முன்னோக்கு

அமெரிக்கா, 1958 தாய்வான் நெருக்கடியின்போது சீன நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பென்டகன் ஆவணங்களை கசியவிட்ட அமெரிக்க அணுசக்தி மூலோபாயவாதி டானியல் எல்ஸ்பேர்க், 1958 இல் சீன நகரங்கள் மீது ஓர் அணுஆயுத தாக்குதலுக்கு அமெரிக்க தளபதிகள் ஆக்கிரோஷமாக அழுத்தமளித்ததைத் தெளிவுபடுத்தும் இரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.

சீன கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள குமோய் (Quemoy) மற்றும் மட்சு (Matsu) ஆகிய இரண்டு சிறிய தீவுத்திட்டுகள் மீது கட்டுப்பாட்டை தக்க வைப்பதற்காக, மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களுக்கு வழிவகுக்கும் விதத்தில், அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதிகள், ஷாங்காய் உட்பட முக்கிய சீன நகரங்களுக்கு எதிராக அணுஆயுத தாக்குதல்களை நடத்தவும், தைவான், ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான சோவியத் ஒன்றியத்தின் அணுஆயுத பதிலடியின் விளைவுகளை ஏற்கவும் தயாராக இருந்தனர்.

A US B-52 nuclear-capable bomber (AP Photo)

அமெரிக்க அரசு ஆறு தசாப்தங்களாக அந்த ஆவணங்களைப் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்க முயன்றது என்ற அளவுக்கு இந்த ஆவணங்கள் மிகவும் வெடிப்பார்ந்ததாக உள்ளன. வியட்நாமில் அமெரிக்க போர் நோக்கங்களை அம்பலப்படுத்திய பென்டகன் ஆவணங்களுடன் சேர்த்து இவற்றையும் நகலெடுத்த எல்ஸ்பேர்க், அவற்றை பலர் அறியச் செய்ததற்காக உளவுபார்ப்பு சட்டத்தின் கீழ் விசாரணையில் இழுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்குகையிலும் அவற்றை வெளியிட்டதால் மட்டுமே அவை அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

1958 இன் இரண்டாவது தைவான் ஜலசந்தி நெருக்கடியின் போது, பென்டகனின் போர் திட்ட வல்லுனர்கள், சீன கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள குமோய் (Quemoy) மற்றும் மட்சு (Matsu) தீவுத்திட்டுகள் சாதாரண போர் ஆயுதங்களுடன் பாதுகாப்பற்று இருப்பதாக நம்பினர். “எதிர்விரோத நடவடிக்கைகளில் அணுஆயுதங்களைப் பயன்படுத்தலாமென ஒட்டுமொத்த இராணுவ ஸ்தாபகமும் அதிகளவில் கருதின,” என்று எல்ஸ்பேர்க் வெளியிட்ட ஆவணங்கள் குறிப்பிட்டன.

"அமெரிக்காவினாலும் மற்றும் அநேகமாக எதிரியாலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடும்," மற்றும் "சீனப் பெருநிலப்பரப்பு இலக்குகளைத் தாக்குவதற்கான அதிகாரம் வழங்கப்படலாம்," என்று பென்டகன் திட்ட வல்லுனர்கள் குறிப்பிட்டனர்.

"அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது" என்ற முன்அனுமானத்தின் அடிப்படையில் "இரு தரப்பிலிருந்தும் அணுஆயுதத் தாக்குதல்களில்" ஈடுபடலாம்.

அந்த தீவுகள் மீதான சீன அத்துமீறலுக்கு எதிராக அமெரிக்க உயர்மட்ட கட்டளையகம் உடனடியாக அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ஆக்கிரோஷமாக அழுத்தமளித்த அதேவேளையில், "போர்-செய்யும் சீன கம்யூனிஸ்ட் திறனை அழிப்பதும்" அமெரிக்கப் போர் நோக்கங்களில் உள்ளடங்கும் என்று அது வலியுறுத்தியது.

