முன்னோக்கு

அமெரிக்க நினைவு தினத்தில்: ஒவ்வொரு நாளும் 500 பேர் இறந்து கொண்டிருக்கையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் பெருந்தொற்று "முடிந்து விட்டதாக" அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க நினைவு தினம் அமெரிக்க போர்களில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வதற்காக என்று கூறப்படுகிறது—இந்த போர்கள் அனைத்தும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அமெரிக்க முதலாளித்துவ உயரடுக்கினால் தூண்டிவிடப்பட்ட ஏகாதிபத்திய போர்களாகும்.

அந்தப் போர்களில் இறந்தவர்கள் பொதுவாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து எடுக்கப்பட்டவர்கள், அதேவேளையில் அதன் ஆதாயங்களை முற்றிலும் ஆளும் வர்க்கம் சுருட்டிக் கொண்டன என்பதால், தேசப்பற்று பேச்சுக்கள் எப்போதும் போல பாசாங்குத்தனத்தால் நிரம்பி உள்ளன. இந்த நடைமுறையின் நோக்கம், ஜனாதிபதி பைடென் சுட்டிக்காட்டியதைப் போல, அடுத்த போர்களுக்குச் சித்தாந்தரீதியாக தயாரிப்பு செய்வதாகும். அவர் இராணுவத்தில் உயிரிழந்தவர்களுக்கான சுய-பச்சாதாப இரங்கல்களோடு சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் சேர்த்துக் கொண்டார்.

Peg Walter prays during the Queens COVID Remembrance Day event that she and her son helped organize, Saturday, May 1, 2021, to memorialize lives lost to the coronavirus in the Queens borough of New York. Walter's husband, John Walter, died from the virus May 10, 2020. (AP Photo/Jessie Wardarski)

ஆனால் 2021 இன் நினைவு தினம் சமஅளவில் மற்றொரு வஞ்சக நோக்கத்தையும் கொண்டிருந்தது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மக்கள் மறக்க செய்வதற்காக, பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளை அனுமதித்து, அது கோவிட்-19 குறித்த பாரிய மறதிநோயை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகவும் இருந்தது—இந்நோயால் 600,000 அல்லது அதற்கு அதிகமானவர்கள் இறந்திருக்கிறார்கள், ஒவ்வொரு நாளும் 500 பேர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள், மாதத்திற்கு 100,000 புதிய நோயாளிகள் உருவாகி கொண்டிருக்கிறார்கள். அந்த கொண்டாட்டங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளே கூட, இன்னும் கூடுதலாக நூறாயிரக்கணக்கானவர்கள் இல்லையென்றாலும் பத்தாயிரக் கணக்கானவர்களுக்கு நோய்தொற்றை ஏற்படுத்தும் நோய்-பரப்பு பெருநிகழ்வுகளாக உருவாகி, இந்த பெருந்தொற்றை இன்னும் மோசமாக்கக்கூடும்.

"அமெரிக்கா மீண்டும் கர்ஜிக்கிறது," என்று NBC ஞாயிற்றுக்கிழமை அதன் இரவு செய்திகளின் ஆரம்ப பகுதியில் அறிவித்தது. "இந்த நினைவு தினம், பரிச்சயமான நல்லுணர்வையும் வழமையின் சாரலையும் வழங்குகிறது,” என்று குறிப்பிட்ட அந்த ஒளிபரப்பு தொடர்ந்து அறிவிக்கையில், “இது நாட்டுக்குத் தேவையான வாரயிறுதி விடுமுறை, மேலும் ஒவ்வொன்றுக்கும் முடிவு உள்ளது என்பதை இது நினைவூட்டுகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டது. இதேபோன்ற மடத்தனமான பிரச்சாரத்தை ஒவ்வொரு வலையமைப்பிலும் ஒவ்வொரு பிரதான செய்தித்தாளிலும் காண முடிந்தது.

பெருநிறுவன மற்றும் அரசாங்க அதிகாரிகளும் அதே பல்லவியைப் பாடினார்கள். அரசு-விதித்திருந்த கோவிட்-19 கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை இரத்து செய்த மாசசூசெட்ஸின் குடியரசுக் கட்சி ஆளுநர் சார்லி பேக்கர், இதை இரத்தினச் சுருக்கமாக தெரிவித்தார்: “மிகவும் வித்தியாசமாக எதுவும் நடக்கவில்லை என்றால், அது பெரிதும் முடிந்துவிட்டது என்றே நான் கூறுவேன்,” என்றார். மாசசூசெட்ஸில் சுமார் 707,000 பேர், அதாவது பத்தில் ஒருவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், 18,000 பேர் இறந்துள்ளனர். முகக்கவசங்கள் அல்லது சமூக இடைவெளி இல்லாமல், அம்மாநில மக்களில் கிட்டத்தட்ட இன்னும் பாதி பேருக்குத் தடுப்பூசி போடப்படாத நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க நேரிடலாம்.

Frontier ஏர்லைன்ஸ் தலைமை செயலதிகாரி பேரி பிஃப்லே, "இப்போது தான் பயண அதிகரிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நினைவு தினம் மிகப்பெரியளவில் துணை செய்யப் போகிறது; ஜூலை நான்காம் நாள் தாறுமாறாக இருக்கப் போகிறது,” என்று ஆர்ப்பரித்தார். இந்த வாரயிறுதியில் ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் விமான நிலையங்களில் நுழையும் போது, கூட்ட நெரிசல் காரணமாக விமானப் பயணத்தில் சமூக இடைவெளி கடைபிடிப்பது சாத்தியமாகாது, இந்தாண்டு பெரும்பாலும் இதுபோன்று தான் இருக்கப் போகிறது. விமான நிலையங்கள் அவற்றின் கொள்ளளவில் 90 சதவீதம் நிரம்பி விடுகின்றன, எஞ்சியுள்ள ஒரு சில அவசியமான கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளை விமானப் பணியாளர்கள் அமலாக்க முயல்கையில் அவர்களைப் பயணிகள் அச்சுறுத்துவதால், அவர்கள் நடைமுறை கொடுமையை அனுபவித்து வருகிறார்கள்.

மில்லியன் கணக்கானவர்கள் விடுமுறையைக் கொண்டாடுவது குறித்தும், விமானத்தில் பறப்பது, அல்லது விடுமுறைகால உல்லாச இடங்களுக்குப் பயணிப்பது குறித்தும் ஊடகங்கள் உற்சாகமாக புள்ளிவிபரங்களை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றன. கடற்கரைகள் மீண்டும் நிரம்பியுள்ளன, திரைப்பட அரங்குகள் மீண்டும் திறக்கப்படுகின்றன, மேதாவிகள் "திரைப்பட வசூல் வார இறுதியில் சாதனை படைக்கும்" என்று கணிக்கின்றனர். உணவகங்களில் உள்ளமர்ந்து சாப்பிடுவது கொள்ளளவுக்கு அருகிலோ அல்லது முழுமையாகவோ இருப்பது பொதுவான விஷயமாகி வருகிறது. மதுக்கூடங்களும் இரவு உல்லாச விடுதிகளும் மீண்டும் முழு வீச்சில் உள்ளன. விளையாட்டு அரங்குகளின் இருக்கைகள் மற்றும் இடங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன.

இந்த பெருந்தோற்று காலத்தில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான Indy 500 கார் பந்தயத்திற்காக, இண்டியானாபோலிஸ் மோட்டார் ஸ்பீட்வேயில் 135,000 இக்கும் அதிகமான ரசிகர்கள் குவிந்தனர், முகக்கவசம் அவசியம் என்பது அங்காங்கே மட்டுமே கண்காணிக்கப்பட்டது. முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் அவசியமில்லை என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அதன் உத்தியோகப்பூர்வ ஒப்புதல் முத்திரையை வழங்கி உள்ள நிலையில், “கௌரவ" நடைமுறையைக் கடைபிடிப்பதென்பது, யார் தடுப்பூசி போட்டிருக்கிறார் யார் தடுப்பூசி போடவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

முகக்கவசத்தின் அவசியம் மற்றும் சமூக இடைவெளி மீதான கட்டுப்பாடுகளை CDC மே 13 இல் நீக்கியதை முன்னணி அமெரிக்க மற்றும் சர்வதேச தொற்றுநோய் நிபுணர்கள் பலமாக கண்டித்ததுடன், அவர்கள் இந்த கொள்கைகள் முன்நிறுத்தும் அபாயங்களைக் குறித்து எச்சரித்தார்கள். “இது மிகப்பெரும் குழப்பம்,” என்று கோவிட் நடவடிக்கை குழுவின் டாக்டர் Eric Feigl-Ding தெரிவித்தார். “கௌரவ நடைமுறையைச் செயல்படுத்துவது கொடூரமானது. அது இயல்பாகவே பிரச்சனைக்குரியது!” என்றார்.

EndCoronavirus.org டாக்டர் யானீர் பார்-யாம் கூறினார், "இது படுமோசம். எங்கள் வலையமைப்பும் இன்னும் பலரும் கோபமாக உள்ளோம்,” என்றார். கொலராடோ பல்கலைக்கழகத்தின் காற்றுவழி ஆய்வுத்துறை இயற்பியலாளர் டாக்டர் Jose-Luis Jimenez கூறுகையில், “மிகவும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்பதோடு இந்திய வைரஸ்கள் போன்றவை அமெரிக்காவில் ஊடுருவத் தொடங்கி உள்ள நிலையில், முகக்கவசத்தின் அவசியத்தை CDC மிகவும் முன்கூட்டியே நீக்கிவிட்டது,” என்றார்.

நினைவு தினம் என்பது போர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் உத்தியோகபூர்வவான தினமாகும். ஆனால் 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளின் அனைத்து அமெரிக்க போர்களில் இறந்தவர்களை விட கடந்தாண்டு அதிக அமெரிக்கர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். இப்போது உத்தியோகபூர்வ அமெரிக்க இறப்பு எண்ணிக்கை 610,000 ஆக உள்ளது என்றாலும், உண்மையான எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு நெருக்கமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 500 இறப்புகள் என்ற தற்போதைய வேகத்தில் பார்த்தாலும், 2021 இல் இன்னும் 112,000 இறப்புக்கள் ஏற்படக்கூடும். பொது சுகாதார முன்னெச்சரிக்கைகள் கைவிடப்படுவதால், இது நோய்தொற்றும் இறப்புகளும் இன்னும் கூடுதலாக அதிகரிக்கும் என்ற அனுமானத்தைக் கொடுக்கிறது.—தற்போது இங்கிலாந்தில் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் தடுப்பூசி இடப்பட்டதைப் பைடென் பொது மருத்துவ அற்புதமாக சித்தரித்துள்ள அதேவேளையில், பாரியளவிலான இறப்பு எண்ணிக்கைக்கு அவர் சூசகமாக அவருக்கு முன்பிருந்தவர் மீது பழி போடுகிறார். இந்தாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக இலையுதிர் கால அல்லது குளிர்கால அதிகரிப்பு இருந்தால், கோவிட்-19 டொனால்ட் ட்ரம்பின் கீழ் எத்தனை அமெரிக்கர்களைக் கொன்றதோ அதை விட இவர் நிர்வாகத்தின் கீழ் அதிக அமெரிக்கர்களைக் கொல்லும் சாத்தியக்கூறு இருப்பதை அவர் எப்போதும் ஒப்புக் கொள்வதில்லை.

முக்கியமாக தடுப்பூசி தேசியவாத கொள்கையைப் பின்பற்றும் உயர் வருவாய் நாடுகளில் நடக்கும் பதுக்கல் காரணமாக, உலகெங்கிலுமான மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ள பிராந்தியங்களில், உலகளவில் ஒவ்வொரு நாளும் 10,000 இக்கும் அதிகமானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உத்தியோகபூர்வ உலகளாவிய மதிப்பீடு 3.5 மில்லியன் பேர் உயிரிழந்திருப்பதாக கூறினாலும், புதிய ஆய்வுகளோ அதிகப்படியான கூடுதல் இறப்பு எண்ணிக்கையைப் பத்து மில்லியனுக்கும் அதிகமாக காட்டுகின்றன.

மிச்சிகன் டெட்ரோயிட்டில் இந்த பெருந்தொற்றுக்கு இறந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் முன்களத் தொழிலாளர்களுக்குச் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு சுவரோவியம், தொழிலாள வர்க்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையின் உண்மையான அளவு மற்றும் முக்கியத்துவம் மீதான உத்தியோகபூர்வ மெளனத்தை முறிப்பதாக உள்ளது.

தீயணைப்பு வீரர் கேப்டன் பிராங்க்ளின் வில்லியம்ஸ் கோவிட்-19 ஆல் உயிரிழந்த முதல் டெட்ராய்ட் தீயணைப்பு வீரராக கௌரவிக்கப்பட்டார். டெட்ராய்ட் தீயணைப்புத்துறை ஆணையர் எரிக் ஜோன்ஸ் ஞாயிறன்று அதை திறந்து வைக்கும் போது கூறினார், "இந்த சுவரோவியம் கண்ணுக்கு தெரியாத ஓர் எதிரியை எதிர்த்துப் போராடுவதற்காக, முன்வரிசையில் நின்ற ஒரு மனிதரை நமக்கு என்றென்றைக்கும் நினைவூட்டும்... அவர்களில் சிலர் நோய்வாய்ப்பட்டனர், அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், பிராங்க்ளின் மகத்தான தியாகம் செய்தார்."

More than 3,600 health care workers perished in the first year of the COVID pandemic in the United States. Amnesty International (AI) placed the global estimate of health care workers who died from COVID-19 last year at over 17,000. Steve Cockburn, the head of economic and social justice at AI, stated, “This is certainly a significant underestimate because there is a degree of under-reporting on a lot of countries.”

அமெரிக்காவில் கோவிட் பெருந்தொற்றின் முதலாண்டில் 3,600 க்கும் அதிகமான மருத்துவக் கவனிப்பு பணியாளர்கள் உயிரிழந்தனர். சர்வதேச பொது மன்னிப்புச் சபை (Amnesty International - AI) உலகளவில் கடந்தாண்டு கோவிட்-19 ஆல் 17,000 க்கும் அதிகமாக மருத்துவத்துறை பணியாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிட்டது. பொது மன்னிப்புச் சபையின் பொருளாதார மற்றும் சமூக நீதித்துறை தலைவர் ஸ்டீவ் காக்பர்ன் கூறுகையில், “பல நாடுகள் பல்வேறு விதத்தில் இதை குறைத்துக் காட்டியிருப்பதால், நிச்சயமாக இது குறிப்பிடத்தக்களவில் குறைமதிப்பீடாகும்,” என்றார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் Tedros Adhanom Ghebreyesus, கடந்த வாரம் அவரின் 74 வது உலக சுகாதார பேரவை தொடக்க உரையின் போது, "நம் காலத்தின் மிகக் கடுமையான மருத்துவத்துறை நெருக்கடிக்கு ஆளாகி ஏறக்குறைய இந்த 18 மாதங்களாக, உலகம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. இன்றைய நிலையில், 2020 ஆம் ஆண்டு முழுவதையும் விட இந்தாண்டு இதுவரையில் அதிக நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய போக்குகளில்படி பார்த்தாலும், இறப்புக்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று வாரங்களுக்குள் கடந்தாண்டின் மொத்த எண்ணிக்கையை விஞ்சிவிடும்... உலகளவில் நாம் படுமோசமான ஒரு சூழ்நிலையில் வாழ்கிறோம்," என்றார்.

அமெரிக்காவில் ஒரு போலியான "வழமைக்குத் திரும்புதல்" என்ற உத்தியோகபூர்வ கொண்டாட்டங்கள், அனைத்திற்கும் மேலாக குறுகிய மனோபாவத்தின் மிகச் சுருங்கிய வடிவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது: அதாவது, ஒரு சில நாட்களில் ஒரு கண்டத்திலிருந்து ஒரு கண்டத்திற்கு புதிய வைரஸ் வகைகள் பரவுகின்ற நிலையில், ஓர் உலகளாவிய பெருந்தொற்று தேசியவாத முப்பட்டகத்தின் வழியாக பார்க்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், உலகெங்கிலும் பில்லியன் கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதில் இருந்தும், உயிரிழப்பதில் இருந்தும் மற்றும் உருமாறிய வடிவத்திலிருந்தும் தடுக்கப்பட்டு விட்டார்கள் என்று வரும் வரையில் எந்தவொரு நாட்டிலும் வழமைக்குத் திரும்ப முடியாது.

இந்தப் பிரச்சாரத்தின் உண்மையான நோக்கம் என்னவென்றால், குழந்தைகளைப் பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு மீண்டும் அனுப்புவதற்கும், தொழிலாளர்களைப் பாதுகாப்பற்ற வேலையிடங்களுக்கு மீண்டும் அனுப்புவதற்கும் மக்களிடையே நிலவும் எதிர்ப்பைச் சமாளிப்பதாகும், ஏனென்றால் இதன் மூலமாகவே முதலாளித்துவ ஆளும் வர்க்கம் உழைப்பைச் சுரண்டுவதிலிருந்து சாத்தியமானளவுக்கு மிகப்பெரிய இலாபங்களை அறுவடை செய்ய முடியும். அதற்கு இது உழைக்கும் மக்களின் ஆரோக்கியம் பற்றிய விஷயமாக அல்ல, மாறாக பெரும் செல்வந்தர்களின் நிதிய ஆரோக்கியம் பற்றிய விஷயமாக உள்ளது.

அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்காவிற்குள்ளும் சரி உலகளவிலும் சரி இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைக் கோர வேண்டும். அவர்களும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளும், நிதியியல் தன்னலக்குழுக்களுக்காக பேசும் அவர்களது அரசாங்கங்கள் தொழிலாளர்களின் உயிர்களை விட இலாப திரட்சியின் தேவையை முன்னிறுத்தும் போது ஒரே மாதிரியான அச்சுறுத்தலையே முகங்கொடுக்கிறார்கள்.

Loading