ஸ்ராலினின் பெரும் பயங்கரதத்தின்போது பாரிய சுட்டுக்கொலைகள் நடாத்தப்பட்ட பகுதியில் அகழ்வாராய்ச்சி முடிந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 20 அன்று, மாஸ்கோவில் உள்ள குலாக் வரலாற்று அருங்காட்சியகம் ரஷ்யாவின் தலைநகருக்கு வெளியே ஸ்ராலினிச பெரும் பயங்கரத்தின்போது இழிபெயர்பெற்ற பாரிய மரணதண்டனை தளமான “கொம்முனர்கா” (Kommunarka) இல் ஒரு தகவல் மையத்தை திறந்து வைத்துள்ளது. பார்வையாளர்கள் ஆராய்ச்சி பயணங்களுக்குச் சென்று தளத்தின் வரலாறு மற்றும் கல்லறைகளை தோண்டுவதற்கான முயற்சிகள் பற்றிய கண்ணோட்டத்தைப் பெறலாம்.

"கொம்முனர்கா" நுழைவுவாயில்

1937 மற்றும் 1941 க்கு இடையில் கொல்லப்பட்ட 6,609 பேரின் எச்சங்களை கண்டுபிடித்து கண்டுபிடிக்கும் பணியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் மற்றும் வரலாற்றாசிரியர்களும் சமீபத்தில் முடித்தனர். அவர்களில் பெரும்பாலோர் 1936-1938 ஆம் ஆண்டு பெரும் பயங்கரத்தால் (Great Terror) பாதிக்கப்பட்டவர்களாவர். அந்த சமயத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1917 அக்டோபர் புரட்சியை நடத்திய கிட்டத்தட்ட அனைத்து போல்ஷிவிக் கட்சியின் காரியாளர்களையும் கொலை செய்தது. போல்ஷிவிக்கின் தலைமையில் 1919 இல் நிறுவப்பட்ட மூன்றாம் கம்யூனிச அகிலத்தின் (கொமின்டேர்ன்) கணிசமான பிரிவுகளின் தலைமையும் கூட கொல்லப்பட்டனர்.

இந்த குற்றங்களைச் செய்த அதிகாரத்துவம், நாட்டின் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஒப்பீட்டளவில் பொருளாதார பின்தங்கிய நிலைமைகளின் கீழ் உருவாகிய தொழிலாளர் அரசுக்குள் ஒரு சலுகை பெற்ற சாதியாகும். ஜோசப் ஸ்ராலின் தலைமையில், இந்த ஒட்டுண்ணி உயரடுக்கு அக்டோபர் 1917 புரட்சியின் சர்வதேச மற்றும் சமத்துவ முன்னோக்கு மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அபிலாஷைகளுடன் மேலும் நேரடி மோதலுக்கு வந்தது. "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஸ்ராலினைச் சுற்றியுள்ள கட்சியின் ஒரு பிரிவு தொழிலாளர் புரட்சியை எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியிலும் சீனாவிலும் ஒன்றன்பின் ஒன்றாக காட்டிக்கொடுத்தது.

உலகப் புரட்சியை ஸ்ராலினிச தேசியவாதம் காட்டிக் கொடுத்ததை லெனினுடன் புரட்சியை வழிநடத்திய லியோன் ட்ரொட்ஸ்கி எதிர்த்தார். 1923 இல் அவர் இடது எதிர்ப்பை உருவாக்கினார். ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் பேரழிவுகரமான தோல்வி மற்றும் ஸ்ராலினிசமயப்பட்ட கம்யூனிச அகிலத்தின் பேரழிவுகரமான கொள்கைகளின் நேரடி விளைவாக 1933 இல் நாஜிகள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை நிறுவினார்.

1936-1938 வரையிலான மூன்று மாஸ்கோ வழக்குகளில், புரட்சியின் முக்கிய தலைவர்கள் இட்டுக்கட்டப்பட்ட கொடூரமான போலி வழக்குகளில் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அதில் அவர்கள் கடுமையான சித்திரவதைக்குப் பின்னர், அவர்கள் மீது சுமத்தப்பட்ட “எதிர் புரட்சிகர” நடவடிக்கைகள் என்று கூறப்பட்டவை குறித்து தவறான பொது ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.

“கொம்முனர்காவின்” வரலாறு

"கொம்முனர்கா" கொலைக்களம் இந்த வழக்குகளில் மிகவும் பிரபலமான சிலருக்கு கல்லறையாக மாறியது. இது குறைந்தது 700,000 மக்களின் உயிரைக் கொன்ற பயங்கரத்தின் அளவைப் பற்றிய ஒரு பார்வையை தருகிறது.

இங்கு சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் பின்வருவோரும் அடங்குவர்:

நிக்கோலாய் புக்காரின் (1888-1938) மற்றும் அலெக்ஸி ரைகோவ் (1881-1938), இருவரும் 1917 க்கு முன்னர் போல்ஷிவிக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1928-29 வரை ஸ்ராலின் பிரிவுக்கு சார்பாக குறுகிய காலம் இருந்த “வலது எதிர்ப்பின்” (Right opposition) ஒரு பகுதியாக இருந்தனர். 1938 ஆம் ஆண்டு மூன்றாம் மாஸ்கோ விசாரணையின் பிரதிவாதிகளாக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

• லெவ் லெவின் (1870-1938). கிரெம்ளின் மருத்துவரும், விளாடிமிர் லெனின், பிலிக்ஸ் டிஜெர்ஜின்ஸ்கி மற்றும் எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி உள்ளிட்ட முக்கிய சோவியத் அரசியல் மற்றும் கலாச்சார பிரமுகர்களுக்கு சிகிச்சையளித்தவர். அவரும் மூன்றாவது மாஸ்கோ விசாரணையில் பிரதிவாதியாக இருந்தார்.

• நிகோலாய் க்ரெஸ்டின்ஸ்கி (1883-1938). 1917 இல் போல்ஷிவிக் மத்திய குழுவின் உறுப்பினரும், புரட்சிக்குப் பின்னர் கட்சியின் முதல் குழுவின் மத்திய செயலாளர்களில் ஒருவருமாவார். க்ரெஸ்டின்ஸ்கி 1923 முதல் 1928 வரை இடது எதிர்ப்பாளர்களின் ஆதரவாளராக இருந்தார். மூன்றாம் மாஸ்கோ விசாரணையில் இவரும் ஒரு பிரதிவாதியாக இருந்தார்.

நிகோலாய் க்ரெஸ்டின்ஸ்கி (வலதுபுறம்) 1925 இல் பேர்லினில் ஜோர்ஜி சிச்செரினுடன்

• விளாடிமிர் அன்டோனோவ்-ஓவ்சென்கோ (1883-1938), அக்டோபர் 1917 இல் குளிர்கால அரண்மனை தாக்குதலுக்கு தலைமை வகுத்தவர். இவர் நாற்பத்தி ஆறு பிரகடனம் என்றழைக்கப்பட்ட இடது எதிர்ப்பாளர்களின் ஸ்தாபக ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவராவார். 1927 டிசம்பரில் போல்ஷிவிக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் ஸ்ராலினிசத்திற்கு அடிபணிந்தார். பின்னர் அவர் 1936-37இல் ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் ஸ்ராலினிச கொள்கைகளை நிறைவேற்றுபவராக இழிவான பாத்திரத்தை வகித்தார். மாஸ்கோவிற்கு திரும்ப அழைக்கப்பட்டு 1938 பிப்ரவரி 10 அன்று கொல்லப்பட்டார்.

• வலேரியன் ஒசின்ஸ்கி-ஓபோலென்ஸ்கி (1887-1938). 1907 முதல் போல்ஷிவிக் மற்றும் 1917 அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் சோவியத் ஒன்றியத்தின் தேசிய பொருளாதாரத்தின் உயர் ஆணைக்குழுவான VSNKh இன் முதல் தலைவரான ஒரு பயிற்சி பெற்ற பொருளாதார நிபுணர். ஒரு "ஜனநாயக மத்தியவாதியான", இவர் 1923-24 இல் இடது எதிர்ப்பாளர்களை ஆதரித்தார். ஆனால் விரைவில் அதிலிருந்து முறித்துக் கொண்டு பல்வேறு பொருளாதார அரசு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகித்தார். அவர் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு விஞ்ஞான கல்லூரியில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வரலாற்றின் ஆராய்ச்சித்துறையில் இயக்குநராக பணியாற்றினார்.

வலேரியன் ஒசின்ஸ்கி-ஓபோலென்ஸ்கி

• போரிஸ் மால்கின் (1891-1938). 1918 இல் போல்ஷிவிக்குகளில் சேர்ந்த இடது சோசலிச புரட்சியாளர்கள் அமைப்பின் முன்னாள் தலைவர். லெனினின் உரைகளின் முதல் ஒலிப்பதிவுகளை தயாரிப்பதில் அவர் ஈடுபட்டார். பின்னர் சோவியத் கலாச்சார வாழ்க்கையில் ஒரு முக்கிய நபராக ஆனார். அவர் கவிஞர் சேர்ஜி எசெனினுடன் இணைந்து பணியாற்றியதுடன், கவிஞர் விளாடிமிர் மாயகோவ்ஸ்கியுடன் நட்பு கொண்டிருந்தார். பல்வேறு பத்திரிகைகளின் வெளியீட்டை மேற்பார்வை செய்துள்ளதுடன், 1920களில் Vsevolod Meyerhold அரங்கை இயக்க உதவினார்.

• துரார் ரிஸ்குலோவ் (1894-1937) மற்றும் கைக்சிஸ் சர்தரோவிச் அட்டபாயேவ் (1887-1938) ஆகிய இருவரும் துர்க்மெனிஸ்தானில் முன்னணி கம்யூனிஸ்டுகளாவர்.

• ஹ்ரிஹோரி ஹ்ரிங்கோ (1890-1938). முன்னர் சோசலிச புரட்சிகர போரோடிபிஸ்ட் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த உக்ரேனை சேர்ந்த ஒரு கம்யூனிஸ்ட். அவர் 1930 முதல் 1937 வரை சோவியத் ஒன்றியத்தின் நிதி அமைச்சராக இருந்தார்.

• பாவெல் ஸ்வெட்கோவ் (1906-1938). பல்கேரியாவில் உள்ள மூன்றாம் அகிலத்தின் இளைஞர் இயக்கமான கொம்சோமோலை வழிநடத்த உதவிய பல்கேரிய கம்யூனிஸ்ட். பின்னர் சோவியத் ஒன்றியத்திற்கு குடிபெயர்ந்து அங்கு அவர் மாஸ்கோவில் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.

போரிஸ் மால்கின்

பலியானவர்களில் சீன மற்றும் கொரிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள், மாஸ்கோ பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் இலக்கிய பிரமுகர்கள் உள்ளனர். "கொம்முனர்கா" செம்படைக்கு எதிரான களையெடுப்பின் போது கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு பெரிய புதைகுழியாக மாறியது. இதில் கொல்லப்பட்டவர்களில் டஜன் கணக்கான உயர் தளபதிகள் அடங்குவர். அவர்களில் பலர் உள்நாட்டுப் போரின்போது ட்ரொட்ஸ்கியால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள். சில ஆண்டுகளுக்குப் பின்னர், 1941 இல், நாஜிக்கள் சோவியத் யூனியனை ஆக்கிரமித்து, குறைந்தது 27 மில்லியன் சோவியத் குடிமக்களின் உயிரைக் கொன்ற ஒரு போரைத் தொடங்கியபோது, செம்படையின் தலைமை துண்டிக்கப்பட்டமை பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியது.

"கொம்முனர்கா" சுட்டுக்கொலைகள் நடாத்தப்பட்ட தளம் NKVD (சோவியத் இரகசிய சேவை) இன் நீண்டகால தலைவராக இருந்த ஜென்ரிக் யாகோடாவின் ஆடம்பர இல்லம் அமைந்துள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1938 ஆம் ஆண்டில் அவரும் அவரது துணை அதிகாரிகளும் களையெடுப்பிற்கு உட்படுத்தப்பட முன்னர் அவர் பெரும் பயங்கரத்தில் ஒரு மோசமான மற்றும் முன்னணிப் பாத்திரத்தை வகித்தார். அவரும் “கொம்முனர்காவில்” அடக்கம் செய்யப்பட்டார். ஸ்ராலினிச அதிகாரத்துவம் இறுதியாக சோவியத் ஒன்றியத்தை கலைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, 1991 வீழ்ச்சி வரை இந்த தளம் முற்றிலும் இரகசியமாக இருந்தது.

பல தசாப்தங்களாக, பெரும் பயங்கரத்தின் ஏனைய பல பாரிய மரணதண்டனை தளங்கள் இருந்ததால், அதன் சரியான இடம் தெரிந்திருக்கவில்லை. “சோவியத் எதிர்ப்பு கூறுகள்” தொடர்பான பெரும் பயங்கரத்தின் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையை ஆரம்பித்துவைத்த NKVD இவற்றின் “நேரம் மற்றும் இருப்பிடம் குறித்த முழுமையான இரகசியத்தை பேணுகையில்” மரணதண்டனைகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த மற்றும் பிற பாரிய சுட்டுக்கொலைகள் நடாத்தப்பட்ட தளங்களின் இருப்பிடம் ஒரு "அரச இரகசியமாக" இருந்ததுடன், மேலும் அவை பற்றிய ஆவண சான்றுகள் திட்டமிட்டமுறையில் அழிக்கப்பட்டன.

தன்னார்வலர்களும் வரலாற்றாசிரியர்களும் 2012 இலிருந்து அருகில் உள்ள இடங்களில் இவற்றை கண்டுபிடிக்கும் களப்பணிகளை மேற்கொண்டாலும், புதைக்கப்பட்ட இடங்களின் சரியான இடம் பல ஆண்டுகளாக தெரியவில்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களை உள்ளடக்கிய தொழில்முறையான ஆராய்ச்சி, குலாக் வரலாற்று அருங்காட்சியகத்தின் முயற்சியால் 2018 இல் மட்டுமே தொடங்கியது. அமெரிக்க தேசிய காப்பகத்தில் ஆகஸ்ட் 26, 1942 அன்று ஜேர்மன் விமானப் படையினர் எடுத்த வான்வழி உளவு புகைப்படங்களை வரலாற்றாசிரியர்கள் கண்டுபிடித்தபோது பாரிய புதைகுழிகளை அடையாளம் காண முடிந்தது.

அக்டோபர் புரட்சியின் வரலாற்றை பொய்மைப்படுத்துவதற்கும், ஸ்ராலினிசத்தை பெருமைப்படுத்துவதற்கும், புரட்சியின் தலைவர்களுக்கு எதிராக எல்லாவற்றிற்கும் மேலாக, லியோன் ட்ரொட்ஸ்கி மீதான மிக மோசமான யூத எதிர்ப்பு அவதூறுகளில் ஈடுபடுவதற்கும் ரஷ்ய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் அரசியல் மற்றும் கலாச்சார சூழலில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. களையெடுப்புகளில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான காப்பக ஆவணங்களையும் அரசாங்கம் இரகசியமாக அழித்துள்ளது.

கரேலியாவின் சாண்டர்மோக்கில் பகுதியில் ஒரு சுட்டுக்கொலைகள் நடாத்தப்பட்ட தளத்தை கண்டுபிடித்த யூரி டிமிட்ரிவ் மீதான வழக்கு இப்போது அதன் மூன்றாவது கட்ட விசாரணையில் உள்ள நிலையில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயதான டிமிட்ரிவ் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் குறித்த உண்மையை வெளிக்கொணர முற்படும் அனைவரையும் அச்சுறுத்துவதே அவருக்கு எதிரான அரசு பழிதீர்ப்பின் நோக்கமாகும்.

டிமிட்ரியை போலவே, குலாக் அருங்காட்சியகத்தின் அரசியல் நோக்குநிலையும் கம்யூனிச எதிர்ப்பாகும். நிறுவனத்தின் நிரந்தர கண்காட்சி இடது எதிர்ப்பாளர்களைப் பற்றி ஏறக்குறைய ஒன்றையும் குறிப்பிடாததுடன் மற்றும் சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த அனைத்து எதிர்ப்பின் மீதான ஸ்ராலினிச அடக்குமுறையின் அரசியல் தன்மையை மறைக்க முனைகிறது. மாறாக, இந்த பயங்கரவாதத்தை அக்டோபர் புரட்சியின் இயல்பான விளைவு என்று சித்தரிக்கிறது. கொம்முனர்காவில் உள்ள புதிய தகவல் மையத்தின் இணைய தளத்தில், கொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அக்டோபர் புரட்சி மற்றும் இடது எதிர்ப்பாளர்கள் தரப்பில் அவர்கள் பங்கேற்பதை (அல்லது பங்கேற்காததை) புறக்கணிக்கும் மிக சுருக்கமான சுயசரிதைடன் உள்ளன.

பெரும் பயங்கரத்தின் தோற்றம்

இத்தகைய அணுகுமுறை பெரும் பயங்கரத்தின் உண்மையான வரலாற்று தோற்றங்களையும் முக்கியத்துவத்தையும் மறைக்கிறது. அக்டோபர் புரட்சியின் தொடர்ச்சியைக் குறிப்பதற்கு பதிலாக, இந்த பயங்கரம் அதற்கு எதிரான ஸ்ராலினிச மற்றும் தேசியவாத எதிர்வினையின் உச்சமாக இருந்தது. களையெடுப்புக்கள் பல்லாயிரக்கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு அப்பால் சென்றிருந்தாலும், அது அடிப்படையில், சோவியத் வரலாற்றாசிரியர் வாடிம் ரொகோவினின் வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு “அரசியல் இனப்படுகொலை” ஆகும். மாஸ்கோ விசாரணைகளில் தலைமை பிரதிவாதி லியோன் ட்ரொட்ஸ்கி ஆவார். அவரைப்போல எவரும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான சோசலிச எதிர்ப்பையும் உலக சோசலிச புரட்சியின் முன்னோக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. "எதிர் புரட்சிகர ட்ரொட்ஸ்கிச நடவடிக்கை" என்ற குற்றச்சாட்டு கொலைகார களையெடுப்பின் மையத்தில் இருந்தது.

1937 ஆம் ஆண்டில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரையும் அவரது மகன் லியோன் செடோவையும் விடுவித்த டேவி ஆணைக்குழுவிற்கு அவர் அளித்த இறுதி உரையில், வழக்கு விசாரணைகள் போலியாக கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதைக் கண்டறிந்த ட்ரொட்ஸ்கி அக்டோபர் புரட்சியின் தலைவர்கள் தங்களை "நாசகாரர்கள்" மற்றும் "எதிர் புரட்சியாளர்கள்" என்று கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கொடூரமான பயங்கரத்திற்கும் போலியாக கட்டமைக்கப்பட்டதற்குமான அடிப்படைக் காரணங்களை விளக்கினார்:

அதிகாரத்துவம் தம்மை சோசலிஸ்டுகள் என்று அழைக்கும் ஒரு சமூகத்தில் ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் நிலைப்பாடு, முரண்பாடானது மட்டுமல்ல, தவறானதுமாகும். அக்டோபர் கிளர்ச்சியிலிருந்து அனைத்து சமூக பொய்களையும் வெளிப்படுத்திய தற்போதைய சூழ்நிலைக்கு இன்னும் விரைவாகச் செல்லலாம். இதில் தனது சமூக ஒட்டுண்ணித்தனத்தை ஒரு சாதி மறைக்க நிர்பந்திக்கப்படுகையில், அதன் தேர்மிடோரியன் பொய்யும் மோசமானதாக இருக்கும். இது இந்த அல்லது அந்த நபரின் தனிப்பட்ட சீரழிவு பற்றிய கேள்வி அல்ல, மாறாக பொய் கூறுவது ஒரு முக்கிய அரசியல் தேவையாக மாறியுள்ள முழு சமூகக் குழுவின் நிலைப்பாட்டில் ஊறியுள்ளது. புதிதாகப் பெற்ற பதவிகளுக்கான போராட்டத்தில், இந்த சாதி தன்னை மீள் பயிற்றுவித்துக்கொண்டதுடன் அல்லது அதே நேரத்தில் அதன் தலைவர்களை மீள் பயிற்றுவித்துக்கொண்டது அல்லது மனச்சோர்வடையச் செய்துள்ளது. அதன் நலன்களை சிறந்த, மிக உறுதியான மற்றும் இரக்கமின்றி வெளிப்படுத்தும் மனிதனை அச்சாதியானது தனது தோள்களில் ஏற்றிக்கொண்டது. இவ்வாறு, ஒரு காலத்தில் புரட்சியாளராக இருந்த ஸ்ராலின், தேர்மிடோரியன் சாதியின் தலைவரானார்.

வெகுஜனங்களின் நலன்களை வெளிப்படுத்தும் மற்றும் இதுவரை அவை தவிர்க்க முடியாமல் அதன் நலன்களுக்கு எதிராக இயக்கப்பட்ட மார்க்சிசத்தின் சூத்திரங்கள் அதிகாரத்துவத்தை மேலும் மேலும் சிரமத்திற்குள்ளாக்கியது. நான் அதிகாரத்துவத்திற்கு எதிராக நுழைந்த காலத்திலிருந்தே, அதற்கு சேவை செய்யும் கோட்பாட்டாளர்கள் மார்க்சித்தின் புரட்சிகர சாராம்சத்தை “ட்ரொட்ஸ்கிசம்” என்று அழைக்கத் தொடங்கினர். …

இடைவிடாத கட்சி தூய்மைப்படுத்தல்கள் [1920 களில்] எல்லாவற்றிற்கும் மேலாக "ட்ரொட்ஸ்கிசத்தை" பிடுங்கியெறிவதை நோக்கி இயக்கப்பட்டன. மேலும் இந்த களையெடுப்பின் போது அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகபூர்வ கருத்துக்களுடன் முரண்பட்ட வரலாற்று உண்மைகளை அல்லது மேற்கோள்களை நேர்மையாக முன்வைத்த அனைத்து எழுத்தாளர்களும் "ட்ரொட்ஸ்கிசவாதிகள்" என்று அழைக்கப்பட்டனர். நாவலாசிரியர்களும் கலைஞர்களும் இதே ஒடுக்குதலுக்கு உட்பட்டனர். நாட்டின் ஆன்மார்த்த சுற்றுச்சூழல் பழைய பழக்கவழக்கங்கள், பொய்கள் மற்றும் நேரடியான சோடிப்புகளின் விஷத்தால் முற்றிலும் செறிவூட்டப்பட்டது.

இந்த சாலையில் உள்ள அனைத்து சாத்தியங்களும் விரைவில் தீர்ந்துவிட்டன. தத்துவார்த்த மற்றும் வரலாற்று பொய்கள் அவர்களின் நோக்கங்களை மட்டும் அடையவில்லை, மக்கள் அவர்களுக்கு மிகவும் பழக்கமாகிவிட்டனர். அதிகாரத்துவ அடக்குமுறைக்கு இன்னும் பாரிய அடித்தளத்தை வழங்க வேண்டியது அவசியமானது. ஆரம்பகால பொய்யை ஊதிப்பெருக்குவதற்காக, ஒரு குற்றவியல் தன்மைகொண்ட குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. அடக்குமுறைகளை நியாயப்படுத்த, போலிக்குற்றச்சாட்டுகளை உருவாக்குவது அவசியமானது. பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு அழுத்தம்கொடுக்க, இன்னும் கொடூரமான அடக்குமுறைகளுடன் அவற்றை வலுப்படுத்த வேண்டியது அவசியமானது. இவ்வாறு இப்போராட்டத்தின் தர்க்கம் ஸ்ராலினை பிரம்மாண்டமான நீதித்துறை குழப்பங்களின் பாதைக்கு கொண்டு சென்றது.

களையெடுப்புகளுடன், அதிகாரத்துவம் தன்னை ஒரு சாதியாக பலப்படுத்திக் கொண்டு, அது சோசலிசப் புரட்சியையும், உலகில் எங்காவது இன்னொரு அக்டோபருக்கான சாத்தியத்தின் எந்தவொரு எதிர்பார்ப்பையும் எதிர்ப்பதாக ஏகாதிபத்தியத்திற்கு நிரூபித்தது. மேலும், புரட்சியின் தலைவர்களை கொலை செய்வதற்கு முன்னர் சேற்றினூடாக இழுத்துச் செல்வதன் மூலம், அதிகாரத்துவம் அக்டோபர் புரட்சியை உலகளவில் மில்லியன் கணக்கானவர்களின் பார்வையில் இழிவுபடுத்தவும், சோவியத் ஒன்றியத்திலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று மற்றும் சோசலிச உணர்வை அழிக்கவும் முயன்றது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டு அதனூடாக புட்டினின் ஆட்சி தோன்றியதை இந்த பரந்த உள்ளடக்கத்திற்கு வெளியே புரிந்து கொள்ள முடியாது.

மெக்ஸிகோவின் கொயோகானில் நடந்த டுவி ஆணைக்குழுவின் விசாரணையின் போது லியோன் ட்ரொட்ஸ்கி தனது வழக்கறிஞர் ஆல்பேர்ட் கோல்ட்மனுடன் ஆலோசிக்கிறார். அவரது மனைவி நத்தாலியா அவரது இடதுபுறம் இருக்கிறார்.

இந்தப் பின்னணியில், இந்த பாரிய புதைகுழிகளைக் கண்டுபிடித்து, கொலை செய்யப்பட்டவர்களைப் பற்றிய அடிப்படை வாழ்க்கை வரலாற்று தகவல்களை நிறுவுவதற்கான சமீபத்திய முயற்சிகள் வரலாற்றுப் பதிவில் ஒரு முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத பங்களிப்பாகும். எவ்வாறாயினும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் இந்த வரலாற்று அனுபவத்தின் முழு வரலாற்று உண்மையும் புரிந்துணர்வையும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச நிலைப்பாட்டில் இருந்து ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பாளர்கள் ஸ்ராலினிசத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்துடன் இணைத்து பார்ப்பது தேவையாகின்றது.

மாஸ்கோ வழக்குகள் மற்றும் இடது எதிர்ப்பாளர்களின் வரலாறு பற்றி மேலும் அறிய, WSWS இன் பக்கங்களை வாசியுங்கள்:

The Moscow Trials and the political genocide in the Soviet Union

The Left Opposition’s fight against Stalinism (1923-1933)

Loading