இணையவழி கூட்டம்: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் இளம் கவிஞர் அஹ்னப் ஜஸீமை விடுதலை செய்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழு (ACDAE), அஹ்னப் ஜஸீமை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 18 ஞாயிற்றுக்கிழமை, இரவு 7 மணிக்கு, இணையவழியாக ஒரு பகிரங்க கூட்டத்தை நடத்துகிறது. 26 வயதான கவிஞர், இலங்கையின் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (பி.ரி.ஏ.) கீழ், ஒரு வருடத்திற்கும் மேலாக எதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அஹ்னப் ஜஸீம் ஒரு கவிதையைப் படிக்கிறார் [Source: YouTube]

அஹ்னப் மீது முறையான குற்றச்சாட்டுகளை கூட தாக்கல் செய்ய இலங்கை பொலிசாரால் முடியாதுள்ளது. பயங்கரவாத புலனாய்வு பிரிவு (ரிஐடி), அவர் 'இனவாதம் மற்றும் அதிதீவிரவாதத்தை மாணவர்களுக்கு கற்பித்தார் என்றும் அது குறித்த புத்தகங்களை வெளியிட்டார்' என்றும் பொய்யாக குற்றம் சாட்டியுள்ளது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் குற்றச்சாட்டுகள் அடிப்படையாகக் கொண்டுள்ள அஹ்னப்பின் கவிதைத் தொகுப்பான நவரசம் 2017 இல் வெளியிடப்பட்டது. இதை எந்த நீதிமன்றமும் தடை செய்யவில்லை. இந்த புத்தகம், உண்மையில், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைக் கண்டிப்பதுடன் அமைதியையும் சமூக ஒற்றுமையையும் பரிந்துரைப்பதோடு இனவெறிக்கு எதிராக நிற்கின்றது.

அஹ்னப் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதானது கலை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான ஜனநாயக உரிமை மீதான தாக்குதல் ஆகும். இது ஒரு முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தின் பகுதியாவதோடு அதே போல் நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத ஆத்திரமூட்டல் ஆகும். இதை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் ஊக்குவித்துள்ளதுடன், அதிகரித்தளவில் போராட்டத்தில் இறங்கிவரும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்த முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியதில், மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவையும், பல முஸ்லிம் அரசியல்வாதிகளையும் கைது செய்ய அரசாங்கம் தூண்டியது. இந்த கைதுகள் 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு அன்று, இஸ்லாமிய அடிப்படைவாத குழுவால் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவுடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் எதேச்சதிகாரமாக இணைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் ஏனைய பிரவினர் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். சமீபத்திய மாதங்களாக, ஊடகவியலாளர்களையும் சமூக ஊடகங்களையும் பொலிஸ் மிரட்டுவதுடன் கைது செய்து வருகின்றது.

கொவிட்-19 தொற்றுநோயால் மோசமடைந்துள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில், இராணுவம் மற்றும் சிங்களப் பேரினவாத கும்பல்களின் ஆதரவுடன், இராஜபக்ஷ அரசாங்கம் விரைவாக ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க முற்படுகையிலேயே இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் அஹ்னப்பை விடுவித்துக்கொள்ள முடியாது. மாறாக, கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவின் (ACDAE) கூட்டத்தில், சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரையும் அணிதிரட்டிக்கொண்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பரந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டத்தைப் பற்றிக் கலந்துரையாடப்படும்.

இந்த கூட்டத்தில் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கலைஞர்களை செயலூக்கத்துடன் பங்கேற்குமாறும், ACDAE இல் இணையுமாறும், ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் இணைந்துகொள்ள நாடு முழுவதும் கிளைகளை ஸ்தாபிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்திற்கு இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

Loading