வோல் ஸ்ட்ரீட் எவ்வாறு மரணங்களை உணவாகக் கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நிக் பீம்ஸ் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினரும், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு நீண்டநாள் தலைவரும் ஆவார், இவர் மார்க்சிச அரசியல் பொருளாதாரம் குறித்து ஏராளமாய் எழுதியுள்ளார். பின்வரும் உரையை அவர், உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மே 1 அன்று நடத்திய 2021 இணையவழி சர்வதேச மே தினப் பேரணியில் வழங்கினார்.

2021 இணையவழி சர்வதேச மே தினப் பேரணியில் நிக் பீம்ஸ் வழங்கிய உரை

இந்த வரலாற்றுச் சிறப்புடனான மேதினப் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வரவேற்பை கூறிக் கொண்டு ஆரம்பிக்கிறேன். சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்வா சாவா பிரச்சினைகளைக் குறித்து நாம் இங்கே கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம்.

வோல் ஸ்ட்ரீட்டின் ஊகவணிக வெறியில் வெளிப்படுகின்றவாறாக உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைகின்ற நெருக்கடி என்ற நான் இன்று பேசவிருக்கும் உரையின் கருப்பொருளுக்கும் இது சளைக்காத ஆற்றலுடன் பொருந்தக் கூடியதாகும்.

மரணங்கள் மற்றும் அழிவுக்கு நடுவே, பங்குச் சந்தை சாதனை அளவுகளுக்கு உயர்ந்ததை சில வருணனையாளர்கள் பாராட்டியிருக்கிறார்கள், பெருந்தொற்றின் காரணத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் மேலெழுச்சி கண்டதில் அவர்களது சொந்த பங்குமதிப்புத் தொகைகளும் உயர்வைக் கண்டதில் அவர்கள் பரவசம் கண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

உண்மையில், இது ட்ரொட்ஸ்கி மிகச் சரியாக குணாம்சம் காட்டியிருந்தவாறாக, முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண வேதனையின் ஒரு வெளிப்பாடாக இருந்தது. மில்லியன் கணக்கானோர் மரணிக்கின்ற அதேவேளையில் சிலவராட்சி கும்பல் ஒன்று பில்லியன் கணக்கான டாலர்களில் செல்வத்தைக் குவிக்கிறது.

ஒருவர் ஒரு நிகழ்வுப்போக்கின் உண்மையான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், அதன் மூலங்களை ஆராய்வது எப்போதும் அவசியமாய் இருக்கிறது. இப்போதைய வோல் ஸ்ட்ரீட் வெறி(மேனியா)க்கான -இதனைப் போன்ற அளவுக்கு ஒருபோதும் இதற்குமுன் கண்டதில்லை- உடனடி மூலவளமானது 2020 மார்ச் நிகழ்வுகளில் அமைந்திருக்கிறது.

அது பெருந்தொற்றின் தொடக்கமாக இருந்தது. பிரம்மாண்டமான அபாயங்களை தொழிலாளர்கள் உணர்ந்துகொண்டதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தக் கோரி அவர்கள் திடீர் வேலைநிறுத்தங்களையும் வேலைப் புறக்கணிப்புகளையும் மேற்கொண்டனர். சந்தைகள் பீதியுடன் பதிலிறுப்பு செய்தன. பங்குச் சந்தைகளில் ஒரு ஆழ்சரிவு உண்டானது, அதன்பின் நெருக்கடியானது இன்னும் ஆபத்தானதொரு திருப்பத்தை எடுத்தது.

சென்ற ஆண்டின் மார்ச் மத்தியில், அமெரிக்க கருவூலப் பத்திரங்களுக்கான 21 டாலர் டிரில்லியன் சந்தை -இது உலகின் மிக ஆழமான மற்றும் மிக திரவகரமான சந்தை என்றும் உலக நிதி அமைப்புமுறைக்கான அடித்தளம் என்றும் விவரிக்கப்பட்டு வந்திருந்தது- உறைந்து போனது. அடுத்த சில மணி நேரங்களில் இல்லையென்றால், அடுத்த சில நாட்களில், ஒட்டுமொத்த உலகளாவிய நிதி அமைப்புமுறையும் ஒரு முழுமையான உருக்குலைவை சந்தித்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு ஒரு பாரிய தலையீட்டைச் செய்வதற்கு இதுவே காரணமாய் இருந்தது. சந்தை ஸ்திரப்பட்டது என்றாலும் தலையீடு தொடர்ந்தது. கூட்டரசாங்க நிதியமைப்பு இப்போது மாதத்திற்கு 120 பில்லியன் டாலர் என்ற வீதத்தில் சொத்துக்களை வாங்குகிற வேளையில் -இது ஆண்டுக்கு 1.4 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகும்- அடிப்படை வட்டி விகிதத்தை பூச்சியமாக பராமரிக்கிறது. “நீண்ட காலத்திற்கு” நீடிக்கவிருக்கும் ஒரு நடவடிக்கையாக Fed வலியுறுத்தியிருக்கும் இந்த நடவடிக்கை தான், ஊகவணிக வெறிக்கான அடித்தளமாக அமைந்திருக்கிறது.

