முன்னோக்கு

காசா மீதான இஸ்ரேலின் போரையும், ஜெருசலேமில் இன சுத்திகரிப்பு நடவடிக்கையையும் நிறுத்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காசா மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலையும், அத்துடன் இந்த மோதலுக்கு முன்னர் ஜெருசலேமில் நடத்தப்பட்டு அதற்கு எரியூட்டிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையையும் உலக சோசலிச வலைத் தளம் உறுதியாகக் கண்டிக்கிறது. இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் உட்பட ஒட்டுமொத்த உலக தொழிலாளர்களும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இந்த ஆக்ரோஷ நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்.

டெட்ராய்ட் அல்லது பிலடெல்பியா நகரங்களை விட பெரிதாக இல்லாத, இரண்டு மில்லியனுக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு பகுதியில், குறைந்தபட்சம் 500 இடங்களில் மழையென பொழிந்த இஸ்ரேலிய குண்டுவீச்சுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் டஜன் கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனிய போராளி குழுக்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத்தின் சில தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், எந்த சூழ்நிலைகளில் என்பது தெளிவாக இல்லை. ஆனால், 2007 இல் இருந்து காசாவில் ஆட்சி செய்து வந்துள்ள ஹமாஸ் பயன்படுத்திய கட்டிடங்களை அழிப்பதற்காக, இது ஏவுகணைகள் மற்றும் மிகவும் பொதுவான குண்டுவீச்சு நடவடிக்கைகளைப் பயன்படுத்திய திட்டமிட்ட கலவையான படுகொலை நடவடிக்கையாக தெரிகிறது.

காயமடைந்தவர்களில், ஹமாஸ் இராணுவப் படையின் காசா நகர படைப்பிரிவு தளபதி பாஸ்ஸெம் இஸ்ஸா (Bassem Issa) தான் மிக முக்கிய நபராக உள்ளார். இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாஹூ குரூர திருப்தியுடன் பின்வருமாறு கூறினார்: “நாங்கள் மூத்த ஹமாஸ் தளபதிகளைத் துடைத்தழித்துள்ளோம், இது வெறும் ஆரம்பம் தான் … அவர்கள் கனவிலும் நினைத்து பார்த்திராத அளவுக்கு அவர்களை அடித்து நொருக்குவோம்.”

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF), கவசப் பிரிவுகள் மற்றும் துணை இராணுவ படைப் பிரிவுகள் உட்பட 5,000 கையிருப்பு துருப்புகளைத் அணிதிரட்டியதுடன், போரில் ஈடுபட தயாராக உள்ள இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை மந்திரிசபை புதன்கிழமை உத்தரவுகளைப் பிறப்பித்தால் அந்த குடியேற்றப் பகுதியில் தாக்குதல் நடத்தும் நிலைமைகளில், காசா எல்லையை ஒட்டி அவற்றை நிலைநிறுத்தி இருந்தது. 2014 இல் காசா மீது இஸ்ரேல் படையெடுத்ததற்குப் பின்னர் இதுவே பலத்தைக் காட்டும் மிகப்பெரும் காட்சியாக இருந்தது, அப்போது மாதக்கணக்கில் நீண்ட அந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஹமாஸின் பெரிதும் பயனற்ற மற்றும் பக்குவமற்ற ராக்கெட் தாக்குதல்களின் இலக்கில் வைக்கப்பட்டிருந்த காசாவுக்கு அருகிலுள்ள தெற்கு நகரமான அஷ்கெலோனுக்கு விஜயம் செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ், இஸ்ரேல் நடவடிக்கை சில காலத்திற்கு நீடிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இராணுவம் "தாக்குதலைத் தொடர்ந்து, நீண்ட காலத்திற்கு முழுமையான அமைதியைக் கொண்டு வரும்" என்று கூறிய அவர், "தற்போது இறுதி தேதி முடிவு செய்யப்படவில்லை" என்றார்.

பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் காயமடையலாம் அல்லது கொல்லப்படலாம் என்பதை ஒப்புக் கொண்ட IDF செய்தித் தொடர்பாளர் ஹிடாய் ஜில்பெர்மன், ஹமாஸ் வேண்டுமென்றே அதன் நடவடிக்கைகளுக்காக பொதுமக்களை "மனித கேடயங்களாக" பயன்படுத்துவதாகக் கூறினார், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் மற்றும் அந்த சியோனிச அரசாலும் இரண்டாலும் அப்பாவி மக்களைப் படுகொலை செய்ய எண்ணற்ற முறை பயன்படுத்தப்பட்ட ஒரு போலி நியாயப்பாடாகும்.

வழக்கமாக இலக்கில் வைக்கப்படும் மேற்குக் கரைக்குப் பதிலாக, கணிசமான இஸ்ரேலிய அரபு மக்களைக் கொண்ட நகரங்களுக்கு எதிராக எட்டு ரிசர்வ் பொலிஸ் படைப்பிரிவுகளை இஸ்ரேலுக்குள் நிலைநிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அரசியல்ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கிழக்கு ஜெருசலேமின் ஷேக் ஜார்ரா சுற்றுப்புறத்தில் வாழும் பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான இஸ்ரேலிய முயற்சிகளுக்கு எதிராகவும், மற்றும் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் மத சேவைகளில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராகவும் அங்கே இஸ்ரேலிய பாலஸ்தீனர்கள் மத்தியில் பரந்த போராட்டங்கள் நடந்துள்ளன. மத்திய இஸ்ரேலின் லாட் பகுதிக்கும், இங்கே அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது, மற்றும் வடக்கு கடற்கரையில் உள்ள ஏக்கர் பகுதிக்கும் எல்லைப் பொலிசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஷேக் ஜர்ராவில் வெளியேற்றங்கள் குறித்த இஸ்ரேலிய அச்சுறுத்தல்கள் குறிப்பாக ஆத்திரமூட்டும் தன்மையைக் கொண்டுள்ளன, இதனுடன் "அரேபியர்கள் சாகட்டும்" என்ற கோஷத்துடன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிவலது சியோனிசவாதிகள் அணிவகுப்பதும் சேர்ந்துள்ளது. நியூயோர்க் டைம்ஸின் துணை-தலையங்க பக்கத்தில் நடவடிக்கையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ரூலா சலமே குறிப்பிட்டவாறு, “வெளியேற்றத்தை முகங்கொடுத்துள்ள ஷேக் ஜர்ரா குடும்பங்கள் பாலஸ்தீன அகதிகள் ஆவர், இவர்கள் 1948 போரின் போது ஹைஃபா மற்றும் ஜாஃபாவிலுள்ள அவர்களின் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டவர்கள்.” பின்னர் அவர்கள், 1967 போர் வரை அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த ஜோர்டான் அரசாங்கத்தால் கிழக்கு ஜெருசலேமில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

இந்த ஷேக் ஜர்ரா என்பது, இஸ்லாமின் மூன்றாவது புனித ஆலயமான அல்-அக்ஸா மசூதி மற்றும் புலம்பல் சுவர் (Wailing Wall) இரண்டும் உள்ளடங்கலாக, வரலாற்றுரீதியில் ஜெருசலேமின் சுவர் பகுதியாக அமைந்துள்ள பழைய நகரமான அரபு குவார்டருக்குப் பிரதான நுழைவாயிலான தமாஸ்கஸ் நுழைவாயிலுக்கு நேரடியாக பக்கவாட்டில் அமைந்துள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் கடந்த மாதம் டமாஸ்கஸ் நுழைவாயிலை மூடிவிட்டனர், இப்போது அதற்கு வெளியே சுற்றுவட்டப் பகுதிகளில் இருந்து பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்றி வருகின்றனர், இது ஒட்டுமொத்தமாக அரபு குவார்டரைச் சுத்திகரிப்பதற்கான தயாரிப்புகளாக இருக்கலாம்.

நெத்தன்யாஹூ அரசாங்கம் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்கு முற்றிலும் திறமையானது, அத்தகைய ஒரு ஆத்திரமூட்டல் ஓர் அரசியல் தேவையாகவும் கூட அது பார்க்கக்கூடும், ஏனெனில் நெத்தன்யாஹூ ஓர் அரசாங்கம் அமைக்க போராடி வருவதோடு அவர் மீதான குற்றகரமான ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து அவ்விதத்தில் தப்பிக்கவும் போராடி வருகிறார். பிளவுபட்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அந்த பிரதம மந்திரி ஆரம்பத்தில் பெரும்பான்மையைப் பெற தவறிய பின்னர், இஸ்ரேலிய ஜனாதிபதி ரூபன் ரிவ்லின் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான ஒரு வாய்ப்பை எதிர்கட்சித் தலைவர் Yair Lapid இக்கு வழங்கி உள்ளார்.

