இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான கம்பனி–பொலிஸ் வேட்டையாடல் தொடர்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் ஓல்ட்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அடுக்குமுறைகள் தொடர்கின்றன. தோட்ட முகாமையாளர் மீதான தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என குற்றஞ்சாட்டி, மேலும் ஐந்து தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் பெற வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை புதன்கிழமை வேலைக்கு மீண்டும் திரும்புமாறு கம்பனி கட்டளையிட்டுள்ள நிலையிலும் கூட இந்த வேட்டையாடல் தொடர்கின்றது.

முன்னர், தோட்ட முகாமையாளரான சுபாஸ் நாராயணனைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, பிரதான தோட்டத் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) உதவியுடன், 22 தொழிலாளர்களை பொலிஸ் கைது செய்தது. அவர்கள் மார்ச் 10 அன்று, ஒவ்வொரு தொழிலாளியும் தலா 15,000 ரூபா ($US76.34) சரீரப் பிணை, இரண்டு ஆட்பிணை, அவர்களது கடவுச் சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைத்தல், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் பொலிஸ் நிலைய பதிவேட்டில் கையொப்பம் இடுதல் போன்ற கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 28 இடம்பெறவுள்ளது.

ஓல்ட்டன் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கோரி பெப்ரவரி 2 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, பெப்ரவரி 5, இ.தொ.கா. அழைப்பு விடுத்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கைக்கான வேலை நிறுத்தத்திலும் பங்குபற்றினார்கள். அவர்களுடைய நீண்டகால சம்பளக் கோரிக்கை சம்பந்தமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் பெரும் கோபத்தினைத் திசை திருப்புவதற்காக, தொழிற்சங்கம் தேசிய ரீதியிலான ஒரு நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த போதிலும், நிர்வாகத்தின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஓல்ட்டன் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராடினார்கள்.

பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவை கௌரவிக்கும் தனது தந்தை ஆறுமுகம் தொண்டமானுக்கு பின்னால் ஜீவன் தொண்டமான் (வலதிலிருந்து இரண்டாவது) (photo: @PresRajapaksa)

வேலை நிறுத்தத்தை தகர்ப்பதற்கு தொடர் ஆத்திமூட்டல்களை மேற்கொண்ட பின்னர், ஓல்டன் நிர்வாகம் தனது முகாமையாளர் தாக்கப்பட்டார், எனக் கூறிக் கொண்டு, பெப்ரவரி 17 அன்று முகாமையாளரின் பங்களாவுக்கு வெளியில் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பினைப் பற்றிக் கொண்டது.

கடந்த புதன்கிழமை, ஹட்டனுக்கு அருகில் டிக்கோயாவில் உள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு அலுவலகத்தில் வைத்து, பிராந்திய தோட்டக் கம்பனிகளின் சிரேஷ்ட அலுவலர் ரொஷான் இராஜதுரை, மீண்டும் வேலைக்குத் திரும்புவது பற்றி கலந்துரையாடுவதற்கு, ஓல்டன் தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்களுடனும் தோட்ட முகாமையாளருடனும் ஒரு கூட்டத்தை நடத்தினார். நிர்வாகமும் தொழிலாளர்களும் தவறிழைத்துவிட்டார்கள், ஆனாலும் “இருதரப்பும் இப்பொழுது அமைதியாக வேலை செய்ய வேண்டும்” என இராஜதுரை தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தொழிலாளர்களுக்கு எதிரான “சட்ட நடவடிக்கைகள்” தொடரும், என ராஜதுரை வலியுறுத்தினார். முகாமையாளர் மீதான தாக்குதல் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒரு சந்தேகத்துக்குரிய வீடியோவை காட்டினார். இதே வீடியோ காட்சிகள், ஓல்ட்டன் தோட்ட நிர்வாகத்தின் சட்டத்தரணியால் ஹட்டன் நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இ.தொ.கா. மற்றும் தொழிலாளர் தேசிய தொழிற்சங்கம் (NUW) ஆகியவற்றின் தோட்டத் தலைவர்கள், நிர்வாகத்துடன் உடன்பட்டதோடு, முகாமையாளரைக் கௌரவிப்பற்காக டிக்கோயா இந்து ஆலயத்தில் பூசை நடத்துவதற்கும் உடன்பட்டுள்ளார்கள்.

இ.தொ.கா. மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து, ஓல்டன் வேலை நிறுத்தத்தை தனிமைப்படுத்தியுள்ளன. கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள், கடந்தவாரம் பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள். எவ்வாறாயினும், இந்தப் புதன் கிழமை வரை கம்பனி வேலையை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதப்படுத்தியுள்ளது.

இ.தொ.கா. தொழிலாளர்களின் கைதில் நேரடியாக சம்பந்தப்பட்டிக்கின்ற போதிலும், NUW, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் (அ.இ.தோ.தொ.ச.) என்பனவும் அதற்கு உடந்தையாக உள்ளன. அவை தொழிலாளர் மீதான கம்பனி–பொலிஸ் வேட்டையாடலுக்கு மௌனமாக ஒப்புதல் அளிக்கின்றன.

