முன்னோக்கு

அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவை அதன் பார்வையில் வைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க மற்றும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால், பைடென் நிர்வாகமும் அமெரிக்க இராணுவமும் கணக்கிட முடியாத விளைவுகளுடன் சீனாவுக்கு எதிரான இராணுவ பதட்டங்களை அதிகரிக்கத் தயாராகி வருகின்றன.

இந்த மாத தொடக்கத்தில், ஜப்பானிய நிக்கி செய்திகள் சேவை பென்டகனின் பசிபிக் முன்னேற்பாடு நடவடிக்கையின் சில குறிப்புகளை வெளியிட்டது, முன்னதாக மத்தியதூர அணுஆயுத சக்தி (INF) உடன்படிக்கையால் தடை செய்யப்பட்டிருந்த தாக்குதல் ஏவுகணைகளை ஜப்பான், தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட மக்கள் நிறைந்த பல தீவுகளை ஒட்டி நிலைநிறுத்துவதற்கு அந்த குறிப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த முயற்சிக்கு நிதியளிப்பதற்காக, நிக்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், பென்டகன் “4.7 பில்லியன் டாலர்" வருடாந்திர பசிபிக் வரவு-செலவு திட்டக்கணக்கு கோரியது, “இது 2021 நிதியாண்டில் அப்பிராந்தியம் எங்கிலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2.2 பில்லியன் டாலரை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.”

இந்த திட்டங்களின் பின்னணியில் தான், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனும் மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் லாயிட் ஆஸ்டினும் இவ்வாரம் ஜப்பானுக்கு விஜயம் செய்தார்கள், இது சீனாவின் "ஆக்கிரமிப்புக்கு" எதிராக "பின்னுக்குத் தள்ளுவதற்காக" என்று அவர்கள் மிரட்டினர். பிளிங்கெனும் பிற அமெரிக்க அதிகாரிகளும் சீன ஆக்கிரமிப்பை பற்றி வழக்கமாக இவ்வாறு கூறுகிறார்கள் என்றாலும், ஒபாமா, ட்ரம்ப் மற்றும் இப்போது பைடெனின் கீழ் அமெரிக்கா தான் அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்கான எந்தவொரு சவாலையும் தடுக்க இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவை ஆக்ரோஷமாக எதிர்கொண்டுள்ளது.

ஒரு சுருக்கமான மற்றும் இறுக்கமாக திட்டமிடப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், இரண்டு அமெரிக்க அதிகாரிகளும் அவர்களது ஜப்பானிய சமபலங்களும், நம்பிக்கைக்குரிய பத்திரிகைகளுடன் சேர்ந்து, எரியும் பிரச்சினையைப் புறக்கணித்தனர்: அதாவது, அமெரிக்க குண்டுவீசிகள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை நிர்மூலமாக்கி 75 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்களின் கொள்கைகள் ஜப்பான் மற்றும் சீன மக்களை அதேபோன்ற தலைவிதிக்குத் தள்ளுகின்றனவா?

இந்த கேள்விக்கு பதில் நேரடியாக இல்லையென்றாலும், பதில் தெளிவாக இருந்தது. "ஜப்பானின் பாதுகாப்பு சம்பந்தமாக அணுஆயுதம் உள்ளடங்கலாக எல்லா வகையான அமெரிக்க சக்திகளையும் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் பலமான கடமைப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் தோஷிமிட்சு மொடெகி கூறினார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 1,000 இக்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 நோயால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதோடு, உலகெங்கிலும் இந்த நோய் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற போதும் கூட, கணக்கிட முடியாத மனித துயரங்களை ஏற்படுத்தும் ஒரு மோதலுக்கு அமெரிக்கா தயாரிப்பு செய்து வருகிறது. பிரதான ஐரோப்பிய நாடுகளிலேயே மிக அதிகளவில் கோவிட்-19 மரண விகிதத்தைக் கொண்டுள்ள பிரிட்டனும் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளது, சீனாவை ஒரு "மிகப்பெரும் அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டுள்ள அது, அதன் அணுஆயுத திட்டங்களைப் பாரியளவில் விரிவாக்குவது குறித்து செவ்வாயன்று அறிவித்தது.

அமெரிக்கா அதன் பார்வையில் உறுதியாக வைத்திருப்பது கோவிட்-19 ஐ அல்ல, மாறாக சீனாவை ஆகும். ப்ளின்கென் தெளிவுபடுத்தியதைப் போல, “ரஷ்யா, ஈரான், வட கொரியா உட்பட பல நாடுகள் நமக்கு கடுமையான சவால்களை முன்வைக்கின்றன… ஆனால் சீனா முன்நிறுத்தும் சவால் வேறுவிதமானது. அமெரிக்காவை "சவால் விடுக்க" பொருளாதார, இராஜாங்க, இராணுவ மற்றும் தொழில்நுட்ப சக்தியுடன் இருக்கும் ஒரே நாடு சீனா மட்டுமே.”

மார்ச் 10 இல், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன் செனட் ஆயுத சேவைகள் குழுவின் விசாரணையில் கூறுகையில், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் சீனா தைவானை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதென அவர் நம்புவதாகக் கூறினார். "இந்த அச்சுறுத்தல் இந்த தசாப்தத்தில், உண்மையில் சொல்லப் போனால், அடுத்த ஆறு ஆண்டுகளில், வெளிப்படுமென நான் நினைக்கிறேன்," டேவிட்சன் கூறினார்.

பாதுகாப்புத்துறை செயலர் ஆஸ்டினின் வார்த்தைகளில் கூறுவதானால், “தன்னை தற்காத்துக் கொள்வதற்கான தாய்வானின் திறனை ஆதரிப்பதற்கு [அமெரிக்கா] கடமைப்பாடுகள்" கொண்டுள்ள நிலையில், அடுத்த ஆறு ஆண்டுகளில் சீனா தைவானை ஆக்கிரமிக்கும் என்று முன்கணிப்பது அதே காலகட்டத்திற்குள் ஒரு பிரதான சீன-அமெரிக்க போரை முன்கணிப்பதாக இருக்கும்.

அவ்விதத்தில் டேவிட்சன் வலியுறுத்தினார், "போட்டி என்பது மோதலாக மாறினால் சண்டையிடுவதற்கும் வெற்றி பெறவும் நாம் முற்றிலும் தயாராக இருக்க வேண்டும்."

“போட்டி மோதலுக்கு மாறினால்” உலகம் எப்படி இருக்கும்? இந்த யதார்த்தத்தின் ஒரு முன்னோட்டத்தை நேட்டோவின் முன்னாள் தலைமை கூட்டுப்படை தளபதி அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் வழங்குகிறார், இவர் டேவிட்சனின் கருத்துக்களுக்கு ஒரு நாள் முன்னர் 2034: அடுத்த உலகப் போரின் ஒரு நாவல் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நாவல் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஓர் அணுசக்தி மோதலை சித்தரிப்பதுடன், இரு தரப்பிலும் உள்ள பிரதான நகரங்களின் மொத்த அழிவையும் அதில் உள்ளடக்குகிறது.

உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஷங்காய் ஓர் அமெரிக்க அணுசக்தி தாக்குதலுக்குப் பின்னர், “இதற்கு பல மாதங்களுக்குப் பின்னர் இந்நகரம் ஒரு கருகிய, கதிரியக்க தரிசு நிலமாக இருந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை முப்பது மில்லியனைத் தாண்டி இருந்தது. அணுசக்தி தாக்குதல்கள் ஒவ்வொன்றிற்கும் பின்னர் சர்வதேச சந்தைகள் சரிந்தன. விவசாயம் தோல்வியடைந்தன. தொற்று நோய்கள் பரவுகின்றன. கதிர்வீச்சு விஷம் தலைமுறைகளுக்கு நோய் உண்டாக்க உறுதியளித்தது. பேரழிவு… புரிந்துகொள்ளும் திறனை விட மிதமிஞ்சி இருந்தது.”

சான் டியாகோ மீதான ஒரு சீன அணுசக்தி தாக்குதலில் தப்பிப்பிழைத்த அமெரிக்கர்கள், “பெரும்பாலும் கட்டப்படாத கழிவறைகள் மற்றும் வரிசையான பிளாஸ்டிக் கூடாரங்களில் இருந்து தோன்றிய நச்சுக் காய்ச்சல், தட்டம்மை மற்றும் பெரியம்மை கூட சுழற்சி முறையில் விட்டுவிட்டு தோன்றும்" நிலையில், "படுமோசமான முகாம்களில்" வாழ விடப்பட்டிருந்தனர்.

பாரிய மரணங்களைக் குறித்த இந்த சித்தரிப்பு மற்றும் ஸ்டாவ்ரிடிஸ் எதை ஓர் "உலக போர்" என்று குறிப்பிடுகிறாரோ அந்த உடனடி அபாயத்திற்கு தயாரிப்புகள் நடந்து வருகின்றன என்பதற்கும், பொதுமக்கள் எந்தளவுக்கு விழிப்புணர்வின்றி இருக்கிறார்கள் என்பதற்கும் இடையிலான முரண்பாடு தான் மிகவும் மலைப்பூட்டுவதாக உள்ளது.

