அசான்ஜிற்கான சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதை அவரது துணைவி அம்பலப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலியன் அசான்ஜின் கூட்டாளியும் அவரது இரண்டு இளம் குழந்தைகளின் தாயாருமான ஸ்டெல்லா மொரிஸ் கடந்த வாரம் தனது இணையதள இடுகையில், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கு எதிராக கடந்த மாதம் தொடக்கத்தில் பிரிட்டிஷ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் கூட, அவருக்கான அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவது பற்றி குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்காக அசான்ஜ் மீது வழக்கு தொடர அமெரிக்கா முயற்சிக்கும் இக்கட்டான சூழ்நிலையில், ஜனநாயகக் கொள்கை குறித்த விவகாரங்கள் பற்றி மிகச் சுருக்கமான விளக்கத்தை மொரிஸ் வழங்கியுள்ளதோடு, அசான்ஜின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான சட்ட பிரச்சாரத்தின் தற்போதைய நிலவரம் பற்றி அவரது ஆதரவாளர்களுக்கு இன்றளவிலான தகவல்களையும் வழங்கியுள்ளார்.

அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை தடைசெய்யும் ஜனவரி 4 தீர்ப்பு, கடந்த ஆண்டு விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட அவரது “விரிவான மருத்துவ சான்றுகளை” “கவனத்தில் கொண்டு” வழங்கப்பட்டது என்று மொரிஸ் விளக்கமளித்தார்.

ஈக்வடோரிய தூதரகத்தில் அசான்ஜூம் மொரிஸூம் (நன்றி: விக்கிலீக்ஸ்) [Photo: WikiLeaks]

அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது “அடக்குமுறையாக” இருக்கும் என்ற அடிப்படையில் தான் தடுக்கப்பட்டது. மேலும், அசான்ஜ் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டிருப்பாரானால், கடுமையான மனச்சோர்வு உள்ளிட்ட அவரது உடல்நலப் பிரச்சினைகளினாலும், மற்றும் அமெரிக்க சிறை அமைப்பின் கொடூரத் தன்மையினாலும், அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் பெரும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுதி நாட்களில், ஒரு முறையீட்டிற்கு முறையாக சமிக்ஞை செய்து அமெரிக்கா உடனடியாக பதிலிறுத்தது. ட்ரம்பை அடுத்து பதவிக்கு வந்த ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜோ பைடென் தனது முதல் வார அலுவலகப் பணியில், அமெரிக்க நீதித்துறை அசான்ஜைப் பின்தொடர்வதை கைவிடுமாறு சிவில் உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகள் விடுத்த அழைப்புகளை நிராகரித்தமை துன்புறுத்துவதிலுள்ள இரு கட்சி தன்மையை நிரூபிக்கிறது.

அமெரிக்க அரசு சார்பு வழக்குதொடுநர்கள் அவர்களது மேல்முறையீட்டைத் தொடர அனுமதிக்கப்படுமா என்பதை மார்ச் 29 ஆம் தேதிக்குப் பின்னர் நீதிமன்றம் தீர்மானிக்கும். பாதுகாப்புக்கான அடுத்த கட்டம் அமெரிக்க முறையீட்டுக்கான பதிலை வழங்குவதாக இருந்தது என்று மொரிஸ் தெரிவித்தார்.

அடுத்து அவர், நீதிபதி வனேசா பாரைட்சரின் ஜனவரி 4 தீர்ப்பின் ஜனநாயக விரோத தாக்கங்களை மறுபரிசீலனை செய்தார். இத்தீர்ப்பு அசான்ஜின் உடல் ஆரோக்கியம் குறித்து அவரை ஒப்படைப்பதை மறுத்தது, என்றாலும், “பரந்த பொது நல வாதங்களின் பேரில் அவருக்கு பக்கபலமாக இருக்கவில்லை.”

பாரைட்சர் அநேகமாக அனைத்து வழக்குகளின் முக்கிய வாதங்களையும் ஆதரித்தார், அதாவது, அம்பலப்படுத்தப்படும் இரகசியங்கள் பொது நலன் தொடர்புபட்டவையாக பார்க்கப்படாமல், “வகைப்படுத்தப்பட்டவையாகவும்” “தேசிய பாதுகாப்பு” முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் பார்க்கப்படுவதால், ஊடகவியலாளர்கள் மற்றும் பிரசுரிப்பாளர்களை தண்டிப்பதற்கான அரசாங்கங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதாகவே இது உள்ளது.

