தெற்காசியாவில் 14 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 பாதிப்புகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக மக்கள்தொகையில் கால்வாசியைக் கொண்டிருக்கின்ற தெற்காசியாவில் கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் இறப்புகள் ஒரு உச்சத்தை அடைந்திருக்கிறது. தற்போது பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 14 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளன, இது மார்ச் 20 முதல் சுமார் எட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இறப்புகள் 195,000 க்கும் அதிகமாக உள்ளன, அதே காலகட்டத்தில் 3.5 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

பிராந்தியத்தின் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மக்களுக்கு இத்தகைய மிகவும் தொற்றக்கூடிய நோயின் கொடிய பின்விளைவுகள் தெற்காசியாவின் ஆளும் தட்டுக்களின் குற்றவியல் கொள்கைகளின் விளைவுகளாகும், அவர்கள் மக்களின் உயிர்களுக்கு மேலாக பெருவணிகங்களின் இலாப நலன்களைக் முன் வைத்துள்ளனர்.

2021 ஏப்ரல் 6 செவ்வாய்க்கிழமை இந்தியாவிலுள்ள கெளஹாத்தியில் மூன்றாம் கட்ட சட்டசபைத் தேர்தலின்போது வாக்களிக்கும் மையத்துக்கு வெளியே ஒரு வாக்களிப்பவரின் உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் ஒரு சுகாதார ஊழியர் (AP Photo/Anupam Nath)

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைக் கொண்டிருக்கிற தெற்காசியாவிலுள்ள அரசாங்கங்கள் 2020 ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் கொடிய தொற்றுநோயை பெருமளவில் புறக்கணித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச்சில் பொதுமுடக்கத்தை அறிவிப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் அத்தகைய தவறான முறையில் தயாரிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் போது நன்கு பயனளிக்கக்கூடியதாக வெகுஜன சோதனை முறைகள், தொற்று பாதிப்பில் தொடர்புள்ளவர்களை கண்டுபிடித்தல் மற்றும் நிதியுதவி இன்றி இருக்கும் பொது சுகாதார பாதுகாப்பு அமைப்புகளுக்கு போதுமான அளவு நிதிவளங்கள் மற்றும் வேலைகள் மற்றும் வருமானங்களை இழந்திருக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு சமூக ஆதரவு எதுவுமே செய்யப்படவில்லை.

சர்வதேச அளவில் இருக்கும் அவர்களின் சகாக்களைப் போல, இந்த அரசாங்கங்களும் ஏப்ரல் இறுதியில் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்க திறக்கத் தொடங்கிவிட்டன. உண்மையான நிதியுதவி கிடைக்காத நிலையில் தொழிலாளர்கள் அவர்களுடைய தொழில் பகுதிகளுக்கு திரும்புவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர், அது தற்போதைய கோவிட்-19 அதிகரிப்பதற்கு வழிவகுத்திருக்கிறது.

தற்போது இந்தியா பிராந்தியத்தின் தொற்றுநோயின் மையமாக இருக்கிறது, தெற்காசியாவில் மொத்தப் பாதிப்புகள் சுமார் 88 சதவீதமாகவும் மொத்த இறப்புகள் 85 சதவீதமாகவும் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று தினசரி நோய்த்தொற்றின் எண்ணிக்கை ஒரு புதிய உச்சமாக 100,000 ஐ தொட்டிருக்கிறது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டதிலிருந்து இந்தியாவில் 12.5 மில்லியனுக்கும் அதிமான பாதிப்புகளும் 165,000 மேலான இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. மற்றொரு தேசிய பொது முடக்கத்தை தனது அரசாங்கம் திணிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி கூறினார்.

“கடந்த 15 மாதங்களுக்கு மேலாக கோவிட்-19 நிர்வாகத்தின் கூட்டான ஆதாயங்கள் வீணாக்கப்படாமல் இருப்பதற்காக” மத்திய அரசாங்கம் அதன் ”பணித்திட்ட அணுகுமுறையை அதிகளவிலான பாதிப்புகளை அறிவிக்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில்” பராமரிக்கும் என்று மோடியின் அலுவலகத்திலிருந்து சமீபத்திய அறிக்கையொன்று தெரிவித்திருக்கிறது. மோடியின் “கூட்டு ஆதாயங்கள்” என்ற கூற்று ஒரு மோசடியாகும், நாடு முழுவதும் கோவிட்-19 மிகப்பெருமளவில் அதிகரித்திருப்பதற்கு அவருடைய அரசாங்கத்தின் கொள்கைகளே காரணங்களாகும்.

“100 சதவீத முககவச பயன்பாடு, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மற்றும் சுகாதார மையங்களிலும் கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகின்ற வகையில் ஏப்ரல் 6 தொடக்கம் 14 வரை கோவிட்-19க்கு பொருந்தும்வகையில் நடந்துகொள்ளவேண்டிய நடத்தை விதிகளுக்கான சிறப்பு பிரச்சாரம்" மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணியிடங்களுக்கான பொறுப்பு சாதாரண உழைக்கும் மக்கள் மீது வைக்கப்படுகிறது, அதே நேரத்தில் பெருவணிகம் உற்பத்தி மற்றும் இலாபங்களை தொடர்ந்து பராமரிக்கிறது.

“உலகின் மிகப் பெரும் தடுப்பூசி திட்டத்தை” மேற்கொண்டு வருவதாக கூறுவதன்மூலம் மோடி அரசாங்கம் கொடிய தொற்றுநோயை அது கட்டுப்படுத்த தவறிவிட்டதை மூடிமறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. கோவிட்-19 தடுப்பூசி மருந்தை இந்திய மக்கள் தொகையில் வெறும் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே பெற்றிருக்கின்றனர் என்பது தான் உண்மையாக இருக்கிறது.

மிகவும் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று தினசரி கோவிட்-19 பாதிப்பு மாநிலத்தின் ஒரு புதிய உச்சமாக 57,000க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதன் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு நகரங்களான மும்பாய் மற்றும் புனே முறையே 11,206 மற்றும் 12, 472 புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளன.

மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஒரு முழு அடைப்புக்கு அறிவிக்கும் கட்டாயத்தில் இருக்கும் நேரத்தில், அனைத்து அரசாங்க அலுவலகங்கள் மற்றும் கட்டுமானத் தொழில் பகுதிகள் உட்பட மற்ற தொழிற்சாலை பிரிவுகள் 50 சதவீத திறன்களுடன் உற்பத்திகளை பராமரிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் ஆதரவுடன் தாக்கரேயின் பாசிச சிவசேனா, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை கொண்ட கூட்டணியாக இருக்கும் மகராஷ்டிரா அரசாங்கத்திற்கும் கொடிய நோய்த் தொற்று குறித்த மோடியின் கிரிமினலாக போதியளவில் செயலாற்றாததற்கும் எந்த வித்தியாசமுமில்லை.

இந்தியாவின் மோசமான உள்கட்டமைகளை கொண்ட மருத்துவமனைகள் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் நிரம்பி வழிகின்றன. ஏப்ரல் 1 அன்று, இந்தியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் நாக்பூரின் தென்மேற்கில் 80 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கஸ்தூர்பா மருத்துவமனையில் “100க்கும் குறைவான படுக்கைகளுடன் கோவிட்-19 வார்டு மீண்டும் மிகவேகமாக நிரம்பிவிட்டன – கடந்த சில வாரங்களில் 170 நோயாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர் மேலும் 30 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவில் மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுடன் விளிம்புவரை நிரம்பியிருந்தது.” என்று பிபிசி குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமையன்று தினசரி கோவிட்-19 பாதிப்புகள் 5,020 ஆக அறிவித்தது. கடந்த ஆண்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் 692,231 ஆகவும் 14,821 பேர் இறந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. இந்த நாட்டில் தற்போது பிரிட்டனின் மாற்றமடைந்துள்ள கொடிய வைரஸ் ஆதிக்கம் பெற்றுள்ளது. இருந்தபோதிலும் பிரதமர் இம்ரான் கான் ஒரு தேசியளவிலான பொதுமுடக்கத்தை இன்னும் அமுல்படுத்தவில்லை.

ஞாயிற்றுக்கிழமையன்று, வைரஸ் “இதுபோன்று தொடர்ந்து பரவினால், அது மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்று கான் சாதுரியமாக அறிவித்தார். அத்தகைய “கடுமையான நடவடிக்கைகள்” என்னவென்று அவர் விவரிக்கவில்லை. இதுவரை சுகாதார மற்றும் நிர்வாக அதிகாரிகள் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாபிலும் மற்றும் நாட்டின் வடக்குப் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் ஒரு பகுதி முடக்கத்தை மட்டுமே விதித்துள்ளனர்.

பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில், படுக்கைகள் இல்லாததால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து திரும்பி அனுப்பப்படுகின்றனர். நாடு முழுவதிலுமிருந்து அவசர நோயாளிகளைப் முன்னர் சேர்த்துக்கொண்ட பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம், தற்போது படுக்கைகள் இல்லாத காரணத்தால் மேற்கொண்டு சேர்க்கமுடியாது என்று ஏப்ரல் 1 ம் தேதி டான் செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நாட்டின் தற்போதைய தடுப்பூசி திட்டம் மக்கள்தொகையில் மிகக் அற்பமான ஒரு பகுதியை மட்டுமே எட்டியிருக்கிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி, 220 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் 800,000 டோஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில், மொத்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 637,364 ஆக உள்ளது, அத்துடன் மொத்தம் 9,266 பேர் இறந்துள்ளனர். வெள்ளிக்கிழமையன்று தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7,000 ஆக பதிவாகியுள்ளது. இது கொடிய தீவிர நோய் பரவல் ஆரம்பித்ததிலிருந்து மிக உயர்வானதாகும். கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 24 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை தொடங்கி ஒரு வார கால முடக்கத்தை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநில பொது நிர்வாக அமைச்சர் ஃபர்ஹாத் ஹொசைன், "தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் திறந்திருக்கும்" என்று அறிவித்தார், இது சுழற்சிமுறையில் இயங்கும் மற்றும் கடுமையான சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றும் என்று அவர் கூறியுள்ளார்.

பங்களாதேஷின் போதிய வளங்களற்ற மருத்துவமனைகள் இப்போது கோவிட்-19நோயாளிகளால் நிரம்பிவழிந்திருக்கின்றன, சுமார் 5.5 மில்லியன் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது, அல்லது அதன் மக்கள் தொகையில் 3.5 சதவீதத்திற்கும் குறைவானவர்களாவர்.

சனிக்கிழமை டெய்லி ஸ்டாரில் ஒரு தலையங்கம், கோவிட்-19 க்கு சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்ட முக்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை படுக்கைகள் இல்லாததால் நோயாளிகளைத் திருப்பி விடுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலமை மேலும் தொடர்ந்தால், பங்களாதேஷ் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு இடமளிக்க மற்றும் சிகிச்சையளிக்க முடியாது போகும் என்று சுகாதார அமைச்சர் ஜாஹித் மாலிக் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 12 மாதங்களில் இலங்கையில் மொத்தம் 93,436 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 581பேர் இறந்திருப்பதாகவும் பதிவாகியுள்ளன. அது தற்போது ஒரு நாளைக்கு 10,000 பரிசோதனைகளுக்கும் குறைவாகவே நடத்துகிறது, இது இந்த பிராந்தியத்தில் மிகக் குறைவான ஒன்றாகும், மேலும் நாட்டில் பரவும் புதிய மாற்றமடைந்த வைரஸ் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், முன்னர் மேற்கொண்ட 15,000 முதல் 20,000 வரையிலான பற்றாக்குறையான தினசரி பரிசோதனைகள் விகிதத்தை விட இது குறைவாக உள்ளது.

கோவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கிறது ஏனெனில் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில்கள் மற்றும் பள்ளிகள் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று ராஜபக்ஷ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் தடுப்பூசி திட்டம் குழப்பமானதாக உள்ளது, வெறும் 900,000 அல்லது 4.5 சதவீதத்திற்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டிருக்கின்றனர்.

Loading