முன்னோக்கு

1,200 க்கு அதிகமான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் இங்கிலாந்தின் கோவிட்-19 கொள்கையை "அபாயகரமானதும் நெறிமுறை இல்லாததுமென" கண்டிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாரிய நோய்தொற்றுக்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் திட்டத்தை 'அபாயகரமானது மற்றும் நெறிமுறையற்ற பரிசோதனை' என்று எதிர்த்து 1,200 க்கும் அதிகமான விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கையெழுத்திட்ட ஒரு பகிரங்கக் கடிதம் ஜூலை 7 இல் லான்செட் மருத்துவ இதழுக்கு அனுப்பப்பட்டது.

அந்த கடிதம் முதலில் வெளியிடப்பட்ட போது வெறும் 120 க்கும் அதிகமான வல்லுனர்கள் தான் கையெழுத்திட்டிருந்தனர். ஒரு வாரத்திற்குப் பின்னர், அந்த எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

அதில் கையெழுத்திட்டவர்களில் பதினொரு பேர், திங்கட்கிழமை, பிரிட்டனின் கொரோனா வைரஸ் கொள்கை மீதான அவர்களின் விமர்சனங்களைக் கூர்மைப்படுத்தி ஓர் அவசர அறிக்கை வெளியிட்டனர்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் 2021 ஜூலை 12 அன்று தலைமை விஞ்ஞான ஆலோசகர் சேர் பாட்ரிக் வலன்ஸ் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி உடன் கோவிட்-19 பத்திரிகையாளர் சந்திப்புக்கு தலைமை தாங்குகிறார். பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோன்சன், விட்டியின் ஆதரவுடன், ஜூலை 19, 2021 அன்று அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவர முன்னோக்கி சென்றார் (Credit: Andrew Parsons/No 10 Downing Street/Flickr) [Photo by Andrew Parsons/No 10 Downing Street/Flickr / CC BY-NC-ND 2.0]

அந்த அறிக்கை, பழமைவாத அரசாங்கத்தின் மூலோபாயத்தை 'பாரிய நோய்தொற்றுக்கு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகளில்' ஒன்றென சரியாக அடையாளம் காண்கிறது, இந்த கொள்கை 'மருத்துவரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் உட்பட, இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாத மக்களில் (குழந்தைகள் உட்பட) 48 சதவீதத்தினரை ஏற்றுக்கொள்ளவியலா ஆபத்தில்' நிறுத்தும் என்கிறது.

'மில்லியன் கணக்கானவர்களை பொறுப்பற்ற முறையில் பாரிய நோய்தொற்றுகளின் கடுமையான மற்றும் நீண்டகால பாதிப்புகளுக்கு உட்படுத்துவதற்காக' அது பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரின் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டுவதுடன், 'மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அரசின் அடிப்படை கடமையைக் கைவிடுவதாக' அவர்களைக் குறைகூறுகிறது. 'அதிக மக்கள் நோய்தொற்றுக்கு உள்ளாவது நல்லதே என்ற தர்க்கம், முன்னரே அதன் தார்மீக வெறுமையையும் மற்றும் அதன் தொற்றுநோயியல் முட்டாள்தனத்தையும் நிரூபித்துள்ளதாக நான் நினைக்கிறேன்,” என உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரெயானின் கருத்தை அந்த கடிதத்தை எழுதியவர்கள் மேற்கோளிட்டனர்.

அந்த அறிக்கை வெளியிடப்பட்ட அதேநாளில் ஒழுங்கமைக்கப்பட்ட அவசர பத்திரிகை கூட்டம் ஒன்றில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பேச்சாளரும் (முன்னர் பிரிட்டிஷ் மருத்துவ இதழ் என்றிருந்த) BMJ இன் கட்டுரையாளருமான டாக்டர் ஹெலன் சாலிஸ்பரி, நோய்தொற்றுக்கு அரசாங்கம் தடுப்பூசியை விட்டுவிட்டு, சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையைப் பின்தொடர்வது 'குற்றகரமானது' என்றார்.

