முன்னோக்கு

2021 மேதின இணையவழி பேரணியின் முக்கியத்துவம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 சனிக்கிழமையன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு தனது எட்டாவது ஆண்டு சர்வதேச மேதின இணையவழிபேரணியை நடத்தியது. சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களது சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை (IWA-RFC) தொடங்குவதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் முடிவை இந்த பேரணி ஊக்குவித்து, உறுதிப்படுத்தியது.

மே தின பேரணி கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலக நிலைமையில் உருவாக்கப்பட்ட மாற்றங்களை பிரதிபலித்ததுடன் மற்றும் அவற்றை எதிர்பார்த்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு தொற்றுநோயை முதலாம் உலகப் போருக்கு ஒத்த ஒரு "தூண்டுதல் நிகழ்வு" என வரையறுத்துள்ளது. இது உலக முதலாளித்துவ அமைப்பின் அனைத்து அடிப்படை முரண்பாடுகளையும் துரிதப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும் இதில் உள்ளடங்கும். அந்த வளர்ச்சியின் நனவான வெளிப்பாடே நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் மற்றும் அதன் மேதின பேரணியுமாகும்.

International May Day Online Rally 2021

அதன் வடிவம் மற்றும் உள்ளடக்கம் இரண்டிலும் இப்பேரணி ஒரு உலகளாவிய நிகழ்வாக இருந்தது. பேரணிக்கான அழைப்புக்கு குறிப்பிடத்தக்க சர்வதேச பிரதிபலிப்பு கிடைத்தது. அண்டார்டிகா உட்பட ஒவ்வொரு கண்டத்திலும் 75 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் இருந்து 2,500 க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வைப் பார்த்தனர். 10 நாடுகளைச் சேர்ந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் முன்னணி உறுப்பினர்கள் பதினான்கு பேச்சாளர்கள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, தமிழ், சிங்கள, துருக்கிய மற்றும் போர்த்துகீசியம் ஆகிய ஏழு வெவ்வேறு மொழிகளில் பேசினர்.

வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட சூழ்நிலைகளுக்கு கவனம் செலுத்திபோது, இந்த பேச்சாளர்கள் ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய முன்னோக்கை விவரித்தனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முதலாளித்துவ மையங்கள் முதல் முன்னாள் காலனித்துவ நாடுகள் வரை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழிலாளர்களை ஆழமாக பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தால் இந்த பேரணியில் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. ஒரு வருடம் முன்பு, மே 1, 2020 அன்று, உலக இறப்பு எண்ணிக்கை 240,000 ஐ எட்டியது. இப்போது, இது கிட்டத்தட்ட 3.2 மில்லியனாக உள்ளது. இது 13 மடங்கு அதிகமாகும். இதில் அமெரிக்காவில் 590,000 பேர், ஐரோப்பாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள், ஆசியாவில் 520,000 பேர், தென் அமெரிக்காவில் 670,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

தொற்றுநோய் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பின்னர், புதிய தொற்றுக்கள் அதியுயர் மட்டத்தில் உள்ளன. இந்தியாவில் இந்த நோய் பரவலாக பரவி வருவதால், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 400,000 புதிய தொற்றுக்குகள் பதிவாகின்றன. யதார்த்தத்தை மிகவும் குறைத்து மதிப்பிடும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நாளும் உலகளவில் 13,000 க்கும் அதிகமானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் என்ற வீதமாகும்.

தெற்காசியாவில் இப்போது நடப்பது இதுவரை இந்நோயால் மட்டுப்படுத்தளவில் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்காவின் சில பகுதிகள் உட்பட பிற நாடுகளுக்கும் பரவுகிறது. முன்னேறிய நாடுகளில் கூட, அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் இப்போது தொற்றுநோய் தொடர்ந்தும் இருக்கும் என பேசுகின்றன. அதாவது, ஒருபோதும் முற்றிலுமாக ஒழிக்கப்படப்போவதில்லை, தொழிலாளர்கள் அதனுடன் “வாழ வேண்டும்” என்பதாகும்.

பேரணியின் பேச்சாளர்கள் ஆளும் வர்க்கத்தையும் முதலாளித்துவ அமைப்பையும் வைரஸின் பேரழிவு தாக்கத்திற்கு குற்றஞ்சாட்டினர். பேரணியை அறிமுகப்படுத்துகையில் WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், “ மனித நலன்களை நிதி நலன்களுக்கு அடிபணியச் செய்வதே மில்லியன் கணக்கான அகால மரணங்களுக்கான காரணம் என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை என்று கூறினார். கோவிட்-19 இறப்புகளில் பெரும்பான்மையானவை தடுக்கப்பட்டிருக்க வேண்டும். தொற்றுநோயின் பேரழிவு தாக்கத்திற்கு வைரஸின் உயிரியல் கட்டமைப்பைக் காட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன்களே காரணம்” என்றார்.

தனது கருத்துக்களில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழுவின் நீண்டகால தலைவரான நிக் பீம்ஸ், அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் பிற உலகளாவிய மத்திய வங்கிகளால் முடிவில்லாமல் பணத்தை அச்சிடுவதன் மூலம் கடந்த ஆண்டு நடந்த ஊகங்களின் களியாட்டத்தை மறுபரிசீலனை செய்தார். ஆளும் வர்க்கத்தின் செல்வத்தின் வளர்ச்சி, "முதலாளித்துவத்தின் மரண வேதனை என்று ட்ரொட்ஸ்கி சரியாக விவரித்ததன் வெளிப்பாடாகும். மில்லியன் கணக்கான மக்கள் இறக்கும் போது தன்னலக்குழுக்களின் குழு பில்லியன் கணக்கான டாலர்களைக் குவிக்கின்றது" என்று பீம்ஸ் கூறினார்.

இந்த தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உள்ள அரசியல் நெருக்கடியை பெரிதும் துரிதப்படுத்தியுள்ளது. இது ஆளும் வர்க்கம் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு இன்னும் வெளிப்படையாக திருப்புவதை துரிதப்படுத்தியுள்ளது. ட்ரம்பின் ஜனவரி 6 பாசிச கிளர்ச்சி, ஜேர்மனியில் நவ-நாஜி வலைப்பின்னல்கள் அம்பலப்படுத்தப்படுவது உட்பட, ஒரு இராணுவ சதித்திட்டத்தை அச்சுறுத்தும் பிரெஞ்சு ஜெனரல்களின் கடிதம், மற்றும் நவ-பாசிச வோக்ஸ் கட்சி மற்றும் ஸ்பெயினில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் சதி அச்சுறுத்தல்கள் உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாகும் என்று பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் அலெக்ஸ் லான்ரியே விளக்கினார்.

கடந்த பல மாதங்களாக இராணுவ-பொலிஸ் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்ந்து வேலைநிறுத்த அலைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்தது என்று சோ.ச.க (இலங்கை) உதவி தேசிய செயலாளர் தீபால் ஜெயசேகரா விளக்கினார். இலங்கை ஜனாதிபதி இராஜபக்க்ஷவை "ஒரு ஹிட்லரைப் போல" செயல்படுமாறு அழைப்பு விடுத்த போக்குவரத்து அமைச்சரின் கருத்துக்களை அவர் மேற்கோள் காட்டினார்.

பாரிய மரணம் மற்றும் சமூக துயரங்களுக்கு இடையில் கூட, ஆளும் வர்க்கம் போருக்கான தனது உந்துதலை தீவிரப்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவில் WSWS இன் தேசிய ஆசிரியர் பீட்டர் சைமண்ட்ஸ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சீனாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் "மனித உரிமைகள்" குறித்த அதன் பாசாங்குத்தனமான தோரணையையும் அம்பலப்படுத்தினார். "ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், தொற்றுநோயால் உருவாகும் பாரிய சமூக பதட்டங்களை வெளிப்புற எதிரிக்கு எதிராக மாற்றவும் முற்படுவதால், உலகெங்கிலும் தூண்டப்பட்டு வரும் நச்சு தேசியவாதத்தை தொழிலாளர்கள் நிராகரிப்பது அவசியம்" என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தில் உள்ள போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்திலிருந்து, பிரேசிலில் உள்ள ஜெயர் போல்சனாரோ மற்றும் இந்தியாவில் நரேந்திர மோடியின் பாசிச அரசாங்கங்கள் மற்றும் ஸ்பெயினில் போலி இடது பொடேமோஸ் கட்சியையும் ஜேர்மனியில் இடது கட்சிவரை, தொற்றுநோயின் பேரழிவு தாக்கத்திற்கு ஆளும் வர்க்கத்தின் அனைத்து தரப்பினரின் பங்கையும் பேச்சாளர்கள் மதிப்பாய்வு செய்தனர். விட்டுவிட்டார். அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தது, ஆனால் அதே அடிப்படைக் கொள்கையை இப்போது பைடென் மேற்பார்வையிடுகிறார்.

அனைத்து உரைகளிலும் ஒரு மையக் கருப்பொருள், உத்தியோகபூர்வ தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களை ஒரு கூட்டுழைப்புவாத கட்டமைப்பிற்குள் மேலும் ஒருங்கிணைக்க ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய முயற்சி பற்றியதாக இருந்தது. அதாவது, பெருநிறுவன நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசை ஒரு கட்டமைப்பினுள் ஒருங்கிணைத்து தொழிலாள வர்க்கத்தில் மத்தியிலுள்ள சமூக எதிர்ப்பின் வளர்ச்சியை அடக்குவதாகும்.

தனது தொடக்க அறிக்கையில், அமெரிக்காவில் AFL-CIO தொழிற்சங்கங்களை ஊக்குவிக்கும் பைடென் நிர்வாகத்தின் ஆக்கிரோஷ முயற்சிகளை நோர்த் விரிவாக ஆராய்ந்தார், இதில் பாதுகாப்பு செயலாளரை உள்ளடக்கிய “தொழிலாளர் ஒழுங்கமைப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த வெள்ளை மாளிகை பணிக்குழு” நிறுவப்பட்டது. அதில் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், கருவூல செயலாளரும் முன்னாள் பெடரல் ரிசர்வ் தலைவருமான ஜெனட் யெல்லன் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் அடங்குவர்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, AFL-CIO மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் பணக்கார நிர்வாகிகள் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து எதிர்ப்பையும் நசுக்கியுள்ளதாக நோர்த் குறிப்பிட்டார். வேலைநிறுத்தங்கள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. நோர்த் மேலும் கூறினார்:

இந்த சூழலில், தற்போதுள்ள தொழிற்சங்கங்களை வலுப்படுத்துவதற்கான பைடெனின் அழைப்பு, தொழிலாள வர்க்க போர்க்குணத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கும் அதன் தொடர்ச்சியான அடக்குமுறையை உறுதி செய்வதற்கும் ஆகும்.

மேலும், அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தில் எந்தவொரு சுயாதீனமான தொழிலாள வர்க்க அமைப்பையும் அழிப்பது - கூட்டுறவுவாத வழிகளில் முதலாளித்துவ அரசுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு - ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், அது தயாரிக்கும் சீனாவுடனான தவிர்க்க முடியாத மோதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இது ஒரு மூலோபாய கட்டாயமாகும் என ஆளும் வட்டங்களில் நோக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தை கூட்டுறவுவாத வழிகளில் அடக்குவதற்கான போக்கு ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும்.

இலங்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒத்த பங்கை பேச்சாளர்கள் மதிப்பாய்வு செய்தனர்; பிரேசிலில் CUT மற்றும் Força Sindical இப்போது IndustryAll என்னும் அமைப்பினுள் இணைக்கப்பட்டுள்ளன; இங்கிலாந்தில் TUC; ஜேர்மனியில் IG Metall மற்றும் Verdi; பிரான்சில் CGT; மற்றும் ஆஸ்திரேலியாவில் ACTU இதே மாதிரி இயங்குகின்றன.

இந்தச் சூழலில்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களது சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை (IWA-RFC) உருவாக்கத் தொடங்கியுள்ளது. நோர்த் பின்வருமாறு விளக்கினார்:

இந்த உலகளாவிய முன்முயற்சியின் நோக்கம், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான பரந்த அடித்தளம் கொண்ட ஒரு இயக்கத்தை உருவாக்குவதும், வலது-சாரி முதலாளித்துவ ஆதரவு நிர்வாகிகள் பதவியிலிருக்கும் அரசு-கட்டுப்பாட்டிலான ஜனநாயக-விரோத தொழிற்சங்கங்களின் மூலமாக இப்போது அடைக்கப்பட்டிருக்கின்ற சிறைச்சாலை போன்ற கைவிலங்குகளில் இருந்து முறித்துக் கொண்டு வெளிவருவதற்கு அத்தனை நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களை ஊக்குவிப்பதாகும்.

சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களது சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணி தேசிய தடைகளை முறிப்பதற்கும், நிற, இன மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட அடையாள அரசியல் வடிவங்களை ஊக்குவிப்பதன் மூலமாக வர்க்க ஐக்கியத்தை பலவீனப்படுத்துவதற்காக செய்யப்படுகின்ற அத்தனை முயற்சிகளையும் எதிர்ப்பதற்கும், அத்துடன் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தை ஒருங்கிணைக்க வழிவகை ஏற்படுத்துவதற்கும் போராடும்.

சாமானிய தொழிலாளர்கள் குழுக்களது சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை உருவாக்குவதில் தொழிலாளர்களுக்கு உதவுவதில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகள் உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு ஒரு நனவான, சோசலிச மூலோபாயத்தை வழங்க முற்படும். ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்களின் போராட்டங்களின் தர்க்கவியல் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கும், முதலாளித்துவ தன்னலக்குழுக்களிடமிருந்து பறிமுதல் செய்வதற்கும், தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவையின் அடிப்படையில் உலகளவில் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை நிறுவுவதற்குமான அவசியத்தை எழுப்புகிறது.

2021 சர்வதேச இணையவழி மேதின பேரணி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதன் அரசியல் செல்வாக்கின் விளைவாகவும் இருந்தது. அதே நேரத்தில், அது ஒரு மகத்தான அரசியல் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. சோசலிசத்திற்கான உலகளாவிய புரட்சிகர இயக்கம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில் உருவாக்கப்படும்.

Loading