ஐரோப்பிய சக்திகள் போர்-எதிர்ப்பு போராட்டங்களுக்கு தடைவிதித்து, காசா மீதான இஸ்ரேலிய போரை ஆதரிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் காசா பகுதி மீது இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு ஒப்புதல் அளித்து வருகின்றன. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான கூடுதல் தாக்குதலாக, அவை ஐரோப்பிய நகரங்களில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் அமைதியான போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வன்முறையான யூத-எதிர்ப்புவாதிகள் என்று பழிசுமத்தி, அந்த அடிப்படையில் அந்த போராட்டங்களுக்குத் தடை விதிக்கின்றன.

இஸ்ரேலிய கலகம் ஒடுக்கும் பொலிஸ் கடந்த வார இறுதியில் அல்-அக்ஸா மசூதி பாதையில் வன்முறையாக நடந்து கொண்டதிலிருந்து தீவிரமடைந்துள்ள சண்டை ஒருதலைப்பட்சமான படுகொலையாக உள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் குண்டுவீசி, ஒரு சில எளிய ராக்கெட்டுகளைக் கொண்டு மட்டுமே பதிலளிக்கக்கூடிய, அந்த பாலஸ்தீனிய இராணுவத் தளபதிகளை கொன்றுவிட்டதாக பெருமைப்பீற்றி வருகிறது. நேற்று வரை, அங்கே ஆறு இஸ்ரேலியர்கள் மற்றும் ஒரு இந்திய பிரஜையும், 126 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டிருந்தனர். மேற்கு படுகையிலும் நேற்று இஸ்ரேலியப் படைகளால் பத்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இருந்தும் கூட, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் பாலஸ்தீனியர்களைக் கண்டித்து இஸ்ரேலிய அரசாங்கத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் அவர் "கவலை கொண்டிருப்பதாக ட்வீட்டரில் அறிவித்து, தொனியை அமைத்தார். பின்னர் அவர் காசா பகுதிக்கு எதிரான இஸ்ரேலிய நிலைப்பாட்டை அங்கீகரித்து பின்வருமாறு எழுதினார்: "இஸ்ரேல் மீது கண்மூடித்தனமாக ஹமாஸ் தாக்குதல்கள் நடத்துவதை நான் கண்டிக்கிறேன். எல்லா தரப்பிலும் உள்ள பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வன்முறை இப்போதே நிறுத்தப்பட வேண்டும்." இதே போன்ற கருத்துக்கள் பேர்லின் மற்றும் பாரிஸில் இருந்தும் வந்தன.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் செய்தி தொடர்பாளர் ஸ்ரெபன் சைய்பேர்ட் பாலஸ்தீனிய "பயங்கரவாத தாக்குதல்களை" கண்டித்ததுடன், இஸ்ரேலின் "தற்காப்பு உரிமையை" புகழ்ந்துரைத்த பின்னர், பாரிஸின் எலிசே ஜனாதிபதி மாளிகை நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டது. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தனியாகுவை தொலைபேசியில் அழைத்து பேசியதாக குறிப்பிட்ட அது, "ஹமாஸ் மற்றும் ஏனைய பயங்கரவாத குழுக்களின் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, மீண்டும் அதை அவர் உறுதியாகக் கண்டித்தார். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட இந்த நினைவாண்டில், இஸ்ரேலின் பாதுகாப்புக்கும் அதன் தற்காப்பு உரிமைக்கும் ஜனாதிபதி அவரின் அசைக்க முடியாத ஆதரவை வலியுறுத்தினார்," என்று குறிப்பிட்டது.