லான்செட் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹோர்டன், அரசாங்கத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியர் கிறிஸ் விட்டி மற்றும் தலைமை விஞ்ஞானத்துறை ஆலோசகர் சர் பேட்ரிக் வால்லன்ஸ் ஆகியோரைக் கண்டித்தார். ஹோர்டன் கூறினார், 'பிரதம மந்திரி முடிவுக்கு முட்டுக்கொடுக்கும் முயற்சியில் [திங்கட்கிழமை டவுனிங் வீதி பத்திரிகையாளர் சந்திப்பில்] அவ்விருவரும் அவருக்குக் காட்டிய போலி மரியாதை, அரசாங்க ஆலோசகர்களாக அவர்களின் சுதந்திரமான பாத்திரத்தை அவர்கள் கைவிட்டுவிட்டதாக நான் நினைக்கிறேன்,” என்றார்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் 'விஞ்ஞான சமூகம் முழுவதும் பரந்த உடன்பாடு' இருப்பதாக விட்டியின் கூற்றைக் குறிப்பிட்டு, ஹோர்டன் கருத்துரைக்கையில், “அந்த தலைமை மருத்துவ அதிகாரி வேண்டுமென்றே நாடெங்கிலுமான விஞ்ஞான கண்ணோட்டத்தைத் தவறாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்ற முடிவுக்கு நீங்கள் வர வேண்டியிருக்குமென நான் பயப்படுகிறேன், அது கவனிக்க அசாதாரணமாக உள்ளது,” என்றார்.

லான்செட் இதழுக்கு எழுதப்பட்ட அந்த அசல் கடிதத்திற்குக் கிடைத்த பாரிய விடையிறுப்பு, விட்டியின் ஒருமித்த கருத்தை அதிர்ச்சியூட்டுமளவுக்கு மறுத்தளிப்பதாக இருந்தது. ஜோன்சன் அரசாங்க கொள்கை மீதான அதன் மதிப்பீடு நிலைகுலைய வைக்கிறது. “இயற்கையான நோய்தொற்றுக்கு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை சார்ந்திருப்பதன் ஆபத்துக்களை' எச்சரித்து அது அபாயங்களாக பின்வருவதைப் பட்டியலிடுகிறது: “ஒரு தலைமுறை நாள்பட்ட மருத்துவப் பிரச்சினைகள் மற்றும் இயலாமையுடன் விடப்படும் நிலையை உருவாக்கும்,” “இலையுதிர் காலத்தில் பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கப்படும் போது அனேகமாக பரவலைத் தீவிரப்படுத்தும் நோய் தொகுப்பை' உருவாக்கும், “தடுப்பூசியையே எதிர்க்கும் புதிய வகைகள் உருவாவதற்கு வளமான அடித்தளத்தை' வழங்கும் மற்றும் 'மில்லியன் கணக்கானவர்கள் மருத்துவ நடைமுறை மற்றும் வழமையான மருத்துவச் சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரத்தில்' மருத்துவச் சேவைக்கு 'கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.”

அந்த கொள்கைகள் 'மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் ஓரங்கட்டப்பட்ட நிலையிலுள்ளவர்களையும் தொடர்ந்து பாதிக்கும், ஏற்றத்தாழ்வுகளைத் தொடர்ந்து ஆழப்படுத்தும்,' என்பதையும் அக்கடிதம் குறிப்பிட்டிருந்தது.

இந்த எச்சரிக்கைகள் இப்போது நன்கறிந்தவர்களால் மிகவும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது, பிரிட்டன் ஆளும் வர்க்கத்தால் முன்னோடியாக முன்னெடுக்கப்பட்டு வரும், அதன் சர்வதேச சமதரப்பினரால் அதிவேகமாக பின்தொடரப்பட்டு வரும் குற்றத்தின் அளவுக்குச் சாட்சியமளிக்கிறது.

ஜூலை 19 இல் அனைத்து பொது சுகாதார கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டு வரும் அதன் விருப்பத்தை சமிக்ஞை செய்ததில் இருந்து, அந்த அரசாங்கம் பயணத்திற்குப் பிந்தைய தனிமைப்படுத்தல்களையும் மற்றும் பள்ளியில் தனித்தனி குழுக்கள் அமைத்தலையும் முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்பது போன்ற திட்டங்களையும் அறிவித்துள்ளது. சுகாதாரத்துறை செயலர் சஜித் ஜாவிட் NHS இன் காத்திருப்பு பட்டியல்கள் 13 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

“இயல்புக்கு திரும்பிவிட்டதாக' அறிவிக்க, அரசாங்கம் ஒவ்வொரு அருவருக்கத்தக்க உத்தியையும் பயன்படுத்திய நிலையில், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்தாட்டத்தின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் பாரியளவில் நோய்தொற்று பரவுவதற்கான ஒரு நிகழ்வாக இருந்தது.

