முன்னோக்கு

லிபியப் போரின் 10 ஆம் நினைவாண்டில், நியூ யோர்க் டைம்ஸ் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை மூடிமறைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த மாதம் லிபியாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் 10 ஆம் நினைவாண்டைக் குறிக்கிறது. "ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகளை" பாதுகாக்கும் சாக்குப்போக்கில் தொடங்கப்பட்ட அந்த போர், ஆபிரிக்க கண்டத்திலேயே அதிக தனிநபர் வருமானம் மற்றும் மிகவும் அபிவிருத்தி அடைந்த சமூக உள்கட்டமைப்பைக் கொண்ட நாடான அதை சிதைத்து சீரழித்த ஒரு போராக கட்டவிழ்ந்தது.

தொடர்ச்சியான எட்டு மாத குண்டுவீச்சு அந்நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளையும் வீணடித்தது, அதேநேரத்தில் லிபிய தலைவர் மௌம்மர் கடாபியைச் சித்தரவதைப் படுத்தி படுகொலை செய்வதில் போய் முடிந்த ஆட்சி மாற்றத்திற்கான அந்த போரில் அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் அல்கொய்தாவுடன் இணைந்த போராளிகளை தங்கள் பினாமி தரைப்படைகளாக பயன்படுத்தின.

In this Saturday, Oct. 22, 2011 file photo, a general view of buildings ravaged by fighting in Sirte, Libya. From east and west, the forces of Libya’s rival powers are each moving on the city of Sirte, vowing to free it from the hold of the Islamic State group. (AP Photo/Manu Brabo, File)

இன்று, அந்த போரின் நாசகரமான விளைவுகள் பட்டவர்த்தனமாக உள்ளன. லிபியா, அப்பிராந்தியத்தின் மிகவும் வளமான நாடு என்பதிலிருந்து, அதன் மக்களுக்கு வாழும் நரகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த போரில் பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள் அதற்கடுத்து வந்த தசாப்தத்தில் இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர், இக்காலப்பகுதியில் அந்நாடு வெளிநாட்டு அதிகாரங்களின் ஆதரவு பெற்ற எதிர்விரோத போராளிகள் குழுக்களின் கரங்களில் இடைவிடாது வன்முறைக்கு உள்ளாகி உள்ளது.

மனித வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. நேரடியான அர்த்தத்தில் 2011 மார்ச்சில் தொடங்கிய அந்த போரில் அழிக்கப்பட்ட எதுவுமே மீண்டும் கட்டமைக்கப்படவில்லை.

தலைநகர் திரிப்போலியும் ஏனைய நகரங்களும் வழமையாக இருட்டில் மூழ்கி கிடக்கின்றன, அங்கே கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆபிரிக்காவில் வேறெங்கையும் விட மிகப்பெரிய எண்ணெய் இருப்புகள் உள்ள ஒரு நாடு இவ்வாறு உள்ளது. லிபிய நாணயமான டினார் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து கொண்டிருக்கும் பணவீக்கம் ஆகியவை பலருக்குப் போதுமான உணவைப் பெற வழியின்றி செய்துள்ளதால், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் நாளொன்றுக்கு இரண்டு டாலருக்கும் குறைவான வருவாயில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். சுத்தமான தண்ணீரைப் பெறுவதும் கூட மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதிய தகவல்படி, ஏற்கனவே சீரழிந்து போயுள்ள லிபிய பொருளாதாரம் கடந்தாண்டு 66.7 சதவீதம் சரிந்தது.

ஒரு காலத்தில் அப்பிராந்தியத்திலேயே மிகவும் முன்னேறிய பொது சுகாதார அமைப்பைக் கொண்டிருப்பதாக பெருமைப்படுத்தப்பட்ட நிலையில், இன்றோ அந்நாடெங்கிலும் கோவிட்-19 பரவிக் கொண்டிருக்கையில், லிபிய மருத்துவமனைகளும் சிகிச்சை மையங்களும், இன்னமும் இடிபாடுகளில் கிடக்கின்றன. இதுவரையில், லிபியாவில் ஒரேயொரு தடுப்பூசி கூட இடப்படவில்லை.