ஜேர்மனிய வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் (சமூக ஜனநாயகக் கட்சி) இந்த மோதலுக்கு ஹமாஸைக் குற்றஞ்சாட்டியதுடன், காசா பகுதியைப் பாதுகாப்பதற்கான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்க அழைப்பு விடுத்தார். "இஸ்ரேலிய நகரங்கள் மீது ஓராயிரம் ராக்கெட்டுகளைச் செலுத்தியதன் மூலம், மிக குறைந்தபட்சம், ஹமாஸ் பொறுப்பின்றி சமீபத்திய இந்த தீவிரப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது," என்றவர் Bild பத்திரிகைக்கு தெரிவித்தார். பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் "குற்றகரமான நடவடிக்கைகள் எதிர்பார்க்கலாம்" என்பதால் அவற்றுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ஆதரிப்பது ஒரு பரந்த போரைத் தூண்டக்கூடும் என்று தெரிந்தும், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் அதை ஆதரிக்கின்றன.

மே 12 இல், வெளியுறவு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் பிரெஞ்சு செனட்டில் கூறுகையில், "அண்டை கிழக்கின் நிலைமையினது தீவிரம் குறித்து மிகவும் கவலை கொண்டிருப்பதாக" தெரிவித்தார். சிரிய அரசாங்கம் மற்றும் ஈரானிய படைகள் இரண்டையும் இலக்கில் வைத்து, இந்தாண்டு இஸ்ரேல் சிரியா மீது பலமுறை குண்டுவீசி உள்ளது, ஒரு பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்தைக் குறிப்பிட்ட லு திரியோன், "காசா, ஜெருசலேம், மேற்கு படுகை மற்றும் பல இஸ்ரேலிய நகரங்களில் நடந்து வரும் சுழற்சியான வன்முறை ஒரு மிகப்பெரிய தீவிரப்பாட்டை தூண்ட அச்சுறுத்துகிறது. 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், காசா பகுதி மூன்று இரத்தம் தோய்ந்த போர்களைக் கண்டுள்ளது. நான்காவது ஒன்றைத் தவிர்க்க அனைத்தும் செய்தாக வேண்டும்," என்றார்.

இருந்த போதினும், லு திரியோன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக இறங்கி, "ஜெருசலேமை இலக்கில் வைத்தும் மற்றும் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலிய பிராந்தியத்தில் வசிக்கும் பல மக்களை இலக்கில் வைத்தும் காசா பகுதியிலிருந்து ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதைப் பிரான்ஸ் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறது" என்றார்.

காசா பகுதி மீது இஸ்ரேல் அதை விட அதிகமாக குண்டுவீசுவதைக் கண்டிக்காமல், லு திரியோன் எரிச்சலூட்டும் விதத்தில் பக்கசார்பற்றவராக தன்னை காட்ட முயன்றார். கிழக்கு ஜெருசலேமில் இருந்து பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் பலவந்தமாக மீள்குடியேற்றுவதைக் கண்டித்த அவர், “இந்த மோதலுக்கு ஒரு நியாயமான மற்றும் நிரந்தர தீர்வைப் பெறுவதற்காக சண்டையிட்டு வரும் தரப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க" ஜேர்மனிய, எகிப்திய மற்றும் ஜோர்டானிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட சூளுரைத்தார். இஸ்ரேலில் போராடுவதற்கான உரிமை மதிக்கப்பட வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களது சொந்த உள்நாட்டு கொள்கையே, மத்திய கிழக்கில் ஜனநாயக உரிமைகள் குறித்து கவலை வெளியிட்ட லு திரியோன் அறிக்கைகளது பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தியது. கோவிட்-19 வைரஸ் பரவல் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் இழிவார்ந்த அலட்சிய கொள்கையால் ஏற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள், பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்து வருகின்றன அல்லது தடை செய்ய அச்சுறுத்தி வருகின்றன.