ஐ.நா. அதிகாரியும், மத்திய கிழக்கு சமாதான நடவடிக்கைக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளருமான டோர் வென்னஸ்லேண்ட் குறிப்பிடுகையில், காசா நெருக்கடி "ஒரு முழு அளவிலான போரை நோக்கி தீவிரமடைந்து வருகிறது" என்று எச்சரித்தார். ஆனால் "தீவிரப்படுத்தலைக் குறைப்பதற்கான" அவரின் அழைப்புகள், இஸ்ரேலின் போர் அமைச்சரவையிலும் சரி சர்வதேச அளவில் இஸ்ரேலின் பிரதான ஆதரவாளரான வாஷிங்டனிலும் சரி, செவிடன் காதில் விழுந்த வார்த்தைகளாயின.

வென்னஸ்லேண்ட் இந்த நெருக்கடி குறித்த அறிக்கையை புதன்கிழமை ஐ.நா.பாதுகாப்பு அவையில் முன்வைத்தார், அது ஒரு தீர்மானத்தை வெளியிடுவதிலிருந்து அமெரிக்காவினால் தடுக்கப்பட்டது. ஷேக் ஜர்ரா மற்றும் கிழக்கு ஜெருசலேமின் சில்வான் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற்றங்கள் செய்வதைக் கண்டித்தும், “குடியேற்ற நடவடிக்கைகள், இடிப்புகள் மற்றும் வெளியேற்றங்களை நிறுத்துமாறு" இஸ்ரேலுக்கு அழைப்பும் விடுத்தும், நோர்வே மற்றும் துனிசியா அந்த தீர்மானத்தை வரைந்திருந்தன.

ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் சொந்த ஆக்கிரமிப்புக்கு ஏற்ற மூடுதிரை என்று கருதும் போது மட்டும் செயல்படக்கூடிய ஒரு அரசியல் பேச்சு அங்காடியாக விளங்கும் ஐக்கிய நாடுகள் சபை வகிக்கும் பாத்திரத்திற்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டாகும். மத்திய கிழக்கு மீது பாதுகாப்பு அவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அரிய சந்தர்ப்பங்களிலும் கூட, இஸ்ரேல் அவற்றை விலக்கீட்டுரிமையோடு சர்வசாதாரணமாக புறக்கணித்து விடுகிறது.

இந்த நெருக்கடி வெடித்ததில் இருந்து, பைடென் நிர்வாகம் வெறித்தனமாக இஸ்ரேல் சார்பு நடவடிக்கைகளின் ஈடுபட்டுள்ளது. வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் மற்றும் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜேக் சுலிவன் ஆகியோர் மத்தியக் கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான வாடிக்கையாளருக்கு அதன் ஆதரவைத் தெரிவித்து, அவர்களின் இஸ்ரேலிய சமதரப்பினர்களுக்கு அடுத்தடுத்து தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர்.

பிளிங்கன் அறிவித்தார், “முதலாவதாக, சொல்லப்போனால் அப்பாவி மக்களை இலக்கில் வைத்து கண்மூடித்தனமாக ராக்கெட்டுகளை மழையென பொழிந்து வரும் ஒரு பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கும், இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசும் அந்த பயங்கரவாதிகளை இலக்கில் வைத்து, தன்னைப் பாதுகாப்பதற்காக, இஸ்ரேல் காட்டும் விடையிறுப்புக்கும் இடையே மிகவும் தெளிவான கேள்விக்கிடமற்ற வேறுபாடு உள்ளது.”

அமெரிக்காவின் "திடமான ஆதரவை" தெரிவிக்க, ஆஸ்டின் காண்ட்ஸை அழைத்து, “இஸ்ரேலிய பொதுமக்களை இலக்கில் வைக்கும் ஹமாஸ் மற்றும் ஏனைய பயங்கரவாத குழுக்களின் ராக்கெட் தாக்குதல்களை அவர் பலமாக கண்டிப்பதாக" அறிவித்தார்.

