பாசிசத்தின் நிராகரிப்பும் போரின் நிராகரிப்பும் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தில் ஆழமாய் வேரூன்றியிருப்பவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் உரை உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இணைந்து மே 1 அன்று நடத்திய இணையவழி 2021 சர்வதேச மேதினப் பேரணியில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) துணை தேசிய செயலரான கிறிஸ்தோப் வாண்ட்ரியர் வழங்கியதாகும்.

2021 இணையவழி சர்வதேச மேதினப் பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரியர் வழங்கிய உரை

இந்த மேதினப் பேரணியில் இந்த வெகுமுக்கிய முன்னெடுப்பில் பங்கேற்க முடிந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான தலையீடே முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனம், பாரிய உயிரிழப்புகள் மற்றும் போர் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதால், திட்டமிட்ட பாரிய தொற்றளவுக் கொள்கைக்கு எதிராகவும் கண்கூடான சமூக அசமத்துவத்திற்கு எதிராகவும் ஒரு நிலைப்பாட்டை தொழிலாளர்கள் எடுப்பதற்கு வழிவகை தருகின்ற சாதனமாக சாமானியத் தொழிலாளர்கள் கமிட்டிகளது சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டணி (IWA-RFC) அமைந்துள்ளது.

ஆளும்வர்க்கத்தின் கொடிய கொள்கைக்கு எதிர்ப்பு ஜேர்மனியிலும் பெருகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கோவிட்-19 இல் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சன்னலோரங்களில் மெழுகுவர்த்திகள் ஏற்றுமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டபோது, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதனை ஒரு சிடுமூஞ்சித்தனமான ஏய்ப்புஉத்தி என்று நிராகரித்ததோடு அதற்குப் பதிலாக உண்மையாக பொறுப்பானவர்களைக் கண்டனம் செய்கின்ற பொருட்டு நகர அரங்கங்கள், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் முன்பாக மெழுகுவர்த்திகள் ஏற்றினர். பள்ளிகளில் முழுக்க பாதுகாப்பற்ற விதத்தில் அவை மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக ஏராளமான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. விமான சேவை நிறுவனமான WISAG இன் தொழிலாளர்கள் வேலையிழப்புகளுக்கு எதிராகவும் தங்களது சம்பளங்கள் திருடப்படுவதற்கு எதிராகவும் ஃபிராங்பேர்ட் விமான நிலையத்தில் பலநாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

இந்த நடவடிக்கைகள் அனைத்துமே, உயிர்களை விடவும் இலாபங்களுக்கே முன்னுரிமை அளிக்கும் கொள்கையால் புறநிலையாக தொழிலாள வர்க்கம் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதான, இன்னும் மிகப்பரந்த போராட்டங்களுக்கு கட்டியம் கூறுபவையாக உள்ளன. எனினும் சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச சோசலிச முன்னோக்கினை முன்வைப்பதற்குமான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்ற ஒரு மிக முக்கிய அனுபவத்தை தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்றுள்ளனர்.

கிறிஸ்தோப் வாண்ட்ரியர்

இந்தப் போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் தொழிற்சங்கங்கள் நிறுவனங்களின் பக்கமே இருந்துள்ளன. சென்ற ஆண்டின் காலத்தில், தொழிற்சாலைகள் பரவலாகத் திறந்திருப்பதையும் பெருந்தொற்றின் பலதரப்பட்ட குவிமையங்களாக ஆவதையும் அவை மேற்பார்வை செய்தன. தொற்றுகள் அதிகரித்துச் செல்வதன் மத்தியில், ஜேர்மன் கல்வியாளர்கள் சங்கமான GEW பள்ளிகள் மீண்டும் திறக்கப்படக் கோருகிறது. WISAG விமான நிறுவனத் தொழிலாளர்கள், பொதுச் சேவைகள் சங்கமான Verdi நிறுவனநிர்வாகத்தை பகிரங்கமாக ஆதரித்த காரணத்தால் அதற்கு எதிராக போராட்டங்களைச் செலுத்தினர்.

உலோகத் துறையில், மார்ச் மாதத்தில், வாகன உற்பத்தி நிறுவனங்களின் இலாபங்கள் வானளாவச் சென்று கொண்டிருந்த நேரத்தில், தொழிற்சங்கமான IG Metall மூன்று சதவீதம் வரை ஊதிய வெட்டுகளைத் திணித்தது. தொழிற்சங்க நிர்வாகிகள், அவர்களது சேவைக்காக, மிகப்பெரும் தொகைகளைப் பெற்றுள்ளனர். வோல்க்ஸ்வாகனில் தொழிலாளர் கவுன்சில் தலைவராக இருக்கும் Bernd Osterloh இப்போது பெருநிறுவன நிர்வாகத்தில் நேரடியாக இணைந்திருக்கிறார். இந்தப் பதவியில் அவர் வருடத்திற்கு இரண்டு மில்லியன் யூரோக்கள் பெறவிருக்கிறார். இந்த அமைப்புகளுக்கும் தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் முற்றிலும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, இணை-மேலாளர்களாகவும் பெருநிறுவன காவல் படைகளாகவுமே அவை செயல்படுகின்றன.

ஸ்ராலினிசம் பொறிந்து “வரலாற்றின் முடிவு” வெற்றிக்களியாட்டவாதம் நடந்தேறி முப்பது ஆண்டுகளின் பின்னர், இந்த பெருந்தொற்றானது முதலாளித்துவத்தின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது. நிதிய சிலவராட்சியின் அதிகாரம் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு, இன்னும் உயிர்களுக்கும் கூட, இணக்கமற்றதாகும். இந்த உண்மை குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் கூர்மையாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. சீருடன் இருந்த சுகாதார அமைப்புமுறைகள் அழிக்கப்பட்டுள்ளன. உடனடி இலாப உந்துதலுக்காக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் தியாகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெருந்தொற்றின் முழுக் காலத்தின் போதும், உற்பத்தியை இடைநிறுத்தாது பராமரிப்பதற்காகவும் விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பதற்காகவும் முற்றிலும் பாதுகாப்பற்ற வேலையிடங்களில் பணிசெய்ய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இன்று உலகில் கிழக்கு ஐரோப்பாவின் அளவுக்கு உயிரிழப்பு விகிதம் அதிகமாய் கொண்டுள்ள வேறொரு பிராந்தியம் இல்லை.

எனினும், ஜேர்மனியிலும் கூட சிக்கன நடவடிக்கைக் கொள்கையின் பகுதியாக கிட்டத்தட்ட பாதி மருத்துவமனைகள் மூடப்பட்டு விட்டிருந்தன. இங்கே, பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பு என்பது, மக்களிடையே வைரஸ் பரவலை அனுமதிப்பதான ஒரு கொள்கையாகவும் குணாம்சப்படுத்தப்படுகிறது. விளைவாக ஏற்கனவே 80,000க்கும் அதிகமான உயிரிழப்புகள், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசல், மற்றும் குறைந்த வயதினருக்கும் அதிகமான அளவில் சிகிச்சை தேவைப்படும் நிலை ஆகியவை உண்டாகியுள்ளன.

அதேநேரத்தில், நூறுபில்லியன்கணக்கான யூரோக்கள் பெரும் செல்வந்தர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டன. பெருந்தொற்றுக்கு மத்தியில், ஜேர்மனியில் உள்ள தலைமை பத்து பெரும்செல்வந்தர்கள் தங்களது சொத்து மதிப்பு 35 சதவீதம் வரை உயர்ந்து 242 பில்லியன் டாலர்களுக்கு உயரக் கண்டுள்ளனர். மேலும், இராணுவப் படைகளின் ஆயுதபாணியாகலுக்கு பில்லியன் கணக்கான தொகைகள் ஒதுக்கப்படுகின்றன. சென்ற ஆண்டில் மட்டும், ஜேர்மனி அதன் இராணுவச் செலவினத்தை 5.2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது, இந்த அதிகரிப்பு விகிதம் வேறெந்த நாட்டினதையும் விஞ்சிய விகிதமாகும்.

மறுபக்கத்தில், 40 சதவீத தொழிலாளர்கள் கண்கூடான வருவாய் இழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாரத்தில் வலது-சாரி AfD (Alternative für Deutschland) ஆல் பின்பற்றப்படுகின்ற அதே கொள்கையாக இருக்கும் இக்கொள்கையை, வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மேலும் தீவிரப்படுத்துவதற்கு அத்தனை கட்சிகளும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் “சமூக நோயெதிர்ப்புசக்தி பெருக்க” கொள்கையை மிகத் தீவிரத்துடன் ஊக்குவித்து வந்திருக்கும் அரசியல்வாதியான Armin Laschet ஐ தங்கள் வேட்பாளராக முன்நிறுத்தியுள்ளனர். சமூக ஜனநாயகவாதிகள், சிக்கன நடவடிக்கைகளுக்கும் சமீப ஆண்டுகளில் அரசு எந்திரம் கட்டியெழுப்பப்படுவதற்கும் பொறுப்பானவரான நிதியமைச்சர் Olaf Scholz ஐ வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.

ஓரளவுக்கு “இடது” எதிர்க்கட்சிகள் எந்தவிதத்திலும் மாற்றுக்களாய் இல்லை, மாறாக அவை பல விடயங்களில் மகா கூட்டணி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை வலதின் பக்கத்தில் இருந்து விமர்சனம் செய்கின்றன. பசுமைக் கட்சி வேட்பாளரான Annalena Baerbock, “வெளியுறவு விவகாரங்களில் செயலற்று” இருப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுவதோடு, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய அணுஆயுத சக்திகளுக்கு எதிராக ஒரு மூர்க்கமான கொள்கை முன்னெடுக்கப்படவும் கோருகிறார். உக்ரேன் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளாக நுழைய வேண்டும் என்றும் ஒரு ஐரோப்பிய இராணுவம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

வடக்கு Rhine-Westphalia மாகாணத்தில் இடது கட்சியின் முன்னணி வேட்பாளராக இருக்கும், Sahra Wagenknecht, தனது புதிய புத்தகத்தை (Die Selbstgerechten [சுய கவுரவம்]) சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார், அதில் அவர் நாஜிக்களது சிந்தனைப் பாரம்பரியத்துடன் பகிரங்கமாக இணைத்துக் கொள்கிறார். புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக வன்மத்தை கிளறிவிடுகிறார், ஜேர்மனியர்களுக்கு மட்டும் வேலை வேண்டுமென்கிறார், பேராசைமிக்க வெளிநாட்டு போட்டிநாடுகளாக சொல்லப்படுவனவற்றுக்கு எதிராக ஜேர்மன் மூலதனத்தைப் பாதுகாக்கிறார். இந்த நிலைப்பாட்டிற்காக அவர், வலதுசாரி AfD, வணிகத் துறை பிரதிநிதிகள் மற்றும் அதேயளவுக்கு முதலாளித்துவ ஊடகங்கள் ஆகியோரால் பாராட்டப்படுகிறார்.

இவை அனைத்தும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்து 25 மில்லியன் சோவியத் குடிமக்களை திட்டமிட்டு அழித்து எண்பது ஆண்டுகளின் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கமானது தனது மகா சக்தி இன்பக்கனவுகளுக்கும் தனது பாசிசப் பாரம்பரியங்களுக்கும் திரும்பிக் கொண்டிருக்கிறது. பொதுத் தேர்தலில் இந்த வலது-சாரி சதிக்கு எதிரான அத்தனை எதிர்ப்பையும் ஒடுக்க அவர்களுக்குத் தேவை இருக்கிறது.

பெருந்தொற்றின் சமயத்தில் சமூகத் தொடர்புகள் மிகக்குறைந்தபட்சத்திற்கு குறைக்கப்பட வேண்டும் என்ற நிலையிலும், புதிய கட்சிகள் தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட 30,000 நேரடிக் கையெழுத்துக்களை அவை திரட்ட வேண்டியுள்ளது, இது அவர்களை இலாவகமாக வெளியில் தள்ளுவது என்றே அர்த்தமளிப்பதாகும். ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அடிப்படைத் தாக்குதலின் மூலமாக, ஆளும் உயரடுக்கினர் SGP இன் சோசலிச வேட்பாளர்களை வாக்களிக்கப்படுவதில் இருந்தே தடுத்து விட முனைகின்றனர். இந்த அடியெடுப்பின் மூலமாக, அரசாங்கம் SGP ஐ ஒடுக்குவதற்கான அதன் முயற்சிகளைத் தொடர்கிறது.

சோசலிச-எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் நாஜிக்களது Willensstrafrecht (சிந்திப்பதற்குத் தண்டனை) ஆகியவற்றின் பாரம்பரியத்தை அடியொற்றி, உள்துறை அமைச்சகமானது, நாம் “ஒரு ஜனநாயக, சமத்துவ மற்றும் சோசலிச சமூகத்திற்காகப் போராடுகின்ற” காரணத்தால், நமது கட்சி “அரசியல்சட்டத்தின் ஒரு எதிரி” என்று ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து விட்டிருந்தது.

எனினும், ஜேர்மனி வெறுமனே பிஸ்மார்க்கும் நாஜிக்களும் மட்டும் பிறந்த தேசமல்ல. தொழிலாள வர்க்கத்தில் சர்வதேச சோசலிசத்தின் வேலைத்திட்டத்தை வேரூன்ற செய்த, முதல் வெகுஜன சோசலிசக் கட்சி தோன்றிய நாடாகவும் அது இருக்கிறது. துல்லியமாக இருபதாம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தால் இழைக்கப்பட்ட குற்றங்களின் அதேகாரணத்தால் தான், பாசிசத்தையும் போரையும் நிராகரிப்பதென்பது தொழிலாள வர்க்கத்தில் ஆழமாய் வேரூன்றியதாக உள்ளது.

ட்ரொட்ஸ்கிச உலக இயக்கமானது திருத்தல்வாதத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் எதிராக மார்க்சிசக் கோட்பாடுகளைப் பாதுகாத்தது. இந்த அடித்தளத்தின் மீது நின்று, இன்று தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக நிலவுகின்ற பிரம்மாண்டமான எதிர்ப்புடன் எங்களது கட்சியை பிணைக்கிறோம். இந்த மே தினப் பேரணியானது இதன் ஒரு வலிமையான வெளிப்பாடாய் இருக்கிறது. பெருகிச் செல்லும் எதிர்ப்புக்கு ஒரு குரலையும் ஒரு முன்னோக்கையும் வழங்குவதற்கும் புதிய வெகுஜன சோசலிசக் கட்சியாக SGP ஐ கட்டியெழுப்புவதற்கும் பொதுத் தேர்தலிலான எங்களது பங்கேற்பை நாங்கள் பயன்படுத்துவோம்.

சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டணியில் இன்றே பதிவு செய்வதற்கும், எங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பதற்கும் SGP இன் ஒரு உறுப்பினராக ஆவதற்கும் செவிமடுத்துக்கொண்டிருப்போரிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading