அமெரிக்க ஆதரவிலான ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் இலங்கையை கண்காணிப்பில் வைக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

செவ்வாய்கிழமை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி.) நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானம், நாட்டில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிக்குமாறு, மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகருக்கு அழைப்பு விடுக்கின்றது.

ஜனவரியில் தமிழ் குடும்பங்கள் போரினால் இடம்பெயர்கின்றன [Source: Wikimedia]

இந்த தீர்மானம், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, வடக்கு மெசிடோனியா. மொன்றிநீக்ரோ, மலாவி ஆகிய அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய, யு.என்.எச்.ஆர்.சி.இன் “இலங்கைக்கான கோர் குழு” நாடுகளால் கொண்டுவரப்பட்டது. இது ஒரு இணை அனுசரணை என, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தீர்மானத்தின் நோக்கம், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சீனாவுடனான உறவுகளைத் துண்டிக்குமாறும் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ - மூலோபாய தயாரிப்புக்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்குமாறும் நெருக்குவதுமே ஆகும். 22 நாடுகள் இந்த தீரம்மானத்துக்கு ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஜனாதிபதி இராஜபக்ஷ உட்பட இலங்கையின் சிரேஷ்ட்ட தலைவர்கள், இந்த தீர்மானத்தை எதிர்க்குமாறு கோரி, யு.என்.எச்.ஆர்.சி. அங்கத்தவர்களின் மத்தியில் கடுமையான பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தார்கள். அமெரிக்காவும் பிரித்தானியாவும், இலங்கைக்கான ஆதரவினைக் குறைத்துக் கொள்வதற்கும் அதை தனிமைப்படுத்துவதற்காகவும் தீவிர பிரச்சாரத்தினை முன்னெடுத்திருந்தன. இதே போன்று நாட்டுக்கு எதிராக யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானங்கள் முதன் முறையாக நகர்த்தப்பட்ட போது, இலங்கைக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் குறைந்தளவாக இருந்ததாக, ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் இரத்தக்களரிப் போரை முடிவுக்கு கொண்டுவந்து ஒரு மாதத்திற்குப் பின்னர், 2009 இல் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை வாஷிங்டன் ஆதரித்ததுடன், 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடையில் இலங்கை தொடர்பான அனைத்து யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானங்களுக்கும் ஆதரவளித்தது.

இந்த வாரத்தின் 16-புள்ளிகள் அடங்கிய தீர்மானம், அதிகாரப்பரவலாக்கல், மனித உரிமைகளின் பாதுகாப்பு, மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை “மீளாய்வு” செய்தல், பொறுப்புக்கூறல், மத சுதந்திரத்தினை மதித்தல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கு அழைப்பு விடுக்கின்றது. இது, சிவிலியன் அரசாங்கம் இராணுவமயமாக்கப்படுவது பற்றியும் தனது கவலையை வெளிப்படுத்துகின்றது.

தீர்மானத்தினை வகுப்பதில், அதன் ஆதரவாளர்கள் கொழும்பு அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை இழிந்த முறையில் சுரண்டிக் கொண்டனர். பொறுப்புக் கூறல் என்பது, புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடைபெற்ற குற்றங்களைக் குறிப்பதாகும். அப்போது, சரண்டைந்த விடுதலைப் புலி தலைவர்கள் உட்பட 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இராணுவத்திடம் சரண்டைந்த பின்னர் காணாமல் போல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு, கொழும்பு அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.

அண்மைய மாதங்களில் இராஜபக்ஷ ஆட்சி முஸ்லீம்-விரோத உணர்வுகளைத் தூண்டி விட்டு வந்துள்ளதுடன் கொவிட்-19 வைரஸால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதன் மூலம் அந்த சமூகத்தினை தனிமைப்படுத்தியது. அரசாங்கத்தின் பிரதான பொறுப்புக்களில் ஓய்வுபெற்ற ஜெனரல்களை நியமித்ததன் மூலம், அதன் நிர்வாகத்தினை இராணுவ மயப்படுத்தியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், 'பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் தப்பிப் பிழைத்தவர்களுக்காகவும் வாதாடுவதற்கும் மற்றும் பொருத்தமான நீதிமுறைகளுடன் உறுப்பு நாடுகளில் உட்பட எல்லா இடங்களிலும் பொருத்தமான சட்ட நவடிக்கைகள் மற்றும் ஏனைய முன்னெடுப்புகளுக்கும் ஆதரவளிக்க, இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறியமைக்கான எதிர்கால பொறுப்பாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பேரில், தகவல்களை சேகரித்து, ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்யவும் பாதுகாக்கவும் மற்றும் சாத்தியமான மூலோபாயங்களை அபிவிருத்தி செய்யவும்” யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானம் அழைப்பு விடுக்கின்றது.

ஊடக அறிக்கையின்படி, 'எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு' பொருத்தமான தரவுத்தளத்தை நிறுவுவதற்கு 18 மாத காலப்பகுதியில் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும். மூன்று சட்ட ஆலோசகர்கள், இரண்டு ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள் மற்றும் மனித உரிமை அதிகாரிகள் உட்பட 12 பேர் இந்த கட்டமைப்பில் பணியாற்றுவர். யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானம் இலங்கையில் சர்வதேச தலையீட்டிற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுவது இதுவே முதல் முறையாகும்.

போர்க்குற்றங்கள், ஜனநாயக உரிமைகளை அடக்குதல் மற்றும் அரசாங்கத்தை இராணுவமயமாக்குதல் பற்றிய யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தின் ஆதரவாளர்களின் கவலைகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும்.

கடந்த மூன்று தசாப்தங்களில் மட்டும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி ஆகியவை நவ-காலனித்துவ இராணுவத் தலையீடுகளை கட்டவிழ்த்துவிட்டு இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்து, எண்ணற்ற போர்க்குற்றங்களைச் செய்துள்ளன.

கொவிட்-19 தொற்றுநோயால் அதிகரித்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு பிரதிபலிக்கையில், இந்த ஏகாதிபத்திய நாடுகளின் ஆளும் உயரடுக்கினர், அதிதீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளையே ஊக்குவித்தன. ஜனவரி 6 அன்று வாஷிங்டனில் நடந்த, டிரம்ப் தலைமையிலான பாசிச சதி முயற்சி, இந்த அதிதீவிர வலதுசாரி திருப்பத்தின் கூர்மையான வெளிப்பாடாகும்.

இந்த யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானமானது யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தவோ அல்லது மனித உரிமைகளைப் பாதுகாக்கவோ போவதில்லை. மாறாக இது, பெய்ஜிங் உடனான கொழும்பின் உறவுகளை கண்காணிப்பில் வைப்பதன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடுகளை குறைப்பதற்கான அமெரிக்காவின் தீவிரமான முயற்சிகளின் இன்னொரு வெளிப்பாடாகும்.

அமெரிக்காவும் மற்றும் அதன் மூலோபாயக் கூட்டாளியான இந்தியாவும், இராஜபக்ஷ அரசாங்கம் மேலும் மேலும் நிதி ரீதியில் சீனாவில் தங்கியிருப்பதைப் பற்றி கவலையடைந்துள்ளன. பொறிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் பணம் இல்லாத அரசாங்கம், வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் அதன் அந்நியசெலாவனியை அதிகரிப்பதற்காக, கடந்த வாரம், கொடுத்து மாறல் முறை மூலம், சீன மக்கள் வங்கியிடமிருந்து 1.5 டொலர் கடனைப் பெற்றுக் கொண்டது.

யு.என்.எச்.ஆர்.சி.இல் கொண்டுவரப்பட்ட “மனித உரிமைகள்” சம்பந்தமான தீர்மானம் கொழும்பை பெய்ஜிங்கில் இருந்து தூர விலக வைப்பதில் தோல்வியடைந்த பின்னர், 2015 இல், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் சகோதரரான மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஆட்சிமாற்ற சதி முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வாரம், வாஷிங்டனின் அரசியல் சூழ்ச்சிகளை நன்கு அறிந்த பெய்ஜிங், இலங்கை தொடர்பான யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தது. தீர்மானத்தை எதிர்க்குமாறு யு.என்.எச்.ஆர்.சி. உறுப்பினர்களை ஜெனீவாவில் வைத்து சீனாவின் தூதர் வலியுறுத்தியதோடு “இரட்டை நிலைப்பாடு மற்றும் மனித உரிமைகள் அரசியல்மயப்படுத்தப்டுவதையும்” கண்டித்தார். “நேர்மையான கலந்துரையாடல் மற்றும் கூட்டுழைப்பின் ஊடாக மனித உரிமைகளை முன்னிலைப்படுத்தி பாதுகாக்குமாறு” அவர் ஐநா சபையிடம் கேட்டுக்கொண்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய ஜனாதிபதி இராஜபக்ஷ, இந்த தீர்மானத்தை எதிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார். எவ்வாறாயினும், இந்நியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஒரு அதிகாரப் பரவலாக்கத்துக்காக கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இலங்கையின் தமிழ் தேசியவாத கட்சிகளுடன் புதுடில்லி நெருக்கமான தொடர்புகளைப் பேணிவருகின்றது.

ஜெனீவாவில் இந்தியாவின் தூதர் பவன்குமார் பாதே, 'தமிழ் சமூகத்தின் அபிலாஷைக்கு தீர்வு காண வேண்டும்.... [மற்றும்] அதன் அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்களையும் மனித உரிமைகளையும் உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக ஈடுபட வேண்டும்' என்று கொழும்புக்கு அழைப்பு விடுத்தார்.

வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, இந்த தீர்மானம் 'நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கான தற்போதைய முயற்சிகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும்' என்று கேலிக்கூத்தாக அறிவித்தார்.

கொழும்பு, வாஷிங்டனின் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதை உணர்ந்த அவர், 'இலங்கை, ஐ.நா மற்றும் அதன் முகவரமைப்புகளுடன் ஒரே மாதிரியான ஒத்துழைப்புடன் ஆக்கபூர்வமாக ஈடுபடும்...' என்று வலியுறுத்தினார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, 'நாட்டில் உள்ள வெவ்வேறு சமூகங்களுக்கு மத்தியில் ஐக்கியமின்மை மற்றும் நம்பிக்கையீன கொள்கைகளுக்கு அரசாங்கம் அடிபணிந்துள்ளதாலேயே யு.என்.எச்.ஆர்.சி. இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “உள்நாட்டுப் பொறிமுறையை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்துக்கு அதரவளிக்கத் தயாராக” இருப்பதாக பிரேமதாச அதே மூச்சில் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ஒரு தலைவரான பிமல் ரத்நாயக்க, “அரசாங்கம் அதன், மோசமான மற்றும் சர்வாதிகார ஆட்சிக்காக நாட்டைக் காட்டிகொடுத்துவிட்டதாக” கூறினார். “இப்போதாவது நாங்கள் எங்கள் தவறுகளை பற்றி தயக்கம் காட்டாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். மனித உரிமைகளை மதிக்குமாறும் அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை ரத்துச் செய்யுமாறும், இராணுவமயமாக்கலை நிறுத்துமாறும் நாங்கள் அரசாங்கத்துக்கு அறிவுறுத்துகிறோம். அடுத்த முறை யு.என்.எச்.ஆர்.சி. இல் நாம் வெற்றி பெறுவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ள புவிசார்-மூலோபாய விடயங்களை இந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் மூடி மறைக்கின்றன. முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி.யும் யுத்தத்துக்கு முழு ஆதரவு வழங்கியதுடன், இராணுவத்தினாரால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களை மூடிமறைத்து வருகின்றது. இராஜபக்ஷவின் ஆளும் கட்சியைப் போலவே, அவர்களும் இராணுவத்தில் தங்கியிருப்பதுடன், சமூக பதட்ட நிலமைகளின் மத்தியில் வெகுஜன எழுச்சிக்கு எதிராக ஆளும் வர்க்கத்தினைப் பாதுகாப்பதற்கு இவை அவசியம் என்பதை அவர்கள் அறிவார்கள்.

யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானம் இலங்கையைப் பற்றியது மட்டுமல்ல, சீனாவுக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளுக்குத் தயாராவதற்காக வாஷிங்டன் அதன் நட்பு நாடுகளின் மீது செலுத்தும் கடுமையான அழுத்தத்தின் மற்றொரு அறிகுறியாகும். இந்த அணு ஆயுத நாடுகளுக்கிடையேயான ஒரு போர், ஒரு பேரழிவுகரமான உலகளாவிய மோதலாக விரைவாக விரிவடையும்.

Loading