நினைவில் கொள்ளுங்கள், எலுமிச்சைகளும் பேசுகின்றன"

நினைவேந்தல்: கவிஞர் விக்டோரியா சாங்கின் இழப்பின் மீதான தியானம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, புதிய கொரோனா வைரஸ் தொற்றால் 375,000 அமெரிக்கர்கள் இறந்துவிட்டனர். இந்த எண்ணிக்கை கொலராடோவின் அரோரா நகரத்தின் முழு மக்களின் இழப்புக்கும் சமனாகும். உலகளவில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள், அரிசோனாவின் பீனிக்ஸ் முழு மக்கள் தொகையை விட அதிகமானவர்கள் வைரஸால் இறந்துள்ளனர். இத்தகைய அளவில் மரணத்தை புரிந்து கொள்வது கடினமானதாகும். ஒரு நண்பரின் அல்லது குடும்ப உறுப்பினரின் இழப்பினை ஏற்றுக்கொள்வதென்பதும் மிகவும் கடினமான ஒன்றே.

கவிஞர் விக்டோரியா சாங்கின் சமீபத்திய தொகுப்பான நினைவேந்தல் [Obit (2020)] வெளியிடப்படுவதற்கான சூழலை தற்போது நிகழும் இந்த பேரழிவு உருவாக்கியிருக்கிறது. நுரையீரல் இழைநார்ச்சி [pulmonary fibrosis] நோயினால் இறந்த தனது தாயின் மரணத்திற்கு பதிலளிக்கும் விதமாக சாங் இந்த தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகளை எழுதினார். அவரது தந்தைக்கு ஏற்பட்ட பக்கவாதம் அவரது முன் பக்க மூளையை பாதித்ததால் அவரால் தெளிவான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உரையாட முடியாமல் போனது. சாங்கின் மற்ற கவிதைகள் தந்தையின் நோயிற்கு பின்னர் அதனை எவ்வாறு கையாள்வது என்ற அவரது முயற்சிகளை விவரிக்கின்றன.

இந்த பொதுவான உள்ளடக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உண்டு. ஏப்ரல் தொடக்கத்தில் நினைவேந்தல் வெளியிடப்பட்டது, மேலும் இப்பெருந்தொற்று வெடிப்பதற்கு முன்பு இக்கவிதைகள் எழுதப்பட்டிருக்கலாம். எழுத்தாளர், உடனடி அர்த்தத்தில், அத்தகைய நிகழ்வுகளை எதிர்பார்த்திருப்பார் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது. எவ்வாறாயினும், சமூக துன்பியலானது, தொற்றுநோய்க்கு முன்பே பல்லாயிரக்கணக்கான மக்களை தாக்கிய ஒரு குழப்பமான சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். பரவலான பேரழிவுகளுக்கு பொதுவாக கவிஞர்கள் பதிலளிக்க எடுக்கும் கூட்டுத் துயரம், சீற்றம் அல்லது அநீதியின் கருப்பொருள்கள் சாங்கின் கவிதைகளில் இல்லை.

நிச்சயமாக, அந்நியோன்னியமான நெருக்கமான வரிகள் நிலைத்திருப்பதற்கு எப்போதும் ஒரு முழுமையான உரிமையைக் கொண்டுள்ளதுடன், உண்மையில், ஈடுசெய்ய முடியாத மனிதத் தேவையை அவை பூர்த்தி செய்கின்றன. ஆயினும்கூட, பாதிக்கும் மற்றும் நீடித்திருக்கும், மிகவும் தனிப்பட்ட வரிகள் கூட, இன்னும் பரந்த அளவில் ஒரு உலகத்திற்கான உணர்வுடன் "இங்கேயும் இப்பொழுதும்" ஸ்தூலமாக ஓரளவு உயிருடன் இருக்க வேண்டும் என்பதை அனுபவம் கற்பிக்கிறது. ஏனென்றால், படைப்புகளை நுகரும் வாசகர் திட்டவட்டமான சில சூழ்நிலைகளுக்குள் வாழ்பவராக இருக்கிறார், அந்த சூழ்நிலைகளின் விளைவாக உருவாக்கப்பட்ட உளவியலுடன் இருக்கிறார். மற்றும், உணர்வுபூர்வமாகவோ அல்லது இல்லாவிட்டாலும் கூட, அவரது நிலைமைகள, சிறிய அளவில் கூட எடைபோடப்பட்டு அணுகப்பட்டிருக்க வேண்டும். இது இங்கே ஒரு வரம்புக்கு உட்பட்டிருக்கிறது.

சாங் தனது சொந்த உணர்ச்சிகளை ஒரு தீவிரமான, சுயவிமர்சனக் கண்ணோட்டத்தை கொண்டு பார்க்கும் பயிற்சியை கொண்டிருக்கும் அதேவேளையில் சமூக யதார்த்தத்தை அதிகம் கொண்டு வரவில்லை. உதாரணமாக, தன் தந்தையைப் பார்க்கச் செல்வதற்கு தான் தயங்கியதையும், குடும்ப மருத்துவர் தன் தாயின் நிலையின் தீவிரத்தன்மையைப் பற்றி விவாதிக்கும்போது எதையும் உணரத் தவறியதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். சாங் தன்னை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை, அவர் சுய பரிதாபத்தில் ஈடுபடவில்லை. தனது தனிப்பட்ட, ஆனால் புரிந்துகொள்ளக்கூடிய மனித, எதிர்வினைகளை நேர்மையாக முன்வைப்பதன் மூலம், அவர்கள் தனியாக இல்லை என்றும், அவர்களின் உணர்வுகள் வெட்கக்கேடானவை அல்ல என்றும் துக்கத்தில் மற்றவர்களுக்கு மறைமுகமாக உறுதியளிக்கிறார். இது ஒரு மதிப்புமிக்க சேவையே.

சாங், தாய்வானிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த குடும்பத்தினருக்கு டெட்ராய்ட்டில் நகரத்தில் பிறந்த பிள்ளையாவர். அவர் மிச்சிகன் புறநகர் பகுதியான வெஸ்ட் புளூம்ஃபீல்டில் வளர்ந்து, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். ஸ்டான்ஃபோர்ட்டில் MBA முடித்த பின்னர், Morgan Stanley மற்றும் Booz Allen & Hamilton இல் சாங் பணிபுரிந்தார். அவர் இப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருவதுடன், Antioch பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார். சாங்கின் முந்தைய கவிதைத் தொகுதிகளில் பார்பி சாங் (Barbie Chang - 2017) மற்றும் தி பாஸ் (The Boss - 2013) ஆகியவை அடங்கும். குழந்தைகளுக்கான படப் புத்தகமான, இஸ் மம்மி (Is Mommy - 2015) மற்றும் நடுத்தர வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கான வசன நடையில் ஒரு நாவல், LOVE, LOVE (2020) ஆகியவற்றிற்காக அவர் அறியப்பட்டிருந்தார். சாங்கிற்கு 2017 இல் Guggenheim Fellowship விருது வழங்கப்பட்டது.

இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் செய்தித்தாளுக்கான இரங்கல் வடிவத்தில் எழுதப்பட்டு நெடுவரிசைகளில் அச்சிடப்பட்டுள்ளன. நான்கு கவிதைகள் சாங்கை நினைவுகூர்கின்றன. எவ்வாறாயினும், பல கவிதைகளின் உட்பொருள் மக்களைப் பற்றி அல்லாது பொருட்களைப் பற்றியததாகும். ஆனால் அவை ஒன்றில் தொட்டுணரக்கூடிய பொருட்களை பற்றியது (உதாரணமாக, “என் தந்தையின் தலைப்பாகை,” “என் தாயின் நுரையீரல்,” “நீல உடை”) அல்லது தொட்டுணர முடியாத உணர்வினைப் பற்றியது (“பசி,” “நட்பு,” “நம்பிக்கை”). சாங்கின் அணுகுமுறையில் மென்மையான நகைச்சுவை மற்றும் துக்கத்தின் கலவையை இந்த விவரங்கள் குறிக்கின்றன.

பொதுவான அவதானிப்புகளை உருவாக்கு முன்னர் இவரது கவிதைகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடங்குகின்றன, பெரும்பாலும் குடும்பத்தினருடனான சாங்கின் உறவுகள் அல்லது துக்கத்தின் தன்மை பற்றிய அனுபவங்களை மறைமுகமாக தெரிவிக்கின்றன. அவரது மொழிநடை வெளிப்படையாக நடுநிலை மற்றும் பிரகடனத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. நுட்பமான மற்றும் குறிப்பிட்ட உணர்ச்சிகளின் சாயல்களை வெளிப்படுத்தவும், வேறுவார்த்தையில் கூறினால் வார்த்தைகளில் உருவகப்படுத்த கடினமாக இருக்கும் விஷயங்களைப் பற்றி பேசவும் சாங் திறமையாக பழக்கமான ஸ்தூலமான படங்களை பயன்படுத்துகிறார். அவ்வப்போது, சாங் ஊகத்திற்குரிய பலவகைப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார் (எடுத்துக்காட்டாக, ஒரு மழைத்துளியின் வீழ்ச்சி அல்லது ஒரு பழத்திற்கும் அதன் அருகிலுள்ள இலைகளுக்கும் இடையிலான உறவு பற்றி) அனுபவத்திலிருந்து அர்த்தத்தை ஒரு மறைமுக வழியில் தேடுவதாக இருக்கிறது.

“இலட்சியம்", அவரது தந்தையைப் பற்றிய மிகக் குறிப்பிடத்தக்க ஒரு கவிதை, இது சாங்கின் பாணியை விளக்குகிறது மற்றும் அது எவ்வளவு உணர்ச்சிபூர்வமாக மற்றும் பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. சாங்கின் தந்தை அவரது பக்கவாதம் மற்றும் அவரது மனைவியின் மரணத்திற்குப் பின்னர், மிகவும் அமைதியற்றவராக இருந்தார், அவரை கட்டுப்படுத்தவும் அவரை பாதுகாப்பாக வைத்திருக்கவும் அவரின் நகர்வுகளை கண்காணிக்க கணுக்கால் வளையல் கருவி பொருத்தப்பட்டது. ஆனால் சாங் வசித்த வீட்டிற்கு நடந்து செல்ல முயற்சிப்பதை தடுக்க அந்த வளையல் தவறிவிட்டது. “கடந்த மாதம் அவர்கள் என் தந்தையை சாலையின் நடுவில் ஒரு எரியும் குமிழ் அற்ற விளக்குப் போல, அதன் செயல்பாட்டினை நினைவுபடுத்த முடியாமல், சந்திரனைப் போல குழப்பமடைந்த நிலையில் கண்டனர். மிருகக்காட்சிசாலையில், ஒரு பெரிய மொட்டையான கழுகு ஒன்று தனது சிறகுகளை இழந்ததனால் ஒரு சின்னக் கூண்டில் அமர்ந்திருக்கிறது. அதன் எஞ்சிய சிறகு துயரமாக இருக்கிறது”.

மற்றொரு கவிதை சாங் தனது தந்தையுடன் உடைகளை வாங்கச் சென்றபோது ஏற்பட்ட ஒரு நிகழ்வினை விவரிக்கிறது. “அவர் காற்சட்டையுடன் சண்டையிடுட்டுக்கொண்டிருப்பது எனக்கு கேட்கிறது. அவர் உடை மாற்றும் அறையிலிருந்து தனது காற்சட்டையை தலைகீழாக மாற்றிபோட்டுக்கொண்டு வெளியே வருகிறார். காற்சட்டையின் பின்னால் இருக்கும் இரு பைகளும் முன்பக்கமாக இருந்தன, அம்மாவின் கண்கள் என்னைக் கேலி செய்வது போல அவை இருந்தன. இப்படிதான் இருக்கும் என உனக்கு நான் அப்போதே கூறினேன்தானே” கசப்பான இனிப்பு நகைச்சுவைக்கு அடுத்த வரி துயரத்தினை உண்டாக்குகிறது. "ஆண்களின் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்த நான், தரையில் கிடந்த அனைத்து காற்சட்டைகளையும் கையில் வாரி எடுத்தேன். ஏனெனில், அவைகளில் ஒன்று என் காணாமல் போன தந்தையினுடையதாக இருக்க வேண்டும்."

தாயுடனான சாங்கின் உறவு எவ்வளவு கடினமாக இருந்தன என்பதை பல கவிதைகள் காட்டுகின்றன. "எல்லாவற்றிற்கும் என் அம்மாவின் பிரதிபலிப்பானது, இதனால் உனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்" என்பதாக இருந்தது. சாங் அதற்கு "ஒப்புதல்" இல் கூறுகிறார். “ஒரு புகைப்படம் ஒன்றில் என் அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது எனக்கு ஒன்பது வயது இருக்கலாம். அன்றில் இருந்து அவள் இறப்பதற்கு முந்தைய நாள் வரை நான் ஒருபோதும் அவள் கையைத் தொட்டிருக்கவில்லை” தூக்கமாத்திரையினால் தூண்டப்பட்ட தூக்கத்தில் இருக்கும்போது சாங் தனது தாயின் நகங்களை சீராக வெட்டிவிடுகிறார். "அவளுடைய நகங்கள் எங்கோகிடக்கும் சிறிய பிறைகளோ அல்ல தங்க கதவுகளோவல்ல ஆனால் நான் கடைசியாக துண்டித்துவிட்ட பத்து வார்த்தைகளாகும்."

விக்டோரியா சாங் (Photo credit–Copper Canyon Press)

நினைவேந்தலில், இழந்தவை அனைத்தும் எட்டமுடியாததாக தோன்றுகிறது, மேலும் இந்த நழுவிச்செல்லும் போக்கானது கவிதைகளை குறிப்பாக கடுமையானதாக ஆக்குகிறது. "அவரது சிந்தனை காதுக்குள் எப்பொழுதும் கேட்காது," சாங் தனது தந்தையைப் பற்றி கூறுகிறார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதில் இருந்து, அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது எண்ணங்களை மட்டுமே கொண்டிருந்தார், மேலும் "மிக முக்கியமான முதல் சிந்தனையை இனம்காண முடியாதவராக இருந்தார்." சாங்கிற்கு தாயின் நினைவுகள் இப்படித்தான் இருந்தன. "கூரையில் ஓடும் ஒரு இரவு நேர விலங்கு போல. எனக்குத் தெரியும் அது ஏதோவொரு விலங்குதான் என ஆனால் அதை நான் எப்போதுமே பார்க்க முடியாதிருந்தது, அல்லது அது மீண்டும் எப்போது வரும் என்பது கூட எனக்கு தெரியாதிருந்தது."

சாங் பெரும்பாலும் மொழி மற்றும் பிரதிநிதித்துவங்கள் போதாமையை எதிர்கொள்கிறார். "இருள் என்பது வண்ணத்தை இல்லாமல் செய்வதல்ல, மாறாய் மொழியை இல்லாமல் செய்வதாகும்" என்று அவர் கருதுகிறார். "ஒரு நபரின் வரையப்பட்ட முன்மாதிரி வரைவு, ஒரு நபராக இருப்பதில்லை. காலையில், என் அம்மா எங்கோ முன்மாதிரி வரைவாகியிருக்கின்றார்”

ஒவ்வொரு முறையும், இரங்கல்-கவிதைகளில் ஒரு ஜோடி டங்கா குறுக்குவெட்டாக இடம்பெறுகிறது. ஒரு டங்கா என்பது ஐந்து வரி ஜப்பானிய செய்யுள் கவிதை வடிவமாகும், இதில் ஒவ்வொரு வரியிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எழுத்துக்கள் உள்ளன. இவரது சில கவிதைகள் கீறப்பட்ட ஓவியங்களை ஒத்திருந்தாலும், ஏனையவைகள் சிந்தனை அல்லது உணர்வின் படிகமயமாக்கலை பாதிப்பவையாக இருக்கின்றன. பின்வரும் டங்காவை முழுமையாக மேற்கோள் காட்ட வேண்டும்:

என் குழந்தைகளே! குழந்தைகளே!

நினைவிற்கொள்க என்னை விடுக்க

எனது எண்ணை அழிக்க

எண்ணிறைந்த மரங்களைக் காக்க

நினைவிற்கொள்க எலுமிச்சைகள் பேசும்.

தொகுதியின் ஒரு பகுதி ஒரு நீண்ட கவிதைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது (சில்வியா பிளாத்தின் ஒரு கவிதையின் ஒரு வரிக்குப் பின்னர்) “நான் ஒரு சுரங்கத்தொழிலாளி. ஒளி நீலமாக எரிகிறது.” இந்த கவிதை மற்றக் கவிதைகளை விட சுதந்திரமானதாக இருக்கிறது, ஆனால் சாங்கின் சொந்த அனுபவத்துடன் குறைந்தபட்சம் ஒரு ஸ்தூலமான வடிவத்தில் கூட தொடர்புபட்டதாக இல்லை. ஒருவேளை இந்த காரணங்களுக்காகத்தான், இந்த கவிதை குறைவான கவனம் செலுத்துவதாகவும், குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக, மேலே குறிப்பிட்டுள்ள வரம்புகளுக்குள், நினைவேந்தல் என்பது இழப்பை புரிந்துகொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் ஒரு நேர்மையான மற்றும் கலைத்துவ ரீதியாக மதிப்புமிக்க முயற்சியாக இருக்கிறது. சாங்கின் மொழி அற்புதமான முறையில் தெளிவாக உள்ளது, கிளர்வூட்டும் அவரது படிமங்கள் மற்றும் நினைவுகள் உணர்ச்சிகளால் தீண்டப்படமுடியாதவை, பாதிப்புக்குள்ளாகாதது. இந்தக் கவிதைகள் சாங்கின் தனிப்பட்ட அனுபவங்களாக இருந்தபோதும், அவை இழப்பில் துயரப்படும் பலரது உணர்வுகளை எதிரொலிப்பதாக இருப்பதுடன், அவர்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கிறது.

Loading