காசாவில் வெடித்துள்ள இந்த மோதலுக்கு இன்னும் அதிக ஆபத்தான அம்சமும் உள்ளது. போர் என்பது இஸ்ரேலிய அரசின் இருப்புக்கான நிலையாக உள்ளது, இந்த நிபந்தனையைக் கொண்டு மட்டுந்தான் சியோனிய அமைப்பைச் சின்னாபின்னமாக்க முதிர்ந்துள்ள சமூக முரண்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று உள்ளது. இதே போன்ற சென்ற போரிலிருந்து—ஜூலை 2014 காசா தாக்குதல்—ஏழு ஆண்டுகளில், இஸ்ரேலிய தலைமையால் பாலஸ்தீனர்களுக்கு எதிரான ஓர் இராணுவ நடவடிக்கை, பாலஸ்தீனர்களுடன் மட்டும் மட்டுப்பட்டு இல்லாமல், அனேகமாக நீண்டகால அவசியமாக பார்க்கப்பட்டு வந்துள்ளது.

குறிப்பாக, “இஸ்ரேல் மீதான பாரிய ஹமாஸ் தாக்குதல் குறித்து ஈரான் எச்சரிக்கப்பட்டதா?” என்ற தலைப்பில், இஸ்ரேலிய வலதுசாரிகளின் பிரதான பத்திரிகை குரல்களில் ஒன்றான ஜெருசலேம் போஸ்டில் செவ்வாயன்று வெளியிடப்பட்ட கட்டுரை அச்சமூட்டுவதாக உள்ளது. ஹமாஸின் ராக்கெட் தாக்குதல் உண்மையில் ஜெருசலேமில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு விடையிறுப்பாக நடத்தப்பட்டதல்ல மாறாக ஈரானிய அணுசக்தி திட்டம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக, இஸ்லாமிய ஜிகாத் மற்றும் லெபனான் குழு ஹெஸ்புல்லா ஆகியவை ஒருங்கிணைந்து, ஈரானால் தூண்டிவிடப்பட்ட தாக்குதல் என்று அந்த ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.

சிறிதளவும் உண்மையின் அடித்தளமோ அல்லது ஆதாரமோ முன்வைக்காமல், இத்தகைய வர்ணனையின் நோக்கம், ஏற்கனவே கடந்த மாதம் ஓர் இஸ்ரேலிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட, நடான்ஸில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையத்தை அனேகமாக இலக்கில் வைத்து ஈரானுக்கு எதிரான ஓர் இஸ்ரேலிய இராணுவ தாக்குதலுக்கு பொதுமக்கள் கருத்தைத் தயாரிப்பு செய்வதாக உள்ளது. ரிமோட் கொண்டு கட்டுப்படுத்தப்படும் ஒரு வெடிபொருள் அந்த ஆலைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதில் சம்பந்தப்பட்டிருந்தது.

இந்த கருத்துரை தோன்றுவதற்கு வெறும் ஒரு நாள் முன்னதாக, ஓர் அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி யில் ஈரானிய படகுகள் மீது "எச்சரிகை துப்பாக்கி சூடு" நடத்தியது, இது ஐந்து வாரங்களில் மூன்றாவது சம்பவமாகும். இந்த கடலோர காவல்படை கப்பல் அந்த ஜலசந்தி மீது சென்று கொண்டிருந்த ஏவுகணை தாங்கிய ஆயுதமேந்திய ஒரு கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுக்குப் பாதுகாப்பாக சுற்றிக் கொண்டிருந்தது.

மத்திய கிழக்கு நெருக்கடி கத்தி முனையில் நிற்கிறது. அமெரிக்கா தான் சியோனிச ஆட்சியின் பிரதான ஆதரவாளராகும், அதேவேளையில் ரஷ்யாவுடனும் குறிப்பாக சீனாவுடனும் ஈரான் அதன் பொருளாதார, இராஜாங்க மற்றும் இராணுவ உறவுகளை உருவாக்கியுள்ளது. ஈரானுக்கு எதிரான ஓர் இஸ்ரேலிய தாக்குதல், கணக்கிட முடியாத விளைவுகளுடன், எல்லா பிரதான சக்திகளையும் போர் கடாரத்திற்குள் இழுத்துவிடும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே, மத்திய கிழக்கில் ஒரு புதிய போரையும், அது ஓர் உலகளாவிய மோதலாக தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தலையும், எதிர்கொள்ள முடியும்.

Loading