வணிகங்கள் வழமை போல் திறந்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் கோவிட்-19 இறப்புக்கள் அரை மில்லியனை நெருங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பூகோள அளவில், பேரழிவுகரமான குளிர்காலத்தில் ஏற்பட்ட கோவிட்-19 நோய்தொற்று வெடிப்பின் போது புதிய நோய்தொற்றுக்கள் நாளொன்றுக்கு 750,000 ஐ தாண்டியும், மற்றும் இறப்புக்கள் 24 மணி நேரத்திற்கு 16,000 க்கு அதிகமாக உச்சபட்சமாகவும் பதிவாகி வந்தலிருந்து தற்போது நோய்தொற்றுக்களும், அதனுடன் இணைந்த இறப்புக்களும் குறைந்து கொண்டே வருகிறது.

ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் எங்கிலுமான பெருந் தொற்றுநோயின் தாக்கம் கோடைக்காலத்திற்குப் பின்னர் பள்ளிகளையும் பொருளாதாரங்களையும் திறப்பதற்கு அனுமதித்த மோசமான புறக்கணிப்பின் நேரடி விளைபொருளாக இருந்தது. பொருளாதாரத்தை மீண்டும் திறக்க முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் உரக்க குரல் கொடுக்கையில், குற்றவியல் அரசாங்க கொள்கைகள் மக்களை மீண்டும் மீண்டும் நோய்தொற்றுக்குட்படுத்துவதால் வேகமாக அதிகரித்து வரும் வைரஸ் திரிபு வகைகள் உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

In this Jan. 11, 2021 file photo, New York Gov. Andrew Cuomo delivers his State of the State address virtually from The War Room at the state Capitol, in Albany, N.Y. (AP Photo/Hans Pennink, Pool, File)

இந்த ஜனவரி 9, 2021 கோப்புக் காட்சியில், போக்குவரத்து பணியாளர்கள் மிகுவல் லோபஸ், வலது, நோ மீசா ஆகியோர் ஏஞ்சல்ஸின் மிஷன் ஹில்ஸ் பிரிவில் உள்ள பிராவிடன்ஸ் ஹோலி கிராஸ் மருத்துவ மையத்தில் ஒரு கோவிட்-19 நோயாளியின் உடலை சவக் கிடங்கிற்கு நகர்த்த தயாராகின்றனர். பிப்ரவரி 11, 2021 வியாழக்கிழமை ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின் படி, கோவிட்-19 ஆல் இறந்தவர்களின் கடுமையான புள்ளிவிபரத்தின் படி பார்த்தால் நியூயோர்க்கை கலிபோர்னியா விஞ்சிவிட்டது. (AP Photo / Jae Hong, File)

அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை திகிலூட்டுவதாக இருந்து வருகின்றது. இந்த வாரம், இறந்தவர்களின் எண்ணிக்கை அரை மில்லியனை எட்டவுள்ளது, இது இரண்டாம் உலக போரில் பலியான, பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரின் மரணங்கள் உட்பட ஒட்டுமொத்த அமெரிக்க இறப்பு எண்ணிக்கையை விஞ்சுவதாக இருக்கும். இத்தகைய கொடூரமான புள்ளிவிபரத்தை நிதானமாகவும் கவனமாகவும் மதிப்பிட வேண்டும். தொற்றுநோயை கட்டுப்பாடற்று பரவ அனுமதிக்கும் குற்றவியல் கொள்கை குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் மீது அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தெரிவித்தல் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்கு பின்னர் இறப்பு எண்ணிக்கையில் தொடங்கிய கடும் அதிகரிப்பு குறிப்பாக குறிப்பிடத்தக்கது. NBC News பதிவு செய்தபடி, அமெரிக்காவில் முதல் 100,000 கோவிட்-19 இறப்புகளுக்கு 99 நாட்கள் தேவைபட்டது (பிப்ரவரி 29 – மே 17); இரண்டாவது 100,000 இறப்புக்கள் செப்டம்பர் 19 வரையிலுமாக 115 நாட்களில் நிகழ்ந்தன; மூன்றாவது 100,000 இறப்புக்கள் டிசம்பர் 14 வரையிலுமாக 86 நாட்களில் நிகழ்ந்தன; நான்காவது 100,000 இறப்புகளுக்கு ஜனவரி 19 வரையிலுமாக 36 நாட்கள் மட்டுமே பிடித்தன; ஐந்தாவது 100,000 இறப்புக்களுக்கு ஒருவேளை 28 முதல் 31 நாட்கள் மட்டுமே தேவைப்படும்; அதாவது இந்த வாரம் இறப்பு எண்ணிக்கை பயங்கரமான மைல்கல்லை எட்டுவதைப் பொறுத்து அது இருக்கும்.

மூன்று மாதங்களுக்கு குறைவான காலத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், அதற்கு முந்தைய எட்டு மாதங்களில் நிகழ்ந்ததை விட ஏராளமான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். மேலும் அடுத்த வாரத்திற்குள், பைடென் நிர்வாகத்தின் கீழ் 100,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸால் இறந்திருப்பார்கள்.

பிரித்தானிய மருத்துவ இதழ் லான்செட் விவரித்தபடி, “உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய், அமெரிக்காவில் பிப்ரவரி 2021 ஆரம்பத்தில் 26 மில்லியனுக்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்களுடனும், 450,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களுடனும் வேறுபட்ட விகிதாச்சார விளைவைக் கொண்டுள்ளது, இதில் கிட்டத்தட்ட 40 சதவீதம் தவிர்க்கப்பட்டிருக்குமானால், அமெரிக்க இறப்பு வீதம் ஏனைய ஜி7 நாடுகளின் மதிப்பிடப்பட்ட சராசரியை அது பிரதிபலித்திருக்கும்.” தங்கள் மக்களின் பாதுகாப்பை விட இலாப நலன்களைப் பின்பற்றிய ஜி7 நாடுகளுக்கு இது பாராட்டு அல்ல. மாறாக, இந்த விடயத்தில் அமெரிக்கா சற்று கூடுதல் ஆர்வத்துடன் உள்ளது.

லான்செட் மேலும், “பெரும்பாலான நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் தவிர்க்கக்கூடியவைதான். ஜனாதிபதி ட்ரம்ப் தொற்றுநோயை எதிர்த்துப் போராட அமெரிக்க மக்களை ஊக்குவிப்பதை விட, அதன் அச்சுறுத்தலை பகிரங்கமாக புறக்கணித்தார் (தனிப்பட்ட முறையில் அதை ஒத்துக்கொண்டாலும் கூட) அதாவது நோய்தொற்று வெடித்து பரவிக் கொண்டிருக்கையில் அவர் நடவடிக்கைகளை வலுவிழக்கச் செய்ததுடன், சர்வதேச ஒத்துழைப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்” என்று தெரிவித்தது.

மழலையர் பள்ளிகளை (K-12 பள்ளிகள்) விரைந்து திறப்பதற்கான பைடென் நிர்வாகத்தின் முயற்சிகளை முறையாக கணக்கிடுவதற்கு பதிலாக, முதலாளித்துவ பத்திரிகை அரசியல் குற்றச்சாட்டு தோல்வியை ஒரு கவனச்சிதறலாகவும் திசைதிருப்பலாகவும் காட்டியுள்ளது, அதே நேரத்தில் ஜனவரி 6 பாசிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் உண்மையான முக்கியத்துவத்தை மூடிமறைக்கிறது.

சிகாகோ மேயர் லோரி லைட்ஃபுட்டையும் மற்றும் ஆசிரியர்களுக்கான சாமானிய பாதுகாப்புக் குழுவைக் காட்டிக்கொடுத்த சிகாகோ ஆசிரியர் சங்கத்தையும் ஊடகங்கள் பாராட்டியதுடன், பள்ளிகள் ஏன் உடனடியாக திறக்கப்படவில்லை என்று கூச்சலிட்டன. வார இறுதியில், ஞாயிறு ஊடக செய்திகளைப் பயன்படுத்தி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கியின் முதன்மை நோக்கம், புதிய திரிபு வகைகள் அல்லது உச்சபட்ச சமூக நோய் பரவல் என எதுவும் பைடென் நிர்வாகம் பெருவணிக திட்டநிரலை செயல்படுத்துவதைத் தடுக்காது என்று கூறியது நிதிய தன்னலக்குழுக்களுக்கு உறுதியளிப்பதாக இருந்தது.

CBC இல் “Face the Nation” நிகழ்ச்சியில் நிகழ்ச்சி வழங்குநர் மார்கரெட் பிரென்னன், B.1.1.7 வைரஸ் திரிபு பரவி வரும் நிலையில் நேரடி வகுப்புகளை நடத்துவது பற்றி அவர் கேள்வி எழுப்பிய போது, அதற்கு டாக்டர் வாலென்ஸ்கி, “பள்ளியில் ஏற்படும் நோயின் அளவு சமூகத்தில் இருக்கும் நோயின் அளவுடன் மிகவும் தொடர்புடையது. மாணவர்களுக்கு இடையிலும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலும் மிகக் குறைவாகத் தான் நோய்தொற்று பரவுகிறது” என்று உறுதியளித்தார். என்றாலும், இத்தகைய நோய்தொற்றுக்கள் ஏற்பட்டபோது, அதற்கு முறையாக முகக்கவசம் அணியாததும், தனிப்பட்ட பொறுப்பு இல்லாததும் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். அரை மில்லியன் பேரின் இறப்பு பற்றி இதில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.

ஒட்டுமொத்த அமெரிக்க மாவட்டங்களில் 99 சதவிகித பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை மண்டலங்களாக உள்ளன, இதன் பொருள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வழிகாட்டுதல்களின் கீழ் பெரியளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமில்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவதால் நோய்தொற்று பரவும் விகிதங்கள் இன்னும் உச்சபட்சமாக உள்ளன, அநேகமாக எந்தவொரு பள்ளி மாவட்டத்திலும் அத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்த போதுமான வளங்கள் இல்லை என்பது டாக்டர் வாலென்ஸ்கிக்கு எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது.

40 மாநிலங்கள் எங்கிலும் பரவியுள்ள 1,173 இங்கிலாந்து திரிபு வகை வைரஸ் நோய்தொற்றுக்களை குறைத்துக் காட்டவே வாலென்ஸ்கி முயற்சித்தார். மேலும் இப்போது, எட்டு மாநிலங்களில் 17 தென்னாபிரிக்க திரிபு வகை வைரஸ் நோய்தொற்றுக்களும், அத்துடன் 3 பிரேசிலிய திரிபு வகை வைரஸ் நோய்தொற்றுக்களும் உள்ளன. இந்த நெருக்கடிக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கும் விதமாக, நியூயோர்க் டைம்ஸ், ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, “நாடு முழுவதுமாக பரவியுள்ள புதிய கொரோனா வைரஸின் ஏழு மரபுவழிகளை கண்டறிந்துள்ளது. அவை அனைத்தும் ஒரே மரபணு அடிப்படையிலான ஒரு பிறழ்வை உருவாக்கியுள்ளன” என்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.

வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள Q677P பிறழ்வு அக்டோபர் 23 அன்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஜனவரி 19 ஆம் தேதிக்குள், இந்த புதிய மரபுவழி வைரஸ்கள் முறையே லூசியானா மற்றும் நியூ மெக்சிகோவிலிருந்து வரிசைப்படுத்தப்பட்ட அனைத்து SARS-CoV-2 மரபணுக்களில் 28 மற்றும் 11 சதவிகிதத்தை உருவாக்குகின்றன. இந்த நோய்தொற்றுக்கள் அமெரிக்காவின் தெற்கு மத்திய மற்றும் தென்மேற்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. பிப்ரவரி ஆரம்பத்தில், அமெரிக்காவில் இந்த திரிபு வகையின் 500 வைரஸ் கிரமங்கள் உள்ளன என்று GISAID தரவு காட்டுகிறது.

