சீனாவை அச்சுறுத்தும் “ஆசிய நாற்கர” இந்தியப் பெருங்கடல் கடற்படை பயிற்சிகளில் பிரான்ஸ் இணைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 5-7 அன்று, வங்காள விரிகுடாவில் “La Pérouse” என்ற குறியீட்டு பெயரில் ஒரு பிரெஞ்சு கடற்படை பயிற்சியில் இந்திய மற்றும் ஜப்பானிய மற்றும் ஆஸ்திரேலிய போர்க்கப்பல்கள் முதன்முறையாக பங்குபற்றின.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் சீன எதிர்ப்பு “ஆசிய நாற்கர” கூட்டணியின் மார்ச் உச்சி மாநாடு மற்றும் கடற்படை பயிற்சிகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஆஸ்டின் மற்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் சு வூக் ஆகியோரின் இந்தியா வருகைகள் ஆகியவற்றின் பின்னர் இந்த ஆத்திரமூட்டும் பயிற்சி நடந்தது. “La Pérouse” பயிற்சியின் போது, போர்க்கப்பல்கள் ஹெலிகாப்டர் மற்றும் மறுவினியோக நடவடிக்கைகள் உட்பட 90 பயிற்சிகளை மேற்கொண்டன. மற்றொரு இந்திய-பிரெஞ்சு கடற்படை போர் பயிற்சியான வருணா போர் பயிற்சி ஏப்ரல் 25-27 களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

The PHA Tonnerre and the FLF Surcouf deployed as part of the Mission JDA 21 in the Bay of Bengal, (Image credit: Twitter/MarineNationale)

"லா பெரூஸ்" (La Pérouse) பயிற்சிக்கு தலைமை தாங்கிய, பிரான்சின் நீரிலும் நிலத்திலும் இயங்கும் தாக்குதல் கப்பலின் கேப்டன் அர்னாட் டிரான்சண்ட் (Arnaud Tranchant), இந்திய ஊடகங்களுக்கு இரண்டு கடற்படைகளுக்கு இடையிலான இயங்கக்கூடிய தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக கூறினார். இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மாத்வால் கூறுகையில், "இந்திய கடற்படையின் பங்கேற்பு நட்பு கடற்படையினருடன் பகிரப்பட்ட மதிப்புகளை நிரூபிக்கிறது. இது கடல்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதுடன் மற்றும் திறந்த, இந்தோ-பசிபிக் உள்ளடக்கிய ஒரு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கு பங்களிக்கிறது" என்றார்.

பைடென் நிர்வாகம் பதவியேற்றதும், ஆசியாவில் "விரிவாக்கவாத" சீனக் கொள்கைகளுக்கு எதிராக வாஷிங்டனுடன் "ஒன்றிணைந்து செயல்பட" ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விட்டதன் மூலம் இந்த பயிற்சிகள் பெருகிவரும் போர் பதட்டங்களை எடுத்துக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு, “நாற்கர” நாடுகள் வங்காள விரிகுடாவில் “மலபார்” கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டன. இப்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் கூட்டு இராணுவ செலவினங்களை, 2019 இல் 300 பில்லியன் டாலர்களை எட்டிய பின்னரும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களும் ஆசியாவிலும் ஒரு ஆக்கிரமிப்பு கொள்கையை உருவாக்கி வருகின்றனர்.

இந்த பயிற்சிகள், சமீபத்தில் பிரெஞ்சு ஆயுதப்படை தலைவர் ஜெனரல் தியரி புய்ர்கார் (Thierry Burkhard) உருவாக்கிய புதிய பிரெஞ்சு மூலோபாய ஆவணத்துடன் இயைந்துபோகின்றன. அந்த ஆவணம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பாரியளவிலான "நாட்டிற்கு எதிரான நாட்டின்" போர்களுக்கான தயாரிப்புகளுக்கான ஒரு திருப்பத்தை அடையாளம் காட்டுகிறது.

அதிகரித்துவரும் மோதல்கள் மற்றும் "தடைசெய்யப்படாத மறு இராணுவமயமாக்கல்" ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டி "உலகம் விரைவாகவும் போதுமான அளவு மோசமாகவும் வளர்ந்து வருகிறது" என்று அவர் கூறினார். இராணுவம் "2035 இல் ஒரு சூழ்நிலையை கற்பனை செய்திருந்தது ... ஆனால் 2020 ஆம் ஆண்டிலேயே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளை இடவேண்டி வந்துவிட்டது". சஹேல் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்கள் சம்பந்தப்பட்ட "மோதல்களின் ஒரு கட்டத்தின் முடிவை" பிரான்ஸ் இப்போது எதிர்கொண்டுள்ளது. இதில் பிரெஞ்சு படைகள் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பெரும் இராணுவ மேலாண்மையை அனுபவித்தன. இராணுவம் புதிய "சமச்சீர்" அதாவது "நாட்டிற்கு எதிரான நாட்டின்" முக்கிய அணுஆயுத நாடுகளுக்கு இடையிலான மோதல்களை எதிர்பார்க்கிறது என்று புய்ர்கார் கூறினார்.

2019-2025 இராணுவத் திட்ட சட்டத்தில் திட்டமிடப்பட்டபடி, 2021 ஆம் ஆண்டிற்கான பிரான்ஸ் தனது பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தில் 49.7 பில்லியன் டாலர்களைச் செலவழித்த பின்னர், இதை 2024 ஆம் ஆண்டில் 54 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில், பிராங்கோ-இந்திய கடற்படை பயிற்சிகள் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றம் "நாற்கர: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஜனநாயகங்களின் எழுந்துவரும் பலதரப்பு பாதுகாப்பு கட்டமைப்பு" (“The Quad: An emerging multilateral security framework of democracies in the Indo-Pacific region.”) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகியவற்றால் இந்தோ-பசிபிக் மூலோபாய ஆவணங்களை ஏற்றுக்கொள்வது "ஐரோப்பிய ஒன்றியம் ஒட்டுமொத்தமாக இப்பிராந்தியத்திற்கான வரவிருக்கும் மூலோபாயம் குறித்த எதிர்பார்ப்புகளை தீவிரப்படுத்திவிட்டுள்ளது" என்று அது குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றிய சக்திகள், பெய்ஜிங்கிற்கு எதிராக வாஷிங்டனுடன் முழுமையாக அணிவகுத்து நிற்கவில்லை என்றாலும், சீனா மீதான விரோதப் போக்கை அடையாளம் காட்டுகின்றன. அமெரிக்க கொள்கையை "ஒரு மூலோபாய அமெரிக்க-சீனா போட்டியின் வெளிப்பாடு" என்று அழைக்கையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது: "மறுபுறம், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவை ஒரு பொருளாதார பங்காளியாகவும், ஒரு முறையான போட்டியாளராகவும் பார்க்கிறது. ஆனால் முக்கிய பிரச்சினைகளில் (காலநிலை மாற்றம் உட்பட) ஒத்துழைப்புக்கும் பேச்சுவார்த்தைக்குமான பங்காளியாகவும் பார்க்கிறது”.

எவ்வாறாயினும், கோவிட்-19 தொற்றுநோயைத் தூண்டியதாகக் கூறப்படும் சீனாவை பொய்யாகக் குற்றம்சாட்டுவதுடன் அதிகரிக்கும் போர் பிரச்சாரத்தையும் இது எதிரொலித்தது. "இதுதொடர்பாக சீனாவுடன் கைகலப்பில் ஈடுபடுவதற்கான விருப்பம் ஐரோப்பிய தலைநகரங்களில் குறைந்துவிட்டிருக்கலாம்" என்று அது கூறி, "தொற்றுநோய்க்கான சீனாவின் பொறுப்பிலிருந்து பொதுமக்களின் கருத்தை திசை திருப்புவதை பெய்ஜிங் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று ஆத்திரமூட்டும் வகையில் வலியுறுத்தியது.

இந்த ஆத்திரமூட்டும் கொள்கை, உலகப் பொருளாதாரத்தின் மையமாக ஆசியா தோன்றுவதோடு பிணைந்துள்ள முதலாளித்துவ அமைப்பின் ஆழமான நெருக்கடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆசியா விரைவில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62 சதவீதத்தைக் கொண்டிருப்பதுடன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதியில் 35 சதவீதத்தை வாங்கும். பிரான்சும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் இராணுவ எந்திரங்களில் பல்லாயிரக்கணக்கான யூரோக்களை இறைப்பதன் மூலம் எதிர்வினையாற்றுகின்றன. ஐரோப்பாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற கோவிட்-19 தொடர்பான "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கை ஊடாக இதற்கு நிதியளிக்கப்படுகிறது.

பாரிஸ் மற்றும் புது டெல்லி நீண்டகால மூலோபாய உறவுகளை அதிகரித்து வருகின்றன. 1991 சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்ட பின்னர், பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் இந்தியாவும் ஒரு "பல துருவ" உலக ஒழுங்கின் கருத்துக்களை ஊக்குவிக்க முயன்றன. அப்போதைய பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஹூபேர் வேடெரின் (Hubert Védrine) அமெரிக்காவை ஒரு "அதிவேக சக்தி" என்று விமர்சித்தார், மேலும் வாஷிங்டனை விட சற்றே நம்பகமான மற்றும் குறைவான முன்கணிக்க முடியாத, அச்சுறுத்தும் பங்காளியாக பாரிஸ் தன்னை காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கங்கள் சாதகமாக பதிலளித்தன.

1998 ஆம் ஆண்டில் இந்தியாவின் அணுசக்தி சோதனைகளுக்கு பெரும்பாலான ஏகாதிபத்திய சக்திகள் பொருளாதாரத் தடைகளை விதித்து பதிலளித்தபோது பிரான்ஸ் ஆதரவளித்தது. அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, உளவுத்துறை பகிர்வு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பிராங்கோ-இந்திய ஒத்துழைப்பு வளர்ந்துள்ளது. 2001 இல் கடற்படைகளில் தொடங்கி, 2004 இல் விமானப்படைகளும், 2011 இல் இராணுவப்படைகளுடன் தொடர்ந்த இருதரப்பு இராணுவப் பயிற்சிகள் இப்போது வழக்கமான அம்சமாகிவிட்டன.

இந்த வரலாறு காண்பிப்பது என்னவென்றால், வாஷிங்டனை விட குறைவான ஆக்கிரமிப்பு சக்திகள் எனப்படும் ஐரோப்பிய நட்பு நாடுகள் உட்பட ஏகாதிபத்திய சக்திகள் எவையும் போருக்கான விரைவான உந்துதலுக்கும், பொலிஸ்-அரசு ஆட்சிக்கும் மாற்றீடு இல்லை. வெளிநாடுகளில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார செல்வாக்கு குறித்து பெருகிய முறையில் அக்கறை அதிகரித்துள்ளதால் பிரான்ஸ், தனது ஈடுபாட்டை முடுக்கிவிட்டுள்ளது. சீனா, தனது முதல் வெளிநாட்டு இராணுவ தளத்தை 2017 ஆம் ஆண்டில் ஆபிரிக்காவின் முனையில் ஜிபூட்டியில் அமைத்தது. மேலும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் மியான்மர் உள்ளிட்ட இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் அல்லது வாங்குவதற்கும் முதலீடு செய்துள்ளது. இது அமெரிக்காவினதை மட்டுமல்ல ஐரோப்பிய மற்றும் பிரெஞ்சு நலன்களையும் குறுக்கறுக்கின்றது. குறிப்பாக பாரிஸின் ஆபிரிக்காவில் அதன் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்யத்தின் மறைந்துபோகும் மேலதிக்கத்தை பராமரிப்பதில் உள்ள நலன்களை குறுக்கறுக்கின்றது.

பாரிஸ் மற்றும் புது டெல்லி பலமுறை ஒரு இராணுவ கூட்டணியுடன் நெருக்கமாக நகர்ந்துள்ளன. பிரான்ஸ் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் கடற்படைத்தள வசதிகளை அணுகுவதற்கான அடிப்படை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிப்ரவரி 2020 இல், பிரெஞ்சு மற்றும் இந்திய கடற்படைகள் முதன்முறையாக இந்திய பெருங்கடல் ரீயூனியன் தீவில் இருந்து கூட்டு ரோந்துப் பணிகளை நடத்தின.

கடந்த நவம்பரில் வருகை தந்த பிரெஞ்சு கடற்படைத் தலைவர் அட்மிரல் கிறிஸ்டோஃப் பிரசக் பாரிஸ் 2020 ஆம் ஆண்டில் "இந்திய கடற்படையுடன் கூட்டு ரோந்துப் பணிகளை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது" என்றும், துல்லியமான நோக்கங்களுக்காக செயல்படுவதாகவும் தெரிவித்ததாக இந்து பத்திரிகை தெரிவித்தது. ஒரு நிகழ்வில் பேசிய அவர், ரோந்துப் பகுதி “பிரான்சின் ஒரு பகுதியாக இருக்கும் தீவுகளைச் சுற்றிய” வடமேற்கு இந்தியப் பெருங்கடல் அல்லது தெற்கு இந்தியப் பெருங்கடல் இருக்கலாம் என்றார்.

அதே நேரத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனினதும் இந்தியாவின் இந்து-மேலாதிக்க பிரதமர் நரேந்திர மோடியினதும் முஸ்லீம்-விரோத கொள்கைகளின் அடிப்படையில் பாரிஸும் புது டெல்லியும் நெருக்கமாக நகர்ந்துள்ளன. இந்திய ஊடகங்களும் அதிகாரிகளும் பிரான்சின் "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்திற்கு தங்கள் ஆதரவை ட்வீட் செய்துள்ளனர். இது முஸ்லிம்களின் மத சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், சில இஸ்லாமிய நடைமுறைகள் பிரெஞ்சு குடியரசிற்கு எதிரான பிரிவினைவாதத்திற்கு சமம் என்று கூறுகின்றது.

மோடியால் முஸ்லீம்மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியமான காஷ்மீரின் தன்னாட்சி உரிமை பறிக்கப்பட்டு வன்முறை போலீஸ்-அரசு ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பிரான்ஸ் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளது. உலகின் மிக இராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்களில் ஒன்றில் பல்லாயிரக்கணக்கான கூடுதல் இந்திய துருப்புக்களை அனுப்புவதன் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொலைத்தொடர்புகள் வெட்டப்பட்டு, போக்குவரத்து செய்யமுடியாது ஆயிரக்கணக்கான காஷ்மீர் மக்களும் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் இராஜதந்திர ஆலோசகரான இமானுவல் பொன்னே (Emmanuel Bonne) ஒரு மூலோபாய வருடாந்த உரையாடலுக்காக இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது காஷ்மீரில் பிரான்ஸ் இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறினார், “அது காஷ்மீர் என்றாலும், நாங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வலுவான ஆதரவாளராக இருந்தோம், சீனா எந்தவிதமான நடைமுறை விளையாட்டுகளையும் விளையாட அனுமதிக்கவில்லை. இமயமலைப் பிராந்தியங்கள் என்று வரும்போது, எங்கள் அறிக்கைகளை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் வெளிப்படையாக கூறுவதில் தெளிவின்மை எதுவும் இல்லை.”

Loading