சீன கடற்கரைக்கு அருகில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் தாக்கும் ஏவுகணைகளை நிலைநிறுத்த அமெரிக்கா தயாராகி வருகிறது என்பது அமெரிக்காவில் எத்தனை பேருக்கு தெரியும்? ஜப்பானில் எத்தனை பேருக்குத் தெரியும்? மாலை செய்திகளும் முக்கிய செய்தித்தாள்களும் இத்தகைய போர் தயாரிப்புகளைக் குறித்து மவுனமாக உள்ளன என்பதோடு, அவை இடைவிடாது சீனாவைப் பொய்யாக பூதாகரமாக காட்டவும் செய்கின்றன.

அமசன் நிறுவன செல்வந்தர் ஜெஃப் பெஸோஸ் க்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் இந்த குற்றச்சாட்டில் முன்னிலையில் உள்ளது. போஸ்ட் மார்ச் 14 தலையங்கம் ஒன்றில், ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களது பிரகடனங்களை எதிரொலித்து, சீனா அதன் முஸ்லீம் மக்களுக்கு எதிராக "இனப்படுகொலை" செய்வதாக குற்றஞ்சாட்டியது. “ஜி ஆட்சி 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குழுவை அழிக்க செயலூக்கத்துடன் முனைந்து வருகின்ற போது,” பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் 2022 குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது "அறிவுக்கு உகந்ததாக இருக்காது,” என்று அறிவித்து, 2022 குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து அமெரிக்கா விலக வேண்டுமென போஸ்ட் கோரியது.

அதே நேரத்தில், கோவிட்-19 ஒரு சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று பொய்யாக வலியுறுத்தும் அதன் பிரச்சாரத்தையும் போஸ்ட் தொடர்கிறது. அப்பத்திரிகை உலக சுகாதார அமைப்பின் (WHO) கண்டுபிடிப்புகளையும் கண்டிக்கிறது, போஸ்ட் இன் வார்த்தைகளில் கூறுவதானால், "ஆய்வக புனைவுகோள் 'மிகவும் சாத்தியமில்லை' என்றும் அதை கூடுதலாக ஆய்வு செய்ய வேண்டியதே இல்லை" என்றும் WHO அறிவித்துள்ளது.

இதற்கு விடையிறுப்பாக, போஸ்ட் அறிவிக்கையில், “கிருமியியல் மற்றும் ஆய்வகவியல் புனைவுகள் இரண்டையும்" பரிசீலித்து "உலக சுகாதார அமைப்பு மீண்டும் தொடங்க வேண்டும்,” என்று போஸ்ட் அறிவிக்கிறது.

சீனாவை பூதாகரமாக சித்தரிப்பதற்கான இத்தகைய முயற்சிகள் திசைதிருப்பும் பிரச்சாரமாகும். பெருகி வரும் சமூக பதட்டங்களை ஒரு "வெளிப்புற" எதிரியை நோக்கி திசை திருப்புவதே முக்கிய நோக்கமாக உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் கொடூரமான போர்கள், முதலாளித்துவ அரசாங்கங்களின் உண்மையான போர் நோக்கங்களை மறைக்க வடிவமைக்கப்பட்ட இத்தகைய பிரச்சாரங்களுடன் தான் தயாரிக்கப்பட்டன.

21 ஆம் நூற்றாண்டில், இதற்கான செலவுகள் முன்னெப்போதையும் விட அதிகமாகும். இந்த நூற்றாண்டின் 20 ஆண்டுகளில், தொடர்ச்சியான போர்களும் பினாமி மோதல்களும் இருந்த போதிலும், அணு ஆயுத நாடுகளுக்கு இடையே ஒருபோதும் ஒரு முழு அளவிலான மோதல் ஏற்பட்டதில்லை. ஆனால் சீனாவிற்கு எதிராக பாரியளவிலான அமெரிக்க இராணுவ கட்டமைப்பால் இதுபோன்ற ஒரு போர் அச்சுறுத்தல் உள்ளது.

இத்தகைய ஒரு கொடூரமான மோதலில் இருந்து அமெரிக்க மற்றும் சீன தொழிலாளர்கள் எதுவும் பெற முடியாது. தளபதிகளும் அரசியல்வாதிகளும் அல்ல, தொழிலாளர்கள் தான் இதற்கான விலையைச் சுமக்க வேண்டியிருக்கும்.

20 ஆம் நூற்றாண்டு இரத்தக்களரி மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமானால், தொழிலாள வர்க்கம் தான் அதை தடுக்க வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் ஒரு புதிய உலகப் போரின் ஆபத்துக்கு எதிரான போராட்டமும் ஆளும் உயரடுக்கின் படுகொலை கொள்கைகளுக்கும் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிராக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

Loading