அந்நாடு புவியில் மிக கொடூரமான மனித கடத்தல் மையமாகவும் மாறியுள்ளது, அவநம்பிக்கையான அகதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர், எதிர்விரோத போராளிகள் குழுக்களால் கண்கூடாகவே விற்கப்பட்டனர் மற்றும் விலைக்கு வாங்கப்பட்டனர், இவை அவர்களின் குடும்பங்களிடமிருந்து பணத்தை பறிக்க முனைந்துள்ளன. லிபியாவிலிருந்து தப்பிக்க முயன்றவர்களில் பலர் மத்தியதரைக் கடலில் மூழ்கி உயிரிழக்கிறார்கள்.

இத்தகைய நிலைமைகளின் கீழ் தான், நியூ யோர்க் டைம்ஸின் தலையங்கக் குழு "நம்பிக்கை ஒளியை" கண்டுபிடித்திருப்பதாக அறிவித்து, "தன்னை சரி செய்ய லிபியாவுக்கு ஒரு வாய்ப்பு" என்ற தலைப்பில் செவ்வாயன்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.

அந்த தலையங்கம் இவ்வாறு தொடங்குகிறது: “அரபு வசந்தத்தின் துன்பியலுக்கு லிபியாவைப் போல சில நாடுகள் எடுத்துக்காட்டாக உள்ளன. கர்னல் மௌம்மர் எல்-கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகாரத்தின் வீழ்ச்சி, எண்ணெய் வளம் நிறைந்த அந்நாட்டை போட்டி அரசாங்கங்கள், ஆயுதக் குழுக்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் கட்டுப்பாட்டில் எடுக்க போராடியதால், அங்கே ஒரு தசாப்த காலம் அராஜகத்தைக் கொண்டு வந்தது. குண்டுவீச்சு நடவடிக்கையுடன் கடாபி எதிர்ப்பு எழுச்சியை ஆதரித்த அமெரிக்காவும் நேட்டோ கூட்டணி நாடுகளும், அவர் வீழ்ந்த பின்னர் புறமுதுகு காட்டி பெரும்பாலும் பின்வாங்கி விட்டன, ஓர் அரசாங்கத்தை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த கால முயற்சிகள் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தியது.”

ஒரு தலையங்கத்தில் எத்தனை திரித்தல்கள், மழுப்பல்கள், வெளிப்படையான பொய்களை தொகுக்க முடியும்? லிபியா "அரபு வசந்தத்தின் துன்பியலுக்கு" உதாரணம் அல்ல, மாறாக மூன்று தசாப்தங்களாக இடைவிடாத அமெரிக்க ஏகாதிபத்திய போர்கள் மற்றும் தலையீடுகளின் கொடூரமான விளைவுகளுக்கு அது எடுத்துக்காட்டாக உள்ளது, அவை அந்த ஒட்டுமொத்த சமூகங்களையும் சீரழித்து மில்லியன் கணக்கான மரணங்களை ஏற்படுத்தியுள்ளன.

லிபியா எகிப்துக்கும் துனிசியாவிற்கும் இடையே அமைந்துள்ளது, நீண்ட காலமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற அவ்விரு நாடுகளின் சர்வாதிகாரிகளும் 2011 மக்கள் புரட்சிகளால் தூக்கியெறியப்பட்டனர். லிபியாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போர் "அரபு வசந்தத்தை" நசுக்கி, அப்பிராந்தியத்தில் இன்னும் நம்பகமான ஒரு ஏகாதிபத்திய கைப்பாவை ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

டைம்ஸின் துவேஷத்தின்படி, கடாபி "வீழ்ந்த" பின்னர் வாஷிங்டனும் நேட்டோவும் அந்நாட்டிலிருந்து "பின்வாங்கியதே" லிபியாவில் தற்போதைய பேரழிவிற்காக அவற்றின் மீது சுமத்தப்படும் ஒரே குற்றமாக உள்ளது. கடாபியின் "வீழ்ச்சி" என்பது, “நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்திருந்தார்,” என்று கிண்டலாக அறிவித்த அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனால் இழிவார்ந்து கொண்டாடப்பட்ட அந்த இரத்தந்தோய்ந்த படுகொலைக்கு பயன்படுத்தப்படும் சொல்வழக்காகும்.

அந்த தலையங்கம் இவ்வாறு வலியுறுத்த செல்கிறது, லிபியாவில் தொடர்ச்சியான உள்நாட்டுப் போரைத் தூண்டுவதில் வாஷிங்டன் "நேரடியாக சம்பந்தப்படவில்லை" என்றாலும், கடாபியின் படுகொலைக்குப் பின்னர் "அந்த மோதலைத் தீர்ப்பதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அது பொறுப்பாகிறது" என்று குறிப்பிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், லிபியாவின் துன்பியல், அமெரிக்க வெடிகுண்டுகளாலும் சிஐஏ ஆதரவு இஸ்லாமிய போராளிகளாலும் விளைந்த நாசத்தால் ஏற்படுத்தப்படவில்லை, மாறாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைப் போல காலனித்துவ பாணியிலான ஆக்கிரமிப்பை வாஷிங்டன் பின்பற்றத் தவறியதாலேயே ஏற்பட்டது என்றாகிறது.

டைம்ஸ் லிபியாவின் பேரழிவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பை மட்டும் மூடிமறைக்கவில்லை, மாறாக அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்புப் போருக்குத் தலைமை பிரச்சாரகராக இருந்த அதன் சொந்த பங்கையும் மூடிமறைக்கிறது. "சாதனை பத்திரிகை" என்றழைக்கப்படும் அது போருக்கான தயாரிப்பின் போது இடைவிடாது கடாபியைப் பூதாகரமாக சித்தரித்ததுடன், அதேவேளையில் அவர் அரசாங்கம் ஓர் "இரத்தக்களரியை" உருவாக்கும் விளிம்பில் இருப்பதாகவும், இஸ்லாமியவாத தலைமையிலான எதிர்ப்பின் மையமாக இருந்த கிழக்கத்திய நகரம் பெங்காசியில் "இனப்படுகொலையையே" கூட நடத்தும் விளிம்பில் இருப்பதாகவும் பொய்களைப் பரப்பியது. ஏகாதிபத்திய தலையீட்டிற்கான இந்த இட்டுக்கட்டப்பட்ட சாக்குப்போக்கு பென்டகனால் பின்னர் பலமுறை பறைசாட்டப்பட்டது.

போருக்கு முன்னதாக, டைம்ஸ் தலையங்க குழு குண்டுவீச்சு நடவடிக்கைக்கான கட்டமைப்பை தயாரிப்பதற்காக லிபியாவில் "விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்ட" மண்டலத்தை ஏற்படுத்த அறிவுறுத்தியது. டைம்ஸ் வெளியுறவு விவகாரங்களுக்கான பிரபல கட்டுரையாளர் தோமஸ் ஃப்ரெட்மன் இன்னும் ஒருபடி கூடுதலாக எழுதினார், “நாம் வான்வழியில் மட்டும் மனிதாபிமானிகளாக இருக்க முடியும் என்று நினைப்பது அப்பாவித்தனமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்… எனக்கு லிபியா தெரியாது, ஆனால் அங்கே எந்த விதமான கண்ணியமான விளைவையும் கொண்டு வர அம்மண்ணில் இராணுவம் தேவைப்படும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது,” என்றார்.