சுகாதார செயலர் ஒப்புக் கொண்ட அளவுக்கு நாளொன்றுக்கு 100,000 நோயாளிகளும் அதற்கு கூடுதலாகவும் தொடர்ந்து நோய்தொற்று அதன் வழியில் அதிகரித்து கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர் எண்ணிக்கை மற்றும் இறப்புக்களும் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்து வருகின்றன, கடந்த வாரம் இவ்விரண்டுமே 50 சதவிகிதம் அதிகரித்தன. கடந்த வியாழக்கிழமை சுமார் 74,000 பள்ளிக் குழந்தைகள் கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டோ அல்லது சந்தேகத்தின் அடிப்படையிலோ பள்ளிக்கு வரவில்லை.

நெதர்லாந்தின் நிலைமையோ இன்னும் பெரியளவில் வரவிருக்கும் நோய்தொற்றுக்குரிய நிலைமைகளைக் காட்டுகிறது. தேனீர் கடைகள், உணவு விடுதிகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் இரவு நேர மனமகிழ் மன்றங்கள் மீதிருந்த தடைகள் ஜூன் மாதம் நீக்கப்பட்டதற்குப் பின்னர், கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 500 சதவீதம் அதிகரித்துள்ளன.

விஞ்ஞானிகள் மத்தியில் எதிர்ப்பு வலுப்படுவது மக்கள் மீதான இத்தகைய குற்றகரமான கொள்கைகளுக்குப் பரந்தளவில் எதிர்ப்பு அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது. பெரும் பெரும்பான்மையினர் சமூக இடைவெளியைப் பேணுவதற்கும் மற்றும் அறைகளுக்குள்ளே கட்டாயம் முகக் கவசம் அணிவதற்கும் ஆதரவாக இருப்பதை பல்வேறு கருத்துக் கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. 50 சதவீதம் பேர் ஜூலை 19 இல் மீண்டும் திறந்து விடுவதை தாமதிக்க விரும்புவதாக Observer இன் ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது.

ஆனால் இந்த மக்களின் உணர்வோ அல்லது விஞ்ஞானத்துறை வல்லுனர்களின் அறிவிக்கப்பட்ட எச்சரிக்கைகளோ எந்த அரசியல் வெளிப்பாட்டையும் காணவில்லை. மாறாக, இந்த சமூகக் படுகொலைக் கொள்கைகளை எதிர்க்கும் கொள்கைரீதியான அறிக்கைகள், ஒரு தீர்மானகரமான தணிக்கை மற்றும் விஞ்ஞானிகள் மீதான மெக்கார்த்திய பாணியிலான சூனியவேட்டையாடல் நடவடிக்கைளின் கோரப்பற்களில் சிக்கி விடுகின்றன.

அரசாங்கம் மற்றும் ஹோர்டன் போன்ற அதன் ஆலோசகர்கள் மற்றும் பலர் மீதும் வைக்கப்பட்ட சமீபத்திய விமர்சனங்களுக்கும் அல்லது லான்செட் இன் கடிதத்திற்குப் பாரியளவில் ஆதரவு அதிகரித்திருப்பதற்கும் எந்தவொரு ஆதாரத்தையும் காண தேசிய ஊடகங்களுக்கு தடயவியல் ஆய்வு செய்யுமளவுக்கு கவனம் தேவைப்படுகிறது. செய்திகள் பெரும்பாலும் உள்பக்கங்களில் புதைக்கப்படுவதுடன், இணைய பதிப்பின் முக்கிய செய்திகளுக்கு வெளியே வைக்கப்படுகின்றன. மிகவும் மோசமான களவாணி பெயரளவிலான தாராளவாத பத்திரிகை கார்டியன் ஆகும், இது சமீபத்திய இந்த அறிக்கை குறித்து மிகச் சிறிய குறிப்புகளை மட்டுமே வழங்குவதுடன், புதன்கிழமை அச்சு பதிப்பில் வெளியான எட்டுப் பக்க கட்டுரையில் அசல் கடிதத்தில் புதிதாக கையெழுத்திட்டவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கூட குறிப்பிடவில்லை.

இந்த பத்திரிகை ஆசிரியர்கள் மீண்டும் திறந்து விடுவதற்கு ஆதரவாக ஆளும் வர்க்கத்தில் ஐக்கிய முன்னணியை வலுப்படுத்துகிறார்கள். 'அரசாங்கம், பின்வாங்கில்காரர்கள் மற்றும் தூண்டல்காரர்களாக இருக்கும் அதன் சொந்த அரசியல் சிறுபான்மையினரைச் சமாதானப்படுத்தும் கொள்கைகளைப் பின்தொடர்ந்து வருகிறது,” என்று விஞ்ஞானிகளின் அவசர அறிக்கை வாதிடுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதே பெருவணிகத்தின் பெரும்பான்மையினர் கொள்கையாகும். இது, சமூகரீதியில் வெடிப்பார்ந்த விளைவுகளைப் பற்றிய பெரும் பதட்டத்துடன், தொழிற் கட்சியாலும் அதன் பெருவணிக தொழிற்சங்க பங்காளிகளாலும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.

“சமூக படுகொலை' குறித்தும் 'தவிர்க்கக்கூடிய மிகப்பெரும் பாதிப்பு சுழலை' உருவாக்குவதற்காகவும் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி இந்தாண்டு ஆரம்பத்தில் BMJ இல் வெளியான இரண்டு தலையங்கங்களும் கூட இதே மவுனமான சூழ்ச்சியால் வரவேற்கப்பட்டன. கொள்கைரீதியான விஞ்ஞானிகளைத் தனிமைப்படுத்துவதன் மூலம், ஆளும் உயரடுக்கு மிகவும் வன்முறையான பிற்போக்கு சக்திகளுக்குக் களத்தைச் சுத்தப்படுத்தி வைக்கக முயல்கிறது. வலதுசாரி பத்திரிகைகளிலும் மற்றும் டோரி பின்வரிசையாளர்கள் மத்தியிலும், அரசாங்கத்தின் பெருந்தொற்று கொள்கைக்கு மக்கள் எதிர்ப்பு 'சோம்பேறித்தனம்' அல்லது 'கோழைத்தனம்' என்று கண்டிக்கப்படுவதுடன், மேலும் விஞ்ஞானபூர்வ விமர்சனம் சுதந்திரத்தை வெறுக்கும் சதித்திட்டமாக, உருவாகவிருக்கும் “கம்யூனிச' சர்வாதிகாரிகளின் சதி என்றும் இழிவுபடுத்தப்படுகின்றன. சமூக படுகொலை கொள்கைக்கு ஒத்துழைக்கவும் மற்றும் சீனாவைப் பலிகடா ஆக்குவதன் மூலம் போரைத் தூண்டுவதற்கும் வடிவமைக்கப்பட்ட, கோவிட்-19 வூஹான் ஆய்வகத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்ற அரசியல் பொய்யை எதிர்க்கும் விஞ்ஞானிகள் மீதும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வல்லுனர்கள் மற்றும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஜோன்சன் மற்றும் அவரது ஊடகத் தாக்குதல் நாய்களின் மிருகத்தனமான, விஞ்ஞான-விரோத திட்டநிரல் அபிவிருத்திகளைக் கட்டளையிடுகின்றன ஏனென்றால் அது ஆளும் வர்க்கத்தின் செல்வசெழிப்பான அதிகாரத்தால் ஆதரிக்கப்படுகிறது. கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட ஒரு விஞ்ஞானபூர்வ, பகுத்தறிவார்ந்த மற்றும் மனிதாபிமான திட்டத்திற்கு அதன் சொந்த கூட்டான சமூக சக்தி அவசியமாகும்.

இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி என்பது, சமூக ஜனநாயக மற்றும் போலி-இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரள்வைச் சார்ந்துள்ளது.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பு உலகளவில் ஸ்தாபிக்கப்பட வேண்டும், விஞ்ஞான மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் நெருக்கமாக பணியாற்றும் அது தேவையற்ற மற்றும் பாதுகாப்பற்ற வேலையிடங்களை அடைத்து, தேவையான உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் இருக்க தேவைப்படும் தொழிலாளர்களுக்கான முழு சம்பளத்தை வழங்கவும், சமயோசிதத்துடன் செய்யப்படும் பரிசோதனை மற்றும் நோய்தொற்றின் தடம் அறியும் முறைகளுக்கு முழுமையாக நிதியளிக்கவும், காற்றோட்டம் மற்றும் ஏனைய இன்றியமையா வேலையிட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், மேலும் விரைவாக அனைவருக்கும் தடுப்பூசிகளைக் கொண்டு செல்வதற்குமான போராட்டத்தை அவை வழி நடத்தும், இதெல்லாவற்றுக்கும் பல கோடி மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் செல்வந்த தன்னலக்குழுவின் அளப்பரிய செல்வவளம் பறிமுதல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.

தொழிலாளர்களும் மிகவும் கொள்கைரீதியான விஞ்ஞானிகளும் மற்றும் மருத்துவத் தொழில் வல்லுநர்களும் இந்த முன்னோக்கில் ஐக்கியப்பட வேண்டும்.

Loading