இலங்கை: வேட்டையாடப்பட்டுள்ள ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள்

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்திற்கு ஆதரவு கோரி, ஓல்டன் தோட்டத்தின் தொழிலாளர் நடவடிக்கை குழு, ஏப்ரல் 25 அன்று ஏகமனதாக நிறைவேற்றிய அறிக்கையே இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

ஹொரன பெருந்தோட்டக் கம்பனி, பொலிஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை கூட்டாக நடத்திய இந்த பழிவாங்கல் காரணமாக, 38 தொழிலாளர்கள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலும் இரண்டு இளைஞர்கள் உட்பட 40 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏப்பிரல் 28 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், அது ஜூலை 14 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த 40 பேருக்கும் மேலதிகமாக, மேலும் பல தொழிலாளர்களை கைது செய்ய வேண்டும் என்று, கம்பனி சார்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதன் அர்த்தம், ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்களை வேட்டையாடுவது தொடர்ந்து தீவிரமடையும் என்பதே ஆகும்.

ஓல்டன் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடல், வெறுமனே ஓல்டன் தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு எதிரானது மட்டுமன்றி, தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எதிரான அச்சுறுத்தலும் எச்சரிக்கையும் ஆகும். ஆகவே, ஓல்டன் தோட்டத்திலுள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழு, சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணைந்து, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கலை தோற்கடிக்க, ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சாரத்தை தீவிரமாக ஆதரிக்குமாறு அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடல், தங்களின் உரிமைகளுக்காக போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரான ஒரு எச்சரிக்கையாகும்.

போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஓல்டன் தோட்டத்தின் 38 தொழிலாளர்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீண்டும் வேலையில் அமர்த்தவும், அவர்கள் அனைவருக்கும், மேலும் இரண்டு தோட்ட இளைஞர்களுக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொண்டு அவர்களை விடுவிக்குமாறும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு கோருகிறது.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சோ.ச.க. உறுப்பினர் எம். தேவராஜா உரையாற்றுகிறார்

எங்கள் சக தொழிலாளர்களுக்கு எதிரான இந்த கொடூரமான பழிவாங்கல், தோட்டக் கம்பனி, பொலிஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமன் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கூட்டு சதி ஆகும்.

தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மீது சரீர தாக்குதல் நடத்தியதாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுமார் 500 தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் நாள் சம்பளம் கோரி பெப்ரவரி 2 முதல் முன்னெடுத்த தொடர் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் ஒரு சதி மற்றும் ஆத்திரமூட்டலின் ஒரு பகுதியாக அவர்கள் வேட்டையாடப்பட்டனர். 47 நாள் தொடர்ந்த இந்த வேலைநிறுத்தமானது இ.தொ.கா. உடப்ட அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களாலும் தனிமைப்படுத்தப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டது.

வேலைநிறுத்தத்தின் போது, சாந்தி என்ற பெண் தொழிலாளியை தோட்ட முகாமையாளர் சுபாஷ் நாராயணன் அடித்தார். வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்காக கருங்காலிகள் அனுப்பப்பட்டதோடு பொலிசை அனுப்பி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் கண்டியில் உள்ள போகம்பர சிறைச்சாலையில் சுமார் மூன்று வாரங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், 15,000 ரூபா ரொக்கப் பிணை, இரண்டு உறவினர்களின் சரீர பிணை மற்றும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் சென்று கையெழுத்திடல் போன்ற கொடூரமான பிணை நிபந்தனைகளின் அடிப்படையிலேயே விடுவிக்கப்பட்டனர். .

38 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணையும் இன்றி, அந்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக தங்கள் நியாயத்தை கூற அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கப்படாமலேயே வேலை நீக்கப்பட்டுள்ளனர். இது தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை கூட மீறுகின்ற எதேச்சதிகாரமான நடவடிக்கை ஆகும். அத்துடன், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள 40 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒருவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடும்.

தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி உட்பட அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களும், இந்த வேட்டையாடலுக்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டன. எங்கள் நடவடிக்கை குழுவை ஸ்தாபிப்பதற்கு வழிகாட்டி, உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக இந்த பழிவாங்கலைத் தோற்கடிக்க ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே எங்களைப் பாதுகாக்க முன் வந்துள்ளது.

எங்களுக்கு கிடைத்த ஊதியங்கள் வாழ போதுமானதாக இல்லாததாலேயே அதிக ஊதியம் கோரி நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். தோட்டத் தொழிலாளர்கள் தினசரி 1,000 ரூபாய் அடிப்படை ஊதியம் கோரிய போதிலும், தோட்டக் கம்பனிகள் அதை தொடர்ந்து மறுத்து வந்தன. 2015 முதல் அனைத்து போராட்டங்களும் தோட்ட தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கோபமும் அமைதியின்மையும் அதிகரித்து வரும் நிலைமையின் மத்தியில், தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை 1,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று இராஜபக்ஷ அரசாங்கம் சம்பள நிர்ணய சபை மூலம் பரிந்துரைத்துள்ள போதிலும், அதை தோட்டக் கம்பனிகள் கொடுக்க மறுத்துவிட்டன. அதற்கு பதிலாக, நாளொன்றுக்கு பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்து ஒரு கிலோவுக்கு 55 ரூபாய் என்ற விகிதத்தில் பணம் செலுத்த பிரேரிக்கின்றது.

தங்கள் உரிமைகளுக்காக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களை "பயங்கரவாதச் செயல்கள்" என முத்திரை குத்தும் தோட்டக் கம்பனிகள் அதை அடக்குவதற்கு அரசாங்கத்திடம் துப்பாக்கி கேட்கின்றன. அத்தகைய ஒன்றால், தோட்டத் தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பைக் காரணம் காட்டி அரசாங்கம் இந்த கோரிக்கையை நிராகரித்த போதிலும், தேசிய பாதுகாப்புச் சபையில் பெருந்தோட்டங்களில் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மார்ச் 10 அன்று ஊடகங்களுக்கு கூறினார். இது தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கும் எதிரான ஒரு பரந்த ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும். சில தோட்டங்களை நிர்வகிக்க இப்போதே ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் பரவுகின்ற நிலைமையின் கீழ், வேலைக்கு வர மறுத்த துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிராக, அத்தியாவசிய சேவை உத்தரவுகளை விதித்ததையும் பெப்ரவரி 24-25 திகதிகளில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தை அனுப்பியதையும்,. போனஸ் செலுத்தாததற்கு எதிர்ப்புத் தெரிவித்த கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள எஸ்குவல் ஆடைத் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசாரை அனுப்பியதையும் நாங்கள் கண்டுள்ளோம்.

இராஜபக்ஷ அரசாங்கமும் முதலாளிகளும் முன்னெடுக்கும் இந்த அடக்குமுறை, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ ஆட்சியாளர்களும் முதலாளிகளும் உலகளாவிய ரீதியில் கட்டவிழ்த்து விடும் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

அத்தகைய சூழலில், இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின்தும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்டுள்ளவர்களின் ஒத்துழைப்புடன், ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலை தோற்கடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைக்க எங்கள் நடவடிக்கைக் குழு உறுதிபூண்டுள்ளது.

ஓல்டன் தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் மீதான பழிவாங்கலை ஏகமனதாக எதிர்க்குமாறும், சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள போலி வழக்குகளில் இருந்து அவர்களை குற்றமற்றவர்களாக்கி விடுவிக்குமாறும், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்துமாரும் கோரி அறிக்கைகளை வெளியிடுமாறும், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் மற்றும் வேலைநிறுத்தங்கள் உட்பட வர்க்க நடவடிக்கைகள் மூலம் இந்த வேட்டையாடலுக்கு எதிராக எழுச்சி பெறுமாறும் நாங்கள் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஆர்வமுள்ள அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் வெளியிடும் அனைத்து அறிக்கைகளினதும் பிரதிகளை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரி வழியாக சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பிவையுங்கள் wswscmb@sltnet.lk

Loading