கனடாவின் "இடது" கட்சிகள், வீகர் மக்களுக்கு எதிராக சீனா "இனப்படுகொலை" செய்கிறது என்ற பொய் வாதங்களை ஊக்குவிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கனடாவின் ஆளும் ஸ்தாபகம் அதன் சீன விரோத பிரச்சாரத்தை இரட்டிப்பாக்கி வருகிறது, இது சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலை எதிரொலிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது.

சீனா அந்நாட்டின் வீகர் இன சிறுபான்மையினருக்கு எதிராக "இனப்படுகொலை" நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டப்படுவதால், அதை 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரும் ஒரு "பகிரங்க கடிதம்" இம்மாத தொடக்கத்தில் வெளியான போது, மக்களிடையே சீன விரோதத்தைத் தூண்டுவதற்கும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதையும் நோக்கமாக கொண்ட பிரச்சாரம் ஒரு புதிய சுருதியை எட்டியது.

Members of the Uyghur American Association rally in front of the White House, Thursday, Oct. 1, 2020. (AP Photo/Jacquelyn Martin)

கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து ஐந்து கட்சிகள் மற்றும் கியூபெக் தேசிய சட்டமன்றத்தின் அனைத்து நான்கு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் —பழமைவாதிகள் மற்றும் ஜஸ்டீன் ட்ரூடோவின் தாராளவாதிகளில் இருந்து பெயரளவிலான “இடது” புதிய ஜனநாயகவாதிகள் மற்றும் ஐக்கிய கியூபெக் (Québec Solidaire) வரையில் அனைவரும்— அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

அந்த கடிதம் தொடர்ச்சியாக பல ஆத்திரமூட்டல்களையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சுமத்தியதோடு, பெய்ஜிங்கின் நடவடிக்கைகளுக்கும் ஹிட்லரின் மூன்றாம் ஜேர்மன் பேரரசு ரைஹின் இணையற்ற கொடூரமான குற்றங்களுக்கும் இடையே ஒரு சமமான அடையாளத்தை வரைய முயன்றது.

"இந்த உலக விளையாட்டு விழாவில் பங்கெடுப்பது தனது சொந்த மக்களுக்கு எதிராகவும் மனிதகுலத்திற்கு எதிராகவும் சாத்தியமானளவுக்கு மிகவும் மோசமான குற்றங்களைச் செய்யும் ஓர் ஆட்சி அதன் ஆதாயத்திற்காக நடத்தும் வஞ்சகமான, சுய-விளம்பரத்திற்கான ஒரு நாடகத்தில் பங்கெடுப்பதற்குச் சமம் என்ற அடித்தளத்தில், உலகின் எல்லா மனிதாபிமானிகளும் ஜனநாயகவாதிகளும் இந்த உலக விளையாட்டு விழாவில் பங்கேற்க மறுப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க ஒன்றிணைவதற்கு, நமக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்று அக்கடிதம் அதன் பகட்டான வாதங்களுக்கு ஒரு சிறிய ஆதாரமும் வழங்காமல் கண்டிக்கிறது. "விளையாட்டும் அரசியலும் கலக்கக்கூடாது" என்று "சிலர் வாதிடலாம். இனப்படுகொலை நடக்கும் போது, அது ஓர் அரசியல் விசயமல்ல, மாறாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டதாகும்,” என்றது தொடர்கிறது.

அந்த கடிதத்திற்காக Bloc Québécois இன் நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்சிஸ் புருனெல்லே-டூசெப் முன்முயற்சி எடுத்திருந்தார். புதிய ஜனநாயகக் கட்சியின் ஹீதர் மெக்பெர்சன் மற்றும் ஜென்னி குவான், பசுமைக் கட்சியின் எலிசபெத் மே மற்றும் பால் மேன்லி, ஐக்கிய கியூபெக் கட்சியின் சோல் ஜானெட்டி, தாராளவாத மற்றும் பழமைவாத கட்சிகளின் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் கையெழுத்திட்டவர்களில் உள்ளடங்குவார்கள்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இருந்து சீனாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பசுமைக் கட்சி தலைவர் அன்னமி பாலும் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த வாரம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அப்பெண்மணி கூறுகையில், இதற்கு பதிலாக அந்த விளையாட்டு போட்டிகளை இணைந்து நடத்துவதற்கு கனடா அமெரிக்காவுடன் இணைய பரிசீலிக்க வேண்டும் என்றார்.

கனடாவின் "இடது" கட்சிகள் என்று கூறிக்கொள்பவை, கடுமையான சீன விரோத பிரச்சாரத்தை ஊக்குவிப்பதில் அந்நாட்டின் ஆளும் உயரடுக்கின் மிக வெறித்தனமான வலதுசாரி அணிகளுடன் இணைய தயாராக இருப்பதை அந்த கடிதம் எடுத்துக்காட்டுவதுடன், இதற்கும் கூடுதலாக அந்த கடிதம் வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நலன்கள் மற்றும் இராணுவவாத திட்டநிரலை ஊக்குவிப்பது என்று வரும் போது, அங்கே கியூபெக்கின் அரசியல் ஸ்தாபகத்தின் சுதந்திரக் கட்சி (indépendantiste) கன்னைகளுக்கும் கூட்டாட்சி கட்சியாளர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆளும் வலதுசாரி கியூபெக் தேசியவாத கூட்டணியான அவெனீர் கியூபெக் (Avenir Quebec), சுதந்திர-சார்பு கியூபெகோயிஸ் கட்சி (Parti Québécois), உறுதியான கூட்டாட்சி கட்சியான கியூபெக் தாராளவாத கட்சி, மற்றும் போலி இடது மற்றும் சுதந்திர சார்பு ஐக்கிய கியூபெக் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். மொத்தம் உள்ள நான்கு கட்சிகளின் ஆதரவோடு கியூபெக்கின் அரசியல் ஸ்தாபகம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக புலம்பெயர்ந்தோர் மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக, வெட்கக்கேடான பிரச்சாரத்தை நடத்தி உள்ளது என்கின்ற நிலையில், ஒரு முஸ்லீம் சிறுபான்மையினரான வீகர் மக்களின் உரிமைகளுக்காக எழுந்து நிற்பதாகக் கூறும் அவர்களின் கூற்று குறிப்பாக எரிச்சலூட்டுவதாக உள்ளது.

சீனாவில் நடக்கவிருக்கும் விளையாட்டுகளில் பங்கேற்பது, 1936 பேர்லின் ஒலிம்பிக்கை ஆதரிப்பதற்கு நிகரானது என்று அக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் அறிவித்தார்கள். அந்த பேர்லின் ஒலிம்பிக் போட்டிகள் ஹிட்லர் தனது நாஜி சர்வாதிகாரத்தையும் மற்றும் "ஆரிய இன" மேன்மை என்று கூறப்பட்டதையும் காட்டுவதற்காக அவற்றைப் பயன்படுத்திய பின்னர் அவை "வெட்கக்கேடான விளையாட்டுக்கள்" என்று அறியப்பட்டன.

இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் இத்தகைய முரண்கலவையான வரலாற்று ஒப்பீடுகளையும் ஆத்திரமூட்டும் ஆதாரமற்ற கூற்றுக்களையும் செய்ய முடிகிறது என்றால், அதற்கு காரணம், சீனாவை அவர்கள் பூதாகரமாக காட்டுவது அமெரிக்க ஏகாதிபத்திய திட்டநிரலுடன் பொருத்தமாக இணைகிறது என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் தான். கனேடிய ஆளும் வர்க்கம் நீண்ட காலமாகவே அதன் தெற்கு அண்டை நாடுகளுடன் மிக நெருக்கமான பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு பங்காண்மையை அனுபவித்து வருகிறது.

வாஷிங்டன், போர் உட்பட அனைத்து வழிகளிலும், ஒரு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டியாளராக சீனாவின் எழுச்சியைத் தடுக்க உறுதியாக உள்ளது. ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" உடன் தொடங்கி பாசிசவாத டொனால்ட் ட்ரம்பின் ஜனாதிபதி பதவியின் கீழ் வியத்தகு முறையில் விரிவாக்கி, கடந்த தசாப்தத்தில், சீனாவுக்கு எதிரான பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய அழுத்தத்தை வாஷிங்டன் அதிகரித்துள்ளது.

ஜோ பைடெனும் அவரது வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளின்கெனும் எதை புதிய ஜனாதிபதி சீனாவுடனான "தீவிர போட்டி" என்று அழைக்கிறாரோ அதை தொடர்ந்து தீவிரப்படுத்த விரும்புவதைச் சமிக்ஞை செய்ய சிறிதும் தாமதிக்கவில்லை.

அந்த கனேடிய “பகிரங்க கடிதம்” குறிப்பிடுவதைப் போல, ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், ட்ரம்பும் அவரது தீவிர வலதுசாரி ஆதரவாளர்களும் செய்யும் வினோதமான மிரட்டும் அடாவடித்தனமான மொழியில் செய்வதற்குப் பதிலாக பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் அவர்களின் கனேடிய கூட்டாளிகளும் "மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகம்" என்ற எரிச்சலூட்டும் பிரச்சார போர்வையில், முடிந்தால், ஜி-7 ஏகாதிபத்திய சக்திகளின் நெருக்கமான கூட்டுறவுடன், வாஷிங்டன் மற்றும் ஒட்டாவா ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர விரும்புகிறார்கள். இதற்காக தான், பைடென், சீன "விரிவாக்கவாதத்தை" எதிர்ப்பதற்காக அவர் நிர்வாகம் "ஜனநாயகங்களின்" ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறுகிறார்.

மனித உரிமைகள்" ஏகாதிபத்தியம்

அமெரிக்க மற்றும் கனேடிய நிதி தன்னலக்குழுக்களின் உலகளாவிய புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதில், எந்தப் பொய்யும் மிகப் பெரிதாக இருப்பதில்லை. 1936 வாக்கில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஏனைய இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் இருதரப்பினருமே, நாஜி மரணப் படைகளுக்குப் பலியானார்கள். இன்னும் பத்தாயிரக் கணக்கானவர்கள் வதை முகாம்களில் கொடூரமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

மேலும், ஹிட்லர் ஏற்கனவே ஜேர்மனியை இரண்டாம் உலகப் போருக்கும் யூத இனப்படுகொலைக்கும் இட்டுச் செல்லும் பாதையில் கொண்டு சென்றிருந்தார். அதற்கு முந்தைய ஆண்டு, அந்த நாஜி தலைவர் (Führer) யூத-விரோத மற்றும் இனவெறி சம்பந்தமான நூரெம்பேர்க் சட்டங்கள் விதிப்பதை மேற்பார்வையிட்டிருந்தார், அவை யூதர்களின் அடிப்படை குடியுரிமைகளைப் பறித்ததுடன், யூதர்களுக்கும் யூதர்-அல்லாதவர்களுக்கும் இடையிலான பாலியல் உறவுகளை ஒரு கிரிமினல் குற்றமாக ஆக்கின.

இந்த பகிரங்கமான மற்றும் அப்பட்டமான பாகுபாடு, இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பா எங்கிலும் ஆறு மில்லியன் யூதர்களைத் திட்டமிட்டு நிர்மூலமாக்குவதற்கு வெள்ளோட்டமாக இருந்தது. உலக மேலாதிக்கத்திற்கான ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின் வெறித்தனமான முனைவைப் பின்தொடர்வதற்காக நடத்தப்பட்ட, இந்த முன்மாதிரியற்ற வரலாற்று குற்றத்திற்கு விடையிறுப்பாக தான், “இனப்படுகொலை" என்ற வார்த்தையே சர்வதேச சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

பெய்ஜிங் ஒரு இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்ற கூற்றை ஆதரிக்க அங்கே எந்த ஆதாரமும் இல்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) தலைமையிலான அந்த பொலிஸ் அரசு ஆட்சி, முதலாளித்துவச் சொத்துறவுகளை CCP மீளிருப்புச் செய்ததில் இருந்து, 1980 களில் தொடங்கி, தொழிலாள வர்க்கம் மீதான பெரும் சுரண்டலின் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்ட தன்னலக்குழுக்களின் நலன்களைப் பாதுகாக்கிறது.

வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கின் வீகர் மக்களிடையே நிலவும் பிரிவினைவாத மற்றும் எதிர்ப்புணர்வை நசுக்க அரசு அடக்குமுறையை அது பயன்படுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உலக சோசலிச வலைத்தளம் முன்னரே விளங்கப்படுத்தி இருப்பதைப் போல, எல்லாவற்றிற்கும் மேலாக CCP ஆட்சியின் அடக்குமுறை எந்திரம் சீனா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தை நோக்கி இயக்கப்படுகிறது.

மேற்கத்திய அரசியல்வாதிகள் தங்கள் கூற்றுக்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தும் "ஆதாரம்", மேற்கத்திய உளவு அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட வெளிநாடு-வாழ் செல்வந்த வீகர் இன மக்களாலும் மற்றும் வாஷிங்டனில் உள்ள கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு அமைப்பு (Victims of Communism Memorial Foundation) போன்ற கடுமையான வலதுசாரி கம்யூனிச-விரோத குழுக்களாலும் நடத்தப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட "ஆய்வுகளில்" இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

வீகர் மக்களுக்கு எதிராக சீனா ஓர் இனப்படுகொலையை நடத்தி வருகிறது என்ற கேடு விளைவிக்கும் குற்றச்சாட்டானது, அணு ஆயுதமேந்திய சீனாவுக்கு எதிராக மக்களை ஆக்ரோஷப்படுத்தி முற்றுமுதலான போருக்குத் தயாரிப்பு செய்வதற்காக மக்களின் ஆதரவை முடுக்கி விடுவதையும், விமர்சகர்களை மவுனமாக்குவதை நியாயப்படுத்துவதையும் நோக்கமாக கொண்ட ஒரு பிரச்சார சாதனமாக உள்ளது.

1990 களின் பிற்பகுதியில் சேர்பியாவின் ஸ்லோபோடன் மிலோசிவிக் ஆட்சிக்கு எதிராக ஆதாரமற்ற இனப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுகளுடன் தொடங்கி, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, ஒட்டாவாவின் ஆதரவோடு, வாஷிங்டனால் சந்தர்ப்பத்திற்கேற்ப இத்தகைய போலி மனித உரிமை சிலுவை போர்கள் நடத்தப்பட்டுள்ளன. இது பெல்கிரேட் மற்றும் பிற சேர்பிய நகரங்கள் மீது நடத்தப்பட்ட நேட்டோவின் காட்டுமிராண்டித்தனமான வான்வழிப் போருக்கும் நியாயப்பாடாக சேவையாற்றியது.

பாதுகாப்பு பொறுப்பு ஆணைக்குழுவிற்கு கிறிஸ்டைன்-மார்ட்டீனின் தாராளவாத அரசாங்கம் வழங்கிய நிதி ஆதரவால் எடுத்துக்காட்டப்பட்டவாறு, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கான ஒரு சித்தாந்த நியாயப்பாடாக "மனித உரிமைகளை" முன்நகர்த்துவதில் கனடாவின் ஆளும் உயரடுக்கு மிகைமிஞ்சிய பங்கு வகித்துள்ளது. அது போருக்கு ஆதரவான R2P கோட்பாட்டை உருவாக்கியது, எண்ணெய் வளம் நிறைந்த வட ஆபிரிக்க நாடான லிபியாவை வெறும் இடிபாடுகளாக ஆக்கிய அந்நாடு மீதான நேட்டோவின் 2011 ஆட்சி மாற்றப் போருக்கு இந்த கோட்பாடு தான் "மனிதாபிமான" மூடிமறைப்பாக சேவையாற்றியது.

கனடாவின் பாராளுமன்றத்திலும் கியூபெக் தேசிய சட்டமன்றத்திலும் உள்ள “மனித உரிமைகள்” மற்றும் “ஜனநாயகத்திற்கான” அஞ்சாநெஞ்சு மாவீரர்கள், அவர்களின் கருத்துக்களை மீறிய நாடுகளைத் தீர்மானிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் கவனமாக இருக்கிறார்கள், இந்த கவனம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வித்தியாசமின்றி ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுடன் ஒத்துப் போகிறது.

வீகர் மக்களுக்கு எதிரான பெய்ஜிங்கின் "இனப்படுகொலை" என்று கூறப்படுவதன் மீது சீறும் இந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிகள் எதுவுமே, தசாப்த கால அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களின் விளைவாக ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் பேரழிவின் மனித உரிமை பாதிப்புகளைக் குறித்து பெரிய பிரச்சினை எதுவும் செய்ததில்லை—இந்த குற்றங்களில் கனேடிய ஏகாதிபத்தியமும் ஒரு முக்கியமான வெறுக்கத்தக்க பாத்திரம் வகித்துள்ளது.

ஹைட்டியில் அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியைக் கவிழ்த்த, 2004 அமெரிக்க-கனேடிய இராணுவ தலையீட்டின் போது பாசிசவாத சக்திகளுடன் கனடா ஒத்துழைத்தது குறித்தும், அல்லது 2011 லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சின் போது கனடா “அல்-கெய்தாவின் விமானப்படையாக” செயல்பட்டது என்பதை இராணுவ உயரதிகாரிகள் பிரிவுகளே ஒப்புக் கொண்ட நிலையில் அது குறித்தும் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கவில்லை. இதே போல், உக்ரேனில் 2014 பாசிசவாத தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஒட்டாவா பெரிதும் சம்பந்தப்பட்டிருந்தது குறித்தும் அவர்களுக்கு எந்தவிதமான தடுமாற்றமும் இருக்கவில்லை, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி ரஷ்யாவின் எல்லையில் மேற்கத்திய-சார்பு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்காக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியை தூக்கியெறிந்தது.

ட்ரம்ப் முன்வைத்த ஜனநாயக அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்காவில் அவர் வழிநடத்திய பாசிசவாத இயக்கம் இவற்றை மூடிமறைக்கவும் குறைத்துக் காட்டவும் கனேடிய ஆளும் ஸ்தாபனத்தின் ஒருங்கிணைந்த முயற்சியில் புதிய ஜனநாயக கட்சியும், பசுமைவாதிகள் மற்றும் ஐக்கிய கியூபெக் கட்சியும் இணைந்துள்ளன. அவை, தனது தேர்தல் தோல்வியை மாற்றிவிடும் நோக்கில் நாடாளுமன்ற கட்டிடம் மீது ட்ரம்ப் கட்டவிழ்த்துவிட்ட ஜனவரி 6 தாக்குதலை வெறும் ஒரு சாதாரண கலவரம் என்று உதறித் தள்ளின. அவை, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒரு "வலுவான குடியரசு கட்சி" இக்கு அவர் ஆதரவை உறுதிப்படுத்தி அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் குடியரசுக் கட்சி தலைமை உடந்தையாய் இருந்ததை மூடிமறைக்க செயல்படுகிற போதும் கூட, அவர் ஜனாதிபதியாக தேர்வானதை அமெரிக்க ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு ஆதாரமாக பாராட்டுவதில் கனேடிய ஸ்தாபகத்தின் ஏனைய பிரிவுகளுடன் இணைந்துள்ளன.

அதி வலது முன்நிறுத்தும் அச்சுறுத்தல் மீது அவர்கள் மவுனமாக இருப்பது, கனேடிய ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் அவர்கள் இதே அரசியல் சக்திகளுடன் தான் ஒத்துழைக்கிறார்கள் என்ற உண்மையுடன் பிணைந்துள்ளது. ட்ரம்பின் வெளியுறவுத்துறை செயலாளரும் அவரின் நெருங்கிய அரசியல் கூட்டாளியுமான மைக் பொம்பியோ அவரை அடுத்து அப்பதவிக்கு வரும் பிளிங்கன் பெய்ஜிங்கிற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டை அரவணைத்துக் கொள்வதற்காக மட்டுமே, அவரின் செனட் சபை உறுதிப்படுத்தும் விசாரணையில், அதை டிரம்ப் நிர்வாகத்தின் கடைசி நாட்களில் தொடங்கி வைத்தார்.

கனேடிய ஏகாதிபத்தியமும் சீன-விரோத பிரச்சாரமும்

கனடாவின் வெளிவேஷமிட்ட "இடது" கட்சிகள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் இந்த பிற்போக்குத்தனமான கொள்கைக்கு அவற்றின் முழு-மூச்சு ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்ட இந்த குறிப்பிட்ட தருணத்தை தேர்ந்தெடுத்துள்ளன என்பது அரசியல் ரீதியாக முக்கியமானது. முன்னொருபோதும் இல்லாதளவிலான சமூக சமத்துவமின்மை, அதிவலது மற்றும் பாசிசவாத சூழ்ச்சிகளின் அதிகரிப்பு, கனேடிய இராணுவத்தின் பாரியளவிலான மீள்ஆயுதமேந்தும் திட்டம் மற்றும் COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் மனித உயிர்களைக் காப்பாற்றுவதை விட பெருநிறுவன இலாபத்திற்கு முன்னுரிமை அளித்தல் என இந்த நிலைமைகளின் கீழ், கனடாவின் ஆளும் வர்க்கம் பெருவாரியாக ஐயுறவு கொண்டுள்ள மற்றும் முற்றிலும் விரோதமான மக்களிடையே அவர்களின் போர்-நாடும் திட்டநிரலை விற்பதற்கு, "முற்போக்கு" புதிய ஜனநாயக கட்சியினர் மற்றும் பசுமைக் கட்சி அரசியல்வாதிகளின் தேன்சொட்டும் வார்த்தைகளையே பெரிதும் சார்ந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், கனடா ஆளும் உயரடுக்கின் மிக வலதுசாரி பிரிவுகள் ஒட்டாவாவை சீன கோலியாத் (Chinese Goliath) வரை நிற்கும் சிறிய டேவிட் என்று சித்தரிக்கும் இடைவிடாத பிரச்சாரத்துடன், சீன-விரோத பேரினவாதத்தைத் தூண்டிவிட முயன்றுள்ளன. சீன முதலீட்டாளர்கள் ஆர்டிக் தங்க சுரங்கங்களை வாங்குவது முதல் கனேடிய மற்றும் சீன கல்வியாளர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு வரையில், ஒவ்வொன்றும், கனடாவை ஓர் ஏவல் அரசு என்பதற்கும் சற்று கூடுதலாக மாற்றும் நோக்கில், பெய்ஜிங்கின் மோசமான "கம்யூனிச" ஆட்சியின் அத்துமீறல் என்பதாக சித்தரிக்கப்படுகிறது.

இந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத சொல்லாடல் பெரும்பாலும் ட்ரூடோ தாராளவாத அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, அது பெய்ஜிங்குடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாடுவதற்கான அதன் திட்டங்களைக் கைவிட்டுள்ளதுடன், முன்பினும் அதிகமாக முழுமையாக வாஷிங்டனின் சீன-விரோத தாக்குதலுக்குப் பின்னால் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் செயல்பட்டு, அது, ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீறியதாக போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் டிசம்பர் 2018 இல் ஹூவாய் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோவை கைது செய்ய உத்தரவிட்டது.

இந்த தாராளவாத அரசாங்கம் அதன் சமீபத்திய பாதுகாப்பு கொள்கையில், இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் ரஷ்யாவுடன் சேர்ந்து, சீனா கனடாவுக்கு ஓர் "உலகளாவிய அச்சுறுத்தல்" என்று அடையாளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் அமெரிக்க தலைமையிலான ஆத்திரமூட்டல்களில் கனடாவின் ஆயுதப்படைகள் அவற்றின் பங்கை விரிவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அது இராணுவ செலவினங்களில் 70 சதவீத அதிகரிப்பை அறிவித்தது.

இந்த நடவடிக்கைகளில் ஆசிய-பசிபிக் ஒரு முக்கிய இடமாகும், அங்கே கனேடிய கப்பல்கள் ஏற்கனவே தென் சீனக் கடல் மற்றும் தைவான் ஜலசந்தியில் “கடற்போக்குவரத்து சுதந்திர” பயிற்சிகளில் பங்கெடுத்துள்ளன.

"மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகத்திற்காக" நிற்பது குறித்த எல்லா உளறல்களுக்குப் பின்னால், இந்த ஒலிம்பிக்கில் இருந்து சீனாவை அகற்ற வேண்டும் என்று கோரும் அந்த பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்ட கனேடிய மற்றும் கியூபெக் அரசியல்வாதிகள் உண்மையில் ஆக்கிரமிப்பு, இராணுவவாதம் மற்றும் போருக்கான திட்டநிரலுக்கு தான் அவர்களின் உறுதியான ஆதரவை அறிவித்திருந்தனர்.

Loading