சீனாவுக்கு எதிராக தண்டிக்கும் வகையிலான தடையாணைகளை விதிப்பதில் ஐரோப்பா அமெரிக்காவுடன் இணைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புவிசார் அரசியல் பதட்டங்களின் ஒரு கடுமையான தீவிரப்பாடாக, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம் வீகர் சிறுபான்மையினருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமைகள் துஷ்பிரயோகத்திற்காக, ஐரோப்பிய ஒன்றியம், திங்கட்கிழமை சீன அதிகாரிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடையாணைகளை விதிப்பதில், அமெரிக்காவுடனும், அத்துடன் பிரிட்டன் மற்றும் கனடாவுடனும் இணைந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள், மத்திய கிழக்கு, பால்கன் மற்றும் மத்திய ஆசியாவில் ஒரு குற்றப் போர் மாற்றி ஒரு போருக்குத் தயாராகி உள்ள நிலையில், தீவிரப்படுத்தப்பட்டு வரும் சீனாவைக் கொடூரமானதாக சித்தரிக்கும் இந்த நடவடிக்கை கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளது அதே வழக்கமான வழிமுறைகளைப் பின்தொடர்கிறது.

அலாஸ்காவில் அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகளுக்கிடையேயான ஒரு கருத்து முரண்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து இந்த தடையாணைகள் வந்துள்ளன. வீகர் இன மக்களைச் சீனா கையாளும் விதம் உட்பட —இந்த கூற்றை சீனா மறுத்திருந்த நிலையில்—பல்வேறு பிரச்சினைகளில் சீனா மீது அமெரிக்கா பகிரங்கமாக ஆத்திரமூட்டும் கண்டனங்களை வைத்த நிலையில், கடந்த வெள்ளியன்று அந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அந்த இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடோ அல்லது கூட்டு அறிக்கையோ இல்லாமல் நிறைவடைந்தது.

ஹாங்காங்கில் தேர்தல் முறையை கடுமையாக்கும் ஒரு புதிய சட்டம் தொடர்பாக சீன அதிகாரிகள் மீது தடையாணைகளை விதித்து அலாஸ்காவில் அமெரிக்கா மோதலுக்கான களம் அமைத்தது. இப்போது அது வீகர் முஸ்லிம்களுக்கு எதிரான “கடுமையான மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்காக” சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானப் படைகளின் செயலர் வாங் ஜுன்ஷெங் மற்றும் ஜின்ஜியாங் பொதுப் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குனர் சென் மிங்குவோவைக் குறி வைத்துள்ளது. அமெரிக்கா சொத்துக்களை முடக்கியதுடன், பயண கட்டுப்பாடுகளை விதித்தது.

பாசாங்குத்தன வாடை வீசும் ஓர் அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கென் சீனா தொடர்ந்து "மனிதகுலத்திற்கு எதிரான ஜின்ஜியாங்கில் இனப்படுகொலை மற்றும் குற்றங்களைச் செய்வதாக" குற்றஞ்சாட்டினார், மேலும் "தடுப்புக்காவல் முகாம்களிலும் சிறைகளிலும் எதேச்சதிகாரமாக வைக்கப்பட்டுள்ள அனைவரையும்" விடுவிக்குமாறு பெய்ஜிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பரந்தளவில் சீன தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக செய்வதைப் போலவே, சந்தேகத்திற்கிடமின்றி ஜின்ஜியாங்கில் பொலிஸ்-அரசு முறைகளைப் பயன்படுத்துகிறது என்கின்ற அதேவேளையில், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பிற இடங்களில் போர்க்குற்றங்களுக்கு குற்றவாளியான வாஷிங்டன், அதன் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுக்க "மனித உரிமைகளை" மீண்டும் பாரபட்சமாக தேர்ந்தெடுத்து சுரண்டி வருகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுதி நாட்களில் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ மட்டுமே முத்திரை குத்திய வார்த்தையான, சீனாவின் வீகர் "இனப்படுகொலை" பற்றிய பிளிங்கெனின் குற்றச்சாட்டு, வேண்டுமென்றே செய்யப்படும் ஆத்திரமூட்டலாக உள்ளது. அந்த சொல் பாரிய பெருந்திரளான மக்கள் கொல்லப்படும் சித்திரத்தைக் கண்முன் கொண்டு வருகின்ற அதேவேளையில், ஜின்ஜியாங்கில் குழந்தை பெறுவதன் மீதான சீனாவின் கட்டுப்பாட்டு முறைகள் "இனப்படுகொலை" ஆக அமைகின்றன என்ற முற்றிலும் திரிக்கப்பட்ட மற்றும் பெரிதும் ஆதாரமற்ற வாதங்கள் மீது அது தங்கியுள்ளது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

ட்ரம்பின் கீழ் சீர்குலைந்த ஐரோப்பாவுடனான உறவுகளுக்கு பைடென் நிர்வாகம் "புத்துயிரூட்ட" முயன்று வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிடமிருந்து விட்டுக்கொடுப்புகளைப் பெறுவதற்கான ஒரு வழிவகையாக அது எரிச்சலூட்டும் விதமாக அமெரிக்க "மனித உரிமைகள்" வாகனத்திற்குத் தாவியுள்ளது. ஐரோப்பிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்காக பிளிங்கென் புருசெல்ஸ் வருவதற்கு சற்று முன்னதாக சீனா மீதான இந்த ஒருங்கிணைந்த தடையாணைகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்கா தண்டித்த இரண்டு சீன அதிகாரிகள் உட்பட நான்கு சீன அதிகாரிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக பயணத் தடைகள் மற்றும் சொத்துக்கள் மீதான தடைகளை அறிவித்தது. 1989 இல் தியனன்மென் சதுக்க படுகொலையை தொடர்ந்து ஐரோப்பிய அதிகாரிகள் ஆயுத ஏற்றுமதிக்குத் தடை விதித்ததற்குப் பின்னர், இவையே சீனாவுக்கு எதிரான முதல் ஐரோப்பிய ஒன்றிய தண்டனைகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை சீனா மீது "இனப்படுகொலை" குற்றச்சாட்டைச் சிறிதளவிலேயே நிறுத்திக் கொண்டது என்றாலும், வீகர் மற்றும் ஏனைய முஸ்லீம் சிறுபான்மையினரை "எதேச்சதிகாரமாக சிறையில் அடைத்திருப்பதற்கும் மற்றும் தரக்குறைவாக கையாள்வதற்கும்", அத்துடன் அவர்களின் மத சுதந்திரத்தைத் திட்டமிட்டு மீறுவதற்கும் பெய்ஜிங் தான் பொறுப்பு என்று அது குற்றஞ்சாட்டியது.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து கண்கள் உளவுத்துறை கூட்டணி (Five Eyes intelligence alliance) என்று அழைக்கப்படுவதன் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் மற்றும் பிளிங்கெனும் சீனாவைக் கண்டிக்கும் ஒரு கூட்டறிக்கையையும் அமெரிக்கா வெளியிட்டது. இங்கிலாந்தும் கனடாவும் சீனா மீது அவற்றின் சொந்த தடையாணைகளை விதித்துள்ளன என்றாலும், ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இன்னும் அவ்வாறு செய்யவில்லை.

அந்த கூட்டறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது: “சீன அரசாங்கத்தின் சொந்த ஆவணங்களின் ஆதாரங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் உள்ளடங்கலாக, சான்றுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. சீனாவின் விரிவான அடக்குமுறை திட்டத்தில், மத சுதந்திரங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள், கட்டாய உழைப்புக்கு உட்படுத்துதல், தடுப்புக்காவல் முகாம்களில் பாரிய சிறையடைப்பு, கட்டாய கருத்தடை மற்றும் வீகர் மக்களின் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு அழித்தல் ஆகியவை உள்ளடங்கும்.”

உண்மையில், ஆதாரங்கள் அதிகமாக ஒன்றும் இல்லை. நேரில் பார்த்தவர்கள் என்பவர்கள் பிரதானமாக உலக வீகர் சம்மேளனம் மற்றும் அமெரிக்க வீகர் கூட்டமைப்பு போன்ற சிஐஏ நிதியுதவி பெறும் அமைப்புகளுடன் தொடர்புடைய வெளிநாடு வாழ் வீகர் மக்களாவர், அதேவேளையில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கசிந்ததாகக் கூறப்படும் சீன ஆவணங்கள் எந்தவொரு நேரடி ஆதாரத்தையும் அளிக்கவில்லை என்பதோடு, தவிர்க்க முடியாமல் அமெரிக்க-சார்பு பகுப்பாய்வாளர்களின் எதிர்மறை கண்கள் மூலமாக பொருள்விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. தன்னியல்பான ஆதாரங்கள் இல்லாத நிலையில், எந்த துஷ்பிரயோகங்களும் நடக்கவில்லை என்று சீன அரசாங்கம் கூறும் கூற்றுகள் மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைக்க முடியாதோ அதைவிட மேற்கத்திய இந்த பிரச்சாரத்தின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது.

ஐரோப்பிய ஒன்றியம் "உண்மைகளை மதிக்கவில்லை, திரிக்கிறது" என்றும், “முற்றிலுமாக சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது,” என்றும் குற்றஞ்சாட்டி, சீன அரசாங்கம் உடனடியாக திருப்பித் தாக்கியது. பெய்ஜிங் 10 ஐரோப்பிய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் மீதும் அத்துடன் நான்கு அமைப்புகள் மீதும் அதன் சொந்த தடையாணைகளை விதித்தது. முன்னாள் நேட்டோ பொது செயலர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முஸ்சென் 2017 இல் நிறுவிய அமெரிக்க-சார்பு வலதுசாரி அமைப்பான ஜனநாயகங்களின் கூட்டணி அமைப்பும் அந்த நான்கு அமைப்புகளில் உள்ளடங்கும்.