"மனிதாபிமானம்" மற்றும் "ஜனநாயக" நலன்களுக்கான அமெரிக்க தலையீட்டிற்காக டைம்ஸ் நடத்திய சிலுவைப் போர், தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க பிரிவுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியலைக் கொண்ட போலி-இடதுகளுக்குள் நல்ல அரசியல் ஆதரவைக் கண்டது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜுவான் கோல் போன்ற இழிவார்ந்த கல்வியாளர்கள் முதல் பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் அமெரிக்காவில் இப்போது கலைக்கப்பட்ட சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற அரசியல் குழுக்கள் வரை, இந்த சமூக-அரசியல் அடுக்கு, “ஜனநாயகம்” மற்றும் "புரட்சியை" கூட அமெரிக்காவின் சாதுரியமான குண்டுகள் மற்றும் தொலைதூர ஏவுகணைகளைக் கொண்டு முன்னெடுக்க முடியும் என்ற அருவருப்பான பொய்யைக் ஊக்குவித்தது.

அக்டோபர் 2011 இல் கடாபி படுகொலையுடன் போர் முடிவடைந்த போது, டைம்ஸ் வெற்றி பிரவாக பரவசத்துடன் விடையிறுத்தது. வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான கட்டுரையாளர் ரோஜர் கோஹன் “தலையீட்டுவாதத்திற்கு முதல் மதிப்பு” (Score One for Interventionism) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார், அதே நேரத்தில் டைம்ஸில் “மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்திற்கு” தீவிரமாக வக்காலத்து வாங்கும் அவரின் சக கட்டுரையாளர் நிக்கோலஸ் கிறிஸ்டோஃப் “நன்றி அமெரிக்கா!” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். லிபியாவை இடிபாடுகளாக ஆக்க குண்டுவீசியதன் மூலம், அமெரிக்கர்கள் "அரபு உலகின் மாவீரர்களாக" மாறியிருக்கிறார்கள் என்று அர்த்தமற்ற கூற்றை கிறிஸ்டோஃப் கூறினார்.

மத்திய கிழக்கிற்கான ஒரு புதிய "ஒபாமா கோட்பாட்டை" அந்த போர் உள்ளடக்கி இருந்ததாக அப்பத்திரிகை அறிவித்தது, லிபியாவில் பயன்படுத்திய அல்கொய்தாவுடன் இணைந்த அதே போராளிகள் குழுக்கள் சிலவற்றைப் பயன்படுத்தி, ஆட்சி மாற்றத்திற்காக சிஐஏ முடுக்கிவிட்ட போர் நடக்கும் சிரியாவிலும் அடுத்து அந்த கோட்பாட்டை பயன்படுத்தலாமென அது பரிந்துரைத்தது, அது வரவிருக்கும் ஆண்டுகளில் ஓர் அரை மில்லியன் உயிர்களை பறிக்கும்.

டைம்ஸ் இன்று இந்த வரலாற்றை மூடிமறைக்க முற்படுகிறது என்றால், அது லிபியாவில் வாஷிங்டனின் போர்க் குற்றங்கள் வெளிப்பட்டு விடுமென தயக்கம் காட்டுகிறது என்பதாலேயோ அல்லது அவற்றுக்கு ஒத்துழைத்து பாதுகாப்பதில் அதுவே நேரடியாக உடந்தையாய் இருந்தது என்பதாலேயோ அல்ல. மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியம் புதிய மற்றும் இன்னும் இரத்தக்களரியான தலையீடுகளைத் தயாரித்து வருகின்ற நிலையில் அந்த வரலாற்றில் இருந்து எந்த படிப்பினைகளும் பெறுவதை அது தடுக்க விரும்புகிறது.

லிபியா மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் போர்களை முடுக்கி விட்ட அமெரிக்க அதிகாரிகள், ஜோ பைடென் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் முதல் அடிமட்டம் வரையில், மீண்டும் வெள்ளை மாளிகை மற்றும் வெளியுறவுத்துறைக்குத் திரும்பி வந்துள்ளனர், "மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகம்" என்ற இற்றுப்போன பதாகைகள் மீண்டுமொருமுறை போருக்கான தயாரிப்பில் அசைக்கப்பட்டு வருகின்றன.