இந்த புதிய திரிபு வகை வைரஸ்கள் மிகுந்த தொற்றும் தன்மை கொண்டவையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், இந்த புதிய பிறழ்வு வகைகளை பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர், ஏனென்றால் அவை மனித உயிரணுவுடன் எவ்வளவு பிணைந்து அதில் நுழைய முடியும் என்பதை தீர்மானிக்கும் ஒரு மரபணுவில் .அமைந்துள்ளன. மிகுந்த கவலை என்னவென்றால், அவற்றிற்கு உயிர்வாழும் நன்மையை வழங்கக்கூடிய, ஒரு ஒருங்கிணைந்த பரிணாம பாதையை இந்த பிறழ்வுகள் பின்பற்றுகின்றன என்பதே. உச்சபட்ச சமூக நோய் பரவலை உருவாக்குவதில், பொருந்திக்கொள்வதற்கான பரிணாம அழுத்தங்களை அவை எதிர்கொள்கின்றன.

இத்தகைய திரிபு வகை வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில், நோய்தொற்றுக்களின் விரைவான எழுச்சியை உருவாக்குவதானது சுகாதார அமைப்புமுறைகள் முற்றிலும் மூழ்கடிக்கப்படுவதற்கும், இறப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிப்பதற்கும் இட்டுச் சென்றது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் குழப்பம் என்னவென்றால், இது தொடர்பாக வசந்த காலத்தில் எடுக்கப்பட்ட வழமையான நடவடிக்கைகள் இந்த புதிய வகை வைரஸ்களை தடுப்பதற்கு வேலை செய்யவில்லை என்பதே. ஒரு ஒருங்கிணைந்த முயற்சியும், கடுமையான பூட்டுதல் நடவடிக்கையும் அதற்கு தேவைப்படுகிறது. இங்கிலாந்து திரிபு வகையுடனான தங்களது சொந்த போராட்டத்தை எதிர்கொண்ட நெதர்லாந்து மற்றும் நோர்வே நாடுகள், இந்த கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து, அவற்றின் நோய்தொற்று வளர்ச்சி வளைவுகளை மாற்றின. அத்தகைய தேர்வுகளைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்காவில் பைடென் நிர்வாகம் தடுப்பூசிகளை எண்ணிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும், வாஷிங்டன் போஸ்டின் தடுப்பூசி கண்காணிப்பு பிரிவின் கருத்துப்படி, 38.7 மில்லியன் மக்களுக்கு மட்டுமே முதல் அல்லது இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஏழு நாள் சராசரியாக ஒரு நாளைக்கு அண்ணளவாக 1.66 மில்லியன் வரை தடுப்பூசிகள் விரைந்து வழங்கப்பட்டு வந்தாலும் கூட, தேவைக்கேற்ப தடுப்பூசி விநியோகத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. கலிபோர்னியா அதன் அளவுகளில் 72 சதவீதத்திற்கும் அதிகமாக பயன்படுத்தியுள்ள அதேவேளை சில இடங்களில் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. உதாரணமாக, டோட்ஜர் ஸ்டேடியம் அதன் விநியோகத்தை முடித்துக் கொண்ட பின்னர் தடுப்பூசி வழங்கலை நிறுத்த வேண்டியிருந்தது, கடந்த வாரம் அதனிடமிருந்து 16,000 அளவுகள் மட்டுமே கிடைத்தது தான் காரணம்.

