முன்னோக்கு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான தோல்வி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு அமெரிக்க துருப்புக்கள் பரந்த பாக்ராம் விமானத் தளத்திலிருந்து வெளியேறினர். அதை பிரதியீடு செய்ய ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கும் அறிவிக்காமல் வெளியேறும் வழியில் மின்சாரத்தையும் துண்டித்துக் கொண்டனர், இந்த நடவடிக்கை கொள்ளையர்களின் ஒரு சிறிய ஆயுதப்படை அந்த தளத்தின் மீது படையெடுக்க தூண்டியது.

அவமானகரமான இந்த பின்வாங்கல் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால அமெரிக்க போர் மற்றும் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட தோல்விக்கு சரியான அடையாளமாக உள்ளது. 1950 களில் சோவியத் இராணுவத்தால் கட்டமைக்கப்பட்டு அமெரிக்கர்களால் பரந்தளவில் விரிவாக்கப்பட்ட இந்த பக்ராம் விமானத் தளம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு தசாப்த கால குற்றவியல் ஆக்கிரமிப்புப் போரில் இதயதானமாக இருந்தது.

அமெரிக்க வரலாற்றின் இந்த மிக நீண்ட போரில் நூறாயிரக்கணக்கான அமெரிக்க சிப்பாய்கள் அந்த தளத்தில் கால் பதித்து சென்றுள்ளனர். பக்ராமிலிருந்து, அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்கள் எண்ணற்ற ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்களின் உயிர்களைப் பறித்தது, சிறப்பு கொலைப்படை குழுக்கள் நடத்திய வேட்டைகளில் ஒட்டுமொத்த குடும்பங்களும் துடைத்தெறியப்பட்டன. அனைத்திற்கும் மேலாக, அந்த தளம் பர்வான் தடுப்புக்காவல் கூடத்தைக் கொண்டிருந்தது, அங்கே கிளர்ச்சியாளர்களாக சந்தேகிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதுடன், 'விரிவான விசாரணை' முறைகள், அதாவது சித்திரவதைகள் பயன்படுத்தப்பட்டன. கைதிகள் தாக்கப்பட்டனர், நாய்கள் ஏவப்பட்டன, கூரையில் தொங்கவிடப்பட்டனர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் மற்றும் தூக்கமின்மைக்கும் உள்ளாக்கப்பட்டனர், மேலும், சிலர் விஷயங்களில், சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு வடக்கே பர்வான் மாகாணத்தில், ஜூலை 5, 2021 திங்கள் அன்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையின் உறுப்பினர் ஒருவர் அமெரிக்க இராணுவம் புறப்பட்ட பின்னர் பரந்த பாக்ராம் விமானத் தளத்தில் நடந்து செல்கிறார். (AP Photo/Rahmat Gul)

தலிபான் எழுச்சியின் கரங்களில் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளது படுதோல்விக்கு மத்தியில் தான் பக்ராம் கைவிடப்பட்டது. தலிபான் ஏற்கனவே அது கட்டுப்பாட்டில் கொண்டிருந்த பிராந்தியங்களுக்கு கூடுதலாக, ஒரு சில வார இடைவெளியில் அந்நாட்டின் சுமார் கால்வாசி மாவட்டங்களைக் கைப்பற்றி உள்ளது. அரசு சிப்பாய்கள் அமெரிக்கா வழங்கிய ஆயுத கையிருப்புகளையும் இராணுவத் தளங்களையும் கைவிட்டுள்ளனர், சிலர், இஸ்லாமிய போராளிகளுடன் இணைந்துள்ளனர். திங்களன்று சண்டையிலிருந்து தப்பிப்பதற்காக 1,000 க்கும் அதிகமான அரசு துருப்புகள் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு எல்லையைக் கடந்து முன்னாள் சோவியத் குடியரசான தஜிகிஸ்தானுக்குள் தப்பி ஓடினர்.

அமெரிக்கா பின்வாங்கிய ஆறு மாதங்களுக்குள் காபூல் வீழும் என்ற அமெரிக்க உளவுத்துறை முகமைகள் தயாரித்த மிக மோசமான சூழலை உறுதிப்படுத்துவதாக தெரியும் இந்த படுதோல்வி, 'ஆப்கானிஸ்தான் யாரால் இழக்கப்பட்டது' என்ற பெரிதும் கசப்பான விவாதத்தை வாஷிங்டனில் தூண்டிவிட்டுள்ளது. வலதுசாரி குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் ஆப்கான் பெண்களது உரிமைகளுக்கு தங்களின் ஆழ்ந்த கவலையைப் பிரகடனப்படுத்திய அதேவேளையில் பைடென் நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். அமெரிக்கா துருப்புகளைத் திரும்பப் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் 2020 பெப்ரவரியில் தலிபானுடன் ட்ரம்ப் நிர்வாகம் தான் கட்டார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று பைடெனின் ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

யதார்த்தம் என்னவென்றால், ஆப்கானிய மக்களிடையே தீவிர எதிர்ப்பையும் கோபத்தையும் தூண்டிய அமெரிக்காவின் இரண்டு தசாப்த கால காலனித்துவ பாணியிலான ஆக்கிரமிப்பின் போது ஆப்கானிஸ்தானை அது இழந்துவிட்டது.

மிதமான மதிப்பீட்டின்படி, அந்த போரில், 175,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாரிய இடப்பெயர்வு நிலைமைகள் மற்றும் சமூக நிலைமைகளின் பொதுவான அழிவு ஆகியவற்றின் விளைவாக இறந்தவர்களையும் சேர்த்தால், சந்தேகத்திற்கு இடமின்றி மொத்ததொகை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக உயரும்.

2001 நவம்பரில் அமெரிக்க சிறப்புப் படைகள் மற்றும் அவற்றின் வடக்கு கூட்டணி பினாமி படைகளிடம் சரணடைந்த பின்னர், கப்பல் கொள்கலன்களில் மூச்சுத்திணறியோ அல்லது சுட்டுக் கொல்லப்பட்டோ இறந்த 2,000 க்கும் அதிகமான தலிபான் கைதிகளின் பாரிய படுகொலைகளான ஒரு கொடூரமான போர் குற்றத்துடன் அமெரிக்க தலையீடு தொடங்கியது. ஏமாற்றும் விதத்தில் 'நீடித்த சுதந்திரத்திற்கான நடவடிக்கை' என்று கூறப்பட்ட அந்த அமெரிக்கப் போர், ஆப்கான் மக்களுக்கு எதிராக இத்தகைய தொடர்ச்சியான முடிவற்ற குற்றங்களை உருவாக்கியது. மிதமான மதிப்பீடுகளின்படி, கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 800 குழந்தைகள் உட்பட சுமார் 4,000 ஆப்கானிய குடிமக்கள் அமெரிக்க மற்றும் அதன் கூட்டு விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆப்கானிய மக்களுக்கு ஜனநாயகத்தையும் செழிப்பையும் கொண்டு வரும் என்ற வெற்று வாக்குறுதிகள் ஒரு மோசடியாக அம்பலமாகி உள்ளன. மோசடி தேர்தல்கள் மற்றும் குற்றகரமான போர் பிரபுக்களுடனான உடன்படிக்கைகளின் விளைபொருளான கைப்பாவை காபூல் ஆட்சிக்கு எந்த சட்டபூர்வத்தன்மையும் இல்லை. 20 ஆண்டு கால அமெரிக்க உதவிக்குப் பின்னரும், ஆப்கானிஸ்தான் இன்னமும் ஐ.நா.வின் மனித மேம்பாட்டு குறியீட்டில், பெரும்பாலான துணை-சஹாரா ஆபிரிக்க நாடுகளுக்குப் பின்னால், (189 நாடுகளில்) 169 வது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் 'புனரமைப்பு' மீது 143 பில்லியன் டாலர்களைச் செலவிட்டது, இது, பணவீக்கத்தின் அடிப்படையில் ஈடுகட்டி பார்த்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வாஷிங்டன் மேற்கு ஐரோப்பாவை மறுகட்டமைப்பதற்காக ஒட்டுமொத்த மார்ஷல் திட்டத்திற்காக செலவிட்டதை விட அதிகமாகும். அந்தப் பணம் பெரும்பாலான ஆப்கானியர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையோ அல்லது அடிப்படை உள்கட்டமைப்பின் வளர்ச்சியையோ உருவாக்கவில்லை. அந்த பணம், பெருவாரியாக, சிப்பாய்களின் சம்பளம் மற்றும் வினியோகப் பொருட்களைக் களவாடி, பாதுகாப்புப் படைகளின் தற்போதைய பொறிவுக்குப் பலமாக பங்களிப்பு செய்து வரும் இராணுவக் கட்டளையகம் உட்பட, இந்த பூமியில் மிகவும் ஊழல் நிறைந்த மோசடி அரசியல்வாதிகளின் ஒரு கூட்டத்தின் பைகளுக்குள் சென்றுள்ளது.

அமெரிக்காவுக்கான போர் செலவுகள், போராடுவதற்காக செலவிடப்பட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர்களுக்கு அப்பாற்பட்டு, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளின் 689 சிப்பாய்கள் மற்றும் 455 பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஆகியோருடன் சேர்ந்து, 2,452 அமெரிக்க இராணுவ படையினரின் உயிரிழப்புகளையும் கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான இராணுவ ஒப்பந்தக்காரர்களும் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானுக்குக் குறைந்தது ஒரு முறையாவது அனுப்பப்பட்ட முக்கால் மில்லியன் அமெரிக்க துருப்புக்களில் பலர், அந்த அருவருக்கத்தக்க காலனித்துவ போரில் ஊனமுற்றோ அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டோ திரும்பி இருந்தனர்.

அமெரிக்க துருப்புகள் திரும்பப் பெறப்பட்டிருக்கும் நிலையில், பின்வரும் கேள்வி எழுகிறது: இந்த தியாகத்தை எது நியாயப்படுத்தியது? அல் கொய்தா பயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கே இந்த போர் நடத்தப்பட்டது என்ற கூற்று ஓர் அப்பட்டமான பொய்யாகும். நோய்வாய்ப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் ISI இராணுவ உளவுத்துறை முகமையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒசாமா பின் லாடன் கடற்படை துருப்புகளால் கொல்லப்பட்ட பின்னரும் ஒன்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக அந்த போர் தொடர்ந்து நடத்தப்பட்டது. அதே காலகட்டத்தில், லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் போர்களில் வாஷிங்டன் அல் கொய்தா சக்திகளுக்கு நிதியளித்து ஆயுதங்களையும் வழங்கி வந்தது.

அனைத்திற்கும் மேலாக, ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான துயரகரமான சந்திப்பு 2001 இல் அல்ல, மாறாக அதற்கு இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர், சவூதி அரேபியா மற்றும் பாக்கிஸ்தானின் ஒத்துழைப்புடன், சிஐஏ, காபூலில் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை ஆதரித்த சோவியத் படைகளுக்கு எதிராக ஒரு பினாமிப் போரை நடத்துவதற்காக முஸ்லீம் உலகம் எங்கிலும் இருந்து இஸ்லாமிய போராளிகளை அணிதிரட்டிய போது தொடங்கியது. அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் ஆதரவுடன் அல் கொய்தாவை நிறுவிய பின் லாடன், சிஐஏ இன் நெருக்கமான ஒத்துழைப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

அமெரிக்க மக்களின் நல்வாழ்வுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத ஆனால் எல்லா விதத்திலும் நிதிய மற்றும் பெருநிறுவன தன்னலக்குழுவின் நலன்களுடன் மட்டுமே தொடர்புடைய போர் நோக்கங்களை, அமெரிக்க பின்வாங்கல் மீதான சில விமர்சனங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் எழுதியது: 'ஈரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்க போட்டியாளர்கள், ஈராக், தைவான் மற்றும் உக்ரேன் போன்ற தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்காக நிற்க, திரு. பைடெனுக்குத் தைரியமில்லை என்ற முடிவுக்கு வரக்கூடும்.”

இந்த பின்வாங்கலின் 'மூலோபாய விலையை' சுட்டிக் காட்டிய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், 'மிகப் பெரிய பக்ராம் விமானத் தளம் உட்பட ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பிரசன்னம், மேற்கில் ஈரான் மற்றும் கிழக்கில் சீனா வரையிலும் இரண்டு பக்கமும் தடுத்து வைத்திருந்தது. அந்த மூலோபாய இடத்தில் குறிப்பிடத்தக்க அமெரிக்க பிரசன்னம் ஈரானிய ஆக்கிரமிப்புக்கும் மற்றும் சீன விரிவாக்கவாதத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு சிறிதளவாவது தடையாக இருந்தது,” என்று குறிப்பிட்டது.

கடற்படை போர் பயிலகத்தின் வலைத் தளத்தில் வெளிவந்த, ஓர் ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ சிறப்புப் படை அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் டேவிட் க்ளூகியின் ஒரு கட்டுரை, இந்த பின்வாங்கல் '20 ஆண்டு கால அமெரிக்க முயற்சிகளை கீழறுக்க ... கம்யூனிச சீனாவுக்கு வாய்ப்பை' வழங்கும் என்றும், “அதே நேரத்தில் சீன மக்கள் குடியரசின் (PRC) ஆலோசகர்கள் மற்றும் இராணுவப் படைகளின் மூலோபாய அணுகல் மற்றும் செல்வாக்கை தெற்காசியாவில் கோலோச்ச உதவுகிறது - இந்நகர்வு அப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ தலையீட்டுக்கு எதிரான தடுப்புமுறையை பலப்படுத்தும்,” என்று எச்சரித்தார்.

இத்தகைய அறிக்கைகள் எதை அப்பட்டமாக தெளிவுபடுத்துகின்றன என்றால், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்த பின்வாங்கல் மீதான விவாதங்கள் பயங்கரவாதம் மீதான அச்சங்களில் வேரூன்றியதல்ல, பெண்கள் உரிமைகள் மீதான அக்கறைகள் மீதும் அல்ல, மாறாக குறிப்பாக சீனாவுடன் தீவிரமடைந்து வரும் அதன் மோதல் தொடர்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய நலன்களில் வேரூன்றி உள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றன.

அக்டோபர் 9, 2001 இல், வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் மீது அதன் படையெடுப்பைத் தொடங்கிய இரண்டு நாட்களுக்குப் பின்னர், 9/11 க்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்க மக்களிடம் போரை விற்க அமெரிக்க அரசாங்கமும் பெருநிறுவன ஊடகங்களும் நடத்திய போர்வெறி கொண்ட மூர்க்கமான பிரச்சாரத்திற்கு மத்தியில், உலக சோசலிச வலைத் தளம் 'நாம் ஏன் ஆப்கானிஸ்தானில் போரை எதிர்க்கிறோம்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளியிட்டது. 'பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கான மற்றும் நீதிக்கான போர்' என்ற பொய்யை அது அம்பலப்படுத்தியதோடு, 'அமெரிக்காவின் தற்போதைய இந்த நடவடிக்கை ஓர் ஏகாதிபத்திய போர்' என்றும், இதில் வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் மீது மட்டுமல்லாமல், 'உலகில் நிரூபிக்கப்பட்ட பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு வளங்களின் இரண்டாவது மிகப்பெரும் தாயகமான' பரந்த மத்திய ஆசிய பிராந்தியத்தின் மீது 'மேலாதிக்க கட்டுப்பாட்டை செலுத்தும் ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை ஸ்தாபிப்பதை' நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் வலியுறுத்தியது.

உலக சோசலிச வலைத் தளம் அப்போது பின்வருமாறு குறிப்பிட்டது:

அமெரிக்கா ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. காலவரையின்றியும் வரையறையற்ற அளவிலும் அது போரில் இறங்கியுள்ளதை அரசாங்கமே ஒப்புக் கொள்கிறது. ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ் அமெரிக்க சமூகத்தை இராணுவமயப்படுத்துவது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போர் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளை ஆழமாக பாதிக்கும். ஏகாதிபத்தியம் இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருபதாம் நூற்றாண்டின் துயரங்களை மிகக் கொடூரமாக மீண்டும் திரும்பச் செய்ய மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது. ஏகாதிபத்தியமும் அதன் சூறையாடல்களும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் அவசியத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக எழுப்புகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் இருந்து லிபியா, சிரியா, சோமாலியா மற்றும் யேமன் வரை புதிய மற்றும் சம அளவில் குற்றகரமான போர்களையும் இராணுவத் தாக்குதல்களையும் நடத்தியதுடன், அதே நேரத்தில் அமெரிக்காவுக்குள் ஒரு பொலிஸ் அரசுக்கான மேற்கட்டுமானங்களைச் செய்துள்ளதால், உலக சோசலிச வலைத் தளத்தின் எச்சரிக்கைகள் கடந்த 20 ஆண்டுகளில் முழுமையாக நிரூபணமாகி உள்ளன.

அமெரிக்க மக்களிடையே இந்தப் போர்களுக்கு ஆழ்ந்த விரோதப் போக்கு இருந்தாலும், இந்த போர்-எதிர்ப்பு உணர்வுகள் மீண்டும் மீண்டும் நசுக்கப்பட்டு ஜனநாயகக் கட்சியின் பின்னால் திருப்பி விடப்பட்டுள்ளன. ஜனநாயகக் கட்சி 2006 இல் காங்கிரஸ் சபையின் இரண்டு அவைகளிலும் மீண்டும் அதன் கட்டுப்பாட்டைப் பெற்றதுடன், அந்த உணர்வுகளின் பின்னணியில் தான் 2008 இல் பாரக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவியை வென்றது, ஆனால் ஆப்கானிஸ்தானில் ஒபாமாவின் 'எழுச்சி' உட்பட அது அமெரிக்காவின் போர்களைத் தொடர்ந்து விரிவாக்கியது.

துருப்புக்களைப் பைடென் திரும்பப் பெற்றிருப்பது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நான்கு தசாப்த கால கொலைகள் மற்றும் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம் குண்டுவீச்சுக்கள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் சிறப்புப் படைகளின் தலையீடுகளைத் தொடர்வதற்கான 'தொலைநோக்கான' திறனை அபிவிருத்தி செய்து வருகின்ற அதே நேரத்தில், வெளியுறவுத்துறையோ மத்திய ஆசியாவின் முன்னாள் சோவியத் குடியரசுகளில் புதிய இராணுவத் தளங்களை அமைக்க தூண்டில் போட்டு வருகிறது.

வாஷிங்டன் அதன் உலகளாவிய மூலோபாயத்தை 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்பதில் இருந்து, அதன் 'வல்லரசு' போட்டியாளர்களுக்கு எதிரான, முதன்மையாக, அணுஆயுதமேந்திய சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான, போருக்கான தயாரிப்புகளுக்கு மாற்றுவதால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர பைடென் மற்றும் ட்ரம்ப் இருவரது முயற்சியும், அமெரிக்க இராணுவவாதத்தின் இன்னும் அதிக அபாயகரமான வெடிப்புக்கான தயாரிப்புகளுடன் பிணைந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதையும், புதிய மற்றும் இன்னும் பேரழிவுகரமான போர்கள் வெடிப்பதை நிறுத்துவதையும் உறுதிப்படுத்த, ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலும் மற்றும் அதிகரித்து வரும் அதன் போராட்டங்களை ஆசியா, மத்தியக் கிழக்கு, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஐக்கியப்படுத்துவதும் அவசியமாகிறது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீடு இல்லாமல், அணுவாயுத மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தல் வளர மட்டுமே செய்யும்.

Loading