முன்னோக்கு

கோவிட் -19 இனால் அமெரிக்காவில் 600,000 பேர் இறந்துள்ளனர்: அமெரிக்க முதலாளித்துவம் பாரிய இறப்புக்களை "வழமையானதாக்கிறது"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் கோவிட்-19 இனால் உயிரிழந்த ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் ஒரு முறை என்றபடி வியாழக்கிழமை, அமெரிக்க தேசிய தேவாலயம் 600 மணிநேரம் ஒலித்தது. ஆனால் மாலை செய்தியில் கூட அறிவிக்கப்படாத இந்த சிறியளவில் விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வு, 600,000 பேர் இறந்த கொடூரமான மைல்கல்லை பகிரங்கமாக ஒப்புக் கொண்ட நிகழ்வில் ஒன்றாகும்.

டெட்ராய்டில் உள்ள பெல்லி தீவில் 2020 ஆகஸ்ட் 31, திங்கட்கிழமை, கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை வாகனங்களின் ஊர்வலம் கடந்து செல்கிறது (AP Photo/Carlos Osorio) [AP Photo/Carlos Osorio]

பிப்ரவரி 22 அன்று, பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அந்த நேரத்தில் தொற்றுநோயால் இறந்த 500,000 மக்களை நினைவுகூரும் வகையில் உரை நிகழ்த்தினார். "நாங்கள் இவ்வளவு காலமாக இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வாழ்க்கையையும் ஒரு புள்ளிவிவரமாகவோ அல்லது செய்திகளில் மங்கலாகவோ பார்ப்பதை நாம் எதிர்க்க வேண்டும்.” என்று பைடென் அறிவித்தார்.

ஒரு இலட்சம் மரணங்களுக்கு பின்னர் இதுதான் நடந்தது. உண்மையில், செய்திகளில் இந்த மரணங்கள் ஒரு "மங்கலான" நிலையை கூட எட்டவில்லை. பெரும்பாலான நாட்களில், மாலை செய்திகள் அந்த நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை பற்றிக்கூட குறிப்பிடவில்லை. அதற்கு முதல் இறந்த நபர்களை நினைவில் கொள்வதும் மிகக் குறைவு.

தொற்றுநோயை கடந்த காலத்திற்குரியதாக்குவதை நோக்கி "செல்வதற்கான" ஊடகங்களின் முடிவை நியூ யோர்க் டைம்ஸ் எடுத்துக்காட்டுகிறது. இது இந்த மாத தொடக்கத்தில் அதன் "நாங்கள் இழந்தவர்கள்" பகுதியை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தது. டைம்ஸ் எழுதியது, “தடுப்பூசி ஏற்றப்படும் விகிதங்கள் உயர்ந்துள்ளதாலும், ஏராளமான மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாலும், உலகளவில் எண்ணிக்கை குறைந்துவருவதாலும் அவசரமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை பற்றி அவசியமாக குறிப்பிடுவதற்கான தேவை குறைந்துள்ளது” என டைம்ஸ் குறிப்பிட்டது.

கடந்த 30 நாட்களில் மட்டும், ஒரு ஆண்டு முழுவதும் எய்ட்ஸ் நோயால் இறப்பதை விட அதிகமாக அமெரிக்காவில் கோவிட்-19 இனால் 15,000 பேர் தங்கள் உயிர்களை இழந்துவிட்டார்கள் என்பதை மாலை செய்திகளைப் பார்க்காத எவருக்கும் கூட தெரியும். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் கடந்த மாதம் உண்மையான கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 900,000 க்கு அண்ணளவாக இருப்பதாக மதிப்பிட்டபோது, ஊடகங்கள் பெரும்பாலும் இந்த எண்ணிக்கையை புறக்கணித்தன.

டைம்ஸின் கூற்றுக்களுக்கு மாறாக “உலகின் பெரும்பகுதியை” பொறுத்தவரை, தொற்றுநோய் தடையின்றி பொங்கி பரவுகிறது. இந்த ஆண்டின் பாதி அளவை எட்டுவதற்கு முன்பே, 2020 (1,880,000) ஐ விட 2021 ஆம் ஆண்டில் (1,884,000) அதிகமான மக்கள் தொற்றுநோயால் இறந்துள்ளனர். இந்த வாரம் இந்தியா அதன் மிக மோசமான மொத்த தொகையாக 6,148 தினசரி புதிய இறப்புகளைப் பதிவுசெய்தது. இது அதன் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான பீகாரில் வீட்டிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ இறந்தவர்களின் இறப்பு எண்ணிக்கையை கூட்டிய பின்னர் மேல்நோக்கி திருத்திய பின்னர் கிடைத்த தொகையாகும்.

"ஏராளமான மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்" என்று டைம்ஸ் கூறும்போது, முழு அரசியல் ஸ்தாபகத்திலும் ஊடகங்கள் முழுவதிலும், ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்க வேண்டுமென்றே ஒரு முயற்சி உள்ளது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கும்போது கூட தொற்றுநோயை முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கிறது.

அல்லது, இந்த மாத தொடக்கத்தில் பைடென் ஒரு உரையில் கூறியது போல், “அமெரிக்கா கடந்த ஆண்டு கோடையில் இருந்து வியத்தகு முறையில் வேறுபட்டமுறையில் இந்த கோடைகாலத்திற்கு செல்கிறது. சுதந்திரத்தின் கோடைகாலம், மகிழ்ச்சியின் கோடைகாலம், ஒன்றுகூடுதல் மற்றும் கொண்டாட்டங்களின் கோடைகாலம். இந்த நாட்டிற்கு கிடைக்க தகுதியான அனைத்து அமெரிக்கருக்குமான கோடைகாலமும்” என்று இவர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சாரம் நிதிய தன்னலக்குழுவிற்கு தொடர்ந்து இலாபத்தை ஈட்டுவதற்காக பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் முழுவதுமாக மீண்டும் திறக்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் கைவிடுவதை நியாயப்படுத்த முயல்கிறது.

அமெரிக்கா 300,000 இறப்புகளின் மைல்கல்லைக் கடந்தபின், உலக சோசலிச வலைத் தளம் ஒரு பெரிய அளவில் மரணத்தை "வழமையானதாக்குவதற்கான" முயற்சிகளை பற்றி குறிப்பிட்டது. அந்த நேரத்தில் நாங்கள் எழுதினோம்:

"பொருளாதார ஆரோக்கியம்" மற்றும் "மனித வாழ்க்கை" ஆகியவற்றை ஒப்பிடக்கூடிய நிகழ்வுகளாகக் கருதி, மனிதவாழ்க்கையை விட பொருளாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வர்க்க நலன்களில் வேரூன்றிய முடிவிலிருந்து மரணத்தை வழமையானதாக்குவது எழுகிறது. அரசியல் ஸ்தாபகத்தால், தன்னலக்குழுக்கள் மற்றும் ஊடகங்களால் ஒப்பீடு மற்றும் முன்னுரிமை வழங்குதலின் நியாயத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், பாரிய மரணம் தவிர்க்க முடியாதது என்று கருதப்படுகிறது.

அப்போதிருந்து, சமூக தனிமைப்படுத்தலுக்கு உதவக்கூடிய மீதமுள்ள அனைத்து நடவடிக்கைகளும் அல்லது முககவசங்களை அணிவதும் கூட அகற்றப்பட்டுள்ளன. மே 13 அன்று, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் முகமூடி அணிவது குறித்த அதன் வழிகாட்டுதலை மாற்றியமைத்து, தடுப்பூசி போடப்பட்டவர்கள் முகவசங்களை அணிவதையும் மற்றும் நெரிசலான பகுதிகளில் சமூக தனிமைப்படுத்தலை நிறுத்துமாறும் வலியுறுத்தியது.

முகவசங்களை அணிவதை கைவிடுவதை தொற்றுநோயியல் நிபுணர்கள் எதிர்த்தனர். அதே நேரத்தில் கோவிட்-19 இன் ஆபத்தான புதிய வகைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகையில் அமெரிக்காவில் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி ஏற்றப்படாமல் இருக்கிறார்கள் என அவர்கள் எச்சரித்தனர்.

உலகெங்கிலும், இதுவரையிலேயே வேகமாக பரவக்கூடிய கோவிட்-19 இன் டெல்டா மாறுபாடு என்று அழைக்கப்படுபவை அதிகரித்து வருகின்றன. இந்த மாறுபாடு இப்போது இங்கிலாந்தில் 91 சதவீத தொற்றுக்களை ஏற்படுத்தி வருவதாக ஜோன்சன் அரசாங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இங்கிலாந்தில் தினசரி புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதுடன், மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது “அதிவேகமாக” அதிகரித்து வருவதாக பைனான்சியல் டைம்ஸ் எச்சரித்தது.

டெல்டா மாறுபாடு இப்போது அமெரிக்காவிலும் வேகமாக அதிகரித்து வரும் மாறுபாடாகும். அமெரிக்காவும் இங்கிலாந்தில் (42 சதவீதம்) தடுப்பூசி போடப்பட்ட மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய அதே சதவீதத்தைக் கொண்டுள்ளது.

தடுப்பூசி விகிதங்கள் குறைந்து வருவதால், குறிப்பாக தெற்கில் உள்ள தடுப்பூசி ஏற்றப்படாத பெரிய மாநிலங்கள் மற்றும் முககவசங்கள் மற்றும் சமூக விலகியிருத்தலை கைவிடுவதால், அமெரிக்கா கோவிட்-19 இன் மிகப்பெரிய எழுச்சியை எதிர்கொள்ளக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த கட்டவிழ்ந்துவரும் பேரழிவை எதிர்கொண்டு, தொற்றுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கையை கூட எண்ணும் முயற்சிகளை மாநிலங்கள் கைவிடுகின்றன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் புதன்கிழமை பின்வருமாறு அறிவித்தது: "தொற்றுகள், இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் உள்ளிட்ட முக்கிய தொற்றுநோய் தரவுகள் குறித்து அறிவிக்கும் வேகத்தை அதிகளவிலான மாநிலங்கள் குறைத்து வருகின்றன". “பாதி மாநிலங்கள் தினசரி அறிக்கைகளை வழங்குவதில்லை. சிலர் ஒவ்வொரு நாளும் தரவை முன்வைப்பதில் இருந்து வாரத்திற்கு ஒருமுறை என்றவரை சென்றுள்ளனர். குறைந்தது மூன்று மாநிலங்கள் அந்த எண்ணுவதை வாரத்திற்கு மூன்று முறை என குறைத்துள்ளன. புளோரிடா மற்றும் அலபாமா இந்த வாரம் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அறிவிப்பது என்ற காலஅட்டவணைக்கு மாற்றியுள்ளன”.

நோயைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளை அகற்றுவதை தொற்றுநோயியல் நிபுணர்கள் கண்டனம் செய்தனர். "அதிவேகமாக பரவும் டெல்டா மாறுபாட்டின் எழுச்சியை எதிர்கொள்வதில் நமக்கு அவசியமாகக தேவைப்படுவது தரவுகளை கையாள்வது ஆகும்" என்று Scripps ஆராய்ச்சி உருமருவு நிறுவனத்தின் இயக்குனர் எரிக் டோபோல் எழுதினார். "அமெரிக்காவில் தடுப்பூசிகள் இடுவது பின்தங்குவதால், புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை இனி குறைவதில்லை" என்று டோபோல் எச்சரித்தார்.

டெல்டா மாறுபாடு இளம்வயதினரை முந்தைய வகைகளை விட மிகவும் ஆக்ரோஷமாக குறிவைக்கிறது என்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உந்துதலால் ஏற்படும் ஆபத்துகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆனால் ஆபத்து இருந்தபோதிலும், பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதன் மூலம் மலிவான உழைப்பைத் தொடர்ந்து பெறுவதற்கான ஆளும் வர்க்கத்தின் கோரிக்கையால் உந்தப்பட்டு, பள்ளிகளில் 100 சதவீத நேரடி வகுப்புகளுக்கு திரும்புவதற்கான முயற்சிகளை பைடென் நிர்வாகம் இரட்டிப்பாக்கியுள்ளது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கைவிடுவதற்கான ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரத்தை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். இதன் நோக்கம் நிதி தன்னலக்குழுவின் செழுமைப்படுத்தலை எளிதாக்குவதே பாரிய மரணத்தை "வழமையான ஒன்றாக்குவது" ஆகும். உலகளாவிய தொற்றுநோயின் புதிய மீள் எழுச்சியினால் அமெரிக்கா அச்சுறுத்தப்படுவதால், தொழிலாளர்கள் சமூக தனிமைப்படுத்தல் மற்றும் முகக்கவசம் அணிவதை கைவிடுவதையும், கோவிட் -19 தொற்றுக்களை கண்காணிப்பதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார உள்கட்டமைப்பை தொடர்ந்தும் இல்லாதொழிப்பதை எதிர்ப்பது மிகவும் அவசரமானது.

பாரிய மரணத்தை "வழமையான ஒன்றாக்குவதற்கான" முயற்சி முதலாளித்துவத்தின் அடிப்படை சமூக இயக்கவியல் மற்றும் நிதி தன்னலக்குழுவின் செழுமைப்படுத்தலுக்கு மனித வாழ்க்கையை அடிபணிய வைப்பதை பிரதிபலிக்கிறது. இந்த சமூக ஒழுங்குதான் தான் தொற்றுநோயினால் உருவான பெரும் எண்ணிக்கையிலான இறப்பிற்கு பொறுப்பை ஏற்கிறது. இது இறுதி ஆய்வுகளில் சமூகத்தின் தேவைகள் முதலாளித்துவத்துடன் பொருந்தாமல் இருக்கும் தன்மையின் கொடூரமான வெளிப்பாடாகும்.

Loading