வியாழனன்று, பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன் பாரிசில் இன்றைய காசா-ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதித்தார். "அண்டை கிழக்கின் சமீபத்திய பதட்டங்களுடன் தொடர்புடைய சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்யுமாறு காவல்துறைத் தலைமை அதிகாரியை நான் கேட்டுக் கொண்டேன்," என்று ட்வீட் செய்த அவர், பிரான்ஸ் முழுவதும், "குறிப்பாக விழிப்புடனும் கடுமையாகவும் இருக்குமாறு தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன" என்பதையும் சேர்த்து கொண்டார். "இந்த இயக்கங்களை நெருக்கமாக பின்தொடர உளவுத்துறையை அணிதிரட்டவும்" மற்றும் "எந்தவொரு அபாயகரமான பிரச்சினையையும் எதிர்நோக்குமாறும்" அவர் பிரான்சின் பொலிஸ் தலைமை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

ஏழாண்டுகளுக்கு முன்னர், காசா மீதான 2014 இஸ்ரேல் போருக்கு எதிராக பாரீசில் நடந்த பாலஸ்தீன-ஆதரவு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது என்பதே மக்கள் உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலுக்கு டார்மனன் கொடுத்த ஒரே நியாயப்பாடாக இருந்தது.

பாரிஸ் போராட்டத்தை ஏற்பாடு செய்து வரும் பாலஸ்தீனியர்களின் இல்-டு-பிரான்ஸ் (Île-de-France) அமைப்பு டார்மனன் தடைவிதித்ததைக் கண்டித்தது. அதன் செய்தித் தொடர்பாளர் வாலித் அதல்லாஹ் கூறுகையில், "இந்த ஆர்ப்பாட்டத்தை தடை செய்வதன் மூலம், ஆக்கிரமிப்பு, காலனியாக்கம் மற்றும் குண்டுவீச்சுக்களால் பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்கு ஆதரவான எல்லா வெளிப்பாடுகளையும் தடுக்க விரும்பும் இஸ்ரேல் அரசுடன் பிரான்ஸ் உடந்தையாய் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது,” என்றார்.

டார்மனன் தடை விதிப்பை எதிர்த்து அந்த அமைப்பின் முதல் முறையீட்டை பாரீஸ் நிர்வாக நீதிமன்றம் நிராகரித்தது, அது பிரான்சின் மாநில கவுன்சிலில் மேல்முறையீடு செய்தது. இருப்பினும், "பல ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்காக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டு, அது அந்த போராட்டத்திற்கான அழைப்பைத் தொடர்ந்து தக்க வைத்தது.

பல பாலஸ்தீன-ஆதரவு அமைப்புக்கள் இன்று மதியம் நகர மையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பேரணிக்கு பிராங்க்பேர்ட் நகர அதிகாரிகள் தடைவிதித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்யும் குற்றச் செயல்கள் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருக்கும் என்று நேற்று காரணம் கூறப்பட்டது. நகர அதிகாரி மார்கஸ் பிராங்க் (கிறிஸ்துவ ஜனநாயக அமைப்பு) “யூத-எதிர்ப்புவாத அழைப்புகள்" விடுப்பதற்காக ஒழுங்கமைப்பாளர்களைக் குற்றஞ்சாட்டினார்.

இத்தகைய யூத-எதிர்ப்புவாத குற்றச்சாட்டுக்கள், இஸ்ரேலின் கொலைபாதக நடவடிக்கைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கவே சேவையாற்றுகின்றன.

உண்மையில், அந்த போராட்டத்திற்கு முன்னதாக, ஜெல்சென்கிர்சென் யூத தேவாலயத்திற்கு வெளியே குறிப்பாக ஒருசில டஜன்கணக்கானவர்கள் யூத-எதிர்ப்புவாத கோஷங்களை முழங்கியதும், அதை ஒழுங்கமைத்தவர்கள் மீண்டும் மீண்டும் யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிராக பேசினர். "பாலஸ்தீனம் பேசுகிறது" குழு வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கை, "நீங்கள் யூதர்களை வெறுப்பதாக இருந்தால், உங்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை" என்று குறிப்பிட்டது. பிராங்பேர்ட் ஆர்ப்பாட்டத்திற்கான உத்தியோகபூர்வ துண்டறிக்கை, "வெளியேற்றத்திற்கு எதிராகவும், நிலத் திருட்டுக்கு எதிராகவும், இனச்சுத்திகரிப்புக்கு எதிராகவும், நடந்து கொண்டிருக்கும் நக்பாவுக்கு எதிராகவும், திரும்பும் உரிமைக்காகவும், அனைவருக்கும் திறந்த ஒரு சமூகத்திற்கும் ஒற்றுமையைக் காட்டுமாறு" அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.

