இந்தியாவில் அணை பேரழிவு: 200 க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் சிக்கியுள்ளனர் அல்லது இறந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை காலை, இந்தியாவின் மிக உயர்ந்த மலைத்தொடரான நந்தாதேவியில் உள்ள பனிப்பாறைகளின் ஒரு பகுதி வெடித்ததில் பாரிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது மேலும் தவ்லிகங்கா மற்றும் அலக்நந்தா ஆறுகளில் கீழ் நோக்கி கொண்டுவரப்பட்ட வண்டல்களால் மின்னுற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகளை கிட்டத்தட்ட அழித்திருப்பதுடன் மேலும் கிராமங்களை பிரித்துவிட்டது.

உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் இமயமலைப் பிராந்தியத்தில் சீன மற்றும் திபெத்திய எல்லைகளுக்கு அருகிலுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் ஜோஷிமாத்தில் 200 க்கும் மேற்பட்ட மின் உற்பத்தித் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் இந்த பேரழிவில் சிக்கி கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளநீர்

இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், 28 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன மற்றும் 197 பேர் அதிகாரபூர்வமாக காணாமல் போயுள்ளனர். ஒரு சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 39 கட்டுமானத் தொழிலாளர்களை வெளியே எடுப்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர்களை நெருங்குவதற்கு குப்பைகள் மற்றும் வண்டல்களால் தடுக்கப்பட்டிருக்கும் 2.5 கிலோ மீட்டர் தூரமுள்ள தபோவன் விஷ்ணுகாட் மின் உற்பத்தி நிலையத்தில் 12 அடி உயரும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் வழிக்கு இரவு பகலாக குழுக்கள் துளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். முன்னதாக, ரிஷிகங்கா நீர் மின் உற்பத்தி திட்டத்தில் ஒப்பீட்டளவில் குறுகிய சுரங்கப்பாதையில் இருந்து 16 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மின்னுற்பத்தி நிலையங்கள், அணைப் பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் பணிபுரியும் தொழிலாளர்களே அதிகமான பாதிக்கப்பட்டவர்கள். பேரழிவு ஏற்பட்டதிலிருந்து அறிக்கைகளில் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கின்றன மற்றும் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவுள்ளது. ரிஷிகங்கா திட்டத்தில் பணிபுரியும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுவதாக உத்தரகண்ட் காவல்துறைத் தலைவர் அசோக் குமார் கூறியிருக்கிறார்.

தண்ணீர் சென்றதால் குப்பைகள் திரண்டுகிடந்தன. “ஒரு நிலநடுக்கம் போன்று நிலம் அதிர்ந்தது” என்று அப்பகுதியில் வாழும் ஒருவர் அல் ஜசீராவுக்கு கூறினார். “அது மிக வேகமாக வந்தது, மற்றவர்களை எச்சரிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை” என்று மற்றோரு குடியிருப்பாளர் கூறினார்.

வெள்ளம் ஐந்து பாலங்களை அடித்து சென்றுவிட்டது. ரைனி கிராமத்தின் ஒரு பாலம் மலரி மற்றும் கன்ஷலி ஆகியவற்றின் 13 கிராமங்களை இணைத்திருந்தது. அது தற்போது துண்டிக்கப்பட்டுவிட்டது. அதிகாரிகளின் தகவல்களின்படி இந்தப் பகுதிகளுக்கான உணவு விநியோகம் தடைபட்டுள்ளது.

பெரு வணிக முதலீட்டாளர்களுக்காக வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் நடக்ககூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை முற்றிலுமாக புறக்கணித்து முன்னர் ஆட்சி செய்த அடுத்தடுத்த அரசாங்கங்களால் இந்த பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் ஒரு விளைவாகவே ஞாயிற்றுக்கிழமை பேரழிவு நடந்துள்ளது. இதுபோன்ற பேரழிவிற்கு வழி வகுத்துள்ள இந்திய ஆளும் வர்க்கம் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதலை கண்ணீரை வடிக்கின்றது. "இந்தியா உத்தரகண்ட் மாநிலத்துடன் நிற்கிறது, தேசம் அங்கு அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறது." என்று இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பேரழிவில் இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு 200,000 ரூபாய் (2,743 அமெரிக்க டாலர்) மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் ஆகியவற்றை பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக மோடி அறிவித்துள்ளார். மோடியின் பாஜக உறுப்பினரான உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் மேலும் 400,000 ரூபாய் அறிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் பாதிக்கப்பட்ட பகுதி வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது (நன்றி; கூகுள் வரைபடத்திற்கு)

இந்த பேரழிவின் பரிமாணம் பல நீர்மின் உற்பத்தி திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரிஷிகங்கா ஆலை (13.2 மெகாவாட்) முதன்முதலில் திரண்டுவந்த நீரால் பாதிப்பை எதிர்கொண்டது, மேலும் இந்த ஆலையிலிருந்து வந்த கழிபொருட்கள் கீழே இருந்த மற்ற நிலையங்களையும் தாக்கி பாதிப்புக்குள்ளாக்கியது. இதில் அரசு நடத்தும் தப்போவன் (520 மெகாவாட்) மற்றும் பிபால் கோட்டி (4 × 111 மெகாவாட்) திட்டங்கள் மற்றும் தனியார் நடத்தும் விஷ்ணுபிரயாக் (400 மெகாவாட்) திட்டம் ஆகியவை அடங்கும். இதுவரை தபோவன் ஆலையிலிருந்து பெரும்பாலான இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

சுற்றுச்சூழலின் முக்கிய பகுதிகளை பெருநிறுவனங்களின் இலாபங்களை ஈட்டுவதற்கான வள எல்லையாக பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படும் அபாயங்கள் குறித்து கிராமவாசிகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசாங்கங்கள் அதிகரித்த அளவில் சுரண்டிக்கொண்டிருக்கின்றன.

ரிஷிகங்கா ஆற்றங்கரையில் மற்றும் மலை வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகள் உட்பட “வளர்ச்சி’’ நடவடிக்கைகளிலிருந்து வெளிப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு எதிராக உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் 2019 இல் ரெய்னி கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். அந்த சில குற்றச் சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டாலும் அதிகாரிகள் திட்டங்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மேல் பகுதிகளில் ஏற்கனவே 16 அணைகள் இருக்கின்றன மேலும் 13 அணைகள் கட்டும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் மற்றோரு 54 அணைகள் கட்டுவதற்கு மாநில அரசாங்கம் திட்டம் முன்கொணர்ந்திருக்கிறது. மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தபோவன் திட்டத்திற்கு கூடுதலாக தவ்லிகங்கா ஆற்றில் அடுத்து அடுத்து எட்டு புதிய நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் நீண்ட வட எல்லையான இமயமலை பகுதியில் பல பனிப்பாறைகள் உருவாகியிருக்கின்றன. உலகளவில் பனிப்பாறைகள் கரைந்துகொண்டிருக்கின்றன. வூட்ஸ் ஹோல் கடல்சார் கல்விநிறுவனம் (Woods Hole Oceanographic Institute) அதன் இணை அறிவியலாளர் சாரா தாஸின் கூற்றுப்படி, “கடந்த காலத்தில் உலகளவில் பனிப்பாறைகளைக் கொண்ட மலைகள் மிகப் பெரியவையாக இருந்தன மேலும் அவைகள் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணங்களால் உருகிவருவதுடன் மேலும் வியத்தகுமுறையில் சுருங்கியும் வருகின்றன.”

வடமேற்கு இமயமலையில் சராசரி வெப்பநிலையின் அளவு 1991 இலிருந்து 0.66 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்திருக்கின்றன, இது உலக சராசரியைவிட அதிகமாகும்” என்று பெங்களூரில் உள்ள காலநிலை மாற்றத்தினை ஆராயும் திவேச்சாக நிலையத்திலிருந்து (Divecha Centre for Climate Change) வந்த 2018 கொள்கையை குறிப்பிட்டு வயர் (the Wire) ஊடகம் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனத்தின் அறிவியலாளர்களும் வடமேற்கு இமயமலையில் கடந்த 25 ஆண்டுகளாக குளிர்காலம் வெப்பமாகவும் மற்றும் ஈரப்பதமாகவும் இருந்து வருவதாக சண்டீகரில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்கள்.

2,000 கிலோமீட்டர் பரப்பளவில் 650 பனிப்பாறைகள் பற்றிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்டது, 1975-2000 உடன் ஒப்பிடும்போது 2000 முதல் பனிப்பாறை உருகல் இரட்டிப்பாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த ஆய்வின்படி, “1990 களில் தொடங்கி மிகவும் வெளிப்படையாக வெப்பமயமாதல் போக்கு தொடர்கிறது; 2000 முதல் இழப்பானது ஆண்டுதோறும் அரை மீட்டராக அதிகரித்தது. ”

உத்தரகாண்ட் இல் 2013 இல் ஏற்பட்ட “இமயமலை சுனாமி” என்று அழைக்கப்பட்ட பேரழிவுக்குப் பின்னர் ஒரு தசாப்தத்திற்கு குறைவான காலத்திலேயே தற்போதைய பேரழிவு நடந்துள்ளது. அந்த ஆண்டின் யூன் மாதத்தில், தண்ணீர், வண்டல் மண் மற்றும் பாறைகள் ஆகியவற்றின் வேகமான நீரோட்டமானது கட்டவிழ்த்துவிடப்பட்டு வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்களை துடைத்துகொண்டு போனதுடன் 6,000 பேரையும் கொன்றுள்ளது.

“பேரழிவுதரும் வெள்ளங்கள் ஏற்பட்டதிலிருந்து ஐந்து வருடங்களாகியிருக்கின்றன, ஆனால் உத்தரகாண்ட் நிலைமைகள் அப்படியேதான் இருக்கின்றன. வெள்ளநீர் செல்லும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. கடந்தகால எந்தவொரு படிப்பினைகளையும் எடுத்துக்கொள்ளாமல் வளர்ச்சி என்ற பெயரில் பலவீனமான இமயமலைப் பகுதியில் பாரிய கட்டுமானத் திட்டங்கள், பிரதானமாக பெரிய அணைகள் ஆகியவகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்று 2018 இல் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனமான மட்டு ஜன் சங்கதனின் (Matu Jan Sangathan) விமல் பாய் என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

“சமோலி பேரழிவு இன்னமும் விரிவடைந்துகொண்டிருக்கிறது மேலும் அனைத்து குறிப்பிடத்தக்க விபரங்களையும் நாம் அறிவதற்கு முன்பே அதற்கு வெகுநாட்களாகிவிடும். ஆனால் இது எங்களுடைய முட்டாள்தனமான வளர்ச்சியை மேம்படுத்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை மேலும் மிகவும் முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களை நிலையான முறையில் உருவாக்குவதற்கு நம்முடைய இயலாமையும் இருக்கிறது என்று இந்த வாரம் தேசிய மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் (National Institute of Advanced Studies) இணை இயக்குநர் சி.பி. இராஜெந்திரன் தி வயர் (the Wire) ஊடகத்திற்கு கூறியிருக்கிறார்.

ஒரு “இயற்கை ” பேரழிவு என்பதைவிட தற்போதைய துயரம் முதலாளித்துவ இலாப அமைப்பின் மீதான மற்றொரு குற்றச்சாட்டாக இருக்கிறது மேலும் தொழிலாள வர்க்கத்தின் வாழக்கையையும் மற்றும் இந்த கிரகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் அது புறக்கணிக்கிறது.

Loading