பைடெனும் சுகாவும் தைவான் குறித்து சீனாவுடனான மோதலை அதிகரிக்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவுடனான மோதலை வாஷிங்டன் அதிகரித்து வருவதற்கு மத்தியில் அமெரிக்கா-ஜப்பான் இராணுவ கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திற்காக ஒரு மாநாட்டை நடத்த ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனை சந்தித்தார். இந்த சந்திப்பு பைடென் பதவியேற்றதன் பின்னர் ஒரு உலகத் தலைவரை அவர் நேரில் சந்தித்த முதல் நிகழ்வாகும், இது வாஷிங்டன் அதன் திட்ட நிரலில் ஜப்பானுக்கு முக்கியத்துவம் அளிப்பதை குறிக்கிறது.

பைடெனும் சுகாவும் தங்களது கூட்டறிக்கையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சீனா சீர்குலைப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த அறிக்கை, இரு தலைவர்களும் “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்றும் உலகின் அமைதி மற்றும் செழுமைக்கு சீனாவின் நடவடிக்கைகள் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர் என்பதுடன், பொருளாதாரம் மற்றும் பிற வற்புறுத்தல்களின் பயன்பாடு உட்பட, சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கிற்கு முரணான சீன நடவடிக்கைகள் குறித்து தங்களது கவலைகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்” என்று தெரிவித்தது.

மார்ச் 16, 2021 அன்று, டோக்கியோவில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, அமெரிக்க வெளியுறவுச் செயலர் அந்தோனி ஜே. பிளிங்கன், பாதுகாப்புச் செயலர் லொயிட் ஜே. ஆஸ்டின் III, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நோபு கிஷி ஆகியோருடனான கூட்டத்தில் தனது கருத்துக்களை வழங்குகிறார் (DoD photo by Lisa Ferdinando)

“சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கிற்கு” சீனா கீழ்படிய வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்துகிறது, அதாவது, இரண்டாம் உலகப் போருக்கு பின்னைய கட்டமைப்பு அமெரிக்காவால் ஸ்தாபிக்கப்பட்டது, இதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதிக்க சக்தியாக இருந்து, விதிகளை வகுத்தது. தனது உலகளாவிய அந்தஸ்தை சீனா கீழறுக்கக்கூடுமோ என்ற அச்சத்திலுள்ள அமெரிக்கா, முதலில் ஒபாமாவின் கீழ், பின்னர் ட்ரம்ப் மற்றும் தற்போது பைடெனால் உந்தப்பட்டு, கடந்த தசாப்தம் முழுவதும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பை உருவாக்குவது உட்பட, சீனாவை பொருளாதார மற்றும் மூலோபாய ரீதியில் குறைமதிப்பிற்குட்படுத்த முனைந்து வருகின்றது.

பைடென் சுகா அறிக்கையின் மிக முக்கியமான அம்சம் தைவானைப் பற்றியதாக இருந்தது, இது வாஷிங்டனின், குறிப்பாக கடந்த ஆண்டிலிருந்து அதன் முதன்மை இலக்காக உள்ளது. இந்த அறிக்கை “தைவான் ஜலசந்தி முழுவதுமான அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்குமான முக்கியத்துவம்” பற்றி அறிவித்து, “குறுக்கு ஜலசந்தி பிச்சினைகளுக்கு அமைதியான தீர்வை” எட்டுவதற்கும் ஊக்குவித்தது. 1969 ஆம் ஆண்டில் ரிச்சார்ட் நிக்சன் (Richard Nixon) மற்றும் ஐசாகு சாட்டோ (Eisaku Sato) ஆகியோரது அறிவிப்புக்கு பின்னர், அமெரிக்க மற்றும் ஜப்பானிய தலைவர்கள் தைவானை பற்றி நேரடியாகக் குறிப்பிடுவது இதுவே முதல் முறை.

குறிப்பு தீங்கற்றதாக தோன்றினாலும், 1972 இல் பெய்ஜிங்கிற்கு நிக்சன் விஜயம் செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஜப்பானும் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான அடிப்படையாக ஏற்றுக்கொண்ட “ஒரே சீனா” கொள்கையை இது மேலும் குறைமதிப்பிற்குட்படுத்துகிறது. “ஒரே சீனா” கொள்கையின் கீழ், தைவான் உட்பட ஒட்டுமொத்த சீனாவிற்கான முறையான அரசாங்கமாக பெய்ஜிங்கை இரு நாடுகளும் திறம்பட அங்கீகரித்தன. 1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சியை தொடர்ந்து சீனாவின் பிரதான நிலப்பரப்பிலிருந்து இது வெளியேறியதன் பின்னர் தைபேயில் ஸ்தாபிக்கப்பட்ட கோமின்டாங் (KMT) சர்வாதிகாரத்தை முன்னர் அவர்கள் அங்கீகரித்திருந்தனர்.

1979 இல் சீனாவுடன் அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்னர் நீடித்த விவாதங்களில், கடக்க முடியாத மிகக் கடினமான தடையாக தைவான் இருந்தது: இன்று இந்தப் பிரச்சினை எவ்வளவு முக்கியமானது என்பதைக் இது காட்டுகிறது. அப்போது இந்த செயல்முறையை ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மேற்பார்வையிட்டார். தைவான் உறவுகள் சட்டத்தை 1979ல் இயற்றினார், இது அமெரிக்க இராணுவப் பொருள்களை தைவானுக்கு விற்பனை செய்வதற்கு உத்தரவாதம் அளித்தது. சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக தைவானுக்கு அமெரிக்க ஆதரவின் தெளிவற்ற உத்தரவாதத்தை வழங்கியது.

ட்ரம்ப் நிர்வாகம், தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதை கணிசமாக அதிகரித்ததுடன், தைவானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையிலான தொடர்புகளையும் அதிகரித்தது. முன்னாள் வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ, தனது பதவிக் காலத்தின் இறுதி நாட்களில், அத்தகைய தொடர்புகளை கட்டுப்படுத்தும் நீண்டகால இராஜதந்திர நெறிமுறைகளை கைவிட்டு, அதன்மூலம் “ஒரே சீனா கொள்கையை” குறைமதிப்பிற்குட்படுத்தினார், இந்த நகர்வு பெரும்பாலும் பைடெனால் தொடரப்பட்டது. அதே நேரத்தில், தைவான் மீது சீனா படையெடுப்பதற்கான சாத்தியம் இருப்பது குறித்து உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர், இது தைவானுடனான இராணுவ உறவுகளுக்கான சாத்தியம் உட்பட, அதனுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதை நியாயப்படுத்தும் வழிமுறையாக உள்ளது.

தைவான் தொடர்பாக சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க பைடென் நிர்வாகம் ஜப்பானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. உண்மை என்னவென்றால், பைடெனும் சுகாவும் இரகசியமாக தைவானுடனான நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து சற்று விரிவாக விவாதித்ததாக கூட்டறிக்கையில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. 1895 முதல் 1945 வரை தைவானின் காலனித்துவ ஆட்சியாளராக (Formosa) ஜப்பான் இருந்து வந்ததால், இந்த விவகாரம் ஜப்பானைப் பொறுத்த வரை மிக நுட்பமானது, இந்த காலகட்டத்தில் ஜப்பானின் தோல்விக்குப் பின்னர் இது சீனாவின் கைக்கு மாறியது. ஜப்பானும் சீனாவுடனான அதன் பொருளாதார உறவுகளை பெரிதும் நம்பியுள்ளது.

பைடென்-சுகா கூட்டறிக்கையை பெய்ஜிங் உடனடியாக விமர்சித்தது. மேலும், ‘சுதந்திரம் மற்றும் விடுதலை’ என்ற பதாகையின் கீழ் இரு நாடுகளும் “மற்ற நாடுகளுக்கு எதிராக பிளவுகளை ஏற்படுத்தி, அங்கு தங்களது ஆதரவை கட்டமைக்கின்றன” என்று வாஷிங்டனிலுள்ள சீனத் தூதரகம் அவற்றைக் குற்றம்சாட்டியது. ஹாங்காங் மற்றும் ஜின்ஜியாங்குடன் சேர்ந்து தைவானும் உள்நாட்டு சீன விவகாரங்களாக உள்ளன என்று தூதரகத்தின் அறிக்கை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதுடன், பெய்ஜிங் “அதன் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நலன்களை உறுதியாக பாதுகாக்கும்” என்றும் எச்சரித்தது.

தைபேய் அரசாங்கம் சீனாவிலிருந்து அதன் முறையான சுதந்திரத்தை அறிவிக்குமானால், பெய்ஜிங் தனது படைபலத்தை பிரயோகிக்கும் என்று பலமுறை எச்சரித்துள்ளது. பைடென்-சுகா அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, சீன துணை வெளியுறவு அமைச்சர் லு யுச்செங் (Le Yucheng) இவ்வாறு தெரிவித்தார்: “(தைவானுடனான) அமைதியான மறுஒருங்கிணைப்புக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராகவுள்ளோம். அதாவது, ஏனைய தெரிவுகளை விட்டுக்கொடுக்கவும் நாங்கள் உறுதியளிக்கவில்லை. எந்த தெரிவும் விலக்கப்படவில்லை.”

ஆசியாவில் போருக்கான சாத்தியமுள்ள மிக ஆபத்தான வெடிப்புப் புள்ளியாக உள்ள சீனாவுடனான பதட்டங்களை பைடென் நிர்வாகம் வேண்டுமென்றே அதிகரித்து வருகிறது. தற்போதைய தைவான் நிர்வாகம் ஜனநாயக முற்போக்கு கட்சியை சேர்ந்த ஜனாதிபதி சாய் இங்-வென் தலைமையிலானது, இது தைவானுக்கு மிகவும் சுயாதீனமான நிலைப்பாட்டை வழங்க பரிந்துபேசுகிறது. தைப்பேயுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு, ஜப்பானின் உதவியுடன் அமெரிக்கா, தைவான் சுதந்திரத்திற்கு அழுத்தம் கொடுத்து மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்க சாய்க்கு ஊக்கம் கொடுக்கிறது.

பைடெனின் கீழ், அமெரிக்க கடற்படை ஏற்கனவே தைவான் ஜலசந்தி வழியாக நான்கு முறை பயணம் செய்துள்ளது, மேலும், கடந்த ஆண்டு ட்ரம்பின் கீழ் இத்தகைய 13 பயணங்கள் வருடாந்திர சாதனையாக நிகழ்த்தப்பட்டுள்ளதும் தெரிய வருகிறது.

அதே நேரம், பைடெனும் சுகாவும் ஏனைய வெடிப்பு புள்ளிகள் குறித்தும் சீனாவை அவர்கள் எதிர்ப்பதை மீண்டும் குறிப்பிட்டனர். “தென் சீனக் கடலில் சீனாவின் சட்டவிரோதமான கடல்சார் உரிமைகோரல்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த எங்களது ஆட்சேபனைகளை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம், மேலும் சர்வதேச சட்டத்தால் நிர்வகிக்கப்படுவதான சுதந்திரமான மற்றும் பொதுவான தென் சீனக் கடலில் எங்களது உறுதியான பகிரப்பட்ட நலனையும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம், அதாவது கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கைக்கு இசைந்து, இப்பகுதி ஊடான கடல்வழி மற்றும் வான்வழி பயணங்களுக்கான சுதந்திரத்திற்கு இதில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.”

பைடென் தொடர்ந்து “கடல்வழி சுதந்திர” நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், தென் சீனக் கடலில் சீனா உரிமை கோரும் நீர்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல்களை ஆத்திரமூட்டும் வகையில் அனுப்பியுள்ளார். சீனா வரம்பு மீறுவதாக குற்றம்சாட்டும் ஐ.நா. கூட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை.

அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம், ஜப்பானின் கட்டுப்பாட்டிலுள்ள, ஆனால் சீனா உரிமை கோரியுள்ள சென்காகு (Senkaku) அல்லது டைவோயு (Diaoyu) தீவுகள் என்றறியப்படும், கீழக்கு சீனக் கடலிலுள்ள மக்கள் வசிக்காத பாறைப்பகுதிக்கும் பொருந்தும் என்பதை பைடெனும் மீளுறுதி செய்து கொண்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த தீவுகள் தொடர்பாக சீனாவுடன் போர் ஏற்பட்டால் ஜப்பானுக்கு அமெரிக்கா “அணுசக்தி உட்பட அதன் முழு படைபலத்தையும் பயன்படுத்தி” இராணுவ ரீதியாக ஆதரவளிக்கும் என்பதாகும்.

பைடென்-சுகா பேச்சுவார்த்தைகள் சீனாவுடனான மோதலுக்கு தயாரிப்பு செய்வதில் அமெரிக்கா அதன் மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்த மேற்கொள்ளும் அமெரிக்க இராஜதந்திர தாக்குதலின் ஒரு பகுதியாக உள்ளன. கடந்த மாதம், பைடென், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், சுகாவும் உட்பட நாற்கர பாதுகாப்பு உரையாடல் குறித்து முதன் முதலாக தலைவர்களுக்கான உச்சிமாநாட்டை நடத்தினார். இந்த “நாற்கரம்” என்பது சீனாவை எதிர்க்கும் நோக்கம் கொண்ட நான்குமுனை இராணுவ கூட்டணியாகும்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் அந்தோனி பிளிங்கனும், பாதுகாப்புச் செயலர் லொயிட் ஆஸ்டினும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டனர். தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் அடுத்த மாத தொடக்கத்தில் வாஷிங்டனில் பைடெனை சந்திக்கவுள்ளார்.

பைடெனும் சுகாவும் தங்களது பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளனர். கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், இரு நாடுகளும் “சீனாவின் சவால்களை எதிர்கொள்வதில் ஒன்றாக இணைந்து செயல்படும்” என்று மீண்டும் அறிவிப்பதன் மூலம், புதிய அமெரிக்க-ஜப்பான் போட்டித்திறன் மற்றும் மீண்டுவரும்தன்மை கூட்டாண்மை (Competitiveness and Resilience Partnership-CoRe) திட்டம் குறித்த அறிவிப்புக்கான முன்னுரையை வழங்கினார்.

குறிப்பாக, அமெரிக்காவும் ஜப்பானும் 5G மொபைல் நெட்வொர்க்குகள், அத்துடன் எதிர்காலத்தில் 6G மொபைல் நெட்வொர்க்குகளையும் அபிவிருத்தி செய்ய முறையே 2.5 பில்லியன் டாலர் மற்றும் 2 பில்லியன் டாலர் அளவிற்கு செலவு செய்ய திட்டமிட்டுள்ளன. மேலும் இரு நாடுகளும் “குறைக்கடத்திகள் (semiconductors) உட்பட, உணர்திறன் மிக்க விநியோக சங்கிலிகள், மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஒத்துழைக்கும்” என்று ஒரு வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த தகவல் தொடர்பு வலையமைப்புகளும் தொழில்நுட்பங்களும் அமெரிக்க போர் முனைப்புக்களுக்கு மிக முக்கியமானவை. மேலும், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை வழிகாட்டல் அமைப்புக்கள் போன்ற இராணுவ உபகரணங்களுக்கு குறைக்கடத்திகள் அவசியம். உண்மை என்னவென்றால், தைவான் குறைக்கடத்தி உற்பத்தி நிறுவனம் சில்லுகளின் (chips), குறிப்பாக மிகுந்த மேம்பட்ட சில்லுக்களின் பூகோள அளவிலான உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துவதால், தைவான் மீது அமெரிக்கா கவனம் செலுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணியாகவுள்ளது.

Loading