சீனாவால் தடை விதிக்கப்பட்ட தனிநபர்களில், தன்னைத்தானே மறுஅவதார கிறிஸ்துவராக கூறிக் கொள்ளும் ஒரு வலதுசாரி ஜேர்மன் கல்வியாளர் அட்ரியன் ஜென்ஸ் உள்ளடங்குவார். சீன சிறுபான்மையினரை ஆராய்ச்சி செய்ய அவர் "கடவுளால் வழிநடத்தப்படுபவர்" என்று வாதிடும் ஜென்ஸ் அதேவேளையில், சந்தேகத்திற்கிடமின்றி பூமியில் வாழ்வதற்கான நோக்கங்களால் அதிகளவில் உந்தப்பட்டுள்ளார். கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு அமைப்பு (Victims of Communism Memorial Foundation) என்ற கம்யூனிச-விரோத அமைப்பு உட்பட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள கம்யூனிச-விரோத வட்டாரங்களில் அவர் நன்கு தொடர்பு கொண்டவர். சீனாவுக்கு எதிரான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய குற்றச்சாட்டுகள் பலமாக அவரது ஒருதலைபட்சமான "ஆராய்ச்சியை" சார்ந்துள்ளன.

சமீபத்திய சுற்றுத் தடையாணைகள் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், இன்னும் நிறைய வரவிருப்பதாக பைடென் நிர்வாகம் சுட்டிக்காட்டியது. நேற்று, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி, சீனா வீகர் மக்களைக் கையாள்வது மீது வாஷிங்டனின் "பெரும் கவலைகளை" மீண்டும் வலியுறுத்திய பின்னர், "உலகெங்கிலுமான எங்கள் கூட்டாளிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைந்து பொருத்தமான அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை நாங்கள் மதிப்பீடு செய்வோம்," என்றார்.

மூன்று மாதங்களுக்கும் குறைவான பதவிக்காலத்தில், பைடென் நிர்வாகம் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் அமெரிக்க மோதலை அதிகரித்து வரும் இந்த அசாதாரண வேகம் சில கடுமையான அமெரிக்க பிரச்சாரகர்களையே கூட ஆச்சரியப்படுத்தி உள்ளது. நியூ யோர்க் டைம்ஸின் வாஷிங்டன் தலைமை செய்தியாளர் டேவிட் சாங்கர் நேற்று அவர் கருத்தை தலைப்பிட்டார்: “அது வேகமானது: பைடெனின் முதல் 60 நாட்களில் சீனா மற்றும் ரஷ்யாவுடனான வெடிப்புகள்.”

"அனேகமாக பேர்லின் சுவர் இடிக்கப்பட்டதற்குப் பின்னர் ரஷ்யாவுடனும் மற்றும் அமெரிக்காவுடனான இராஜாங்க உறவுகளைச் சீனா திறந்து விட்டதற்குப் பின்னர் சீனாவுடனும் வாஷிங்டன் கொண்டிருந்த உறவுகளில் இது மிக மோசமானதைக் குறிக்கும் விதத்தில்,” அமெரிக்கா "கசப்பான வல்லரசு போட்டியின் ஒரு புதிய சகாப்தத்தில்" நுழைந்திருப்பதாக சாங்கர் அறிவித்தார்.

சீனாவுக்கு எதிராக தீவிரப்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க போர் முனைவுக்கு அடியிலிருக்கும் உந்துச்சக்தியையும் —அதாவது ஒரு தசாப்தத்திற்குள் சீனப் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை விஞ்சிவிடும் என்ற வாஷிங்டனின் அச்சத்தையும்— சாங்கர், குறைந்தபட்சம் மறைமுகமாக, சுட்டிக்காட்டினார். சீனர்களின் பலம், “ஒப்பீட்டளவில் அவர்களின் சிறிய அணுஆயுத தளவாடங்களில் இருந்தோ அல்லது விரிவாக்கி வரும் மரபார்ந்த போர் ஆயுதங்களின் கையிருப்பில் இருந்தோ எழவில்லை. மாறாக அது விரிவடைந்து வரும் அவர்களின் பொருளாதார பலத்திலிருந்து எழுகிறது,” என்றவர் எழுதினார்.

அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார மற்றும் மூலோபாய ஆதிக்கத்தை பேணுவதற்கு முக்கியமான, 5ஜி தொழில்நுட்பம் போன்ற உயர்-தொழில்நுட்ப பிரிவுகளில் சீனாவின் அதிகரித்து வரும் நிபுணத்துவத்தை சாங்கர் எடுத்துரைத்தார். ஆசியாவில் அதன் இராணுவ படைகளை விரிவாக்குவதுடன் பக்கவாட்டில், பைடென் நிர்வாகம் அதன் சீன-விரோத பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வரும் வேகம், வாஷிங்டனுக்கு எதிராக காலம் கரைந்து கொண்டிருக்கிறது என்ற வாஷிங்டனின் உணர்விலிருந்து பெருக்கெடுக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்திற்கு எதிரான எந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக் கொள்ளாது என்பதுடன், சீனாவை அடிபணியச் செய்ய இராணுவ மோதல் உட்பட எல்லா வழிவகைகளையும் பயன்படுத்த அது தயாராக உள்ளது. ஓர் ஒருங்கிணைந்த சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீட்டு வெளியே, உலகம் வேகமாக அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போருக்குள் சென்று கொண்டிருக்கிறது.

Loading