இது எதுவும், இஸ்ரேலின் போர் கொள்கைகளுக்கு எதிரான எந்த எதிர்ப்பையும் யூத-எதிர்ப்புவாதமென கண்டிப்பதிலிருந்து ஐரோப்பிய அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் தடுத்துவிடவில்லை. ஆனால் வலதுசாரி நெத்தனியாகு அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மீதான விமர்சனத்திற்கும் யூத-எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு எதிர்முரணாக, பெரும்பாலும் நிராதரவான மக்கள் மீது பயங்கரவாத குண்டுவீச்சானது யூத-மதவாதத்தின் (Judaism) வெளிப்பாடு என்ற வாதமே யூத-எதிர்ப்புவாதமாகும்.

ஜேர்மனியில் நாஜி இராணுவத்தை பெருமைபீற்றியும் பேர்லினில் யூத-இனப்படுகொலை நினைவுச்சின்னங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தும் வரும் உறுப்பினர்களைக் கொண்ட அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி (AfD) தலைமையில் இந்த உத்தியோகபூர்வ பிரச்சாரம் செய்யப்படுகிறது என்ற உண்மையை விட, இந்த பிரச்சாரத்தின் பிற்போக்குத்தனமான இயல்பை வேறெதுவும் தெளிவாக எடுத்துக்காட்ட முடியாது.

போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்ல, மாறாக ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் தான் யூத-எதிர்ப்புவாதத்தை ஊக்குவிக்கின்றன. அவை ஐரோப்பா முழுவதிலும் அதிவலதுகளை அரவணைத்து வளர்த்து வருகின்றன என்பது மட்டுமல்ல, மாறாக அவை அவற்றின் அரசியல் இலக்குகளை தொடர பகிரங்கமாகவே யூத-விரோத சக்திகளுடன் ஒத்துழைக்கின்றன. 2014 இல் உக்ரேனில் அதிவலது ஆட்சிக்கவிழ்ப்பு சதி விவகாரத்தில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது, அப்போது அப்போதைய ஜேர்மனிய வெளியுறவு அமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியுமான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் பாசிச ஸ்வோபோடா கட்சியின் தலைவர், இழிவார்ந்த யூத-எதிர்ப்புவாதி Oleh Tyahnybok ஐ கியேவில் உள்ள ஜேர்மன் தூதரகத்தில் சந்தித்தார்.

பிரான்சின் உள்துறை அமைச்சர் டார்மனனைப் பொறுத்த வரை, பிரெஞ்சு பல்பொருள் அங்காடிகளில் கோஷர் உணவுகளைப் பார்க்க கூட விரும்பவில்லை என்று அறிவித்த அவர் ஆவணபூர்வமாகவே அதிவலது அக்ஸியோன் பிரான்ஸேஸ் (Action française) இன் அனுதாபியாக உள்ளார்.

சட்டபூர்வ பொது போராட்டங்களுக்குத் தடைவிதிப்பது உள்ளடங்கலாக, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களது விடையிறுப்பானது ஒரு தீவிர அரசியல் எச்சரிக்கையாகும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவற்றின் நலன்களை முன்னெடுக்க, அவை மனித வாழ்வை நோக்கிய பாசிசவாத அலட்சியத்துடன், அதிகரித்தளவில் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நம்பியுள்ளன. ஐரோப்பா முழுவதிலும், அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேலிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே நிலவுகின்ற பெரும் எதிர்ப்பை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே போரை நிறுத்த முடியும்.

Loading