கொழும்பு துறைமுகத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்திற்காக! இந்திய-விரோத பிரச்சாரத்தை எதிர்த்திடு! சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) இந்தியா மற்றும் ஜப்பானுடனான ஒரு கூட்டு முயற்சியாக பராமரிப்பதற்கான முந்தைய ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதை துறைமுக அதிகாரசபையின் கீழ் “அபிவிருத்தி செய்வதாக இலங்கை அரசாங்கம் திங்களன்று அறிவித்தது. இந்தியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில், துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) தனியாருக்குச் சொந்தமான வசதியாக உருவாக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

சிங்கள-பௌத்த தீவிரவாதிகளுடன் அணிசேர்ந்து நிற்கும் துறைமுக தொழிற்சங்கங்கள், முனையத்தை இந்தியாவுக்கு விற்கக் கூடாது என்று கோரி முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரதிபலிப்பாக ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது. தனியார்மயமாக்கலுக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பைப் பிளவுபடுத்துவதற்கும், இலங்கைத் தொழிலாளர்களை இந்தியாவில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராக நிறுத்துவற்குமே தொழிற்சங்கங்களின் கடுமையான இந்திய-விரோத பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

2020 ஆகஸ்ட்டில் கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம். இந்தியா, இலங்கையை விழுங்குவதாக பதாகை சித்தரிக்கின்றது (Photo: WSWS media)

அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, வணிக, தொழில்துறை மற்றும் சேவைகள் முற்போக்கு சங்கத் தலைவர் ஷியாமல் சுமனரத்ன, “முனையத்தை இந்தியாவுக்கு ஒப்படைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வென்றதாக அறிவித்தார். சுமனரத்னவின் தொழிற்சங்கத்தை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) நடத்துகிறது.

சுமனரத்னவின் போலியான கூற்று ஒருபுறம் இருக்க, உண்மையில் தொழிலாளர் வர்க்கம் எதையும் பெறவில்லை. அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டம் துறைமுகத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தொடர்வதோடு வேலை வெட்டு, ஊதிய வெட்டு மற்றும் வேலைச் சுமை அதிகரிப்பும் தொடரும்.

முன்னர், துறைமுக ஊழியர்களை கொடிய தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் தொடர்ந்து வேலை செய்ய நிருப்பந்திப்பதற்காக அத்தியாவசிய சேவைச் சட்டத்தை விதித்த இராஜபக்ஷ, கடந்த வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் இந்த அடக்குமுறை நடவடிக்கையை புதுப்பித்தார். முன்னதாக, 'பொருளாதாரத்தை மீண்டும் திறக்கவும்' துறைமுகத் தொழிலாளர்களின் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் நசுக்குவதற்குமே இந்த கொடூரமான சட்டம் விதிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டமானது இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் பிரச்சினைகளை கூர்மையாக எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கீழறுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தில் காலடி வைக்க இந்திய அரசு உறுதியாக உள்ளது. சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போர் தயாரிப்புகளில் இந்தியாவை ஒரு முன்னணி அரசாக மாற்றுவதை பிரதமர் நரேந்திர மோடி தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்த ஆழ்கடல் கடற்படை வசதியியை அதன் பொருளாதார நன்மை காரணமாக மட்டுமன்றி, முதன்மையாக மேற்கூறிய புவி-மூலோபாய கணக்கீடுகளின் காரணமாகவுமே, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு கிழக்கு முனையத்தின் நிர்வாகத்தை ஒப்படைக்க புது டில்லி திட்டமிட்டது. 2013ல் தனியார்மயமாக்கப்பட்ட, சீனாவுக்கு சொந்தமான, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்திற்கு (சி.ஐ.சி.டி.) அருகிலேயே இந்த முனையம் அமைந்துள்ளது.

2019 மே மாதம் கையெழுத்திடப்பட்ட கிழக்கு முனைய ஒப்பந்தம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியமைக்கு பிரதிபலிப்பாக, துறைமுக தொழிற்சங்கங்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தின. கடந்த மாத தொடக்கத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த விடயத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்தார். ஜெயசங்கரின் கோரிக்கைக்கு ராஜபக்ஷ ஒப்புக்கொண்டார்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. கட்டுப்பாட்டிலான வணிக, தொழில்துறை மற்றும் சேவைகள் முற்போக்கு சங்கத்துடன், இலங்கை சுதந்திரக் கட்சியின் துறைமுக ஊழியர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அனைத்து இலங்கை துறைமுக தொழிலாளர் பொது சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்களும் இந்த பிரச்சாரத்தில் இணைந்துகொண்டன.

'கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்' என்று அழைக்கப்படுவதில் இணைந்துகொண்ட மற்ற அமைப்புகளில் தேசிய பிக்குகள் முன்னணி மற்றும் இதே போன்ற தீவிரவாத சக்திகளும் அடங்கும். ஆளும் அரசாங்க கூட்டணியின் இனவாத பங்காளிகளான தேசிய சுதந்திர முன்னணியும், பிவித்துரு ஹெல உறுமய உடன் சேர்ந்து போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) இந்த பிரச்சாரத்தை ஆதரித்தது. இந்த ஊதுகுழல் கும்பலின் மேல் வெட்கமின்றி ஏறி அமர்ந்துகொண்ட மு.சோ.க., இந்திய-விரோத பிரச்சாரத்தை துறைமுகத்தை பாதுகாப்பதற்கான ஒரு 'வெகுஜன இயக்கம்' என்று புகழ்ந்தது.

கடந்த திங்கட்கிழமை, தொழிற்சங்கங்கள் ஒத்துழையாமை பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதாக அச்சுறுத்தியதை அடுத்து, அரசாங்கம் பின்வாங்கி, கிழக்கு முனைய ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது.

தொழிற்சங்க பிரச்சாரத்தின் பேரினவாத தன்மை ஒருபறம் இருக்க, துறைமுகத் தொழிலாளர்களின் எதிர்ப்பு, தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளை போராட்டத்திற்கு வர ஊக்குவிக்கும் என்று இலங்கை அரசாங்கம் முதலில் அஞ்சியது. சமூக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் மோசமான தாக்குதல்கள் மற்றும் கொவிட்19 வைரஸ் பரவல் சம்பந்தமாக அதன் குற்றவியல்தனமான பதிலிருப்பு குறித்து தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.

இரண்டாவதாக, சமீபத்திய தேர்தல்களில் தான் அணிதிரட்டிக்கொண்ட இந்த வலதுசாரி தேசியவாத சக்திகளின் 'எதிர்ப்பு', அவரது ஆட்சியின் பலவீனத்தை அம்பலப்படுத்தும் என்று ஜனாதிபதி இராஜபக்ஷ பீதியடைந்து இருக்கிறார்.

ஒரு ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. சிரேஷ்ட அமைச்சர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கூறியது போல், துறைமுகத்தை தனியார்மயமாக்குவது குறித்த கிளர்ச்சி “ஆக்கிரோஷமான தேசியவாதிகளும் சிவில் சமூக குழுக்களும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்குவதால், அவரது [இராஜபக்ஷ] பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. ஜனாதிபதி அதிருப்திக்கு ஆளாகிவருகிறார்.'

தொழிற்சங்கங்களாவன முதலாளித்துவ அரசு மற்றும் தீவிர வலதுசாரி சக்திகளின் கருவிகளே தவிர வேறொன்றுமில்லை என்பதையும், அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் பொலிஸ் படையாக செயல்படுகின்றன என்பதையும் நிரூபித்துள்ளன. மேலும் சர்வாதிகார ஆட்சி முறைகளை நோக்கிய இராஜபக்ஷவின் அனைத்து நகர்வுகளையும் அவை அங்கீகரிக்கின்றன.

பேர்போன இனவாத பௌத்த பிக்குவான எல்லே குனவன்ச, தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருடன் சேர்ந்துள்ளார். ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தொழிற்சங்கத் தலைவர் ஷியாமல் சுமனரத்ன, முன் வரிசையில் இடதுபுறத்தில் இருந்து இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறார்.

இந்திய-விரோத ஆர்ப்பாட்டத்தின்போது, தொழிற்சங்கங்கள், ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதி, கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டதுடன், கிழக்கு முனையத்தை ஒரு இலாபகரமான 'தேசிய சொத்தாக' அபிவிருத்தி செய்யவும் உறுதியளித்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துறைமுகத்தில் தொழில் வெட்டு, வேலை நிலைமைகள் வெட்டு மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பை முன்னெடக்க நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதாகும்.

சுருக்கமாக கூறுவதெனில், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் பெருவணிக வேலைதிட்டத்தை அடிப்படையில் எதிர்க்கவில்லை, அதே வேளை வேலைநிறுத்தங்களையும் தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நசுக்குவதில் தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க விரும்புகின்றன.

துறைமுகத் தொழிலாளர்கள் துறைமுகத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ள அதேவேளை, தொழிற்சங்கங்கள் நாசவேலை செய்து அவர்களின் போராட்டங்களை காட்டிக் கொடுத்து வந்துள்ளன.

1999 இல், தெற்காசிய நுழையவாயில் முனையத்தை (SAGT) தனியார்மயமாக்குவதை எதிர்த்து துறைமுகத் தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கை எடுத்தனர். அந்த போராட்டம் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது. 2013 இல், துறைமுக தொழிற்சங்கங்கள் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்குவதற்கு ஒப்புதல் அளித்தன.

சிறிசேன-விக்ரமிசிங்க அரசாங்கம், 2019 மே மாதம் கிழக்கு முனையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சியான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு, துறைமுக தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், அதை இந்தியாவுக்கு விற்றுத்தள்ளும் ஒப்பந்தம் என கண்டனம் செய்தது. இது 2019 நவம்பரில் இராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

தனியார்மயமாக்கலுக்கான துறைமுகத் தொழிலாளர்களின் எதிர்ப்பு, கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் வெடித்தது. ஜூலை 31 அன்று சுமார் 10,000 தொழிலாளர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிற்சங்கங்கள் இந்திய விரோத பேரினவாதத்தைத் தூண்டிவிட்டு, தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்த பௌத்த குழுக்களை அழைத்து வந்தன.

துறைமுக வசதிகளின் முந்தைய தனியார்மயமாக்கலால் துறைமுக ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக சுமார் 10,000 நிரந்தர தொழில்கள் தனியார் முதலீட்டாளர்களால் அழிக்கப்பட்டுள்ளதுடன் துறைமுக அதிகாரசபை நிர்வாகத்தால் செலவு வெட்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர தொழில்கள் குறைக்கப்பட்டு, சில சமூக சலுகைகள் அல்லது ஓய்வூதிய உரிமைகளுடன் மோசமான சுரண்டல் நிலையில் உழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து, கிழக்கு முனைய ஒப்பந்தத்தை மீறுவதற்கான அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச முடிவு குறித்து புது தில்லியின் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அமெரிக்காவின் ஆதரவை கொண்ட இந்தியா இந்த பிரச்சினையை இலகுவாக எடுத்துக் கொள்ளாது, அல்லது இலங்கையையோ அல்லது பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாட்டையோ சீனாவுக்கு எதிரான தனது புவிசார் மூலோபாய தயாரிப்புகளை கீழறுக்க அனுமதிக்காது.

முன்நிலை சோசலிசக் கட்சி, தொழிற்சங்கத்தின் இந்திய-விரோத பிரச்சாரத்தை ஆதரிப்பதிலும், எதிர்ப்போக்கு பேரினவாத குழுக்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் சந்தோசமாக தோள்களை உரசிக்கொள்வதிலும் மிக இழிவான பாத்திரத்தை வகித்துள்ளது.

மு.சோ.க. தலைவர் துமிந்த நாகமுவ, பேர்போன இனவாத பௌத்த பிக்குவான எல்லே குணவன்சவுடன் சேர்ந்து ஒரு நிருபர்கள் மாநாட்டில் துறைமுகத்தைப் பற்றி பேசுகின்றார்.

திங்கட்கிழமை அரசாங்கத்தின் முடிவுக்குப் பிறகு, மு.சோ.க. தலைவர் புபுது ஜயகொட, “அரசாங்கம் வெகுஜன சக்திக்கு முன்பாக மண்டியிட்டது. நாங்கள் முன்வைத்த கோஷம் வென்றது,” என்று ஊடகங்களிடம் கூறினார். 'இது போன்ற வெகுஜன இயக்கங்களை' கட்டியெழுப்புவதில் தனது கட்சி தொடர்ந்து ஈடுபடும் என்றும் ஜயகொட மகிழ்ச்சியுடன் கூறினார்.

மு.சோ.க.வை பொறுத்தவரை, 'வெகுஜன சக்தி' என்பது, அதிகாரத்துவம் மற்றும் சிங்கள-பௌத்த தீவிரவாதிகளுடன் கூட்டுச் சேர்வதே அன்றி, தொழிலாள வர்க்கம், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட இளைஞர்களை ஐக்கியப்படுத்துவது அல்ல. கடந்த ஏப்ரலில், பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதிய மு.சோ.க., 'வேறுபாடுகள் இருந்தபோதிலும்' தொற்றுநோய்க்கான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளுக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தது.

இந்த சந்தர்ப்பவாத அமைப்புகளை நிராகரிப்பதன் மூலமும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் அனைத்து தாக்குதல்களுக்கும் எதிராக தமது அரசியல் மற்றும் தொழில்துறை பலத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலமும் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் முன்னேற முடியும். தொழிலாளர்கள் தங்கள் சுயாதீன அதிகாரத்தை பயன்படுத்த, தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து விடுபட்டு, தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் பயன்படும் இந்திய-விரோத பேரினவாதம் உட்பட தேசியவாதம் மற்றும் தேசபற்று விஷமத்தனங்களை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அவர்கள் இன வேறுபாடுகளை கடந்து, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும்.

அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பு மற்றும் ஆழமான அரசியல் பிளவுகளுக்கு மத்தியில், ஜனாதிபதி இராஜபக்ஷ ஜனநாயக உரிமைகள் மீதான தனது தாக்குதலை முடுக்கிவிட்டு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வார்.

அனைத்து சமூக உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் தனியார்மயமாக்கலைத் தோற்கடிப்பதற்கும் போராடும் ஒரே வழி பெரிய வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதும் வெளிநாட்டுக் கடன்களை இரத்துச் செய்வதுமே ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்த, தொழிலாளர் வர்க்கமானது கிராமப்புற ஏழைகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை தம் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும். இது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாவதோடு ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதில் இருந்தும் பிரிக்க முடியாதது ஆகும். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதை ஒரு வெகுஜன கட்சியாக உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading