கருங்கடலில் போர் ஆபத்துக்கு மத்தியில், மொந்ரோ உடன்பாட்டை துருக்கி அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேட்டோ ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான அச்சுறுத்தல்களை அதிகரிக்கும்போது, துருக்கி அரசிற்குள் மொந்ரோ உடன்பாடு தொடர்பாக ஒரு கடுமையான மோதல் வெடித்துள்ளது. இவ்வுடன்பாடு மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடல்களுக்கு இடையிலான கடல்பாதையை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். கருங்கடலுக்கு போர்க்கப்பல் அனுப்பப்படுவதைக் கட்டுப்படுத்தும் உடன்பாட்டை அகற்றுவதற்காக இஸ்தான்புல் கால்வாய்க்கான திட்டங்களை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகான் பேசியதை கடற்படையின் பிரிவுகள் எதிர்க்கின்றன. இது நேட்டோவை மத்திய தரைக்கடலில் இருந்து போர்க்கப்பல்களை அனுப்பி, விருப்பப்படி, ரஷ்ய கடற்கரையை அச்சுறுத்த அனுமதிக்கும்.

துருக்கிய அதிகாரிகள் 2021 ஏப்ரல் 5 திங்கட்கிழமை 10 முன்னாள் அட்மிரல்களை தடுத்து வைத்தனர். ஓய்வுபெற்ற 100 க்கும் மேற்பட்ட உயர் கடற்படை அதிகாரிகள் குழு துருக்கியின் இராணுவ சதித்திட்டங்களின் வரலாற்றுடன் அரசாங்க அதிகாரிகளின் தொடர்பை பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டனர். (AP Photo/Lefteris Pitarakis, File)

இஸ்தான்புல் கால்வாய் பெரிய எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்கு இடமளிக்கும். இவை கருங்கடலை மார்மரா கடலுடன் இணைக்கும் குறுகிய போஸ்போரஸ் ஜலசந்திகளைக் கடந்து செல்லும். 2018 ஆம் ஆண்டில், ஹாங்காங்கில் உள்ள South China Morning Post பத்திரிகை இந்த திட்டம் "கருங்கடலில் ஒரு ஆயுதப்போட்டியைத் தூண்டக்கூடும்" என்று கவலைப்பட்டு, "சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது." எனக்குறிப்பிட்டது. அந்த நேரத்தில், துருக்கிய பிரதமர் பினாலி யெல்டிறிம் இஸ்தான்புல் கால்வாய் மொந்ரோ உடப்பாட்டிற்கு உட்பட்டது அல்ல என்று கூறியிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பைடென் பதவியேற்றதிலிருந்து, நேட்டோ ஆதரவுடன் கிரிமியாவை ஆக்கிரமித்து ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைத் தளத்தை செவாஸ்டாபோலை கைப்பற்றுவதற்கான திட்டங்களை உக்ரேன் அறிவித்ததுடன் இந்த பிரச்சினை இன்னும் வெடிக்கும் தன்மையுடையதாகியுள்ளது. எர்டோகான் "மொந்ரோ உடன்படிக்கையை கலைக்கக்கூடுமா" என்று ஒரு நிருபர் பாராளுமன்றத் தலைவர் முஸ்தபா சென்டோப்பைக் கேட்டபின் துருக்கிய ஊடகங்களில் இந்த பிரச்சினை பரவலாக விவாதிக்கப்பட்டது. எர்டோகானின் ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சியின் (AKP) உறுப்பினரான சென்ரொப், “தொழில்நுட்ப ரீதியாக, ஆம்” என்று பதிலளித்தார்.

ஏப்ரல் 3 ம் தேதி, ஓய்வுபெற்ற 104 துருக்கிய அட்மிரல்கள் மொந்ரோ உடன்பாடு தொடர்பான விவாதத்தை திறப்பதை எதிர்த்து ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது: “இஸ்தான்புல் கால்வாயின் ஒரு பகுதியாக மொந்ரோ உடன்பாட்டை விவாதிக்க திறப்பது மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கு அனுமதி கோருவதும் கவலைக்குரியது.” என்றனர்.

நீண்டகால நேட்டோ அதிகாரிகளான இந்த அட்மிரல்கள் அனைவரும், உடன்பாட்டைக் கேள்விக்குட்படுத்துவது துருக்கிய தேசிய நலன்களில் பேரில் இல்லை என்று அறிவித்தனர். இது "துருக்கிய நீரிணை வழியாக செல்லும் பாதைகளை மட்டுமல்லாமல், இஸ்தான்புல், அனாக்கலே, மார்மரா கடல் மற்றும் நீரிணைப்பகுதிகள் மீது துருக்கிக்கு முழு இறையாண்மையை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், துருக்கிக்கு ஒரு பெரிய இராஜதந்திர வெற்றியாகும்" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், துருக்கிய அரசாங்கம் அட்மிரல்களில் பத்து பேரை கைது செய்து, ஜூலை 15, 2016 இன் நேட்டோ ஆதரவு சதி முயற்சி தோல்வியுற்றதை குறிப்பிட்டு அவர்கள் ஆட்சி கவிழ்ப்பைத் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டினர். "ஒருவரின் கருத்தை தெரிவிப்பது ஒரு விடயம், ஆனால் ஒரு சதித்திட்டத்தைத் தூண்டும் ஒரு அறிக்கையை தயாரிப்பது மற்றொரு விஷயமாகும்” என்று சென்ரொப் தெரிவித்தார். பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகார், அட்மிரல்கள் "எங்கள் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும், துருக்கிய ஆயுதப்படை (TSK) பணியாளர்களின் மன உறுதியையும் உந்துதலையும் எதிர்மறையாக பாதிக்கும், மற்றும் எங்கள் எதிரிகளை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார். உள்துறை மந்திரி சுலைமான் சோய்லூ “எமது பொறுமையை சோதிக்க அவர்களை விடவேண்டாம் என்றார்”.

அட்மிரல்களின் அறிவிப்பை “பேச்சு சுதந்திரம் என்று முத்திரை குத்த முடியாது” என்று எர்டோகான் கூறினார், மேலும் அவர் உடன்பாட்டை இரத்து செய்யக்கூடும் என்று மீண்டும் மீண்டும் கூறினார். “தற்போது எங்களுக்கு மொந்ரோ உடன்பாட்டை விட்டு வெளியேற எந்த முயற்சியும் நோக்கமும் இல்லை. எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இதுபோன்ற தேவை ஏற்பட்டால், நம் நாட்டிற்கு சிறந்த ஒன்றை அறிமுகப்படுத்த ஒவ்வொரு உடன்பாட்டையும் மறுபரிசீலனை செய்ய நாங்கள் தயங்க மாட்டோம். நாங்கள் அவற்றை சர்வதேச விவாதத்திற்கு திறப்போம்” என்றார்.

நேற்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொந்ரோ உடன்பாட்டை கைவிடுவதை எதிர்க்க எர்டோகானை அழைத்தார். கிரெம்ளின் செய்திசேவை ஒரு சுருக்கமான அறிவிப்பை வெளியிட்டது: “இஸ்தான்புல் கால்வாயைக் கட்டுவதற்கான துருக்கியின் திட்டங்கள் குறித்து, கருங்கடல் நீரிணைப்புகளின் உள்ள பிராந்திய அரசுகளின் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக 1936 மொந்ரோ உடன்பாட்டை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை ரஷ்யா வலியுறுத்தியது".

முன்னதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பின்வருமாறு வலியுறுத்தினார்: “உடன்பாட்டை திருத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் நம் நாட்டின் நலன்களைப் பாதிக்கிறது. இந்த உடன்பாடு கருங்கடல் படுகையில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய காரணியாக நாங்கள் பார்க்கிறோம். குறிப்பாக போர்க்கப்பல் போக்குவரத்து தொடர்பாக.” என்றார். துருக்கிக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸி எர்கோவ், ஒரு இஸ்தான்புல் கால்வாயை அகழ்வது மொந்ரோ உடன்பாட்டை செல்லுபடியற்றதாக செய்யாது என்று கூறியது. இதற்கு இன்னும் துருக்கி கட்டுப்பட்டுள்ளது என்றார்.

புதன்கிழமை, எர்டோகான் முதலாளித்துவ எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) "ஆட்சி மாற்ற உணர்வுகளைக் கொண்ட இந்த அறிவிப்பை மூடிமறைக்க முயற்சிப்பதாக" குற்றம் சாட்டினார். அட்மிரல்களில் சிலர் குடியரசு மக்கள் கட்சி உறுப்பினர்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு தீவிர வலதுசாரி Good Party உட்பட குடியரசு மக்கள் கட்சி மற்றும் அதன் கூட்டுக்களை பிளவுபடுத்தியுள்ளது. குடியரசு மக்கள் கட்சி தலைவர் கெமால் கிலக்டாரோயுலு அரசாங்கத்தின் பதிலை "செயற்கை நிகழ்ச்சி நிரல்" என்று அழைத்தபோது, குடியரசு மக்கள் கட்சியின் குர்திஷ்-தேசியவாத கூட்டாளியான மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP), "எழுதப்பட்ட அறிக்கையிலிருந்து ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தலைக் கண்டுபிடிப்பதற்கான எர்டோகானின் முடிவு அரசியல் தந்திரமான மற்றும் சந்தர்ப்பவாதம் என்பதை தவிர வேறொன்றுமில்லை" என்றது.

Good Party தலைவர் மெரல் அக்கீனர் இந்த அறிவிப்பை விமர்சித்து, அதை "வேடிக்கையான நடத்தை" என்று அழைத்தார், அவரது இஸ்மீர் நகர துணைதலைவர் அய்தூன் சிராய் ஓய்வு பெற்ற அட்மிரல்களையும் அவர்களின் அறிக்கையையும் பாதுகாத்தார். உண்மையில், துருக்கியின் அரசாங்கமும் முதலாளித்துவ எதிர்க் கட்சிகளும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் போர் இயக்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்கின்றன.

தொற்றுநோய் குறித்த எர்டோகான் அரசாங்கத்தின் கொலைகார “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையின் காரணமாக, பெருவணிகத்தின் இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றது. தினசரி புதிய தொற்றுக்கள் 54,740 ஐ எட்டிய மற்றும் புதன்கிழமை இறப்புக்களின் எண்ணிக்கை 276 ஆனது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இரண்டு புள்ளிவிவரங்களும் மிக அதிகமானவையாகும். ஆளும் வர்க்கங்களின் பிற்போக்குத்தனமான சுகாதாரக் கொள்கைகளால் சுமத்தப்பட்ட சமூகக் கொலைக்கு எதிராக துருக்கியிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திலும் சமூக கோபமும் வேலைநிறுத்த நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.

ரஷ்யா மற்றும் சீனா இரண்டையும் அச்சுறுத்தும் வகையில், நேட்டோ தனது அணிகளை போருக்குத் தயார்படுத்துகையில், மொந்ரோ உடன்பாட்டை அகற்றுவதற்கான துருக்கிய அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. குறிப்பாக, தீவிர வலதுசாரி படைகள் 2014 பிப்ரவரியில் உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவு சதித்திட்டத்தினால் தூக்கியெறிந்ததிலிருந்து கருங்கடலின் வடக்கு கரையில் உக்ரேனில் ரஷ்யாவிற்கும் நேட்டோ ஆதரவு ஆட்சிக்கும் இடையிலான பதட்டங்கள் மிக உச்சத்தை அடைந்துள்ளன.

துருக்கி அரசாங்கம் உக்ரேனுடன் முக்கிய ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நேட்டோவின் உக்ரைன் கொள்கையை ஆதரிக்கும் அதே வேளையில், நேட்டோ, ரஷ்யா மற்றும் சீனாவுடனான அதன் உறவுகள் அனைத்தும் ஆழமாக பிளவுபட்டுள்ளன.

சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான தசாப்த கால யுத்தத்தில் குர்திஷ் தேசியவாத சக்திகளுடனான அமெரிக்காவின் உறவுகளுக்கு அதன் கடுமையான விரோதப் போக்கு வாஷிங்டனுடனான அங்காராவின் பெருகிய கடினமான உறவுகளில் ஒரு முக்கியமான காரணியாகும். இஸ்லாமிய அரசு (ISIS) ஆயுதக்குழுக்கள் சிரியாவில் அதிகாரத்தைப் பெற்று ஈராக் மீது படையெடுத்தபோது, ஏகாதிபத்திய சக்திகள் குர்திஷ் தேசியவாத குழுக்களிடம் பினாமி சக்தியாக ஆதரவுக்காக திரும்பின. ஏகாதிபத்திய யுத்தக் கொள்கையில் இந்த திடீர், வன்முறை மாற்றங்களுடன் எர்டோகானால் இயைந்து முடியவில்லை. அவருடைய ஏகாதிபத்திய கூட்டாளிகள் அவரை ஒரு "மூலோபாய பங்காளியாக" பார்க்கவில்லை, ஆனால் நம்பமுடியாத ஒருவராக பார்க்கின்றனர்.

வாஷிங்டனும் மற்றும் பேர்லினும் 2016 இல் எர்டோகானுக்கு எதிராக இராணுவ சதித்திட்டத்துடன் பதிலளித்த போது பைடென் பராக் ஒபாமாவின் துணைத் தலைவராக இருந்தார். ஆட்சி மாற்றத்தின் தோல்வி நேட்டோவுடனான அங்காராவின் உறவை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.

அமெரிக்க பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், துருக்கி ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கி மாஸ்கோவுடன் ஒரு மூலோபாய இயற்கை எரிவாயு குழாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. துருக்கியும் ரஷ்யாவும் மீண்டும் மீண்டும் லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ பினாமி போர்களிலும், அண்மையில் ஆர்மீனியா-அஜர்பைஜான் போரிலும் நேரடி மோதலின் விளிம்பில் இருந்தபோதிலும், அவர்கள் எப்போதும் ஒரு நேரடி மோதலைத் தவிர்க்க முடிந்தது. இது நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உலகளாவிய போரை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கின்றன.

பைடென் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வாஷிங்டனுடனான உறவை மேம்படுத்த எர்டோகான் முயன்றுள்ளார். அவருடைய முயற்சிகள் அனைத்தையும் மீறி, வாஷிங்டனுக்கும் அங்காராவுக்கும் இடையில் மோதல்கள் தொடர்கின்றன. ரஷ்ய தயாரிக்கப்பட்ட எஸ்-400 ஆகாய பாதுகாப்பு அமைப்பை துருக்கி வாங்குவதையும், ரஷ்யா மற்றும் சீனாவுடனான அங்காராவின் பரந்த உறவுகளையும் அமெரிக்க அதிகாரிகள் எதிர்க்கின்றனர். இந்த வாரம், எஸ்-400 முறையை வாங்குவதற்கான திட்டங்களை அங்காரா கைவிட மறுத்ததை அடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு துருக்கிய பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அதன் நான்கு அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை "கொலையாளி" என்று கண்டிக்கும் பைடெனின் கருத்தை எர்டோகான் விமர்சித்தார். புட்டினுக்கான இந்த வார்த்தை பிரயோகம் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று எர்டோகான் கூறினார்.

இந்த வெடிக்கும் சூழ்நிலைகளில், மொந்ரோ உடன்பாட்டை இரத்து செய்வது பற்றிய விவாதம், முக்கிய சக்திகளுக்கு இடையிலான போர் அச்சுறுத்தல் விரைவாக துரிதப்படுத்தபடுவதற்கு மத்தியில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும்.

Loading