"சீனாவிற்குள் வடக்கே ஷாங்காய் வரையில் ஊடுருவி அணுஆயுத தாக்குதல்கள் நடத்துவதைத் தவிர [அமெரிக்காவுக்கு] வேறு வழியிருக்கவில்லை," என்று இராணுவத் திட்ட வல்லுனர்கள் அறிவித்தனர். இது "தைவானுக்கு எதிராகவும் அநேகமாக [ஜப்பானில்] ஒகினாவாவுக்கு எதிராகவும் [அத்துடன் அமெரிக்க பெருநிலம் மீதும்] ஏறக்குறைய நிச்சயமாக அணுஆயுத பதிலடியைக் கொண்டிருக்கும்."

தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான 1958 சண்டை, 1949 இல் சியாங் கேய்-ஷேக் கீழிருந்த கோமின்டாங்கைப் பதவியிலிருந்து இறக்கி சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்து, அவரைத் தாய்வானுக்குத் தப்பி ஓட செய்த சீன உள்நாட்டுப் போரின் ஒரு தொடர்ச்சியாக இருந்தது.

அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பேரழிவுகரமான அடியாக பார்க்கப்பட்ட சீனப் புரட்சியின் விளைவாக, சீனாவிடத்தில் "இழப்பை" அமெரிக்கா ஒருபோதும் சமாதானமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

அமெரிக்க ஆதரவுடன், அந்த தேசியவாதிகள் தைவானில் ஓர் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவியதுடன், சீன பெருநிலப்பரப்பை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டமிட்டனர் மற்றும் சீனா முழுவதிலும் இறையாண்மையை தொடர்ந்து கோரினர். தைபேயின் பிராந்திய உரிமைகோரல்கள் உள்ளவாறே வாஷிங்டனிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றதுடன், முழுமையாக தைப்பே தனது வீட்டோ அதிகாரத்துடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீனாவின் இடத்தையும் பிடித்தது.

முதல் மற்றும் இரண்டாவது தைவானிய ஜலசந்தி நெருக்கடிகள் முறையே கொரியப் போர் முடிந்து வெறும் ஓராண்டுக்குப் பின்னரும் ஐந்தாண்டுக்குப் பின்னரும் நடந்தன, அந்த போர்கள் சோவியத்துடன் அணிசேர்ந்திருந்த பியொங்யாங் அரசைத் தூக்கியெறிவதற்கான முயற்சியில், அதேவேளையில் பெய்ஜிங்கை அச்சுறுத்துவதற்காக, அமெரிக்காவும் அதன் கைப்பாவை தென் கொரிய அரசும் தொடங்கியவை ஆகும். சீனத் துருப்புகள் வட கொரியாவின் உதவிக்கு வந்ததும், தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர் சீனா மீது அணுகுண்டுகள் வீச வேண்டுமென வாதிட்டார், அவர் கொரியாவிற்கான அமெரிக்க தலைமை தளபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் தான் அது தவிர்க்கப்பட்டது.

அமெரிக்க-ஆதரவு கோமின்டாங் சர்வாதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் தீவுத்திட்டுக்களை மீளப்பெறுவதற்கான முயற்சிகளை சீனா முறித்துக்கொண்டு விட்டதால், இறுதியில், 1958 இல் சீனாவிற்கு எதிரான அமெரிக்க அணுஆயுதப் போர் திட்டங்கள் ஒருபோதும் பரிசோதிக்கப்படவில்லை.

ஆவணங்களில் இருந்ததைக் குறித்து அவர் உணர்ந்ததைப் பற்றி எல்ஸ்பேர்க் பின்வருமாறு கருத்துரைத்தார்.

"‘பொதுவாக கியூபா ஏவுகணை நெருக்கடியே முதலாவது தீவிர அணுஆயுத நெருக்கடியாக விவரிக்கப்படுகிறது; குமோய் (Quemoy) நெருக்கடி நெடுகிலும் வாழ்ந்த நம்மில் பலர் நிச்சயமாக அதைத் தான் தீவிரமான முதல் அணுஆயுத நெருக்கடியாக கருதினார்கள்,’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் ஃபாஸ்டருக்கு அடுத்து வந்த கிறிஸ்டியான் ஹெர்டர் பின்னர் தெரிவித்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டது.”

அந்த ஆவணங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க வெடிப்பார்ந்த தன்மையில் இருந்த போதிலும், அவர் ஏன் அவற்றை பிரசுரித்தார் என்பதற்கு எல்ஸ்பேர்க் விளக்கமளித்திருந்த நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை தவிர, அவை அமெரிக்க செய்தி ஊடகத்தில் தெரிவிக்கப்படவே இல்லை.

