அமெரிக்க தூண்டுதலில், நேட்டோ உச்சி மாநாடு சீனாவை அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேட்டோ கூட்டணியின் 30 உறுப்பு நாடுகளும், அந்த இராணுவ கூட்டணிக்குச் சீனா "அமைப்புரீதியிலான சவால்களை" முன்நிறுத்துவதாக அறிவித்து, திங்களன்று, சீனாவை இலக்கில் வைத்த ஓர் கூட்டறிக்கையுடன் அவற்றின் உச்சிமாநாட்டை நிறைவு செய்தன.

US tanks are unloaded in Antwerp, Belgium to take part in the Atlantic Resolve military exercises. (AP Photo/Francisco Seco)

பெய்ஜிங்கிற்கு எதிராக வாஷிங்டனின் பதட்டங்களைப் பாரியளவில் அதிகரிப்பதன் பாகமாக, அமெரிக்க ஜனாதிபதி பைடெனின் வார்த்தைகளில் கூறுவதானால், "சீனாவை எதிர்கொள்ள உலகை ஒழுங்கமைக்கும்" அமெரிக்காவின் முயற்சிகளில் அந்த ஆவணத்தின் வார்த்தைகள் ஒரு குறிப்பிடத்தக்க புதிய கட்டத்தைக் குறித்தன.

79 பத்திகள் கொண்ட அந்த நேட்டோ அறிக்கை, முந்தைய அறிக்கைகளில் இருந்து குறிப்பிடத்தக்களவில் முரண்பட்டு, சீனாவை ஒரு டஜன் முறை குறிப்பிடுகிறது. தற்போதைய நேட்டோ மூலோபாய ஆவணம், முதன்முதலில் 2010 இல் வெளியிடப்பட்ட போது, சீனாவைக் குறிப்பிடவே இல்லை, 2019 கூட்டறிக்கை அந்நாட்டை ஒரேயொரு முறை மட்டுமே குறிப்பிடுகிறது.

"நேட்டோ நாடுகள் கடைசியாக ஒன்றுகூடியதில் இருந்து 18 மாதங்களில் மேற்கிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் எந்தளவுக்கு மோசமடைந்துள்ளன என்பதை இந்த அறிக்கையின் வலிமை எடுத்துக்காட்டுகிறது" என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. "வெறும் ஒன்றரை ஆண்டுகளில், இப்போது சீனா ஓர் அமைப்புரீதியிலான போட்டியாளராக உயர்ந்துள்ளது," என்று ஜேர்மனியின் Der Speigel கருத்துரைத்தது.

"சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கும் சர்வதேச கொள்கைகளும், நாம் ஒன்றாக ஒரு கூட்டணியாக இருந்து எதிர்கொள்ளும் சவால்களை முன்வைக்க முடியும்," என்று குறிப்பிட்ட நேட்டோ ஆவணம், "நாம் இந்த கூட்டணியின் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் சீனாவை எதிர்கொள்வோம்," என்றது.

சீனா அதன் இராணுவப் படைகளை விரிவுபடுத்துவதாகவும் ரஷ்யாவுடன் கூட்டுறவு மேற்கொள்ள முயல்வதாகவும் குறிப்பிட்டு, அந்த கூட்டறிக்கை "விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு அமைப்புரீதியிலான சவால்களை" சீனா முன்வைப்பதாக கூறுகிறது.

சீனாவுக்கு எதிராக வாஷிங்டனின் நட்பு நாடுகளை அணித்திரட்டுவதற்கான பைடெனின் முயற்சிகள், சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் குரல்வளையை நெரிக்கவும், உலக மக்களின் பார்வையில் அதை பூதாகரமாக்கவும் மற்றும் இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்வதற்குமான அமெரிக்க முயற்சிகளின் இராஜாங்கரீதியிலான நடவடிக்கைகளான உள்ளன.

புதன்கிழமை, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின், சீனா தான் அமெரிக்க இராணுவத்தின் "முதல்" குவிமையமாக இருக்கும் என்று அறிவித்து ஒரு வழிகாட்டி ஆணை பிறப்பித்தார். இந்த மீளாய்வு "சீனாவுடன் நீண்டகால மூலோபாய போட்டிக்கு ஊக்கமளிக்கும் விரிவான இலக்குடன், பென்டகனை, சொல்லப் போனால் உண்மையில் ஒட்டுமொத்த அமெரிக்க அரசையும், உள்ளீர்க்க" முனைவதாக Foreign Policy கருத்துரைத்தது.

Foreign Policy குறிப்பிட்டவாறு: "சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவுக்கு இந்நூற்றாண்டின் மைய சவாலாக வடிவமைப்பது, பைடென் பதவியேற்பதற்கு முன்னரே நிரந்தர பல்லவியாக இருந்துள்ளது. அமெரிக்கா அதன் போட்டித்தன்மை மற்றும் தொழில்நுட்ப விளிம்பை மீண்டும் பெறாவிட்டால், சீனா "நம்மை முழுங்கிவிடும்" என்று பைடென் எச்சரித்தார்.

கடந்த வாரம் அமெரிக்க செனட் சபை, பாரியளவில் 250 பில்லியன் டாலர் பெருநிறுவன மானியங்களின் தொகுப்பு மற்றும் பொருளாதார தடைகளைக் கொண்ட, "சீனாவுடனான போட்டித்தன்மை மசோதா" என்று அழைக்கப்படுவதை நிறைவேற்றியது, நியூ யோர்க் டைம்ஸ் இதை "தசாப்த கால தொழில்துறை கொள்கையில் மிக முக்கிய அரசு தலையீடு" என்று குறிப்பிட்டது.

இந்த நேட்டோ உச்சி மாநாடு இவ்வாரயிறுதியில் நடந்து முடிந்த ஜி7 கூட்டத்தைத் தொடர்ந்து நடந்தது, அது, பைனான்சியல் டைம்ஸ் வார்த்தைகளில், “மனித உரிமைகள், வர்த்தகம் சம்பந்தமாகவும் மற்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தோற்றுவாய்கள் மீது வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் சீனாவை விமர்சித்தது.”

நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பின்னர், பைடென் புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைச் சந்திக்க ஜெனீவா செல்ல உள்ளார். அந்த சந்திப்புக்கு முன்னதாக, பைடென் அறிவிக்கையில், "நான் ஜனாதிபதி புட்டினுக்கு தெரிவிப்பது என்னவென்றால், நான் ரஷ்யாவுடன் மோதலை விரும்பவில்லை,” என்றார். பைடென் ரஷ்ய ஜனாதிபதியை "அறிவாளி,” “கடினமானவர்,” “தகுதியான விரோதி" என்று விவரித்தார்.

அந்த சந்திப்புக்கு முன்னதாக, பைடென், நேட்டோவில் உக்ரேன் இணைவதை ஆதரிக்க மறுத்துவிட்டார். முந்தைய கருத்துக்களுக்குப் பொருந்தாத விதத்தில், “அந்த கேள்விக்கு இடமில்லை, அது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். … அவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது,” என்றவர் அறிவித்தார்.

சீனாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மீதான அமெரிக்காவின் வலியுறுத்தல்களுக்கு மத்தியில், நேட்டோவின் கூட்டறிக்கை ரஷ்யாவை 60 முறை குறிப்பிட்டு, அதற்கு எதிராக ஆக்கிரோஷமாக திரும்பி இருந்தது.

சீனாவுக்கு எதிராக இன்னும் அதிக போர்நாடும் வார்த்தைகளைக் கோரிய அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு அதன் நேட்டோ கூட்டாளிகள் உடன்பட்டாலும், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராஜாங்க தாக்குதல் மீது அங்கே குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகள் உள்ளன.

"இன்று இந்த மேஜையில் ஒன்று கூடியுள்ள யாரும் சீனாவுடன் ஒரு புதிய பனிப்போரில் இறங்க விரும்புவதாக நான் நினைக்கவில்லை" என்று பிரிட்டன் ஜனாதிபதி போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், "நாம் சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும்," என்று அறிவித்ததுடன், சீனா முன்னிறுத்தும் அச்சுறுத்தலை "ஒருவர் மிகைப்படுத்தக்கூடாது" என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

பெய்ஜிங் "ஓர் எதிரி அல்ல" என்று வலியுறுத்திய நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க், ஆனால் இந்த கூட்டணி "நமது பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க சீனாவை எதிர்கொள்ள" வேண்டியுள்ளது என்றார்.

ஜேர்மனியின் Der Spiegel குறிப்பிட்டவாறு: "சில நேட்டோ உறுப்பினர்களைப் பொறுத்த வரையில், அவற்றின் பொருளாதாரம் சீனப் பொருளாதாரத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளது, இது மிகவும் ஆபத்தானது — குறிப்பாக ஜேர்மனிக்கும் அதன் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கும். ஆகவே தான் அவை பெய்ஜிங்கிற்கு எதிரான அதிக இராணுவ வாய்ச்சவடால்களைத் தடுக்க விரும்பின."

ராய்டர்ஸ் சுட்டிக்காட்டியவாறு:

அந்த கூட்டாளிகள் சீனாவுடனான அவற்றின் பொருளாதார தொடர்புகளைக் கவனத்தில் கொண்டுள்ளன. 2020 இல் சீனாவுடனான ஜேர்மனியின் மொத்த வர்த்தகம் 212 பில்லியன் யூரோக்களுக்கு (257 பில்லியன் டாலர்கள்) அதிகமாக இருந்ததாக ஜேர்மனிய அரசு தரவுகள் குறிப்பிடுகின்றன. மார்ச் 2021 வரை சீனா வசமிருக்கும் மொத்த அமெரிக்க கருவூல பத்திரங்களின் மதிப்பு 1.1 ட்ரில்லியன் டாலர் என்று அமெரிக்க தரவுகள் குறிப்பிடுகின்றன, 2020 இல் சீனாவுடனான மொத்த அமெரிக்க வர்த்தகம் 559 பில்லியன் டாலராக இருந்தது.

ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, Der Spiegel பின்வருமாறு அறிவித்தது: "பைடெனின் உச்சிமாநாட்டு முதல்முறை உரைக்குப் பின்னர் இது மிகவும் தெளிவாக உள்ளது—அமெரிக்காவும் நேட்டோவும் சீனாவில் மிகவும் ஆபத்தான நீண்டகால எதிரியைக் காண்கின்றன."

அவற்றிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் இருந்த போதிலும், அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் சீனாவுக்கு எதிரான பேரழிகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மிகப்பெரிய தீவிரபாட்டுக்குள் கண்மூடித்தனமாக நகர்ந்து வருகின்றன.

வீரியத்துடன் பரவிவரும் ஒரு பெருந்தொற்றுக்கு மத்தியில், இந்த நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் பாரியளவில் அவற்றின் இராணுவங்களை விரிவாக்கி கொண்டிருக்கின்றன. இந்தாண்டு தொடக்கத்தில், பிரிட்டன் அதன் அணுஆயுத தளவாடங்களில் 40 சதவிகித விரிவாக்கத்தை அறிவித்தது, அதேவேளையில் பைடென் நிர்வாகம் மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய பென்டகன் வரவுசெலவுக் கணக்குத் திட்டத்தைக் கோரியுள்ளது.

சீனாவுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களுடன் சேர்ந்து, தற்போது நடைபெற்று வரும் பாரிய இராணுவக் கட்டமைப்பு, மொத்த மனிதகுலத்திற்கும் ஓர் அளப்பரிய ஆபத்தை முன்வைக்கிறது.

அமெரிக்க பத்திரிகைகளிடம் வெளிப்படைத்தன்மை முற்றிலுமாக இல்லாத நிலையில், சீனாவுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே டெனிசோவ் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் சீனாவுடனான ஓர் அமெரிக்க போரின் விளைவுகளைக் குறித்து பேசினார்.

டெனிசோவிடம் குளோபல் டைம்ஸ் வினவியது: "சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியும் மோதலும் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஆயுத மோதல் நடந்தால், ரஷ்யா என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?"

"இதற்கு எந்த பதிலும் இல்லை," ஏனென்றால் "அத்தகைய ஒரு மோதல் மொத்த மனிதகுலத்தையும் நிர்மூலமாக்கும், பின்னர் தரப்பெடுப்பதில் எந்த அர்த்தமும் இருக்காது," என்று டெனிசோவ் பதிலளித்தார்.

Loading