லிபியாவில், டைம்ஸ் உணரும் "நம்பிக்கையின் ஒளி", ஐ.நா. மத்தியஸ்தம் செய்து நியமித்த அந்நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த தொழிலதிபர்களில் ஒருவரான அப்துல் ஹமீத் தீபாஹை அந்நாட்டின் "இடைக்கால அரசாங்கத்தின்" பிரதமராக நியமித்ததில் தங்கியுள்ளது. அந்நாட்டின் இரண்டு முக்கிய கன்னைகளான: துருக்கி, கட்டார் மற்றும் இத்தாலி, அத்துடன் சிரியாவிலிருந்து ஆயிரக் கணக்கான கூலிப்படை போராளிகள் இணைந்த இஸ்லாமிய ஆயுதக் குழுக்களால் ஆதரிக்கப்படும், ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட திரிப்போலி அரசாங்கமும், மற்றொன்று எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆதரவுடன் முன்னாள் சிஐஏ "சொத்திருப்பு" கலீஃபா ஹஃப்தரின் லிபிய தேசிய ஆயுதப்படையால் பாதுகாக்கப்பட்ட அந்நாட்டின் கிழக்கில் உள்ள அதன் எதிர்விரோத அரசாங்கம் இரண்டும் இந்த "இடைக்கால அரசாங்கத்தில்" ஒன்றிணையக்கூடும் என்று கூறப்படுகிறது.

மற்ற சக்திகளை, குறிப்பாக ரஷ்யா மற்றும் துருக்கியை அந்த உடன்படிக்கை உள்நுழைக்கின்ற நிலையில் அவற்றை வெளியே தள்ளக் கோரி, வாஷிங்டன் லிபியாவைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டத்திற்குள் இன்னும் தீவிரமாக நுழைவதற்கு இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது. அந்நாட்டின் மீதான அமெரிக்க உள்நோக்கங்கள் குறித்து டைம்ஸ் சிறிதும் ஆட்சேபம் காட்டவில்லை. அதன் செவ்வாய்கிழமை தலையங்கம் குறிப்பிட்டது: “லிபியாவில் அமைதி என்பது அதன் சொந்த விசயத்திற்காக என்பதையும் விட இன்னும் பல காரணங்கள் உள்ளன. அந்நாட்டில் மிகப் பெருமளவில் எண்ணெய் வளங்கள் உள்ளன…"

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த வளங்களின் கட்டுப்பாட்டையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அந்த வட ஆபிரிக்க நாட்டின் மீதான மேலாதிக்கத்தையும் அதன் “வல்லரசு” போட்டியாளர்களான ரஷ்யாவிடமும் குறிப்பாக சீனாவிடமும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் தீர்மானகரமாக உள்ளது. 2011 போருக்கு முன்னர், ரஷ்யாவும் சீனாவும் லிபியாவின் வளர்ச்சியில் அதிகரித்தளவில் பங்கு வகித்து வந்தன.

இன்னும் பரந்தளவில் பார்த்தால், இந்த “மனிதாபிமான" ஏகாதிபத்தியம், ரஷ்யா மற்றும் சீனா இரண்டுடனும் நேரடி மோதலுக்கான தயாரிப்புகளில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. லிபியா மீதான போரை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட்ட “பெங்காசி இரத்தக்களரி" மற்றும் "இனப்படுகொலை" குறித்த பகட்டாரவாரமான பொய்கள், கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் உண்டாக்கப்பட்டது என்ற பொய் குறித்த டைம்ஸ் தலைமையிலான பிரச்சார நடவடிக்கைகளிலும், சீனாவின் முஸ்லீம் வீகர்ஸ் இன சிறுபான்மையினருக்கு எதிராக சீனாவின் "இனப்படுகொலை" என்ற வாதங்களிலும் வெளிப்படையாக எதிரொலியைக் காண்கிறது.

ஆபிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டி, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளது தொழிலாளர்களின் அதிகரித்து வரும் போராட்டங்களுடன் ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் ஒன்றிணைப்பது மட்டுமே ஒரு புதிய மற்றும் இன்னும் அதிக பேரழிவுகரமான போர் வெடிப்பைத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீடு இல்லையென்றால், மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தல் வளர மட்டுமே செய்யும்.

Loading