எல்ஸ்பேர்க் அந்த 63 ஆண்டுகால ஆவணங்களை ஓர் எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளார். அமெரிக்கா தைவானுடனான உறவுகளை வலுப்படுத்தவும், தைவானிய சுதந்திரத்தை நடைமுறையளவில் அங்கீகரிக்கவும் —இந்த புவிசார் அரசியல் ஏற்பாடு தான் இரண்டாம் தாய்வான் ஜலசந்தி நெருக்கடியை உண்டாக்கியது— நகர்ந்து வருவதால், இதுவும் தவிர்க்கவியலாமல் சீனாவுடனான ஓர் ஆணுஆயுதப் போர் மோதலுக்கு அமெரிக்கா மீண்டுமொரு தயாரிப்பு செய்வதைப் பின்தொடர்ந்தாக வேண்டும்.

தைவானுக்காக அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது மீதான விவாதங்களின் "மேலோட்டமான" மற்றும் "பொறுப்பற்ற" தன்மையைக் குறிப்பிட்ட எல்ஸ்பேர்க், "இதில் பங்கெடுத்திருப்பவர்கள், தற்போதைய அமைச்சரவையில் இருப்பவர்கள் அல்லது இடையில் இருப்பவர்களை விட அதிக முட்டாள்கள் என்றோ அல்லது சிந்தனையற்றவர்கள் என்றோ நான் நினைக்கவில்லை,” என்று எச்சரித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 1958 இல் சீனாவின் கடற்கரையருகில் உள்ள சிறிய தீவுத்திட்டுகள் மீது சாதாரண ஆயுதங்களைக் கொண்டு சீனா நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்க பாதுகாப்புப்படை தலைமை தளபதிகள், ஜனாதிபதி ட்வைட் டி. ஐசன்ஹோவர் உடனடியாக அணுஆயுத பதிலடிக்கு உத்தரவிட வேண்டுமென கோருவதற்கு இட்டுச் சென்ற அதேமாதிரியான கொலைகார மனோநிலை, இப்போதும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது, விசையை அழுத்த காத்திருக்கும் அவர்களின் விரல்கள், அவர்கள் வசமிருக்கும் புதிய "தந்திரோபாய" அணுஆயுதங்களைப் பரிசோதிக்க முன்பினும் அதிகமாக அரிப்பெடுத்துள்ளன.

மார்ச்சில், இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் தலைவரான கடற்படை அட்மிரல் பிலிப் டேவிட்சன் கூறுகையில், தைவான் ஜலசந்தி தொடர்பாக சீனாவுடன் அமெரிக்க மோதலுக்கான கால அட்டவணை "இந்த தசாப்தத்தில், உண்மையில், அடுத்த ஆறு ஆண்டுகளில் வெளிப்படுகிறது" என்றார்.

"போட்டி மோதலாக மாறுமேயானால் போராடவும் வெற்றி பெறவும் முற்றிலும் நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்று டேவிட்சன் கூறினார்.

1978 இல் ஒரே சீனா கொள்கை ஏற்கப்பட்டதற்குப் பின்னர், ஜோ பைடென் பதவியேற்று சில மாதங்களிலேயே, தைவான் உடனான அதன் உறவில் அமெரிக்கா மிக பெரியளவில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

1978 க்குப் பின்னர் தைவான் தூதரைத் தனது பதவியேற்பு விழாவுக்கு விருந்தினராக அழைத்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பைடென் இருந்தார். பின்னர், கடந்த மாதம், வெள்ளை மாளிகை அறிவிக்கையில், தைவான் அரசாங்கத்துடனான உத்தியோகபூர்வ அமெரிக்க அரசாங்கத் தொடர்புகள் மீதான வரம்புகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது, இது ஒரே சீனா கொள்கையின் திறமையான முடிவு என்று விமர்சகர்கள் வாதிட்டனர்.