உளவுத்துறை சட்டக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் உச்சகட்டமாக, அசான்ஜை தசாப்த காலமாக அமெரிக்கா பின்தொடர்வதற்கு அரசு தரப்பு வலியுறுத்துவதை பாரைட்சர் நிராகரித்தது அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்தது என்பதுடன், ஊடக சுதந்திரத்துக்கு எதிராக மேலும் ஒரு வெற்றிகரமான வழக்கு தாக்குதலைத் தொடுக்கும் என்பதைக் காட்டியது.

மொரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “இங்கிலாந்து நீதிமன்றம் அசான்ஜின் ஒப்படைப்பை முறையாக இரத்து செய்து, ஏனைய காரணங்களையும் மறுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அசான்ஜை நாடுகடத்துவது என்பது அமெரிக்காவில் மட்டுமல்லாது, இங்கிலாந்திலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் ஊடகங்களை குற்றவாளியாக்கும் ஒரு முயற்சியாகும்; மேலும், ஜூலியனை குற்றம்சாட்டும் முடிவு [அமெரிக்க-இங்கிலாந்து ஒப்படைப்பு] ஒப்பந்தத்தை மீறுவதான, அவரது மனித உரிமைகளை மீறுவதான மற்றும் ஒரு துஷ்பிரயோகமான ஒரு அரசியல் நடவடிக்கையாக இருந்தது பற்றி கண்டுபிடிக்கவும் நாங்கள் விரும்பினோம்.”

“ஜூலியனின் ஒப்படைப்பு குழு இந்த விவகாரங்கள் அனைத்தையும் பரிசீலித்து வருகின்றது, என்றாலும் அவர்களால் குறுக்கு முறையீடு செய்ய முடியுமா என்பது தெரியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

அசான்ஜின் திறமை வாய்ந்த பாதுகாப்புக் குழு பரிசீலிப்பது தொடர்பான சட்ட உத்தி மற்றும் தந்திரோபாயங்கள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி சிக்கலான பிரச்சினைகள் உள்ளன. பாரைட்சர் தீர்ப்பின் ஜனநாயக விரோத கூறுகளின் முறையீடு, ஊடக சுதந்திரம் மீதான பரந்த தாக்குதலை எதிர்க்கும் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸின் தீர்மானத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதையும், மற்றும் அவரை ஒப்படைக்க வைத்து அவர் மீது வழக்கு தொடர்வதற்கான அமெரிக்காவின் முயற்சியின் மிகப்பரந்த தாக்கங்கள் குறித்து மேலும் கவனத்தை ஈர்ப்பதையும் இந்த குழு பரிசீலித்து வருவது உண்மை.

பாரைட்சர் தீர்ப்பின் அரசியல் ரீதியாக கணக்கிடப்பட்ட தன்மை நிரூபிக்கப்பட்டது, இது அமெரிக்க நீதித்துறை நிலைநாட்ட முற்படும் ஆபத்தான முன்னுதாரணத்தை அவர் ஏற்றுக்கொண்டதனால் மட்டுமல்ல, மாறாக நாடுகடத்துவது தடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னரும், அசான்ஜூக்கு பிணை வழங்க மறுத்ததன் மூலமாக நிரூபணமானது.

பயண வழிகள் கோவிட்-19 தொற்றுநோயால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள போதிலும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அசான்ஜ் “தப்பிச்செல்லும் அபாயம்” இருப்பதாக வழக்குரைஞர்கள் கூறியதற்கு ஒத்தூதி, பாரைட்சர் பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார். தனிச்சிறப்பு வாய்ந்த தீர்ப்பு என்னவென்றால், அசான்ஜ் அதிகபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தான், இத்தீர்ப்பு அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்ட முதல் நீதிமன்றத்திலேயே ஒப்படைப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் பேரில் வழங்கப்பட்டது.

“ஒரு குற்றமற்ற அப்பாவி மனிதரான ஜூலியன், 500 நாட்களுக்கும் மேலாக உயர் பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்,” என்றும், “அவர் தனது குழந்தைகளுடன் வீட்டில் இருக்க வேண்டும், மாறாக அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது” என்றும் மொரிஸ் குறிப்பிட்டார்.

உலக சோசலிச வலைத் தளம் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது போல, பெல்மார்ஷ் சிறைக்குள் கோவிட்-19 தொற்றுநோய் வெளியே தெரியாமல் கடுமையாக பரவி வரும் நிலையில், அசான்ஜை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது அவரையும் நோய்தொற்று பாதிப்புக்குள்ளாக்கும் சாத்தியம் உள்ளது.

