ஈரான், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை இந்திய பெருங்கடலில் கூட்டு கடற்படைப் பயிற்சிகளைத் தொடங்குகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிப்ரவரி 16 அன்று, ரஷ்யா மற்றும் சீனாவுடனான "மூலோபாயப் போட்டியை" முன்னெடுக்க நேட்டோ அதன் உச்சிமாநாட்டைத் தயாரித்தபோது, ஈரானிய மற்றும் ரஷ்ய போர்க் கப்பல்கள், இந்திய பெருங்கடலின் மூலோபாய நீர்பகுதியிலும், ஈரானின் தெற்கேயும் மற்றும் எண்ணெய் வளம் மிக்க பாரசீக வளைகுடாவின் மூலோபாய நீர்ப்பகுதிகளில் தற்போதைய கடற்படை ஒத்திகைகளை முன்னெடுத்தன. சீனப் புத்தாண்டு விழாவால் தாமதமாகிய சீனப் போர்க் கப்பல்கள் விரைவில் இதில் சேரவுள்ளன.

பைடென் நிர்வாகம் பதவியேற்றிருக்கும் போது, வெடிக்கும் மட்டத்திலுள்ள பூகோள போர் பதட்டங்களை இந்த ஒத்திகைகள் உயர்த்திக் காட்டுகின்றன. டிசம்பர் 2019 இல் நடைபெற்ற கூட்டு ஈரானிய-ரஷ்ய-சீன "கடல்சார் பாதுகாப்பு வலைய" கடற்படை பயிற்சிகளால் தொடங்கி வைக்கப்பட்ட வடிவமைப்பைத் தொடர்ந்து, இது போன்றது இரண்டாவது ஒத்திகையாகும். சிறிது காலத்திற்குப் பின்னர் வாஷிங்டன், ஜனவரி 3, 2020 அன்று பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட உயர்மட்ட ஈரானிய ஜெனரல் காஸிம் சோலிமானியை ஆணவமாக படுகொலை செய்ய உத்தரவிட்டது.

ஓமன் வளைகுடாவில் ஈரானின் தென்கிழக்கு துறைமுக நகரான சாஹ்பஹார் அருகே போர்க்கப்பல் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில், ரஷ்யா மற்றும் சீனாவுடன் முதல் கூட்டு கடற்படைப் பயிற்சியை ஈரானின் கடற்படை வெள்ளிக்கிழமை தொடங்கியது. (Iranian Army via AP)

இந்த ஆண்டு ஈரானிய-ரஷ்ய-சீன பயிற்சிகள் ஈரானின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தின் கீழும் மற்றும் COVID-19 பெருந்தொற்று நோயின் தாக்கத்தின் கீழ் இருக்கும் நிலையில் நடைபெறுகிறது. 2015 ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நீக்கிய பின்னர் ட்ரம்ப் ஈரான் மீது திணித்த பேரழிவு தரும் நிதித் தடைகளை அவர் பராமரித்து வரும் நிலையில், கடந்த மாதம் B-52 ஸ்ட்ராட்டோபோர்ட்ஸ் குண்டுவீச்சு விமானம் மூலம் பாரசீக வளைகுடாவில் ஒரு ஆத்திரமூட்டும் வகையில் சவுதி F-15 போர் விமானங்களை பாதுகாப்பு கொடுத்து அழைத்து செல்லுமாறு பைடென் உத்தரவிட்டார்.

ஈரான்-ரஷ்ய-சீன ஒத்திகைப் பயிற்சி ஈரானுக்கு எதிரான அதன் அச்சுறுத்தல்களுடன், வாஷிங்டன் இன்னும் பரந்த, பூகோள மோதலைத் தொடர்வதாகும், அது போராக வெடிக்கக்கூடும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அமெரிக்க, இந்திய, ஜப்பானிய மற்றும் ஆஸ்திரேலிய கப்பல்கள் உட்பட விமானம் தாங்கி கப்பல்களான USS Nimitz மற்றும் INS விக்ரமாதித்யா பங்கேற்ற நவம்பரில் பெரிய மலபார் 2020 கடற்படை பயிற்சிக்குப் பின்னர் குறுகிய காலத்தில் இந்த பயிற்சி வருகிறது. அமெரிக்க நட்பு நாடுகளின் "ஆசிய நாற்கரம்" என்று அழைக்கப்படுவதை இந்த கூட்டு கடற்படைகளை அணிதிரட்டுவது, இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர்களை மேற்கோளிட்டு, "சீனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சி" என்று வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தெரிவித்தது. இப்பயிற்சிகள் முடிந்த சிறிது காலத்தில், உயர்மட்ட ஈரானிய அணுசக்தி விஞ்ஞானி Mohsen Fakhrizadeh நவம்பர் 27 அன்று தெஹ்ரானுக்கு அருகே கொல்லப்பட்டார். அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இதை இஸ்ரேலிய கொலை என்று விவரித்தனர்.

ஈரானின் கடற்படைத் தலைவர் ரியர் அட்மிரல் ஹொசைன் கான்சாடி, தற்போதைய பயிற்சியானது "பிராந்தியத்திலும் வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியிலும் கூட்டு பாதுகாப்பை உறுதி செய்வதை" நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிவித்தார். இப்பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க செல்வாக்கை வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஒத்திகையின் நோக்கம் கன்சாடியின் உட்குறிப்பாகும்: "இன்று வரை பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த உலகத் திமிர், அதை விட்டு வெளியேற வேண்டும் என்பதை உணர வேண்டும் என்பதாகும்."

இந்திய போர்க் கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ளும் என்று கான்சாடி ஆரம்பத்தில் தெரிவித்த போதிலும், இந்திய கடற்படை அதிகாரிகள், இந்தப் பயிற்சியில் இந்தியா பங்கு பெறுதலை மறுத்தனர்.

ரஷ்ய பால்டிக் கடற்படை செய்தி சேவையானது கார்வெட் ஸ்டோய்க்கி மற்றும் டாங்கர் கோலா ஆகியவை இந்த பயிற்சியில் பங்கு கொள்ளும் என்று கூறியுள்ளது. "ரஷ்ய மற்றும் ஈரானிய மாலுமிகள் கூட்டு படைத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள், கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஒரு வணிகக் கப்பலை விடுவிப்பது, அத்துடன் ஆபத்திலுள்ள ஒரு கப்பலில் ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீயை அணைப்பது" என்று அது கூறியது. கப்பல்களின் மேற்பரப்பு இலக்குகள் மீது பீரங்கிகளால் சுடுதல், தேடுதல் ஒளி சமிக்ஞைகள் மற்றும் கடற்கொள்ளை அல்லது நாசவேலை நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு ஆகியவற்றை பயிற்சி செய்யும் என்று அது மேலும் கூறியது.

பெப்ருவரி 8ம் திகதி ஈரானுக்கான ரஷ்ய தூதர் Levan Dzhagaryan பயிற்சிகளை அறிவித்தபோது, மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குகின்ற அமெரிக்க மத்திய கட்டளைக் குழுவின் தளபதி ஜெனரல் கென்னத் எப். மெக்கென்சி வாஷிங்டனில் மத்திய கிழக்கு நிலையத்தில் அதைக் கண்டித்தார்.

அவர் கூறினார், "CENTCOM [நடவடிக்கைகளின் பகுதி] மற்றும் எப்போதும் உலகளாவிய நலன்களின் ஒரு குறுக்கு வழியாகவும், வரலாற்று ரீதியாக, வெளிநாட்டு சக்திகள் வளங்களுக்காகவும் மற்றும் அணுகலுக்கான செல்வாக்கிற்காகவும் போட்டியிடுவதற்கான ஒரு முக்கிய களமாக இருந்து வருகிறது. 2020 இல், ரஷ்யாவும் சீனாவும் ஒரு நடப்பு பிராந்திய நெருக்கடியை சுரண்டிக் கொண்டன; நிதி உள்கட்டமைப்பு தேவைகள்; குறைந்து வரும் அமெரிக்க ஈடுபாட்டை உணர்தல்; மற்றும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் முழுவதும் தங்கள் நோக்கங்களை முன்னெடுக்க COVID-19 இனால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளை பிராந்தியத்தில் கால்பதிக்கின்றன அல்லது வலுப்படுத்துகின்றன."

"பயங்கரவாத அமைப்புக்களின்" ஆதரவாளராக ஈரானை முத்திரை குத்துகின்ற அதேவேளை, "சிரியா மற்றும் யேமனில் காணப்படும் ஸ்திரமின்மையை" உந்துவதற்காக, மெக்கென்சி மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கையும் தாக்கினார்.

"வாய்ப்புகள் தங்களை முன்நிறுத்துவதாக, ரஷ்யா அமெரிக்காவின் பிரசன்னத்திற்கு தொடர்ந்து சவால் விடும்" என்று அவர் கூறினார். "பிராந்திய மோதல்களுக்கு மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்வதன் மூலம்" மேற்கிற்கு ஒரு மாற்றீடாக சேவை செய்ய மாஸ்கோவின் முயற்சிகளை அவர் மேற்கோள்காட்டி, "பிராந்திய மற்றும் பல்தரப்பு அமைப்புக்கள் மற்றும் இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம்" அதன் செல்வாக்கை அதிகரிக்கவும் செய்கிறது என்று அவர் தெரிவித்தார். மத்திய கிழக்கில் சீனாவின் செல்வாக்கையும் பிரசன்னத்தையும் விரிவாக்க சீனா அதன் "ஒரே இணைப்பு ஒரே பாதை" முன்முயற்சியையும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தையும் பயன்படுத்துகிறது" என்றும் அவர் மேலும் கூறினார்.

COVID-19 பெருந்தொற்று நோய் மற்றும் அதன் மத்திய கிழக்கு கொள்கையின் பொறிவிற்கு அதன் பேரழிவுகரமான விடையிறுப்பின் மத்தியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு தீர்க்கமுடியாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து மூன்று தசாப்தங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முக்கிய இராணுவ எதிர்த்தன்மை அகற்றப்பட்டு, வாஷிங்டனானது ஈராக்கிலிருந்து ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா வரை ஆக்கிரோஷமான போர்களை நடத்திவந்தது. மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களையும், டிரில்லியன் கணக்கான டாலர்களையும் பறித்ததுடன், இந்தப் போர்கள் தலைகீழாக மாறவில்லை, மாறாக அமெரிக்க வீழ்ச்சியைத்தான் தீவிரப்படுத்தியது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், அமெரிக்க படைகள் மதிப்பிழந்ததுடன், தாங்கள் படையெடுத்த நாடுகளில் படைகளின் எலும்புக் கூடுகளை திரும்பப் பெற்றனர் அல்லது விட்டுவிட்டனர்.

மத்திய கிழக்கு முழுவதிலும் பெரும் பாதுகாப்பு மூலோபாய தளங்களில் பரந்த கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்தை வாஷிங்டன் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அதேவேளை, இது பல தசாப்தங்களாக ஆழம் அடைந்திருக்கும் பூகோளப் பொருளாதாரம் மற்றும் வர்க்க உறவுகளில் ஆழ்ந்த மாற்றங்களில் வேரூன்றிய ஒரு நெருக்கடியை தீர்க்க முடியாது.

2011ல் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அது தொடங்கிய ஆட்சி மாற்றத்திற்கான பினாமிப் போரில் ஆதரவு பெற்ற அல் கொய்தா தொடர்புடைய படையை எதிர்ப்பதற்காக, ரஷ்யாவும் ஈரானும் தலையிட்டன. சிரியாவில் அமெரிக்கா, ஐரோப்பிய, ரஷ்ய, ஈரானிய மற்றும் துருக்கி படைகள் அனைத்தும் தலையிடும் நிலையில், நாடு ஒரு அரை மில்லியனுக்கும் அதிகமானவர்களை இழந்துள்ளது; 10 மில்லியன் சிரியர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

போரில் நேட்டோவின் தோல்வி, அதன் பினாமிகள் இப்போது சிரியாவின் நிலப்பகுதியில் ஒரு சிறிய பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் COVID-19 க்கு அமெரிக்க விடையிறுப்பும் தோல்வியடைந்துள்ளதால், சீனா இப்பிராந்தியத்தில் பல நாடுகளுக்கு முக்கிய வர்த்தகப் பங்காளியாக உருவெடுத்துள்ளதுடன் பிராந்தியத்தில் மறுநோக்குநிலையுடன் கைகோர்த்துச் சென்றிருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் நியூயோர்க் டைம்ஸ், சீனாவும் ஈரானும் 25 ஆண்டு கால வர்த்தக மற்றும் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்ற செய்தியை வெளியிட்டது. ஒரு எச்சரிக்கையான கட்டுரையில் அது எழுதியது: "அமெரிக்கா பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸிலிருந்தும், சர்வதேச அளவில் பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டும் இருக்கும் நேரத்தில், பெய்ஜிங் அமெரிக்காவின் பலவீனத்தை உணர்கிறது. ஈரானுடனான வரைவு ஒப்பந்தம், பெரும்பாலான நாடுகளைப் போலன்றி, ஜனாதிபதி ட்ரம்ப் தொடுத்த வர்த்தகப் போரில், அமெரிக்க தண்டனைகளை தாங்கும் வல்லமை படைத்த அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் நிலையில் சீனா இருப்பதாக உணர்கிறது என்பதை காட்டுகிறது."

ஈரானிய தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பில் சீன முதலீட்டின் 400 பில்லியன் டாலர்களின் அடிப்படையில் இந்த கூட்டணியை டைம்ஸ் "ஒரு பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டு" என்று அழைத்தது. "நியூ யோர்க் டைம்ஸ் ஆல் பெறப்பட்ட 18 பக்க முன்மொழியப்பட்ட உடன்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கூட்டாண்மையானது வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், இரயில்வே மற்றும் டஜன் கணக்கான பிற திட்டங்களில் சீனாவின் இருப்பை விரிவுபடுத்தும். இதற்கு ஈடாக, சீனா ஒழுங்காக -ஈரானிய அதிகாரி மற்றும் எண்ணெய் வர்த்தகரின் கருத்துப்படி- அடுத்த 25 ஆண்டுகளில் ஈரானிய எண்ணெய் விநியோகத்தில் பெரிதும் விலைகுறைப்பை பெறும்.

பிராந்திய உள்கட்டமைப்பில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதையும், கடற்படை விவகாரங்களிலும், பிராந்தியத்தின் முக்கியமான எண்ணெய் வர்த்தகத்திலும் சீனாவின் செல்வாக்கு தொடர்புடைய வளர்ச்சிக்கான சாத்தியத்தையும் டைம்ஸ் சுட்டிக்காட்டியது. இலங்கையில் அம்பாந்தோட்டை மற்றும் பாகிஸ்தானில் குவாடர் போன்ற இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் BRI திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சீனத் துறைமுகங்கள், "தென் சீனக் கடலில் இருந்து சூயஸ் கால்வாய் வரை எரிபொருள் நிரப்புதல் மற்றும் மறுவிநியோகம் நிலையங்களின் ஒரு நெக்லஸ் வலையமைப்பாகும். வணிக ரீதியாக இயல்புகொண்டுள்ள துறைமுகங்களானது இராணுவ மதிப்பைக் கொண்டுள்ளன, சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் கடற்படை அதனை அடைய விரிவாக்கம் செய்ய அனுமதிக்கிறது."

சவுதி அரேபியா போன்ற ஈரானின் பிராந்திய போட்டியாளர்களுடன் நெருக்கமான வணிக உறவுகளைக் கொண்டுள்ள பெய்ஜிங் ஈரானுடன் அதன் உறவுகளை சமன்படுத்த முயற்சிக்கிறது என்றாலும், இந்த உடன்படிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், சீன நிறுவனங்கள் சமீபத்தில் முன்னாள் சோவியத் மத்திய ஆசியா வழியாக சீனாவை தெஹ்ரானுடன் இணைக்கும் இரயில் பாதைகளை நிறைவு செய்த நிலையில், அமெரிக்க இராஜதந்திர ஆதாரங்கள் சிரியாவை மறுகட்டமைப்பிற்கு சீனா நிதி உதவி செய்யும் என்று ஊகம் செய்தது, இது 200 பில்லியன் டாலர்களுக்கும் 1 டிரில்லியன் டாலருக்கும் இடையில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள், இறுதி ஆய்வில், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். ரஷ்யா மற்றும் சீனா இரண்டிலும் அணு ஆயுத எதிர்ப்பாளர்களை எதிர்கொண்டாலும், புதுப்பிக்கப்பட்ட போர்கள் மற்றும் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளுடன் வாஷிங்டன் தனது நிலைப்பாட்டின் வளர்ந்து வரும் பலவீனம் மற்றும் நெருக்கடிக்கு பதிலளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈரானிய, ரஷ்ய மற்றும் சீன முதலாளித்துவ ஆட்சிகளைப் பொறுத்தவரை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு அல்லது ஏகாதிபத்திய ஆதிக்க உலக ஒழுங்கின் நெருக்கடிக்கு அவை முற்போக்கான தீர்வு எதையும் கொண்டிருக்கவில்லை. வாஷிங்டனுடன் ஒப்பந்தங்களைக் குறைக்கும் மற்றும் அவற்றின் இராணுவங்களுடன் அதை அச்சுறுத்துவதற்கு ஆற்றொணா முயற்சிகளுக்கு இடையே ஊசலாடும், அவை உலக அணுவாயுத போரின் விளிம்பில் உலகை கொண்டுவருகின்றன.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச, சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசரமாக இருக்கிறது. அத்தகைய இயக்கம் COVID-19 பெருந்தொற்று நோயைத் தடுக்க விஞ்ஞான ரீதியாக இயக்கப்படும் ஒரு உலகக் கொள்கைக்காகப் போராடுவது மட்டுமல்லாமல், போருக்கு உந்துதலுக்கு வழிவகுக்கும் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிந்து போரின் ஆபத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

Loading