சீன நகரம் “ஆயிரமாண்டுக்கு ஒரு முறை” பெய்த கடுமையான மழையால் பாதிக்கப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மத்திய சீன நகரமான ஷெங்சோவைத் தாக்கிய மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 25 பேர் இறந்துள்ளனர். உள்ளூர் வானிலை ஆய்வு மையம் இதனை 'ஒரு ஆயிரமாண்டுக்கு ஒரு முறை' நிகழ்வு என்று விவரித்தது. நகரின் சுரங்கப்பாதையில் வெள்ள நீரில் சிக்கி ஒரு டஜன் மக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். இரயிலில் சிக்கிய நூற்றுக்கணக்கானவர்கள் மீட்கப்பட வேண்டியிருந்தது.

12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரத்தின் பெரும்பகுதியை வெள்ளம் செவ்வாயன்று இயங்காது நிறுத்தியது. 80 க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் மற்றும் சுரங்கப்பாதை சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதே நேரத்தில் நகரத்தின் விமான நிலையம் 260 விமானங்களை இரத்து செய்தது. சில சுற்றுப்புறங்கள் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் இருந்தன. சுமார் 200,000 மக்களை வெளியேற்ற வேண்டியிருந்தது.

சீனாவில் வெள்ளம் (Source: CGTNOfficial)

ஷெங்சோ ஒரு முக்கியமான தொழில்துறை நகரமாகும். இது தைவானை தளமாக கொண்ட இலத்திரனியல்-பொருத்தும் நிறுவனமான Foxconn தொழில்நுட்ப குழுமத்திற்கு சொந்தமான மூன்று பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இதில் நூறாயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகின்றனர். ஆப்பிளின் ஐபோன்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்நகரத்தில் தயாரிக்கப்படுகின்றன. Foxconn உற்பத்தித்தளங்களில் ஒன்றிற்கு மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஷெங்சோ, 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஹெனான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கடந்த சில நாட்களாக புயல்களால் மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நதிகளின் கரைகள் பல இடங்களில் வெடித்து, பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து, மாகாணத்திற்குள் நெடுஞ்சாலைகள் மூடப்படுவதற்கு வழிவகுத்தன. நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், உள்ளூர் அதிகாரிகள் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 20,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

உத்தியோகபூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, ஷெங்சோவுக்கு அருகிலுள்ள கோங்கி நகரில் வீடுகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலத்த மழை ஏராளமான நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. டெங்ஃபெங் நகரில், ஒரு அலுமினிய தொழிற்சாலையில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. வெள்ளநீரினால் ஒரு தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த இரசாயனங்களுடன் தண்ணீர் கலந்தது.

1951 ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஒரு மணி நேர மற்றும் தினசரி அடிப்படையில் மழைப்பொழிவு மிக அதிகமாக இருப்பதாக ஷெங்சோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அதன் சராசரி வருடாந்த மழையான 604.8மிமீ விட சனிக்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலான மூன்று நாட்களில் 671.1 மிமீ மழையைப் பெற்றது. செவ்வாய்க்கிழமை பிற்பகல், ஒரு மணி நேரத்தில் 201.9 மி.மீ. மழை பொழிந்தது.

சீனாவின் தேசிய வானிலை மையத்தின்படி, In-Fa கடும்புயலால் நீராவி தள்ளப்பட்டு மலைப்பகுதியை தாக்கியதன் விளைவாக ஹெனானில் கனமழை பெய்தது. 1975 ஆம் ஆண்டில் ஹெனான் ஒரு சூறாவளியால் ஏற்பட்ட உலகின் மிக மோசமான வெள்ளத்தை அனுபவித்ததை விட இப்போதைய மழை அதிகமாக இருந்தது. பெரிய பாங்கியாவோ அணை உட்பட 60 க்கும் மேற்பட்ட அணைகள் மாகாணத்தின் பெரிய பகுதிகளை அழித்தன. இறப்பு எண்ணிக்கை 26,000 முதல் 240,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 30 நகரங்களும் மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கின.

மீறிப்பாய்ந்த ஆற்றங்கரைகள், அணைகளினால் தடுக்கமுடியாததன் தோல்வி மற்றும் மிகப் பெரிய பேரழிவு குறித்து சீன அதிகாரிகள் கவலை கொண்டு ஆயிரக்கணக்கான துருப்புக்களை ஹெனானுக்குள் அனுப்பினர். மக்கள் விடுதலை இராணுவம் புதன்கிழமை காலை ஷெங்சொவுக்கு அருகிலுள்ள ஜிஹெட்டான் அணை இடிந்து விழுந்ததைத் தடுத்ததாக அறிவித்தது. குண்டுவைத்து தகர்ப்பு நடவடிக்கைகள் 'ஒரு புதிய வெள்ள திசைதிருப்பல் திறப்பதை வெற்றிகரமாக்கின' மற்றும் நீர் நிலைகளின் மட்டத்தை குறைத்தன.

ஜனாதிபதி ஜி ஜின்பிங் சில அணைகள் ஏற்கனவே வெடித்ததாகவும், 'கடுமையான காயம், உயிர் இழப்பு மற்றும் சொத்து சேதங்களை ஏற்படுத்தியது' என்று அறிவித்தார். 'தலைவர்கள் மற்றும் கட்சியின் அனைத்து தரப்பு உறுப்பினர்களையும் ... கட்டளையிடுவதில் முன்னிலை வகிக்கவும், வெள்ள பாதுகாப்பு மற்றும் பேரழிவு மீட்புக்கான படைகளை விரைவாக ஒழுங்கமைக்கவும்' அவர் ஆரவாரமாக உத்தரவிட்டார்.

இது அதிகரித்துவரும் பொதுமக்களின் சீற்றத்திற்கு ஜியின் பதிலாகும். பைனான்சியல் டைம்ஸ் கருத்துப்படி, ஆபத்துக்கள் குறித்து போதுமான அளவு எச்சரிக்கத் தவறியதற்காக வானிலை முன்னறிவிப்பாளர்கள் பற்றி அதிர்ச்சியும் கோபமும் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊடகங்கள் வெள்ளத்தின் தீவிரத்தை குறைத்துக்காட்டின. சுரங்கப்பாதை வாகனங்களில் சிக்கியுள்ளவர்களுக்கு ஆபத்து இல்லை என்று உள்ளூர் மாநில ஊடகங்கள் ஆரம்பத்தில் கூறியதாக பரவலாக பகிரப்பட்ட ஒரு கட்டுரை குறிப்பிட்டது.

'இது ஒரு முறை பெய்த ஆயிரமாண்டு மழை ஷெங்சோ வெள்ளத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது ஒரு இயற்கை பேரழிவாக இருந்திருக்கக்கூடாது' என்று அக்கட்டுரை கூறியது. 'அணை கசிவு… வெள்ளத்தை ஏற்படுத்தியிருந்தால், அது நிச்சயமாக மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவாகும்.'

மஞ்சள் ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள ஷெங்சோ நீண்ட காலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், மழையை தக்கவைத்து மறுசுழற்சி செய்யும் நோக்கில் நாட்டின் “உறுஞ்சும் நகர” கட்டுமானத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 முன்னுதாரண நகரங்களில் ஒன்றாக இது தேர்வு செய்யப்பட்டது. 2020 வாக்கில், நகரம் 53.5 பில்லியன் யுவான் (8.3 பில்லியன் டாலர்) ஆற்றங்கரைகளை வலுப்படுத்துதல் மற்றும் நீர் ஊடுருவிச்செல்லக்கூடிய சாலைகளை உருவாக்குதல் போன்ற திட்டங்களுக்கு செலவிட்டது. தற்போதைய பேரழிவு இப்போது இந்த விலையுயர்ந்த திட்டங்களின் செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

இந்த நேரத்தில் சீனா, ஆண்டு புயல்களையும் பலத்த மழையையும் அனுபவிக்கும் அதே வேளையில் வெள்ள அச்சுறுத்தல் மோசமாகி வருகிறது. வெள்ளத்தைத் தணிக்க அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான அணைகளை ஒரு பகுதியாக கட்டியுள்ளனர். ஆனால் பல மோசமாக பராமரிக்கப்பட்டு கனமழையில் பாதிக்கப்பட்ட இடிந்து விழக்கூடும். தாழ்வான பகுதிகளில் அதிகப்படியான கட்டுமானம் மற்றும் பாரம்பரியமாக வெள்ளநீருக்கு எதிராக இடைத்தடையாக உள்ள ஈரநிலங்கள் மற்றும் ஏரிகளை நிலம் பெற்றெடுப்பதற்கு பயன்படுத்துவதால் ஆபத்துகள் அதிகரிக்கின்றன.

சீனாவின் பிற பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் பெய்ஜிங்கில் பலத்த மழை பெய்ததால் 15,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை, மழை பெய்ததைத் தொடர்ந்து மங்கோலியாவின் உட்பகுதியில் இரண்டு அணைகள் இடிந்து விழுந்தன. இந்த மாத தொடக்கத்தில், சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பாஷோங் நகரில் மூன்று நாட்கள் பெய்த கனமழை 380,000 மக்களைப் பாதித்தது.

ஐரோப்பாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து, ஷெங்சோவில் ஏற்பட்ட பேரழிவு காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது. காலநிலை மாற்றம் அதிகவெப்பநிலை மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழும் தீவிரத்தை அதிகரிக்கிறது என்று காலநிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Loading