முன்னோக்கு

சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜிக்களின் நிர்மூலமாக்கல் போர் முடிவடைந்து எண்பது ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஜூன் 22, 1941 அன்று, ஜேர்மன் இராணுவம் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. இதற்கு முன்னர் மனிதகுலம் அனுபவித்திராத மட்டத்திலான ஒரு போர் தொடங்கியது. இதில் மத்திய காலத்தின் காட்டுமிராண்டித்தனம் 20 ஆம் நூற்றாண்டின் மிக நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்தது.

இதற்கு முன்னரும் மில்லியன் கணக்கான உயிரிழப்புகளுடன் பயங்கரமான போர்கள் நடந்துள்ளன. முதலாம் உலகப் போரின் பீரங்கிகள் அமைதியாகி 23 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தன. ஜேர்மன், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் இளைஞர்கள் இயந்திர துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட வேர்டன் (Verdun) மற்றும் மார்ன் (Marne) இன் இரத்தத்தில் தோய்ந்த நிலங்கள் மனித காட்டுமிராண்டித்தனத்தின் நினைவுச்சின்னமாக கருதப்பட்டன.

ஆனால் சோவியத் ஒன்றியத்தின் மீதான தாக்குதல் இன்னும் மோசமானதாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே, இது ஒரு நிர்மூலமாக்கும் போராக திட்டமிடப்பட்டது. இது பிரதேசம், மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளுக்கான போர் மட்டுமல்ல, இனவாதம் மற்றும் சித்தாந்தத்தால் உந்தப்பட்ட போராகவும் இருந்தது. போல்ஷிவிசத்தின் அழிவு, யூதர்களை அழித்தல் மற்றும் 20 ஆண்டுகளாக ஹிட்லர் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த கிழக்கில் உயிர்வாழும் இடத்தை உருவாக்குதல் (Lebensraum) ஆகியவை இப்போது நடைமுறையில் நிகழ்த்தப்பட்டுள்ளன.

"மேற்கில் உள்ள பலரின் நம்பிக்கைக்கு மாறாக, ஹிட்லர் கிழக்கில் தவறாக போரில் இறங்கவில்லை" என்று வரலாற்றாசிரியர் ஸ்டீபன் ஃபிரிட்ஸ் தனது முக்கிய படைப்பான கிழக்கு யுத்தம்: ஹிட்லரின் கிழக்கை நிர்மூலமாக்கும் போர் என்பதில் எழுதினார். “அவரைப் பொறுத்தவரை, ‘சரியான’ போர் எப்போதுமே சோவியத் யூனியனுக்கு எதிரானது. ஏனெனில் அவருக்கு ஜேர்மனியின் விதி கிழக்கில் உயிர்வாழும் பிராந்தியத்தை அடைவதையும்‘ யூத பிரச்சனையை ’தீர்ப்பதையும் சார்ந்திருந்தது. இவை இரண்டும் சோவியத் யூனியனை அழிப்பதில் தங்கியிருந்தது. இந்த நோக்கங்களில் எது மிக முக்கியமானது? ஹிட்லரின் கருத்துக்களைப் பொறுத்தவரை, அவற்றில் ஒன்றிற்கு முன்னுரிமை கொடுப்பது அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க முயற்சிப்பது செயற்கையானதாக இருக்கும். அவரைப் பொறுத்தவரை, ‘யூத-போல்ஷிவிசத்திற்கும்’ மற்றும் உயிர்வாழும் பிராந்தியத்தை அடைவதற்கும் எதிரான போர் விரிவானதும் மற்றும் ஒரே காரணத்திலிருந்து எழுகின்றது.”

கைதுசெய்யப்பட்ட கிளர்ச்சிக்காரர்களுக்கு மரணதண்டனை (Bundesarchiv Bild 101I-031-2436-05A / CC BY-SA 3.0)

அதிகாலை 3 மணியளவில் 3 மில்லியன் ஜேர்மன் படையினர், 600,000 வாகனங்கள், 3,500 டாங்கிகள், 7,000 பீரங்கிகள் மற்றும் 3,900 விமானங்கள் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தபோது, அவர்கள் மில்லியன் கணக்கான மக்களை உடல்ரீதியாக அழிப்பதற்கான விரிவான உத்தரவுகளையும் திட்டங்களையும் கொண்டு சென்றனர். படையெடுப்பில் நான்கு செயல்பாட்டு அலகுகள் (Einsatzgruppen) இருந்தன. அதன் உறுப்பினர்கள் கவனமாக தேர்வு செய்யப்பட்டு மூன்றாம் குடியரசின் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான ரைய்ன்ஹார்ட் ஹெய்ட்ரிச் (Reinhard Heydrich) ஆல் மூன்று மாதங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டிருந்தனர். இந்த 3,000 உறுப்பினர்களைக் கொண்ட “இனப்படுகொலையின் அதிரடிப்படையின்” (Ian Kershaw) கடமை அவர்களின் கைகளில் அகப்படும் கம்யூனிஸ்டுகள்,கிளர்ச்சியாளர்கள், யூதர்கள் மற்றும் சிந்தி இனத்தவர்கள் ஆகியோரை உடனடியாகக் கொல்வதாகும்.

"நான்கு செயல்பாட்டு அலகுகளினதும் அவர்களது உதவியாளர்களும் பார்பரோசா நடவடிக்கை என்று அழைக்கப்பட்டதன் முதல் ஆறு மாதங்களில் 500,000 க்கும் மேற்பட்ட சோவியத் யூதர்களைக் கொன்றனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் மற்றும் சோவியத் போர் கைதிகளின் கொலையானது, வேர்மாக்ட்டின் (Wehrmacht - 1935 முதல் 1945 வரை நாஜி ஜேர்மனியின் ஒருங்கிணைந்த ஆயுதப் படை) விருப்பமும் மற்றும் செயலூக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை” என்று ஃபிரிட்ஸ் எழுதுகிறார்.

பாரிய படுகொலையில் வேர்மாக்ட் தீவிர உடந்தையாக இருந்தமை பல தசாப்தங்களாக ஜேர்மனியில் மறுக்கப்பட்டிருந்ததுடன், 1999 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட “நிர்மூலமாக்கும் போர். வேர்மாக்ட்டின் குற்றங்கள்” என்ற கண்காட்சியின் தணிக்கைக்கும் வழிவகுத்தது. அதில் அவை மறுக்கமுடியாமல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 1941 ஜனவரியில், ஹிட்லர் தேர்ந்தெடுக்கப்பட்ட SS பாதுகாப்பு படையணி தலைவர்களுக்கு கிழக்கில் ஸ்லாவிய மக்கள் தொகை 30 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும் என ஒரு இலக்கை வெளியிட்டார். இதையடுத்து, முழு இராணுவ ஊழியர்களும் இனவெறி கோட்பாட்டாளர்களும் பின்னர் "தலைவரின் விருப்பத்தை" யார் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்ற துல்லியமான உத்தரவுகளாக மாற்றிக்கொண்டனர்.

தளபதிகள் இந்த திட்டங்களில் கையெழுத்திட்டு அவை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தனர். ஃபிரிட்ஸின் கூற்றுப்படி, போரின் போது “இராணுவ அதிகாரிகள் மற்றும் SS பாதுகாப்பு படையணி அதிகாரிகளுக்கிடையில் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களின் பரிமாற்றத்தை இராணுவ அதிகாரிகள் தொடக்கி வைத்தனர். "அங்கு நடந்த நிகழ்வுகள் நிரூபிக்கப்பட்டபடி, மேலே இருந்து வந்த குற்றவியல் உத்தரவுகளும் கீழே இருந்து பழிவாங்கும் தூண்டுதல்களும் வன்முறையின் சூழலை உருவாக்கி, கொலை பற்றிய எந்தவொரு கட்டுப்பாடுகளையும் நீக்கியது".

ஜேர்மன் பேராசிரியர்கள், கொலைகார திட்டங்களை போலி-விஞ்ஞான வாதங்களால் அலங்கரித்தனர். ஜூன் 1942 இல், கிழக்கிற்கான பொதுத் திட்டம் (General Plan East) பல கல்வியாளர்களின் ஆராய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. ஜேர்மனியர்களை குடியேற்றுவதற்கான இடத்தை உருவாக்க மில்லியன் கணக்கான ஸ்லாவியர்கள் கொல்லப்படுவதற்கு இது திட்டமிட்டது. புகழ்பெற்ற அறிஞர்களின் கூட்டணியான ஜேர்மன் ஆய்விற்கான அமைப்பு (DFG) ஏற்கனவே வைமார் குடியரசின் போது "ஸ்லாவிய மக்கள் மீது ஜேர்மனிய மக்களின் பொதுவான மேன்மையை வலியுறுத்தியதுடன்" மற்றும் "இனங்கள் பற்றிய ஆராய்ச்சியை ஒரு பயன்பாட்டு விஞ்ஞானமாக புரிந்துகொள்ளவேண்டும்" போன்ற ஆய்வுக்கு நிதியளித்தது.

சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பிற்கான குறியீட்டு பெயராக இருந்த பார்பரோசா (Barbarossa) நடவடிக்கைக்கான செயல்பாட்டுத் திட்டங்கள், 1941 இன் ஆரம்பத்தில் சான்சிலர் அலுவலகம், SS, குடியரசின் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வேர்மாக்ட் உயர் கட்டளையகம் ஆகியவற்றிற்கு இடையிலான பல கலந்துரையாடல்களினால் உருவாக்கப்பட்டது. "போல்ஷிவிக் தலைமைகள் மற்றும் ஆணையாளர்கள்", "யூத-போல்ஷிவிக் புத்திஜீவிகள்" மற்றும் "சோசலிச கருத்துக்கள்" ஆகியவற்றை அழிப்பதே இலக்கு என மீண்டும் மீண்டும் வடிவமைக்கப்பட்டது.

மே 2 அன்று, பல மாநில செயலாளர்களும் முன்னணி இராணுவ தளபதிகளும் போர் பொருளாதாரத்திற்கு பார்பரோசா நடவடிக்கையின் விளைவுகள் குறித்து விவாதித்தனர். ஒரு சுருக்கமான குறிப்பின் படி, "இந்த நாட்டிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினி கிடப்பார்கள்" என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

மே 13 அன்று, வேர்மாக்ட்டின் உயர் கட்டளை தலைவரான வில்ஹெல்ம் கைட்டெல் இராணுவ நீதித்துறை அங்கீகார உத்தரவை பிறப்பித்தார். அது, வேர்மாக்டிற்கு எதிராக பொதுமக்கள் செய்யும் குற்றங்கள் இனி நீதிமன்றங்களால் கையாளப்பட மாட்டாது, ஆனால் ஒரு அதிகாரியின் உத்தரவின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக சுடப்படுவார்கள் என்று உத்தரவிட்டது. முழு பகுதிகளுக்கும் எதிரான கூட்டு தண்டனையின் வன்முறைச் செயல்களும் அனுமதிக்கப்பட்டன. இதனால் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் (ஆண்கள் போர்முனையில் இருந்தனர்) பெரிய கட்டிடங்களில் ஒன்றாகக் அடைக்கப்பட்டு இயந்திர துப்பாக்கிகளால் சுடப்பட்டனர். இதில் தப்பியவர்கள் கட்டிடங்கள் எரிக்கப்படுவதற்கு முன்பு, உயிருடன் எரிக்கப்பட்டனர்.

ஜூன் 6 அன்று, படையெடுப்பிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், லெப்டினன்ட் ஜெனரல் ஆல்பிரட் ஜோடல் (Alfred Jodl) இன் வழிகாட்டுதலின் கீழ் உயர் கட்டளையகம் ஒரு ஆணையாளர் உத்தரவை பிறப்பித்தது. அது, சிவில் மற்றும் இராணுவ அரசியல் ஆணையாளர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் படையெடுக்கும் சக்திகள் "கொள்கையளவில் அவற்றை உடனடியாக ஒரு ஆயுதத்தால் அகற்ற வேண்டும்" என்றும் அது கோரியது. இந்த உத்தரவின் அடிப்படையில் மட்டும், குறைந்தது 140,000 மரணதண்டனைகளுக்கு சான்றுகள் உள்ளன. ஆனால் மதிப்பீடுகளின் படி இது 600,000 வரை இருக்கலாம்.

ஜூன் 22 அன்று, நன்கு தயாரிக்கப்பட்ட கொலை எந்திரம் இயக்கத்திற்கு வந்தது என்பதை இது காட்டுகிறது. கடைசி தார்மீக தடைகள் ஏற்கனவே போலந்தில் முறியடிக்கப்பட்டன. அங்கு வேர்மாக்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிரமித்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. போலந்து பிரதேசம் பின்னர் மோசமான மரண முகாம்களுக்கான இடமாகவும் செயல்பட்டது. ஆனால் ஐரோப்பா முழுவதிலும் இருந்து மில்லியன் கணக்கான யூதர்கள் அவுஷ்விட்ஸ் மற்றும் மஜ்டானெக் (Majdanek) இல் உள்ள எரிவாயு அறைகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, ஜேர்மன் துருப்புக்கள் ஏற்கனவே சோவியத் ஒன்றியத்தில் நூறாயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்துவிட்டிருந்தது.

1941 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் உக்கிரேனின் கியேவ் நகருக்கு அருகிலுள்ள பாபி யார் (Babi Yar) பள்ளத்தாக்கில் மிகவும் அறியப்பட்ட படுகொலைகள் நிகழ்ந்தன. அங்கு ஒரு சிறப்பு நடவடிக்கை பிரிவு உக்ரேனிய தலைநகரில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 33,771 யூதர்களை இரண்டு நாட்கள் இடைவெளியில் சுட்டுக் கொன்றது. அடுத்தடுத்த மாதங்களில், மேலும் 70,000 பொதுமக்கள் அதே பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டனர்.

நிர்மூலமாக்கும் போரின் இருப்புநிலை கணக்கெடுப்பு பயங்கரமானது. மொத்தம் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் போருக்கு பலியானார்கள். சோவியத் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய விஞ்ஞான அமைப்பு ஆகியவை 1987 மற்றும் 1991 க்கு இடையிலான புள்ளிவிவரங்களை மறுஆய்வு செய்த ஒரு ஆணைக்குழு இந்த எண்ணிக்கையை 37 மில்லியனாக உயர்த்தியது. இவர்களில், 8.6 மில்லியன்கள் மட்டுமே படையினர், 27 மில்லியனிலிருந்து 28 மில்லியன்கள் பொதுமக்களாவார். அவர்களில் பலர் பசி மற்றும் தாங்க முடியாத வாழ்க்கை நிலைமைகளால் உயிர் இழந்தனர். வேர்மாக்ட் வேண்டுமென்றே பட்டினிபோட்ட லெனின்கிராட் நகரத்தின் 28 மாத முற்றுகை 470,000 மக்களின் உயிரைக் கொன்றது.

வேர்மாக்டின் ஏராளமான போர்க்குற்றங்களில் 3 மில்லியன் சோவியத் போர்க் கைதிகள் கொல்லப்பட்டதும் அடங்கும். செப்டம்பர் 8 ம் தேதி, உயர் கட்டளையகம் செம்படையின் இராணுவ வீரர்களை சர்வதேச சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து அகற்றும் ஒரு உத்தரவை பிறப்பித்தது: “போல்ஷிவிக் இராணுவவீரர் ஜெனீவா உடன்பாட்டின் கீழ் ஒரு கெளரவமான சிப்பாயாக கையாளப்படுவதற்கான எந்த உரிமையையும் இழந்துவிட்டார்… சோவியத் போர் கைதிகளுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துதல் பொதுவாக சட்டபூர்வமாக்கப்பட்டது."

போர்க் கைதிகளில் சுமார் 60 சதவீதம் பேர் தங்கள் உயிர்களை இழந்தனர். அவர்கள் கொலை செய்யப்படாவிட்டால் அல்லது பசியால் இறக்காவிட்டால், அவர்கள் வதை முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்கள் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில், ஜேர்மன் போர் முயற்சிக்கு கட்டாய உழைப்பை செலுத்தினர்.

போரின் போக்கு

போரின் முதல் வாரங்களில், வேர்மாக்ட் சோவியத் ஒன்றியத்திற்குள் வேகமாக முன்னேறியது. அதன் ஆரம்ப வெற்றிகளுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினின் குற்றவியல் கொள்கைகளுக்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்திய சலுகை பெற்ற அதிகாரத்துவத்திற்கும் நன்றி தெரிவிக்கவேண்டியிருந்தது. அவர்கள் சோவியத் ஒன்றியத்தை நிர்க்கதியாக்கியதோடு அதை முற்றிலும் போருக்கு தயாரிப்பின்றி விட்டுவிட்டிருந்தனர்.

அக்டோபர் புரட்சிக்கு தலைமைதாங்கிய கிட்டத்தட்ட முழு தலைமையையும், நூறாயிரக்கணக்கான விசுவாசமான கம்யூனிஸ்டுகள் மற்றும் புத்திஜீவிகளின் உயிரையும் கொன்ற பெரும் பயங்கரத்தின் போது, ஸ்ராலின் செம்படையின் தலைமையை துண்டித்துவிட்டார். செம்படையின் 178,000 தலைமைப் படைகளில் 35,000 பேர் கைது செய்யப்பட்டு சிலர் தூக்கிலிடப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின்போது இறந்ததை விட இரண்டு மடங்கு தளபதிகள் இதன்போது கொல்லப்பட்டனர். இதில் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ், உள்நாட்டுப் போரின்போது செம்படைக்குள் தலைமைக்கு உயர்ந்த துகாசெவ்ஸ்கி, யாகிர், கமர்னிக் மற்றும் உபோரிவிட்ச் (Tukhachevsky, Yakir, Gamarnik, Uborivitch) போன்ற சிறந்த இராணுவத் தளபதிகளும் அடங்குவர்.

உள்நாட்டுப் போரின் நெருப்பில் ஞானஸ்நானம் பெற்ற இந்த தலைமுறையானது, "திடீரென்று வெகுஜனங்களுக்கு மேலே உயர்ந்து, ஒழுங்கமைப்பதற்கான திறமையையும் இராணுவத் தலைமைக்கான திறனையும் வெளிப்படுத்தியது". "ஒரு பெரிய அளவிலான போராட்டத்தில் அவர்களின் திறனை உறுதிப்படுத்தி", பின்னர் மேலும் இராணுவ பயிற்சியை பெற்றுக்கொண்டது என 1934 இல் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். "இராணுவ தத்துவம் அவர்களின் சிந்தனையை ஒழுங்குபடுத்துவதற்கு உதவியது. ஆனால் உள்நாட்டுப் போரின் தூண்டுதலளித்த நடவடிக்கைகளினால் உறுதிப்படுத்தப்பட்ட வைராக்கியத்தைக் கொல்லவில்லை." அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினுக்கு அடிபணிந்ததன் மூலம் தமது குணாதிசயங்களை காட்டிய அனுபவம் குறைந்த அதிகாரிகளால் மாற்றப்பட்டனர்.

நாஜி ஜேர்மனியின் வெளிநாட்டமைச்சர் ரிப்பன்ட்ரோப் உடன் ஸ்ராலின் கைகுலுக்குகிறார்

தனது பங்கிற்கு, ஸ்ராலின் தனது சொந்த உளவுத்துறை மற்றும் மேற்கத்திய உளவு அமைப்புகளால் எச்சரிக்கப்பட்டிருந்தாலும், ஜேர்மன் படையெடுப்பால் முற்றிலும் ஆச்சரியமடைந்தார். கம்யூனிஸ்ட் உளவாளி ரிச்சார்ட் சோர்ஜ் ஜப்பானில் இருந்து கால அட்டவணை உட்பட தாக்குதலின் முழு திட்டத்தையும் வழங்கினார். ஆனால் ஸ்ராலின் அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, ஆகஸ்ட் 1939 இல் ஹிட்லருடன் அவர் மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஏற்கனவே பிரிட்டனுடன் போரில் இருந்த ஜேர்மனி, இரண்டு முனைகளிலுமான ஒரு போர் என்ற ஆபத்தை விரும்பாது என்று அவர் உறுதியாக நம்பினார். ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், ஸ்ராலின் பல நாட்கள் காணாமல் போனதோடு, சோவியத் ஒன்றியத்தை நடைமுறையில் தலைமையற்றதாக விட்டுவிட்டார்.

ஆனால் அக்டோபர் புரட்சி, சோவியத் தொழிலாள வர்க்கத்தில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தது. ஸ்ராலின் அதன் தலைவர்களைக் கொலை செய்திருக்கலாம், ஆனால் அவர் அதன் சாதனைகளான உற்பத்தி சாதனங்களின் மீதான அரசு உடமை மற்றும் திட்டமிட்ட பொருளாதாரம் ஆகியவற்றை அழிக்கவில்லை. இவை இப்போது மிகப்பெரிய முன்னேற்றங்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அது விருப்பத்திற்கு மாறாக அணிதிரட்டப்பட்ட அரை-அடிமை விவசாயிகளின் ஜார் இராணுவத்திற்கு எதிராக போராடவில்லை என்பதை வேர்மாக்ட் விரைவில் உணர்ந்துகொண்டது. ஆனால் இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரத்தின் மத்தியிலும் அடிபணியாத, அதற்கு பதிலாக ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலையும் உருவாக்கி தியாகம் செய்ய தயாரான ஒரு தொழிலாளர் அரசின் இராணுவத்திற்கு எதிராக போராடுவதை கண்டுகொண்டது.

செம்படையை கட்டிய ட்ரொட்ஸ்கியும் இதை 1934 இலேயே முன் கணித்துள்ளார். சிவப்பு போர்வீரர் எவ்வாறு ஜாரிச சிப்பாயிடமிருந்து பாரியளவில் வேறுபடுகிறார் என்பது பற்றி அவர் பின்வருமாறு எழுதினார்: “தடைகளுக்கு முன்னே செயலற்ற தன்மை மற்றும் அடிபணிந்து சரணடைதல் ஆகியவற்றின் மரபு, அரசியல் மற்றும் சமூக தைரியத்தின் மரபுவழிபாட்டு மற்றும் தொழில்நுட்ப அமெரிக்கவாதத்தினால் பின்தள்ளப்பட்டுவிட்டது. 1905 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வரும் ரஷ்ய புரட்சி, அதன் நீரோட்டத்தை போரின் பாதையினுள் செலுத்த நிர்பந்திக்கப்படுமானால், அது ஒரு பயங்கர மற்றும் பெரும் சக்தியை கட்டவிழ்த்துவிடும்.”

போர் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தாலும், 6 மில்லியனுக்கும் அதிகமான படையினர் ஜேர்மன் தரப்பில் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமடைந்தனர் என்றாலும், வேர்மாக்டிற்கு வெற்றிக்கான வாய்ப்பு இல்லை என்பது முதல் பல வாரங்களுக்குப் பின்னர் ஏற்கனவே தெளிவாகத் தெரிந்தது. "குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவு வீழ்ச்சியடையத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, முதல் இலையுதிர்கால மழை பெரும்பாலான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு முன்பே, உண்மையில் 1941 ஆம் ஆண்டின் கோடைகாலத்திலேயே, பார்பரோசா நடவடிக்கை ஒரு பலனற்ற பயிற்சியாக இருந்தது, தவிர்க்க முடியாதபடி தோல்வியடைய தீர்மானிக்ப்பட்டுவிட்டது என இராணுவ வரலாற்றாசிரியர் டேவிட் ஸ்டாஹெல் (David Stahel) எழுதினார்.

சோவியத் Ilyushin Il-2 விமானம் (RIA Novosti / archive Fyodor Levshin / CC-BY-SA 3.0)

போருக்கு மிகவும் தீர்க்கமான ஆயுத உற்பத்தித் துறையில், சோவியத் திட்டமிட்ட பொருளாதாரம் தனியார் சொத்துக்களின் அடிப்படையிலான ஜேர்மன் பொருளாதாரத்தை விட மிக உயர்ந்ததாக நிரூபிக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டில், ஜேர்மன் தொழிற்துறை 5,200 டாங்கிகள், 11,776 விமானங்கள் மற்றும் 7 மில்லிமீட்டரை விட பெரிய 7,000 பீரங்கித் துப்பாக்கிகளை உற்பத்தி செய்தது. 1941 முதல் பாதியில், சோவியத் பொருளாதாரம் 1,800 டாங்கிகள், 3,900 விமானங்கள் மற்றும் 15,600 பீரங்கிகளை மட்டுமே வைத்திருந்தது. ஆனால் ஆண்டின் இரண்டாம் பாதியில், முழு தொழிற்சாலைகளும் கிழக்கிற்கு மாற்றப்பட்டாலும், போரினால் ஏற்பட்ட அழிவையும் மீறி ஆயுத உற்பத்தியை அதிகரித்தது. 4,740 டாங்கிகள், 8,000 விமானங்கள் மற்றும் 55,500 பீரங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டன. 1942 ஆம் ஆண்டில், ஜேர்மனி 15,409 விமானங்களை உற்பத்தி செய்தது. சோவியத் ஒன்றியம் 25,436 விமானங்களை வைத்திருந்தது. ஜேர்மனி 9,200 டாங்கிகளை உற்பத்தி செய்தாலும், சோவியத் ஒன்றியம் 24,446 உற்பத்தி செய்தது.

ஸ்ராலினிச சீரழிவு இருந்தபோதிலும், அக்டோபர் புரட்சியில் இருந்து தோன்றிய சோவியத் ஒன்றியம், மனிதகுலத்தை காட்டுமிராண்டித்தனத்திற்குள் தள்ளுவதற்கு எதிராக ஒரு தீர்க்கமான தடையாக செயல்பட்டது. பொறுப்புமிக்க வரலாற்றாசிரியர்களுக்கு ஹிட்லரின் வெற்றியின் அர்த்தம் என்னவாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமிருக்கவில்லை.

ஸ்டாஹெல் பின்வருமாறு குறிப்பிட்டார், “கிழக்கில் ஹிட்லரின் புதிய போர் விரிவடைந்து வரும் உலகப் போரின் எதிர்காலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக இருக்கும் என அந்த நேரத்தில் எல்லா தரப்பினராலும் புரிந்து கொள்ளப்பட்டது. ஒன்று ஹிட்லர் விரைவில் ஒரு மகத்தான சாம்ராஜ்யத்தின் அண்மிக்கமுடியாத தலைவராக கிட்டத்தட்ட நிற்பார் அல்லது அவரது மிகப் பெரிய பிரச்சாரம் தடுமாறும், (அந்த நேரத்தில் எந்த அரசாங்கமும் இது சாத்தியமில்லை என்று நம்பியது) இதன் விளைவாக ஆபத்தான நேச நாட்டு சுற்றிவளைப்பு ஹிட்லரை என்றென்றும் அகற்றுவதில் முடிவடையும் என நம்பப்பட்டது. ஆகவே, சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் படையெடுப்பு உலக விவகாரங்களில் ஒரு அசாதாரண திருப்புமுனையை பிரதிபலிக்கிறது என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்டதல்ல. இது இரண்டாம் உலகப் போரைப் பற்றிய நமது புரிதலுக்கு மட்டுமல்ல, உண்மையில் நவீன வரலாற்றின் மிகமுக்கியமான நிகழ்வு என்றவகையிலும் கூட”.

போருக்கான மூலகாரணங்கள்

ஜேர்மனியின் தோல்விக்குப் பின்னர், நிர்மூலமாக்கும் போருக்கு ஜேர்மனியில் யாரும் பொறுப்பேற்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களும் உத்தரவுகளைப் பின்பற்றும் மக்களும் மட்டுமே இருந்தனர் — குற்றவாளிகள் இல்லை என்று கூறப்பட்டது. எல்லாவற்றிற்கும் ஹிட்லர் தான் காரணம். இரண்டாம் உலகப் போர் “ஹிட்லரின் போராகும்”.

வேர்மாக்டின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு சற்று முன்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட அடோல்ஃப் ஹிட்லர், அசாதாரண அதிகாரங்களைக் கொண்டிருந்ததுடன் மற்றும் தனிப்பட்ட முறையில் அனைத்து முக்கிய அரசியல் மற்றும் இராணுவ முடிவுகளிலும் ஈடுபட்டார். இருந்தாலும், அவர் வெறுமனே முதலாளித்துவ சமுதாயத்தால் கோரப்பட்ட ஒரு பொருளை வழங்கியவராவார். இந்த தோல்வியுற்ற ஆஸ்திரிய கலைஞரும், போர்க்குணமிக்க போர்வீரரும் எவ்வாறு ஜேர்மனியின் "தலைவர்" நிலைக்கு உயர முடியும் என்ற கேள்விக்கான பதில் தவிர்க்க முடியாமல் வணிக, அரசியல், இராணுவம், பிரபுத்துவம், கலாச்சார உயரடுக்குகளிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் அவருக்கு சக்திவாய்ந்த ஆதரவாளர்கள் இருந்தனர் என்ற முடிவுக்கு வழிவகுக்கிறது.

சிறுவயதிலிருந்தே அவருக்கு நன்கு அறியப்பட்ட ஊக்குவிப்பாளர்களில் ஒருவரும் முதல் உலகப் போரின்போது இராணுவத்தின் இரண்டாவது தளபதியாக இருந்தவருமான ஜெனரல் எரிக் லுடென்டோர்ஃப் (Erich Ludendorff), 1923 ஆம் ஆண்டு முனிச்சில் ஹிட்லருடன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கினார். பெரிய தொழிலதிபர்களான ஃபிரிட்ஸ் தைசன் மற்றும் எரிக் கிர்ன்டோர்ஃப், பிரஷ்யாவின் முடிக்குரிய இளவரசர் வில்ஹெல்ம் மற்றும் இசையமைப்பாளரின் விதவை மனைவி கோசிமா வாக்னர் ஆகியோரும் அடங்குவர்.

ஹிட்லரின் முதல் அமைச்சரவையில் பொருளாதார அமைச்சராக இருந்த ஜேர்மன் தேசியவாத ஆயுத தொழிலதிபர் ஆல்பிரட் ஹுகன்பெர்க்கின் ஊடக சாம்ராஜ்யம் அவரது எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தது. ஜனவரி 1932 இல், டுஸ்ஸெல்டோர்ஃப் நகர தொழிலதிபர்கள் குழுவில் ஹிட்லரின் ஒரு பிரசன்னம் பெருவணிகத்தின் மிக முக்கியமான வட்டங்களின் அரசியல் மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதை உறுதிப்படுத்தியது.

ஹிட்லருக்கு பலாத்காரத்தால் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியிருக்கவில்லை. அது அவருக்கு ஒரு வெள்ளி தட்டில் வைத்து வழங்கப்பட்டது. ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த நேரத்தில், நாஜிக்கள் ஆழ்ந்த அரசியல் மற்றும் நிதி நெருக்கடியில் இருந்தனர். நவம்பர் 1932 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கட்சி வெறும் 33 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது கடந்த ஜூலை மாதத்தை விட 4 சதவீதம் குறைவாகவும், இரண்டு பெரிய தொழிலாளர் கட்சிகளான சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை விட 4 சதவீதம் குறைவாகவும் இருந்தது. ஹிட்லர் தற்கொலை செய்வது பற்றிக்கூட சிந்தித்திருந்தார்.

ஜனவரி 1933 இல் ஹிட்லரை சான்சிலராக நியமிப்பதற்கான முடிவு இறுதியில் அரசின் நலன்களையும் பெரிய தொழிலதிபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அரசியல்வாதி ஜனாதிபதி பௌல் ஃவொன் ஹிண்டென்பேர்க்கை சுற்றிய ஒரு சிறிய வட்ட சதிகாரர்களால் எடுக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு, வதை முகாம்கள் நிரப்பப்பட்ட நிலையில், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் ஹிட்லரை ஒரு சர்வாதிகாரியாக மாற்றியமைக்கும் சிறப்பு அதிகாரத்திற்கான சட்டத்திற்கு வாக்களித்தன.

போரின் போது, ஹிட்லர் தனது கொலைகார உத்தரவுகளை நிறைவேற்ற ஆயதப்படைகளின் மத்தியில் ஆயிரக்கணக்கான உதவியாளர்களையும், மக்களை அச்சுறுத்தவும் மற்றும் யூதர்களை அழிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரச அதிகாரிகளையும் கண்டுபிடித்தார். தொழில்துறையில், இது போர் உற்பத்தி மற்றும் கட்டாய உழைப்பு மூலம் அதன் இலாபத்தை அதிகரித்தது. பேராசிரியர்களிடையே இன தத்துவத்தையும் மற்றும் தன்னிச்சையான நீதிக்கு விஞ்ஞானரீதியான தோற்றத்தை கொடுத்தவர்களையும், மேலும் பலரையும் கண்டுகொண்டார்.

நிர்மூலமாக்கும் போர் சந்தேகத்திற்கு இடமின்றி போரை விரும்பிய "தலைவரின் விருப்பத்திலிருந்து" எழவில்லை. ஆளும் உயரடுக்கினர் ஹிட்லரை ஊக்குவித்து, அவரை அரச தலைவராக்கினர் ஏனென்றால், அவர்கள் போரை விரும்பினர், அது தேவைப்பட்டது. முதலாளித்துவ அமைப்பின் தீர்க்கமுடியாத முரண்பாடுகளில் அது ஆழமான புறநிலை காரணங்களைக் கொண்டிருந்தது.

ட்ரொட்ஸ்கி செம்படையின் வீரர்களுடன் பேசுகிறார்

பாசிசம் மற்றும் போரின் ஆபத்தை வேறு எவரையும் விட அதிகமாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டிய லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பிற்கு ஒரு வருடம் முன்னதாக பின்வருமாறு எழுதினார். “கள்ளத்தனம் இல்லாத பாசிசத்தின் ஒரே அம்சம் அதன் அதிகாரம், அடிபணிய செய்தல் மற்றும் கொள்ளைக்கான விருப்பமாகும். பாசிசம் என்பது ஏகாதிபத்திய கலாச்சாரத்தின் வேதியியல் ரீதியாக தூய்மையான வடிகட்டிய வடிவமாகும்… அவரது மண்டை ஓட்டில் ஒரு கணக்கிடும் இயந்திரமும், கைகளில் வரம்பற்ற சக்தியும் கொண்ட இந்த ஜேர்மன் வலிப்பு பிடித்தவர் வானத்திலிருந்து விழவில்லை அல்லது நரகத்திலிருந்து வெளியே வரவில்லை: அவர் ஏகாதிபத்தியத்தின் அனைத்து அழிவு சக்திகளின் ஆளுமை தவிர வேறில்லை. செங்கிஸ் கான் மற்றும் டமர்லேன் ஆகியோர் பலவீனமான ஆயர் மக்களுக்கு கடவுளின் துன்பங்களை அழிப்பதாக தோன்றியது போலவே, உண்மையில் அவர்கள் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் குடியேறிய பகுதிகளை கொள்ளையடிப்பதற்கான அனைத்து ஆயர் பழங்குடியினரின் தேவையையும் வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எனவே ஹிட்லர், பழையதை உலுக்கினார் காலனித்துவ சக்திகள் அவற்றின் அஸ்திவாரங்களுக்கு, ஏகாதிபத்திய விருப்பத்திற்கு அதிகாரத்திற்கு இன்னும் முடிக்கப்பட்ட வெளிப்பாட்டைக் கொடுப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாது. ஹிட்லர் மூலம், உலக முதலாளித்துவம், தனது சொந்த முட்டுக்கட்டைகளால் விரக்திக்குத் தள்ளப்பட்டு, தனது குடலுக்குள் ஒரு கூர்மையான கத்தியை அழுத்தத் தொடங்கியுள்ளது

ஏற்கனவே முதல் உலகப் போரின்போது, ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஐரோப்பாவை அதன் நலன்களுக்கு அடிபணியச் செய்ய முயன்று தோல்வியுற்றது. இது இப்போது இரண்டாவது முறையாக முயற்சித்தது.

முதல் உலகப் போர் என்பது ஒரு ஏகாதிபத்தியப் போராக இருந்தது, அதில் அனைத்து முக்கிய சக்திகளும் உலகத்தை மறுபங்கிடுவதற்கும் உலகப் பொருளாதாரத்தை தங்கள் மேலாதிக்கத்திற்குக் கீழ்ப்படுத்துவதற்கும் போராடின.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் குறிப்பாக ஆக்கிரோஷமான பாத்திரத்தை வகித்தது. ஏனெனில் அதன் முதலாளித்துவம் தாமதமான முதலாளித்துவ புரட்சியின் காரணமாக தாமதமாக அபிவிருத்தியடைந்தது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களின் உதவியானால் ஒரு மகத்தான ஆற்றலை உருவாக்கியது. ஐரோப்பாவின் நடுவில் சிக்கி, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனித்துவ சக்திகளையும், இன்னும் சக்திவாய்ந்த அமெரிக்க போட்டியாளரையும் எதிர்கொண்ட அது, ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய சக்தியாக மாற விரும்புகிறது மற்றும் வன்முறை வழிமுறைகளால் மட்டுமே மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைப் பெற முடியும்.

ஜேர்மனி போரில் தோல்வியடைந்தது. வேர்சாய் உடன்படிக்கை காரணமாக பலவீனமடைந்து கடன்பட்டது மற்றும் வர்க்கப் போராட்டங்களால் உலுக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குள் தள்ளிய அனைத்து பிரச்சினைகளும் இரட்டை தீவிரத்தோடு எழுந்துள்ளன. கூடுதலாக, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மிக முக்கியமான விரிவாக்கப் பகுதியான கிழக்கில் இப்போது ஒரு தொழிலாளர் அரசு உள்ளது, இது ஜேர்மனியிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு புரட்சிகர உத்வேகமாக அமைந்தது.

ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு முன்னுள்ள இந்த முட்டுசந்துக்கு ஒரே வழி, முன்னர் அனுபவித்த எதையும் விட மிருகத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறைகளைப் பயன்படுத்துவதாகும். "போல்ஷிவிசத்தின் அழிவு", கிழக்கில் "உயிர்வாழ்க்கைக்கான இடத்தை" பாதுகாத்தல் மற்றும் ஐரோப்பா மீது ஜேர்மன் மேலாதிக்கத்தை நிறுவுதல் ஆகியவை, ஒரு தனிநபரின் கைகளில் அரச அதிகாரத்தை குவிப்பது, நாட்டின் அனைத்து வளங்களையும் போர் உற்பத்திக்கு அடிபணியச் செய்தல், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தினை அழித்தல் மற்றும் ஒரு போரின் நோக்கம் தன்னை அடிபணிய செய்யாது எதிரிகளை அழிப்பது ஆகியவை தேவையாக இருந்தது.

சமூகத்தின் இந்த கோரிக்கையை பூர்த்தி செய்ய நாஜிக்கள் அதிகம் முன்வந்தனர். அரசு, வணிகம் மற்றும் இராணுவத்தின் தலைவர்கள் ஹிட்லரை ஆதரித்தது அவர்கள் கருத்தியல் ரீதியாக திகைத்துப்போனாதால் அல்ல, அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய அவர் தேவைப்பட்டதாலாகும்.

தொழிலாளர்கள் தலைவர்களின் மோசமான துரோகம் மற்றும் தோல்வி காரணமாக மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றனர். சமூக ஜனநாயகக் கட்சி தனது உறுப்பினர்களை நாஜிகளுக்கு எதிராக அணிதிரட்ட உறுதியாக மறுத்துவிட்டது. அவர்கள் அரசை நம்பினர் மற்றும் ப்ரூனிங்கின் அவசரகால ஆணைகளில் இருந்து ஹிண்டன்பேர்க்கின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அனைத்து சர்வாதிகார நடவடிக்கைகளையும் ஆதரித்தனர். இது ஹிட்லர் ஆட்சியைப் பிடிக்க வழி வகுத்தது. ஸ்ராலினின் செல்வாக்கின் கீழ் இருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை, தீவிர இடதுசாரி வார்த்தையாடல்களுக்கு பின்னால் அதன் செயலற்ற தன்மையையும் கோழைத்தனத்தையும் மறைத்தது. லியோன் ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பாளர்களும் கோரியது போல, சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்காக போராட அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். மேலும் சமூக ஜனநாயகக் கட்சி தொழிலாளர்களை நாஜிக்களைவிட வேறுபட்டவர்கள் அல்ல என்றும் அவர்களை "சமூக பாசிஸ்டுகள்" என்றும் கண்டித்தனர்.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனியின் பிற முதலாளித்துவ எதிப்பாளர்களும் தங்கள் ஏகாதிபத்திய நலன்களுக்காக போராடினார்களே தவிர “பாசிசத்திற்கு எதிராக” மற்றும் “ஜனநாயகத்திற்காக” அல்ல. சோவியத் ஒன்றியம் மட்டுமே அதன் உயிர்வாழ்விற்காக போராடியது. போரில் ஒரு ஜேர்மன் வெற்றி என்பது தொழிலாளர்களின் அரசை அழிப்பதையும் அதனை அடிமைக் காலனியாக மாற்றுவதையும் குறிக்கும்.

ஹிட்லரின் ஆட்சி முக்கியமாக ஜேர்மன் தொழிலாள வர்க்கத்திற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் எதிராக இயக்கப்பட்ட வரை, அது கணிசமான சர்வதேச ஆதரவைப் பெற்றது. ஹிட்லரின் அபிமானிகளில் அமெரிக்க தொழிலதிபர் ஹென்றி ஃபோர்ட், பிரிட்டனின் மன்னர் எட்வார்ட் VIII மற்றும் அவரது அமெரிக்க துணைவியார் வாலிஸ் சிம்ப்சன் ஆகியோர் அடங்குவர். எட்வார்ட் பதவி விலகிய பின்னர், இந்த ஜோடி ஹிட்லரை அவரது பேர்கோவ் இல்லத்தில் சந்தித்தது.

1936 ஆம் ஆண்டு மக்கள் முன்னணி அரசாங்கத்தின் போது, பிரெஞ்சு முதலாளித்துவம் “புளூமை விட சிறந்த ஹிட்லர்” (மக்கள் முன்னணியில் லியோன் புளூம் பிரதமராக இருந்தார்) என்ற முழக்கத்தை முன்வைத்தது. பிரான்சுக்கு எதிரான ஜேர்மனியின் மின்னல் வெற்றி, வேர்மாக்டின் ஆயுதங்களின் தொழில்நுட்ப மேன்மையை விட பிரெஞ்சு ஜெனரல்களின் தோல்வியின் விளைவாகும். மார்ஷல் பெத்தானின் கீழ் விச்சி ஆட்சி, உடனடியாக ஹிட்லருடன் ஒரு புரிந்துணர்வை எட்டியது.

ஆனால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அட்லாண்டிக் முதல் யூரல்ஸ் வரை ஜேர்மனி ஆதிக்கம் செலுத்துபவராக உயர்ந்ததால் மட்டும் வெறுமனே பார்க்கவில்லை. ஜப்பானுடனான கூட்டணியில், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடிய எதிரியாக மாறியிருக்கும். இது ஹிட்லருக்கு எதிரான போரில் அமெரிக்காவின் தலையீட்டிற்கு வழிவகுத்தது. இது ஸ்ராலின்கிராட் போரில் ஜேர்மனி ஏற்கனவே தற்காப்பு போரில் இருந்த போதே ஏற்பட்டது.

மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல்

சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கல் போரின் படிப்பினைகள் சமகாலத்தில் பொருத்தமானவை. உலக முதலாளித்துவத்தின் அதே முரண்பாடுகள் - முதலாளித்துவ தேசிய-அரசின் பொருந்தாத தன்மை மற்றும் நவீன உற்பத்தியின் சமூக மற்றும் சர்வதேச தன்மையுடன் உற்பத்தி சாதனங்களின் தனியார் உடமை- மூன்றாம் உலகப் போரின் நரகத்தில் உலகத்தை மூழ்கடிக்க அச்சுறுத்துகின்றன.

போருக்கான தயாரிப்புகளின் மையம் அமெரிக்கா ஆகும், இது வரவிருக்கும் வரவு-செலவுத் திட்ட ஆண்டில் 753 பில்லியன் டாலர்களை தனது இராணுவத்திற்காக செலவழிக்கும், இது அடுத்த 10 நாடுகளை விட அதிகம். சுமார் 25 பில்லியன் டாலர் அணு ஆயுதங்களுக்காகவும், 112 பில்லியன் டாலர் புதிய ஆயுத அமைப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரிலிருந்து அமெரிக்கா உண்மையான வெற்றியாளராக உருவெடுத்தது, அதன் பொருளாதார சக்தி ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளினால் புரட்சிகர போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுடன் இணைந்து ஐரோப்பிய முதலாளித்துவத்தை தற்காலிகமாக உறுதிப்படுத்த உதவியது. ஆனால் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பலம், அதன் பின்னர் தொடர்ந்து குறைந்து வருகிறது, வாஷிங்டன் இந்த வீழ்ச்சியை இராணுவ பலத்தால் ஈடுசெய்ய முயற்சிக்கிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தடையின்றி போரை நடத்தி வருகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில், அவர்கள், தங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து முழு சமூகங்களையும் அழித்துவிட்டனர்.

அமெரிக்க போர் இயந்திரம் இப்போது சீனாவை குறிவைக்கிறது. இது அதனை உத்தியோகபூர்வமாக "முறையான போட்டியாளர்" என்று வரையறுக்கிறது. சீனா அதை பொருளாதார ரீதியாக முந்திக்கொண்டு உலக வல்லரசாக உயருவதை அனைத்து இழப்பிலும் அமெரிக்கா தடுக்க விரும்புகிறது. அமெரிக்க மூலோபாயவாதிகள் இப்போது அணுசக்தி சீனாவுடனான போர் தவிர்க்க முடியாதது என்று கருதுகின்றனர்.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் இரண்டு உலகப் போர்களில் அதன் தோல்விகளை ஏற்கவில்லை. சீனாவையும் அமெரிக்காவையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரு அரசியல் மற்றும் இராணுவ உலக சக்தியாக ஐரோப்பாவை விரிவுபடுத்துவதற்கான உத்தியோகபூர்வ இலக்கை ஜேர்மன் அரசாங்கம் பின்பற்றுகிறது. இது ஐரோப்பாவிற்குள், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மேலாதிக்கத்திற்கான ஜேர்மனியின் போட்டியாளராக உள்ள பிரான்சுடனான மோதல்களை தீவிரப்படுத்துகிறது.

ஜேர்மனி தனது இராணுவ செலவினங்களை 2014 ல் 32 பில்லியன் யூரோக்களிலிருந்து 53 பில்லியன் யூரோவாக உயர்த்தியுள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. பிப்ரவரி 9 தேதியிட்ட பாதுகாப்பு அமைச்சின் ஒரு மூலோபாயக் கட்டுரை, ஜேர்மனிக்கு “ஐரோப்பாவின் மையத்தில் புவியியல் நிலை மற்றும் அதன் பொருளாதார சக்தி காரணமாக ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு ஒரு சிறப்பு கடமை உள்ளது” என்றும், “இராணுவ விவகாரங்களிலும் பொருத்தமான பங்களிப்பை வழங்க வேண்டும்” என்றும் கூறுகிறது. இதற்கு இன்றியமையாதது “நம்பகமான இராணுவத் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்கள் எல்லா நிலைகளிலும் - நிலம், கடல், காற்று, விண்வெளி மற்றும் இணையம்” மற்றும் “நமது படையினரின் வெற்றிக்கான தயார்நிலை மற்றும் திறன் ஆகியவை அடங்கும்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீளெழுச்சியின் மைய அங்கமாக, நிர்மூலமாக்கும் போரினை முக்கியத்துவமற்றதாக்கல் மற்றும் வரலாற்று திருத்தம் ஆகியவை அடங்குகின்றன.

ஜேர்மனிக்கான மாற்று (AfD) பாராளுமன்றத்தில் அமர்ந்து, நாஜி ஆட்சியை "1,000 ஆண்டுகளுக்கும் மேலான வெற்றிகரமான ஜேர்மன் வரலாற்றில் ஒரு பறவை எச்சம்" என்று விவரிக்கிறது. மேலும் இது மற்ற அனைத்து ஸ்தாபக கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பேர்லினில் உள்ள வரலாற்றாசிரியர் ஜோர்ஜ் பாபெரோவ்ஸ்கி 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பகிரங்கமாக ஹிட்லர் "ஒரு மனநோயாளி அல்ல" மற்றும் "தீயவர் அல்ல" என்று கூறினார். ஒரு வருடம் கழித்து, வேர்மாக்டின் மீது நிர்மூலமாக்கல் போர் திணிக்கப்பட்டதாக அவர் கூறினார். கிழக்குப் பகுதியில் உள்ள வேர்மாக்ட் வீரர்கள் “கிளர்ச்சியாளர்களுடன் கொலைகாரப் போரில் ஈடுபட்டனர்.” ஆனால் “கிளர்ச்சியாளர்களின் போர் பாணிக்கு ஏற்ப” என்றும் அதைவிட அவர்களுக்கு “வேறு வழியுமில்லை” என்றார். அவர் தொடர்ந்தார், "போர் சுயாதீனமாக மாறியது, அது மோதலுக்கான சாக்குப்போக்காக இருந்த ஆரம்ப இலக்குகளிலிருந்து தன்னை விடுவித்தது." இந்த வலதுசாரி தீவிரவாத பேராசிரியரின் படைப்புகளில் இதேபோன்ற பல மேற்கோள்களைக் காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei) அதன் இளைஞர் அமைப்பான IYSSE யும் இதேபோன்ற அறிக்கைகளையும் விமர்சித்து, பாசிசம் மற்றும் இராணுவவாதம் திரும்புவதற்கு மக்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது, ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் வலதுசாரி தீவிரவாத பேராசிரியரைப் பாதுகாத்தன.

மூன்றாம் உலகப் போர் என்பது மனித நாகரிகத்தின் முடிவைக் குறிக்கும். ஆனால் ஒரு ஸ்தாபகமயமாக்கப்பட்ட கட்சி கூட போருக்கான உந்துதலை எதிர்க்கவில்லை. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முந்தைய நிலைமையைப் போலவே, ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான பிளவுகள் ஆழமடைவதால் அவை போர்முழக்கமிடுபவர்களுக்குப் பின்னால் மிக நெருக்கமாக அணிவகுத்து நிற்கின்றன. அமைதிவாத இயக்கம் என்று அழைக்கப்படுவது முற்றிலும் வீழ்ச்சியடைந்துவிட்டது. இந்த இயக்கத்திலிருந்து வெகு காலத்திற்கு முன்னர் தோன்றிய ஜேர்மன் பசுமைவாதிகள் மிகவும் அருவருப்பான போர்க்குணமிக்கவர்களாக மாறிவிட்டனர். சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பிற்கு 80 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போர் பிரச்சாரத்தில் முன்னணியில் உள்ளனர்.

காட்டுமிராண்டித்தனத்தின் புதுப்பிக்கப்பட்ட மறுபிறப்பை சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தடுக்க முடியும், இது இராணுவவாதத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்தை முதலாளித்துவ அமைப்பில் அதன் மூலத்துடன் இணைக்க வேண்டும், மேலும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். இதுதான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் முன்னோக்காகும்.

Loading