நிக் பீம்ஸ்

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்த முழுமையான விவரிப்பை இங்கே வழங்கி விடுவது என்பது சாத்தியமில்லாதது. மிக சமீபத்திய தரவுகளில் இருந்து சிலவற்றை மட்டும் நான் மேற்கோளிடுகிறேன். முதலீட்டாளர்களுக்கு பங்குத்தரகு நிறுவனங்கள் அளிக்கக் கூடிய மார்ஜின் கடன் அளவு 822 பில்லியன் டாலராக அதிகரித்திருந்ததாக இந்த வாரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டில் இது 479 பில்லியன் டாலராக இருந்தது என்பதையும் 2008 பொறிவுக்கு முன்வந்த காலத்தில் 400 பில்லியன் டாலராக இருந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது உலகளாவிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதத்திற்கு நிகரானதாகும்.

இது எங்கே இட்டுச்செல்கிறது?

அதற்கான ஒரு ஆரம்பகட்ட பதில் சென்ற மாதத்தில் நமக்குக் கிடைத்தது. இதற்கு முன் அறியப்பட்டிராத குடும்ப முதலீட்டு நிறுவனமான Archegos Capital நிறுவனம், பங்குத்தரகு நிறுவனங்கள் தங்களது கடன்களை செலுத்தக் கேட்டபோது அதனால் செலுத்த முடியாத நிலையில் பொறிந்தது. Archegos Capital நிறுவனம் 50 பில்லியன் டாலர் வரை நிதி திரட்டியிருந்தது என்பதும் அதற்கு கடனளித்திருந்த வங்கிகள் 10 பில்லியன் டாலர் வரை நட்டமடைந்தன என்பதும் தெரியவந்தது. Archegos ஒரு பெரிய நிறுவனமாகச் சொல்ல முடியாத ஒன்று.

நீண்ட தொலைவுக்குப் பார்த்தால், இப்போதைய நிலைமைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கின்ற கீழமைந்த போக்குகளும் பயணப்பாதைகளும் தெளிவாகக் காணக்கூடியதாய் இருக்கின்றன. 1987 அக்டோபர் 19 அன்று, வரலாற்றில் வோல் ஸ்ட்ரீட்டில் ஒருநாளிலான மிகப்பெரும் சரிவு நடந்த அந்த நாளில், Fed, நிதி அமைப்புமுறைக்கு இருந்த அடைப்பான்களைத் திறந்து விட்டுக் கொண்டிருப்பதை அறிவித்தது.

அது ஒரு புதிய ஒழுங்கைக் குறித்தது. ஒவ்வொருமுறை ஒரு நிதி நெருக்கடி எழும்போதும் அது குழப்பத்தை சரிக்கட்ட பணத்தை இறைக்கும், ஊக வணிகம் தொடர்வதற்கு நிதியாதாரம் வழங்கும். இத்தகைய ஒவ்வொரு தலையீடும், குறைந்த காலத்திற்கு ஸ்திரநிலை நோக்கித் திரும்புவதற்கு வழிவகை தந்திருந்த அதேநேரத்தில், முந்தையதினும் மிகத் தீவிரமான அடுத்த நெருக்கடியைக் கொண்டுவருவதற்கான நிலைமைகளையே அவை உருவாக்கி வந்திருக்கின்றன.

இவ்வாறாக, 1987 ஐ பின்தொடர்ந்து 1990களது நெருக்கடிகள் வந்தன, அதன்பின் 2000-2001 இன் டாட்காம் பொறிவு, துணை அடமானக் கடன் நெருக்கடி மற்றும் 2008 நிதிப்பொறிவு ஆகியவை வந்தன, அதன்பின் 2020 மார்ச் நெருக்கடியும் அதனால் விளைந்த ஊகவணிக வெறியும் வந்துசேர்ந்திருக்கின்றன. உலகின் மிக முக்கிய மைய வங்கியான ஃபெடரல் வங்கியும் உலகின் முக்கியமான நிதிச் சந்தையான வோல் ஸ்ட்ரீட்டும் மரணப் பிணைப்பு போன்று ஒன்றுடன் ஒன்று பின்னியிருக்கின்றன.

நிதி ஊக வெறியின் எண்ணிலடங்கா தனித்தனியான வெளிப்பாடுகள் இருக்கின்றன. பிட்காயின் மற்றும் 2013 இல் ஒரு நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட dogecoin போன்ற மெய்நிகர் நாணயமதிப்புகளின் எழுச்சி போன்றவற்றை இதன் உதாரணங்களாய் கூறலாம்.

சந்தை மதிப்பாக சொல்லப்படுவதானது கீழமைந்த உண்மையான பொருளாதாரத்தில் இருந்து முற்றிலும் விலகியதாய் இருப்பது தான் ஊகவணிக ஊதாரித்தனத்தின் மையமான அம்சமாக இருக்கிறது; அதுவே அதன் நோய்வாய்ப்பட்ட தன்மையை சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது. இந்த வாரத்தில், டெஸ்லா 400 மில்லியன் டாலர் இலாபத்தை அறிவித்தது, அதில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் பிட்காயின் வணிகங்கள் மூலம் வந்திருந்தது. டெஸ்லா இப்போது ஃபோர்ட் மற்றும் GM இணைந்து கொண்டிருப்பதனை விட அதிகமாக சந்தை முதலீட்டைக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் மட்டுமே இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஃபோர்ட் நிறுவனத்தின் கார் விற்பனை டெஸ்லாவின் ஓராண்டுகால மொத்த விற்பனையைக் காட்டிலும் இரட்டிப்புக்கும் அதிகமாய் இருந்தது.

இந்த வெறிகொண்ட சந்தை ஊகவணிகப் பிரச்சினையை இப்போது நம் முன் நிற்கும் பிரச்சினையுடன் தொடர்புபடுத்திப் பார்ப்போம்.

முதலாவதாக, நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண முதலாளித்துவ ஒழுங்குக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் ஏன் தேவையாயுள்ளது என்பதை நமது பகுப்பாய்வு ஸ்தாபிக்கிறது.

பங்குகள் மற்றும் மற்ற நிதிச் சொத்துக்களின் விலை உயர்வானது மதிப்பு விரிவாக்கத்தைக் குறிப்பதில்லை. இந்த சொத்துக்கள் எல்லாம் கார்ல் மார்க்ஸ் கற்பனை மூலதனம் என்று குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவையாகும். அவை தொழிலாள வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதில் இருந்து பிழியக் கூடிய வருங்கால மதிப்பின் மீதான ஒரு உரிமைகோரலாக இருக்கின்றன.

ஆகவே தான், ஒவ்வொரு நாட்டிலுமே, முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், பாதிக்கப்படுவோர்க்கு இழப்பீட்டுத் தொகைகளுடனான வேலையிடப் பூட்டல்கள் போன்ற திறம்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மறுத்திருக்கின்றன, ஏனென்றால் கற்பனை மூலதன மலையை காப்பாற்றுவதற்கு அவசியமான மதிப்புப் பாய்வில் அவை பாதிப்பை உண்டாக்கும் என்பதால்.

இரண்டாவதாக, பெருந்தொற்றை தோற்கடிப்பதற்கான போராட்டமானது அத்தியாவசியமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் நடத்துகின்ற ஒரு போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது ஆகவே அது தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமானவிதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். இந்தப் பிரச்சினையானது நிதி ஊகத்தின் வளர்ச்சி மற்றும் அதனுடன் தொழிற்சங்கங்கள் கொண்டிருக்கிற நெருக்கமான தொடர்பு ஆகியவற்றுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலுமே, பல தசாப்த கால காட்டிக்கொடுப்புகளின் விளைவாக, தொழிற்சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு இருந்து வந்துள்ளது. அதனையடுத்து, தொழிற்சங்கங்கள் தங்களது எந்திரங்களைப் பராமரிப்பதற்கும் தங்களது நிர்வாகிகளுக்கு ஊதியமளிக்கவும் வருவாய்க்கான மூலவளமாக நிதிச் சந்தைகளுடன் அதிகமான அளவில் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன. முதலீட்டு நிதிகள், சுகாதார நிதிகள், ஓய்வூதிய நிதிகள், சேமநல நிதிகள் போன்றவற்றை அவை நிர்வகிக்கின்றன.

இவ்வாறாய், அவை தங்களது பொருளியல் உயிர்வாழ்க்கைக்கு சந்தைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பின் மீது தங்கியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான போராட்டமும் சந்தைகளை மிரளச் செய்கின்றன என்பதால் தொழிற்சங்க எந்திரங்கள் என்ன செய்தேனும் அதனை ஒடுக்குவதற்காய் முனைகின்றன.

பல்வேறு போலி-இடது போக்குகள் கீழிருந்தான அழுத்தம் போதுமான அளவுக்கு இருக்கிறதென்றும், ஆகவே தொழிற்சங்கங்கள் இடது நோக்கி நகர்த்தப்பட முடியும் என்றும் தொடர்ந்து கூறுகின்றன. ஆனால் அதற்கு நேரெதிரான விதத்தில், கீழிருந்து அதிகரித்த அழுத்தம் இந்த தொழிற்சங்கங்கள் பொருளியல்ரீதியாக எந்த நிதி அமைப்புமுறையின் மீது தங்கியுள்ளனவோ அதன் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதால், மேலிருந்தான ஒடுக்குமுறை அந்தளவுக்கு அதிகரித்ததாய் ஆகிறது.

பெருந்தொற்றுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்பவும் அதன் போராட்டங்களை உலகளாவிய விதத்தில் ஒழுங்கமைக்கவும் வேண்டும். இவ்விதத்தில் அது, சோசலிச அடித்தளங்களின் மீது உலகப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கிற, அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்.

Loading