பெப்ரவரியில், சீனாவை நோக்கிய அமெரிக்க கொள்கையை மறுமதிப்பீடு செய்ய பைடென் பாதுகாப்பு அதிகாரிகளின் ஒரு குழுவைக் கூட்டினார், அது அடுத்த மாதத்திற்குள் அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட உள்ளது. தைவான் உடனான உறவுகளில் "மூலோபாய தெளிவின்மை" என்று அறியப்படும் பல தசாப்தகால அமெரிக்க கொள்கையை —அதாவது ஒரே சீனா கொள்கையை அடியிலிருந்து தாங்கிப்பிடிக்கும் நிலைப்பாட்டை— பைடென் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக கைவிடும் என்பது சர்வசாதாரணமாக பலர் அனுமானிக்கும் ஊகமாக உள்ளது.

1979 இல் சீனாவுடன் இராஜாங்க உறவுகளை ஸ்தாபித்ததில், வாஷிங்டன் நடைமுறையானது தைவானை உள்ளடக்கிய ஒருமித்த சீனாவின் சட்டபூர்வ அரசாங்கமாக பெய்ஜிங்கை ஏற்றுக் கொண்ட அதேவேளையில், சீனாவுடன் போர் ஏற்பட்டால் அது தைவானின் உதவிக்கு வரும் என்றும் அறிவுறுத்தியது. சீனாவுடனான ஒரு மோதலில் தைவானைப் பாதுகாப்பதற்கான ஒரு வெளிப்படையான வாக்குறுதியுடன் "மூலோபாய தெளிவின்மை" பிரதியீடு செய்யப்பட்டால், அது சீனாவிடமிருந்து உத்தியோகபூர்வமாக சுதந்திரத்தை அறிவிக்க மட்டுமே தைவானை ஊக்குவிக்கும்—இந்நகர்வு இராணுவ நடவடிக்கை கொண்டு எதிர்க்கப்படுமென பெய்ஜிங் அறிவித்துள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரே சீனா கொள்கையைக் கீழறுப்பதன் மூலமும், தைவானிய பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமும், வாஷிங்டன் இரண்டு மிகப்பெரிய உலக பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு போருக்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது.

மத்தியதூர அணுஆயுத படைகள் மீதான உடன்படிக்கையிலிருந்து விலகி உள்ள அமெரிக்கா, சீன பெருநிலத்தைத் தாக்கும் ஆற்றல் கொண்ட ஆக்ரோஷ ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்காக தாய்வான் மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுடன் செயலூக்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளது.

அதன் "பசிபிக் தடுப்புமுறை திட்டத்திற்கு" நிதி ஒதுக்க, பென்டகன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அதன் வரவு-செலவுத் திட்ட கணக்கை இரட்டிப்பாக்குமாறு கோரியுள்ளது, அதேநேரத்தில் பைடென் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டக் கணக்கை முன்மொழிந்துள்ளது.

ஆனால் போர்கள், ஆயுதங்கள் மூலமாக மட்டும் நடத்தப்படுவதில்லை. போர் அறிவிப்புக்கு காரணம் வேண்டும் — ஒரு சூறையாடும் போரைப் பொதுமக்களுக்கு விற்பதற்கான ஒரு நியாயப்படுத்தல் தேவையாக உள்ளது. தற்போது அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் கோவிட்-19 சீனாவால் தயாரிக்கப்பட்ட ஓர் உயிரியல் ஆயுதம் என்ற கூற்றை மையமாகக் கொண்ட, போர் அறிவிப்புக்கான ஒரு காரணத்தை மும்முரமாக தயாரித்து வருகின்றன.

"வரவிருக்கும் சீனப் போர்கள்" என்ற தலைப்பிட்ட 2006 புத்தகத்தின் ஆசிரியரும், ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகருமான பீட்டர் நவரோ, கடந்தாண்டு, கூறுகையில், கோவிட்-19 சீன கம்யூனிஸ்ட் கட்சியால் "தோற்றுவிக்கப்பட்ட" ஓர் "ஆயுதமயமாக்கப்பட்ட வைரஸ்" என்று குற்றஞ்சாட்டினார்.

உலக சோசலிச வலைத் தளம் அந்த நேரத்தில் எச்சரித்ததைப் போல,

இத்தகைய குற்றச்சாட்டுகள் ஒரு திட்டவட்டமான தர்க்கத்தைக் கொண்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நோய்தொற்றை ஏற்படுத்த சீன அரசாங்கம் தான் வேண்டுமென்றே கொரோனா வைரஸை அனுமதித்தது மற்றும் ஊக்குவித்தது என்றால், அது செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களையும் விஞ்சி செல்லும் ஓர் உயிரியல் போர் நடவடிக்கையாக இருக்கும். இதன் அர்த்தம், சீனா அமெரிக்காவுக்கு எதிராக ஒரு போர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதாகும்.

கடிவாளமற்ற அசட்டைத்தனத்துடன், மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் மீது அதன் சொந்த குற்றகரமான அலட்சியத்தை நியாயப்படுத்துவதற்காக, ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுடனான இராணுவ மோதலைத் தவிர்க்க முடியாததாக மாற்றக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தி வருகிறது.

அந்நேரத்தில் ஜனநாயகக் கட்சியின் கணிசமான பிரிவுகளும் முக்கிய செய்தி ஊடகங்களும், எந்தவித விஞ்ஞான அடித்தளமும் இல்லாமல், இந்த சதிக் கோட்பாட்டை நிராகரித்தன. ஆனால் கடந்த வாரத்தில், வூஹான் ஆய்வக சதி என்பதை அனைத்து செய்தி ஒளிபரப்பு வலையமைப்புகளும், வெள்ளை மாளிகையும், மற்றும் முன்னர் அதைக் கண்டித்த ஆண்டனி பௌஸியும் கூட பகிரங்கமாக தழுவினர். அந்நோய் இயற்கையாக தோன்றியது என்பதில் "எனக்கு உடன்பாடு இல்லை" என்று பௌஸி திங்கட்கிழமை அறிவித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், அதன் இராணுவக் கொள்கையில் ஒரு மூலோபாய நோக்குநிலை மாற்றத்தை மேற்கொண்டது. "பயங்கரவாதம் அல்ல — வல்லரசு போட்டி தான் இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் பிரதான ஒருமுனைப்பு,” என்று பென்டகன் அறிவித்தது. மத்தியதூர அணுஆயுத சக்திகளின் உடன்படிக்கையிலிருந்து வெளியேறிய ட்ரம்ப் வெள்ளை மாளிகை, சீனாவிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை "பிரிக்க" தொடங்கியது.

பைடென் சீனாவுடனான மோதலை நோக்கிய இந்த கட்டமைப்பை தீவிரப்படுத்தியுள்ளார், வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், "சீனா மட்டுந்தான் பொருளாதார, இராஜாங்க, இராணுவ, தொழில்நுட்ப சக்தியுடன் அமெரிக்காவுக்குச் சவால் விடுக்கக்கூடிய ஒரே சக்தியாகும்,” என்று அறிவித்தார்.

சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர்த் திட்டங்கள், பல தசாப்தகால அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியில் வேரூன்றி உள்ளன. ஆண்டுக்கு ஆண்டு உலகப் பொருளாதார உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், அதன் உலக மேலாதிக்கத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதற்கு அது இராணுவ பலம் மற்றும் மிரட்டலை மட்டுமே ஒரே வழிவகைகளாக காண்கிறது. அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட சீனாவுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது, முதலாளித்துவ பூகோள அரசியல் தர்க்கத்தில் பொதிந்துள்ளது.

ஆனால், இது போர் தவிர்க்க முடியாதது என்று அர்த்தப்படுத்தாது. 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற மனிதபடுகொலைக்கு நான்காண்டுகளுக்குப் பின்னர், 1917 இல், ரஷ்ய தொழிலாள வர்க்கம் ஜாரிச எதேச்சாதிகாரத்தையும் அது பாதுகாத்த முதலாளித்துவ ஒழுங்கையும் தூக்கியெறிந்து முதலாம் உலகப் போரை நிறுத்த தலையீடு செய்தது.

இது தான் மீண்டுமொருமுறை ஒரு புதிய மற்றும் மிகவும் பேரழிவுகரமான உலகப் போருக்கு ஒரே மாற்றீடாகும். போர் தவிர்க்கப்பட வேண்டுமானால், முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுவதற்கான ஒரு போராட்டத்தில் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் அதன் சக்திகளை ஐக்கியப்படுத்தும் நோக்கில், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தலையிட வேண்டும்.

Loading