“கடந்த இரண்டு வாரங்களாக அங்கு நிலவும் குளிர் உட்பட, பெல்மார்ஷ் சிறை பற்றி பல பயங்கரமான விடயங்கள் உள்ளன, அதிலும் நடைமுறையில் நாள் முழுவதும் தனிச்சிறையறையில் அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்,” என்றும் மோரிஸ் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “ஜூலியனுக்கு மிகுந்த அழுத்தம் தரும் பிரச்சினை என்னவென்றால், அவரது வாழ்க்கை சார்ந்துள்ள, அவரது சட்ட வழக்கை தயாரிக்கும் அவரது திறமையை தடுப்புக்காவல் நிலைமைகள் தொடர்ந்து தடுக்கின்றன. அவரது வழக்குரைஞர்களை முறையாக அணுக முடியாமல் அவர் தடுக்கப்படுகிறார், கோவிட் தொற்றுநோயின் காரணமாக அவரது சட்டக் குழு அவரை நேரில் சென்று பார்க்க முடியவில்லை, மேலும் காணொளி சந்திப்புக்கும் பல மாத கால காத்திருப்பு பட்டியல்கள் உள்ளன.

“சட்ட ஆவணங்கள் அவரை சென்றடைவதிலும் தாமதங்கள் உள்ளன, மேலும் நீதிமன்ற வழக்கு தொடர்பாக இங்கிலாந்து அதிகாரிகள் வழங்கிய மடிக்கணினியில் விவரங்களை படிக்க மட்டுமே முடியும், அதாவது உரையை திருத்தும் செயல்முறை அதில் கிடையாது, மேலும் அவர் தட்டச்சு செய்துவிடாமல் தடுக்க விசைகளுக்கு கீழே பசை ஒட்டப்படுகின்றது. அதாவது, அவருக்கு வழக்கின் விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டாலும், மேல்முறையீட்டிற்கு தேவைப்படும் ஆதாரங்கள் குறித்து அவர் தனது குழுவுக்கு போதுமான கருத்துக்களை வழங்கும் சாத்தியம் இல்லாமல் போகின்றது.”

இன்றைய நிலவரப்படி சமீபத்திய நிரூபணமாக குற்றம் எதுவுமின்றி காலவரையின்றி அசான்ஜை தடுத்து வைப்பதன் மூலம், அவரை சரீர ரீதியாக அழிக்க முற்படுவது உள்ளது, மேலும் அவர் பாதுகாக்கப்படுவதைத் தடுக்கவும், மற்றும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் ஒப்படைப்பை பாதுகாக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு உதவவும், பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கமும் மற்றும் எதிர்க் கட்சியான தொழிற் கட்சியும், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியும், அத்துடன் ஆஸ்திரேலிய குடிமகனாக அசான்ஜ் தனது உரிமைகளை நிலைநாட்டுவதை மறுத்து அவரை துன்புறுத்த உதவிய ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் அதன் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ள சர்வதேச நடவடிக்கையாக இது உள்ளது.

மொரிஸின் கருத்துக்கள் ஒரு சில சுயாதீன ஊடகங்களால் மட்டுமே வெளியிடப்பட்டன. கடந்த தசாப்தத்தில் அடிக்கடி நிகழ்ந்ததைப் போல, அவரது பயங்கரமான நிலை பற்றிய எந்தவொரு பரந்த விவாதத்தையும் அல்லது உண்மை நிலையையும் வெளியே தெரியவிடாமல் தடுப்பதன் மூலம், பெருநிறுவன ஊடகங்கள் அசான்ஜை தாக்குவதில் மிகமுக்கியமான பங்கு வகித்து வருகின்றன.

இதற்கிடையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய வெளியீடுகள், பிரதான ஏகாதிபத்திய சக்திகளுடன், குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யா உடனான மோதலில் சிக்கியுள்ள நாடுகளில் நிகழும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் பற்றி இகழ்ந்துரைக்கும் பத்திகளை முழுமையாக பிரசுரித்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள நாடுகளிலுள்ள அதிருப்தியாளர்களின் அவல நிலை பற்றி உத்தியோகபூர்வ ஊடகங்கள் ஆழ்ந்த கவலை தெரிவிக்கின்றன, அதேவேளை இலண்டனின் இதயத்தானத்தில் முன்நிகழ்ந்திராத வகையில் சட்ட மற்றும் அரசியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகும் ஒரு ஊடகவியலாளரின் விதி அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

அசான்ஜை நாடுகடத்துவதற்கு எதிரான, மற்றும் அவரை உடனடியாக விடுவிக்கக் கோரும் போராட்டம் என்பது, தொற்றுநோயால் தூண்டப்பட்ட உலக முதலாளித்துவத்தின் பெரும் நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கங்களும் ஆளும் உயரடுக்கினரும் சர்வாதிகார முறைகளுக்கு திரும்புவதற்கு எதிரான பரந்த போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை இது மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading