முன்னோக்கு

கோவிட்-19 இன் உலகளாவிய புதிய அலையை நிறுத்த ஓர் அவசர வேலைத்திட்டம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த இரண்டு மாதங்களாக, கோவிட்-19 நோயின் மிகவும் ஆபத்தான மற்றும் கொடிய புதிய வகை வைரஸ்களால் உந்தப்பட்டு, உலகெங்கிலும் புதிய கோவிட்-19 நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. உலகளவில் இப்போது சுமார் 600,000 ஆக உள்ள புதிய நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை, இன்னும் சில வாரங்களில், இந்த தொற்றுநோய் தொடங்கியதற்குப் பிந்தைய மிக அதிகபட்ச மட்டங்களை எட்டுமென பொது சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பல நாடுகளில் ஏற்கனவே இது தான் நிலைமையாக உள்ளது. சனிக்கிழமை, இந்தியா, ஒரு நாளின் புதிய கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையாக 100,000 ஐ எட்டியது, இது முன்பில்லாத மிக அதிகபட்ச எண்ணிக்கையும் 2021 இன் தொடக்கத்தில் இருந்ததை விட ஒன்பது மடங்கு அதிகரிப்பும் ஆகும்.

Teachers, parents and children march in the Brooklyn borough of New York to protest the reopening of city public schools amid the threat of a teachers strike, Tuesday, Sept. 1, 2020 in New York. (AP Photo/Mark Lennihan)

ஞாயிற்றுக்கிழமை புதிய நோயாளிகளின் ஒருநாள் எண்ணிக்கையாக 60,922 நோயாளிகளைப் பிரான்ஸ் பதிவு செய்திருந்தது. துருக்கி 41,000 நோயாளிகளைப் பதிவு செய்தது, இது ஒரு சில மாதங்களில் ஏழு மடங்கு அதிகரிப்பாகும். உக்ரேனில், ஒவ்வொரு நாளும் 400 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து வருகிறார்கள், 40 மில்லியன் மக்கள்தொகையில் 250,000 பேர் மட்டுமே முதல் கட்ட தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். போலந்தில், இந்த பெருந்தொற்று தொடங்கிய போதிருந்ததை விட இப்போது நோய்தொற்று 60 மடங்கு அதிகமாக உள்ளது.

கிழக்கு ஐரோப்பா எங்கிலும், மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன, ஜேர்மனி மற்றும் பிரான்சின் மருத்துவ அமைப்புகள் ஒரு சில வாரங்களில் முற்றிலுமாக நிரம்பிவிடுமென அந்நாடுகளின் மருத்துவத்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். பிரேசிலில், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழக்கின்ற நிலையில், மருத்துவமனைகளும் சடலங்களும் நிரம்பி வழிகின்றன, புதிதாக இறந்தவர்களுக்கு இடமளிக்க சடலங்கள் கல்லறைகளிலிருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன.

அமெரிக்காவில், மத்திய மேற்கு பகுதிகளில் புதிய நோயாளிகளின் ஒரு பாரிய அதிகரிப்பு காணப்படுகிறது, அமெரிக்க வாகனத் தொழில்துறையின் இதயதானமாக விளங்கும் மிச்சிகன், இந்த பெருந்தொற்று தொடங்கியதற்குப் பிந்தைய அதன் ஒரு நாள் நோயாளிகளின் மிக மோசமான எண்ணிக்கையை எட்டி வருகிறது.

இந்த அதிகரிப்பில் பெரும்பகுதி இந்நோயின் புதிய வகைகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது, இவை, முந்தைய வகைகளைப் போலில்லாமல், பாரபட்சமின்றி இளைஞர்களை பாதிக்கின்றன. மிச்சிகன் மாநிலம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அம்மாநிலத்தின் பெரும் வெடிப்புகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை, பள்ளிகள், குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் உயர் கல்வி பயிலகங்களை மையமாகக் கொண்டுள்ளன.

"நாம் இந்த அதிகரிப்பின் வெறும் தொடக்கத்தில் தான் இருக்கிறோம், இதை மறுப்பதால் நமக்கு எதுவும் உதவப் போவதில்லை,” என்று தொற்றுநோய் நிபுணர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் எச்சரித்தார். "அந்த வைரஸ் இருப்பதே தெரியாததைப் போல நாம் அந்த வைரஸ் அசுரனின் வாய்க்குள் நடந்து கொண்டிருக்கிறோம், அது இங்கே இருக்கிறது.” “பரவலை மெதுவாக்க நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டிய நேரமிது, திறந்துவிடக் கூடாது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் உலகெங்கிலும், அரசாங்கங்கள் துல்லியமாக இதற்கு எதிர்மாறாக செய்து வருகின்றன, அவை இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் கைவிடும் அவற்றின் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அமெரிக்காவில், பைடென் நிர்வாகம் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகிறது, கடந்த வாரம் மட்டும், வாஷிங்டன், மாசசூசெட்ஸ் மற்றும் ஓஹியோவின் ஆளுநர்கள் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்தனர்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த வணிகங்களை மூட மறுத்து, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடந்த வாரம் வலியுறுத்துகையில், "நாம் இந்த வைரஸுடன் தான் வாழப் போகிறோம்" என்றார். இந்த நோயைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் "பொருளாதாரத்தின்" மீது ஏற்படுத்தும் "விளைவுகளை" சமூகம் "கணக்கில் கொள்ள வேண்டும்" என்றார்.

இந்த பெருந்தொற்றுக்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் ஒவ்வொரு நாட்டினது விடையிறுப்பில் உள்ளடங்கி உள்ள கோட்பாட்டை மக்ரோன் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். கோவிட்-19 ஐ தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகப்பெரிய பெருநிறுவனங்களின் இலாபங்களுக்குத் தடையாக இருக்கும் என்பதால், கோவிட்-19 ஐ ஒழிக்கத் தேவையான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்குப் பதிலாக, முதலாளித்துவ அரசாங்கங்கள், ஆரம்பத்தில் இருந்தே மக்களை இந்த "வைரஸுடன் வாழ" வைக்க முடிவெடுத்தன.

தொற்றுநோயைப் பரவ அனுமதிப்பது "சமூக நோயெதிர்ப்பு சக்தியை" உருவாக்குமென இந்த கொள்கையின் பாதுகாவலர்கள் வாதிடுகின்றனர். போதுமானளவுக்கு மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டதும், தடுப்பூசியும் வழங்கப்பட்டவுடன், இந்நோய் தானாகவே போய்விடுமென அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இக்கொள்கை பேரழிவிற்கு வழி வகுத்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்தாமல் பரவ அனுமதிப்பதால் தானாகவே அந்நோய் மறைந்து விடும் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலாக அந்நோய் இன்னும் வீரியமான இன்னும் உயிராபத்தான புதிய வகை கோவிட்-19 உருவாக வழிவகுத்துள்ளது. மக்களை மீண்டும் நோய்தொற்றுக்கு உள்ளாக கூடியவர்களாக ஆக்கியதற்குக் கூடுதலாக, இந்த புதிய வகை வைரஸ்கள், கோவிட்-19 ஐ தடுக்க கிடைத்திருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் ஒன்றை சிதைக்கும் விதத்தில், குறைந்தபட்சம் சில தடுப்பூசிகளின் செயல்திறனைப் பகுதியாகவேனும் குறைத்துள்ளன.

வைரஸ் பரவுவலை மற்றும் இன்னும் மில்லியன் கணக்கான மரணங்களைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் அவசியமாகும்! நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்வரும் அவசர நடவடிக்கைகளைக் கோருகிறது:

  • நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்தியும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது முக்கிய சமூக உள்கட்டமைப்புடன் நேரடியாக சம்பந்தப்படாத எல்லா உற்பத்தியும், அத்துடன் அனைத்து அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனைகளும் மற்றும் நேரடியான உணவு சேவைகளும் இதில் உள்ளடங்கும். 2020 மார்ச்சில் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதியான சமூக அடைப்பு போலில்லாமல், அத்தியாவசியமற்ற உற்பத்தியின் நிறுத்தி வைப்பு மொத்தமாக இருக்க வேண்டும், பொது சுகாதார வழிகாட்டுதல்களை மீறும் பெருநிறுவனங்களின் நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் தொலைவிலிருந்து வேலை செய்தாலும் அல்லது தொலைவிலிருந்து வேலை செய்வது சாத்தியமின்றி இருந்தாலும், அவர்கள் கட்டாய விடுப்பில் இருக்கும் ஒட்டுமொத்த காலத்திலும் அவர்கள் இழக்கும் வருமானத்தை முழுமையாக ஈடுசெய்ய எல்லா தொழிலாளர்களுக்கும் 100 சதவீத சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
  • சுயதொழில் செய்யும் அனைத்து வர்த்தக ஆண்களும் பெண்களும், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்களும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதால் ஏற்படும் மொத்த வருவாய் இழப்பீட்டுக்காகவும் முழுமையாக இழப்பீட்டைப் பெற வேண்டும்.
  • அனைத்து நேரடி வகுப்புகளும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டு தொலைநிலை கல்வியைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் இளம்பருவத்தினருக்கும் ஆணோ பெண்ணோ அவருக்கு வீட்டிலேயே பாதுகாப்பாக, விசாலமாக, வசதியாக படிக்கும் சூழலுடன் சேர்ந்து, அவருக்குச் சொந்தமாக நவீன மடிக்கணினி மற்றும் உயர்வேக இணைய சேவையும் கிடைப்பதை உறுதிச் செய்ய பில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
  • பொது சுகாதார அமைப்பு பாரியளவில் விரிவாக்கப்பட வேண்டும், பத்தாயிரக் கணக்கான பொது சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நோய்தொற்றையும் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் அவசர சிகிச்சைக்குரியதாக கையாள்வதே கோவிட்-19 ஐ ஒழிப்பதை அர்த்தப்படுத்தும். நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், அல்லது நோயாளிகளுடன் தொடர்பில் வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும், சரியான நேரத்தில் உடனடியாக, அவர்களின் நோய் அறிகுறிகளைக் கண்காணித்து மற்றவர்களுக்கு நோய்தொற்று ஏற்படாமல் அவர்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்த உதவும் பொது சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கிடைக்க வேண்டும்.
  • உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை உருவாக்க ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கப்பட வேண்டும். தடுப்பூசிகளின் வினியோகமானது ஒட்டுமொத்த உலகையும் பாதுகாக்கும் அதிகாரத்துடன் விஞ்ஞானிகள், பொது சுகாதார வல்லுனர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அது போட்டியிடும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் புவிசார் அரசியல் நலன்களுக்கு உட்பட்டிருக்கக்கூடாது.

எட்டு மாதங்களுக்கு முன்னர், சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இந்த பெருந்தொற்று மற்றும் அதற்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு மீது ஓர் இருப்புநிலை குறிப்பை வரைந்து அதன் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த பெருந்தொற்றை முதலாம் உலகப் போர் வெடிப்புடன் ஒப்பிட்டு, அது பின்வருமாறு குறிப்பிட்டது: “முதலாம் உலகப் போர் தொடங்கிய போது, எல்லா போர்வெறியர்களாலும் அது ஒப்பீட்டளவில் விரைவாக முடிந்துவிடும் என்று தான் கருதப்பட்டது. ஆனால் அந்த மோதல் ஓராண்டு மாற்றி இன்னோர் ஓராண்டு என இழுத்துக் கொண்டே சென்றது, ஏனென்றால் அரசுக் கொள்கையைக் கட்டளையிட்ட முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர், அந்த மோதலில் அவர்களின் புவிசார் மூலோபாய நலன்களை எட்டுவதில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உயிர்களைத் தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ளத்தக்க விலையாக கருதினார்கள்.

இப்போது, இந்த பெருந்தொற்றின் 14 மாதங்களில், பேரழிவு தொடர்கிறது என்பது மட்டுமல்ல, அது தீவிரமடைந்து வருகிறது. உலகெங்கிலுமான தொழிலாளர்கள், ஆளும் உயரடுக்கின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, "சமாதானம்" விரும்பலாம், ஆனால் சமாதானம் கிடைக்காது. இது ஏனென்றால் இப்போது நடந்து வரும் மனிதப்படுகொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆளும் வர்க்கத்திற்கு விருப்பமில்லை.

இந்த தொற்றுநோய்க்கு எதிரான சண்டை வெறுமனே ஒரு மருத்துவ பிரச்சினை அல்ல. இதற்கு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் போராட்டம் அவசியப்படுகிறது.

முதலாளித்துவ தன்னலக் குழுவின் செல்வவளம் மீதான ஒரு தலையாய தாக்குதல் மூலமாகவே இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு பணம் செலுத்தியாக வேண்டும். மார்ச் 2020 இல் இருந்து, அமெரிக்காவில் பில்லியனர்களின் செல்வ வளம் 44 சதவீதம் அல்லது 1.3 ட்ரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது, ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் இதேபோன்ற செல்வக் குவிப்பு களியாட்டம் நடந்து வருகிறது.

இந்த செல்வ வளத்தைப் பறிமுதல் செய்து அதை தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். பொருளாதார வாழ்க்கையை கட்டுப்படுத்தும் பிரம்மாண்டமான பெருநிறுவனங்கள் பொதுமக்கள் கட்டுப்பாட்டிலான நிறுவனங்களாக மாற்றப்பட்டு, தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல், சமூக தேவை, ஜனநாயகக் கட்டுப்பாடு மற்றும் ஒரு பகுத்தறிவார்ந்த திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த தொற்றுநோய்க்குப் பொது சுகாதார நலன்களுக்கு இணங்கிய ஒரு விடையிறுப்புக்கு ஓர் உலகளாவிய திட்டமும் உலகளாவிய ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது.

தொழிலாளர் ஒற்றுமையின் பழைய முழக்கத்தில் கூறப்படுவதைப் போல, ஒருவருக்கு ஏற்படும் காயம் அனைவருக்குமான காயமாகும். இந்த தொற்றுநோயைப் பொறுத்த வரை, ஒரு நாட்டிற்கு ஏற்படும் காயம் ஒட்டுமொத்த உலகிற்கும் ஏற்படும் காயமாகும். நோய் சூழலியல் நிபுணர் பீட்டர் தாஸ்ஸாக் குறிப்பிடுவதைப் போல, “வைரஸ்கள் தேசிய எல்லைகளைச் சிந்திப்பதில்லை.”

ஆனால் முதலாளித்துவ தேசிய-அரசு முறை போட்டியிடும் தேசிய-அரசு நலன்களை உள்ளார்ந்து கொண்டிருப்பதால் சர்வதேச ஒருங்கிணைப்புக்குத் தகைமையற்ற அதனுடன் ஓர் உலகளாவிய அணுகுமுறை ஒவ்வொரு கட்டத்திலும் மோதுகிறது. முதலாளித்துவ அரசாங்கங்கள் அவற்றின் போட்டியாளர்களுக்கு எதிராக அவற்றின் புவிசார் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக உயிர்காக்கும் சிகிச்சைகள் மீது அவற்றின் கட்டுப்பாட்டை தக்க வைக்க அவை எடுக்கும் முயற்சிகளால், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் முயற்சிகளால், தடுப்பூசிகளின் ஆரம்ப வினியோகமே தடைபட்டுள்ளது.

இந்த தொற்றுநோயிலிருந்து, இரண்டு வெவ்வேறு வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு வெவ்வேறு பாதைகள் எழுகின்றன. ஆளும் வர்க்கத்தின் கொள்கையானது தொற்றுநோயைத் தொடர்வதையும், அதனுடன், பாரிய மரணம் மற்றும் சமூக சீரழிவைத் தொடர்வதையும் குறிக்கிறது.

மறுபுறம், இந்த பெருந்தொற்று ஏற்கனவே ஓர் உலகளாவிய வர்க்கப் போராட்ட வெடிப்பின் ஆரம்ப வெளிப்பாடாக அதிகரித்துவரும் தொழிலாள வர்க்க அமைதியின்மையை உருவாக்கி வருகிறது. இந்த போராட்டங்களின் தர்க்கம், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி, செல்வந்தர்களின் செல்வ வளத்தைப் பறிமுதல் செய்து, அனைத்து சமூக மற்றும் பொருளாதார வாழ்வையும் மறுஒழுங்கு செய்ய வேண்டிய அவசியத்தை எழுப்புகிறது.

தொழிலாள வர்க்கம் மட்டுமே உண்மையான சர்வதேச வர்க்கமாகும். பூகோளமயப்பட்ட உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் ஒருங்கிணைந்துள்ள ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் ஒரே நலன்களையே பகிர்ந்து கொள்கிறார்கள். செல்வந்த தன்னலக்குழுக்களின் இலாப நலன்களால் அல்ல, பொது சுகாதார தேவைகளால் கட்டளையிடப்பட்ட, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த ஒரு விடையிறுப்பைக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டின் மூலமாக மட்டுமே, இந்த உலகளாவிய தொற்றுநோய்க்குப் பதிலளிக்க முடியும்.

தொழிலாள வர்க்க புறநிலை இயக்கம் சோசலிசத்திற்கான ஒரு நனவான புரட்சிகர போராட்டமாக வளர்வதற்கு ஒரு புரட்சிகர தலைமையை, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் தேசிய பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளைக் கட்டமைப்பது அவசியமாகும்.

Loading