத்தை மீண்டும் வகுக்க வேண்டும். பொது சுகாதாரத்திற்கு வேறுபட்ட பதிலிறுப்புகள் தேவை என்பதை வலியுறுத்தும் தலைவர்கள் உங்களிடம் இருக்க வேண்டும். அது பற்றி அதிகம் நான் கேள்விப்படவில்லை. “இதைத் தாண்டி, எங்கள் விருப்பபடி தடுப்பூசி எடுத்துக்கொண்டு வழமைக்கு எங்களால் திரும்ப முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அடிப்படையில் மக்கள் கூறுவதையே நான் கேள்விப்படுகிறேன்.

BM: இப்போது கடைசியாக ஒன்றைப் பற்றி தங்களிடம் நான் கேட்கிறேன். குழப்பமும் பாதிப்பும் நிறைந்த உலகின் பல ஆசிரியர்களிடம் நாங்கள் பேசி வருகிறோம். அனைவரும் அவர்களிடம் பள்ளிகளை மீண்டும் திறப்பது தான் பாதுகாப்பானது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். பெருந்தொற்று நோய்கள் பரவிக் கொண்டிருக்கையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதனால் உருவாகும் அபாயங்கள் பற்றி மிக சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. நாம் அடிப்படையில் சுமார் 100 மில்லியன் மக்களை இந்த நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கும். அது ஒரு பேரழிவு தரக்கூடிய வளர்ச்சியாக இருக்கலாம்.

AC: நான் ஒத்துக்கொள்கிறேன். ஒரிரு பாடங்களை நாம் கற்றுக்கொண்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். ஆசிரியர்களையும், ஊழியர்களையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும், அவர்களை நீங்கள் பாதுகாக்காவிட்டால் அவர்கள் பணிக்கு வர மாட்டார்கள். அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். இரண்டாவதாக, நாட்டில் குழந்தைகள் பராமரிப்பு பற்றிய மிகப்பெரிய சிக்கல் உருவாகும்.

இதற்கான ஒரு காரணமாக, குழந்தைகளுக்காக பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு அழுத்தம் உருவாகிறது, என்றாலும் அதன் ஒரு பகுதியாக பெற்றோர்களும் அப்போது தான் வேலைக்குச் செல்ல முடியும் என்பதும் அதற்கான காரணமாகிறது. மேலும், உங்களுக்கு சிறந்த பகல் நேர பராமரிப்பு வேண்டும். அதன் பிறகு, உங்களுக்கு மிகவும் வசதியாக பள்ளி நேரங்களை பெறமுடியும். நீங்கள் அவர்களை கூடுதல் நேரம் கல்வி கற்க அனுப்ப முடியும், அவர்களை அதிக இடங்களுக்கு அனுப்ப முடியும், அதிகளவு தொலைதூரக் கற்றலை வழங்க முடியும், கலப்பு வகுப்பறை மற்றும் அது போன்ற விடயங்களை நீங்கள் ஏற்பாடு செய்ய முடியும். எனவே, குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகளைப் போட்டு மிக விரைவாக பரிசோதிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

நாம் அதைச் செய்யப் போவதில்லை. நாம் எப்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஆரம்பிக்கப் போகிறோம் என்பது நமக்கு தெரியாது. அது மோசமானதே. நீங்கள் பள்ளிகளை திறக்க விரும்பினால், உங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. குறைந்தது இளம் பருவத்தினரிடம் தொடங்கி, பின்னர் உங்கள் விருப்பப்படி தொடரலாம். நாம் அதைச் செய்வதில்லை. “குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படவில்லை, எனவே பள்ளிகளை திறந்து விடுங்கள்” என்று வெறுமனே கூச்சலிடுவதை விட, மீண்டும் பள்ளிகளை திறக்கும் விவகாரத்தை நாம் மிகத் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

BM: எங்களுடன் தங்களது நேரத்தை செலவழித்தமைக்கு மிக்க நன்றி டாக்டர் கேப்லான்.

AC: மிக்க நன்றி.

Loading