ஜாக்கோபின் பத்திரிகை மோசடியான "ஜனநாயக தொழிற்சங்கவாதத்தை" ஊக்குவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் (DSA) அமைப்பைச் சார்ந்த ஜாக்கோபின் இதழில், அதன் நியமன எழுத்தாளர் (staff writer) அலெக்ஸ் பிரஸ் எழுதிய, “ஜனநாயக தொழிற்சங்கங்கள் நல்லெண்ணங்களைப் பெறுகின்றன,” என்ற தலைப்பிலான ஒரு சமீபத்திய கட்டுரை, தொழிற்சங்கங்கள் மீது சிதைந்து போயுள்ள நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு போலி-இடதின் சமீபத்திய முயற்சியாக உள்ளது.

பாரிய சமத்துவமின்மை மற்றும் வறுமைக்கு எதிரான எதிர்ப்பாலும், அத்துடன் பெருந்தொற்றுக்கு விடையிறுப்பதில் உலகின் பெரும்பாலான அரசாங்கங்களது கொலைபாதக கொள்கைகளாலும் உந்தப்பட்டு, உலகெங்கிலும் தொழிலாள வர்க்கம் சமூக போராட்டங்களில் நுழைந்து வருகின்ற, ஒரு திட்டவட்டமான வரலாற்று சூழலில் இந்த கட்டுரை வெளிவருகிறது.

அந்த சமூக போராட்டங்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சிகர வடிவத்தை இன்னும் இன்னும் அதிக வெளிப்படையாக எடுத்து வருவது, இந்த மேலெழுச்சியின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஒரு போராட்டம் மாற்றி ஒரு போராட்டத்தில், தொழிலாளர்கள் நிறுவனத்தின் தாக்குதல்களை மட்டும் எதிர்கொள்ளவில்லை மாறாக அவர்களின் போராட்டங்களைத் தனிமைப்படுத்தவும், நிர்வாகத்திற்கு சாதகமான தீர்வுகளை ஒருதலைப்பட்சமாக திணிக்கவும் முயலும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவுக்குள், தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியின் மிக முக்கிய வெளிப்பாடாக இருப்பது, வேர்ஜீனியவின் டப்ளின் வோல்வோ டிரக் ஆலை வேலைநிறுத்தமாகும். ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தால் அவர்கள் மீது திணிக்கப்பட்ட இரண்டு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிராகரித்தப் பின்னர், அந்த வோல்வோ ட்ரக் தொழிலாளர்கள் UAW சங்கத்தின் காட்டிக்கொடுப்புகளை சவால் செய்வதற்கும், மற்றும் சர்வதேச UAW ஆல் ஒப்புக் கொள்ளப்படாத அல்லது தேசிய பத்திரிகைகளில் அறிவிக்கப்படாத அந்த போராட்டம் மீதான இருட்டடிப்பை முறிக்கவும், சாமானிய தொழிலாளர் குழுவை அமைப்பதற்கு முன்முயற்சி எடுத்துள்ளனர்.

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (UAW) எந்த காரணத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளவில்லையோ அதே காரணத்திற்காக தான் ஜாகோபினும் அந்த வேலைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, அதுவாவது: அந்த வேலைநிறுத்தம் குறித்து அது பீதியடைந்துள்ளது. ஜாகோபின் பத்திரிகை எழுத்தாளர்கள் மற்றும் DSA இன் தலைமைக்குள், தொழிற்சங்க நிர்வாகிகளும், உத்வேகமான நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க ஆலோசகர்களும் எண்ணிக்கையில் குறைந்து இல்லை, அவர்கள் அனைவரும் தொழிற்சங்க எந்திரத்தைச் சார்ந்துள்ளனர், அதற்கு எதிரான ஒரு கிளர்ச்சியால் அவர்களது பதவிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளன.

தொழிலாளர்களை தொழிற்சங்க எந்திரத்திற்குள்ளேயே அடைத்து வைத்து அவர்களைக் கட்டுப்படுத்தி வைக்க ஏதாவது புதிய வழிவகைகளைக் காண்பதே ஜாகோபின் பரிந்துரைக்கும் "ஜனநாயக தொழிற்சங்கவாதத்தின்" நோக்கமாகும்.

குறிப்பாக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது ஒரு "பகிரங்கமான பேரம்பேசல்" வடிவத்திற்காக அந்த பத்திரிகை வாதிடுகிறது. "ஷிப்ட் முறையில் ஒரு மணி நேரம் என்றாலும் கூட, குறைந்தபட்சம் ஒரு முறையாவது பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு தொழிலாளரும் இடம் பெற வைப்பதை" தொழிற்சங்கங்கள் இலக்காக கொண்டிருக்க வேண்டும் என்றவர் கூறுகிறார். மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை அமர்வுகள் மீது தொழிலாளர்களிடையே நிலவும் வெறுப்பை எதிர்கொள்ள அதுபோன்ற நடைமுறைகள் அவசியமாகும் என்று அப்பத்திரிகை வாதிடுகிறது, “வெளிப்படையான பேரம்பேசல்" வடிவம் "முழுமையான வெளிப்படைத்தன்மையை" அடிப்படையில் கொண்டிருக்கும் என்றவர் வாதிடுகிறார்.

குறிப்பாக நேஷன் இதழின் எழுத்தாளரும், சர்வதேச சேவைப் பணியாளர்கள் சங்கத்தின் முன்னாள் பணியாளரும் மற்றும் அதன் செயற்குழு உறுப்பினரும், மற்றும் UC பெர்க்லி தொழிலாளர் மையத்தின் தற்போதைய மூத்த கொள்கை ஆய்வாளருமான ஜேன் மெக்அலேவி (Jane McAlevey) எழுதிய ஒரு நீண்ட ஆய்வறிக்கையை அப்பத்திரிகை மேற்கோளிடுகிறது. மெக்அலேவியின் அறிக்கை "பகிரங்கமான பேரம்பேசல்கள்" மீது நான்கு அமைப்புகள் மீதான ஆய்வுகளை அடிப்படையாக கொண்டுள்ளது: நியூ ஜெர்சி கல்வி அமைப்பு (NJEA); மாசசூசெட்ஸ் செவிலியர்கள் சங்கம் (MNA); லாஸ் வேகாஸின் ஹோட்டல் மற்றும் சூதாட்ட மன்ற தொழிலாளர்களை உள்ளடக்கிய நெவாடாவின் UNITE HERE அமைப்பின் உள்ளூர் கிளை 26; மற்றும் அமெரிக்காவின் தகவல் தொடர்பு தொழிலாளர்கள் சங்கத்தின் பாகமாக உள்ள NewsGuild-CWA. இதற்கு கூடுதலாக, அப்பத்திரிகை நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் பட்டதாரி மாணவர் ஒழுங்கமைப்பு குழுவை (UAW-GSOC) உதாரணமாக மேற்கோளிடுகிறது.

அந்த பத்திரிகையும் மற்றும் மெக்அலேவியும் வக்காலத்துவாங்கும் "ஜனநாயக தொழிற்சங்கவாதத்தின்" மோசடியான தன்மை அவர்களின் சொந்த எடுத்துக்காட்டுகளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தங்களைப் பலவந்தமாக திணிப்பதற்கு 2018 மற்றும் 2019 இல் NJEA வேலைநிறுத்தங்களை நாசப்படுத்தியது. மசாசூசெட்ஸின் வொர்செஸ்டரில் செயிண்ட் வின்சென்ட் செவிலியர்களது வேலைநிறுத்தத்தை MNA இப்போது தனிமைப்படுத்தி வருகிறது, அவர்கள் வேலைநிறுத்த சம்பளமின்றி விடப்பட்டுள்ளனர். ஒரு வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக 2018 இல் ஒரு விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கையைக் கட்டாயப்படுத்தப்படுத்திய UNITE HERE உள்ளூர் கிளை 26, கடந்தாண்டு நெவாடா மாநில ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வு தேர்தல்களில் பேர்ணி சாண்டர்ஸின் பிரச்சாரத்தை நாசமாக்க அக்கட்சி தலைமை செய்த சூழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றியதுடன், அனைவருக்கும் பொது மருத்துவக் சிகிச்சைக்கு ஆதரவளித்த அவரை வலதிலிருந்து தாக்கியது.

ஆனால் மிகவும் அதிர்ச்சியூட்டுமளவுக்கு மோசமான உதாரணம் UAW-GSOC ஆகும், இந்தாண்டு NYU வேலைநிறுத்தத்தில் ஒரு மணி நேரத்திற்கு 6 டாலர் ஊதிய உயர்வு "வெற்றி" கிடைக்க இதுவே பொறுப்பென்று அப்பத்திரிகை வாதிடுகிறது. உண்மையில் அது வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை விட மிகவும் குறைவாக இருந்தது, மேலும் அந்த தொழிற்சங்கம் மிகவும் ஜனநாயக விரோத வழிமுறைகளை நாடியது, முதலாவதாக NYU இன் வேலைநிறுத்தத்தை ஒரு சில மைல்களுக்கு அப்பால் கொலம்பியாவில் நடந்த வேலைநிறுத்தத்திலிருந்து தனிமைப்படுத்தியது—கொலம்பியா வேலைநிறுத்தத்தை முதலில் முடிவுக்குக் கொண்டு வர வாய்ப்பளிக்கும் விதத்தில் NYU இன் வேலைநிறுத்த வாக்கெடுப்பு எண்ணிக்கையைப் பல வாரங்களுக்குத் தாமதப்படுத்தியது—பின்னர் மிகவும் நடைமுறைக்கு உகந்ததாக இருந்திருக்கக்கூடிய இறுதி பட்டியலிடும் காலத்திற்கு முன்னரே அந்த வேலைநிறுத்தத்தை ஒருதலைபட்சமாக முடிவுக்குக் கொண்டு வந்தது. எவ்வாறிருப்பினும், NYU இன் GSOC தலைமைக்குள் DSA நன்கு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.

மெக்அலேவி மேற்கோளிட்ட விபர ஆய்வுகளைப் பொறுத்த வரையில், மாற்றத்திற்குரிய சாத்தியக்கூறைக் கொண்டிருப்பதாக அவர்கள் வாதிடும் அவற்றின் "பகிரங்கமான பேரம்பேசல்" வடிவம் தற்செயலாக அந்த ஆய்விலேயே அம்பலமாகிறது. சான்றாக NJEA ஐ மட்டுமே ஒரேயொரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டால், அந்த ஒட்டுமொத்த நிகழ்வுபோக்கும் அந்த தொழிற்சங்கத்தால் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது, கணிசமான ஊதிய உயர்வு இல்லாமல் மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகைகளின் குறைப்புடனோ அல்லது கூடுதல் மருத்துவச் சலுகைகள் இல்லாமல் சிறிய சம்பள உயர்வுடனோ ஏதோவொன்றை தேர்ந்தெடுக்க அந்த ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தியது—அவ்விரு ஈடுகட்டும் முன்மொழிவுகளுமே ஆசிரியர்களின் அடிப்படை பொருளாதார அந்தஸ்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

இதற்கிடையே, அவர்கள் "கோட்டைத் தாண்டி [ஒருபடி] வெளியே வந்து, கூட்டத்தில் [ஏதாவது] கூறினால்,” “எங்கள் சொந்த [நபர்களை] வெளியே பாதுகாப்புக்கு வைக்க" தொழிற்சங்கம் உரிமை கொண்டிருந்தது. மருத்துவ சலுகைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு வெறும் 3.9 சதவீத சம்பள உயர்வுடன் கூடிய ஓர் உள்ளூர் கிளை உடன்படிக்கையை மெக்அலேவி அபத்தமாக ஒரு மிகப்பெரிய வெற்றியாக சித்தரிக்கிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த பத்திரிகையும் மெக்அலேவியும் கோரும் "பகிரங்கமான பேரம்பேசல்கள்" என்பது தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரே மைக்கைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் மற்றும் வழமையாக விற்றுத்தள்ளலை எதிர்த்து "தொந்தரவு செய்பவர்களை" வெளியில் தூக்கிவீசும் எந்தவொரு வழமையான ஒப்பந்த ஏற்புறுதி கூட்டத்தை விட ஜனநாயகமற்ற ஒரு நிகழ்முறைக்கு ஒரு "ஜனநாயக" பளபளப்பை வழங்கும் நோக்கில் காட்டப்படும் கண்கட்டி வித்தை விளையாட்டாகும்.

"ஜனநாயக தொழிற்சங்கவாதத்திற்கான" மெக்அலெவி மற்றும் அப்பத்திரிகையின் இந்த கருத்து, தொழிற்சங்கங்களை "ஜனநாயகமயப்படுத்த" பல தசாப்தங்களாக நீண்ட ஒரு திட்டத்தின் அவமானகரமான விளைவாகும். ஜனநாயகத்திற்கான சுரங்க தொழிலாளர் இயக்கம் (Miners for Democracy), டீம்ஸ்டெர்ஸ் ஜனநாயக அமைப்பு (Teamsters for a Democratic Union), எஃகுத்துறை தொழிலாளர்களின் திருப்பித் தாக்கும் அமைப்பு (Steelworker Fightback) போன்ற தொழிற்சங்க கன்னைகளையும் இன்னும் எண்ணற்ற அமைப்புகளையும் உருவாக்கிய இத்தகைய பிரச்சாரங்கள், ஆலைமூடல்கள் மற்றும் வேலை வெட்டுக்களை நடத்துவதில் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து தங்களை பகிரங்கமான நிர்வாக முகவர்களாக தொழிற்சங்கங்கள் மாற்றிக் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், இந்த தொழிற்சங்கங்களின் தேசியவாத மற்றும் கம்யூனிச-விரோத வேலைத்திட்டத்திற்குப் புதுப்பொலிவூட்ட முயன்றன.

அதிகாரத்துவத்தை வெறுத்த நேர்மையான தொழிலாளர்களிடையே இந்த கன்னைகளால் சில காலத்திற்குக் கணிசமான ஆதரவைப் பெற முடிந்தது. ஆனால் இந்தக் குழுக்களின் பரிணாம வளர்ச்சி அவற்றினது ஆதரவாளர்களின் போர்க்குணத்தால் அல்ல, மாறாக அவர்களின் வேலைத்திட்டத்தின் வர்க்கத் தன்மையால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர்கள் எங்கே பதவிகளைப் பெற்ற போதும், அவர்கள் பிரதியீடு செய்த அதிகாரத்துவவாதிகளை விட சிறந்தவர்களாக இருக்கவில்லை, பல இடங்களில் அவர்களை விடவும் மோசமாக இருந்தார்கள்.

ஒரு முக்கிய உதாரணத்தை எடுத்துக் கொண்டால், வெளியேறும் AFL-CIO தலைவர் ரிச்சர்ட் ட்ரம்கா, 1980களின் தொடக்கத்தில் ஜனநாயகத்திற்கான சுரங்கத் தொழிலாளர் அமைப்பின் வேட்பாளராக ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். (UMWA அதிகாரத்துவமோ அல்லது அதன் சொத்திருப்புக்களோ அல்ல, அவை 200 மில்லியன் டாலருக்கு ஊதிப் பெருத்தன, மாறாக) தொழிலாளர்களின் ஒரு பாரிய போர்குணமிக்க அமைப்பு என்பதிலிருந்து அதை அழித்தது தான் அவரின் நீண்டகால பாரம்பரியமாக இருந்தது. இப்போது அவரையடுத்து AFL-CIO இல் வரக்கூடியவராக இருப்பவர் சாரா நெல்சன், இவர் விமானச் சேவை சிப்பந்திகள் சங்கத்தின் தலைவரும் மற்றும் DSA இன் உறுப்பினரும் ஆவார்.

எவ்வாறெனினும் "ஜனநாயக தொழிற்சங்கவாதத்திற்கான" மெக்அலேவி மற்றும் அப்பத்திரிகையின் கருத்து, இப்போதிருக்கும் தொழிற்சங்க தலைமையின் மீது, பாசாங்குத்தனமாக கூட ஓர் உறுதியற்ற அல்லது நேர்மையற்ற வழியிலாவது ஒரு விமர்சனத்துடனோ அல்லது சாமானிய தொழிலாளர்களுக்கான முறையீட்டுடனோ சம்பந்தப்படாமல் இருக்குமளவுக்கு அது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. உண்மையில், ஜாகோபின் நீண்ட காலமாகவே தொழிற்சங்கங்களின் நிஜமான முன்வரலாறை மூடிமறைத்து வந்துள்ளது என்ற உண்மையைக் கொண்டு பார்த்தால், அப்பத்திரிகையின் வாசகர்கள் அவர்களின் வார்த்தை பயன்பாட்டாலேயே குழம்ப விடப்பட்டிருக்கலாம். சொல்லப் போனால் “ஜனநாயகமற்ற தொழிற்சங்கவாதத்தை" விதியாக வைத்திருக்க சாத்தியமா என்று கூட அவர்கள் கேட்கக்கூடும்.

எப்போதும் போல, அங்கே சுயநலன்களும் செயல்படுகின்றன. இந்த “பகிரங்க பேரம்பேசல்" வடிவத்திற்கு, ஆலோசகர்கள், வெளிப்புற ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஏனைய சிறுசிறு செயல்பாட்டாளர்களின் ஒரு கூட்டத்தை நியமிக்க வேண்டியிருக்கும். மெக்அலேவி அவர் வலைத்தளத்தில் அவரே இதற்கான சேவைகளை வழங்குகிறார் என்பதோடு, தொழிற்சங்கத்தின் உயர் மட்டங்களில் தொழில் நியமனத்திற்கான சேவைகளைத் தொடங்கி, அதிகாரத்துவ அடுக்குகளுக்குள் "சீர்திருத்தவாதிகளாக" நம்பகத்தன்மையை வழங்கி புதுப்பொலிவூட்டி வருகிறார்.

இறுதியில், "ஜனநாயக தொழிற்சங்கங்கள் நல்லெண்ணங்களைப் பெறுகின்றன" என்பது தொழிலாளர்களுக்காக அல்ல, மாறாக மெக்அலெவி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தைச் சுற்றியுள்ள மற்ற செல்வசெழிப்பான அடுக்குகளுக்காக ஆகும்.

நிஜமான தொழிலாளர்களினது ஜனநாயகத்திற்கான முதல் நிபந்தனையே தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்தும் மற்றும் அதற்கு எதிராகவும் தொழிலாளர்களின் விடுதலையாகும். தொழிற்சங்கங்களின் குறுகிய தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு கண்ணோட்டத்திற்கு எதிராக, தொழிலாளர்கள், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தின் அடிப்படையில், உலகெங்கிலுமான தொழிலாளர்களுடன் சாத்தியமானளவுக்குப் பரந்த சர்வதேச உறவுகளை வளர்த்துக் கொள்ள போராட வேண்டும்.

சாமானிய தொழிலாளர் குழுக்களே இதை அடைவதற்கான அமைப்புரீதியிலான வடிவமாகும். பேரம்பேசும் நடைமுறையில் தொழிலாளர்கள் உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென இந்த குழுக்கள் வலியுறுத்த வேண்டும். ஆனால் இது அமைப்புரீதியிலான செயல்திறன் மூலமாக அல்ல, மாறாக தொழிலாளர்கள் தொழிற்சங்க எந்திரத்தின் குண்டர்களிடமிருந்தும் மற்றும் அவர்களுக்கு எதிராகவும் பிரத்யேகமாக அவர்களின் சொந்த அதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும்.

Loading