வருங்கால முழு பூட்டுதல்கள் பற்றி ஊடகங்கள் சிறிதும் விவாதிக்கவில்லை என்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. 100,000 இறப்புக்கள் அதிர்ச்சியளித்திருந்தால், 500,000 க்கும் அதிகமான இறப்புக்கள் அவர்களை உணர்ச்சியற்றவர்களாவும் கொடுமையானவர்களாவும் காட்டுகின்றன. எனவே, வைரஸை ஒழிப்பதற்கான மூலோபாயத்தை இனிமேல் ஒரு விவாதப் புள்ளியாக கருதமுடியாது என்பது ஆளும் வர்க்கத்திற்குள் ஆழமாக பதிந்து போயுள்ள சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையாக மாறிவிட்டது.

ஆயினும், இலண்டனின் இராணி மேரி பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான டாக்டர் தீப்தி குர்தாசானி, பள்ளிகளை முன்கூட்டியே திறக்கும் முனைப்பு கடந்த பல வாரங்களாக அடைந்த தேட்டங்களை வீணடிக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சனை எச்சரிப்பதில் முன்நின்றார். அவர் “பூஜ்ஜிய நிலை கோவிட்” என்று தான் அழைக்கும் கோவிட் மூலோபாயத்தை செயல்படுத்த போராடி வருகிறார்.

அவரது மூலோபாயத்திற்கு, கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன்னர், 100,000 நாளாந்த நோய்தொற்றுக்களில் இருந்து 10 க்கு குறைவான இலக்கு மட்டத்தை எட்டுவதற்கு 2 முதல் 3 மாதங்களுக்கு முழு அடைப்பு தேவைப்படும். இடைக்காலத்தில், பரிசோதனைகள், தொடர்புத் தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்புபட்ட திட்டங்களில் முதலீடு செய்வதில் அவசர கவனம் தேவை என்பதுடன், கூட்டாட்சிகளின் வசம் அது ஒப்படைக்கப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு தடுப்பூசி நெறிமுறைக்கு ஏற்ப தடுப்பூசி பகிர்ந்தளிப்பை மேம்படுத்த முடியும் - அதாவது இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு அளவு மருந்துகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகள், உள்கட்டமைப்பு முதலீட்டை மேம்படுத்துதல், மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இந்த மூலோபாயம், புதிய திரிபு வகை வைரஸ்களின் பரிணாமத்தை சுற்றியுள்ள எந்தவித நிச்சயமற்ற தன்மையையும், தடுப்பூசி செயல்திறனில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் நீக்கும்.

ஆளும் வர்க்கம் பின்பற்றி வரும் இந்த போக்கு, முதலாளித்துவ அரசாங்கங்களின் நிரூபிக்கப்பட்ட திறமையின்மைக்கு அதிக விலைகொடுத்துள்ள தொழிலாள வர்க்கத்திற்கு அதிகளவு மரணங்களையும் துன்பங்களையும் மட்டுமே விளைவிக்கும். ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் சேவகர்களிடம் நோய்தொற்றை வெளியேற்றும் தெளிவான மூலோபாயம் எதுவுமில்லை. சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் ஆரம்பம் என்ன அல்லது அது எட்டக்கூடிய கொள்கையா என்பது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. திரும்பத் திரும்ப நிகழும் நோய்தொற்று எழுச்சிகள் தொற்றுநோயின் குணாம்சமாகவும், பூட்டுதல் நடவடிக்கைகள் அதனை எதிர்க்கும் விஞ்ஞான சார்பற்ற எதிர்வினையாகவும் இருந்துள்ளன. ஏனென்றால், இலாபங்கள் தான் எப்போதும் அவர்களது முதன்மை நோக்கமாக இருப்பதால், அவர்கள் இதை உணர்வார்கள் என்ற நம்பிக்கையில்லை. அதாவது, தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே சமூக துயரத்தின் அலைகளை திசைதிருப்பி, மேலதிக உயிரிழப்புக்களை தடுக்க முடியும் என்பதாகும்.

Loading