LJEWU எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சங்கமாகும். அ.இ.தோ.தொ.ச. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு தொழிற்சங்கமாகும். இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமான், தற்போதைய இராஜபக்ஷ அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருக்கின்றார். எனைய தோட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்கள், முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக சேவை செய்துள்ளார்கள்.

மார்ச் 03, தோட்டத் தொழிலாளர்களின் “வன்முறை” மற்றும் “பயங்கரவாதம்” என்று குற்றஞ்சாட்டிக் கொண்டு, இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்க அங்கத்தவர்கள், ஹட்டன் நகரில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தார்கள். இந்த ஆபத்துக்களை எதிர்த்துப் போராடுவதற்கு, தங்களுக்கு ஆயுதங்களும் ஆயுதப் பயிற்சிகளும் வழங்குமாறு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். கடந்த திங்கட்கிழமை, ஜனாதிபதி இராஜபக்ஷ தலமையிலான இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபை கூடி, “தோட்டங்களில் பாதுகாப்பு விடயங்கள்” குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டிருந்தது.

இந்த வெறித் தனமான கூற்றுக்களுக்கு முரணாக, பொலிஸ் மற்றும் கம்பனியும் தொழிலாளர்களை துன்புறுத்துவதற்கும் இராஜபக்ஷ அரசாங்கம் அனுமதித்துள்ளது என்பதே உண்மை. சம்பள உயர்வு கோரும் அல்லது உற்பத்தித் திறன் அதிகரிப்பை தினிப்பதை எதிர்க்கும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் மற்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 900 ரூபா மற்றும் 100 ரூபாய் கொடுப்பனவுடன் சேர்ந்து 1,000 ரூபா நாள் சம்பளத்தை அரசாங்கம் பிரேரித்துள்ளது. இந்த அற்பத சம்பள அதிகரிப்பை கூட கம்பனிகள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த செப்டெம்பர் மாதத்தில் உடரதல்ல தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் (Photo: WSWS media)

தோட்டத் தொழிலாளர்கள், தங்களின் சொந்தக் குடும்பத்துக்காக மட்டும் போராடவில்லை, அவர்கள் முழு இலங்கைத் தொழிலாளர்களுக்காகவும் போராடுகின்றார்கள், என்று உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய ஒரு ஓல்டன் தொழிலாளி விளக்கினார். அவர், பொலிஸ் சுமத்திய சகல குற்றச்சாட்டுக்களையும் உடனடியாக விலக்குமாறு கோரியதுடன், கம்பனிகளுடன் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பதையும் அவர் கண்டித்தார். கம்பனி, கைதுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்காத நிலையிலும், புதன் கிழமை வேலைக்கு திரும்பலாமா என ஓல்டன் தொழிலாளர்கள் கலந்துரையாடி வருகின்றார்கள்.

பெப்ரவரி 2 தொடக்கம், வேலை நிறுத்த்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதுவிதமான வருமானமும் இல்லை. ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தில் இருந்து 2,000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் மட்டுமே கிடைத்தன. மாதாந்தம் தொழிலாளர்களிடம் இருந்து, ஆகக்கூடிய சந்தாவை அறவிடும் இ.தொ.கா. எதுவிதமான வேலைநிறுத்தக் கொடுப்பனவுகளையும் வழங்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் தங்களிடம் இருந்த சிறு நகைகளையும் அடைவு வைக்கவும், கடைகளில் கடன் வாங்கவும் மற்றும் அவர்களின் சாப்பாட்டை குறைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 22 தொழிலாளர்கள் மீதான சகல குற்றச்சாட்டுக்களையும் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும், என்ற அதன் பிரச்சார நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு, தயவுசெய்து உங்கள் ஆதரவு அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். wswscmb@sltnet.lk.

ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைகளை கீழே பிரசுரிக்கின்றோம்.

இலங்கை சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழு, ஓல்ட்டன் தோட்டத் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி அறிக்கை ஓன்றை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதி வருமாறு: சகல சுகாதார தொழிலாளர்களும், பெருந்தோட்டங்களில் நடக்கும் கொடூரமான ஒடுக்குமுறைகளை எதிர்க்க முன்வர வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். ஓல்டனில் நடக்கும் அரச ஒடுக்குமுறையானது, நேரடியாக இந்த தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, இப்போது அரசாங்கத்துக்கு எதிராக போராட முன்வந்து கொண்டிருக்கும் சுகாதாரத் தொழிலாளர்கள் உட்பட ஏனைய பிரிவு தொழிலாளர் சகலருக்கும் எதிராக அச்சுறுத்தும் முயற்சியாகும். இதை தோற்கடிக்க வேண்டும்.

“ஒரு ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதற்குப் போதுமான சம்பளத்துக்கான போராட்டம், சகல தொழிலாளர்களினதும் அடிப்படை உரிமையாகும். பெரும் வர்த்தகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கமானது பொலிஸ், ஆயுதப்படைகள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் போன்ற முதலாளித்துவ அரச நிர்வாகங்களை தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றது

“தோட்டங்களில் பொலிஸ் அடக்குமுறை, சில தோட்டங்களில் முன்னாள் இராணுவ சிப்பாய்களை மேற்பார்வையாளர்களாக வேலைக்கமர்த்துவது மற்றும் கடந்த மாதம் வைத்தியசாலைகளின் கனிஷ்ட தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கு இராணுவத்தை நிலை நிறுத்தியமை என்பன, கூட்டுத்தாபனங்களும் இராஜபக்ஷ அரசாங்கமும் முன்னெடுக்கும் பொதுவான தாக்குதல்களின் வெளிப்பாடாகும்.”

கண்டி, சிறிமாவோ பண்டாரநாயக்க வைத்தியசாலையை சேர்ந்த தாதி ஒருவர், ஊடகங்களை கண்டித்தார். “அவை (ஊடகங்கள்) தொழிலாளர்களுக்கு எதிரான தோட்ட முதலாளிகளின் பிரச்சாரத்திற்கு முதல் இடத்தை வழங்கியுள்ளன. இது முதலாளித்துவ ஊடகங்களின் போலித்தனத்தை வெளிப்படுத்துகின்றது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக முன் நிற்கவில்லை. அவர்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மாறாக தொழிற்சங்கங்கள் தங்கள் சொந்த அபிலாசைகள் மற்றும் சலுகைகளுக்காகவும் மற்றும் முதலாளிகளின் நலன்களுக்காகவுமே செயற்படுகின்றன. சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் தோட்டத் தொழிற்சங்களுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாட்டினையும் நான் காணவில்லை,” என அவர் தெரிவித்தார.

தினமும் அவருடைய வாட்டில் தோட்டப்புற சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக அவர்கள் நோயுற்றுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். “அவர்களில் கூடுதலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்தச்சோகை நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனையோர் புழு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டக் கம்பனிகளால் சம்பளக் கோரிக்கைகளை வழங்க முடியும், ஆனால், தங்களின் இலாபங்களைப் குறைப்பதற்கு அவை விரும்புவதில்லை,” என அவர் மேலும் கூறினார்.

ரத்மலானையில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலை ஊழியரான நவரட்ன, ஓல்டன் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலைக் கண்டித்தார். இது சகல தொழிலாளர்கள் மீதான தாக்குதலாகும், தோட்டத் தொழிற்சங்கங்களின் துரோகத்தனங்கள் எங்களது தொழிற்துறையிலும் நடக்கின்றன, இந்த அமைப்புகள் அரசாங்கத்தினதும் கம்பனிகளதும் கருவிகளாக மாற்றமடைந்துள்ளன, என அவர் தெரிவித்தார்.

தனது வேலைத் தளத்தில் உள்ள தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் பற்றிக் கலந்துரையாடியதாகவும் மற்றும் அவர்களுடைய சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவளித்ததாகவும், ரத்மலானை புகையிரத தொழிலாளி ஒருவர் கூறினார். “ஒரு கண்ணியமான சம்பளம் மற்றும் ஒரு திருப்தியான வாழ்க்கை என்பன ஒவ்வொரு தொழிலாளியினதும் உரிமையாக இருக்க வேண்டும்” என அவர் கூறினார். அவர் தொழிற்சங்கங்களைக் கண்டித்தார்.

“அவை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவையாகும், இந்தக் கைதுகளும் இந்த தொழிலாளர்களை அச்சுறுத்தும் கம்பனியின் முயற்சிகளும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் நடவடிக்கையாகும்,” என அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் வடக்கில் கிளிநொச்சியில் உள்ள வானவில் தொழிற்சாலையைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள், ஓல்டன் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்கள். அந்த தொழிற்சாலை, இலங்கையின் மாபெரும் ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்றான மாஸ் கம்பனிக்கு சொந்தமானதாகும்.

ஒரு தொழிலாளி கூறியதாவது: “ஒரு கண்ணியமான சம்பளத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஓல்டன் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை ஏற்றுக்கொள்ள முடியாத்தாகும். வாழ்க்கைச் செலவுகள் சகிக்க முடியாதளவுக்கு அதிகரித்துச் செல்லும் சூழலில், இன்று நாங்கள் பெறும் ஊதியம் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. அநீதிக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு மாறாக, தொழிற்சங்கங்கள் கம்பனிக்கும் மற்றும் பொலிசுக்கும் ஆதரவளிக்கின்றன.

“தோட்டங்கள் மற்றும் ஏனைய கம்பனிகளில் போல, நாங்கள் ஒரே மாதிரியான பொருளாதார சிரமங்களையும் கடும் வேலை நிலமைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து எமது சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. முன்னர், நாங்கள் ஒரு மணித்தியாலத்துக்கு 45 துண்டுகள் தைக்க வேண்டும். தற்போது, அது மணித்தியாலத்துக்கு 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் பொதுப் பிரச்சினைகளுக்கும் மற்றும் [முதலாளித்துவத்துக்கு எதிரான] ஒரு பொது போராட்டத்துக்கும் முகம் கொடுக்கின்றார்கள்.”

Loading